16 காட்டிக்கொடுப்பு

சுனில் எக்கநாயக்க சுனாமி நிவாரணத்திற்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இராணுவத்தில் நியமிக்கப்பட்டான். ஆரம்பத்தில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. எந்தப்பக்கம் திரும்பினாலும் கண்டி பெரஹராவில் தனியாக விடப்பட்ட சிறுவன் போல் அரசியல்வாதிகளுடன் முட்டி மோதவேண்டியிருந்தது. இராணுவ கட்டளைகளை நிறைவேற்றுவது இலகுவானது. ஆனால், அவனைத் திணற வைத்தது அரசியல்வாதிகளின் தேவைகள், விருப்பங்கள், வேண்டுகோள்கள்!
அதற்கப்பால் புனர்வாழ்வுக்கான உதவிகளுடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் வந்திருந்தன. அவைகளது உள்நோக்கமென்ன?
அநுராதபுரத்தின் புறநகரில் பிறந்து, அநுராதபுர மகா வித்தியாலயத்தில் படித்திருந்தாலும், ஆரம்பத்தில் வேலை செய்யச் சென்ற கொழும்பே அவனுக்கு புதிய இடமாக இருந்து. ஆனால், வெகு விரைவாக ஆங்கிலத்தை கற்றுக்கொண்டதோடு கணினி துறையிலும் தேர்ச்சி பெற்று இராணுவ செய்திப்பிரிவில் சேர்ந்தான். உயர் அதிகாரிகள் சுனில் எக்கநாயக்காவின் திறமையையும் நேர்மையையும் புரிந்து கொண்டு சில வருடங்களில் அவனை இராணுவ பொலிசாக நியமித்தார்கள்.
நிவாரண வேலைகளுக்கு சுனாமியால் பாதிக்கப்படாத பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தேவை என பாதுகாப்பு செயலாளர் கேட்டுக்கொண்டபோது சுனில் எக்கநாயக்காவும் கண்டியைச் சேர்ந்த அவனது நண்பன் குமார தயாரத்தினவும் தெரிவு செய்யப்பட்டார்கள். குமார தயாரத்தின கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தவர்களை அவதானிப்பது சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். பொலன்னறுவ மற்றும் மின்னேரிய இராணுவ முகாம்களில் அவர்கள் பாதுகாக்கப்பட்டனர். இது சம்பந்தமாக அங்கெல்லாம் சென்று வரவேண்டியதால் சுனிலை, சுனாமி வேலைக்கு எடுக்கும்படி மேலதிகாரிகளிடம் குமார ஆலோசனை கூறினான்.
சுனாமி வேலைகளை ஆரம்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் இருந்து ஒழுங்குசெய்யக் கூடியதாக இருந்தது. இலங்கையின் தென்பகுதியில் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளுக்கு அதிக தேவைகள் இருப்பதாக வற்புறுத்தியபடியால் அவனுக்கு யாரை முதலில் கவனிப்பது என்பது குழப்பமாக இருந்தது. மக்களின் தேவைகளுக்கா, அரசியல்வாதிகளின் விருப்புகளுக்கா முன்னுரிமை கொடுப்பது என பல தடவை திணறியிருக்கிறான். இராணுவத்தில் இதுவரையும் இப்படித் திண்டாடியதில்லை.
இந்த அரசியல்வாதிகளை சிவில் அரச அதிகாரிகள் எப்படி சமாளிக்கிறார்கள் என அனுதாபத்துடன் அவதானித்தான்.
சில வாரங்களில் தென்பகுதி பாதைகளைச் சுத்தப்படுத்தி போக்குவரத்து ஒழுங்காகியதும் நிவாரண பணிகளை ஓரளவில் கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடிந்தது. அதிக அழிவுகள் ஏற்பட்ட கிழக்கு மாகாணத்தில் காலம் செல்லச் செல்ல நிவாரண விடயங்கள் கடினமாகின. மூன்றினத்தவர்கள் வாழ்ந்த இடங்களில் அரசியல்வாதிகளுடன் விடுதலைப்புலிகளும் பிரச்சினையாக இருப்பதாக அப்பகுதியில் நிவாரணத்தில் ஈடுட்டிருந்த இராணுவத்தினரிடம் இருந்து தகவல் வந்த வண்ணமிருந்தது. கிழக்கு மாகாணத்தில் பிரிந்த விடுதலைப் புலிகளிடையே பல கொலைகள் நடந்தன. அவற்றைக் கண்காணிக்க வேறு ஆட்கள் இருந்தனர். ஆனாலும், நிவாரண விடயங்கள் மீது அவை முடிச்சுகளாக விழுந்தன.
திருகோணமலைக்கு அமெரிக்கர்கள் கப்பல்களில் வந்திருந்தார்கள். அவர்களுக்குப் போட்டியாக ஏராளமான இந்தியர்களும் நின்றிருந்தார்கள். ஆராய்ந்து பார்த்தபோது உதவிப்பொருட்களுடன் வந்தவர்களில் பலர் உளவு அதிகாரிகளாக இருந்தது அவனுக்கு ஆச்சரியத்தைக்கொடுத்தது.
இவர்கள் ஏன் வந்தார்கள்?
அவனது கேள்விகளுக்கு மேலதிகாரிகளிடம் விடையில்லை.
