முள்ளுள்ள புதர்களின் மத்தியில்; அத்தியாயம் 11

Terrance Anthonipillai

வழக்கமாக எப்பொழதும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும் இருக்கும் எனது 8 வயது மகள் அன்று நான் மதிய உணவுக்காக இரண்டு மணியளவில் வீடு சென்ற போது அவளின் செந்தளிப்பான அவளின் முகத்தில் கவலை படர்ந்திருப்பதைக்கண்டு ஆச்சரியமடைந்தேன்.

‘என்ன குட்டி ஒரு மாதிரியாக இருக்கிறாய்’ என்று கரிசனையுடன் கேட்டவாறே அவளை வாஞ்சையுடன் தூக்கினேன். உடனே அவள் ‘மாவீரர் நாளுக்கு என்னை புலியாக நடிக்கட்டாம் எனக்கு விருப்பம் இல்லை அப்பா’ என்றாள் என்னைக் கட்டியணைத்தவாறே. எனது குரல் கேட்டு அவசரமாக வந்த மனைவி நடந்தவற்றை விபரமாக்கூறினாள். ‘நான் சொன்னனான் அப்பா வந்தவுடன் பிறின்ஸ்சிப்பல்லுடன் போய்க்கதைப்பார் நீ ஒண்டுக்கும் பயப்படாதை என்று ஆனால் அவள் கேக்கிறாள் இல்லை .
அதால அப்பாவுக்கு புலிகளாலை பிரச்சனை வருமோ எண்டு பிள்ளை சரியாய் பயப்படுது’ பிள்ளையை விட மனைவிதான் அதிகம் பயப்படுவதுபோல் எனக்குப் பட்டது. ‘உங்களுக்கு ஆக்களோட சரியாய் கதைக்கவும் தெரியாது ( இத்தொடரை வாசித்தால் எனக்கு சரியாய் எழதவும் தெரியாதென்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை!) அவை என்ன சொன்னாலும் தலையாட்டிப் போட்டு வந்திடுவியள் நான் போய் பிறின்ஸ்சிப்பல்லுடன் கதைத்திட்டு வாறன. ஆர் என்ன சொன்னாலும் பிள்ளையை மட்டும் உதிலை நடிக்கவிடமாட்டேன்’ என்று உறுதியாகக் கூறினாள். ஆதற்கிடையில் நான் மோட்டார் சைக்கிளை ஸ்டாட் செய்தவண்ணமே ‘எதுக்கும் நான் போய் பிறின்ஸ்சிப்பல்லிட்ட என்ன நடந்ததென்று கேட்டுக்கொண்டு வாறன்’ என்று கூறிய வண்ணமே பாடசாலையை நோக்கிப் புறப்பட்டுவிட்டேன்.

மோட்டார் சைக்கிளில் மகளின் பாடசாலையை நோக்கி செல்லும்போதுதான் வன்னியை விட்டு வெளியேற வேண்டுமென்ற எண்ணம் முதற் தடைவையாக என் மனதில் உதித்தது. உந்த ஊரியான்- கொம்படி- சுண்டிக்குளம்- கிளாளி ஊடாக் வேர்த்துக் களைத்து சைக்கிள் உழக்கும் பொழது வராத எண்ணம் இப்போ என்னை ஆட்கொள்ளத்தொடங்கி விட்டது. 10 வயதக்குப் பிறகு பாஸ் எடுப்பதுவும் சிக்கல். மனதில் இலேசான பீதி படரத் தொடங்கிவிட்டது.

நான் பாடசாலைக்கு சென்ற பொழது உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்கள் மாத்திரமே நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். எமது நிறுவம் அப்பாடசாலைக்கு தொண்டர் ஆசிரியர்கட்கான சம்பளம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மலசலகூடவசதிகள் போன்ற பலவித உதவிகளைச் செய்துள்ளது. நான் நேரடியாகவே அதிபரின் அறைக்குள் சென்றேன். ஒருவித பயத்துடன் ‘வாங்கோ சேர் இருங்கோ நீங்கள் வருவீர்கள் என்று எனக்குத்தெரியும்’ என்று நமடிடுச் சிரிப்புடன் கூறி தனக்கு முன்னால் இருந்த நாற்காலியைக் காண்பித்தார்.

‘நீங்கள் ஏன் வந்தனீங்கள் என்றும் எனக்குத் தெரியும்’ என்று அதிபர் தொடர்ந்தார். நான் ஒன்றும் கூறாமல் அவர் சொல்வதையே கேட்டுக்கொண்டிருந்தேன். இம்முறை சகல பாடசாலைகளிலும் அவங்கள் தாற நாடகங்களைத்தானாம் போட வேண்டும். கெட்டிக்கார பிள்ளைகளைத்தான் நடிக்க விடவேண்டும் இன்னொரு ஓடர். அதுதான் உங்கட மகளையும் எடுத்தனாங்கள்’ என்றார். அதிபர் உண்மைதான் சொல்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவரை மேலும் கதைக்கவிடாது ‘மகளுக்கும் விருப்பமில்லை எங்களுக்கும் விருப்பமில்லை. நாங்கள் விடமாட்டோம்’ என்றேன் சற்றே கோபமாக. ‘உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நாங்கள் கட்டாயப்படுத்த மட்டோம் ஆனால் நீங்கள் இங்கு வந்து போன விஷயம் அவங்களுக்குத் ;தெரியவந்தால்’ என்று அதிபர் இழுத்தார். ‘நான் இப்போ உங்களுடன் கதைச்ச விடயத்தை அவங்களுக்குச் சொல்லுங்கோ’ என்றேன்


அதிபருக்கு தைரியம் ஊட்டும் வகையில். ‘உண்மையில எந்த பெற்றார் தான் உப்படியான நாடகங்களில தங்கட பிள்ளைகளை நடிக்க விடுவினம். அவங்களுக்கப் பயந்து வாய் திறக்காமல் இருக்கினம். நீங்கள்தான் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கிற முதல் ஆள்’; ‘கடைசி ஆளாகவும் இருக்கக் கூடாது’ என்று என்னையறியாமலே கூறி விட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறும்போதுதான் அந்த விசிட்டிங் காட் மனதில் வந்த போனது. அதை அலுவலக மேசை லாச்சிக்குள் வைத்தது ஞாபகத்திற்கு வந்தது.

மோட்டார் சைக்கிளை ஸ்டாட் செய்து நேராக ஒபீஸ்க்கு விட்டேன். சகல பணியாட்களும் வீட்டீற்க்கு சென்றுவிட்டனர். வோச்சர் மட்டும்தான் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தான்.
என்னைக்கண்டதும் பதறி அடித்தக்கொண்டு ஓடி வந்தான். ‘என்ட ஜடன்டிட்டிக் காட்டை வீட்டில காணவில்லை. அண்டைக்கு லாச்சிக்குள்ள வைச்சிட்டு எடுக்க மறந்திட்டன் போல கிடக்கு’ என்று கூறிக்கொண்டே நேரே எனது அறைக்குச் சென்று எனது மேசையின் கீழ் லாச்சிக்குள் கை விட்டுப் பாரத்தேன்.

ஓர் பொருளை ஓர் இடத்தில் வைத்துவிட்டு இன்னோர் இடத்தில் தேடுவதுதான் எனது வழக்கம். என்ன அதிசயம் அன்று எனது கைக்கு முதலாவதாகக் கிடைத்தது அந்த விசிட்டிங் கார்ட் தான். அதிலுள்ள பெயரையும் நிறுவனத்தையும் மீண்டம் ஓர் தடவை வாசித்தவிட்டு பத்திரமாக எனது பேர்ஸ்க்குள் வைத்து விட்டு வெளியில் வரும்போது ‘ என்ன சேர் அம்பிட்டுதே’ என்று வோச்சர் கரிசனையுடன் கேட்டான்.

‘ஓமோம் ஓமோம்’ என்றேன் உற்சாகத்துடன்.
மோட்டார் சைக்கிளை ஓபீஸ்ஸிலிருந்து ஒளுங்கைக்குள் ஏற்ற அந்தப் பெண் அவசரமாக எமது கந்தோரை நோக்கி வந்துகொண்டிருந்தாள். நான் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தவும் ‘ஜயா உங்களைக் கண்டுட்டத்தான் ஓடி வந்தனான். இப்பதான் ரெட் குறஸ் அம்மா வீட்டை வந்தவா. என்ட மகனைப் போய் பார்தவவாம். அனுராதபுரத்தில வைச்சிருக்கிறாங்களாம். அவன் எழுதின காகிதத்தையும் கொண்டு வந்து தந்தவ’ என்று கூறிக்கொண்டு அதை என்னிடம் நீட்டினா. அதை நான் வாங்கும் பொழது ‘ ஐஞ்சு வருஷத்திற்க்கு பிறகு எங்கட வீட்டில இண்டைக்குத்தான் நிம்மதி’ என நா தழதழத்தவாறு கூறிக்கொண்டிருந்த அந்தத் தாயின் முகத்தை வாசிக்கத் தொடங்கிய காகிதத்திலிருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தேன். அவளின் கண்களிலிருந்து வழிவது ஆனந்தக்கண்ணீர் என்பது எனக்கு தெரியும். ஆனால் எனது கண்கள் ஏன் கலங்குகிறது?


(குத்திய முள்ளால் எனது பிரயாணம் தடைப்படுகிறது)

முடிவடைகிறது–

இது எனது முதல் முயற்ச்சி. இதுவே இறுதியானதாகவும் இருக்கக் கூடாதென்பதே எனது விருப்பமும் நம்பிக்கையும். நீச்சல் கற்றுக் கொண்டுதான் நீரில் குதிக்க வேண்டும என்பது எப்படி முடியாதோ அதுபோல் தான் எழதும் பயிற்சி எதுவும் இல்லாமல் எழதுவதும். சங்கீத உலகில் எப்படி ஒவ்வொரு கலைஞரும் அவரவர் பாணியில் பாடி இரசிகர்களை கவர்கிறார்களோ அதுபோலத்தான் எழத்தாளர்களும் தங்கள் பாணியில் எழதி வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்று எங்கேயோ வாசித்த ஞாபகம். அதைக் கடைப்பிடிக்க என்னால் இயன்றவரை முயன்றுள்ளேன். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை என்னை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி பலவகைகளில் உதவிபுரிந்த நண்பன் மனோரஞ்சனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களது விமர்சனங்களும் பின்னூட்டங்களும் என்னை பெரிதும் ஊக்குவிக்கும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: