அன்புள்ள கலை, இலக்கிய நண்பர்களுக்கு வணக்கம். அனைவரும் நலம்தானே..?
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதி முதல் தற்போது வரையில் உலகெங்கும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் சமூக இடைவெளி பேணலுக்கு நாம் ஆளாகியிருக்கின்றோம்.
இந்தப்பின்னணியில் இணையவழி காணொளி நிகழ்ச்சிகள் உலகெங்கும் இடம்பெற்றுவருகின்றன.
அண்மையில் தமிழ்நாட்டில் மறைந்த மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்களின் நினைவுப்பகிர்வு நிகழ்ச்சியை இந்திய சாகித்திய அக்கடமி இணையவழியில் காணொளியாக நடத்தியதை அறிந்திருப்பீர்கள்.
இவ்வாண்டு மறைந்த ஈழத்தின் மற்றும் ஒரு எழுத்தாளர் சமூகச்செயற்பாட்டாளர் திருமதி பத்மாசோமகாந்தன் அவர்களை நினைவுகூர்ந்து ஞானம் இலக்கியப்பண்ணையும் இணைய வழி காணொளி நிகழ்ச்சியை நடத்தியிருந்தது.
இந்தப்பின்னணியில் இலங்கையில் அரசின் அங்கீகாரத்துடன் இயங்கி வரும் சாகித்திய மண்டலத்தின் தமிழ்ப்பிரிவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியாதா..?
ஈழத்தின் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் மறைந்துள்ளார்.
நேற்று ஈழத்தின் மூத்த ஓவியர் ஆசை இராசையா அவர்களும் மறைந்துவிட்டார். எனவே இலங்கை சாகித்திய மண்டலத்தின் தமிழ்ப்பிரிவினர், இதுபற்றி ஆராய்ந்து ஆக்கபூர்வமாக சில விடயங்களை முன்னெடுக்கலாம்.
ஆண்டுதோறும் சிறந்த புத்தகங்களை தெரிவுசெய்து விருதும் பணப்பரிசிலும் வழங்கி வரும் சாகித்திய மண்டலத்தின் தமிழ்ப்பிரிவு, சமகால நிலைமையை கவனத்தில் எடுத்து மறைந்த கலை, இலக்கிய ஆளுமைகளை நினைவுகூர்ந்து இணைய வழி காணொளி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஆவனசெய்யவேண்டும் என்பது எமது ஆலோசனையாகும். நன்றி.
அன்புடன்
முருகபூபதி
letchumananm@gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்