பாதுகாப்புச் செயலாளரின் அறைக்குச் சென்று பேசியபோது “இவர்கள் எமது இராணுவ விடயங்களையும் விடுதலைப்புலிகளது நிலைகளையும் அறிந்து உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார்கள். இந்தக்காலத்தை பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் வெளிவராது பேணமுடியும் என நினைக்கிறார்கள். முடிந்தளவு அமெரிக்கர்கள் திருகோணமலைப் பகுதியிலும் இந்தியர்;கள் சிறிபுர இராணுவ முகாமிலும் இருந்து தொழில்படுவதற்கான உதவிகளை செய்யவும்”; என வார்த்தைகள் கட்டளையாகப் பிறந்தன.
பாதுகாப்பு செயலாளரைப் பற்றிய அதிருப்தி இராணுவத்திலும் கடற்படையிலும் இருப்பதை ஏற்கனவே அறிந்திருந்தான். அரசியல் மயப்படுத்தப்பட்ட நியமனங்கள் பற்றிய எதிரான கருத்துகள் அவை. பாதுகாப்பு செயலாளர் சொன்ன விடயங்கள் எக்கநாயக்காவிற்கு புரிந்தாலும் வெளிநாட்டவரில் அவனுக்கு நம்பிக்கையில்லை.
இந்தியா விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி கொடுத்த விடயம் அவனுக்குத் தெரியும். மட்டக்களப்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து தொழிற்பட்ட மோகன் குழுவில் உள்ள செந்தூரனால் எக்கநாயக்கவிற்கு அது சொல்லப்பட்டிருந்து. செந்தூரன் நிலக்கண்ணி வெடிகள் வைப்பதற்கு உத்தரப் பிரதேசத்தில் இந்தியர்களால் விசேடமாக பயிற்றபட்டவன். மட்டக்களப்பு – அம்பாறை காட்டுப்பகுதிகளில்; இராணுவத்துடன் வேலை செய்தபோது மின்னேரியா இராணுவ முகாமில் இருந்து அவனுக்கும் அவன் சார்ந்த குழுவிற்கும் சிலகாலம் எக்கநாயக்கா தொடர்பாளராக இருந்தான்.ஆனால், தற்போது அதே இந்தியர்கள் எமக்கு உதவ வந்திருக்கிறார்கள்.
இராணுவத் தலைமையகத்தின் உத்தரவுப்படி பன்னிரண்டு இந்தியர்களை கொழும்பில் இருந்து சிறிபுர இராணுவ முகாமிற்கு கூட்டி சென்றான். அவர்களுக்கு இருவர் தலைமை தாங்கினர். ஒருவர் சதீஸ் என்ற பெங்களுர்காரன்.; மற்றவர் பாண்டியன் என்ற தமிழன்.
சதீஸ் உயரம் குறைந்தவனாக வெளிர் நிறத்தில் மீசையற்று மாணவன்போல் இருந்தான். பாண்டியன் மிகவும் கருமையாக முறுக்கிய மீசையுடன் கட்டுமஸ்த்தான உயரத்தில் நடுத்தரவயதில் இருந்தான்.
இருவரையும் இராணுவ உளவிற்கு பொறுப்பான மேஜரிடம் அறிமுகப்படுத்திவிட்டு “எவ்வளவு காலம் இலங்கையில் இருப்பீர்கள்?” எனக் கேட்டான்.
“விடுதலைப்புலிகளை அழிக்கும் வரை” என்றான் பாண்டியன் மெதுவான குரலில் புன்னகையுடன்.
எக்கநாயக்க திடுக்கிட்டான். தன்னை சமாளித்தான்.
“நீங்களே அவர்களை உருவாக்கிப் பயிற்சி கொடுத்தீர்கள்?;” மெதுவான ஏளனம் குரலிலிலும் சிரிப்பிலும்.
“உண்மைதான் நாங்கள் விட்ட தவறிற்கு பரிகாரம் செய்யவேண்டியுள்ளதாக எமது அரசாங்கம் நினைக்கிறது” என்றான் பாண்டியன்.
“உங்களது தவறால் எவ்வளவு உயிர்கள் இந்த நாட்டில் போய்விட்டன?”
“அது உண்மை. உங்கள் நாட்டவரது உயிர்கள் மட்டுமல்ல எங்களது இராணுவமும் அதற்கு பலியாகியிருக்கிறது. அதற்கு மேல் எங்கள் முன்னாள் பிரதமர் உயிர் இழந்திருக்கிறார். உங்களுக்குத் தெரியும்தானே – சிறிபெரும்புத்தூரில் குண்டு வெடித்தபோது நானும் அங்கு சென்றிருக்க வேண்டும். ஆனால், என் குழந்தைக்கு உடல் நலமற்றதால் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தேன். நான் உயிர் தப்பியிருந்தாலும் குற்ற உணர்வு என்னை இன்னமும் விட்டுப்போகவில்லை. இறக்கும்வரை இதயத்தில் இருக்கும் என நினைக்கிறேன்” என்றான் சதீஸ்.
அவனது குரலில் மெதுவான கரகரப்புத் தெரிந்தது. கண்கள் பனித்தன. நண்பன் ஒருவன் தனது தவறிற்கு மன்னிப்புக் கேட்பது போல் தோன்றியது.
எக்கநாயக்கவிற்கு அவர்களில் அனுதாபம் பிறந்தது. அவர்களும் எம்மைப்போல் அரசியல்வாதிகளின் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் தானே. அவர்கள் உருவாக்கிய பயங்கரவாதத்தின் விளைவை அவர்களே அறுவடை செய்ததாக எண்ணினான். எங்கள் அரசாங்கத்தினரும் அதற்கு குறைவில்லைத்தானே? இந்திய இராணுவத்தை எதிர்த்து அழிப்பதற்கு விடுதலைப்புலிகளுக்கு பொலன்னறுவை மற்றும் வன்னிக் காடுகளில் வைத்து பணமும் ஆயுதங்களும் கொடுத்து உதவிய துரோக வரலாற்றை சீனியரான அதிகாரிகள் தாங்களே விரும்பாமல் செய்ததாக சொன்னார்கள். மிகவும் குறைந்தகால நலன்களைக் கருத்தில் கொண்டு அரசியல்வாதிகள் நடத்தும் நாடகங்களுக்கு இரு பக்கத்திலும் அப்பாவி இளைஞர்கள் பலியிடப்படுவது நம் நாட்டில் தொடர்ந்து நடக்கிறது. இதில் அயல்நாடான இந்தியர்கள் மீது மட்டும் தவறுகாண முடியுமா?
இந்தியர்கள் புதியரக விமான எதிர்ப்பு இயந்திரத்துப்பாக்கிகளை இயக்குவதற்கு பழக்குவது பற்றியும் விமானப்படையில் உள்ள ரஸ்சிய விமானங்களை இயக்குவதற்கு பைலட்டுகளை தேர்ந்தெடுப்பது பற்றியும் பேசினார்கள். கொழும்பு விமானத்தளத்தை பயன்படுத்தாமல் ஏன் சிறிபுரா இராணுவ முகாமை பயன்படுத்துகிறார்கள் என்பது அவனுக்கு புதிராக இருந்தது.
அமெரிக்கர்கள் திருகோணமலை கடற்படைமுகாமில் சேர்ந்துகொண்டார்கள். அவர்களில் பலர் தகவல் தொடர்பு விடயங்களில் நிபுணர்களாக இருந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த சுனாமி நிவாரணப் பொருட்களை கடற்படைத்தளத்தினூடாக கரையிறக்கி மூதூர் மக்களிடையே விநியோகித்தார்கள்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய அதிகாரியான பாண்டியன் தனது அதிகாரிகளுடன் வெலிஓயா முகாமுக்கு சென்று வரவேண்டும் எனக்கேட்டபோது சுனில் அதனது காரணத்தை அறிய விரும்பினான்.
“நாங்கள் சமாதானப் படையாக இங்கு வந்த போது விடுதலைப்புலிகளை எல்லாப் பகுதிகளிலும் இருந்து அகற்ற முடிந்தது. ஆனாலும், ஆண்டான்குளத்தைச் சுற்றியிருந்த காட்டுப்பிரதேசத்தை மட்டும் தாக்காமல் விட்டதால் விடுதலைப்புலிகள் தப்பிவிட்டனர். இப்படியான தவறு மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு அந்தப்பகுதியின் நிலஅமைப்புகளை பற்றி அறிய வேண்டும். மீண்டும் வரும் யுத்தத்தை வெல்லவேண்டுமாயின் அந்த இடத்தை விடுதலைப் புலிகளின் பாதுகாப்புப் பிரதேசமாக இருக்காமல் செய்யவேண்டிய தேவை உள்ளது.”
“இப்பொழுது அந்தப் பிரதேசத்தை அவர்கள் இதயபூமி என்று சொல்கின்றனர். அங்கு ஆயுதக் களஞ்சியங்கள், பங்கர்கள், மண் அணைகள், நிலத்தடி சுரங்கங்களென அவர்களால் பலமாக பாதுகாக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம். அங்கு செல்வது சுலபமல்ல.”
“இந்த சமாதான காலத்தில் செல்வது சுலபம்தானே? அந்தப் பிரதேசத்தை தெளிவாக அறியாமல் யுத்தம் செய்ய முடியாதுதானே?”
“அங்கு ஊடுருவும் முயற்சிக்கு விசேட அனுமதி எடுக்கவேண்டும்.”
“சுனாமிக்குப் பின்னரான இந்தக்காலத்தில் அங்கு செல்வது இலகுவாக இருக்கும் அல்லவா?”
“அப்படியானால் நாயாறு, கொக்குத்தொடுவாய் பகுதி கிராமங்களுக்கு நிவாரணத்தோடு செல்ல வேண்டும்.”
“அதற்கு ஆவன செய்யுங்கள். மிகுதியை நாம் பார்த்துக்கொள்கிறோம். எம்மில் பலர் தமிழ் பேசுபவர்கள்” என்றான் பாண்டியன்.
