பழையன கழிதலும்

அங்கம் –  09             

   நடந்தாய் வாழி களனிகங்கை                                           

முருகபூபதி

தமிழ்மொழி தொன்மையானது. அதற்கு இலக்கிய இலக்கண பாரம்பரியமும் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் நன்னூலில் ஒரு வசனம் வருகிறது. ” பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற அந்த வரிகள் தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சியை இனம் காண்பிக்கின்றது.

தொல்காப்பியர்  காலம், சங்க காலம், சங்கமருவிய காலம், நவீன இலக்கிய காலம்  என்று காலகட்டங்ளை பிரதிபலித்தவாறு தமிழ்மொழி வளர்ந்து இன்று புதியவடிவம் பெற்றுள்ளது.

இந்த ” பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” வசனம்,  மொழிக்கு மாத்திரம் பொருத்தமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் களனி கங்கை தீரத்தில் பல மாற்றங்கள், குறிப்பாக அந்தப்பிரதேச மக்களின் அரசியல் சமூக, பொருளாதாரத்திலும் உற்பத்தி, ஏற்றுமதி,  இறக்குமதி வர்த்தகத்திலும் நேர்ந்து வருகின்றன. இதுபற்றி இந்த அங்கத்தில் பார்ப்போம்.

களனி கங்கை கொழும்பை நெருங்கும் பிரதேசத்திலிருந்து, கிராண்ட்பாஸ்   என்ற இடத்தை அவதானித்தால்  நாட்டின் பொருளாதாரத்திற்கு  வளம்  சேர்த்த மூவினத்தவர்களும்  இரண்டு நூற்றாண்டுக்கும் மேலாக அங்கு  செறிந்து வாழ்ந்திருக்கும் செய்திகளையும் அறியமுடிகிறது.

களனி கங்கையிலிருந்து கட்டிடங்கள், வீடுகள் நிர்மாணிப்பதற்குத் தேவையான மூலப்பொருள் ஆற்று மணல் கிடைக்கிறது. அதன் கரையோரங்களில் கீரை உற்பத்தி நடக்கிறது. அதனையடுத்து  தலைநகர வாசலுக்கூடாக பிரவேசித்தால், பல தனியார் துறை தொழில் நிறுவனங்கள் நீண்ட நெடுங்காலமாக அந்தப்பிரதேசத்தில் இயங்கிவருவதையும் அவற்றை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்திருப்பதையும் அறிய முடிகிறது.

அவற்றில் சில  நிறுவனங்களை வெளிநாட்டுக்கம்பனிகள் ஆரம்பித்து நிருவகித்துள்ளன.  முக்கியமாக கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியில் அமைந்துள்ள லிவர் பிரதர்ஸ் என்ற சவர்க்காரம், வாசனைசோப், உட்பட ஆடை சுத்திகரிப்பு தூள் முதலானவற்றை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனம் பிரபலமானது.

எமது தாயகத்தில்  எமது முன்னோர்களிடத்தில் பல புதிய உணவு நாகரீகத்தையும் கலாசாரத்தையும் நடை, உடை, பழக்கவழக்கங்களையும் அறிமுகப்படுத்தியவர்கள் வெளிநாட்டினரே! அந்நியரின் ஆக்கிரமிப்பு பலதுறைகளிலும்  நூழைந்து,  போர்ட் சிட்டி வரையில்  நீடித்துவருகிறது.

சவர்க்காரத்தின் தொடக்க காலத்தை ஆராயப்புகுந்தவேளையில் பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன.

                      சவர்க்காரமும் அந்நியரிடமிருந்து எமக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். கிறிஸ்துவுக்கு முன்னர் 2800 ஆண்டளவிலிருந்தே சவர்க்காரம் அறிமுகமாகியிருக்கிறது. சவர்க்காரத்தை கி.மு. 2800 ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனியர்களும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ரோமானியர்களும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில் நடுத்தர வயதினர் இதனைப் பயன்படுத்தத் தடை இருந்தாலும், 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஒலிவ் எண்ணெய்யை மூலப் பொருளாகக் கொண்ட சவர்க்காரங்கள் விற்பனைக்கு வந்த பிறகு அனைவருக்கும் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆங்கில ஆதிக்கத்தின் கீழிருந்த அமெரிக்க மக்கள் தங்கள் வீடுகளிலேயே சவர்க்காரங்களைச் செய்து பயன்படுத்திக் கொண்டனர். ஆங்கில ஆதிக்கம் முடிவுக்கு வந்த போது சிறு முதலீடுகளில் செய்து கொண்டிருந்தவர்கள் அதை தொழிற்சாலையாக மாற்றி உற்பத்தியை பெருக்கினர். இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக துணி துவைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்திய பணக்காரர்கள் கூட இந்த சவர்க்காரங்களை வாங்க நேரிட்டது. இந்தக் காலகட்டத்தில் இதன் விற்பனை அதிகரித்தது.

இலங்கையில் போர் நெருக்கடி உக்கிரமடைந்த காலப்பகுதியில், வடபகுதி மீது அன்றைய அரசுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, அதில் சவர்க்கார உற்பத்திகளும் இடம்பெற்றன. மின்சார விநியோகம் தடுக்கப்பட்டவேளையில்  துவிச்சக்கரவண்டிகளை கையால் இயக்கவைத்து டைனமோ மூலம் மின் இணைப்பு பெற்று,  வானொலி கேட்ட அந்தப்பிரதேச மக்கள், எமது முன்னோர்களின் வழியைப்பின்பற்றி, பனங்களியை பயன்படுத்தினார்கள்.

உடலையும், உடுத்தும் ஆடைகளையும் தூய்மைப்படுத்துவதற்கு தேவைப்பட்ட சவர்க்காரங்களை உற்பத்தி செய்த கொழும்பு லிவர் பிரதர்ஸ் எவ்வாறு பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியதோ, அதேபோன்று கிராண்ட்பாஸ் வீதிக்கு சமாந்தரமாக மற்றும் ஒரு திசையிலிருந்த பிரிண்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதியில் ஒரு தொழிற்சாலை இயங்கியது.

ஆனால், அங்கிருந்து உற்பத்தியான பொருளை பாவித்தவர்கள் பெரும்பாலும் ஆண்கள்தான். இலங்கையில் சிகரட் அறிமுகமாவதற்கு முன்னர் மக்களின் பாவனையிலிருந்தவை சுருட்டும்  பீடியும்.

இந்தியாவில் கேரளா மாநிலத்திலிருந்து வந்தவர்களினால் முதலில் குடிசைக் கைத்தொழிலாகத்தொடங்கிய  இந்த வர்த்தகப் பொருளாதாரம் படிப்படியாக கம்பனி முறைக்கு மாறியது.

கிராண்ட்பாஸ் வீதியிலிருந்து சண்லைற், லைஃப்போய், லக்ஸ், றிண்சோ முதலான மக்களின் பயன்பாட்டுக்கான உற்பத்திகள் பெருகியது. பிரிண்ஸ் ஒஃப் வேல்ஸ் வீதியில் தொடங்கப்பட்ட ராஜா பீடி க்கம்பனியும் அக்காலத்தில் பிரசித்தமானது.

                                   ராஜா பீடி, யானை பீடி, கல்கி பீடி, செய்யது பீடி, பவுண் பீடி  முதலான பீடிவகைகள் தலைநகரத்திலிருந்து நாடெங்கும் பரவியிருந்தது. கொழும்பு வடக்கிலும், மத்தியிலும் வாழ்ந்த மூவின மக்களில் ஏழைகளும் மத்தியதர வர்க்கத்தினரும் இருந்தமையால் அவர்களின்  மத்தியில் பீடியும் சுருட்டும் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் பெருகியிருந்தது.

பீடி சுற்றும் தொழிலை வீட்டிலிருந்தும் செய்யக்கூடியதாக இருந்தமையால், பெண்களும் இதில் ஈடுபடுவதில் ஆர்வம் காண்பித்தனர்.

ஏழை, மத்திய தரவர்க்கத்தினரின் குறைந்த பொருளாதார வளத்திற்கு பீடியும் சுருட்டும்தான் கட்டுப்படியாகியிருந்தமையால் குறிப்பிட்ட பீடிக்கம்பனிகள் கிராண்ட்பாஸ்  பிரதேசத்தை சுற்றியிருந்த வீதிகளில் தோன்றியிருந்தன.

மற்றும் ஒரு வீட்டுக்கைத்தொழிலும் அக்காலத்தில் இந்தப்பிரதேசத்தில் பிரசித்தமானது.  பழுப்பு நிறக்காகிதத்தினால் தயாரிக்கப்படும் பேக்குகளை (பைகளை)  வீடுகளிலிருந்தே தயாரித்துக்கொடுக்கும் வேலைகளில் பெண்கள் ஈடுபட்டனர்.

அண்மைக்காலங்களில் இலங்கை உட்பட உலக நாடுகள் பலவற்றில்  பொலித்தீன்  பைகளின் பாவனை படிப்படியாக குறைக்கப்படுகிறது. பொலித்தீன் மண்ணில் உக்கிப்போவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

எமது மக்களிடம் பொலித்தீன் பைகளின் பாவனை அறிமுகமாவதற்கு முன்னர் அவர்களின் கைகளில் இருந்தது  காகிதத்தில் தயாரிக்கப்பட்ட பேக்வகைகள்தான்.

கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பல ஏழை, மத்தியதரக்குடும்பங்களில் பெண்களும் சிறுவர் சிறுமியரும் பழுப்பு நிறகாகிதங்களில் பேக் செய்து கொடுத்து வருமானம் தேடினார்கள்.

பின்னாளில் வெளிநாடுகள் அறிமுகப்படுத்திய பிளாஸ்ரிக் பைகளை உற்பத்தி செய்வதற்கு பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு அரசின் நேரடி அங்கீகாரமும் ஆதரவும் இருந்தமையால், பல பொலித்தின், பிளாஸ்ரிக் தொழிற்சாலைகளும் எங்கள் தேசத்தில் பெருகின.

அந்த மாற்றம் ஏழைகளின் வயிற்றில்தான் அடித்தது.  

கிராண்ட்பாஸ் வீதிக்கு அருகிலிருக்கும் ஆமர்வீதியில், மஸ்கன்ஸ் என்ற பெரிய கம்பனி இருக்கிறது. இங்கிருந்து அஸ்பஸ்டஸ் கூரைகள் தயாரிக்கப்பட்டன.

தென்னோலையால் வேயப்பட்ட குடிசை வீடுகளில் வாழ்ந்த மக்கள் ஓட்டுவீட்டு கலாசாரத்திற்கு மாறி,  பின்னர் அஸ்பஸ்டஸ் கூரை வீடுகளுக்கு பழக்கப்பட்டனர். அண்மைக்காலத்தில் அஸ்பஸ்டஸின் மூலப்பொருட்கள் மனித உயிரையே குடிக்கும் வல்லமை பொருந்தியது என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்த பின்னர் வெளிநாடுகளில் அதன் பாவனை படிப்படியாக குறைந்தது.

புற்றுநோய் வருவதற்கும் அஸ்பஸ்டஸ் ஒரு காரணம்தான் என்ற உண்மை காலம் கடந்து தெரியவருகிறது!

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மாந்தரை படிப்படியாக மாற்றியது அந்நிய நாகரீகமும் அந்நிய உற்பத்திகளுமே என்றால் மிகையல்ல. அந்த மாற்றங்களில் நன்மையும் இருந்தது. தீமையும் விளைந்தது.

இன்று பீடி, சுருட்டுக்கைத்தொழில் நலிவடைந்துவிட்டன. அந்த இடத்தில் கேரள கஞ்சாவும், ஹெரோயினும் புகுந்து தேசத்தையே நாசமாக்கிக்கொண்டிருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு ஆலோசிக்கிறது.

காகிதாதிகளினால் தயாரிக்கப்பட்ட பேக்குகளின் பாவனை நலிவடையச்செய்யப்பட்டு,  பொலித்தீன் பேக்குகளின்  பாவனை வந்து, இன்று அதனையும் தடுக்கவேண்டிய கால மாற்றம் வந்துவிட்டது.

ஓலைக்குடிசையிலும் ஓட்டு வீட்டிலும் வாழ்ந்த மக்கள், அஸ்பஸ்டஸ் கூரைக்குச்சென்று மீண்டும் ஓட்டுவீடுகளையும் ஓலைக்குடில்களையும் நாடிச்செல்லும் காலம் வரலாம்…!

இனி என்ன சொல்வீர்கள்…?  ” பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற மூதுரைக்கு ஏற்ப  எமது மக்களின் பொருளாதாரமும் வாழ்க்கை முறைகளும் மாறிக்கொண்டிருக்கின்றன!

“பழையன கழிதலும்” மீது ஒரு மறுமொழி

  1. நல்ல சிந்தனை மகிழ்ச்சி சின்னச்சின்னதாய் சுவையாய் கனதியாய் இப்படி எழுதலாம் என்பதை எண்ணுகிறேன் ….இளமைக்காலத்தினை மீட்டாலே அருமையான கனதியான பிறருக்கு அறிவவூட்டமாக பதிவுகள் உண்டென எண்ணுகிறேன் நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: