Safeer Hafiz
நொயல் நடேசனின் எழுத்துகள் எதையும் இதுவரை நான் படித்ததில்லை. அவர் கடைசியாக எழுதிய நாவலே நான் படித்த அவரின் முதலாவது நாவல்.
கானல் தேசம். படித்து முடிந்த பின் விமர்சனமொன்றை எழுத வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் தொடங்கினேன். ஆனால், இப்படியொரு நாவலுக்கு விமர்சனம் எழுத எனக்கு இன்னும் இலக்கிய முதிர்ச்சி தேவை.
அதனால், விமர்சனமாக அல்லாமல், நாவலைப் படித்த எனது அனுபவங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதே பொருத்தம்.
நானூறு பக்க நாவலொன்றை இரண்டே நாட்களில் படித்து முடித்த சாதனையை நான் நிகழ்த்தக் காரணமாக இருந்தது இந்த நாவலின் பிரதான கதைக்கருவா, சுவாரசியமான கதை நகர்வா, இலக்கியத் தரம் சற்றும் குறையாத எளிய மொழிநடையா, எனது அரசியல் சிந்தனையுடன் முற்றிலும் ஒத்துப்போன கருத்தியலா, நான் அறிய ஆவலாயிருந்த பலநூறு தகவல்களின் உள்ளடக்கமா? அல்லது இவை எல்லாமுமா?
நாளின் அதிக நேரத்தைக் கொள்ளையிடும் எனது லெப்டொப், அடிக்கடி தொல்லைபண்ணும் ஸ்மார்ட் போன், மதிய நேரத் தூக்கம், பொழுதுபோக்கு அரட்டை, ரிவி, ரேடியோ என எல்லாவற்றையும் இந்த இரண்டு நாட்களில் தைரியமாகத் தவிர்த்து விடக் கூடிய வல்லமையை இந்த நாவலைத் தவிர வேறெதுவும் அண்மைய வருடங்களில் எனக்கு வழங்கியிருக்கவில்லை.
முதல் அத்தியாயத்திலிருந்தே இறுக்கமான பிணைப்பொன்று நாவலுடன் ஏற்பட்டு விட்டது. அடுத்த பகுதியைப் படித்து விட வேண்டும் என்ற தவிப்பு, நாவலின் கடைசிப் பக்கம் வரைக்கும் தடைப்படவே இல்லை.
ஒரு மாபெரும் வரலாறை முழுமையாகப் படித்து முடித்த ஆன்ம திருப்தி, நீண்ட காலமாக மன ஆழத்தில் தேங்கிக் கிடந்த புதிர்களுக்கான பதில்களைக் கண்டு விட்ட நிறைவு, அந்த பதில்களில் உருவான திடுக்கம், ஆச்சரியம், அனுதாபம், ஆத்திரம்.
வியப்பு மேலிடும் போதெல்லாம் பின்னட்டையைப் புரட்டி நூலாசிரியரின் படத்தை பிரமிப்புடன் அடிக்கடி பார்த்துக் கொண்டதால்தான், படித்து முடிக்க இரண்டு நாட்களானதோ. என்னவோர் அற்புதமான எழுத்தோட்டம், என்னவோர் அழுத்தமான கதைக்கோர்வை, என்னவோர் ஆழமான தேடல், ஒரு சாதாரண எழுத்தாளனால் இது சாத்தியமேயில்லை.
நான் பெரும் அதிர்ஷ்டசாலிதான். எதுவும் செலவின்றி எவ்வளவு அனுபவங்கள்.
ராஜஸ்தான் தார்ப்பாலைவனத்தில் கால்கள் புதையப்புதைய நடந்தேன். அவுஸ்திரேலியத் தெருக்களில் வெள்ளை அழகியுடன் சுற்றித் திரிந்தேன். தாய், தகப்பனை, பாட்டியை, பிறந்த ஊரை இழந்து அகதியாய் இடம்பெயர்ந்தேன். யாழ்ப்பாணத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டேன். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளில் போராட்டத்தில் குதித்தும், இழப்புகளை எதிர்கொண்டும் உருக்குலைந்தேன். தற்கொடைப் போராளியானேன். துரோகிகளைக் கொன்று, துரோகியாய் கொல்லப்பட்டு தமிழீழக் கனவில் மிதந்தேன். துணுக்காய் வதை முகாமில் உயிர் மட்டும் எஞ்சுமளவு சித்திரவதைகளில் நொடிந்தேன். கண்டி தலதா மாளிகை குண்டுவெடிப்பில் அகப்பட்டு சுக்குநூறாகினேன். ஆயுதக் கடத்தல், பணமோசடி, சர்வதேச தூண்டுதல்கள், கழுத்தறுப்புகள் என உலகெங்கும் சுற்றி வந்தேன். விடுதலைப் புலியாக, இராணுவ வீரனாக, இரகசிய உளவாளியாகப் பரிமாணங்களெடுத்தேன். காதல், காமம், நட்பு, துரோகம், சண்டை, சோகம் என எல்லா வாழ்க்கைக் கோலங்களையும் கண்ணெதிரே சுய அனுபவமாய்க் கண்டு உழன்றேன். உலகின் பல இனங்கள், மதங்கள், கலாசாரங்களைத் தரிசிக்கும் நெடிய பயணத்தில் தொய்வின்றி நடந்தேன்.
கானல் தேசம் ஓர் அற்புதமான வாழ்க்கை அனுபவம். கதைக்கும் வாசகனுக்கும் இடையிலான இரும்புத் திரைகளைக் கிழித்தெறிந்து விட்டது. மறக்க முடியாத வாசிப்பனுபவத்தை வழங்கிய நொயல் நடேசன் அவர்களுக்கும், சிபாரிசு செய்து நாவலை வழங்கிய எஸ்.எல்.எம். ஹனீபா அவர்களுக்கும் மனங்கனிந்த நன்றிகள்.
கூடவே, இரண்டு நாட்களில் நாவலைப் படித்து முடிப்பதை சாத்தியமாக்க விடுமுறை பெற்றுத் தந்த கொரோனாவுக்கும் ஒரு நன்றி.
காலச்சுவடு வெளியீடு
மறுமொழியொன்றை இடுங்கள்