பாதை தவறிய பைத்தியம்

கதையாசிரியர்:இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

(ஒரு கிழக்கிலங்கைக் கிராமம் 1986?)

ஊரைத் தழுவி ஓடிக்கொண்டிருந்த ஆற்று நீர், மதிய வெயிலில்,அலுமினியத் தகடாய்ப் பள பளத்துக்கொண்டிருந்தபோது,அவள் தனது சேலையை முழங்காலுக்கு மேல் உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடந்து வந்தாள்.

வைகாசி மாதமென்றபடியால்,ஆற்றில் பெரிய வெள்ளமில்லை.ஆறு ஒடுங்கிய கரைகளில்,உயர்ந்து வளர்ந்திருந்த நாணல்களுக்கிடையில் பல்நூறுன கொக்குகள் தங்கள் கழுத்தை வெட்டி வெட்டிக் குனிந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தன.

மெல்லிய சிவப்புக் கால்களுடன்,மிக நீண்ட கழுத்துடைய கொக்குகள் இரை பிடிப்பதை,சேற்றுக்குள் புதைந்து கிடக்கும் காட்டெருமைகள் சோம்பேறித்தனமாகப் பார்த்துக் கிடக்கின்றன.

ஆற்றில் அங்கொங்றும் இங்கொன்றுமாக மீன்பிடிக்கும் தோணிகள் தெரிந்தன.

ஆற்றுக்கு அப்பால்,கடற்கரை ஓரமாக இராணுவமுகாமிருப்பதால்,ஊர்ப் பையன்கள் இப்போது அதிகமான பையன்கள் ஆற்றில் நீச்சலடித்து விளையாடுவதில்லை.

தென்னம் சோலைகளாலும் மாமரங்களாலும் நிறைந்த அந்த ஊரில்,மாமரத்து நிழலில் படுத்திருந்த ஒன்றிரண்டு வயதுபோனவர்கள், மதிய நேரத்தில்,இராணுவ முகாம் தாண்டி,ஆற்றைக்கடந்து,தன்னம் தனியாக வரும் அந்தப் பெண்ணை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இராணுவ முகாமைத் தாண்டியதும்,அரச வைத்தியசாலையிருக்கிறது.இப்போதெல்லாம் இளம் வயது ஆண்கள் தங்களுக்கு என்ன வருத்தம் வந்தாலும் அந்த வைத்தியசாலையை நாடுவது கிடையாது. வைத்தியசாலைக்கும் இராணுவமுகாமுக்கும் பக்கத்தில் ஊர் மக்களின் பொதுவிடமான சுடுகாடிருக்கிறது.

ஊரின் சம்பிரதாயப்படி பெண்கள் ஒரு நாளும் அந்த சுடுகாட்டுப் பக்கம் போவது கிடையாது. வைத்தியசாலைக்குக்கூடப் பெண்கள் தனியாகப் போவது கிடையாது.மனைவியை கணவர்மார் கூட்டிச் செல்வர். இளம் பெண்களைத் தாய் தகப்பன் அழைத்துச் செல்வர். அல்லது,வயது போன கிழவிகள் அவர்களுடன் பாதுகாப்பாகச் செல்வார்கள்.

அவள் தனியாக நடந்து வருகிறாள். நாணல் மறைவில்,மலசலம் கழித்துக்கொண்டிருந்த ஒரு சில ஆண்கள்;,பெண்ணொருத்தி வருவதைக் கண்டதும் அவசரமாக எழுந்து குதத்தைக் கழுவிக்கொணடு ஊருக்கு விரைந்தார்கள்.

ஊருக்கு நடுவில் ஒரு கடையிருக்கிறது.அந்தக்கடையிற் கூடிப் பேசுபவர்களால்,அவர்களுக்குத் தெரிந்த உலக விடயமெல்லாம் அலசப்படும். முப்பது வருடங்களுக்குமுன்,பச்சைமிளகாய் வெண்காயம்,சோடாப்போத்தல் விற்க,றோட்டோரத்தில் ஆரம்பிக்கப் பட்ட சிறிய கடை, இன்று கடையின் ஒருபக்கத்தில்,ஒரு சாப்பாட்டுக்கடையாகவும் விரிவு பெற்றிருக்கிறது.