பாண்டியன் கேட்டுக்கொண்டபடி உதவிகளை நேரடியாக அனுப்ப முடியவில்லை. ஆனால், தமிழ் அரச உத்தியோகத்தர்கள் மூலம் உணவு அனுப்பப்பட்டது. உள்ளே செல்லும் முயற்சி தோல்வியடைந்த போதும், அரச உத்தியோகத்தர்களிடமிருந்தும் பிரிந்த கிழக்கு மாகாகாண போராளிகளிடமிருந்தும் தகவல்கள் வந்தன அந்தப் பகுதியின் சட்டர்லைட் வரைபடங்கள் மற்றும் ஆளில்லாத விமானத்தால் பெறப்பட்ட ஒளிப்படங்கள் மூலம் சுரங்கப் பாதைகள், அகழிகள், பயிற்சிப் பிரதேசங்கள் என்பன குறிக்கப்பட்டன. இந்தப்பகுதியில் முக்கியமான இராணுவ டிவிஷன் போரைத் தொடங்கவேண்டும். இந்தப்பகுதியை தாக்கி முன்னேற வேண்டியதில்லை ஆரம்பத்தில் கைப்பற்றாது விட்டாலும் அவர்கள் பயிற்சிகள் அளிப்பதையும் தளபாடங்களை பதுக்கி வைப்பதையும் தடுக்க முடியும். விடுதலைப்புலிகளின் இதயமாக இயங்கும் இந்தப்பிரதேசத்தை தொடர்ச்சியாகத் தாக்கும் போது அவர்களால் கிழக்கு நோக்கி நகரமுடியாது. மற்றைய இடங்களில் பெருமளவில் ஆட்களைக் குவித்து போரிடுவது விடுதலைப்புலிகளுக்கு கடினம் என்று குறிக்கப்பட்டது.
பாண்டியனும் சதீசும் சுனிலுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகிவிட்டார்கள். இருவரும் முன்னாள் இந்தியப் பிரதமர் கொலை தொடர்பான விசாரணையில் ஈடுபட்டவர்கள். அவர்களை சிறிபுர முகாமில் இருந்து ஒரு நாள் அதிகாலை நேரத்தில் பதவியா பகுதியூடாக மதவாச்சிக்கு அழைத்துச் சென்றான்.
பதவியாக்குளத்து நீரோடும் வாய்கால், வயல்கள், அமைந்திருந்த வீடுகள் என்பவற்றைப் பார்த்து “மிகவும் வளமான நிலம்” என்று சதீஸ் பாண்டியனிடம் சொன்னான். பதவியாவைக் கடந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினான். அந்த நேரத்தில் பாதையில் எவருமில்லை. சிறிது தூரம் மூவரும் தெரு ஓரமாக ஓடிய கால்வாயை தாண்டி நடந்தபோது சிறிய வீடு தெரிந்தது. அதன் அஸ்பெஸ்டஸ் கூரையூடாக புகை எழுந்து காலைப் பனியுடன் கலந்தது. இருபக்கமும் தென்னை மரங்களும் பழமரங்களும் அமைந்த பகுதியில் மெதுவான ஈரலிப்பு முகத்தில் படிய சிறிது நேரம் நடந்தனர். அவர்களை நோக்கி கறுத்த நாயொன்று குரைத்தபடி வந்தது.
பாண்டியன் “இந்த ஊரில் இன்னமும் ஆட்கள் வசிக்கிறார்களே!” என ஆச்சரியத்துடன் கேட்டான்.
“சுதந்திரத்தின் பின்பு காடுகளாக இருந்த பகுதியை அழித்து, சிதைந்திருந்த குளங்களைத் திருத்தி தென்பகுதியில் வாழ்ந்த நிலமற்றவர்களை அரசாங்கம் இங்கு குடியேற்றியது. தற்போது விவசாயிகள் இரண்டு தலைமுறையாக விவசாயம் செய்யும் பிரதேசம். இந்தப்பகுதில் உள்ளவர்கள் பலவிதத்தில் வவுனியாவுடன் தொடர்பானவர்கள். நான் கூட இந்தப்பகுதியைச் சேர்ந்தவன். இந்தப்பக்கம் நிலம் கிடைத்து இங்கு வந்து குடியேறிய ஒரு விவசாயிதான் எனது தாத்தா ”
“இப்படியான பிரதேசம் எங்கள் நாட்டில் இராணுவ பிரதேசமாக இருக்கும்” என்றான் பாண்டியன்.
“ஓமந்தை என்ற பிரதேசத்தை அப்படி வைத்திருக்கிறோம்.”
“இதோ இந்த வரைபடத்தில் ஓமந்தையை விலத்தி காடுகளுடாக கெரில்லாக்கள் வருவதற்கு முடியும். இதன் மூலம் ஒரு சிறிய கெரில்லா அணியால் வவுனியா, அனுராதபுரம் இராணுவ முகாம்களைத் தாக்கமுடியும். ஏன் சிறிபுர முகாமைக்கூட தாக்கமுடியும் இல்லையா?” என வரை படத்தை விரித்தான் சதீஸ்.
சதீஸ் முகத்தை பார்த்து கேட்டபோது சுனிலின் மனதில் உதைத்தது.
அதை சமாளித்தபடி “வாருங்கள். வாகனத்திற்குப் போவோம். நீங்கள் சொல்லும் காட்டுப் பிரதேசங்களைச் சுற்றி உள்ள கிராமங்களில் சிங்கள மக்கள் நீண்ட காலமாக வசிக்கிறார்கள்; அவர்களை வெளியேற்ற முடியாது. அதற்கு எமது அரசியல்வாதிகளிடம் துணிவு இல்லை.”
“அப்படியானால் மக்கள் மீதும் முகாம்கள் மீதும் கெரில்லா தாக்குதலை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும்.”
“அது தற்பொழுது நடக்கிறது. மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதனால் மக்களில் பலரை ஊர்காவல் படையாக மாற்றி பயிற்சியுடன் ஆயுதம் கொடுத்திருக்கிறோம்.”
