

கடந்தமுறை இரவில் சென்று பார்க்க முடியாத மலை சார்ந்த இடமான விசிலர் 11 ஆயிரம் நகரம் மக்கள் வசிக்கும் நகரம். ஆனால், குளிர்காலத்தில் இங்கு பத்துமடங்காக மக்கள் பெருகுவார்கள். இரண்டு மலை முகடுகள் நடுவே இருப்பதால் வட அமெரிக்காவிலே பனிச்சறுக்கு விளையாட்டுக்கு முதன்மையானது. 2010 இல் இங்கு குளிர்கால ஒலிம்பிக் நடந்தது
அவுஸ்திரேலியர்கள் ஆதிவாசிகளை அபோரிஜின்ஸ் ( பழங்குடியினர்) என்பார்கள். அமெரிக்காவில் 500 வருடங்கள் முன்பாக ஸ்பானியர்கள் பாவித்த வார்த்தையை பாவித்து அமெரிக்க இந்தியர்கள் என்பார்கள். ஆனால், கனடாவில் மட்டும் அழகாக இவர்களை முதல் தேசற்றவர்கள் என்கிறார்கள் (First nation people) , நாங்கள் சென்றவிடத்தில் விசிலர் ஸ்குவாமிஸ் ( The Squamish Nation ) இனத்தினர்களது கலாச்சார நிலையத்திற்குச் சென்றபோது இவர்களது நடனம், பாடல்களைக் கேட்க முடிந்தது .
இவர்கள் செமன் மீன்களை ஆற்றில் பிடிப்பதற்கும், காட்டை உரிமை கொண்டாடுவதற்கும் அதிகாரத்தைப் பெற்ற சுயாதீனமான குழுவாக தொழிற்படுகிறார்கள். இவர்களது கவுன்சில்கள் மத்திய அரசுடனும் மாகாண அரசுடனும் இணைந்து பல தொழில்களில் ஈடுபடுகின்றன. ஆறுகளில் மீன்பிடிப்பதற்குச் சீடர் (Cedar) என்ற தனி மரத்திலிருந்து குடைந்து படகுகளையும் பட்டையின் உட்பகுதியிலிருந்து குளிரிலிருந்து பாதுகாக்க மிகவும் அழகிய உடைகளையும் தயாரித்தார்கள் .
Marmots மமொட்ஸ் எனப்படும் அணில் போன்றவை தங்களுக்குப் பயம் வந்தால், ஒரு வித விசில்போல சத்தமிடும். அப்படியான அணில் வகையானவை வசிப்பதால் இந்த இடத்திற்கு அந்தப்பெயர் வந்தது .
இங்குள்ள மலை உச்சிகள் பனிபடர்ந்த குளிர்காலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்குப் பிரபலமானவை. கடந்த குளிர்காலத்தில் எங்கும் பனி முழங்காலளவில் இருந்தது. இப்பொழுது கோடைக்காலத்தில் பனியாடையை நீக்கிய தரை பச்சையாகியிருந்தது. முக்கியமான சிகரங்கள் இடையே கொண்டலியர் என்ற வான்கதிரைகளில் சென்று பார்த்துக்கொண்டோம். கொண்டலியர் இல்லாத சிகரங்களில் கரடிகள் இருக்கலாம் என்பதால் அங்கு போவதற்கு ஒருவரைத் தேடி ஜீப்பொன்றையும் பதிவு செய்தோம். எங்களைத் தேடி உயரமான வெள்ளை இளைஞன் வந்து தனது பெயர் ரிச்சர்ட் என்றபோது அவுஸ்திரேலிய தொனியில் இருந்தது எந்த இடம் எனக்கேட்ட போது குயின்சிலாண்ட் என்றான்.
“ ஜீப்பில் ஏறி மலை உச்சிக்கு செல்லவேண்டும் “ என்றோம்.
தொடர்ச்சியாக அவனுடன் உரையாடல் நடந்தது.
“இரண்டு வருடங்களாக விசிலரில் வேலை செய்கிறேன் . நண்பர்களுடன் இருக்கிறேன்”
“கேர்ள் பிரண்ட் இல்லையா ? “
“ இல்லை “ .
“ மீண்டும் எப்பொழுது அவுஸ்திரேலியா? “
“ இன்னமும் அதைப் பற்றி நினைக்கவில்லை. “
ஒருவிதத்தில் அவுஸ்திரேலிய இளைஞர்கள் அதிர்ஸ்டசாலிகள். ஐரோப்பா , வட அமெரிக்கா எங்கும் வேலை தேடிப் போகமுடியும். இளமையில் உலகத்தையும் , மனிதர்களையும் சந்தித்து வருவதால் பலரதும் மனமும் பரவலாகிப் பண்படுகிறது. எந்தச் சந்தர்ப்பங்களையும் சகித்துக்கொள்ளும் இயல்பு கிடைக்கிறது.
பல இடங்களில் வாகனத்தில் சென்று இறங்கியபோது அவனே எங்களது போட்டோ கிராபர். ஐந்து நிமிடத்திற்கு ஒருதடவை அவனுக்கு, அவனது அலுவலகத்திலிருந்து வானொலி அழைப்பு வந்தது.
“ என்ன…? “ என்றுகேட்டபோது, “ ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பாதுகாப்பினை உறுதிப்படுத்த அழைக்கிறார்கள். “ என்றான்.
பாதுகாப்பு – போக்குவரத்து விடயத்தில் கனடா முன்னுதாரணமாகத் தெரிகிறது.
அவுஸ்திரேலியாவிலிருந்து போகும் எனக்குக் கனடாவின் நில அமைப்பும் அங்குள்ள மிருகங்களுமே புதியதாக இருக்கும். அவுஸ்திரேலியா போன்று கனடாவிலும் குளிர்பிரதேசத்திற்குப் பிரத்தியேகமான மிருகங்கள் உள்ளன.அவற்றைப் பார்ப்பதற்கு ஆவலாக இருந்தேன்.


அணில்களைப்போன்று தாவரபட்சணியான இவற்றிலிருந்து ரேபிஸ் கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அறிந்து கொண்டேன்.
மலையடிவாரத்தில் கடைகள், தங்கும் விடுதிகள் எல்லாம் உள்ளன. இங்கே 2010 இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கின் அடையாளங்களாக ஐந்து வளையங்கள் உள்ளன.
மலை உச்சிக்குச் செல்லும் கொண்டலாவில் பயணிக்கும்போது முழு நகரமும் தெரியும் .
கனடாவில் மற்றைய இடங்களிலும் இயற்கை வளங்கள் அதிகமாகப் பாதுகாக்கப்படுகின்றன .


பைன் மரங்கள் வழியெங்கும் தொடர்ச்சியாகப் பச்சையாக காட்சி தருகின்றன. சிறுவயதில் படித்த ஊசியிலைக்காடுகள் நினைவுக்கு வந்தன. பச்சை மரங்களிடையே சிவப்பு பைன் மரங்கள் காணப்படுவது அழகான காட்சி. வழிகாட்டியின் கூற்றுப்படி அவை பைன் வண்டுகளால் அழிக்கப்பட்டுப் பட்டுப் போனவை.
“ நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ. வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ.”
பாரதியின் கவிதை ஞாபகத்துக்கு வந்தது.
மறுமொழியொன்றை இடுங்கள்