ஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவில் சில நாட்கள்-2
நடேசன்
கீற்றோவிற்கு செல்லும் எவரும் பார்ப்பதற்குத் தவறாத இடம் பூமத்திய ரேகை என்னும் கற்பனையான கோடாக நினைக்கும் புவியின் மத்திய பகுதி.அதனாலேயே ஸ்பானிய மொழியில் ஈகுவடோர் எனப் பெயர் வந்தது. பூமத்திய ரேகை கீற்றேவிற்கு வடக்கே செல்கிறது. கீற்றோ மத்திய நகரம் கோட்டிற்கு தெற்கேயுள்ளது.
200 வருடங்கள் முன்பாக பிரான்சின் புவியியல் விஞ்ஞானிகளது வருகையை கவுரவிக்கும் முகமாக பூமத்திய ரேகை வரையப்பட்டு, அங்கு கண்காட்சியகம் , பூங்கா என்பன கட்டப்பட்டன. அது உண்மையான ரேகையில் இருந்து 300 மீட்டார்கள் விலகியதாக கருதப்படுகிறது தற்போது ஜி பி எஸ் துணையுடன் புதிதான கோடு சரியான இடத்தில் உள்ளது. இரண்டு இடமும் பிரயாணிகள் செல்லும் பகுதியாகிவிட்டது.
புதிதான இடத்தை பார்க்க காரில் சென்ற போது அங்கு அப்பகுதியில் ஸ்பானியர் வருகைக்கு முன்பாக வசித்த ஆதிமக்களின் சிறிய கண்காட்சியகம் உள்ளது.அங்கு அவர்களது கலாச்சாரம், அவர்களது வாழ்க்கை முறை- எப்படி வாயால் ஊதி வேட்டையாடுகிறார்கள் என்பதையும்,அத்துடன் இறந்தவர்களைப் புதைத்த குழிகள் முதலானவற்றைப் பார்க்க முடிந்தது. அவர்களது சங்கீதம் ,நடனம் என்பவற்றையும் பார்ப்பவர்களுக்காக ஒழுங்கு பண்ணியிருந்தார்கள்.
இங்கு என்னைக் கவர்ந்தது ஒரு மீனே . அதை முன்பு கேள்விப்பட்டிருந்தாலும் பார்க்கக்கூடியதாகப் போத்தலில் அடைத்து வைத்திருந்தார்கள். ஆனால் என்ன?
கருவாடாகி இருந்தது.
இந்த மூத்திர மீன் (Pee fish) யாராவது ஆற்றுக்குள் சலம் விட்டால் அந்த சலத்தில் ஊடாக பாய்ந்து சென்று அவர்களது ஆண்குறியை அடைந்துவிடும். இதற்காக ஆண்கள் ஆண்குறியை மேல் வளைத்து இடுப்பில் எடுத்துக் கட்டியிருப்பார்கள்.
அப்போது யோசித்தேன் பெண்களுக்கு எப்படி? வழிகாட்டியிடம் கேட்க நினைத்து விட்டு, அவர்கள் இப்படியாக ஆற்றுக்குள் சலம் விடமாட்டார்கள் என நானே முடிவு செய்தேன்.
இந்த புவியின் ரேகையின் புவியீர்ப்பைப் பாவித்து ஆணியின் முனையில் ஒரு முட்டையை வைத்தார்கள். தண்ணீரை ஒரு புனலுக்குள் வைத்து இலையுடன் ஊற்றும்போது கையின் வடக்கே கடிகாரத்தின் எதிர்த் திசையிலும் தெற்கே வைத்து ஊற்றியபோது கடிகாரத்தின் திசையிலும் அந்த இலை சுழன்று நீரைக் காட்டியது.
அடுத்த நாள் காலை மிகக் குளிராக இருந்தது . ஆனால் வெயிலும் அடித்தது . சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் இந்த கீற்றோவின் மலை உச்சிக்குக் கொண்டலா எனப்படும் மலைகளுடாக செல்லும் ஒருவித கோபிள்காரில் செல்ல விரும்பினேன். அந்த மலை உச்சி 4100மீட்டர்கள் (13, 450 feet) கண்ணாடியாலான அந்தக் காரில் மலை மடிப்புகளின் மேலாக உச்சிக்குச் செல்ல 20 நிமிடங்கள் எடுத்தது.
இறங்கியதும் தனியாக ஒரு வழியில் நடக்க ஆரம்பித்தேன். அப்பொழுது, உடலில் கடுமையான காய்ச்சல் வந்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற உணர்வு வந்தது. கால்கள் அழுத்தமாக புவியில் படாது நடப்பதுபோல் இருந்தது.
விமானத்தில் வந்தபோது யாரிடமோ இருந்து வைரஸ் தொற்றியிருக்கிறது .
சரியான நேரத்தில் வந்து முடிக்கப்போகிறது.
தனியாக வந்தது எனது தவறு .
நீரிழிவு உபாதைக்கான டயபட்டீஸ் மாத்திரையைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரவில்லை .
ஸ்பானிய மொழியில் எப்படிப் பேசி மருந்தெடுப்பது என யோசித்தவாறு நடந்தபடி அரைக் கிலோமீட்டர் தூரம் வரையில் சென்று, பனிப்புகையில் மறைந்து கண்ணாம்பூச்சி காட்டிய காட்சிகளை ரசித்தேன். அங்குள்ள மரங்கள் செடிகள் புதிதானவை. மக்கள் வசிக்காத இடங்கள்.மேலும் நடந்தபோது உடல் பலம் குறைந்த போலத் தெரிந்தது. அப்பொழுதுதான் நினைத்தேன், இங்கு மனிதருக்குத் தேவையான ஒட்சிசன் இல்லை அதனால் தான் எனது உடலும் அத்தருணத்தில் பலவீனமடைந்திருக்கிறது. மேலும் தனியே நடப்பது புத்தியல்ல என்ற முடிவோடு, திரும்பிப் பார்த்தபோது ஒரு சிறிய தேவாலயம் தெரிந்தது.
எவரும் வசிக்காத இந்த மலை உச்சியில் எதற்காகத் தேவாலயம்..? என்ற கேள்வியுடன் திரும்பி நடந்தபோது கணவனும் மனைவியுமாக ஆர்ஜின்ரீனாவை சேர்ந்த இருவர் என்னுடன் சேர்ந்து கொண்டனர் .
“ உங்களுக்கும் ஒட்சிசன் இல்லாதது தெரிகிறதா ? “ எனக்கேட்டபோது, அவர்கள் தலையாட்டிவிட்டு தேவாலயத்தைப் பார்த்து நெற்றியிலும் மார்பிலும் தொட்டுக் கொண்டு சிரித்தனர். அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு ஊன்று கோல். அவர்களோடு சேர்ந்து நடந்து வந்து மீண்டும் கேபிள் காரில் ஏறி கீழ் நோக்கிவந்தேன்.
கேபிள் காரில் பிரான்ஸ் தம்பதிகளைச் சந்தித்தேன்.
ஆண் சிரித்தபடி “ இங்குள்ளவர்கள் பிரான்ஸியர்போல் அல்ல, உல்லாசப்பிரயாணிகளை வரவேற்கும் நாடு “ என்றார்
“அப்படி யா? “ என்று சொன்ன நான் “அந்த உயரத்தில் சுவாசிக்க கஷ்டப்பட்டேன்.” “என்றேன்
“ எனக்குப் பிரச்சினையாகவில்லை. எனது மனைவிக்குத்தான் தலையிடி “ என்றார்.
அப்போது அவரது மனைவியைப் பார்த்தேன்.
முதல்நாள் நட்டு இன்று வெய்யிலில் வதங்கிய செடிபோல் தலையைக் தொங்கவிட்டபடி இருந்தார்.
பத்து நிமிடங்கள் கீழ்நோக்கி பிரயாணித்தபோது எனது உடல் எனக்கு மீண்டும் சொந்தமாகிவிட்டதைப் போன்ற உணர்வு வந்தது.
நாம் எமக்கு இலவசமாகக் கிடைக்கும் பிராணவாயுவைக் கணக்கெடுப்பதில்லை. ஆனால், இப்படியான இடங்களிற்குச் செல்லும்போதுதான் அதன் தேவையை உணரக்கூடியதாக இருக்கிறது.
இந்தக் கட்டுரையை எழுதும்போது இந்தியத்தலைநகரமான டெல்லியில் பிராணவாயுவைச் சுவாசிக்க கஃபேக்கள் திறந்திருப்பதாக வெளியான செய்தியைப் படித்தேன்.
—000—-
மறுமொழியொன்றை இடுங்கள்