
நடேசன்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் றாகிங் உச்சக்கட்டமாக இருந்த காலமது. எனது வருடத்தில் (1975) பல்கலைக்கழகம் சென்ற அல்பிட்டி(காலி) மாணவி ரூபா ரத்தினசீலி, றாகிங் தாங்காது ராமனாதன் விடுதியின் மேல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்று, பிற்காலத்தில் சக்கர நாற்காலியில் கால் நூற்றாண்டுகள் மேல் வாழ்ந்தவர். இவருக்கு வீடும் கிணறும் கட்டி, பேராதனை மாணவர்கள் உதவி செய்தார்கள். பிற்காலத்தில் அந்த வீட்டை விட்டு விலகும்படி அவரது சகோதரர் வலியுறுத்தியபோது ரூபா ரத்தினசீலி 2002 இல் மனமுடைந்து பேராதனை மாணவர்கள் கட்டிய கிணற்றுள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் .
சடங்கு, சமயம் என்றாலும் சிறுமிகளுக்கு காது குத்துதல், சிறுவர்களுக்கு சுன்னத்து செய்வது முதலானவை வலி தரும் அனுபவங்கள். ஆனால், அதை செய்யாது விடுகிறார்களா ? தென்னாபிரிக்காவில் சில ஆண் பிள்ளைகள் வயதுக்கு வந்ததும் மார்பில், இரும்பால், மாட்டுக்குச் செய்வதுபோல் குறி சுடுவார்கள். அதாவது அவர்கள் வயதுக்கு வந்துவிட்டார்கள் என்ற அடையாள முத்திரை.
பல்கலைக் கழகம் செல்லும்போது இந்த றாக்கிங் அனுபவம், தவிர்க்க முடியாத விடயமாகவே பார்க்கப்பட்டது. கலகலப்பாகவும் கொண்டாட்டமாகவும் செய்த அதேவேளையில், பலர் தங்களது மன வக்கிரங்களை தீர்க்குமுகமாக நடந்து கொள்வார்கள். புதிதாக வந்த ஒருவனை தமது பாலியல் இச்சைக்கு சிரேஸ்ட மாணவர்கள் பாவிப்பதும் நடந்தது. புதிதாக வந்த அழகான பெண்களை பழைய மாணவர்கள், தங்கள் காதலியாக்கும் காலமாகவும் அது இருந்தது. ஆனால், அளவுக்குமீறி நடக்கும்போது மற்றைய மாணவர்களால் அதற்கு சில தடைகள் போடுவதையும் பார்த்திருக்கிறேன் .
சசி கிருஸ்ணமூர்த்தியால் அன்று இரவு உணவு அறைக்கு கொண்டு வரப்பட்டதால், நான் உணவுக்கூடத்திற்கு போகாது எலி வளையில் ஒளிந்திருப்பதுபோல் அந்த இரவு நான் தப்பி விட்டேன் . மனப்பயத்தோடும் நித்திரையோடும் போராடியபடி படுக்கையில் இரவோடு யுத்தம்செய்து கொண்டிருந்தேன். புதிய இடம், தெரியாத மொழி, புரியாத சூழ்நிலைகள் எனது தைரியத்தை சூறையாடியிருந்தது.
மறுநாள் காலையில் ஆறு மணியிருக்கும். பிரசாத வரோங் (Freshers- புதியவர்கள் வாங்கடா) என்ற சத்தம் வெளியே சுவர்களில் மட்டுமல்ல, கந்தானை மலைக் குன்றுகளிலும் மோதி என் நெஞ்சில் எதிரொலித்தது. இன்றும் அந்த வார்த்தைகளை எனக்கு மறக்க முடியாது. இதயம் ஓங்கியடிக்க, ஈரமற்ற நாக்குடன் கண் விழித்து எனது அறையில் இருந்தவர்களைப் பார்த்தேன். அவர்களின் முகங்களில் புத்தனின் அமைதியான புன்முறுவல் தவழ்ந்தது.
“ போயிரும், அல்லாதுவிடில் கதவைத் தட்டுவார்கள் “ என்றார் சார்ள்ஸ். என்னை அவசரமாக வெளியே அனுப்ப முயல்கிறாரே என்ற ஆதங்கத்துடன் சசி கிருஸ்ணமூர்த்தியைப் பார்த்து “ நான், அறையில் உள்ள கபேட்டில் ஒளிந்து கொள்கிறேன். என்னை உள்ளே வைத்து பூட்டிவிடுங்கள் “ என்றேன்.
“ அது சரி வராது “ என்று சார்ள்ஸ் சொன்னபோது சசியும் தலையை ஆட்டினார்.
கண்டியில் சித்திரை மாதம் அதிகம் குளிராது என்றாலும், உடலில் உள்ள உரோமங்கள் பயத்தில் சில்லிட்டு நின்றன.
நீல சாரம், வெள்ளை சட்டையுடன் பொந்திலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும் சருகாமையாக தலையை நீட்டியபோது, “அடே உத்திக்க புத்தா எலியட்ட வரேங் ( வே… மகனே வாடா வெளியே) என்ற குரல் வந்தது.
ஏற்கனவே சிங்கள கெட்ட வார்த்தைகள் மட்டும் தெரிந்திருந்ததால் ஈரக்குலை அதிர்ந்தது.
இதுவரை வாழ்க்கையில் என்னை எவரும் அப்படிக் கூப்பிட்டதில்லை.
வெளியே வந்தபோது, சென். கில்டா மண்டபத்தின் இரண்டு விங்குகள் இடையில் உள்ள புற்தரையான நிலப்பகுதியில் என்னைப்போல் புதியவர்கள் நூறுபேரளவில் பிறந்தமேனியாக நின்றார்கள்.
மனிதர்கள் எல்லோரும் ஒன்றான போது அவர்களது நிறங்கள், உடலமைப்பு, உறுப்புகள் பலவகையாக இருந்தன.
ஏற்கனவே அறைக்கு வெளியே வரச் சொன்னவன், எனது உடையையும் கழற்றும்படி சொன்னான் . முன்னர் யாழ். இந்துக் கல்லூரி விடுதியில் இருந்ததால் வெறும் உடம்போடு நிற்பது எனக்கு பெரிதாகத் தெரியவில்லை
கழற்றி விட்டு நிர்வாணமாக அவர்களுடன் சேர்ந்துகொண்டேன் . பலர் தங்கள் அந்தரங்கத்தை ஒரு கையாலோ அல்லது இரு கைகளாலோ மறைத்தபடி பயத்தால் நடுங்கினாரகள்.
அந்த விடுதியில் உள்ள புதியவர்கள் எல்லோரும் அந்த இடத்திற்கு வந்து விட்டார்கள் என்று உறுதியானதும், எங்களுக்கு உடற் பயிற்சிக்கான கட்டளை பிறந்ததது. இருப்பது, எழும்புவது, ஒற்றைக்காலில் நிற்பது, தவளைபோல் பாய்வது, நாய்போல் காலைத் தூக்குவது, நிலத்தில் உருளுவதுமென பல வகையான கட்டளைகள் பலரிடமிருந்து வந்தது. எங்களது இந்த உடற்பயிற்சிகளை பழைய மாணவர்கள் ஏதோ ஒலிம்பிக் விளையாட்டாக பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அரைமணித்தியாலத்தில் நான் களைத்துவிட்டேன். மெதுவாக அசைந்து கொண்டிருந்தபோது, ஒருவன் வந்து முன்னால் நின்ற, மிகவும் பருமனாக இருந்தவனது குஞ்சாமணியை பிடிக்கச் சொன்னான். நான் திடுக்கிட்டு பின் வாங்கினேன். பின்வாங்கிய என்னை அவன் விடவில்லை . மீண்டும் தொடர்ந்து கட்டளையிட்டபடியிருந்தான். நான் முன்னால் நின்றவனது முகத்தை பார்த்தேன். அவனது உடல் பருமனாக இருந்தாலும் பால் வடியும் குழந்தை போல் முகமும் குஞ்சாமணியும் இருந்தது. .அவன் என்னைப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பினான். உடனே அவனுக்கும் அதே கட்டளை. அவன் தயங்காமல் சொன்னதைச் செய்தான். ஐந்து நிமிடம் ஒருவரது குஞ்சாமணிகளை பிடித்துக்கொண்டிருந்த பின்னர் . “போங்கடா” “ என்றார்கள். அந்த நூறு பேரில் நாங்கள் இருவருமே விரைவாக அறைக்குச் சென்றவர்கள்.
நிலத்தின் புல் , புழுதி எல்லாம் அப்பியபடி, மண் சுமந்த மேனியனாகச் சென்று குளித்தேன். வேர்த்த உடலுக்கு குளாயில் வந்த மகாவலி கங்கையின் குளிர் தண்ணீர் இதமாக இருந்தது. அத்துடன் றாகிங் என்ற பயம் அந்த குளியலில் கரைந்தோடியது . இவங்கள் மயிர்கள், இதுக்குமேல் என்ன செய்யப் போகிறார்கள்? பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியமான நினைவும் உதித்தது. அப்போது உடல் முறுகியது. வீரனாக சாப்பிடச் சென்றேன்.
முதல் பதினைந்து நாட்கள் வெள்ளை உடுப்போடு போகவேண்டும் . மிருகவைத்திய மாணவர்கள் முக்கிய பாடங்களில் இரண்டை மருத்துவ பல் வைத்திய மாணவர்களோடு சேர்ந்து பயிலவேண்டும். நாங்கள் பாடம் நடத்தும் மண்டபத்துள் நுழையும்போது நாய்போல் குரைத்தபடி போகவேண்டுமென்றார்கள்.
அப்படியே குரைத்தபடி சென்றோம். 200 பேர்கள் கொண்ட பெரிய மண்டபத்தில் எங்கள் பாடம் நடந்தது . நான் தாமதமாக சென்றபோது எனக்கு மண்டபத்தில் கடைசி இடம் கிடைத்தது. ஒரு பெண் ஆசிரியர் வந்து ஆங்கிலத்தில் நடத்திய பாடம், போட்டில் எழுதிய எழுத்து எனக்குத் தெரியவில்லை. பக்கத்தில் இருந்த ஒருவனிடம் கேட்டபோது, தனக்குத் தெரிகிறது என்றான். அப்பொழுது எனக்கு தூரப்பார்வை இல்லை என்ற விடயம் புரிந்தது. இதுவரையில் பெற்றார்களோ ஆசிரியர்களோ கவனிக்கவில்லை . பார்வை குறைபாட்டை புரிந்து கொண்டபோது, எனக்கு இருபது வயதாகியிருந்தது. பின்னாளில் எனது மகளில் இந்த விடயத்தை அவளது பத்து வயதில் கண்டுபிடித்தோம். எனது பேரனுக்கு ஐந்து வயதில் கண்ணாடி அணிவிக்கிறோம்.
சென்னை

” IS IT TRUE TELO KILLED KAVALOOR JEGANATHAN…? ”
” YES ”
முகநூலில் ஒரு நண்பரிடம் சமீபத்தில் பெற்றுக்கொண்ட பதில்தான் இங்கு மேலே சொல்லப்பட்டது.
சென்னையில் தமிழர் மருத்துவ நிலையம் (MUST) நடத்திய காலத்தில் நடந்த விடயங்களை முன்னர் எழுதிக்கொண்டிருந்தேன்.
நான் எழுதும் சில விடயங்கள் சிலரை பாதிக்கும் என்ற தயக்கத்தின் காரணத்தால்தான் அந்தப்பத்தியை இடை நிறுத்தியிருந்தேன். சமீபத்தில் எனது முகநூலில் ஒரு நண்பரால் எழுதப்பட்ட விடயம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. இதுவரையும் நான் யோசிக்காத ஒரு புதிரின் யன்னலைத் திறந்து காட்டியது. அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பெயரை இங்கு குறிப்பிடவில்லை.
85 ஆம் ஆண்டளவில் சென்னையில் ஒரு மாலை நேரம். ஆதவன் மறைந்து சென்னை நகரத்தின் மின்சார விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. நான் சூளைமேடு வீதியில் உள்ள தமிழர் மருத்துவ நிலையத்தில் இருந்து ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் நடத்திய தகவல் நிலையத்திற்குச் சென்றேன். அதிக தூரமில்லை. ஐந்து நிமிட நடை போதுமானது.
மாலைப் பத்திரிகையான மக்கள் குரல், அவர்களது அலுவலகமான எபிக்கிற்கு (EPIC ) வந்திருக்கும். வீடு செல்வதற்கு முன்பு இலங்கையில் நடந்த போர் செய்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பது எனது நோக்கம். எபிக் கட்டிடத்தில் ஏப்பொழுதும் என்னை வரவேற்கும் இயக்கத் தோழர்கள் இருப்பார்கள்.
அந்த இரண்டு மாடிக் கட்டிடத்தின் அருகே சென்றபோது, இருட்டில் ஒரு பெண் ஒரு குழந்தையை நெஞ்சில் அணைத்தபடி நிற்பதைக் கண்டேன். உண்மையில் அந்தக் குழந்தை பெரிய குழந்தை என்பதால் அந்தப் பெண் சுமக்கும் பாரம் அவள் முகத்தில் தெரிந்தது.
நான் அருகில் சென்றபோது அந்தப் பெண் சிரித்தாள்.
தெரிந்த முகமாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் தெரியவில்லை.
தயங்கியபடி , ‘ நீங்கள்?’ என்றேன்.
‘ஜெகநாதனின் மனைவி. எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்’
‘அதுதானே மனதில் நினைத்தாலும், உடனே ஞாபகம் வரவில்லை. மன்னிக்கவும். ஒரு நாள் பார்த்தது அல்லவா. ’ என்றேன்
ஜெகநாதன் எனப்படும் காவலூர் ஜெகநாதன், என்னுடன் யாழ். இந்துக்கல்லுரி விடுதியில் இருந்தவர். ஒரு வகுப்பு முன்பாக படித்தாலும், ஓல்ட் போடிங் என்ற அந்த விடுதியில் எனது பக்கத்துக் கட்டில் அவருடையது. ஒன்பதாவது, பத்தாவது வகுப்புகளில் படித்தபோது எங்கள் கட்டில்களுக்கிடையே கபேட் எனப்படும் சிறிய மர அலுமாரி பிரிக்கும். படுக்கும் போதும், நித்திரையிலிருந்து விழிக்கும் போதும் ஒருவரது முகத்திலே ஒருவர் விழிப்போம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இப்படி அருகருகே வாழ்ந்தோம். எனது குடும்பத்தினர் எழுவைதீவில் இருந்து யாழ்ப்பாணம் வந்ததால், பிற்காலத்தில் விடுதியை விட்டு விலகினேன். அதன் பின்னர் எமக்கிடையே எந்தத் தொடர்புமில்லை.