“சுனில் ஊர்காவல் படையினர் நுறுபேர் ஒரு விடுதலைப்புலி கெரில்லாவுக்கு சமமாக மாட்டார்கள். அவர்களால் எந்த நன்மையும் விளையாது. வீணாக உயிர்ப்பலி மட்டும்தான். இராணுவத்தின் வேலையை ஒரு சில நாட்கள் பயிற்சி பெற்ற சாதாரண மக்கள் செய்ய முடியுமா? உங்கள் அரசியல்வாதிகள் இராணுவத்தை அவமதிக்கிறர்களா இல்லை மக்களை பாதுகாக்கத் தேவையில்லை என நினைக்கிறார்களா?” ஆத்திரத்துடன் கேட்டான் சதீஸ்
“வேறு என்ன செய்ய முடியும்?”
“இராணுவ வீரர்களை கெரில்லாக்களாக பயிற்சி கொடுத்து அந்தப் பிரதேசங்களுக்குள் அனுப்பி ரொட்டேசனில் தாக்குதல் நடத்தவேண்டும். அதனால் பிரயோசனம் உண்டு.’
“அதைத்தான் கிழக்குப் பகுதியில் செய்கிறோம். ஏற்கனவே அரசாங்கத்துடன் சேர்ந்த மற்றய தமிழ் பிரிவுகளுடன்….” என இழுத்தான் சுனில்.
“அதை இந்தப்பகுதியில் செய்வதால் பலன் கிடைக்கும்.” சுனில் வாகனத்தை ஓட்டியபடி பாண்டியனை கூர்ந்து பார்த்தான்.
“பாண்டியன், எனக்கு பூரணமான அறிவைப்பெற உதவும் என்பதால் இதைக் கேட்கிறேன். இவ்வளவு ஆவலாக இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க விரும்பும் உங்கள் நாடு, இதை ஏன் ஆரம்பத்தில் வளர்த்தது? ஏதோ கண்துடைப்பாக வந்திருக்கிறீர்கள் என நினைத்தாலும் இந்த ஒரு மாதத்தில் எனக்கு உங்களது நோக்கம் தெளிவாகப் புரிந்துள்ளது”
“இந்தக்கேள்வியை முதல் நாளே எதிர்பார்த்தேன். எங்களைப்போல் நீங்களும் அரசியல்வாதிகளது முடிவுகளை சரி பிழை பார்க்காமல் நிறைவேற்றும் இராணுவ வீரர்கள். உயிரைக் கொடு எனும்போது கொடுக்கத் தயாராகிறோம். எங்கள் நாடு மூன்று முறை வெளிநாட்டுப் போரையும் தொடர்ச்சியான கெரில்லாப்போரையும் பலமுனைகளில் நடத்தி வருகிறது. யாரினதும் பெயரையும் குறிப்பிடாது விளக்குகிறேன்.
எல்லா நாடுகளிலும் அரசியல் தலைவர்கள் ஈகோ நிறைந்தவர்கள். எங்கள் நாட்டுக்கு உங்கள் தலைவரின் அமெரிக்க சார்பான வெளிநாட்டுக் கொள்கைகள் பிடிக்கவில்லை. அவரின் கர்வத்தை அடக்க வேண்டும்; தலைக்கனத்தைக் குறைத்து எம்மை நோக்கி வரச்செய்யவேண்டும் என்பதற்காக இந்தக் குழுக்களுக்கு உதவினோம். அப்பொழுது சுண்டெலிகளுக்கு உதவுவதாக எண்ணியிருந்தோம். தேவையான நேரத்தில் சுண்டெலிகளைக் கூட்டில் போடமுடியும் என நினைத்தோம். பிற்காலத்தில் வேறு தலைவர்கள் பதவிக்கு வந்து, அவர்கள் சுண்டெலி விளையாட்டை முடிவுக்கு கொண்டுவர விரும்பியபோது முடியவில்லை. சுண்டெலிகளென நினைத்தவர்களில் ஒரு சுண்டெலி மற்றயவற்றை கொன்றுவிட்டு சிங்கமாகிவிட்டது. இந்த நிலையில் எமது தவறை சரி செய்ய முயற்சித்தபோது அந்தச் சிங்கம் எம்மை குதறிவிட்டது. எங்களது அனுமானம் பிழைத்து விட்டதற்கு எமது தலைவர்கள் மட்டுமல்லாது எங்களைப் போன்ற அதிகாரிகளும் தான் காரணம். எங்களிடம் இந்த இயக்கத்தைப்பற்றி போதுமான உளவு அனுபவம் இருக்கவில்லை என்பதோடு, இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டு எழுதிய உளவு அறிக்கைகளை தலைவர்கள் நம்பி விட்டார்கள். தவறுகள் ஏராளமாக நடந்துவிட்டன. அவற்றை சீர் செய்வது கடினமாகியது. ஆனாலும், எங்கள் நாடு மிகவும் பொறுமையானது. எங்களது ஐயாயிரம் வருட வரலாற்றில் எம்மிடையே உதித்த மதத்தலைவர்களான புத்தர், மகாவீர் மற்றும் குருநானக் என்பவர்கள் தர்மம் எது கர்மம் எது என்பதை உணர்த்தியுள்ளனர். பாவத்தின் சம்பளம் என்ன என்பதை புரிந்த பின்பு விமோசனம் தேட இப்பொழுது சரியான தருணம் வந்துள்ளதால், நாங்கள் உருவாக்கிய ட்ராகுலாவை அழிப்பதற்கு உங்களுக்கு உதவ விரும்புகிறோம். இதுவும் எனது கருத்தில்லை. எங்களது தலைவர்களினது கருத்து என நினைக்கிறேன்” என்றான் பாண்டியன்.
