வரிக்குதிரையான புத்தகம்.



ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக் கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது மேலும் கோடுகளிட்டேன் . இதுவரை நான் எனது பாடப்புத்தகங்களைக் கூட இப்படிக் கோடிடவில்லை.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வாசிக்கக் கையில் எடுத்துவிட்டு, வார்த்தைகள் புரியவில்லை என வைத்துவிட்டேன் . இம்முறை கூர்ந்து வாசித்தபோது, பல வசனங்களை அவர் வழக்கமாக எல்லோரும் எழுதும் இலக்கண ஒழுங்கமைப்புக்கு மாறாக எழுதியிருப்பது தெரிந்தது.

‘உட்கார இடம் பிடிக்கும் முயற்சிகளில், பஸ்களில், தியேட்டர்களில் விருந்துகளில் பெரிய மனிதர்கள் சீரழிந்து சிறுத்துப் போவதைப் பார்க்கிறேன். ‘

இதைச் சாதாரணமானவர்கள் எழுதும்போது கீழே உள்ளவாறு எழுதியிருப்பார்கள்.
பெரிய மனிதர்கள் , பஸ்களில், தியேட்டர்களில் விருந்துகளில் உட்கார இடம் பிடிக்கும் முயற்சிகளில் சீரழிந்து சிறுத்துப் போவதைப் பார்க்கிறேன்.
ஆனால், சுந்தர ராமசாமி எழுதியிருப்பது கவிதைக்கான மொழி. வாசிக்கும்போது கவர்ச்சி தெரிகிறது . ஆனால் அவசரமாக வாசிப்பவர்களுக்கு அர்த்தம், அவசரத்தில் கையில் அள்ளிய நீராகி விடும்.

இந்த நாவல் ஒரு புளட் இல்லாத கதையான போதிலும், இங்கு நமக்கு ஜே ஜே என்ற ஒரு எழுத்தாளரது பாத்திரம் மனதில் கருங்கல்லில் செதுக்கிய சிற்பமாகப் பதிகிறது. அவரது மற்றைய இரு நாவல்களான “ஒரு புளியமரத்தின் கதை” “ குழந்தைகள் பெண்கள் ஆண்கள் “ யதார்த்தமானவை. அவற்றிலிருந்து ஜே.ஜே குறிப்புகள் மாறுபடுகிறது.

இப்படியான நாவலின் அவசியமென்ன ?

யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது ?

இந்த இரண்டு கேள்விகளுமே இதைப் படித்து முடித்ததும் எனது மனதில் எழுந்தது.
சுந்தர ராமசாமி தமிழ்ச் சமூகத்தினதும் மேலும் முக்கியமாக எழுத்தாளர்களின் போதாமையையும் நையாண்டி செய்வதற்காக எழுதியிருக்கலாம் .

அப்படியென்றால் ஏன் ஒரு தமிழ் எழுத்தாளனை உருவகப்படுத்தமுடியாது?
அவரது ஜோசஃப் ஜேம்ஸ் என்ற ஜேஜே க்கு பொருந்தக்கூடியவர் தமிழ் எழுத்துலகில் எவருமில்லையோ! இதனாலே மலையாள எழுத்துலகிலிருந்து ஒருவரைக் கற்பனை பண்ணியிருக்கிறாரோ?.

அதற்கு அவரே இந்தியப் பிறமொழி எழுத்தாளரை அறிமுகப்படுத்த எழுதுவதாக சொல்லி விட்டார் .

ஆனால் ‘சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றி விட்டாளா?’ என்ற ஒரே வார்த்தையை ஜேஜே விட்டுச் செல்வதன் மூலம் தமிழ் நாவலுலகப் பலூனில் ஊசியால் குத்திவிட்டார்.

‘கொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குட்டியை அவளைத் துரத்திய அரசர்களிடமிருந்து, முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் நாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால், சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையிலிருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும். ஆனால் , கடவுளே எனக்கு அந்த சக்தி இல்லையே? ‘ . என்ற வசனத்தோடு ஆரம்பத்திலே நாவல் தொடங்குகிறது .

தமிழ்ச் சமூகம், தமிழ் எழுத்துலகத்திற்கு அப்பால் இடதுசாரிகள் மீதும் கைக்குண்டுகளை தூக்கிவீசுகிறார்.

‘நாட்டு வெடிகளை அவ்வப்போது வெடித்து புகையையும் சத்தத்தையும் கிளப்பி சமூக அமைப்பை மாற்றமுடியாது என்றாராம் அய்யப்பன். ‘ ‘மேலும் திருவிழாக்களில் வாணவேடிக்கைக்காரனைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் நிற்கும். ‘

‘மூலதனமில்லாமல் முதலாளியாக இரண்டு முக்கியமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தொழிற்சங்கம் என்றும் மற்றது பாஷை என்றும் ஜேஜே சொல்கிறான். ‘

இவற்றைவிடப் பலமான விமர்சனத்தை எனக்குத் தெரிந்தவரையில் எமது சமூகத்தில் உள்ள எழுத்தாளர்கள் மீது எவரும் வைக்கவில்லை. வைக்கமுடியுமா?

நாவலை வாசிக்கும்போது நமது ஈழ வியாபாரத்திற்குப் பொருத்தமான இடங்களில் தடுக்கி விழுந்தேன்.

தன் கழுத்திலே பிணைக்கப்பட்ட கழியின் எதிர்முனையில் தொங்கும் உணவை எட்ட நிரந்தரம் ஓடிக்கொண்டிருக்கும் ‘குதிரையின் வியர்த்தம் ‘
‘நாம் பின் திரும்பிப் பார்க்கும்போது இன்றைய தலைவர்களும், பிரபலங்களும், பூச்சி போல கொசுக்கள்போல, மூட்டைகள் போல நமக்குத் தெரிவார்கள் . அவர் அவர்களுக்கு உரிய நியாயமான உருவத்தை அன்று அவர்கள் அடைவார்கள் ‘ என்ற வார்த்தைகளை கண்ணில் அருத்தும்போது எமது அரசியலை, ஏன் தமிழ் அரசியலையே கடந்து போகமுடியாது .

யாருக்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது..? என்ற எனது அடுத்த கேள்விக்கான பதிலென்ன?

தமிழில் இதுவரை வாசகருக்காகவே எழுதிய புத்தகங்களே அனைத்தும். அதிலும் கல்கி போன்றவர்களது அதிகற்பனை பதிவுகளை ஒருவிதமான கேளிக்கை உணர்வுக்கும் அதேவேளையில், பழம் பெருமைகளைப் பேசும் சமூகத்தை நோக்கி எறிந்த கருவாட்டுத் துண்டுகளாக எழுதியபோது மற்றையவர்கள் நீதி – காந்தியசிந்தனை என்று உபதேசமாக நாவல்களை எழுதினார்கள் . இடதுசாரிகள், எழுத்துகள் மூலம் வர்க்கப் புரட்சிக்குத் தயாராகினார்கள். அக்காலத்தில் யதார்த்தத்தை எழுதிய புதுமைப்பித்தனை முன்னெடுக்கச் சுந்தர ராமசாமி விரும்புவது ஆரம்ப பக்கங்களிலே தெரிகிறது.

இந்த நாவலில் பல வசனங்கள் பைபிளில் வருவதுபோல் நினைவில் நிலைத்திருக்கும்.
‘மனைவிமார்களின் பெரிய எதிரி கணவனின் இலக்கிய நண்பனே. கணவர்களை தங்கள் கையிலிருந்து தட்டிப் பறித்துக்கொண்டு போய்விடுகிறார்களோ எனப் பயப்படுகிறார்கள். ‘

‘ வெள்ளைக்காரன் ஆட்சி செய்யும் திறமை கொண்டவன் என்று உள்ளூர நினைப்பு. நம்மவர்கள் மீது அவநம்பிக்கை . பெண்களிடம் இது அதிகம். அவர்களுக்கு தங்கள்புருஷர்களைத் தெரியும். குடும்பத்தையே நிர்வாகம் பண்ணத்தெரியாதவன். தேசத்தை எவ்வாறு நிர்வாகம் பண்ணப்போகிறான் என்ற எண்ணம் ‘

இப்படியான பல இடங்களைக் கோடு போட்டு புத்தகம் முழுவதும் வரிக்குதிரையாகிவிட்டது.

இலக்கியம், இலக்கணம், சமூகம் , அரசியல் என பல்வேறு துறைகளை அறிந்து கொள்ள, கல்லூரிகளில் தமிழ்ப்பாடமாக வைக்கப்படவேண்டிய புத்தகம் ஜே.ஜே சில குறிப்புகள்.

நன்றி திண்ணை இணையம்
—0—

“வரிக்குதிரையான புத்தகம்.” மீது ஒரு மறுமொழி

  1. வாசிப்புலகம் புத்திஜிவிகளுக்கு மாத்திரமானதல்ல .வாசகனிடம் கல்கி யார் சுரா,யார் என்ற கேள்வியை வைத்தால் உண்மை புலப்படும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: