ஒற்றைக் கொம்பன் காண்டாமிருகம்.

நடேசன்.

இந்தியாவின் வடகிழக்குப் பயணத்தில் அசாமில் காஞ்சிரங்கா    (Kaziranka national Forest )வனத்திற்குப் போவது எனது இலக்காக இருந்தது.

அதன் முக்கியம் என்ன ?

ஒரு மிருக வைத்தியராக எங்கு போனாலும் வன விலங்குகளைப் பார்ப்பது எனது விருப்பம் . அதே நேரத்தில் காட்டு விலங்குகளை மிருககாட்சி சாலையில் வைத்திருப்பது  மனதிற்கு ஒவ்வாதது . ஆனால்,   என்ன செய்யமுடியும் ?

 எல்லோராலும் வனத்திற்குச் செல்லமுடியாது . முக்கியமாக குழந்தைகள் சிறுவர்களுக்கு  விலங்கு காட்சி சாலையே விலங்குகளைப் பார்க்க ஒரு வழியாகும் . எனது பிள்ளைகளை ஒரு முறை மட்டுமே மெல்பன் மிருகக் காட்சி சாலைக்கு கூட்டிச் சென்றேன். இப்பொழுது எனது பேரன்கள் செல்கிறார்கள்

இந்திய ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம் ஆசியாவிற்கானது . இது ஆபிரிக்கா காண்டாமிருகத்திலிருந்து வேறுபாடானது.  குதிரை இனத்திற்கு உறவான இந்த மிருகம் சாதுவானது. புல் மேயும் தாவர பட்சணி.  இலை குழை தின்னும்.   பார்ப்பதற்கு அக்கால ரோம வீரர்களிடமிருந்து,  அவர்களது   கேடயத்தை  இரவல் வாங்கி அணிந்த தோற்றம் கொண்ட தோற்பகுதியை கொண்டது . அதைவிட ஒரு முக்கிய வித்தியாசம்,  மற்றை தாவர பட்சணிகள் போலல்லாது தனிமையாகத் திரியும் . தாவர பட்சணிகள்,  உயிருக்குப் பயந்து ஒற்றுமையாக இருப்பன  என்ற போதும் யானைகள்,   கூட்டமாகவே திரியும் . இனப்பெருக்க காலத்தில் மட்டுமே ஆண் யானை பிரிந்து திரியும். மற்றப்படி கூட்டமாகவே ஆபிரிக்கா,  ஆசியா போன்ற நாடுகளில் காணமுடியும். ஆனால் இந்த ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம் ஆணும் சரி பெண்ணும் சரி ஒற்றையாகத் திரியும். அதனால் புத்த சன்னியாசிகள் போன்ற படிமமாகவும் கூறப்படுகிறது

சாம்பல் , கறுப்பு  நிறங்களில் நான் கண்டுள்ளேன் . நேபாளத்தில் உள்ள சித்துவான் வனத்தில் சாம்பல் நிறத்தில் படுத்துக்கிடந்தது . அதை நெருங்கிப் பார்க்க முடியவில்லை.  ஆணுக்கும் பெண்ணுக்கும் கொம்புள்ளது. ஆனால்,  அவை சாதுவானவை . தங்களிடையே உடலுறவுக்காலத்தில் சண்டை பிடிக்கும்போது குதிரைகள் போல் முன் பற்களால் கடிக்கும்

பெண் காண்டாமிருகம் நான்கு வருடங்கள் கன்றோடு திரியும் அக்காலத்தில் ஆணை நெருங்கவிடாது. 15 மாதங்கள் கர்ப்ப காலம். 45-47 வருடங்கள் உயிர் வாழும் . மனிதர்கள்போல் பல வருடங்கள் வாழ்வதால் தமக்கு  உணவு கிடைக்கும் இடங்களை அவை தனியாகவே கண்டு பிடித்து அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளும். மிகவும் தேர்ந்த மோப்ப சக்தி உள்ளது. மோப்ப சக்தி குரலால் எழுப்பும் ஓசையும் இனப்பெருக்க காலத்திற்கு திசைகாட்டிகளாக உதவும்.  

ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம்,  சிந்து நதி பிரதேசத்திலிருந்ததற்கான அடையாளமாக அங்கு எடுக்கப்பட்ட பசுபதி முத்திரையில் உள்ளது. தற்பொழுது சிந்து நதிக்கரையில் இருந்தவர்கள் , அவர்களது நாகரீகம்,  மொழி எங்கு போனது என்று திணறுவதுபோல் அக்கால மிருகங்களும் அழிந்துவிட்டன .

இந்து பெண் தெய்வத்தின் (Dhavdi is a Hindu Goddess)வாகனமாக  ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம் ஒரு குஜராத்தில் கோவில் உள்ளது.

பிற்காலத்தில் கங்கை சமவௌியில்  ஏராளமாக  அலைந்த காண்டாமிருகங்கள் மனிதர்களால்  வேட்டையாடப்பட்டதால் அருகி நூற்றுக்கணக்கில் வந்தது . 1910  ஆம் ஆண்டளவில் சட்டரீதியாக வேட்டையாடல் தடைசெய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டன.

வேட்டையாடும் மற்றைய மிருகங்கள், காண்டாமிருகத்தைக் கண்டால்  ஒதுங்கிப்போகும்போது மனிதர்களே  அதன் எதிரிகள்.  காரணம் அதன் மூக்கிலுள்ள கொம்பிலிருந்து வயாகரா போன்ற வஸ்துவை எடுக்க முடியுமென்ற  நம்பிக்கையால் பல விதமாக வேட்டையாடிக் கொன்றார்கள். இவ்வளவிற்கும் அந்த கொம்பு நமது மயிர் நகம் போன்ற கரட்டினால்(Keratin) ஆனது.