“நீங்கள் சொல்லும் விடயத்தை புரிந்து கொள்ளமுடிகிறது. நேரடியாக ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் தலைவரை இவர்கள் கொல்லும்போது உங்களது அரசியல்வாதிகளது உதவி இருந்திருக்க வாய்ப்பில்லையா? எப்படி இவர்களால் சுலபமாக நெருங்க முடிந்தது?”
“சதீஸ், இதற்கு நீயே பதில் சொல்லு”என்றான் பாண்டியன்
“பாண்டியன் நழுவாதே?”இது சதீஸ் சிரித்தபடி
“நான் நழுவவில்லை. அவரது பாதுகாப்புப்பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், நீதான் இதைப்பற்றி அதிகமாக புரிந்து கொண்டவன்.”
இருவரும் ஒருவரை ஒருவர் யாராவது முதல் சொல்லுவார்களா என பார்த்திருப்பது தெரிந்தது. அவர்களின் நிலை சுனிலுக்கு சங்கடத்தைக் கொடுத்தது. ஏதோ விருப்பமில்லாத விடயத்தைக் கேட்டு விட்டதாக நினைக்கத் தோன்றியது.
“பரவாயில்லை எனது கேள்வியை மறந்துவிடுங்கள்” எனச்சொன்னவாறு பாண்டியனின் முகத்தைப் பார்த்தான்.
விடுதலைப்புலிகளால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்ட விடயம் சதீசுக்கு எக்காலத்திலும் மறக்கமுடியாதது. அன்று அவருடன் பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டியவன். குழந்தைக்கு உடல்நிலைக் குறைவு என வந்த செய்தி அவனை வீட்டுக்குச் செல்லவைத்தது. அதுவும் கடைசி நேரத்தில் பெங்களுருக்குச் சென்றான். நான் இருந்தால் இந்த சம்பவத்தைத் தடுத்திருக்கலாம் அல்லது நானும் கூட மரணத்திருக்கலாம் என்ற எண்ணம் அவனிடத்தில் மாறிமாறி வந்து செல்லும்.
“சுனில் இந்தக் கொலையில் இந்திய அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் கொலைக்கு உடந்தையாக இருக்கவில்லை. தங்களை அறியாமல் பயங்கரவாதிகள் அவர்களுடைய குறியை நெருங்க உதவி செய்தார்கள். முக்கியமாக மாலையுடன் நெருங்குவதற்கு உதவி செய்தார்கள். இவர்களாலேதான் தலைவரின் பாதுகாப்பு வளையத்தில் நெகிழ்வு ஏற்பட்டது. அப்படியானவர்களை இதில் சம்பந்தப்படுத்தாமல் விசாரணையை தொடர்ந்தோம்.”
“மற்றய நாட்டுகளின் உதவி—–” என வார்த்தைகளை சுனில் இழுத்தான்
“இல்லை. முற்றாக உங்கள் நாட்டவர்கள்தான் என்பதே எமக்கு கிடைத்த தகவல். பலரது கற்பனைகள் பலவிதமாக இருந்தாலும் எமக்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளான நாங்கள் ஊகத்தில் எதுவும் செய்யமுடியாது. எமக்கு ஆதாரங்கள் தேவைதானே?”
மெதுவான வெளிச்சம் அந்தப்பிரதேசம் எங்கும் பரவத் தொடங்கியது. காலை ஆதவனின் மஞ்சள் ஒளி உயர்ந்த மரங்களுடாக பொற்கதிர்களாக பரவத்தொடங்கியது. சோம்பலான சூழல் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டது.
வயலுக்குச் செல்பவர்கள் வீடுகளில் இருந்து கலயங்களுடன் புறப்பட, பாதையில் நூற்றுக்கணக்கான மாடுகள் கடந்து சென்றன. பாதையோரத்து வீடுகளில் இருந்து குழந்தைகள் பாடசாலைக்கு செல்லும் உடைகளை அணிந்து வெளியே வந்தார்கள். அவர்களை வழியனுப்ப பெண்கள், சிறு குழந்தைகளை இடுப்பில் வைத்தபடி வந்தார்கள். அவர்களுடன் நாய்களும் பின் தொடர்ந்தன.
எதிரில் வந்த பஸ்வண்டி மாணவர்களை ஏற்றுவதற்காக நின்றது. சுனில்; ஓரமாக ஜீப்பை நிறுத்தினான். பாண்டியன் “உங்கள் நாடு மிக வளமானது. ஏன்தான் இப்படி சண்டைகள் தொடர்கிறதோ? அழிவுகள் நடக்கிறதோ?” என்றான்.
“அரசியல் போட்டிகள்தான் காரணம். இனரீதியாக அரசியல் எங்கள் நாட்டில் நடக்கிறது!”
அரைமணி நேரம் கழிந்தது மதவாச்சி பஸ் நிலையத்தருகில் வாகனத்தை நிறுதினான் சுனில். இறங்கி தேநீர் குடித்தனர். எதிரே இருந்த பாதையைக் காட்டி மன்னார் செல்லும் பாதை இதனூடாகச் சென்றால் தலைமன்னார் செல்லமுடியும் எனச் சொல்லியபடி ஒரு தமிழ் பத்திரிகையை வாங்கினான் சுனில்.
“தெரியும். இந்தப்பகுதியூடாக எனது முன்னோர்கள் வந்தார்கள். பல வருடங்களுக்கு முன்பாக சிறுவனாக மீண்டும் சென்றேன்”; என்றான்; பாண்டியன்.
“உண்மையாகவா…? நம்பமுடியவில்லை” என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.
“மலையகத்தில் இருந்து சிறிமா சாஸ்திரி உடன்படிக்கையில் சென்றவர்களில் எமது குடும்பமும் ஒன்று. மதுரைக்கு பக்கத்தில் உள்ள கிராமம் எங்கள் பூர்வீகம். தாய்வழி மாமா ஒருவருக்கு குழந்தை இல்லாததால் அவரது குடும்பத்தில் வளர்ந்து படித்தேன். பல காலமாக இராணுவத்தில் சேர விரும்பியிருந்தேன்.”
“தமிழரான நீங்கள் இங்கு மீண்டும் வந்திருக்கிறீர்கள். எனது உடலில் ஓடுவது அரைவாசி தமிழ் இரத்தம். எனது தந்தை யாழ்ப்பாணத்தவர்” என்றான் சுனில்.
“உண்மையாகவா?”
“ஆமாம். அம்மாவுக்கு பலகாலமாக பிள்ளையில்லை. அக்காலத்தில் வைத்தியத்தால் உதவ முடியவில்லை. இறுதியில் அம்மாவுக்கு எப்படியும் குழந்தை வேண்டுமென யாழ்ப்பாண வைத்தியரால் குழந்தை பிறந்தது. இது ஊரில் தெரியும். பிற்காலத்தில் அம்மா சொல்லி எனக்குத் தெரிந்தது. நான் குழந்தையாக இருந்தபோது எனது தந்தை இறந்துவிட்டார். அதன்பின் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த பணத்திலே படித்தேன் “
“இப்பொழுது போரில் உங்கள் மனம் எப்படி இருக்கு?” என்றான் பாண்டியன்.
“நான் இதை தமிழ் – சிங்களப் போராக நினைக்கவில்லை. சிங்கள இளைஞர்கள் போர் தொடுத்த பின்பே நான் இராணுவத்தில் சேர்ந்தேன்.. நாட்டுக்கு எதிராக ஆயுதம் எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அதை எதிர்ப்பது சரி என நினைக்கிறேன். அரசுகள் தவறுகள் விடலாம் அவை மாறக்கூடியது. எவையும் நிரந்தரமற்றது. ஆனால் நாடு என்பது அப்படியல்ல. நாட்டை தனிமனிதனாகவோ சமூகமாகவோ பாதுகாக்க முடிந்தால் அடுத்த சந்ததியாவது நிம்மதியாக வாழமுடியும் என்பது எனது கருத்து”
“அதைத்தான் இராணுவ வீரர்களாகிய நாம் கடைப்பிடிக்கவேண்டும்” எனப்பாண்டியன் சொல்லிக் கொண்டிருந்த போது பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எதிரில் வந்தவர்களிடம் என்ன விடயம் என சுனில் விசாரித்தான். வவுனியாவில் இருந்து கொழும்புக்கு போக அதிகாலையில் வந்த அரிசி லொறியில் குண்டுகள் இருந்ததாகவும் அதை செக்பொயிண்டில் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். கொழும்பில் இருந்து அதிகாரிகள் வருவதற்காக லொறி இன்னமும் நிற்கிறது என்றார்கள்.
“எவ்வளவு தூரம் இராணுவ செக்பொயிண்ட்” எனக்கேட்டான் சதீஸ்.
“ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது”
“கொழும்பில் வெடிக்க வைக்க வடபகுதியில் இருந்து குண்டைக் கொண்டு போவது என்றால் நம்ப முடியாதே? பிடிபடுவதற்கான சாத்தியக்கூறுகள் பல உள்ளது” மீண்டும் சதீஸ்.
“வடபகுதியில் இருந்து ஒன்று போவதானால் கிழக்கிலிருந்து பத்து லொரிகள் போகும். தற்பொழுது கடலூடாக மேற்குக்கடற்கரைக்கு வருகிறது. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு மேற்கு கரையாக வந்ததாக தகவல்கள் உள்ளது. மிக நீளமானதாகவும் ஏராளமாக மீனவர்கள் கொண்டதுமான கடற்கரையே எங்களுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளது. நாங்கள் போவோம். அநுராதபுர முகாமில் உள்ள கேர்ணல் முகமட் எங்களுக்காக மதியம் வரையும் இருப்பதாக சொன்னார்” என ஜீப்பில் சுனில் ஏறினான்.
அநுராதபுர இராணுவ முகாமில் சந்தித்த முகம்மது உயரம் அதிகமில்லாமல் வெளுத்த நிறமாக இருந்தார். பல தடவை பாண்டியனுடன் தமிழில் பேசினார். தான் மலே இனத்தைச் சேர்ந்தவர் என்றபோது பாண்டியனுக்கும் சதீசுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
“இலங்கையில் தமிழ் முஸ்லீம்களை விட இன்னமும் பறங்கியர் மற்றும் மலே இனத்தினர் வாழ்கிறார்கள்”; என்றான் சுனில்.
அநுராதபுர இரணுவ முகாமில் புதிதான விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை நிறுத்துவது பற்றியும் அதை இயக்க ஆரம்பத்தில் சிறிபுரவில் இருந்து இந்திய அதிகாரிகள் நால்வரை இங்கு அனுப்புவது பற்றியும் பேச்சு நடந்தது.
“எங்கிருந்து வருகிறது?” முகமது தேநீரை அருந்தியபடி கேட்டான்.
“கொச்சியில் இருந்து கொழும்புக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்கள்” என்றான் சதீஸ்;.
“விடுதலைப்புலிகளிடம் இருந்து இதுவரையும் விமானத்தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் தரை வழியான தாக்குதலுக்கு தயாராக இருக்கிறோம்” என்றான் முகமட்
“எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி சிறிய செஸ்னா விமானப்பாகங்கள் கடல்வழியாக வந்துள்ளன. அவற்றை எப்படிப் பாவிப்பார்கள் என்பது தெரியாது. குறைந்த பட்சமாக தற்கொலைத் தாக்குதலுக்கு பாவிக்க முடியும்” என்றான் சதீஸ்.
இராணுவ முகாமின் முக்கிய பகுதிகளைப் பார்த்து எந்த இடத்தில் விமான எதிர்ப்பு துப்பாக்கியை வைக்கலாம் என தீர்மானித்தனர். மதிய உணவை கேர்ணல் முகமதுவோடு அருந்திவிட்டு வெளியேறிய போது பிற்பகல் இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது.
கெப்பித்திக்கொல்லாவையில் ஒரு இடத்தில் இராணுவத்தினர் நின்றனர்.
“ஏதோ நடந்துவிட்டது போல இருக்கிறது” முகக் கலக்கத்துடன் சுனில்
இராணுவத்தினரை விசாரித்தபோது “பதவியா நீர்ப்பாசன திணைக்களத்து ஜீப்பை விடுதலைப்புலிகள் நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள். அதில் உள்ளவர்கள் தாங்கள் தேடியவர்கள் இல்லை என்பதால் அவர்களை பாதையில் இறக்கிவிட்டு ஜீப்பை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்கள்” என்றார்கள்
சுனில் எக்கநாயக்கா மீண்டும் வாகனத்தில் வந்து ஏறினான். சிறிது நேரம் பேசவில்லை.
“என்ன நடந்தது?” மொழி புரியாத சதீஸ் சுனிலைப் பார்த்து
“எங்கள் இராணுவத்திற்கு உள்ளே விடுதலைப்புலிகளின் உளவாளிகள் உள்ளார்கள். இன்று நாம் அநுராதபுரம் செல்லவிருப்பது எங்கிருந்தோ அவர்களுக்குத் தெரிந்துள்ளது.”
“எங்கிருந்து தகவல் போயிருக்கும்?” கண்களை உருட்டியபடி
“அநுராதபுரத்திலோ சிறிபுரவிலோ இருந்து போயிருக்க முடியாது. இரண்டு முகாம்களிலும் உள்ளவர்களை தொடர்பு கொள்ளுவது கடினம். அப்படியிருந்தாலும் நாங்கள் வருவது போவது அவர்களுக்கு சரியாகத் தெரிந்திருக்கும். நாங்கள் சிதறியிருப்போம். கொழும்பில் இருந்து தகவல் போயிருக்க வேண்டும். என்று கூறியபடி “பாண்டியன், உங்களுக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமா? இந்த பத்திரிகையில் உள்ள மரண அறித்தலைப் படியுங்கள்” என ஒரு பத்திரிகையை நீட்டினான் சுனில்.
“எல்லாம் யாழ்பாணத்து மரண அறிவித்தலாகவே உள்ளது”
“ஏதாவது வவுனியாவில் உள்ளவர்களைப் பற்றியுள்ளதா?”
“ஆமாம்”
“படியுங்கோ”
“இலங்கையில் பிறந்தவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கண்ணப்பனது இறுதிக்கிரியைகள் அவரது பதவியா – மதவாச்சி பாதையில் உள்ள வீட்டில் இன்று மதியத்தில் நடைபெறும் அதற்கு உற்றாரும் உறவினரும் கலந்துகொள்ளும்படி கேட்கப்படுகின்றனர்”
“இப்பொழுது தெரிகிறதா. இந்த விளம்பரம் கொழும்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையூடாக இந்திய அதிகாரிகள் மதியம் செல்வதாக விடுதலைப்புலிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகாலையில் நாங்கள் புறப்பட்டது எமது அதிர்ஸ்டம். இந்தப் பயண விடயத்தை அறிந்தவர்கள் எமது இராணுவ தலைமைக்காரியாலயத்தில் உள்ளவர்கள் மட்டுமே. அவர்கள் மீதுதான் எனக்கு சந்தேகம்.”
“உள்ளே உள்ள ஓட்டையை முதலில் அடைத்தால்தான் நீங்கள் யுத்தத்தில் வெல்லமுடியும். 84-87 வரையில் எமது உளவுத்துறையில் உள்ள தென்மண்டலத்திற்குப் பொறுப்பானவரை பெண்ணாலும் பணத்தாலும் வாங்கியிருந்தார்கள்’ என்றான் பாண்டியன்.
“தற்பொழுது தலைமை அலுவலகத்தில் நாங்கள் சந்தேகிக்கும் அவரை நெருங்கியபடியிருக்கிறோம். முழுமையான தொடர்புகளையும் அறிந்துகொள்வதற்காக காத்திருக்கிறோம்.”
மீண்டும் சிரிபுர முகாமை நோக்கி சென்றார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்