சென்னை


மனிதன் தன் வளரிளம் பருவத்தில் தொடங்கி வாழ்நாள் முடியும் வரை நடத்தும் போர் ஒன்று உண்டு.அதில் வென்றவர்கள் மிகக் குறைவு. ஞானம், கல்வி, அதிகாரம், செல்வம், இப்படி மனிதன் சம்பாதித்துக் கொண்ட சம்பத்துக்கள், இவையன்றி மனிதனுக்கு அருளப்பட்ட குலம், குடும்பம் இன்ன பிற வரங்கள் இவை யாவும் அதன் முன் தோற்றுத்தான் போயிருக்கின்றன. அது : காமம். மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் மூச்சை நிறுத்திவிடு என பாரதியின் கதறல் தலைமுறை தலைமுறையாகக் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
அதற்குக் காரணம் இயற்கை மனிதனுக்கு இரண்டே உணர்வுகளைத்தான் அளித்திருக்கிறது. ஒன்று பசி. மற்றொன்று காமம். பசி உடலில் உயிரை நிறுத்திக் கொள்ள. காமம் உயிரைப் பெருக்க. மற்ற உணர்வுகள் எல்லாம், வன்முறை, கருணை, பழிவாங்கல், காதல் மமதை, ரசனை, அழகுணர்ச்சி எல்லாம் இந்த இரு உணர்வுகளிலிருந்து கிளைத்தவைதான்
ஆனால் மதங்கள், எல்லா மதங்களும்தான், காமத்தைக் கீழானதாக நமக்குக் கற்பித்திருக்கின்றன. என்றாலும் இயற்கை தன்னிருப்பைப் கைவிட்டுவிடவில்லை. இவற்றிற்கிடையேயான முரணும் மோதல்களும் என்றென்றும் இருந்து வருகின்றன
இந்த மோதலில் எப்போதும் ஓர் எழுத்தாளன் இயற்கையின் பக்கமே நிற்கிறான். இறைவனைப் பார்க்கிலும் மனிதன் முதன்மையாகப்படுவதால் இலக்கியம், மதங்களுக்கு மாறாகக் காமத்தின் பக்கமே பெரிதும் நிற்கிறது.
இங்கும்தான். நடேசனுடைய புனைவுகளின் பொதுத்தன்மை என்ற ஒன்றை வகுக்க முடியுமானால் அது மனிதனின் பாலுணர்வு அவனை ஆட்டி வைக்கும் தருணங்களைப் பற்றியதாக இருக்கும். அந்தத் தருணங்களில் நிகழும் அகப் போராட்டங்களைப் பற்றியதாகவோ, அல்லது அந்த அகப் போராட்டங்களின் காரணமாக நிகழும் புற நிகழ்வுகள் பற்றியதாகவோ இருக்கும்.
குடும்பத்தின் அமைதி கருதி காப்பாற்றிக் கொள்ளப்படும் அந்தரங்கங்களின் மெளனத்தில்; எதிரிக்கு முலைப்பால் கொடுத்து உயிர்காப்பவளின் மன ஓலத்தில்; நாளைக்கு இருக்கவா போகிறோம் என மகளையே புணரும் தகப்பனின் தாகத்தில்; ஆண்பிள்ளைக்காக ஊர் அறியாது கருவுற்றதைச் சொல்ல முடியாத தாயின் துக்க்கத்தில்; பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டவள் தன் உடலைப் பயன்படுத்தித் தன்னைக் கொண்டுவந்தவன் மீது நடத்தும் பழிவாங்கலில்; சனிக்கிழமைகளில் மட்டும் காதல் செய்யும் இளம் பெண்ணின் தேவையில்; பிரம்மச்சரியம் காக்கத் திணறும் குடும்பஸ்தன் மீதா அவனது சகாக்களின் குறும்பில்; எனப் பலவிதங்களில் நடேசனில் எழுத்தில் இந்தப் போராட்டங்கள் வெளிப்படுகிறது.
இவையன்றியும் சில கதைகளை நீங்கள் வாசிக்கலாம். அவற்றில் என்னை ஈர்த்தது ‘டைட்டில்’ தனது தலைவர் மீது மட்டற்ற நம்பிக்கை கொண்ட ஒரு முன்னாள் போராளிக்கும், கடமையில் பற்றுறுதி கொண்ட சிங்களப் படை வீரனுக்குமிடையேயான ‘கயிறு இழுக்கும் போட்டி’ கதையாக விரிந்திருக்கிறது. இருவரும் இறுதியில் மனநல நிலையத்திற்குப் போகிறார்கள் என முடிகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால், தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளும் மறுக்கும் மனிதர்களும், அவற்றை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடு பொறுமை காக்கும் மனிதர்கள் என்ற மனநோயாளிகளைக் கொண்டதுதானே வெளி உலகும்!
சில அபாரமான உவமைகளை ஆங்காங்கே பெய்தவாறே எழுதிச் செல்வதே நடேசனின் நடையாக அமைந்துள்ளது. ‘பத்து மாதம் எரிக்கும் கோடை இரண்டு மாதங்கள் விராட தேசத்தில் ஒளிந்த பாண்டவர்களாகத் தலைமறைவாகும்’ ‘யுத்தம் ரயில் பெட்டி போல் நகர்ந்த போது நாங்களும் அதன் சக்கரங்களில் ஒட்டிய சடப் பொருள் போல் நகர்ந்தோம்’ ‘வாழ்க்கை அத்தியாயங்கள் ராணுவச் செக்கிங்கில் காத்திருப்பவர்கள் போல் மனதில் தொடர்ந்தது’ இவை சில எடுத்துக்காட்டுக்கள்.
நடேசன் கதைகளின் விவரிப்பில் பின்பற்றும் பாணி, ‘கதைக்குள் கதை’ நந்தியாவட்டைப் பூ மாதிரி ஒரு கதை பலகதைகளை விரித்துக் கொண்டே செல்கிறது. இது சுவாரசியமானதுதான். ஆனால் சற்றுப் பழைய உத்தி. அதை மாற்றிக் கொள்வதைப் பற்றி நடேசன் யோசிக்க வேண்டும்
கதைகள் இலங்கையையும், ஆஸ்திரேலியாவையும் களன்களாகக் கொண்டவை. நடேசன் அங்கு வசித்தவர்/வசிப்பவர் என்பதால் அது இயல்புதான்.மொழி நடையும் இலங்கைத் தமிழில்தான் அமைந்திருக்கிறது அதுவும் இயல்புதான். ஆனால் இலங்கைக்கு வெளியே, குறிப்பாகத் தமிழகத்தில் அதிகம் பாவிக்கப்படாத சொற்களுக்கு அடிக்குறிப்பு இடலாம். (மாத்தையா என்பது ஒரு விளி என்பது புரியாமல், அது ஒரு பெயர் என நினைத்து நான் சற்றுக் குழம்பிவிட்டேன்)
தொடர்ந்து பல படைப்புகளை நடேசன் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளிக்க எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்
மறுமொழியொன்றை இடுங்கள்