முதல் சந்திப்பு ( அங்கம் -05 )
இலக்கியவாதி இந்திய நாடாளுமன்றம் பிரவேசித்த கதை !
இயக்கமாக மாறிய தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்
முருகபூபதி
உலகில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை எப்போது வழங்கப்பட்டது..? என்பதை ஆராயும்போது பல சுவாரசியமான கதைகள் தெரியவரும்.

பெண்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமாயின் அவர்கள் வேலைக்குச்சென்று வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் முதலான நிபந்தனைகளும் ஒரு காலத்திலிருந்தன. பிற்காலத்தில் பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி, நாட்டின் பிரதமராக – அதிபராக மாறிய கதைகள் பலவற்றை அறிவீர்கள்.
கல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகவும் கலை, இலக்கியவாதியாகவும் விளங்கி 2019 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டின் தென் சென்னை தொகுதியிலிருந்து தெரிவாகி இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கும் ஆளுமை மிக்க ஒரு பெண்ணைப்பற்றிய கதை இது.
அவரது இயற்பெயர் சுமதி. புனைபெயர் தமிழச்சி.
தமிழச்சியின் தந்தையார் தங்கபாண்டியன், அறிஞர் அண்ணாதுரை 1967 இல் தமிழகத்தின் முதல்வரான சமயத்தில் அவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். தி. மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர்., பறங்கிமலையிலும் ஆண்டிப்பட்டியிலும் தேர்தலில் நின்று வென்றவர். அனைத்திந்திய அண்ணா தி.மு. க. தொடங்கிய பின்னர் எம்.ஜிஆர். , அருப்புக்கோட்டையில் களத்தில் இறங்கி தங்கபாண்டியனை தோற்கடிக்கிறார். தொடர்ந்தும் தி.மு.க.விலிருந்த தங்கபாண்டியன், ராஜபாளயத்தில் நடந்த ஒரு கலவரத்தை நேரில் பார்த்து அங்கு அமைதியை ஏற்படுத்த சென்ற வேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.
தந்தையின் திடீர் மறைவு மகள் தமிழச்சியை மிகவும் பாதித்தது. தமது பூர்வீகம் மல்லாங்கிணறில் தந்தையின் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் வருடந்தோறும் பல தான தருமங்களையும் பொது நிகழ்ச்சிகளையும் தமிழச்சி நடத்திவருகிறார். தொழில் நிமித்தம் சென்னை மாநகரவாசியானபோதிலும் அடிக்கடி கிராமத்துக்குச்சென்று மக்களை சந்தித்து திரும்புகிறார். திரும்பும்போது அவருக்கு பல கவிதைகளும் கட்டுரைகளும் வரவாகின்றன. அவற்றில் கிராமத்தின் ஆத்மாவும் மலர்களின் வாசனையும் கனிகளின் சுவையும் மரங்களின் கிளைகளில் பிறக்கும் காற்றும் படர்ந்திருக்கும்.
ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை சென்னையில் தமது மித்ர பதிப்பகத்தின் முழுநாள் இலக்கிய விழாவை வெகு சிறப்பாக நடத்தி முடித்த பின்னர் , நான் வதியும் அவுஸ்திரேலியாவில் நியூசவுத்வேல்ஸ் மாநில மாநகர் சிட்னியிலும் ஒரு பெரு விழாவை 28-08 – 2004 ஆம் திகதி சிட்னி ஹோம்புஷ் ஆண்கள் உயர்நிலைக்கல்லூரியில் நடத்தினார்.
அதற்குத் தலைமை தாங்கவருமாறு எஸ். பொ. வின் மூத்த புதல்வர் மருத்துவர் அநுரா என்னை அழைத்திருந்தார். இவ்விழாவில் மூத்த கவிஞர் அம்பியின் பவள விழா நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அன்றைய விழாவில் மித்ர வெளியீடுகளான ஆசி. கந்தராஜாவின் உயரப்பறக்கும் காகங்கள், தமிழச்சி சுமதி தங்கபாண்டியனின் எஞ்சோட்டுப்பெண், நடேசனின் வண்ணாத்திக்குளம், கவிஞர் அம்பியின் அந்தச்சிரிப்பு, எஸ்.பொ.வின் சுயசரிதை வரலாற்றில் வாழ்தல் இரண்டு பாகங்கள், எஸ்.பொ. ஒரு பன்முகப்பார்வை, மற்றும் பூ ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.