சில வருடங்களின் பின்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்திய பீடத்திலிருந்து நான் படித்த காலத்தில், பேராதனை சந்தியை நோக்கி எனது காதலியுடன் ( தற்போதைய எனது மனைவி ) போய்க் கொண்டிருந்தபோது, எதிர்பாராமல் சிரித்தபடியே வந்து கொண்டிருந்த வேட்டியணிந்த ஜெகநாதனை சந்தித்தேன். அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ( பேராதனையில் வேட்டியுடன் திரிபவர்கள் அரிது. குறிஞ்சிக் குமரன் கோவிலுக்கு செல்பவர்களில், மிகக் குறைந்தவர்களையே வேட்டியுடன் கண்டிருக்கிறேன்).
‘ என்னடாப்பா… என்ன செய்கிறாய் ?’
பக்கத்தில் உள்ள விவசாயத் திணைக்களத்தை நோக்கி கையை காட்டிவிட்டு, ‘இங்கு வேலை செய்கிறேன்” என்றான்
அதன் பின்பும் எங்களுக்கிடையே தொடர்பு இல்லை. ஆனாலும் இந்த ஜெகநாதனே காவலூர் ஜெகநாதன் என்ற பெயரில் கதைகள் எழுதுபவர் என்பதை பல வருடங்களின் பின்பு சிலர் சொல்லக் கேள்விப்பட்டேன். இலங்கையில் இருக்கும்வரை எந்த இலக்கியவாதியையோ எழுத்தாளரையோ எனக்குத் தெரியாது.
85 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கோடம்பாக்கத்தில் லிபேர்ட்டி தியேட்டர் அருகே நான் குடியிருந்த காலத்தில், ஒரு நாள் நுங்கம்பாக்கம் சாலையை கடந்து சென்றபோது எனது கையை பிடித்து இழுத்தவரைத் திரும்பிப் பார்த்தால் அது நமது ஜெகநாதன். அதே வேட்டி, அதே சிரிப்பு.
வீதியில் நின்று கதைத்தபோது ‘வா வீட்டுக்கு. அருகில்தான்’ என பலவந்தமாக இழுத்துக்கொண்டு ஓட்டோவில் எறினான். பல சந்துகள் கடந்து அவனது வீட்டிற்கு சென்றோம். சிறிய வீடு. மனைவியையும் குழந்தையையும் அறிமுகப்படுத்தியதுடன் அன்று மதிய உணவும் தந்தான்.
நான் அவனது வீட்டில் சாப்பிட்ட சில காலத்தின் பின்பே அவனது மனைவியை ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் எபிக் அலுவலக வாசலில் கண்டேன்.
‘ எதற்காக இந்த இடத்தில் நிற்கிறீர்கள்?’
‘அவரை இரண்டு நாட்களாக காணவில்லை. அதுதான் இவர்களைக் கேட்க வந்தேன்.’
‘யாரைப் பார்க்கவேண்டும்?
தலைவர் புத்மநாபாவை’
‘சரி என்னுடன் வாங்கோ’
மேல் மாடிக்கு கூட்டிச் சென்றேன். அங்கு இருந்தவர்களிடம் இரஞ்சன் தோழரை பார்க்க முடியுமா? என வினவினேன் (பத்மநாபாவை இரஞ்சன் என பலர் அழைப்பார்கள்)
‘அறைக்குள் இருக்கிறார்’
நான் சென்று கதவை தட்டியபோது, ‘நடேசன் தோழர்’ என விளித்தார்.
வேறு சிலரும் இருந்தார்கள். யார் யார் என்பது மறந்துவிட்டது.
‘உங்களிடம் ஒரு விருந்தாளியை கூட்டி வந்தேன் ‘
‘யார் அது ? ‘
‘காவலூர் ஜெகநாதனின் மனைவி. குழந்தையுடன் வந்து வாசலில் நிற்கிறார்.’
அவர் தனது தலையில் கை வைத்தபடி ‘இதைப்பற்றி எங்களுக்குத் தெரியாது.’ என்றார்.
‘ உங்களுக்குத் தெரியாதென்றால் யாரைக் கேட்கவேண்டும் என சொல்லுங்கள். ஜெகநாதன் எனது பாடசாலைத் தோழன்.’
சிறிது நேரத்தின் பின்பு, ‘ பாலகுமாரிடம் கேளுங்கள். நான் சொன்னதாகச் சொல்லுங்கள்.’ என்றார்.
