அசோகனின் வைத்தியசாலை

-Dr Mathan kumar

புலம்பெயர்ந்த ஒரு கால்நடை மருத்துவன் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள், நோயாளிகள் (விலங்குகள் மற்றும் மனித மனநோயாளிகள்)  அதனால் ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் எல்லாம் கொண்டு பார்த்து பார்த்து ஒவ்வொரு செங்கலாக கட்டப்பட்ட ஒரு அற்புத கட்டிடம் தான் இந்த அசோகனின் வைத்தியசாலை. 

இந்நாவலை ஒரு கால்நடை மருத்துவராகவும், ஒரு சாதாரண வாசகனாகவும் இருவேறு தளங்கள் நின்று அனுபவித்தேன். இந்நாவலின் மையக்கரு இதுதான் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டாலும் அதன் ஆழம் என்பது நெடிது. கதையின் சுருக்கமோ நிகழ்வோ இதில் நான் பதிவிடவில்லை. நான் ரசித்தவற்றை இன்னும் என் நினைவில் இருக்கும் அந்த கதாபாத்திரங்களின் அழுத்தமும் அதன் முக்கியத்துவமும் மட்டுமே கொண்டு எழுதுகிறேன். கதாநாயகன் ‘சிவா’ நோயல் நடேசன் சார் தான் என்பது மிகத்தெளிவு, இருந்தபோதும் தன்னை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டாலும், பல புலம்பெயர்ந்த மருத்துவர்களின் அனுபவங்களை ஒன்றாக கட்டிய கதம்பமாகவே சிவா காட்சியளிக்கிறார்.

ஒரு கால்நடை மருத்துவனாக இந்நாவலை படிக்கையில் ஒருமுறை கால்நடை மருத்துவம் படித்து பட்டம் பெறுவதே படாத பாடு என்ற நிலையில் மற்றொரு முறை வேறொரு பிரதேசத்திற்கு சென்று அங்கு கால்நடை மருத்துவம் பயின்று பட்டம் பெறுவது உண்மையில் ஒரு கடினமான செயல். அதுவே கடினம் என்றால் அங்கு வேலை தேடி அலைவது அதைவிட கொடூரமானது வேலை கிடைத்தபின் அங்கு நம்மை நிலைநாட்டுவது சொல்ல வேண்டுமா? ஒரு சக கால்நடை மருத்துவரிடமும் தனது உதவியாளரிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி வன்மம் காட்டக்கூடாது என்பதை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களாய் கதாப்பாத்திரங்கள் ஊடே மிளர்கிறது. கொலிங்வூட் என்ற பூனையின் மொழியை புரிந்து நடப்பது, அங்குள்ள நோயாளிகளின் முன்புலம் அறிந்தபின் தான் அதற்கான சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற பாடமும், அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள், எப்படி செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களை அனுகுவது போன்ற பல விடயங்கள் நாவல் முழுக்க பேசப்படுகிறது. 

ஒரு வாசகனாய் படிக்கும் போது ஒரு புலம்பெயர்ந்த மனிதன் படும் அவமானங்கள் கடினங்கள் தெளிந்த நீராய் காட்சியை முன்னிலைப்படுத்துகிறது. அதற்கு முக்கிய‌ காரணம் இனவெறி. அதைத்தாண்டி ஏதோ வகையில் பணி கிடைத்து ஒரு‌ வைத்தியசாலையில் இணைந்தால் அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலைக்கும் இனவெறி தாக்குதலுக்கும் மீண்டும் ஆளாவது எப்படிப்பட்ட ஒரு மனநிலைக்கு தள்ளும்‌ என்பதை மிகச்சரியாக விவரிக்கப்பட்டுள்ளது. இதைத்தாண்டி ஆஸ்திரேலியாவின் வரலாறு, பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், தட்பவெப்ப சூழ்நிலை என்று எல்லாம் சொல்லுவதோடு மட்டும் நில்லாமல் அங்கு நிலவும் அரசியலும் விளையாட்டின் முக்கியத்துவத்தையும் அந்த அணிகளின் பெயர்கள் எந்தளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையும் விளக்கியுள்ளது. இனவெறிக்கான காரணமும் அங்குள்ள நிழக்கிழார்களின் பின்புலமும் விவாதிக்கப்பட்டுள்ளது சிறப்பு. இதைத்தாண்டி ஒரு பணி சூழ்நிலையில் சக பணியாளர்களின் அன்பு வெறுப்பு பல பார்களுக்கு சென்று‌ மது அருந்துவது அந்த பார்களின் சிறப்பை பேசுவது…வெளிப்படையான பாலியல் கூறுகள், ஓரினச்சேர்க்கை பற்றிய பார்வை, காதலின் வலி, குடும்ப சூழ்நிலையின் பாதிப்பு, வயது வித்தியாசத்தில் திருமணம்‌ செய்துகொண்ட ஷரன் படும் பாடு அவளின் செய்கையால் ஏற்படும் பின்விளைவு, போதைக்கு அடிமையானவர்கள் பற்றிய விவாதங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அன்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், அரசியல், அரவணைப்பு, பழிவாங்குதல், காழ்ப்புணர்ச்சி என்ற‌பல பரிணாமங்களின் ஒரு ஒட்டுமொத்த காட்சியே இந்த அசோகனின் வைத்தியசாலை. 

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.