

நடேசன்
இருட்டறையில் பல வருடங்கள் பாதுகாக்கப்பட்ட வைன் நாக்கில் மட்டுமல்ல, சுவை நரம்புகள் அற்று அறியமுடியாத அடித்தொண்டையிலும் சுவைக்கும். அதுபோல் பலகாலமாக எனது அலமாரியில் இருந்து பின் பெட்டிகளில் புகுந்து ஒளித்திருந்த நாவல் இமயத்தின் கோவேறு கழுதைகள். 25 வருடங்களுக்கு முன்பாக அவர் எழுதியது என்றபோது ஆச்சரியமாக இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் வாசித்திருந்தால் சில மணிநேரத்தில் வாசித்துவிட்டு வைத்திருப்பேன். தற்போது வாசிப்பதற்கு ஒரு கிழமை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். நல்ல இலக்கிய வாசிப்பும் கலவி மாதிரி.
நான் அறியாத ஒரு புதிய சமூகத்தின் தரிசனங்கள், தொடர்ச்சியாக அவிழ்ந்த பாஞ்சாலியின் வண்ணச் சேலைபோல் பக்கம் பக்கமாக நகர்ந்தது. சமூகத்தின் வரலாறாக ஆரம்பத்தில் விரிந்து பின்னர், பாத்திரத்தின் அக புற செயல்களையும், அக உணர்வின் குரலோடு (Stream of Consciousness) விவரித்தபடி வாழ்வின் தத்துவத்தைச் சொல்லியபடி முடிகிறது.
மனிதர்கள் வாழ்வதற்கு இந்தப்பிறவியிலே மட்டுமே காரணங்கள் உள்ளன. இந்த உலகத்தைவிட வேறு உலகம் நமக்கு கிடையாது. அதனால் ஆவலோடு மனநிறைவாக ( Passion) வாழ்ந்து விடவேண்டும். வாழ்விற்கான காரணங்கள், வாழும் சூழ்நிலை, வயது, மற்றும் எமது நோக்கத்திற்கு ஏற்ப வேறுபடலாம். ஆனால், வாழ்வதற்கான தூண்டல்களைப் பற்றிக்கொண்டு முழுமனதோடு வாழவேண்டும் என்ற இருத்தலியலின் தத்துவத்தை இந்த நாவல் சொல்கிறது.
நாவல், ஒரு கிறிஸ்துவ வண்ணாரக் குடும்பத்தில், முனைப்பான ஆளுமைகொண்ட பெண் பாத்திரமாக ஆரோக்கியத்தை உருவாக்கி, அவள் எப்படி மருமகள், பிள்ளைகள், மற்றும் கணவனுடன் மல்லுக்கட்டியபடி தனது தனித்துவத்தை நிலை நிறுத்துகிறாள் என்பதை விளக்குகிறது.
வழமையான சமூகத்தால் கணவனால் அல்லல்படும் பெண் பாத்திரங்கள்( கண்மணி குணசேகரனின் கோசலை ) போல் அல்லாது தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளின் மூலம் குடும்பத்தை கொண்டுசெல்லும் பாத்திரமாக ஆரோக்கியம் வாசிப்பவர்கள் மனதில் அகற்ற முடியாதபடி உறைந்துவிடுகிறாள்
அவள் இதுவரை எந்தக் குடும்பத்திற்காக வாழ்ந்தாளோ, அந்தக் குடும்பம் அவளை விட்டு விலகியோடுகிறது. அதேபோல் அவள் இரவு பகலாகச் சேவை செய்த சமூகம், கண் முன்னால் அழிந்து அவள் தேவையற்ற நெளிந்த அலுமினிய பாத்திரமாக விட்டெறியப்படுகிறாள். பிறப்புக்கும் இறப்பிற்கும் முதன்மையாக அவளை வைத்த பழைய சமூகம் உருமாறி , புதிய சமூகம் அவள் கண் முன்னால் உருமாறுகிறது. நரை திரை அடைந்து, எனது சேவை தேவையில்லை என மனமுடைந்து அழிந்து விடுவதே நலமென்று நினைத்த வேளையில், பாம்பு கடித்து மகளின் கணவன் இறந்ததும் , ஆசையோடு புதிய எஞ்ஜின் பொருத்திய வாகனமாக மீண்டும் முழு குதிரை வேகத்தில் ஓடத் தொடங்குவதாகக் கதை முடிகிறது
தமிழில் இருத்தலியல் நாவல்கள் எது என எதைச் சுட்டிக்காட்டுவீர்கள்..? என சமீபத்தில் ஜெயமோகனிடம் கடிதமெழுதி கேட்டிருந்தேன். அவரிடமிருந்து பதில் வருவதற்கு முன்பே அதற்கான பதிலை நான் கண்டுபிடித்தேன். அதுவும் இந்தக் கொரோனா காலத்தில். அல்பேர்ட் காமுமிவின் “ பிளேக் “ நாவலை அடிக்கடி நான் நினைப்பதுண்டு. பிளேக் வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், நோயிலிருந்து தப்பி வாழ்வதற்காகப் போராடுகிறார்கள்.
ஒவ்வொரு தனிமனிதர்களும் கடமைக்காக வாழ்வது மட்டும் போதாது. வாழ்வதற்கான காரணத்தை கண்டு , அதில் பற்றைவைத்து வாழ்வில் ஆவலோடும் பிடிப்போடும் பூரணமாக வாழவேண்டும். அவனது சகல முடிவுகளுக்கு அவனே பொறுப்பாகிறான் என்கிறது இருத்தலியல் தத்துவம் . இங்கே கடவுளுக்கு இடமில்லை.
எனது மிருக வைத்திய நண்பன் ஒருவன், சமீபத்தில் நாய் பூனைகளை கருணைக்கொலை செய்யப் பாவிக்கும் மருந்தை எடுத்து தன்னில் ஏற்றி தற்கொலை செய்ய முயன்றபோது, எனது மனைவியும் நானும் அவனது குடும்பத்தோடும, அவன் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலை வைத்தியர்களோடும் பேசியபடியிருந்தோம்.
அப்பொழுது எனது மனைவி சியாமளா, “ இந்தக் கொரோனாவில் உலகம் முழுவதிலும் மக்கள் உயிர்வாழ இப்படி கஷ்டப்படுகிறார்கள். கான்சரின் பின்பு நானெல்லாம் வாழ்வதற்கு எத்தனை பாடுபடுகிறேன். இவன் இப்படிச் செய்கிறானே? “ என்று வருந்தியபோது அந்த வார்த்தைகள் என்னில் சாட்டையாக விழுந்தன . இவ்வளவுக்கும் எனது மனைவி இருத்தலியலின் தத்துவமோ இல்லை அல்பர்ட் காமுவையோ படித்ததில்லை. கேட்டிருக்கவில்லை.
இந்த நாவலில் வரும் ஆரோக்கியம் என்ற பாத்திரம் அடிமட்டத்தில் வாழும், எழுதப்படிக்கத் தெரியாத பெண். ஒவ்வொரு காலத்திலும் தான் வாழக் காரணங்களைப் புதுப்பித்துக்கொண்டு வாழுகிறாள். ஆனால் , பல பல்கலைக்கழகங்களில் மூன்றுக்கு மேற்பட்ட பட்டங்களைப் பெற்ற மேல்தட்டில் வாழும் அறிவுஜீவி ஒருவன் தன் மரணத்தை தேடி ஓடுகிறான் . வாழ்க்கையின் முரண்கள் (Irony) இவையே.
கோவேறுகழுதைகளில் முக்கிய பாத்திரங்களான ஆரோக்கியம் – சவுரி அவர்களது மகள் மேரி மற்றும் இரண்டு பையன்கள் முதலான இவர்கள் குடும்பத்தினர் கத்தோலிக்கர்களாக இருக்கிறார்கள். இவர்கள் காலனி ஆட்கள் என்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு துணிவெளுக்கிறார்கள் என்பதை இந்த நாவலில் புரிந்து கொள்ளமுடிகிறது. இவர்கள் இந்துக்களுக்குச் சலவை செய்பவர்களிலிருந்து வேறுபடுவது மிகவும் அழகாக ஆரோக்கியத்தின் சிந்தனையோட்டத்தின் மூலம் வெளிப்படுகிறது. சிந்தனையோட்டத்திற்கு 150 வருடங்களாக ஆங்கிலத்தில் கோட்டேசன் (Quotations marks) போடுவதில்லை. சடங்கு நாவலில் எஸ்பொ போட்டிருப்பதுபோல் இமயமும் போட்டுள்ளார்
நாவல் முழுவதும் பெண்ணின் மனநிலையில் வைத்துக் கதை சொல்லப்படுவதால் பலவிடயங்களைச் சொல்வதற்கு இலகுவாக இருக்கிறது. வண்ணாரப் பெண், அவளது சமூகத்தில் மருத்துவச்சியாக வாழ்வது எனக்குப் புதினமான விடயம்.
பரம்பரையான சமூகம் தொடர்ந்து தானியம், உணவு எனக் கொடுத்து ஒருவித பண்ட மாற்று முறையில் வாழ்ந்துவிட்டு, பணத்தைப் பரிமாறும்போது பழைய சமூகம் உடைவதுடன் சாதியின் தேவையும் தளர்கிறது. சாதி அடுக்குகள் கொண்ட சமூகம் ஆலமரம் போன்றது . தொடர்ச்சியாக நகர மயமாக்கத்தால் மட்டுமே அழிக்க முடியும் என்பதையும் போராட்டங்கள் சாதி வெறுப்புகள் எதுவும் அதனது கிளையைக்கூட வெட்டமுடியாது என்பதும் தெரிகிறது .
சார்ள்ஸ் டிக்கன்ஸ் படித்து- இங்கிலாந்தையோ அல்லது பால்சாக் மூலம் பிரான்ஸையோ புரிந்து கொள்ள முடியும். அப்படியான ஒரு நிலை தமிழ்நாட்டு இலக்கியத்தில் இல்லை. அங்கு எழுதுபவர்கள் தமது சமூகத்திற்கு அப்பால் எழுதுவது குறைவு . ஒரு காலத்தில் நான் படித்த நாவல்கள் பிராமண சமூகத்தை சுற்றியே பின்னப்பட்டிருந்தன. மற்றவர்கள், தட்டையான பாத்திரமாக இடைவெளிகளை நிரப்ப வருவார்கள். பிற்காலத்தில் சென்னையின் மத்திய வகுப்பார்கள் பற்றிய படைப்புகள் வந்தன. ஆக மொத்தத்தில் இலக்கியத்தில், தமிழ்ச் சமூகத்தின் குறுக்கு வெட்டு முகத்தை பார்க்க முடியாது. ஒருவிதமான (Social disconnectedness) தீவுகளாகத் தோற்றமளிப்பவை.
தலித் இலக்கியங்கள் இதுவரை நமக்குத் தெரியாத பகுதிகளைக் காட்டுகிறது.
முடிவுரையாக, சிறந்த நாவலுக்காக கோவேறுகழுதைகளில் உள்ள தகுதிகள் என்ன என்பதற்கு விடையாக….
1) கிறிஸ்துவ வண்ணார குடும்பத்தின் கதை என்பதற்கு மேலாக இமயத்தின் நாவல் பாத்திர அமைப்பு , உள்முரண்பாடு (Internal conflict) முடிவு என்பன மூலம் சிறந்த நாவலாக எனக்கு தெரிகிறது
2) இருபத்தைந்து வருடங்கள் முன்பாக எழுதப்பட்ட தொரு நாவல் பின் நவீனத்துவமாக, கோட்பாடாக பிரான்சில் உருவாகிய இருத்தலியலைப் பேசுவதோடு அதற்கான தத்துவத்தையும் சொல்கிறது. நீட்சேயின் புகழ் பெற்ற சொல்லாடலான கடவுள் இறந்துவிட்டார் என்பது “அந்தோனியாருக்கு கண் கெடயாது அந்தோனியார் செத்துவிட்டார் “ என்ற ஆரோக்கியத்தின் வசனங்கள் மூலம் கடவுளை நிராகரிக்கிறது.
3) சமூக ரீதியாக சாதி ஒடுக்கு முறையில் முன்னணி வகிப்பது உயர்சாதியினர் அல்லது வன்முறையை கையில் எடுக்கும் இடைச் சாதியினர் மட்டுமல்ல, சாதி ரீதியில் தலித்தினரும் தங்களுக்கு கீழ்பட்டவர்களை ஒடுக்குகிறார்கள் என்பதை இலக்கியமாக அழகுணர்வோடு காட்டும் அதே வேளையில், ஆத்திரம் வரும்போது சவுரியிடம் அடிபடும் ஆரோக்கியம் போன்ற பெண்கள் மிகவும் அடித்தளத்தில் நசிபட்டபடி சமூகத்தை தாங்கி பிடிக்கும் அத்திவாரமாக தொடர்ந்தும் செயல்படுகிறார்கள்.
நல்ல நாவல் மறக்க முடியாத பாத்திரத்தை கொண்டு படைப்பதன் மூலம் உருவாகிறது. ஒரு தத்துவத்தை தனது ஊடுபாவாக கொள்ளும்போது நல்ல நாவல் சிறந்த நாவலாகிறது. அந்தவகையில் கோவேறு கழுதைள் தமிழ்நாவல் வரிசையில் முக்கியமானது.
—0–
மறுமொழியொன்றை இடுங்கள்