கடையின் ஒரு பக்கத்தில பலசரக்குகள், அடுத்த பக்கத்தில்,இரண்டு மேசைகளும், எட்டு கதிரைகளும் போடப்பட்டு வியாபாரம் நடக்கிறது.றோட்டையண்டி ஒருசில பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கிறது.அவற்றில்,எப்போதும் ஒரு சிலர் கூடியிருந்து பேசிக் கொண்டிருப்பார்கள். வயது வித்தியாசமின்றி கூடியிருந்து பலதையும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

சிலவேளைகளில் அவ்விடம் வயது போனவர்களாலும், இன்னொரு வேளையில் வாலிபர் கூட்டத்தாலும் நிறைந்திருக்கும். ஆனால்,தூரத்தில் இராணுவ ஜீப்பைக்கண்டால் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அடுத்த ஊரில் ஒரு கண்ணி வெடி வெடித்தால்,இந்த ஊர் மட்டுமல்ல அக்கம் பக்கத்துத் தமிழ்க் கிராமங்களெல்லாம் இராணுவத்தின்’சுற்றி வளைப்புக்கு என்ற பேரில்’ தமிழ்’மனித வேட்டைக்கு ஆளாகித் துயர் படும்.

அப்போது பல தமிழ் இளைஞர்களைப் பிடித்துக்கொண்டு வந்து ஊரின் நடுவில, இந்தக் கடைப் பக்கத்தில் வைத்து,விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வார்கள். ஓரு தரம், ஊரார் முன்னிலையில் ஒரு சில தமிழ் இளைஞர்களை நாய்களைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினார்கள். அதைப்பார்த்த தமிழ் மூதாட்டி ஒருவர் அதிர்சியில் மாரடைப்பு வந்து,அந்த இடத்திலேயே விழுந்து இறந்த விட்டாள்.

இன்றைய மதிய நேரத்தில் அந்தக் கடையில் ஒன்றிரண்டு இளைஞர்கள் சோடா குடித்துக் கொண்டிருந்தார்கள். இன்று காலையில,இராணுவ ரோந்து நடந்து முடிந்து விட்டதால்,அவர்களின் முகத்தில் நிம்மதி தெரிகிறது.

ஆற்றைக் கடந்து வந்து அந்த நடுத்தர வயதுள்ள பெண், ஒழுங்கை தாண்டி வந்து கடையடியில் நின்றாள். அவள் முகத்தில் ஒரு புன்னகை, ஏன் எதற்கு அந்தப் புன்னகை என்று யாருக்கும் தெரியவில்லை.

சோடா குடித்துக்கொண்டிருந்த இளைஞரில் ஒருத்தன் அவளை உற்றுப்பார்த்தான். அவனுக்கு இந்த ஊரிலுள்ளவர்களை மட்டுமல்ல அக்கம் பக்கத்து ஊரிலுள்ளவர்களையும் பரவலாகத் தெரியும்.

ஊருக்குள் அடிக்கடி வரும் முஸ்லிம் வியாபாரிகளை நன்றாகத் தெரியும் சிலவேளைகளில் முஸ்லிம் பெண்களும் எதையோ விற்க வருவார்கள்.இந்தப் பெண்ணின் தலையில் சாமான்கள் விற்கும் எந்தக் கடகமும் இல்லை. தலைமயிரை மறைக்கும் முக்காடுமில்லை.

இவளுக்கு வயது கிட்டத்தட்ட அறுபது இருக்கலாம் சாடையான நரை மயிர்கள் அங்குமிங்கும் தெரிந்தன. அங்கும் இங்கும் பர பரக்கும் குழம்பிய பார்வையும் முகபாவமும் ஆனாலும்,அவள் முகத்தில் தெரியும் புன்னகை அப்படியே இருந்தது.அந்தப் பெண் கடையடியிற் போட்டிருந்த வாங்கு ஒன்றில் வந்து உட்கார்ந்தாள். ஊர்ப் பெண்கள் ஒருநாளும் பகிரங்கமான இடத்தில் ஆண்களுக்குப் பக்கத்தில் உட்கார மாட்டார்கள்.

அவள் வாங்கில் வந்து இருந்ததும் அதில் உட்கார்ந்திருந்தவன் உடனே எழும்பி ஒதுங்கினான்.

சோடா குடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.

ஓருத்தன்,கொஞ்சம் உயரமானவன், சட்டென்று எழும்பிப்போனான். மற்றொருத்தன் குட்டையானவன் அவன் முகத்தில் சிரிப்பை யாரும் ஒருநாளும் கண்டில்லை. அவன் அவளைச் சாடையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கடைக்காரக் கிழவனின் மகன் தனக்கு முன்னால் நடக்கும் விடயங்களைக் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பெண்ணையும் இளைஞர்களின் முகபாவங்களையும்; கூர்மையாகப் பார்த்தான்.

‘உனக்கு என்னவேணும்?’ கடைக்காரப் பையன் அதட்டலாக அந்தப் பெண்ணைக் கேட்டான்.அந்த அதட்டல்,இளைஞர்களை அவதானித்தால் வந்த பயத்தின் பிரதி பலிப்பு.

இளைஞர்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.அந்த ஊருக்கு யார் வந்தாலும், ஒரு சில மணித்தியாலங்களில் அவர்களைப் பற்றிய அத்தனை விபரங்களையும் ‘எப்படியோ’ எடுத்து விடுவார்கள்.

அவர்கள் இவளை நோட்டம் விடுகிறார்கள்.

கடைக்கு வந்து அனாயசமாக உடகார்ந்திருக்கும் அந்தப் பெண்ணிடம்,கடைக்காரப்பையன் வந்தான். அவள் தன் முந்தானையால் தன் முகத்தில் வடியும் வியர்வையைத் துடைத்துக்கொண்டாள்.

‘தேத்தண்ணி வேணுமா?’ கடைக்காரப்பையன் அவளை இன்னொருதரம் கேட்டான் இயக்க இளைஞர்கள் அவளுக்குப் பின்னால் வந்து நின்றார்கள்.

‘மொணாத?’(என்ன?) அவள் கடைக்காரப்பையன் தமிழிற் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிங்களத்தில் அவனிடம் கேள்வி கேட்டுச் சிரித்தாள்.கறைபடிந்த அவள் பற்கள் அருவருப்பாகவிருந்தன.

சிங்கள் மக்கள் பெரும்பான்பையாக வாழுமிடங்களுக்கும் தமிழ் மக்கள்; பெரும்பாலாக வாழுமிடங்களுக்கும் சில மைல்கள் வித்தியாசம் இரு இனத்திற்கும் ஒருத்தரை ஒருத்தர் விளங்கிக் கொள்ளும் மொழி கிடையது. சிங்களம் தெரியாத கடைக்காரப் பையன் இயக்க இளைஞர்களைப் பார்த்தான்.

இயக்க இளைஞர்களிற் கொஞ்சம் படித்தவன்போற் காணப்பட்டவன்,முன்னால் வந்து நின்று அவளைப் பார்த்தான்.பின்னர், ‘தே ஒணத’ (தேநீர் வேண்டுமா?) என்று அவளைச் சிங்களத்திற் கேட்டான்.

அவள் மறுமொழி சொல்லாமல் கிக்கி கிக்கி என்று சத்தம் போட்டுச்

சிரித்துக்கொண்டு’ஆமாம்’என்பதற்கு அடையாளமாகத் தலையாட்டினாள். கடைக்காரப் பையனிடம்,அவளுக்குத்தேனிர் போடச் சொல்லிச் சைகை காட்டினான் அந்த இளைஞன்.

கடைக்காரப்பையன் கொடுத்த சுடுதேனிரை ஊதி ஊதி அவள் குடித்துக்கொண்டிருக்கும்போது,இவள் கடைக்கு வந்ததும் உடனடியாக எழும்பிப்போன இளைஞன் இன்னொருத்தனுடன் வந்தான்.

புதிதாக வந்தவனைக் கண்டதும் மற்றவர்கள் முகத்தில் ஒரு மரியாதை தெரிந்தது.அவன் அவர்களது தலைவனாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் முகங்களில் ஏற்பட்ட மாறுதல்களிலிருந்து தெரிந்தது.

அங்கு வந்த தலைவன் உதடுகளைத் தன் நாக்கால் நனைத்துக்கொண்டான்.தன் தலையை ஒருபக்கம் சாய்த்து இவளைப் பார்த்தான்.

‘எந்த ஊர்?’ தலைவன் தமிழில் அவளைக் கேட்டான்.

‘தெமிழ தன்னின’ (தமிழ் தெரியாது) அவள் இன்னொருதரம் பெரிய சத்தம் போட்டுச் சிரித்தாள்.அவள் தனக்குத் தமிழ் தெரியாது என்று சொன்னதோ அல்லது அவள் ‘தலைவனைப் பார்த்தச் சிரித்ததோ,ஏதோ ஒரு காரணம் தலைவனின் முகத்தில் கோபத்தைக் காட்டியது.

அவன் மற்றவர்களை வரச்சொல்லி விட்டுத் தூரத்தில் நின்ற மாமரத்தின் நிழலிற் போய் நின்றான். மாமரத்தில் குயில்கள் கூவிக்கொண்டிருந்தன.தூரத்தில் மத்தியான பூசைக்கான மணியோசை கேட்டது. றோட்டில் மாட்டு வண்டிகள் ஒன்றிரண்டு கட கடவென ஓடின.

பக்கத்து. பனங்காட்டு ஊரிலிருந்து காலையிளம் நேரத்தில் சந்தைக்குச் சாமான் வாங்கப்போனவர்கள், தலையிலும் கைகளிலும் சுமைகளுடன் சுடு தார் றோட்டின் சூடு தாங்காமல்; அவசரமாக விரைந்து கொண்டிருந்தார்கள்.

தலைவனும் அவனுடன் இருந்த இருவரும் அந்த இடத்தை விட்டுப்போக, அந்தக் குட்டையன் இவளிடம் வந்தான்.தன்னோடு வரச் சொல்லி சைகை காட்டிவிட்டு நடந்தான்.

அவள் தான் குடித்த தேனிர்க் கிளாசைக் கடற்காரப் பையனிடம் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச தூரம் போன குட்டையன் திரும்பி வந்தான்.

தன்னுடன் வரச் சொல்லித் திரும்பவும் சைகை செய்தான் அவள் மசிய வில்லை. தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.குட்டையன் அவளையிழுத்தான் அவள் அவனின் கையை உதறி விட்டு விடாமற் சிரித்துக் கொண்டாள். குட்டையனுக்குக் கோபம் வந்தது.

‘ஏய் சிங்களப் பிசாசு” அவன் காறித் துப்பினான்.

அவள் அதற்கும் சத்தம் போட்டுச் சிரித்தாள்.

கடைசியாக அவன் அந்த இடத்தை விட்டுப்போய்விட்டான்.

அவள் தனது முந்தானையை விரித்துத்துக் கொண்டு மாமர நிழலில் படுத்துவிட்டாள்.

கடைக்கு வந்த ஒன்றிரண்டு பெண்கள் மாமரத்துக்குக்கீழ்ப் படுத்திருந்து அயர்ந்த நித்திரை செய்யும் அந்தப் பெண்ணை வியப்புடன் பார்த்து விட்டுச் சென்றார்கள்.

ஓன்றிரண்டு மணித்தியாலங்களின்பின், ‘அவளைச் சிங்களப் பிசாசு’ என்று திட்டியவன் திரும்பி வந்தான். அவனுடன் ஒரு பெண்ணும் வந்திருந்தாள்.அவள் வேறோரு ஊரைச்சேர்ந்தவள்.

வந்த இளம்பெண்,அவளுக்கு வயத மூத்த,அயர்ந்து நித்திரை செய்யும் அந்தப்பெண்ணைக் காலால் எட்டியுதைத்து எழுப்பினாள்.

காலில் பட்ட உதையால் சட்டென்று விழித்த அந்தப் பெண் கொஞ்ச நேரர்தில் பழையபடி கிக்கி கிக்கி என்று சத்தம் போட்டுச் சிரிக்கத் தொடங்கி விட்டாள்.

‘என்ன அப்பாவி மாதிரி வேசம் போட்டு நாடகம் போட்டு நடிக்கிறாயா?’ காலால் எட்டியுதைத்த இளம்பெண் மிரட்டினாள். இப்போது அங்கு பலரும் கூடிவிட்டார்கள்.குழந்தைகளிற் சிலர் அவளைப்போல சிரித்துக் காட்டினார்கள் குழந்தைகளின் தாய்மார் குழந்தைகளை அடக்கவில்லை.

காலால் உதைத்த இளம் பெண் சிரித்துக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்த’ எழும்பு’ என்று கத்தினாள்

அந்தப் பெண் இப்போது கொஞ்ச நேரம் சிரிக்கவில்லை. பசியோ என்னவோ, தன் வயிற்றைத்தடவிக் காட்டினாள்.

கடைக்காரப் பையன் ஒரு துண்டுப் பாணும் கொஞ்சம் தேனிரும் அவளுக்குக் கொடுத்தான்.

அங்கு நின்றிருந்த குட்டையன் ஒரு பணநோட்டை அனாயசமாக எடுத்துக் கடைக்காரப் பையனிடம் வீசினான்.அவள் ஆசையுடன் அந்தத் துண்டுப் பாணைத் தின்னும்போது,இளம் பெண் அவளைத் தன்னுடன் வரச் சொல்லிச் சிங்களத்திற் சொன்னாள்.

விடாமற் சிரிக்கும் அந்தப் பெண் அந்த இளப்பெண்ணைத் தொடர்வதைக் கடைக்காரப் பையன் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டான்.

….

ஊருக்கு நடுவில் உள்ள அந்தப் பெரிய கல் வீட்டில் இயக்கக்காரர்கள் குடியிருந்தார்கள்.

வீட்டுக்குச் சொந்தக்காரரைப் பக்கத்து வளவிலிருந்த அவரின் பழைய மண் வீட்டுக்குப்போகச் சொல்லி விட்டு அவரின் வீட்டைச் சுவிகரித்துக்கொண்டிருந்தார்கள்;.

வீட்டுக்காரரின் இருமகன்களையும் சிங்கள இராணுவம்,தமிழ்ப்(?)’பயங்கரவாதிகளைச்’ சுற்றி வளைத்துப்படிக்கும்போது,அவர்களையும் பிடித்துத் தாய் தகப்பனுக்கு முன் சுட்டு வீழ்த்தினார்கள். அரைகுறை உயிருடனிருந்த அந்த இளைஞர்களைக் கடற்கரையிற் புதைத்தார்கள்.

அந்த அதிர்ச்சியில் வீட்டுக்காரரின் மனைவி வாய்திறப்பதில்லை.ஆனால் ஏதோ நடமாடித் திரிகிறாள் வீட்டுக்காரரருக்கு இரண்டு பெண் குழந்தைகள் முதற் பெண்ணுக்குச் சிறுவயதில் போலியோ வந்ததால் அவள் நடக்க முடியாமலிருக்கிறாள்.கடைசிப் பெண்ணுக்கு இப்போது ஏழவயது. அவர் மிக மிகக் கஷ்டப் பட்டு கட்டிய பெருவீட்டில்,அவரின் இளையமகள் விளக்கு வைப்பாள் என்ற நம்பிக்கை அவருக்கில்லை.

அவரின் கல் வீட்டை அவர்கள் எடுத்து விட்டார்கள்.

ஓலையால் வேய்ந்த அவரின் மண்வீட்டிலிருந்துகொண்டு,தன் வீட்டை எடுத்துக்கொண்ட அவர்களின்’ ஆதிக்கத்தை அவர் பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அவர்கள் அந்தப் பெண்ணை அவரின் பெரிய வீட்டுக்குக் கொண்டு வந்தபோது இருள் பரவும் நேரம். காகங்கள் கரைந்துகொண்டு மரங்களில் ஏறின. கோழிகள் கூடுதேடி ஓடின.ஆடுகள் மாடுகள் பட்டிகளில் அடைக்கப் பட்டன.

‘யாரோ,எங்களை உளவு பார்க்க வந்த சிங்களத்தி.என்ன துணிவு எங்கட ஊருக்குள்ள வர’ வீட்டுக்காரர் தனது கிணற்றடிக்குத் தண்ணீர் எடுக்கப்போனபோது அவளைக் கூட்டிக்கொண்டு வந்தவர்களில் ஒருத்தனான குட்டையன் அவருக்குச் சொன்னான். அவர் மவுனமாகத் தலையாட்டிக் கொண்டார்.இப்போதெல்லாம் தமிழர்களுக்கு மவுனம் ஒரு சிறந்த ஆயுதம். யாரும் பறித்துக்கொண்டு போக முடியாது.