அதற்கும் ஆண்குறிக்கும் என்ன சம்பந்தம் ?

ஆபிரிக்கா காண்டாமிருகங்களுக்கும் இந்த நிமிராத லிங்கங்களே  வில்லனாகின்றது.

தற்பொழுது கிட்டத்தட்ட  மூவாயிரம் ஒற்றைக்கொம்பன் காண்டாமிருகம் இந்தியா , நேபாளம், பூட்டான் பகுதிகளில் வாழ்கிறது. இதில் 70 வீதமானவை அசாமிலுள்ள காஞ்சிரங்கா வனத்திலுள்ளன.

எங்களது பயணத்தில் இதைப் பார்ப்பது முக்கியமாக இருந்தது . ஜீப்பில் நேபாளத்தில் பார்க்க சென்றபோது பற்றைக்குள் மறைந்துவிட்டது.

காஞ்சிரங்கா வனத்திற்குப் போவதற்கு, அந்த வனத்திற்கு சிறிது தூரத்தில்  பங்களா போன்ற தங்குமிடம் கிடைத்தது.   அங்கு அறை வசதியானது.  ஆனால் குழியலறை மற்றும்  மலசலகூடம் இருந்த வெளிப்பகுதிக்கு கூரை இருக்கவில்லை. இரவு படுத்து விட்டு காலையில் எழுந்து குளிக்கசென்றபோது மெல்லிய நீண்ட பாம்பொன்று அங்கு என்னை வரவேற்றது .

தண்ணீர் ஊற்றி அதை கலைத்தால்,  அங்குமிங்கும் போக இடமில்லாது  அகதியாகத் தத்தளித்தது. சுவரில் ஏறிப்  போகமுடியாது.   மரங்கள் எதுவுமில்லை . பாம்பைப் பார்த்தால் பாவமாக இருந்தது.   இறுதியில் அங்கு வேலை செய்பவர்கள் இந்த வேலையில்  விற்பன்னராக இருக்கலாம் என வரவழைத்தபோது  டெட்டோலை தெளித்து பாம்பைத் துரத்த பார்த்தார்கள் . நாங்கள் இருவரும் மிருக வைத்தியர்கள். பாம்புக்கு எங்களால் இறப்பு வருவதை விரும்பவில்லை

இறுதியில் நாங்களே அவர்களுக்கு சேட் போடும்  ஹங்கரை நிமிர்த்திக் கொடுத்து பாம்பை வெளியே தூக்கிப் போடச் சொன்னோம் .

காலையில் வனத்திற்கு சென்றபோது யானைச் சவாரியில் செல்லவேண்டும் . அசாமிய யானைகள் எல்லாம் பெரியவையாகத் தெரிந்தன . எனது நண்பர் டாக்டர் திருசெல்வம் யானையில் ஏற துணிவற்று மறுத்துவிட்டார். எனக்கு காஞ்சிரங்கா யானைகளைப் பார்த்தபோது மகாபாரத்தில்  வரும் சுப்ரதீகம் என்ற யானை நினைவுக்கு வந்தது . ஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக எனது கமராவுடன்  ஏறி அமர்ந்தேன்.

மகாபாரதத்தில் யுத்தத்தின்போது சுப்ரதீகம்  நினைவில் ஊஞ்சலாடியது

பீமனைத் துதிக்கையில் சுருட்டிய யானை – பேளூர் சென்னகேசவர் கோவில் சிற்பம்

பிராக்ஜோதிஷர்களின் ஆட்சியாளன் {பகதத்தன்) யானையது . அக்கால பிராக்ஜோதிஷம் இக்கால அசாம் உள்ளடங்கிய பிரதேசம்.    துரியோதனனின் வில்லையும், கொடியையும் அறுத்த பீமனைத் தடுத்த பகதத்தனது சுப்ரதீகத்தின் துதிக்கைகளில் சிக்கிய பீமன், அதனிடம் இருந்து மிகவும் கஷ்டத்தில் தப்பித்தது தெரியாது,  பீமன் கொல்லப்பட்டதாக யுதிஷ்டிரன் நினைத்து அழுத காட்சி நினைவுக்கு வந்தது.

அதே நேரத்தில் அங்குள்ள ஒரு யானைப்பாகன் யானையைத் திருப்புவதற்காக யானையின் முதுகில் தடியால்  வெள்ளாவியின் பின்பு  அழுக்குத் துணியை கல்லில்  அடிப்பதுபோல் யானையின் முதுகில் விளாசியபோது மனம் தடுமாறியது . தயக்கத்துடன் ஆறுபேருடன் ஏறியபோது அது வசதியானது மட்டுமல்ல காண்டாமிருகம் அருகே செல்லக்கூடியதாகவும்  இருந்தது . மற்றைய மிருகங்கள்கூட யானை தங்கள் அருகே வருவதைப் பொருட்படுத்தவில்லை .

ஒற்றையாக ஒரு காண்டாமிருகம் மேய்ந்து கொண்டிருப்பதை யானையின் மீது அமர்ந்து மிக அருகில் சென்று பார்த்தேன்.  அதே போல் மற்ற மிருகங்கள் அருகில் செல்ல முடிந்தது.

இருந்தாலும்  யானை சேற்றில் சதக் சதக் என நடக்கும்போது விழுந்துவிடுவோமா என்ற சிறிய பயம் மனதில் அட்டையாக ஊர்ந்தது.   .

மாலையில் அந்த வனத்தை ஜீப்பில் வலம் வந்தபோது தூரத்தில் மட்டுமே மிருகங்களை பார்க்க முடிந்தது . அப்பொழுது காலையில் கிடைத்த யானைச் சவாரி எனக்குப் பேரதிஸ்டமாக நினைக்க வைத்தது.   

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: