மனிதரில் எத்தனை நிறங்கள் : சிறுகதை

நடேசன்

சில வருடங்கள் முன்பாக இருக்கும். மெல்பனின் குளிர்காலம்.  எப்படி என்றால் மழையோடு தென் சமுத்திரத்திலிருந்துவரும்  குளிர்காற்றும், ஒன்றோடு ஒன்றாகக் கலந்து இடி முழக்கத்தோடு மழையாகத்  தேனிலவு கொண்டாடும், அந்த நாளில் எவரும் நாய் பூனைகளுடன் என்னைத்தேடி வரப்போவதில்லை.  அவர்கள்,  தங்கள் வீடுகளைக்  கூடாக்கியபடி,  வீட்டின் கணகணப்பில் மகிழ்வாக இருப்பார்களென்ற நினைப்போடு அறையிலிருந்தேன். மதியமாகிவிட்டது எனக்கடிகாரம் காட்டியது. ஆனால் வெளியே  சீதோஸ்ண  நிலைமை அதற்கான  அறிகுறியற்று மாறாது இருந்தது.

எனது மிருகவைத்திய வேலையிடத்திலிருந்து எனது வீட்டுக்கு ஐந்து நிமிடங்களில் செல்லமுடியும் என்பதால் மதியத்தில் உணவுக்குச்   செல்வேன். அன்றைய தினம் அவ்வாறு  செல்ல,   உடலும்   மனமும் சோம்பலாக இருந்தது.  தனது உணவை வாங்குவதற்காகப் பக்கத்திலிருந்த கடைக்குச்   சென்ற எனது  நேர்ஸ் பிலிண்டாவிடம் எனக்கும் உணவு வாங்கி வரச்சொல்லிவிட்டேன்.

 அவள் கொண்டுவந்த சான்விச்சை உண்டுவிட்டு  கம்பியூட்டரில் கண்களை அலைபாய விட்டிருந்தேன்.

இலங்கையில் இருந்துவரும் போர் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். போர்க்காலத்தில்  தொடர்ச்சியாக பல விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கும். பொய்கள் , உண்மைகள், உண்மை கலந்த பொய்கள், பொய் கலந்த உண்மைகள்  எனப்பலவிதமான செய்திகள்.

புனைகதைகள் மட்டுமே,  வாசகனது கற்பனையை வேண்டிநிற்கும் எனநினைத்தால் தற்பொழுது செய்திகளும் அதையே கேட்டு வாசகர்களின் அறிவுக்குச் சவால் விடுகின்றன.  பல தரப்பு விடயங்களைப் பார்த்து நாம் கூட்டிக்கழித்து,   பெருக்கிப் பிரித்து உண்மை எதுவெனத்  தெரிந்து கொள்ளவேண்டும்.

 எனது அறைக் கதவினூடாக,  உள்ளே தனது தலையை நீட்டி ‘உங்களை ஒருவர் பார்க்க வந்திருக்கிறார்’ ‘ என்று எனது  நேர்ஸ் பிலிண்டா சொன்னபோது,  யாராக இருக்கும்?  நண்பர்கள்  வருவதென்றால் தொலைபேசியில் தெரிவித்துவிட்டே வருவார்கள் என்ற சிந்தனையுடன்  வெளியே வந்தேன்.

வெளியே வந்து பார்த்தபோது ஆப்பிரிக்கருக்கேயுரிய கறுப்பான நிறத்துடன், சுருள் தலைமயிர்,  ஆறரை அடிகள் உயரமான ஒருவர் எழுந்து வந்து , மின்னும்  வெள்ளை பற்களுடன்  , தனது பெயர் தோமஸ் எனச் சொல்லியபடி என்னை நோக்கி தனது நீண்ட கையை நீட்டினான்.

அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்க வேண்டியிருந்தது.  என்னிலும் உயரமானவர்களைப் பார்க்கும்போது என்னையறியாது ஒரு பொறாமை உணர்வு என்னகத்தே  தோன்றி மறையும்.  அந்த உயரமான இளைஞனுக்கு  வயது முப்பது இருக்கலாம்.  அவனது நெடிய மெலிந்த உயரத்தால் முதுகில் மெதுவான கூன் தெரிந்தது.

  “ என்ன விடயம்? நான் என்ன செய்யலாம்?  “  கையைக் நீட்டியபடி கேட்டேன்.

 “நான் ஒரு மிருக வைத்தியன். விக்ரோரிய மிருக வைத்திய சபை உங்களைச் சந்திக்கச் சொல்லி இருக்கிறார்கள்  “ என்றான்.

 “ அப்படியா?   “ என் முகத்தில் அதிகம் உற்சாகம் இல்லை. நான் அவனை மீண்டும் நாற்காலியில் உட்காரச் சொல்லவில்லை. நின்றபடியே பேசினோம்.

அந்த இளைஞன் அதைப் பொருட்படுத்தவில்லை.  தனது பேச்சைத் தொடர்ந்தான்.    “ நான் சூடானிய மிருக வைத்தியர்.  இங்கு வந்து இரண்டு வருடங்கள். இதுவரையும் டாக்சியோடினேன். இப்பொழுது ஆங்கிலம் படித்து பாஸ் பண்ணிவிட்டேன். மிருக வைத்திய பரீட்சை எடுக்க நினைத்து அவர்களைத் தொடர்பு கொண்டபோது  உங்களுடன்  பேசச் சொன்னார்கள்.  “

சூடான் என்றவுடன் என்னுள்  வெறுப்பு மின்னலாகத்  தோன்றி மறைந்தது.

 “ உடனே பேச வேண்டுமா?  “

 “  இல்லை,  நான் இந்த பக்கமாக டாக்சியில் போனதால் வந்தேன். அவசரமில்லை.   நீங்கள் ஒரு நேரம் அப்பொயிண்மெனட்  தந்தால் மீண்டும் வந்து சந்திக்க முடியும்.  “

“ எங்கு இருக்கிறீர் ?  “

“ பக்கத்தில்தான்,   நோபல்  பார்க்  “

“  சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு எனது வேலை முடியும். அதன் பின்பாக  நாம் பேசமுடியும்.  “ எனச்சொல்லி விடை கொடுத்தேன்.

அவன் சென்று அடுத்த இரு மணி நேரத்திற்குள்  எவரும் வருவதாகவில்லை.  நான் நினைத்திருந்தால் எனது அறையில் வைத்து அவனுடன் பேசி இருக்க முடியும். விக்ரோரிய மிருக வைத்திய சபை இப்படி வெளிநாட்டிலிருந்து வந்த பலரை என்னிடம் அனுப்பிவைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை நான்  இந்த பரீட்சையில் தேர்ச்சியடைந்து அதற்கான வழிகளைக் கடந்து வந்து  சொந்தமாகத் தொழில் செய்வதால் என்னை,  இந்தத்துறைக்கு வரும்  புதியவர்களுக்குப்  புரியவைப்பதற்கு ஆரம்ப ஆலோசகராகப்  பாவிப்பார்கள். இலங்கையைச் சேர்ந்த பலருக்கு,  நான் தன்னார்வமாக  முதல் உதவியாளராக  இருந்திருக்கிறேன்.

தோமஸ்,  சூடான் என்றதும் எனக்கு ஆரம்ப உணர்வாக  அவனைத் தவிர்க்க நினைத்தேன். ஆனாலும் முடியவில்லை.

ஏன்?

 எதற்காகத்  தவிர்க்க நினைத்தேன் ?

இதற்கு இலகுவான பதில் என்னிடமில்லை.

அந்த சந்திப்புக்கு  முன்னர், இரண்டு வருடங்களுக்கு  முன்பு நடந்த ஒரு சம்பவம் என்னை சூடானியர்களை வெறுக்க வைத்தது.

என்ன இவன் ஒரு இனவாதியாக இருக்கிறானே…?  என்று நீங்கள் என்னைப்பற்றி நினைக்கலாம்!

தவறில்லை.