தூரத்தில்,கோயிலில் இரவு பூசைக்கு மணியோசை கேட்டது. வைகாசி மாதத்துப் பௌர்ணமி வானத்தில் பவனி வரத் தொடங்கியது.

இரவின் அமைதியில் உலகம் தன்னைப் புதைத்துக்கொள்ள முனையும்போது, பெரிய கல்வீட்டிலிருந்து அந்தப் பெண்ணின் அவலக்குரல் கேட்கத் தொடங்கியது. அண்டை அயலாருக்கு இப்படியான சத்தங்களை அடிக்கடி கேட்டுப் பழக்கமாததலால் அவர்கள், ஒரு அசட்டையும் செய்யாமல் தங்கள் வேலைகளில் ஈடுபட்டார்கள்.

வீட்டுக்காரும்,போலியோ வந்து படுத்திருக்கும் மகளும், மவுனமான தாயும் தங்கள் வீட்டிலிருந்து வரும் மரண ஓலத்தைச் சலனமற்றுக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த வீட்டுக்காரரின் மனைவியின் முகத்தில் எந்தச் உணர்ச்சியுமில்லை.அவளின் காதில் ஏதும் ஏறாது.யாரின் மரண ஓலத்திலும் அவளின் முகத்தில் எந்த சலனமும் வராது. சிங்கள இனவாத இராணுவத்தின் கொடுமையால் அவளின் இருமகன்களும் சட்டென்ற தறிபட்ட கிளைகளாக,இராணுவத்தின் குண்டுகளுகளால் அவள் முன்னால் விழுந்தபோது மரத்துப்போன அவள் உணர்வுகளைத் தமிழர்கள் செய்யும் கொடுமையாற் துடிக்கும் ஒரு அபலைப் பெண்ணின் மரண ஓலமிடும் தட்டி எழுப்பவில்லை.

அவர்கள் ஒருகாலத்தில் பூசையறையாகப் பாவித்த அறையிலிருந்து அந்த மரண ஓலங்கள் வருகின்றன.

‘வக்ரதுண்ட மஹாகாயே,சூரியகோடி சம பிரவஹ,நிர்விக்னம் குருமேவ சர்வ காரியசு சுவாஹா’என்று எந்தத் தொழிலுக்கும் ஆரம்ப வணக்கம் சொல்லும் மந்திரம் கேட்கவில்லை.அதற்குப் பதில் தாங்க முடியாத வலியுடன் துடிக்கும் ஒரு பெண்ணின் வேதனைக்குரல் பூசையறையிலிருந்து வருகிறது.

காக்கும் கடவுள் கணேசருக்கும்,கலைத் தெய்வம் சரஸ்வதிக்கும், செல்வத்தின் தெய்வம் இலட்சுமிக்கும் பூசை செய்த அறையில் தமிழ் விடுதவைப்போராளிகள், தங்களைத் துப்பறிய வந்ததாகச் சொல்லி ஒரு சிங்கள் மூதாட்டிக்குப் ‘பூசை’ போடுகிறார்கள்.

காயத்ரி மந்திரம், ‘ஓம்பூர் புவஸ்சுவஹ,தத் ஸவிதுர் வரேண்யம்,பார்கோ தேவஸ்தீமஹி,

தியோ யோனஹ ப்ரசோதயாத்’ என்று நிறைந்த அறையிலிருந்து,கதறல் ஒலி வானைப் பிழக்கிறது.

பூசை மணிகேட்ட அறையில்,மரணத்தின் புலம்பல்கள் கேட்போரின் நாடிகளைச் சில்லிடப்பண்ணுகின்றன. காயத்ரி மந்திரத்துக்குப் பதிலாக,’ மகே புத்தாவ பளாண்ட ஓண’ (என் மகனைப் பார்க்கவேண்டும்) என்ற அவளின் அவலக்குரல் பரிதாபமாக ஒலிக்கிறது.

வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டு வீட்டுக்காரர் பெருமூச்சு விட,அவரின் கடைசி மகள் உரலில் ஏறி நின்று, தங்களின் பூசை அறையில் என்ன அழுகை என்று எட்டிப் பார்க்கிறாள்.

அவர் ஓடிப்போய்த் தன் மகளை இழுந்து வந்தார்.வானத்து முழு நிலவு இந்தக் கொடுமையைப் பார்க்காமல் முகிலுக்குள் நுழைந்து மறைந்தது. பெரிய இலுப்பை மரங்களில் தலைகீழாகத் தொங்கிய வவ்வால்கள், வயதுபோன,உடலும் குரலும் தளர்ந்த ஒருபெண்ணின் வேதனைக் குரலால் நிலை குலைந்து பறந்து திரிந்தன.

மகளை இழுத்துக்கொண்டு வரப்போனவரின் கண்களில்,அறைக்குள் அந்தக் குட்டையனும், இளம் பெண்ணும் அரக்க வெறியில் அந்தப் பெண்ணையடிப்பது தெரிந்தது. சுவரெல்லாம குருதி சிதறிப் பரவிக் கிடந்தது.

அந்தப் பெண்,அந்த அறைக்குள் நுழையும் வரை சிரித்துக்கொண்டிருந்தவள், பேச்சு மூச்சற்று,முகம் வீங்கி, உடல் வீங்கிய பயங்கர தோற்றத்தடன் ஒரு மூலையிற் சுருண்டு கிடந்தாள்.

அந்தக் காட்சி அவருக்கு வயிற்றைக் குமட்டிக்கொண்ட வரப்பண்ணியது. கணவனின் வெளுத்த முகத்தை வெறித்துப் பார்த்தாள் அவர் மனைவி.

‘யாரோ உளவு பார்க்க வந்த பொம்புளையாம்,உண்மையை அவளிட்ட இருந்து எடுக்கஅடிக்கினம்’ அவர் முணுமுணுத்தார்.

இரவின் தொடர்ச்சியில்,அறையிற் கேட்ட அலறல்,கதறல் என்பன குறைந்த மெல்லிய முனகல்களாக வந்து கடைசியல் மரண அமைதி பரவியது.

ஏதோ சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தார் அந்த வீட்டுக்காரர்.

அவரின் வீட்டிலிருக்கும் இயக்கத்தினர் ஒரு சாக்கு மூட்டையை ட்ரக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள.

அந்த ட்ரக்டரும் அவருடையதுதான்.அவருடைய வீடு, மூத்த மகன் வைத்திருந்த ட்ரக்டர், இளைய மகன் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் எல்லாவற்றையும் தங்கள் உடமையாக்கி விட்டனர் இயக்கத்தினர்.பலதேவைகளுக்கும் பாவித்துக்கொள்வார்கள்.

விடிந்தது!

ஏழு வயது மகள்,தங்கள் மண்வீட்டிலுள்ள கடவுள் படங்களுக்கு வைக்க மல்லிகைப்பூ பறித்துக்கொண்டிருந்தாள் தாய் தன் போலியோ வந்த மகளுக்கு முகம் கழுவிக் கொண்டிருந்தாள்.

எந்தக் காரணங்களுமற்றுச் சிரித்துக்கொண்டு,நேற்று மதியம்,ஊருக்குள் நுழைந்த அந்தப் பெண்,அலறி அழுது உயிர் விட்டு ஒரு குப்பையாக ஏற்றப்பட்டதை அவர் அடிவானத்தில் அக்கினி பகவான் தரிசனம் கொடுத்த வேளையில்,தன் இருண்ட சிந்தனையுடன் கருத்திற் பதித்துக்கொண்டார்

அவரின் கல் வீட்டை, அந்தக் குட்டையன் கழுவிக் கொண்டிருந்தான். குரதி கலந்த சிவப்பு நுரைத் தண்ணீர் முற்றத்தை நனைத்தது. குருதி வாடை மூக்கைத் துழைத்தது.

… நேற்றைக்கு மாதிரி. இன்றும் ஒரு மதிய நேரத்தில் ஒரு குடும்பம், இவர்களின் ஊரோடு சேர்ந்தோடும் ஆற்றைக் கடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஓருதாய்,அவளின் இடுப்பில் ஒரு கைக்குழந்தை,அவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு ஒரு பெண் குழந்தை,நான்கு வயதாக இருக்கலாம் அவளுக்குப் பின்னால் ஒரு ஆண்குழந்தை ஏழுவயதிருக்கலாம்..

ஊர்க் கடையை அண்டியதும், மாமர நிழலிற் படுத்திருக்கும் ஒரு கிழவனைக் கேள்விக் குறியுடன் அவள் பார்த்தாள்.

கிழவர் அவளை ஏற இறங்கப் பார்த்தார். ‘ஐயா,நேற்று ஒரு வயது போன பொம்பள இந்த ஊருக்கு வந்தாங்களா?’

கிழவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

‘. அந்த அம்மா இந்த ஆற்றைக் கடந்து உங்கட ஊருக்குள்ள வந்தாவாம், ஹஸ்பிட்டலில் கடையில சொன்னாங்க’

அந்தப் பெண்ணின் கண்களில் நீர் வடிகிறது.

‘நான் காணல்ல கிழவர் அவளைப் பார்க்காமல் பதிலளிக்கிறார்.

‘ஐயா,நல்லா யோசிச்சுப் பாருங்க,….அவ ஒரு பைத்தியம் என்ர புருசன்ர தாய்..என்னுடைய அவர் சிங்கள மனிசன்,கொஞ்ச நாளைக்கு முன்னால் இந்த ஆசுபத்திரிக்குப் பக்கத்தில நடந்த கண்ணி வெடியில் செத்தப்போனார் அதுக்குப் பிறகு, என்ர மாமி பைத்தியமாகிட்டா.தன்ர மகனை நினைச்சி அந்த மனிசி இந்த ஆசுபத்திரிப் பக்கம் அடிக்கடி வந்து வழி தவறிப்போகும்’;.

கிழவரின் கண்களில் நீர் மல்கிறது.’மகே புத்தாவ பளாண்ட ஓண’(என் மகனை நான் பார்க்க வேணும்) என்று அவள் அந்தக் கல் வீட்டில் அலறியதை அவரும் கேட்டிருந்தார்.

தன் கண்ணீரை அவளுக்கு மறைத்துக் கொண்டு முகத்தைத் திருப்பி,’நான் யாரையும் நேற்றுக் காணல்ல,கடையில போய்க்கேளு’ என்றார்.

மனிதம் அழிந்த கலியுகத்தில் உண்மைகளுக்கு இடமெங்கே?

கடைக்காரப் பையன் அவளைப் பாதாபமாகப் பார்க்கிறான்.

நேற்றுச் செய்ததுபோல் அந்தப் பெண்ணுக்கும் குழந்தைகளுக்கம் பாணும் தேத்தண்ணியும் கொடுக்கிறான்.

‘என்ர பாட்டி இந்தப் பக்கம் வந்தாங்களா’ ஏழுவயதுப் பையன் சுத்தத் தமிழில் கடைக்காரப் பையனைக் கேட்கிறான்.

கடைக்காரப் பையன் மறுமொழி வாயாற் சொல்லாமல்,’தான் அந்தப் பையனின் பாட்டியைக் காணவில்லை’ என்பதைத் தலையாட்டு மூலம் சொல்கிறான்.

கடை வாசிலிற் போட்டிருக்கும் வாங்கிலிருக்கும் ‘இயக்கத்துப் பெடியன்கள்’; இந்தக் குடும்பத்தைக் கூர்ந்து பார்க்கிறார்கள்.;

(இது ஒரு கற்பனைக் கதையில்லை!) 

ReplyReply allForward

“பாதை தவறிய பைத்தியம்” மீது ஒரு மறுமொழி

  1. Lot of Sad stories from all corners of Srilanka! It shd have been avoided by Colombo elite power hungry politicians by dialogue & full autonomy to all provinces! Not too late ! We shd start ‘ Good Citizens Alliance-Srilanka to win & change constituition towards Full autonomy to all provinces & Dignity,/ HR ,& SAFETY & SECURITY OF All Citizens! All Languages!
    All Religions! All Cultures! Yes! We can@

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: