வண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல்



ஓடும் தளத்தை விட்டு விமானம் மேலே எழுந்தது.. . மேலே, மேலே வானத்தில் ஏறியது.

அதன் பறப்பு தொடர்ந்தது.

நான் வாழ்ந்த, பிறந்த மண்ணில் இருந்து பறக்க துடிக்கிறேன்…

எழுவைதீவு, நயினாதீவு, யாழ்ப்பாணம், பேராதனை, மதவாச்சி, பதவியா என்ற இந்த இடங்கள் கனவில் வந்து போன இடங்களா?

இந்த விமானம் என்னை எங்கு கொண்டு செல்கிறது.? பூகோள படத்தில் மட்டும் பார்த்த இடங்கள். இனி எனக்கு சொந்த பூமியாகுமா?

என் பாதங்கள் அணைத்து மகிழ்ந்த அந்த இனிய மண் எனக்கு அந்நியமாகின்றதா?

கால் நூற்றாண்டுகள் விதைத்த இனவாத விதையின் அறுவடையில் என்னுடைய சொந்தமான உரிமைகள், உறவுகள் கனவுகள் சிதைந்து விடுகிறதா?

என் மனதில் ஏற்பட்ட எண்ணங்களை அறிந்தவள் போல சித்திரா லேசாக என் கைகளைத் தொட்டுக் கொண்டு என் கண்களை உற்று நோக்குகிறாள்.

அவளது கைகளை எனது கைகளில் பொத்திக் கொண்டு, அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில்’ பதவியா குளத்துக்கு புராதனமான தமிழ்ப் பெயர், உண்டு தெரியுமா?’ எனக்கேட்டேன்.

‘ என்ன பெயர்’

‘வண்ணத்திக்குளம்’

வண்ணத்திப்பூச்சிகள் சிறகடிப்பது போல அழகாக தோன்றும் தனது விழி இமைகளைச் சிமிட்டினாள். அந்தக் கண் சிமிட்டலில் ஓர் உறவும் உத்தரவாதமும் விகசித்தது.

‘இங்கு தான் வண்ணத்துப்பூச்சிகள் போன்ற உன் கண்களை வார்த்தெடுத்தாயா’? என கேட்க வேண்டும் போல இருந்தது.

‘இலங்கையில் இனக்கலவரம்,. சிங்களவர்கள் தமிழரை கொலை செய்கிறார்கள். எனக்கு புகலிடம் தா.. என்றுதான் கேட்கப் போகிறேனா?

இவள் என் பக்கத்தில் இருப்பவள் – பிறந்த மண்ணையும் உறவுகளையும், இனத்தையும் விட்டு பிரிந்து வந்து கொண்டிருக்கிறாள்.
வண்ணத்திக்குளத்தின் உறவுகள் இலங்கை முழுவதும் விரியுமானால். .

விமானத்தின் கண்ணாடி வழியே பார்க்கும் போது எதுவும் தெரியவில்லை.

என் கண்களின் பார்வையை மறைப்பது வானத்து முகிலா? அல்லது கண்ணீரா?

முற்றும்




“வண்ணாத்திக்குளம்;அந்நியமாகுதல்” மீது ஒரு மறுமொழி

  1. Next expecting Asokanin vaithyasalai Thanks Mahindan

    Sent from my iPhone

Mahindan Mailvaganam -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.