
வெள்ளிக்கிழமையானதால் வேலையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு, கந்தோர் மோட்டர் சைக்கிளில் விடுதியை நோக்கி வந்து கொண்டிருந்தேன்.
தோளில் சாக்கு மூட்டையுடனும், கையில் பையுடனும் எதிரே சுப்பையா வந்து கொண்டிருந்தார். பாரத்தின் சுமை அவரது முகத்தில் தெரிந்தது.
‘எங்கே போகிறீர்கள்? ‘
‘யாழ்ப்பாணம். ‘
‘தோளில் என்ன மூட்டை? ‘
‘எலுமிச்சம்பழம். வீட்டை கொண்டு போகிறேன். ‘
‘ஏறுங்கோ சைக்கிளிலை,’ என்று கூறினேன்.
சுப்பையாவுடனும், அவருடைய எலுமிச்சை மூட்டையையும் ஏற்றிக்கொண்டு ரயில்வே ஸ்ரேஷனுக்குச்சென்றேன்.
நான் கேட்காமலே’இங்கு எலுமிச்சம்பழம் ஒன்று ஐந்து சதம். ‘ என்றார் சுப்பையா.
‘இவ்வளவையும் என்ன செய்வீர்கள். வீட்டிலே ஊறுகாய் போடுவீர்களா? ‘
‘கொஞ்சத்தை ஊறுகாய் போட்டு விட்டு மிச்சத்தை வீட்டுக்கு பக்கத்துக் கடைக்காரனிடம் கொடுத்தால் காய் ஒன்றுக்கு இருபது சதம் தருவான்.’
‘நல்ல வியாபாரம் தான்’ என சிரித்தேன்.
‘உங்களுக்கென்ன இளந்தாரி குடும்பம் குட்டி இல்லை. ‘
அவரது குரலில் இருந்த அழுத்தம் உண்மையை உணர்த்தியது.
ஸ்ரேஷன் வாசலில் அவரையும், எலுமிச்சை மூட்டையையும் இறக்கி விட்டு மீண்டும் விடுதிக்குத்திரும்பினேன்.
விடுதிக்கு வந்தவுடன் ருக்மன்; ‘இன்று வெள்ளிக்கிழமை ஊருக்கு போகவில்லையா? ‘ என்று கேட்டான்.
‘இல்லை. ‘ என்று சன்னமாக பதிலளித்தேன்.
‘நீங்கள் வித்தியாசமான யாழ்ப்பாணத்தவராக இருக்கிறீர்கள். என்ன செய்வதாக உத்தேசம். ‘
‘கந்தோரில் ஒரு சின்ன வேலை கிடக்கிறது. ‘
‘பதவியா போவோமா? அதுவும் உங்கள் நிர்வாகம்; உள்ள பகுதி தானே? ‘
‘பதவியாவுக்கு வா, என்று அழைப்பதிலும் பார்க்க என் வீட்டை வாவென கூப்பிட்டிருக்கலாமே? ‘ என விளையாட்டாக கேட்டேன்.
ருக்மன்; சங்கடத்துடன் ‘அப்படி கேட்கத்தான் முதலில் நினைத்தேன்;. ஆனாலும் எங்கள் சிறிய கிராமத்துக்கு வருவீர்களோ என்ற
அவநம்பிக்கையால்தான் அப்படி கேட்டேன் ‘ என்றான்.
‘சரி நான் வருகிறேன். ‘
சனிக்கிழமை பத்து மணியளவில் ருக்மனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டேன்.
‘பதவியா ரோட்டு நல்லா இல்லை. கவனமாக ஓட்டுங்கள்.’
‘கவலைப்படாதே, நீ ஒழுங்காக வழியை காட்டு. ‘
‘ருக்மன்;, எனக்கு பதவியா பற்றி அதிகம் தெரியாது ‘
‘ காடுகள் அழித்து, குடியேற்றங்கள் அமைத்துக் கழனிகள் கண்ட பிரதேசங்களிலே பதவியாப்பகுதியும் ஒன்று. காணியற்ற, வேலையற்ற இளைஞர்கள் இந்தப்பகுதியிலே குடியேற்றப்பட்டார்கள். தென்னிலங்கை மக்களே அதிகமாக குடியேற்றப்பட்டார்கள். நிலமற்ற கண்டியச்சிங்களவர் சிலரும் குடியேற்றப்பட்டார்கள். அவ்வாறு குடியேறிவர்களுள் ஒருவர் என் தந்தை. இலவச காணி மட்டும் அன்றி, அரிசி பருப்பு ஆகிய உலர் உணவுகளும் மூன்று ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஆரம்பகாலத்தில் வந்தவர்களில் என் தந்தையும் ஒருவர். ஆரம்பத்தில் இலவசமாக காணி கிடைத்தாலும் காட்டு பிரதேசமானதால் பலர் வரவில்லை. மேலும் மலேரியாவால் பலர் இறந்தனர். ஐந்து வயதுச்சிறுவனாக இருக்கும் போது எனது அண்ணன் மலேரியாவால் இறந்தானாம். நாங்கள் எல்லோரும் இங்குதான் பிறந்து வளர்ந்தோம். ‘
‘அப்பா எந்த இடம்? ‘
‘களுத்துறை. ‘
‘குடும்பத்தில் எத்தனை பேர்? ‘
‘அப்பா அம்மாவுடன், நானும், தங்கச்சியும் ‘
பேசிக்கொண்டே நாங்கள் பதவியா நீர் தேக்கத்திற்கு வந்து விட்டோம்.
பதவியா குளத்தை நோக்கிச்சென்றோம். குளம் ரோட்டில் இருந்து ஒதுங்கியதாக சிலமைல் தூரத்தில் உள்ளே இருந்தது.
பதவியாகுளம் நியாயமான பெரிய குளம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீராகத் தெரிந்தது. குளத்தின் இக்கரைப்பகுதியில் பல பெண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள். பலருக்கு ருக்மனை தெரியுமாதலால் கையைக் காட்டினார்கள்.
‘பதவியா குளத்திற்கு ஒரு தமிழ் பெயர் உண்டு. தெரியுமா?’ என கேட்டான். அவன் கூறியதை செவியில் ஏற்றுக்கொள்ளாது, அந்த குளத்தின் அழகிலே சொக்கினேன். அவன் தொடர்ந்து பேசி என் ரசனையை கலைக்காது மௌனம் காத்தான்.
மீண்டும் பிரதான வழியே ருக்மனின் ஊரான சிறிபுராவுக்கு பயணித்தோம். அது மணற்பாதை. மேடும் பள்ளமுமாக இருந்தது. ருக்மன்; வழிநெடுக பலருக்கு கை காட்டி அவர்களுடைய உறவை அங்கீகரித்த படியே வந்தான்.
பதவியா பகுதி மக்களுக்கும் மதவாச்சியில் உள்ளவர்களுக்கும் பல வேறுபாடுகள் தெரிந்தன. இங்கு குடியேறியவர்கள் பரம்பரை விவசாயிகள் அல்லாதபடியால் இவர்கள் வீடுகள் பெரிதாகவும் வீட்டு வளவுகள் வேலிகளினால் அடைக்கப்பட்டு, எல்லைகள் இடப்பட்டும் இருந்தன. வளவுகளுள் பழமரங்கள் நட்டப்பட்டு இருந்தன.
கடைசியில் சிறிபுரவில் அந்தலையிலிருந்த ஒருவீட்டைக்;காட்டி, அதுதான் எங்கள் வீடு என சொல்லி மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி கூறினான். வீடு சிறிதாக இருந்தாலும் ஓடால் வேயப்பட்டு இருந்தது. முற்றத்தில் உள்ள பலாமரத்தின் கீழ் சைக்கிளை நிறுத்தினேன்.
வீட்டை நோக்கி நடந்தபோது நடுத்தர வயதுடைய ஒருவர் எதிர்ப்பட்டார். அவர் சேட் அணிந்திருக்கவில்லை. நெஞ்சிலே கற்றையாக மயிர் முளைத்திருந்தது.
‘இது என் அப்பா’ எனக்கூறி என்னை அறிமுகப்படுத்தினான்.
உள்ளே சென்று நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்து முற்றத்தில் போட்டு அமரச்செய்தான்.
ருக்மனின் அம்மாவையும் அறிமுகப்படுத்தினான். ருக்மனின் சாயல் அப்படியே தெரிந்தது.
ருக்மனின் அம்மா, ‘ மாத்தையா யாழ்ப்பாணமோ?’ என்று கேட்டார்;.
‘ஆம்’ என்று கூறி நட்பான முறையில் சிரித்தேன்.
நான் எழுந்து ருக்மனின் வீட்டுக்குப்பின் புறமுள்ள பச்சை பசேலென்ற வயலைப் பார்த்து, ‘என்ன சாதி நெல்?’ என்று கேட்டேன்.
‘ஐஆர்; எட்டு’ என்று அப்பா பதில் சொன்னார்.
மதிய வெயிலுக்கு பச்சை பசேலென்ற வயல் கண்ணுக்கு இதமாக இருந்தது.
வயலைப்பார்த்துக்;கொண்டு நின்ற போது எனக்கு பின்னால் யாரோ நிற்பது போல உணர்ந்து திரும்பினேன்.
எனக்கு ஒரு கணம் மூச்சு நின்று விட்டது. என் முன்னால் நின்றவள் நிச்சயம் ஓர் அழகிதான். பேராதனையிலே படித்துக் கொண்டிருந்த காலத்தில் எத்தனை பெண்களைப்பார்த்திருக்கிறேன். ‘சுழட்டலாமோ’என்கிற நினைவினை எழுப்பியவர்களும் இருக்கிறார்கள். கண்டியை அழகிகள் கூடிக் கலையும் நகரம் என்று சொல்லலாம். மலையிலிருந்து வெயில் படாத மேனியர் இறங்குவதாகத் தோன்றும்.. இவள் அவர்கள் எல்லோரிலும் வேறுபட்டவளாக ஒரு கணத்தில் நெஞ்சில் பாந்தமாக பதிந்தாள்.
தட்டில் பெரிய கிளாஸ் நிறைய பச்சைத் தண்ணீரும், தேநீர் கோப்பையும் ஏந்தியபடி ஒரு தேவதையாக நிற்கிறாள்.
அவளுடைய ஒற்றைத் தலைப்பின்னல் முழங்கால் வரை சென்றது. அவளது விழி இமைகள் வண்ணத்திப்பூச்சியின் இறக்கைகளைப் போல் படபடத்தன.
என் நிதானத்தினைக் கைப்பற்றி சுதாகரித்துக் கொண்டு இரண்டு அடி வைத்து முன்னால் சென்றபோது ருக்மனின் குரல் பின்னால் இருந்து கேட்டது. ‘இவள் என் தங்கை சித்ரா’.
என் தடுமாற்றத்தை என் முகத்தில் ருக்மன் பார்த்து விடுவானோ என்ற அச்சத்தில் திரும்பிய போது, ருக்மன்; இன்னும் எனக்குப்பின்னால் நின்றான்.
வலக் கையால் தண்ணீர் கிளாஸைத் தொட்டு விட்டு தேநீர் கப்பை கையில் எடுத்தேன்.
‘சித்ரா என்ன செய்கிறாய்?’
‘பதவியா மகா வித்தியாலயத்தில் ஆசிரியை.’
‘என்ன பாடம் படிப்பிக்கிறாய்?’
‘சயன்ஸ்தான், நான் வேலைக்கு போக தொடங்கி ஆறு மாதம் தான்.
‘ நீ பரவாயில்லை. நான் வேலை செய்யத் தொடங்கி ஆறு நாட்கள் தான்.’
அவள் சிரித்தாள். கடற் சோகிகளை குலுக்கிப்போட்டது மாதிரி அச்சிரிப்பிலே இலேசான ஒலி கலந்திருந்தது.
ருக்மன்; தன் தங்கையிடம்;, ‘என்ன சாப்பாடு வைத்திருக்கிறாய்?. யாழ்ப்பாணம் போக இருந்தவரை போகவிடாமல் இங்கே கூட்டி வந்து இருக்கிறேன்.’
‘உங்கள் எல்லாரையும் சந்தித்ததே சாப்பாடு சாப்பிட்டது போலத்தான் நீங்கள் கவலைப்படவேண்டாம்.’
‘அழகாக பேசுகிறீர்கள்.’ என்றாள் சித்ரா.
அவளுடைய பாராட்டுத்; தேன் துளியாக இனித்தது. ருக்மனின்; மாட்டுப்பட்டியருகே சென்று பார்த்தேன். சிறிய புள்ளி மான் குட்டி ஒன்றும் அங்கே நின்றது.
‘காட்டில் ஆறுமாதங்களுக்கு முன் பிடித்தது. இப்போது மாடுகளுடன் வளருகிறது என்றான் ருக்மன்;. எனக்கு வியப்பாக இருந்தது.
நானும், ருக்மனும் பதவியா குளத்துக்கு சென்று குளித்து விட்டு வந்தோம். சித்ரா உணவு பரிமாறினாள். காட்டுப்பன்றி கறியுடன் ஒரு சம்பலும் பரிமாறப்பட்டது. என்ன சம்பல் என்று புலப்படவில்லை. நிச்சயமாக மாசிக் கருவாட்டு சம்பல் இல்லை. மற்றும் ஒன்று மரக்கறி போலத் தோன்றியது பிறகு அது என்ன என்ற நிதானித்து தெரிந்து கொண்டேன். அது ‘புளோஸ் கறி’ பிஞ்சு பலாக்காய் கறி. அதை கறியாக சமைப்பதற்கு சிங்கள சமையல் சிறந்த முறை. மிகவும் ருசியாக இருந்தது. ‘என்ன சம்பல்’ என்று கேட்டபோது சித்ரா, தாய், தந்தையார் எல்லோரும் சிரித்தனர்.
‘இதுதான் முள்ளம்பன்றியின் சம்பல் என்றான்’ ருக்மன்.
‘எப்படி தயாரிப்பது?
‘முள்ளம்பன்றியின் இறைச்சியை நெருப்பிலே உலர்த்திக் காயவைத்து தயாரிப்பது’ என விளக்கம் அளித்தான்.
‘நான் இவ்வளவு ருசியாக சாப்பிட்டது இல்லை’ என ருக்மனுக்கு கூறினாலும், என் கண்கள் சித்ராவின் கண்களைத் தேடின. அவளுடைய கண்களின் இமைகளாக இரண்டு வண்ணத்திப்பூச்சிகள் ஒட்டப்பட்டிருக்குமோ? என நினைத்தேன். என் கற்பனைகள் இவ்வாறு கட்டறுத்து அலைவதை நினைத்த போது எனக்கு வெட்கமாக இருந்தது.
பதவியாவுக்கு உடனடியாக வண்ணத்திக்குளம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என நினைத்தபடி ருக்மனிடமும், குடும்பத்தினரிடமும் விடை பெற்றேன்.
பதவியாவில் இருந்து வரும்போது சித்ராவின் எண்ணம் என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததால் பலமுறை மோட்டார் சைக்கிளின் வேகம் குறைந்து கூடியது. ஒரு இடத்தில் எருமை மாட்டுடன் மோதி சைக்கிள் நின்றது.
விடுதிக்கு வந்த போது அங்கு எவரும் இல்லை.
தேநீரை அருந்தி விட்டு எந்தநாளும் இல்லாமல் இரவு ஒன்பது மணிக்கே படுக்கைக்கு சென்று விட்டேன். சித்ராவின் சிரிப்பு அறை எங்கும் ஒலித்தது. பெண்ணின் நினைவாக மனம் இப்படி அலை மோதுவது வெட்கமாக இருந்தாலும் இன்பமான சுகம் உடலெங்கும் பரவியது.
கல்லூரியில் படித்த காலத்திலும், பல்கலைக்கழகத்திலும் பார்த்த எவரும் மனதில் இப்படி கோலம் போட்டது இல்லை. இதைத்தான் முதல் காதல் அனுபவம் என்பதோ என மனம் நினைத்தாலும் , காதல் ஒரு நாளில் அதுவும் சடுதியாக மேலும் ஒரு தலைப்பட்சமாக ஏற்படுமா என அறிவு முந்திரிக்கொட்டை போல் விவாதித்தது.
காலை எழுந்து சமையல் அறைப்பக்கம் சென்றபோது காமினி தேநீர் தயாரித்துக் கொண்டு இருந்தான்.
‘எப்படி பதவியா?’
‘நன்றாக இருந்தது. ருக்மன்; வீட்டு சாப்பாடு மிக்க விசேடமானது.’
எனக்கு தேநீரை தயாரித்துத்தந்து விட்டு, ‘நான் அநுராதபுரம் செல்கிறேன் வருகிறீர்களா,’ என்று கேட்டான்.
‘எனது துணிகளை தோய்த்து விட்டு மதியம் செல்வோமா’ எனக் கேட்டேன். அவனும் சம்மதித்தான்.
இருவரும் அநுராதபுரத்தின் பழைய நகரப்பகுதியை சுற்றிப் பார்த்தோம். வெள்ளரசு மரத்தை முதன்முறையாக பார்த்தேன். தங்கவேலியால் சுற்றி அடைத்திருந்தார்கள். அதிகம் மக்கள் இருக்க வில்லை. ஆங்காங்கு பெண்கள் வெள்ளைச்சேலை உடுத்திக்கொண்டு நின்று கொண்டிருந்தது மனதில் அமைதியைக்கொடுத்தது.
‘காமினி உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?’
‘ஏன் இப்படி கேட்கிறீர்கள்.?’
‘பக்தியாக மக்கள் வழிபடும் இடத்திற்கு வந்து நாங்கள் இருவரும் சுற்றுலா பயணிகள் போல் நடந்து கொள்கிறோம். அதனால்தான் கேட்டேன் ‘
‘எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் விகாரைகளிலும் கோவில்களிலும் பிரார்த்தனை செய்வது மட்டும்தான் இறை நம்பிக்கையின் வெளிப்பாடு என நான் நினைக்கவில்லை. ‘
காமினியின் கருத்தை ஆமோதித்தபடி மேலே நடந்து இடிந்த விகாரைகளை அடைந்தோம்.
‘இந்த அடுக்கு மாடி கட்டிடம் புத்த குருமாருக்காக அரசனால் கட்டப்பட்டது. ஆனால், இந்தச் சிறு கட்டடத்தை பாருங்கள். இது தான் இராசாவின் மாளிகை’ என காமினி காட்டினான்.
‘அந்தக்காலத்திலும் புத்த குருமாருக்கு உயர்ந்த இடந் தான் அரசனால் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தத்தில் அந்தக்காலத்திற்கும், இந்தக்காலத்திற்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை ‘ எனக் கூறிச் சிரித்தேன்.
நான் சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட காமினி, ‘மக்களை ஆளும் அரசாங்கமும் சரி, அரசனும் சரி ஒரே தந்திரத்தைத்தான் இரண்டாயிரம் வருடங்களாக கையாண்டு வருகிறார்கள் ‘ என்றான்.
இருவரும் இளநீர் குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிய போது, ஒரு நண்பனிடம் போக வேண்டும் எனக்கூறி வயல் கரை வழியாக சென்றான்.
சில நிமிடநேரத்தின் பின் சிறிய வைக்கோலால் வேய்ந்த வீட்டின் முன்னால் வண்டி நின்றது. இறங்கினோம்.
‘சகோதரயா’, என குரல் கொடுத்தான் காமினி.
‘காமினி சகோதரயா’, என்றபடி இருபத்தைந்து வயதுடைய இளைஞன் சிறுதாடியுடன் வெளியே வந்தான். ஓர் அடையாளச்சின்னம் போன்ற அவன் முகத்தில் குறுந்தாடி மிளிர்ந்தது. அந்த இளைஞன் பண்டாரா என அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டான். அறிமுகத்தின் பின் வீட்டின் உள்ளே சென்றோம்.
வீட்டின் நடுப்பகுதியிலிருந்த சுவரிலே ரோகண விஜயவீரவின் படம் தொங்கியது.
‘மதவாச்சி எப்படி இருக்கு?’ என்று என்னைக் கேட்டான் பண்டார.
‘மிக நல்லா இருக்கு.’
‘யாழ்ப்பாணப்பிரச்சனை எப்படி?’
‘பிரச்சனை என்ற சொல் வந்தாலே பிரச்சனைதானே’,
‘புலி இயக்கத்திற்கு ஆதரவு எப்படி?’
‘நான் இரண்டு நாள் தான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். எனவே விபரமாக சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு ஒரே வழி புலிகள் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதுதான் என நினைக்கிறார்கள்,’ என நான் யதார்த்த நிலையைக் கூறினேன்.
‘புலிகள் நாட்டைப் பிரிக்கக் கேட்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என பண்டாரா கேட்டான்.
‘நாட்டை பிரிக்க முடியும், என்றோ நாட்டை பிரித்தால் தமிழர் பிரச்சனை தீரும் என்றோ நான் நினைக்கவில்லை. ஆனால் பண்டார, இந்த நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வந்த சிங்கள கட்சிகள்தான் இன்றைய அவலங்கள் முழுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும்.’
‘அது உண்மைதான்,’ என்றான் காமினி.
‘ஏன் தமிழர் எங்களுடன் சேர்ந்து அரசாங்கத்தை எதிர்க்கக் கூடாது’, பண்டாரவின் கேள்வி.
‘எங்களுடன் என்றால் யாருடன்,’ விடை தெரிந்தாலும் பண்டாரவின் வாயின் மூலம் கூற வைக்க விரும்பினேன்.
‘மக்கள் விடுதலை முன்னணி- JVP ‘
இது பெரிய கேள்விதான்! கடந்த கால வரலாற்றில் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை. எதிர்காலத்தில்; எப்படியோ எனக்குத் தெரியாது.
அத்துடன் அரசியல் பேசுவதை நிறுத்த விரும்பி, ‘போவோமா’, என்றான் காமினி.
மதவாச்சியை நோக்கி வரும் போது காமினி மன்னிப்புக் கேட்டான்.
‘என்னை மன்னிக்க வேண்டும். நான் பண்டார அரசியல் பேசுவானென்று எதிர் பார்க்க வில்லை.’
‘காமினி, இது நாட்டுப்பிரச்சனை, இதிலிருந்து எவருமே தப்ப முடியாது. நான் மற்றவர் கருத்தை கேட்பதும் என்னுடைய கருத்தை தெரிவிப்பதுந்தானே பேச்சு சுதந்திரம் எனப்படும் அடிப்படை ஜனநாயகம்.’
‘நான் JVP அங்கத்தவன் இல்லை. ஆனால் அவர்கள் கொள்கைகளில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இரண்டு மாதமளவில் ரோகண விஜயவீர சகோதரயா அநுராதபுரத்தில் பொதுக் கூட்டமொன்றிற்கு வருகிறார்.’
‘ நான் சந்திக்க விரும்புகிறேன்.’
‘அதற்கென்ன, பண்டாரதான் மாவட்டச் செயலாளர், நாங்கள் ஒழுங்கு பண்ணுகிறோம்.’
விடுதிக்கு வந்தவுடன் இருவரும் ஒன்றாகவே உணவு அருந்திவிட்டு நித்திரைக்கு எங்களது அறைகளுக்குச் சென்றோம்.
கண்ணை மூடியபடி இருந்து சனி, ஞாயிறு நாட்களிலும் எனக்கு ஏற்பட்ட அநுபவத்தை, நன்றாகப் புல்லு மேய்ந்த மாடு இரை மீட்பது போல மனக்கண்ணில் ஓட விட்டேன்.
சித்ராவின் வட்டமுகமும், நீளவிழிகளும் சமவெளியில்
கரைகளைத்தழுவிக் கொண்டு சத்தமில்லாமல் ஓடும் ஆற்றின் ஓட்டத்தைப் போல் இருந்தது. அநுராதபுரத்தின் இடிந்த கட்டிடங்களும், பண்டாரவின் வேகமான அரசியல் நிலை பற்றிய கேள்விகளும் கற்பாறையில் விழுந்தெழும் அருவியாக தெறித்து மனதில் நீர்த்திரையை உருவாக்கியது.
மறுமொழியொன்றை இடுங்கள்