மனிதர்கள் எல்லோரும் இனவாதிகளே- நிறவாதிகளே.  அழகான பெண்ணை விரும்பியவர்கள் எல்லாம் யார்? அவர்கள்,  நிறத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லையா? கறுப்பாக இருப்பவர்களே அதிகமாக  வெள்ளைப் பெண்ணை மணமுடிக்கத் தேடுவார்கள்.  நான் பிறந்து வளர்ந்த தென் ஆசியச் சமூகத்தின் குணங்களில் சிறிதளவாவது என்னிடம் இருக்காதா?   அதை விடுங்கள் உங்கள் குழந்தைகள் கொஞ்சம் நிறமாகப் பிறக்கவேண்டும் என விருப்பமில்லாதவர்கள் யாராவது இருந்தால் கையைத் தூக்குங்கள். 

இங்கே எனக்கு நிறம் பிரச்சினையா? அல்லது அவனது நாடுதான் பிடிக்கவில்லையா? 

எனக்கு எந்த சம்பந்தமுமில்லாத ஒரு நாட்டினரை நான் வெறுக்கவேண்டிய தேவையில்லையே!

இப்படியான தர்க்கிக்கக்கூடிய காரணங்களுக்கு அப்பால் சூடானியர்களை  நான் விரும்பாததற்கு ஒரு காரணமுள்ளது. நட்பு சார்ந்த விடயம்.  அதாவது நண்பனுக்காக. அது என்னைப் பொறுத்தவரை முக்கியமானது. அது உங்களுக்குப் புரியாது . நான் சொன்னாலும்  விசித்திரமாக இருக்கும்.

நான் சூடானியர்களை படிப்படியாக வெறுக்கவில்லை. திடீரென ஒரு நாள் அந்த வெறுப்பு நிகழ்ந்தது.  நேரம்-காலம்-  திகதி எல்லாம் என்னால் சொல்லமுடியும்.   

ஒரு கோடைகால  சனிக்கிழமை மாலையில்  நடந்தது. சரியாகச் சொன்னால் நான் ஓய்வாக வீட்டிலிருந்த ஒரு நாள் – மாலை நான்கு மணியளவிலாகும்.

சூடான்,  ஆபிரிக்காவிலே பூமத்தியரேகைக்குச் சிறிது வடக்கில் உள்ளது. ஆபிரிக்காவிலே பெரிய நாடு. கறுப்பும்,  ஒலிவ் நிறமும் கலந்த அரேபியர்களும்,  கறுப்பு ஆப்பிரிக்கர்களும் பலகாலமாக  ஒன்றாக வாழ்ந்த நாடு.   ஆரம்பத்தில் கறுப்பு  இஸ்லாமியர்களான டாபூர்களும் அரேபிய இஸ்லாமியர்களும் சண்டையிட்டார்கள். கொலை செய்தார்கள்.  அகதியானார்கள்.   பின்பு அரேபியர்களுக்கும் தென்பகுதியில் உள்ள கிறீஸ்தவ கறுத்த இனத்தவர்களுக்கும்  சண்டை. தனிநாடு கேட்டுப் போராடி,   இப்பொழுது தென்சூடான்,  கறுப்பு இனத்தவர்கள் மட்டுமுள்ள புதிதாகச் சுதந்திரமடைந்த நாடாகியுள்ளது. இவர்களே வரலாற்றில்  நூபியர்கள் என,  நூறு வருடங்கள் எகிப்தை ஆண்டவர்கள் என்ற பழைய வரலாறும் எனக்குத் தெரியும். இப்படியான பொதுஅறிவு இருந்தபோதிலும்  தனிபட்டரீதியில் எனக்கு  சூடானியர் எவரையும் தெரியாது.

இப்படியாக இருந்த எனது  நினைப்பை ஒரு நாள் மாற்ற வேண்டிவந்தது

அந்த சனிக்கிழமை மாலை வீட்டில் தேநீர் அருந்தியபடி, சோம்பலாகத்  தொலைக்காட்சி பார்த்தவாறு நான்  இருந்தபோது,  தொலைபேசி ஒலித்தது . தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு  தொலைபேசியை எடுத்தபோது, அடுத்த முனையில்  எனது நண்பன் அகமது ஹாசன்.  “ எனது மனைவி கொலை செய்யப்பட்டாள்.  மவுண்ட் ரோட் மருத்துவ மனைக்கு வரமுடியுமா? ‘என்றான்.

அந்தச் செய்தி மிகவும் சுருக்கமானது. ஆனால்,  துப்பாக்கிக் குண்டுபோல் எனது இதயத்தைத் தாக்கியது. செய்தி கேட்டவுடன் தொலைபேசியை வைத்துவிட்டு மீண்டும் நாற்காலியில் உறைந்து விட்டேன்.  என்னால் உடனே எழமுடியவில்லை.  பதகளித்துவிட்டேன். யாராவது உங்களுக்குக் காதைப்பொத்திப் பலமாக அடித்தால் எப்படி இருக்கும்? அதுபோல் அந்தத் தொலைப்பேசி  அழைப்பு இருந்தது

மெதுவாகச் சுதாரித்தபடி எழுந்து மனைவியிடம் விடயத்தைச் சொன்னேன்

பத்து வருடமாக எங்கள்  இரு குடும்பங்களும் ஒருவருக்கொருவர்  அறிமுகமானவர்கள். ஒன்றாக உணவருந்தியுள்ளோம்.  நானும் அகமதுவும் ஒன்றாக நான்கு வருடங்கள் மெல்பன் மிருக வைத்திய நிலையத்தில் வேலை செய்தவர்கள் மட்டுமல்ல,  இருவரும் ஒரேகாலத்தில் அவுஸ்திரேலியா வந்தவர்கள். அகமது லெபனானை சேர்ந்தவன்.  அக்கால சோவியத் ரஷ்ஷியாவில் படித்தவன். அவனது மனைவி லைலா ஒரு மருத்துவர். எனது மனைவியிலும் சில வயது இளமையானவர்.  ஒரு குழந்தையுடன் இங்கு வந்து பின்பு இரண்டு குழந்தைகளை மெல்பனில்  பெற்றார். குழந்தைகளை வளர்ப்பதற்காகப் பல வருடங்கள் வேலை செய்யாது, வீட்டில்  காத்திருந்துவிட்டு இரண்டு வருடம் முன்பாகத்தான் மருத்துவராக வேலை செய்வதற்குச் சென்றார். அழகும் அமைதியும் கொண்டவர்.

அந்த அதிர்ச்சி தரும் செய்தியை    எங்களுடன் வேலை செய்த கார்லோஸ் என்ற மற்றொரு நண்பனுக்கு சொல்லிவிட்டு, சம்பவம் நடந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தேன்.

நான் அங்கு சென்றபோது  லைலா பணியாற்றிய அந்த மருத்துவ நிலையத்தின்  சுற்றுப்புறம்   பொலிஸாரால்  நிரம்பியிருந்தது. அவர்களது வாகனங்களுடன்  இரண்டு அம்புலன்ஸ்களும் அங்கு  நின்றன.

எனக்கு முன்பாக கார்லோஸ் அங்கு சென்று விட்டான். லைலாவின் பிரேதத்தை  ஏற்கனவே அம்புலன்சில்  மருத்துவமனைக்கு  கொண்டு சென்று விட்டார்கள். ஏற்கனவே கார்லோஸ் இந்த  விடயம் எப்படி நடந்தது என  அறிந்திருந்ததால்,  நான்  லைலாவின் கணவனான எனது நண்பன் அகமதுவிடம் கேட்டு,   மீண்டும்  அறியத்தேவையில்லை.  

வைத்தியத்திற்கு அந்த மருத்துவமனைக்கு வந்த சூடானிய அகதி ஒருவன் லைலாவின் கழுத்தை  கத்தியால் வெட்டிக்கொலை செய்ததாக கார்லோஸ் சுருக்கமாகச் சொன்னான்.

அதற்கு மேல்  நான் எதுவும் கேட்கவில்லை.  நான்  ஏன் முழு விபரமும் அறியவேண்டும்? நண்பனது மனைவி இறந்துவிட்டது மட்டுமே முக்கிய விடயமாக இருந்தது. அவனுக்கு ஆறுதலாக நாம் அங்கு சென்றோம்.

 நாங்கள் அங்கு  நின்ற நேரத்தில்,  ரயில்வே நிலையத்தருகே  ஒரு கறுப்பு இளைஞனைப் பிடித்ததாக பொலிசுக்கு வயலெஸ் செய்தி வந்தது.  அதை பொலிசார்  அகமதுவுக்குச் சொன்னபோது எங்களால் கேட்கமுடிந்தது.  அந்த மருத்துவ நிலையத்திற்கு   சிறிது தூரத்தில் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. நாங்கள் அகமதுவின் கையைப் பிடித்து அழுத்திவிட்டு  எதுவும் பேசாது அவனருகே ஆறுதலாக நின்றோம். சிறிது நேரத்தில் அவனது சகோதரி வந்து அவனை அழைத்துச் சென்று விட்டாள். நானும்  நண்பன் கார்லோசும் பக்கத்திலிருந்த மதுச்சாலைக்கு சென்று குடித்தோம். குடித்து விட்டு நண்பனின் வீட்டில் கொலைக்கு என்ன காரணமாக  இருக்கும்? ஏன் இப்படி நடந்தது என்று எமக்குள்  பல கோணங்களில் பேசித் தீர்த்தோம்.

 அதைவிட எங்களால் என்ன செய்ய முடியும்?

அகமதுவின்  கிளினிக்கை சில நாட்கள்  நான் நடத்தினேன். அவன் மனம் தேறிவரும் வரை அதை நடத்துவதாகக் கூறினேன். ஆனால்,  அவன் தன்னால் மீண்டும் வேலை செய்யமுடியாது அதற்கான மன நிலை இல்லை . நீ  வாங்குவதென்றால் உனக்கு விற்கிறேன் என்றான்.  என்னிடம் பணமில்லை.   ஏற்கனவே கடன் பல இருக்கிறது என நான் மறுத்தேன் .  இதன்பின்பு சில காலத்தில் அவன்  தனது கிளிளிக்கை விற்றுவிட்டான் அவனது மூன்று பெண்குழந்தைகளை வளர்க்க வேண்டிய தேவை இருந்தது.

வழக்கு  நீதிமன்றில்  நடந்தபோது பல விடயங்கள் வெளியாகியது.  அந்த இருபத்தைந்து வயதானவன் கென்யாவிலிருந்து அகதியாக அவுஸ்திரேலியா  வந்திருந்தான். அவனுக்கு குடும்பமில்லை.  நண்பர்கள் சிலரோடு ஒன்றாக இருந்திருக்கிறான். வழக்கமான இரத்த பரிசோதனைக்கு வந்தபோது அவனது இரத்தத்தில்  ஹெபரைரிஸ் C ( Hepatitis C) எனப்படும் கிருமி இருந்துள்ளது.  இது ஊசிகள் மூலம் பரவும் வைரஸ் ஆகும். போதைவஸ்து ஊசிகளை தங்களுக்கிடையே பரிமாறுபவர்களிலேயே காணப்படும் நோயிது.

சில வேளைகளில் வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும்போது அல்லது சுத்தப்படுத்தாத ஊசிகளால் பரவக்கூடும்.   இந்த வைரசுக்கு (அப்பொழுது) நேரடியான  மருந்துமில்லை. அதனால் நோய் அறிகுறியிருந்தால் மட்டும் வைத்தியம் செய்வார்கள்.  மேலும் இந்தக் கிருமி பல வருடங்கள் உடலில் எந்த உபாதையும்  கொடுக்காது உறங்கு நிலையில் இருக்கும்.

அவன் தனது நோயை எப்படியும்  குணமாக்கப் பல வைத்தியசாலைகளை மெல்பனில் அணுகியிருந்தான். ஆனால்,  எல்லோரும் கையை விரித்துவிட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடங்கள்  பின்பாக அவனது நோயைக் கண்டுபிடித்த லைலாவிடம் வந்திருக்கிறான். அவனிடம் கத்தியிருந்தது. அந்தக்  கத்தியால் 21 தடவைகள்  லைலாவை குத்தியிருக்கிறான். அந்த இடத்திலே லைலாவின் மரணம் சம்பவித்துவிட்டது.

அறையை விட்டு அவன் வெளியேறும்போது  “நான் பழி தீர்த்துவிட்டேன்”  எனச் சொல்லிக்கொண்டு,  இரத்தம் தோய்ந்த கத்தியுடன் வெளியேறினான் . முன் மேசையில் இருந்த ரிசப்சனிஸ்ட் பதறியடித்தபடி உட்சென்றபோது,  நிலத்தில்  இரத்த வெள்ளம் தேங்கியிருந்தது.   கழுத்தில் பல வெட்டுகளுடன்  கதிரையில் தனது ஸ்ரெதஸ்கோப்பை மடியில் வைத்தபடி   லைலா சாய்ந்தபடி இறந்திருந்தார்.

நீதிபதி அவனை குற்றவாளி  எனக்கண்டு,  இருபத்தைந்து வருடம் சிறைத்தண்டனை கொடுத்தாலும்,  அவனது செயலுக்கு  டிலுசனல் சைக்கோசிஸ்(Delusional psychosis ) என்ற  மனோ வியாதியே காரணம்  என்பதால் அவன் தொடர்ந்து  மனநல வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படவேண்டும்  எனத் தீர்ப்பளித்தார்.

எனது நண்பன் அகமது,  அவனுக்கு அந்தத்  தண்டனை போதாது  என்று சொல்லியபடியிருந்தான்.   அவன்,  “  எல்லா சூடானியர்களும் குற்றவாளிகள்,  அவர்கள் கிறீஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் அவுஸ்திரேலியா  அகதி அந்தஸ்து கொடுத்து உள்ளே அனுமதித்தது  “  என்பான் .

அகமதுவிடம் நான் அடிக்கடி செல்வேன். அவனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களில் கலந்து கொண்டேன் அவனது குழந்தைகள் வளர்ந்து நன்றாகப் படித்தார்கள். தாயற்ற குறை அவர்களுக்குத் தெரியாது வளர்த்தான்

  மனைவியின் கொலை அவனை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது.   நீரிழிவு,  இரத்த அழுத்தம்,  சிறுநீரக பாதிப்பு எனப் பல நோய்கள் அவனைத் தஞ்சமடைந்துவிட்டன. அகமதுவை தொடர்ச்சியாகப்  பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் சூடானியர் மீதான  வெறுப்பு அவனிடமிருந்து  தொற்றிவிட்டது .

ஒருவனது நடத்தைக்காக முழு நாட்டவரையும் வெறுப்பது எப்படி என நீங்கள் கேட்கலாம் ? 

உண்மைதான்.

ஆனால் மனிதமனங்கள் அப்படியானவை. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பில்லை.  தர்க்கத்திற்கு அப்பாலானது. இதைவிட நண்பன் , அயலவன் என நான் எந்தவொரு சூடானியர்களோடும்  சேர்ந்து பழகவேண்டிய தேவையும்  இருக்கவில்லை. குறைந்த பட்சமாக ஒரு நாய் அல்லது பூனை வைத்திருக்கும் சூடானியனை எனக்குத் தெரியாது. என்னால் அவர்களை எட்டத்தில்வைத்து  இலகுவாக வெறுக்கமுடிந்தது. தெரியாதவர்களை  வெறுப்பது ஒரு விதத்தில் இனிமையானது கூட .

ஆனால்,  அன்று ஒரு சூடானியனோடு பேசும் தேவை வந்துவிட்டது. விக்ரோரியா மிருக  மருத்துவ சபை அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கிவிட்டது

என்னைத் தேடிவந்த  அந்த தோமஸுக்கு  உறுதியளித்தபடி அடுத்து வந்த  சனிக்கிழமை  அவனைச் சந்தித்தேன். பரீட்சைக்குப் படிக்கவேண்டிய புத்தகங்கள்,  வரக்கூடிய கேள்விகள், செய்முறைகள்  பற்றிச்  சொல்லி விட்டு இறுதியில் லைலாவை கொலை செய்தவனைப்பற்றி  அவனிடம் விசாரித்தேன்.

தோமஸ்,  தான்  அவனோடு சிலகாலம் ஒன்றாக அறையிலிருந்தேன் என்று சொல்லியபின் சில விடயங்களைச் சொன்னான்.

மாலி என்ற அவன்,  தென் சூடானை சேர்ந்தவன்.  பத்து வயதாக இருக்கும்போது   கடத்தப்பட்டு குழந்தைப் போராளியாக தென்சூடானில் உள்ள ஒரு போராட்ட  அமைப்பில் போராளியாக்கப்பட்டான் . இவர்கள் பல அட்டூழியங்களைச் செய்தார்கள்.  கிராமங்களுக்குள்  சென்று கொலை,  பலாத்காரம், தீவைப்பது என்பன போன்ற கொடிய செயல்கள்.  அதேபோல் இவர்களுக்கு எதிராக சூடானிய இராணுவம் பல கொடுமைகளைச் செய்தது. எட்டு வருடங்களின் பின்பாக மாலி சிறைபிடிக்கப்பட்டு , அங்கு  சித்திரவதை செய்யப்பட்டான்   சிறையிலிருந்து விடுதலையானதும் பக்கத்து நாடான  கென்யாவில் ஒரு  அகதி முகாமுக்குச் சென்றான்  அகதி முகாமிலிருந்தபோது  ஒரு பாதிரியாரின் உதவியினால் சர்வதேச அகதிகள் அமைப்பில் பதியப்பட்டு அவுஸ்திரேலியா வந்தான்.

மெல்பனில் மாலிக்கு ஒரு காதலி இருந்தாள். அவளைத் திருமணம் முடிப்பதற்காக  தீர்மானித்திருந்த காலத்திலே அவனது இரத்தசோதனை முடிவுகள் வந்தது. அவனது இரத்த சோதனையைத் தெரிந்துகொண்ட  காதலி அவனைப் புறக்கணித்துவிட்டாள். அவன் சமூகத்தில் பலரோடு சண்டை பிடித்துக்கொண்டிருந்த காலத்திலேதான் லைலாவின்   கொலையும் நடந்தது.

“  அவன் ஏன் அந்த பெண் டாக்டரை கொலை செய்யவேண்டும்? அந்த டாக்டர் எனக்கு மிகவும் தெரிந்தவர்.  மிகவும்  நல்லவர்   “ என்ற எனது அடக்க முடியாத கேள்வியையும் இந்த தோமஸிடம்  கேட்டேன்.

  “ எமக்கும் அந்தக் கேள்வி  வந்தது. அவனிடம் அரேபியர் மீது வெறுப்பிருந்தது. அவன் சிறையிலிருந்தபோது அவர்களால் சித்திரவதை செய்யப்பட்டவன். சிறையிலிருந்த காலத்திலே அவனுக்கு இந்த நோய் வந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டு,   எங்களுடன் இருந்தபோது அவர்களைப் பற்றி குரோதமாகப் பேசுவான். தனக்கு வந்த அந்த  நோய் அவர்களால்  திட்டமிட்டு ஊசிமூலம்  ஏற்றப்பட்டது என்பான் .  அதன்பிறகு  தான் போராட்டத்திற்கு வருவதற்கு முடியாமல் செய்வதற்காக அவர்கள் இதைச் செய்தார்கள் என்பதே அவனது வாதம்.  இரவில்  எழுந்து பல மணி நேரம் தன்னந்தனியனாக  வெளியே நடப்பான். எங்களோடு சில நேரங்கள் சகசமாகப் பழகிவிட்டு,  ஒரு சில நேரங்களில் குழப்பமானவனாக மாறிவிடுவான். நாங்கள் அவனைக் கணக்கெடுப்பதில்லை.  அவனது  நாட்டில் அவனது எட்டு வருடப் போராட்ட வாழ்வும் அதன்பின்பான சிறை வாழ்வும் அவனில் பல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்ததால் நாம் அவனிடம் அதிகம் எதுவும் கேட்பதில்லை.   அவனது காதலுக்குப்பிறகு நடத்தையில் மாற்றம் வந்தது. ஒரு சிடி செய்யும் தொழிற்சாலையில் வேலைக்குச்  சேர்ந்து,   காதல் கனவுகளிலிருந்தான். அந்தப்பெண் திருமணத்திற்கு  மறுத்ததும்,  இவனது தலையில் அடித்துவிட்டது என நாம் நினைத்தோம்.

