
மிருக வைத்தியத்தின் பின்னணியில் சமுதாயத்தின் பல தரப்பட்ட பிரச்சினைகளைப் படம் பிடிக்கும் கதைகள்.
கடந்த இருபது ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழும் மிருக வைத்தியரான திரு நடேசன் அவர்கள், தன்னிடம் வரும் மிருகங்களையும் அந்த மிருகங்களை வளர்க்கும் மனிதர்களையும் பின்னணியாக வைத்து இருபது சிறு கதைகளைத் தொகுத்து இரண்டாவது முறையாகத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்திருக்கிறார்.
இவர், மிருகங்கள் பற்றிய தனது படைப்புக்களுக்கு, இங்கிலாந்தில் வாழ்ந்து, மிருகங்களையும் அந்த மிருகங்களை வளர்க்கும் மனிதர்களையும் பற்றிப்பல படைப்புக்களைப் படைத்த மிருவைத்திய நிபுணர் திரு ஜேம்ஸ் ஹரியட் என்பவர் முன்னோடியாய் இருந்தார் என்று கூறுகிறார்.
ஜேம்ஸ் ஹரியட் என்ற ஆங்கிலேய மிருக வைத்தியர் , 1916ம் ஆண்டு பிறந்து 1995ல் மறைந்தவர். தனது அனுபவங்களைப் புதினங்களாக எழுதி மக்களிடையேயும் இலக்கிய வட்டத்திலும் மிக மதிப்புப் பெற்றவர். இவர் எழுதிய ”( இறைவனின்) எல்லாப் படைப்புக்களும் மிகவும் பெரியதும் மிகவும் சிறியனவுமாவை” என்ற படைப்பு 1975ல் திரைப்படமாக வெளிவந்தது. 1978ல் டெலிவிசனில் 12 வருடங்களாக 90 தடவைகள் தொடர்ந்து மக்களை மகிழ்வூட்டின.
அமெரிக்காவில், டிஸ்னி வேர்ல்ட் மூலம் மிருகங்கள் பற்றிய பல படங்கள் வந்தாலும் , ஜேம்ஸ் ஹரியட் அவர்களின் படைப்புக்கள் வித்தியாசமானவை. மிருகங்கள் மட்டுமன்றி , அந்த மிருகங்களை வளர்க்கும் மனிதர்கள் , அவர்கள் வாழும் சூழ்நிலை என்பன பற்றியும் விரிவாக எழுதி மனிதனுக்கும் அவன் வளர்க்கும் மிருகத்துக்கும் உள்ள பன்முக உறவைச் சுவையாகச் சொன்னார்.
நடேசனின் படைப்புக்களில் , மிருகங்களைப்பற்றியும் , அவைகளை வளர்க்கும் மனிதர்கள் மட்டுமல்லாது,அந்த உறவின் பின்னணிகளான, அரசியல் பொருளாதார, சரித்திர ஆதாரங்கள் பற்றியும் ஆங்காங்கே பல ஆழமானவையும் விரிவானவையுமான தகவல்களைச் சொல்கிறார். இவர் இதுவரை நான்கு படைப்புக்களைத் தமிழ் மக்களுக்குத் தந்திருக்கிறார். இவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ இவரின் மனக்கருத்துக்களில் ஆழ்ந்து கிடக்கும் சில உண்மைகள் அனுபவங்கள், துயர உணர்வுகள் என்ற பல வித்தியாசமான விடயங்கள் இவரின் படைப்புக்களில் வந்துபோகின்றன.
உதாரணமாக, இந்தத் தொகுதியில் வரும் முதலாவது கதையான ” ஆதிவாசிகளின் அவலம்’ என்ற கதையில் ‘பொசம்’ (பெரியதொரு எலி வகையைச் சேர்ந்தது) என்ற பிராணியின் மூலம், அவுஸ்திரேலியாவின் ஆதிவாசிகளான அப்ரெஜெனியன் மக்களின் அவல நிலை பற்றிச் சொல்ல வருகிறாரா அல்லது அயல் நாட்டுக்கு வந்து வழிதடுமாறி யாரோ உதவியைத் தேடித் தவிக்கும் தமிழ் அகதியைப் பின்புலத்தில் படைக்கிறாரா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.
தன் வீட்டுக்கு வந்த வெறும் பிராணிதானே என்று தூக்கியெறியாமல், அந்தப் பிராணிக்குப் பாதுகாப்புக் கொடுத்துஇ ஒவ்வொருநாளும் அந்தப்பிராணியின் நிலைபற்றி எட்டிப்பார்க்கும் மனப்பான்மை இன்று பொருளாதார மேம்பாட்டுக்குள் தன்னைப்பிணைத்துக்கொண்ட ‘சாதாரண’ மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத பெருந்தன்மையான விடயம்.
இன்றைய உலகில், தன் வீட்டுக்கு அருகில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் வாழும் சமுதாயத்தில் மிருகங்களுக்கும் தனது வாழ்வில் ஒரு சிறு இடம் கொடுக்க மிகப் பெரிய மனித நேயம் உள்ளவர்களாற்தான் முடியும்.
இன்னொரு கதையான ”மிஸ்கா என்னைத் தொடர்ந்து வரும் என்ற கதையில்” மிருகத்தின் சொந்தக்காரி, வழக்கம்போல் தனது நாய் தன்னைத் தொடர்ந்து வரும் என்று நினைத்துக் கொண்டு முன் நடந்து போக, பின்னால் வந்த நாய் தொலைந்து விட்டது. ஒரு சில நாட்களுக்குப் பின், காரில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் நாயின் உடல் கொண்டுவரப்படுகிறது. வைத்தியன் என்ற முறையில் நாயின் உயிரைக் காப்பாற்றப் பாடு பட்டுத் தோல்வியடைந்த வைத்தியர், ” உங்கள் நாய் மிகவும் பாரதூரமான காயங்களால் இறந்துவிட்டது. நீங்கள் அந்த நாய் இருக்கும் நிலையைப் பார்த்தால் மிகவும் துன்பப்படுவீர்கள், நீங்கள் இங்கு வரவேண்டாம் நானே புதைத்து விடுகிறேன்” என்று வைத்தியர் சொல்ல, ” வேண்டாம் டாக்டர், இதுவரையும் நாங்கள் அன்பாக வளர்த்த நாய், எங்களின் வாழ்க்கையில் ஒன்று பட்ட எங்கள் அன்பான நாயை எங்கள் பூமியிலேயே” புதைத்து விடுகிறோம் ” என்று நாயின் சொந்தக்காரர்கள் சொல்கிறார்கள். அன்புள்ள மிருகத்திற்கும் நாங்கள் எங்கள் மனத்திலும் மண்ணிலும் இடம் கொடுப்போம் என்ற மனித நேயம், இன்று உறவுகளையே கொலைசெய்து அவர்களின் உடல்களைத் தூக்கிவீசும் எங்கள் சமூகத்திலும் திரும்பிவரும் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது.
இந்தத் தொகுதியில் வரும் ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு தத்துவதையோ, உண்மையையோ அல்லது ஏதோவொரு யதார்த்தமான கருத்தையோ சொல்கிறது. மிகவும் , இலகுவான தமிழில், மிகவும் இரத்தினச் சுருக்கமாகக் கதைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.
சட்டென்று முகத்தில் வந்து தவழ்ந்து போகும் இளம் தென்றல்போல், உவமைகள் இனிமையான தமிழில் தெளித்து விடப்பட்டிருக்கின்றன.
இந்தத் தொகுதியில், மனிதநேயம், அரசியல் கருத்துக்கள், சரித்திரக்குறிப்புக்கள், பெண்ணிய சுதந்திரம், வளரும் இளம் தலைமுறையின் சுதந்திரப் போக்குகள், வெள்ளையினத்தாரின் இனவாதம், அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து வாழ்வோரின் பிரச்சினைகள் போன்ற பல விடயங்கள் கதைகளுடன் தழுவி நிற்கின்றன.
தனது எட்டாவது கதையான ”நாய்க்கும் நீரழிவு நோய் வரும்” என்ற கதையில் ” அம்மாவின் உடலைத் தீண்டிய இன்சுலின் ஊசியின் தடயங்கள், கரும்புள்ளிகளாக அம்மாவின் வெள்ளைத் தோலை அலங்கரித்தன. அப்பாவின் குத்தல், நக்கல் , மொழிகளையும் அம்மா பொறுத்துக்கொண்டதற்கு இந்த ஊசி குத்தலினால் கிடைத்த சகிப்புத் தன்மையும் காரணமாகவிருக்கலாம்” என்று சொல்கிறார்.
தமிழ்ச்சமூகத்தில் அடக்கப்பட்டிருக்கும் பெண்கள் நிலையைத் தன் தாயின் நோயுடனும், அவர் தனது நீரழிவு நோய்க்குப் போட்ட ஊசிகளின் தழும்புகளுடனும் ஒத்திட்டுப் பார்க்கிறார்.
பெண்களை அடக்க ஒரு ஆண் தனது உடல் வலிமையை மட்டுமல்ல தனக்குச் சமுதாயத்தால் கொடுக்கப்பட்டிருக்கும் ‘கணவன்’ என்ற பதவியையும் பாவிக்கிறான் என்பது யதார்த்த உண்மையை இதைத்தான் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் தனது கதையில் குறிப்பிட்டிருக்கிறார். இன்று, பெண்களுக்காக நடக்கும் வன்முறைகளில் வாய்ச்சொல் வன்முறைகள் முக்கியமானவை என்பதையும் இந்தியாவில் ஈவ் ரீசிங் என்பதற்கு எதிராகச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருப்பதையும் தெரிந்து கொள்ளல் நல்லது. தாயகத்தில், வாலிபத்தில் தெருவில் போகும் பெண்களெல்லாம் பொதுச்சொத்து என்ற மனப்பான்மையில் கிண்டலடித்துப் பழக்கப்பட்டு வளர்ந்த இளைஞர்கள் குடியேறிய நாடுகளில் பெண்களுடன் சமத்துவத்துடன் பழகக் கஷ்டப்படுவதை இன்று பரவலாகக் காணலாம். அவர்களெல்லாம் தங்கள் குடும்பத்தில் பெண்களுக்கெதிரான கிண்டல், நக்கல் மொழிகளைச் சாதாரண உரையாடல்களாக் கேட்டுப் பழகி வாழ்ந்திருக்கலாம் என்ற எங்களின் பழைய தலைமுறையினரை ஞாபகப்படுத்தும் கதையிது. அவுஸ்திரேலியாவில் வாழும் சமுதாயப் பிரக்ஞை உள்ள சில தமிழ்ப் பெண்களுக்கு, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிர்க்குரல் கொடுக்கும் நடேசனின் படைப்புக்கள் வரப்பிரசாதமாகியிருக்கிறது.
சிந்தனைக்கு விருந்தாக இப்படி எத்தனையோ விடயங்கள் தாராளமாகத் தந்திருக்கிறார் தன் படைப்புக்களில். இன்றைய தமிழ் இலக்கியப் படைப்பாளர்களில் நேர்மையானதொரு படைப்பாளி வைத்தியர் நடேசன் அவர்கள். இந்தத் தொகுதியில் பல கருத்துக்களைக்கதைகளினூடே சொல்வதுபோல் தனது ‘‘வண்ணாத்திக்குளம்” நாவலின் மூலம் இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினை தொடக்கம் ‘உன்னையே மையல் கொண்டு ‘ என்ற நாவலில் குடும்பம், செக்ஸ், வைப்பாட்டி போன்ற பல விடயங்களையும் ஒரு தயக்கமுமின்றிச் சொல்பவர் நடேசன். வைத்தியனுக்கும் வழக்கறிஞனுக்கும் பொய் சொல்லக்கூடாது என்று சொல்வார்கள். அதைத் திருப்பி, இந்த வைத்தியர், மற்றவர்களுக்குப் பயந்து வார்த்தை ஜாலங்கள் செய்து பம்மாத்துச் செய்யாமல் தனது வாசகர்களுக்குத் தான் சொல்லப் போகும் விடயத்தைப்பயமின்றிச் சொல்லும் உண்மைவாதி என்று தைரியமாகச் சொல்லலாம்.
இன்று பல தமிழ்ப்படைப்புக்கள் வருகின்றன. சில படைப்புக்கள் எழுத்தாளன் வாழும் அரசியற் சூழ்நிலை பற்றிய பிரச்சாரப்படைப்பாக இருப்பதுண்டு. சில, ஆழமற்றவையாக ஆனால் அலங்கார நடையுடன் எழுதப்பட்டதாக இருப்பதுண்டு.இன்னும் ஒரு சிலர் நவீனத்துவம், புதிய நவீனத்துவம் என்று வாசகனுக்குப் பரிச்சயமற்ற அல்லது புரியாத எதையோ எல்லாம் எழுதிக்குவிக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே தாங்கள் வாழும் சமுகத்தின் பல பரிமாணங்களையும் தங்கள் படைப்புக்களுக்குள் கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருத்தர் வைத்தியர் நடேசன். புதிய தலைமுறை வாசகர்கள் தேடிப்படிக்கவேண்டிய படைப்புக்களைத் தருபவர். அரசியலில் உள்ள மாற்றுக் கருத்துக்களுக்கப்பால், தரமான ஒரு எழுத்தாளரான நடேசனைத் தமிழ் இலக்கிய உலகம் கணக்கில் எடுப்பதும் அவரின் படைப்புக்களை படிப்பதும் மிகவும் ஆக்கபூர்வமான முயற்சியாகவிருக்கும்.
அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களிடையே இன்று நடைமுறையிலிருக்கும் பகிரங்க அரசியல் மோதல்களைத்தாண்டி ஆரோக்கியமான அரசியல் சமூகக் கருத்துகளை முன்வைக்கிறார் நடேசன். மிகவும் கடுமையான விமர்சனங்களையும் தூசெனத் தூக்கியெறிந்து விட்டுத் தனது படைப்புக்களைத் தொடரும் துணிச்சல்காரர். இந்தத் துணிச்சல் மதிக்கத் தக்கது. இதனால் இன்று, அவுஸ்திரேலியாவில் வாழும் முற்போக்காளர்களிடையே, தங்களுக்கு முன்னால் வைக்கப்படும் அவதூறுகளைத் தூக்கியெறியும் துணிவு பரவுகிறது. பல புதிய கருத்துக்கள் கொண்ட படைப்புக்கள் மட்டுமல்லாது அவற்றை வாசித்து விமர்சிக்க ஒரு புதிய காரசாரமான வாசகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் எழுத்தாளர் நடேசன். இது, புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தில் வரவேற்கப்பட வேண்டிய விடயம்.
மேற்கு ஐரோப்பா போன்ற ஜனநாயக நாடுகளில் வாழும் தமிழர்கள் பயப்படாமற் தங்கள் கருத்துக்களைச் சொல்ல இலக்கிய சந்திப்பு போன்ற அமைப்புக்களை வைத்திருக்கிறார்கள். அந்த மாதிரியான ஸ்தாபனங்கள் அவுஸ்திரேலியாவிலும் உருவாகினால் முற்போக்குத் தமிழ் இலக்கியம் ஒரு புதிய வடிவை எடுக்கும். அவுஸ்திரேலியா வாழ் தமிழ் எழுத்தாளர்களான நடேசன் முருகபூபதி போன்றவர்கள் அம்முயற்சியை எடுத்தால் அவுஸ்திரேலியத் தமிழ்ப் படைப்புக்களைத் தமிழர் வாழும் இடங்களுக்குப் பரப்ப உதவியாயிருக்கும்.
மறுமொழியொன்றை இடுங்கள்