மண்டபம் நிறைந்த இலக்கிய சுவைஞர்கள் அனைவருக்கும் அன்று இராப்போசன விருந்தையும் பொன். அநுரா வழங்கினார். ந.கருணகரன், பேராசிரியர் பொன். பூலோக சிங்கம், திருநந்த குமார், டொக்டர் ஜெயமோகன், மா. அருச்சுணமணி, தனபாலசிங்கம் , குலம் சண்முகம் ஆகியோருடன் இலங்கையிலிருந்து வருகை தந்த ஞானம் ஆசிரியர்டொக்டர் தி.ஞானசேகரன், தமிழகத்திலிருந்து வருகை தந்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் ஆகியோரும்
உரையாற்றினர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த விழாவில் நேரம் பற்றாக்குறையினால் எஸ்.பொ ஒரு சில நிமிடங்கள்தான் பேசினார்.
இராப்போசன விருந்தின்போதுதான் சுமதி தமிழச்சி, தான் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் ஆங்கில கலை இலக்கிய படைப்புகள் தொடர்பான ஆய்வுக்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்திருப்பதாகவும், மெல்பனுக்கும் வரவிருப்பதாகவும் சொன்னதுடன், தனக்கு தங்குமிட வசதி செய்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு அறிமுகமான தமிழச்சி சுமதி, தமிழக ஐ.பி. எஸ். அதிகாரி சந்திரசேகரின் மனைவி என்பதையும் இரண்டு பெண்குழந்தைகளின் தாய் என்பதையும் அறியமுடிந்தது.
எமது இல்லத்தில் அவர் தங்கியிருந்த நாட்களில் தொடர்ந்து இலக்கியமே பேசினோம். அவருடான சந்திப்பு நேர்காணலை கொழும்பு தினக்குரல் வார இதழில் எழுதினேன். அக்காலப்பகுதியில் அவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்துறை விரிவுரையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார்.
தந்தை தங்கபாண்டியனின் திடீர் மறைவு அவரை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருந்தது. அவ்வேளையில் கையறு நிலை என்ற தலைப்பில் தமது தந்தையாருக்கு அஞ்சலி செலுத்தும் கவிதையையும் குங்குமம் இதழில் எழுதியிருந்தார். இதுவே அவருடை முதல் இலக்கியப்படைப்பு.
தமிழச்சி சுமதி, அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் எழுத்தாளர்கள் அருண். விஜயராணி, நடேசன், அக்கினிக்குஞ்சு யாழ். பாஸ்கர், சட்டத்தரணி செ. ரவீந்திரன் ஆகியோரையும் சந்தித்தார். அவ்வாறு இலக்கிய நட்புறவு கொண்டிருந்த அவர் எமது குடும்ப சிநேகிதியாகவும் மாறினார்.
தமிழச்சியின் எஞ்சோட்டுப்பெண், வனப்பேச்சி, அருகன், மஞ்சனத்தி, பாம்படம் முதலான கவிதைத் தொகுப்புகள் அவர் உளமாற நேசிக்கும் மல்லாங்கிணறு கிராமத்தையே உயிர்ப்புடன் சித்திரிக்கின்றன.
தமிழ்நாடு கணையாழி இதழ், அவுஸ்திரேலியா சிறப்பிதழை வெளியிட்டபோது, அதில் பிரசுரமான மெல்பன் எழுத்தாளர் ( அமரர்) அருண். விஜயராணியின் தொத்துவியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியன் ஸ்டடீஸ் சென்டரில் நடந்த கருத்தரங்கில் ஆய்வு செய்தார்.
தமிழச்சியின் பாம்படம் என்னும் கட்டுரைத்தொகுப்பில் “சிலோன் காலனி ” என்ற படைப்புள்ளது.
தமிழச்சியின் கிராமத்துக்கு அருகேயுள்ள ஒரு ஈழ அகதிகளின் முகாமில் அவர் சந்தித்த ஒரு சிறுமி பற்றிய கதை. வட- கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (1956-2008) அறிக்கையின் ஒரு சிறுகுறிப்புடன் அந்தக்கதையை சொல்கிறார் தமிழச்சி.
விடுமுறை காலத்தில் கிராமத்துக்குச்செல்லும்போது, அந்த அகதிமுகாம் பிரதேசத்தில் நடமாடிய தமிழச்சியை, அந்த ஈழத்து அகதிச்சிறுமி யுகாமினி கவர்ந்துவிடுகிறாள். தனது வீட்டுக்கு அவளை அழைப்பதற்கு தமிழச்சி பலதடவை முயன்றும் அவள் வரவில்லை. காரணமும் தெரியவில்லை. ஒருநாள் யுகாமினியின் குடும்ப சூழ்நிலை பற்றி நன்கு தெரிந்துவைத்துள்ள தமிழச்சியின் ஊர்ச்சிநேகிதியான பெருமாளக்காவே அந்தப்புதிரை இப்படி அவிழ்க்கிறாள்.
“ யுகாமினியோட குடும்பம் மொத்தமும் ஷெல் ஆமே, அதுல அடிபட்டுச்செத்துப்போச்சுது. அவளோட பாட்டிதான் சின்னவளா இருந்தவள இங்க கூட்டிவந்து வளர்த்துச்சுது. அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னால செத்துப்போச்சு. காலனி ஆளுகதான் அதுக்கப்புறம் அவள பார்த்துக்கறாங்க. கவர்மென்ட் கொடுத்த வீட்டுல தானே சமைச்சு இருந்துக்கிறா. ராத்திரிக்கு மட்டும் துணைக்கு அந்தக்கிருபாணியும் காலனி பெரிசுகளும் மாறி மாறி துணைக்குப் படுத்துக்குவாங்க. இப்ப தானே மீன் குழம்பு வைக்கிற அளவுக்கு தேறிட்டா. சாமி கைவிட்டப்புறம், சக மனுஷங்கதான துணை. ஆனா, ரொம்பச்சூட்டிகை. படிப்பு படம் வரையறுதுன்னு ஸ்கூலுக்கே செல்லப்பொண்ணு அவதான். போனவருசம் அவ பெரியவளானப்ப, டீச்சர்மாருக கூடப்படிக்கிற புள்ளகன்னு காலனியே விழாக்கோலம்தான். ஆகாசமும் கரிசல் மண்ணும்தான் அவளுக்கு இப்ப அப்பன் ஆத்தா.”
இந்த ஆக்கத்தை தமிழச்சி இப்படி முடிக்கிறார்: “யுகாமினி அந்தப்புதைகுழியில் அமிழாமல் இந்தக் கரிசலின் பருத்திப்பூவாய் மலரவேண்டுமென நினைத்துக்கொண்டேன். அவளிடமிருக்கின்ற ஞாபகத்தின் எச்சம் கிளராமல் நாளை என் சந்திப்பில் கவனமாக இருக்கவேண்டுமெனவும் தீர்மானித்துக்கொண்டேன். அதில் என் சுயநலமும் இருக்கிறது – என் குற்றவுணர்வை எதிரே இருக்கின்ற அந்தச்சுமைதாங்கிக்கல் மேல் முழுவதுமாக இறக்கிவைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அனாரின் கீழ்க்கண்ட கவிதை நினைவுக்குவர வீடு திரும்புகிறேன். ‘இருள் என்னைக்கவ்வியபடி தூக்கிச்செல்கிறது ஒரு வேட்டை நாயென.’ (அனார் – கிழக்கிலங்கையில் சாய்ந்தமருதுவில் வசிக்கும் கவிஞர்)
2004 இல் அவுஸ்திரேலியாவில் ஆய்வுப்பணியை தொடங்கிய தமிழச்சி, 2018 ஆம் ஆண்டு தனது ஆய்வினை நிழல் வெளி என்ற பெயரில் தனிநூலாக்கிய பின்னர் அதனை வெளியிடுவதற்காக மெல்பனுக்கு தமது குடும்பத்தினருடன் வருகை தந்தார்.
எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் அவ்வேளையில் சங்கத்தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனை எதிர்த்து போட்டியிட்டு 2,62,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டினார்.
( நன்றி : யாழ். தீம்புனல் – 24-09-2022 )
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்