அந்தச் சம்பவம் நடந்தன்று வேலைக்குப் போய்விட்டே  வந்திருந்தான். அவனது முகத்தைப் பார்த்ததும் நாங்கள் ஏதோ வேலையில் பிரச்சினை என நினைத்தோம்   “ என்று தோமஸ் மாலியின் கதையைச் சொன்னான். 

  “ மாலி,  ஒரு  குழந்தைப்போராளி, தீவிரவாத  இயக்கத்திலிருந்தவன் என்பது ஆரம்பத்தில் குடிவரவுத் திணைக்களத்திற்கோ (Immigration)  நீதிமன்றத்திற்கோ தெரியாது .   தெரிந்திருந்தால் அவனது  மனநிலைக்கு மருத்துவ சிகிச்சை  செய்திருக்கலாம்.  “

   “ உண்மைதான்.   ஆனால்,  போராட்டங்களில்,  வன்முறையில் ஈடுபட்டவர்கள் தங்களது கடந்த காலத்தை மறைத்துவிடுவார்கள். அதைச் சொன்னால் அகதி அந்தஸ்து தரமாட்டார்கள் என்ற எண்ணத்தால் பெரும்பாலும் பொய் சொல்கிறார்கள்  “  என்றான் தோமஸ்.   

 “ அந்தப்பகுதி எனக்கும் தெரியும்.  நானும் அகதிகள் அதிகமாக உருவாகிய இலங்கையிலிருந்து வந்தேன். அத்துடன் அகதிகளுக்கு உண்மை சொல்வதைவிட,  அகதி அந்தஸ்து பெறுவதே முக்கியம் . ஆனால்,  பலருக்குக் கடந்தகால மனக்குழப்பங்கள்,  அவர்களை  பலவற்றைச் செய்யத்தூண்டும். மாலிபோல் எதிர்காலமற்று கொலை,  தற்கொலை,  மற்றும் குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டவர்களை நான் கண்டிருக்கிறேன். உடல் ஆரோக்கியமில்லாதபோது  அதனை மறைத்தால்  அது அவருக்கே பாதிப்பு . ஆனால் மன ஆரோக்கியத்தை மறைப்பதால் சமூகத்தில்  பலரும்  பாதிப்படைவார்கள்.  “ என்றேன்.  

இரண்டு மணிநேரமாக நானும் தோமஸுடன் அந்த கதைகளைப்பற்றி பேசியவுடன்,  குழந்தைப் போராளியாக  வளர்ந்து  பெரியவனான   மாலிக்குப் பரிதாபப்படுவதா?  அல்லது, லெபனானில் நடந்த  உள்நாட்டுப்  போரிலிருந்து தப்பி வந்து வாழ்வதற்காக  அவுஸ்திரேலியா  வந்து இங்கே தனது அருமை மனைவியை பறிகொடுத்த  எனது நண்பன் அகமதுவுக்காக  பரிதாபப்படுவதா?

இப்பொழுது  அகமது நடைப்பிணமாக வாழுகிறான்.

அவனைப்பற்றிச் சிந்திப்பதா ?  என்ற  விடை தெரியாத கேள்விகள் தலையைச் சுற்றிய இலையான்களாகப் பறந்தன.

ஆனால் ,  அதன்பிறகு சூடானியர்களின்மீது அதுவரை ஏற்பட்டிருந்த வெறுப்பு,  எனது நெஞ்சுக் கூட்டைவிட்டு இறகு முளைத்த பறவைக்குஞ்சாக பறந்ததை  மட்டுமே உணரமுடிந்தது.

நன்றி – அம்ருதா.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.