நான் வெளியே வந்து ஜெகநாதனின் மனைவியிடம் சொன்னேன். ‘இவர்கள் தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் அத்துடன் ஈரோஸ் பாலகுமாரை கேட்கும்படி கூறினார்கள். எனக்கு ஒரு நம்பிக்கை இவர்களுக்கு இதில் சம்பந்தமிராது. அப்படி இருந்தால் என்னை இதில் தலையிடவேண்டாம் என சொல்லியிருப்பார்கள்’எனச்சொல்லிவிட்டு,
ஈரோஸ் பாலகுமாரின் அலுவலகத்திற்கு ஓட்டோவில் கூட்டிச் சென்றேன்.
அவர்களது இடம் அதிக தூரமில்லை. வடபழனி என நினைக்கிறேன்.
நான் அவர்களது அலுவலகத்திற்குச் சென்றபோது பாலகுமார், மேல்மாடியில் நின்று என்னைப் பார்த்தார்.
‘ என்ன இந்தப் பக்கம்? ‘ என மாடியில் இருந்தபடியே அவர் கேட்டபோது,
‘காவலூர் ஜெகநாதனது மனைவி, கணவனைத்தேடி ஈ. பி. .ஆர். எல். எஃப் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பத்மநாபா உங்களை கேட்கும்படி அனுப்பினார்’
‘எங்களுக்கத் தெரியாது’
‘ இப்படியே இருவரும் சொன்னால் என்ன செய்வது?
‘உண்மையில் எங்களுக்குத் தெரியாது’ என பதிலளித்துவிட்டு பாலகுமார் உள்ளே சென்றார்.
அந்தப் பதில் எனக்கு ஈரோஸ் பாலகுமார் மீது சந்தேகத்தை வளர்த்தது. அத்துடன் பாலகுமாரின் மீது ஆத்திரத்தையும் உருவாக்கியது.
ஜெகநாதனது மனைவி அழுதபடி இருந்தபோது, எனக்கு வேறு வழி தெரியவில்லை . அவரை மீண்டும் அவரது வீட்டில் விட்டு விட்டு நான் வீடு திரும்பினேன்.
எல்லா இயக்கங்களும் அங்கம் வகித்த தமிழர் மருத்துவ நிலையத்தின் காரியதரிசியாக நான் இருந்ததால் பலரோடு எனக்கு தொடர்பு இருந்தது. அதே நேரத்தில் இவர்களது ஆயுதப்போராட்டத்தில் நான் நம்பிக்கை கொண்டிருந்த காலம். ஜெகநாதனது விடயத்தை வேறு எப்படி மேலே எடுப்பது என புரியாததால் அதற்குப் பின்பு ஜெகநாதனது மனைவியைத் தொடர்பு கொள்ளவில்லை. பின்பு ஜெகநாதன் கொலை செய்யப்பட்டதாக அறிந்தேன். மிகவும் மனவருத்தமடைந்தேன்.
கொலைக்கான காரணங்களை பலர் பலவிதமாக கூறினார்கள். இலங்கை அரசாங்கத்தின் ஏஜண்ட். தனிப்பட்ட விவகாரம். அதைவிட பணப்பிரச்சினைகள் என பல ஊகங்களுக்கு மத்தியில் அந்தக்கொலை மர்மமாக இருந்தது. இதே வேளையில் அவுஸ்திரேலியாவுக்கு நான் புறப்படுவதற்கு முன்பு , ஈரோஸ் நான்கு கொலைகளையே அதுவும் மதுரையில் செய்தார்கள் என தமிழ் நாட்டு இரகசிய பொலிஸார் கூறியிருந்தார்கள்.
ரெலோ, விடுதலைப்புலிகள், புளட் என்பன ஏராளமான கொலைகளை தமிழ்நாட்டு மண்ணில் செய்திருந்தனர்.
இந்திய, தமிழ்நாட்டு பொலிசார் இலங்கையர் இயக்கங்களால் கொலை செய்யப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத போதும், எங்கெங்கு எவ்வளவு பேர் கொலை செய்யப்பட்டார்கள் என்ற புள்ளி விபரங்களை சரியாக வைத்திருந்தனர். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடல் பிரதேசத்தில் நடந்த கொலைகள் சில அந்த எண்ணிக்கையில் தப்பியிருக்கலாம் .
என் மனதில் காவலூர் ஜெகநாதன் விடயம் பலகாலமாக புதிராக இருந்தது. இதற்கு அப்பால் ஜெகநாதனது தம்பியான டான் தொலைக்காட்சி குகநாதன் 2009 இல் இருந்து எனக்கு நெருங்கிய நண்பராகியதும் அவருக்கு இதுவிடயத்தில் ஏதாவது துப்பு கிடைத்ததா என பல முறை விசாரித்திருக்கின்றேன்.
இப்படி புதிராக இருந்த விடயத்தை, ரெலோவில் இருந்த ஒருவர் முகநூலில் பதிவுசெய்த குறிப்பு என்னைத் திடுக்கிடவைத்தது. அவரது கூற்றின்படி சின்மையா நகரில் வைத்து இலங்கை ஏஜெண்ட் என்ற சந்தேகத்தில் காவலூர் ஜெகநாதன் ரெலோவால் கொலை செய்யப்பட்டார் எனச்சொல்லப்பட்டிருந்தது.
அக்காலத்தில் ரெலோவுக்கு பொறுப்பாக இருந்த சிறிசபாரட்ணம் இப்போது இல்லாதபோதிலும், அந்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
தற்போது முள்ளிவாய்க்கால் விடயங்களைப் பேசும் இவர்கள் தமிழர்களில் முக்கியமானவர்களையும் அதேவேளையில் இயக்கத்துள் உட்கொலைகளையும் ஏன் செய்தார்கள் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டியுள்ளது. இக்கொலைகள் கால் நூற்றறாண்டுக்கு முன்னால் நடந்தவை என்றாலும் தமிழர்களை தமிழர்களே கொலை செய்த வரலாறு எமக்குண்டு.
போராட்ட இயக்கங்கள் என்ற போதையில் இந்த இயக்கங்கள் அத்துமீறியதுதான் அந்த கறைபடிந்த வரலாறு. 90 ஆம் வருடம் வரையும் விடுதலைப்புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் சிறிதும், பெரிதுமாக பல கொலைகளை செய்தன.
தற்போதைய அரசியலில் உள்ள தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தின் கொலைகளை கண்டிக்கிறார்கள். சிறையில் வைத்திருக்கும் தமிழ் கைதிகளைப்பற்றி பேசுகிறார்கள். அது பற்றி அறிக்கை விடுகிறார்கள். ஆனால், பழைய இயக்கங்களை மீண்டும் காவியபடியே வலம் வருகிறார்கள். இயங்கங்களின் செயல்களுக்கு விளக்கமளிப்பதுடன் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் யுவதிகளின் தாய் தந்தை சகோதரங்களிடத்தில் அவர்களுக்கு என்ன நடந்தது? என்ற விளக்கத்தையாவது வெளிப்படுத்தவேண்டிய கடப்பபாடு உள்ளது.
காணாமல் போன பொதுமக்களை தேடித்தருமாறு ஆணைக்குழுவின் முன்னால் உறவினர்கள் நிற்கிறார்கள். அதுபோன்று ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்களினால் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றி அந்த இயக்கங்களின் இன்றைய தலைவர்கள் என்ன சொல்வார்கள்?
நான் விடுதலைப்புலிகளை விட்டுவிடுகிறேன்.
விசர்நாய் வைரஸ் தொற்றிய நாய்போன்று தமக்கு உடன்பாடற்றவர்கள் என கருதியவர்களையெல்லாம் இன, மத, பாகுபாடில்லாமல் அது கொலை செய்தது. அதே வைரசின் தாக்கத்தால் அது பதினைந்து நாட்களில் இறந்துவிடும்.
தற்போதைய இலங்கை அரசியலில் உள்ள தமிழரசுக்கட்சி வழிவந்தவர்களைத்தவிர, அவ்வாறு வராத முன்னர் ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கங்களின் தலைவர்கள் பொறுப்புக் கூறவேண்டியவர்கள். இந்தத் தமிழ் இயக்கங்கள் இலங்கையிலும் பலரை கொன்றிருக்கிறன. சில தலைவர்களிடத்தில் இரத்தத்தின் கறை படியாத போதிலும், அவர்கள் அணிந்துள்ள வேட்டிகள் சட்டைகளில் எத்தனையோ அப்பாவிகளின் இரத்தக்கறையுள்ளது.
இலங்கை அரசின் உளவாளி, சமூக விரோதிகள், துரோகிகள் முதலான குற்றச்சாட்டுக்களை சுமத்தியே பலர் இந்த இயக்கங்களினால் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு இந்த இயக்கங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையே பின்னாளில் விடுதலைப்புலிகள் இவர்கள் மீது வைத்தார்கள்.
இதில் இருந்து தெரிவது என்ன ?
ஒவ்வொருவரும் பலமாக இருக்கும் காலத்தில், மற்றவர்கள் மீது போடும் சட்டைகளைத்தான் தற்பொழுது விடுதலைப்புலி ஆதரவாளர்கள் அவர்கள் ஆதரித்த இயக்கத்தின் முக்கியமானவர்கள் மீது போடுகிறார்கள்
தமிழினியின் கூர்வாளின் நிழலைப் படித்தபோது ஒரு விடயம் தெளிவானது. மாத்தையாவை புலிகள் ஏன் கொலை செய்தனர் என்பது தமிழினிக்கு அப்பொழுது தெரியவில்லை. அவருக்கு மட்டுமல்ல, முக்கிய அங்கத்தினர்களான கருணா என்ற முரளிதரனுக்கோ கே. பி. என்ற பத்மநாதனுக்கோ தெரியாது.
இதற்காக யாரையாவது பிடித்து தண்டனை கொடுக்கவேண்டும் என்பது எனது நோக்கமல்ல.
அந்தக்கொலைகளை யார் செய்தனர்?
ஏன் செய்தார்கள்? என்பதை எமது சமூகமும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் அறிந்து கொள்வது அவசியம்.
குறைந்த பட்சமாக செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும். அத்துடன் பிராயச்சித்தமாக பழைய சட்டைகளான இயக்கங்களையும் விட்டு வெளியே வருவதன் மூலமே மக்களுக்கு நம்பிக்கை தர முடியும். பாவ விமோசனமும் கிடைக்கும்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது பெயரை மாற்றிய விடயம் வரவேற்கத்தக்கது. மற்றவர்களுக்கு இது முன்மாதிரியாக அமையவேண்டும்.
மெல்பன்

உதயம் மாத பத்திரிகையின் முதல் இதழ் 1997 சித்திரையில் வெளிவந்தது . எனது கிளினிக்கும் 1997 மே மாதத்தில் திறக்கப்பட்டது. இரண்டும் ஒரே காலத்தில் உருவாகியபோது எனது மனம் உதயம் பத்திரிகையை நடத்துவதிலேயே குறியாக இருந்தது. ஒரு விதமான ஆர்வ நிலையில் இருந்தால் மட்டுமே பத்திரிகை நடத்தமுடியும்.
பல காலமாக பெரிய மருத்துவ கிளினிக்குகள் இருந்த இடத்தில் நான் எனது தொழில்த்துறையைத் தொடங்கி இருந்தேன் என்பதால், ஆரம்ப காலத்தில் மிகவும் குறைவானவர்களே எனது கிளினிக்கிற்கு தமது செல்லப்பிராணிகளைக் கொண்டு வந்தார்கள். அதைவிட சுற்றாடல் முழுவதும் வாழ்ந்த அவுஸ்திரேலியர்களே நாய் பூனை வளர்ப்பவர்கள். அவர்களுக்கு புதிதாக ஒரு வித்தியாசமான நிறமும், பேச்சுத் தொனியும் கொண்ட ஒருவனை நம்பி வருவதற்கான தேவையில்லை. இதை நிறபேதம் என்று நான் சொல்லவில்லை.
கால்நூற்றாண்டுகளின் பின்பு பார்த்தால், பல இலங்கை – இந்திய மிருக வைத்தியர்கள் இங்கே தொழில் நடத்துகிறார்கள். அக்காலத்தில் நான் மட்டுமே வெள்ளைக் கலர் மற்றும் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவராத மிருக வைத்தியராக மெல்பனில் மட்டுமல்ல, முழு அவுஸ்திரேலியாவிலும் தொழில் தொடங்கியவன்.
வெள்ளைப் பஸ்மதி அரிசிக் குவியலில் ஒன்றிரண்டு எள்ளு விழுந்தது போன்றது அவுஸ்திரேலிய மிருக வைத்தியத்துறை. அக்காலத்தில் இலங்கை , இந்தியர் சிலர் மாடுகளை வெட்டுமிடத்தில் அரச மிருக வைத்தியர்களாக இருந்தார்கள். மெல்பனில் படித்த மலேயா சீனர்கள் சிலர் கிளினிக் வைத்திருந்தார்கள். அவுஸ்திரேலியாவில் மிருக வைத்தியதுறைக்கு போட்டி அதிகம். அக்காலத்தில் மெல்பனின் பல்கலைக்கழகத்தின் மிருகவைத்தியத் துறையில் நாற்பது இடங்களுக்கு, ஆயிரம் பேர் போட்டியிடுவாகள்.
பத்திரிகை விடயத்தில் பலர் ஊரோடு ஒத்துப்போகும்படி அறிவுரை சொன்னார்கள். ஆனால், நான் எனது நண்பர்களோடு திட்டமிட்ட விடயம். கை விடமுடியாது. மனதில் வேகமிருந்தாலும் பல விடயங்களை நான் திட்டமிட்டே செய்பவன். அத்துடன் திட்டம் A தோற்றால், திட்டம் B க்கு தயாராகும் குணமும் என்னிடம் இருக்கும். அத்துடன் C திட்டத்தை உறங்கு நிலையில் வைத்திருப்பேன் . எனது பத்திரிகை பணியால் குடும்பத்தில் நெருக்கடி ஏற்படாது பார்த்துக் கொள்ளவேண்டும் என தீர்மானித்தேன்.
நான் முன்னே செல்ல என்னிடம் மூன்று காரணங்கள் இருந்தன. ஒன்று எனது மனைவி சியாமளாவின் வேலை நன்றாக நடப்பதால் பண நெருக்கடியில்லை. இரண்டாவது இந்தப் பத்திரிகையின் மூலம் நாம் வாழும் சமூகத்திற்கு நாம் நமக்கு தெரிந்த விடயத்தைச் சொல்லவேண்டும். இலங்கையில் நடக்கும் போரை நோக்கி பரணி பாடும் சிட்னி , மெல்பன் வானொலிகள், அதில் யார் விடுதலைப் புலிகளுக்கு அதிகமாக குழல் ஊதமுடியும் எனப்போட்டி போட்டார்கள். இந்த வானொலிகளில் பலர் அரசியல் ஆய்வாளர்கள் என்ற பட்டத்தை விட்டுக் கொண்டு, மக்களை தவறாக வழி நடத்தினார்கள். மூன்றாவதாக இங்கிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் எமது தமிழ் அகதிகள் கழகத்தில் தனிபட்டரீதியில் நான் பட்ட அவமானத்தை நான் மறக்கவுமில்லை.
ஆரம்பத்தில் உதயம் பத்திரிகையை ஒரு பொருட்டாக இங்குள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மதிக்கவில்லை. “ இவங்களால் எப்படி பத்திரிகை நடத்த முடியும் ..? “ என்று அவர்களில் முக்கியமானவரான எஸ்.பி. எஸ். வானொலி ஊடகவியலாளர் ஜோய் மகேஸ் என்பவர் பலர் மத்தியில் சவால் விட்டார்.
ஆரம்பத்தில் பத்திரிகைகளை இலவசமாக கொடுத்தோம். பின்பு பணத்திற்கு விற்றோம். ஆனால், எங்களால் மெல்பனில் மட்டுமே விற்கமுடிந்தது. பத்திரிகையோடு சம்பந்தமானவர்கள் மெல்பனிலே இருந்ததால் மற்றைய மாநிலங்களில் விற்பனையாகவில்லை . அத்துடன் பல விளம்பரதாரர்கள் பத்திரிகையை இலவசமாக கொடுத்தால், அதற்கு விளம்பரம் தருவதாகச் சொன்னார்கள். அதனால் இரண்டாயிரம் பிரதி அச்சடித்த பத்திரிகையை ஐயாயிரமாக கூட்டினோம் . அத்துடன் அரைவாசிக்கு மேல் ஆங்கில பகுதியாகவும் அதனை பதிவேற்றி சிங்கள இனத்தவர் மற்றும் இந்தியார்களின் கடைகளிலும் வைத்தோம்.
இக்காலத்தில் ஒரு முக்கிய விடயம் நடந்தது . சிட்னியில் இன்பத்தமிழ் வானொலி என்ற பெயரில் 24 மணிநேரம் ஒலிபரப்பான வானொலியை பாலசிங்கம் பிரபாகரன் நடத்தினார். அதை நடத்துவதற்கு அவர் பலரிடம், நீ—ண்—ட கடனாக பணம் கேட்பார். அவர் என்னிடமும் கேட்டபோது நான் அவருக்கு 500 டொலர் பணம் கொடுத்து விட்டு, “ நீங்கள் இதனைத் திருப்பித் தரத்தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் எமது உதயம் பத்திரிகை வெளிவந்ததும் அது பற்றிய விளம்பரத்தை அறிவிக்கவும் “ என்று நான் சொன்ன போது அவர் அதற்குச் சம்மதித்தார்.
அதன் பிரகாரம் ஒவ்வொரு மாதமும் உதயம் வெளிவந்ததும் அந்த இதழில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை அவருக்கு நான் தொலைநகலில் அனுப்புவேன். அவர் அதனைத் தனது ஆனந்த இரவு என்ற பரபரப்பான வெள்ளிக்கிழமை ஒலிபரப்பு நிகழ்வில் விளம்பரம் செய்வார். உண்மையில் உதயம் பிரபலமாகியதற்கு ஆரம்பகர்த்தா அவரேதான்.
பிற்காலத்தில் எம்மால் சகிக்கமுடியாத அவரது செயற்பாடுகளை நாம் விமர்சித்தபோது, எங்களையும் எமது பத்திரிகையையும் அவதூறாகப் பேசினார். அவருக்கு பணம் கொடுத்து நாம் செய்த விளம்பரத்தை விட அது எங்களுக்கு மிகவும் பெரிய கொடையாகியது.
அவர் அவ்வாறு அவதூறு பொழிந்து பிரபலமாக்கியதால் உதயம் பிரபலமாகியது. நானும் பத்திரிகையாளனாகவும் எழுத்தாளனாகவும் உருமாறியதற்கு இன்பத் தமிழ் வானொலி பிரபாகரனும் மிக முக்கிய காரணம்.
ஊரில் விவசாயிகள், ஆரம்பத்தில் செடியொன்றை நடுவதற்கு முன்பு முன்பு மாட்டுச்சாணி மற்றும் கோழியின் கழிவுகளை உரமிடுவார்கள். அதற்கு குழி உரம் என்பார்கள். அப்படி உதயத்திற்கு குழி உரம் இட்டவர் பாலசிங்கம் பிரபாகரன்.
அவருக்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால், உதயத்தின் பிரபலம் எதிர் விளைவுகளையும் கொண்டு வந்தது.
அதுபற்றி பின்பு பார்ப்போம்.
( தொடரும் )
மறுமொழியொன்றை இடுங்கள்