
ஐந்தறிவு பிராணிகளின் குரலோசை ஆக்கிரமித்தவாறே அந்த மிருகவைத்தியசாலை தனது கடமையை அந்த காலைப்பொழுதில் ஆரம்பிக்கிறது.
அன்று செவ்வாயக்கிழமை. படுபிஸியான நாள்.
‘வார்ட்டு’களில் அனுமதிக்கப்பட்டிருந்த நாய்களையும் பூனைகளையும் பரிசோதித்துவிட்டு வெளிநோயாளர் பிரிவு அறைக்கு வருகின்றேன்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த சில பிராணிகளின் இரத்தம் சோதிக்கவேண்டியிருந்தமையால் – வெளிநோயாளர் பிரிவுக்கு வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது. ஒலிவாங்கி மூலம் – முதலாவதாக சோதிக்கவேண்டிய நாயின் பெயரையும் அதன் சொந்தக்காரரையும் அழைத்தேன்.
சிலகணங்களில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க அழகான யுவதி கருப்புநிற டோபர்மான் ( Dobermann) இனத்து நாயுடன் அறைக்குள் பிரவேசித்தாள். தன்னை ‘ஜெனி’ – என அறிமுகப்படுத்தினாள். அவுஸ்திரேலியாவுக்கே உரித்தான ‘சுகநல’ விசாரிப்புடன் நாயைப்பற்றிக் கேட்டேன்.
அந்த செல்லப்பிராணி வாலை ஆட்டியவாறு என்னை விநோதமாகப் பார்த்தது.
அந்தப் பார்வை ‘உன்னிடம் வந்துவிட்டேன் என் வாழ்வை இனி நீதான் தீர்மானிக்கப் போகிறாய்’ என்பது போல் இருந்தது.
”பெயர் என்ன?”
‘ரைசன்’, அவள் சொன்னாள்.
ரைசன் என்னருகே வந்து என் கையை முகர்ந்தது. அதன் தலையை தடவினேன்.
”என்ன சுகமில்லை?”
”டொக்டர், ரைசன் நன்றாகச் சாப்பிடுகிறான். ஆனால் மூன்று நாட்களாக இருமுகிறான். தொண்டையில் ஏதும் எலும்புத்துண்டு சிக்கியிருக்குமோ என்றும் கவலையாக இருக்கிறது.”
ஜெனியின் ஊகம் சரியாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் – ‘சமீபத்தில் எலும்பு ஏதும் சாப்பிடக் கொடுத்தீ;ர்களா?” எனக் கேட்டேன்.
”இல்லை டொக்டர்”?
”அப்படியானால் கனல் கொவ்( Kennel cough) . ஏனைய நாய்களிடமிருந்தும் தொற்றுதவதற்கு வாய்ப்புண்டு.” ரைசனின் தொண்டைப் பகுதியை வெளிப்புறமாக தடவிப் பார்த்தேன்.
”கிட்டத்தட்ட எமக்கு வரும் தடிமன் இருமல் போன்றுதான். பயப்படத்தேவையில்லை” என்று சொல்லிவிட்டு அதன் வயிற்றைத் தடவிப் பார்த்தேன். சற்று வீங்கி பெருத்திருந்தது.
”இது சாப்பாடாக இருக்கலாம்”- இது என் ஊகம்.
ஸ்டெத்தஸ்கோப்பை அதன் நெஞ்சில் வைத்து நாடித்துடிப்பை பரிசோதித்தேன்.
வழக்கத்துக்கு மாறாக வேகமாகத் துடிப்பதை, ஸ்டெத்தஸ்கோப் உணர்த்தியது.
‘ஜெனி என்னை மன்னிக்கவேண்டும். ரைசனின் இதயம் வீங்கியிருக்கிறது. அதனால் அது அவஸ்தைப்படுகிறது. இருமலுக்கும் அதுதான் காரணம்.”
இதனைக் கேட்ட ஜெனியின் முகம் வாடிவிட்டது.
”கவலைப்படாதீர்கள். எதற்கும் எக்ஸ் ரே எடுத்துப் பார்ப்போம்,” என்றேன்.
”டொக்டர் உண்மையிலேயே அதன் இதயம் வீங்கியிருக்கிறதா?” ஜெனி கண்கள் பனிக்கக் கேட்டாள்.
”அப்படி இருக்கக் கூடாது என்றுதான் விரும்புகிறேன். இருந்தாலும் எக்ஸ் ரே தான் எதனையும் தீர்மானிக்கும்.”
ஜெனி கலங்கியவாறு ரைசனைத் தடவினாள். அது குனிந்து அவள் பாதங்களை முகர்ந்தது. வாலை ஆட்டியது. நர்ஸ்சை அழைத்தேன். ஜெனியை அமரச்சொல்லிவிட்டு, நர்ஸ்சின் துணையுடன் ரைசனை எக்ஸ் ரே அறைக்கு அழைத்தேன்.
ரைசனை அங்கு அழைப்பது பெரும்பாடாகிவிட்டது. அது தனது எஜமானியைவிட்டுப் பிரிந்து வர மனமில்லாமல் அவளையே ஏக்கத்துடன் பார்த்தது. அவளும் அதனைத் தடவி என்னுடன் அனுப்பினாள்.
எக்ஸ் ரே எடுத்துப் பார்த்ததும் எனக்கு ஒருபுறம் மகிழ்ச்சி, மறுபுறம் கவலை.
எனது மருத்துவ அனுபவத்தின் பிரகாரம் இதயம் பருத்துள்ளதை எக்ஸ் ரே எடுக்க முன்பே அனுமானித்துக் கொண்டதனால் – என் அனுமானம் எக்ஸ் ரே மூலம் சரியாகிப் போனதால் எழுந்த மகிழ்ச்சி.
ஆனால் – அந்த வாய்பேசாத ஜீவன் மரணப்போராட்டத்தில் சிக்கியுள்ளதே என்பதை எக்ஸ் ரே படம் பிடித்துக் காட்டியதனால் எழுந்த கவலை.
ரைசனின் நெஞ்சறையில் முக்கால்வாசிப் பகுதியை இதயம் பெருத்து ஆக்கிரமித்திருந்தது,
அதனைப் பார்த்து ஜெனி அதிர்ச்சியடைந்தாள். கண்களில் நீர் முட்டிக் கொண்டது.
”ஜெனி மன்னிக்கவேண்டும். ரைசனின் இதயம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் மருந்துகள் எதுவும் பலனளிக்கப் போவதில்லை.” என்றேன்.
”டொக்டர் எனது ரைசனின் இதயம் விசாலமாக பெருத்துவிட்டதை உங்களது எக்ஸ் ரே காட்டுகிறது. ஆனால்-அதன் இதயம் உண்மையிலேயே மிகவும் விசாலமானதுதூன் என்பதை அது தனது செயல்களின் மூலம் பலதடவை எனக்குக் காண்பித்துவிட்டது.’ என ஜெனி சொல்லும்போது கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் -விழிமடலிலிருந்து உதிரத் தொடங்கின.
அவளை ஆச்சரியத்துடன் பார்த்தேன். ‘ரிசு’ பொக்ஸிலிருந்து ‘ரிசு’ எடுத்துக் கொடுத்தேன்.
”நன்றி”
அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது, ரைசனைப் பற்றிய கதையொன்றை அவள் எனக்குச் சொன்னாள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு-ஒரு பனிக்காலம்.
மெல்பன் நகரில் ஒரு பெரிய இலாகாவின் களஞ்சிய அறையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் வேலை, ஜெனிக்கு.
மாலை ஆறு மணிக்கெல்லாம் பொழுது இருண்டுவிடும். வேலை முடிந்து ரயிலேறி கிளேற்றனுக்குத் திரும்புகிறாள். இரவு எட்டுமணியாகிவிட்டது. ரயில் நிலையத்திலிருந்து நடைதூரம்தான் அவளது வீடு. தெருவில் ஜனநடமாட்டம் இல்லை. மயான அமைதி. கூப்பிடு தொலைவில் வீடு.
திடீரென ஒரு உருவம் அவள்மீது பாய்ந்து அவளை இருளடைந்த பக்கமாக இழுத்தது, ஜெனி அதிர்ந்தாள். அவன் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்கவன். அவளைக் கட்டிப்பிடித்து மூர்க்கத்தனமாக நடந்துகொண்டான். அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. தரையில் விழுந்தாள். அந்தக் கயவன் அவள் மீது பாய்ந்தான்.
ஜெனி கூக்குரலிட்டாள்..
”ரைசன் ரைசன்”
ஜெனியின் அவலக்குரலைக் கேட்டு அபயம் அளிக்க ஓடிவந்தது ரைசன். ஜெனியை பலாத்தகாரம் செய்ய முனைந்த அந்தப் பாதகனை கவ்வி இழுத்தது.
ஜெனி தப்பினாள். ரைசன் தனது எஜமான விசுவாசத்தை அந்தக் கயவன் மீது காட்டத் தொடங்கியது. அவன் ரைசனிடம் ‘கடி’ வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.
அன்று ஜெனியின் மானம் காத்த ஜீவன். – இன்று அவளைவிட்டுப் பிரியப் போகிறது.
அந்தச் சம்பவம் முதல் – ரைசன் ஒரு மெய்ப்பாதுகாவலன் போன்று ஜெனியை வலம்வந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கதையைக் கேட்டு, என் மனமும் உருகியது. எனினும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு.. ”ஜெனி மன்னிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு பாதுகாப்புத்துணையாக இதுநாள்வரையில் வாழ்ந்த ரைசனை நீங்கள் நிரந்தரமாக பிரியவேண்டிய வேளை வந்துவிட்டது.”- என்றேன்.
”என்ன சொல்கிறீர்கள் டாக்டர்”?
”கருணைக் கொலை” என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஜெனி விம்மினாள்.
”உங்கள் மீது பாசம் பொழிந்த ஜீவன் நோய் உபாதையில் அவஸ்தைப்படுவதை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா? அதற்கு கருணைக் கொலையை கொடுப்பதன் மூலம் நிரந்தரத் துயிலில் விட்டு அதன் ஆத்மா சாந்தியடையச் செய்யலாம்.”
”டொக்டர்!.” ஜெனியால் அதற்கு மேல் பேச முடியவில்லை. அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. கண்ணீர் உகுத்தவாறே-அந்த கருணைக் கொலைக்கு ஒப்புதல் அளித்து படிவத்தில் ஒப்பமிட்டாள் ஜெனி.
ஜெனி ரைசனை அணைத்தவாறு விறைத்தபடி நின்றாள். அது அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.
நான் ஊசிமூலம் அந்த உயிர்பறிக்கும் பச்சைநிறத் திரவத்தை ரைசனின் முன்னங்காலில் ஏற்றினேன். ரைசனின் விழி அகன்ற பார்வை ஜெனியின் மீது நிலை குத்தியிருக்க எதுவித துடிப்புமின்றி அடங்கியது.
எனினும் – அந்த வாய்பேசமுடியாத ஜீவனின் இதயம் பேசிக்கொண்டேயிருக்கும்.
மறுமொழியொன்றை இடுங்கள்