நூல் அறிமுகம் -நடேசனின் “எக்ஸைல்

படித்தோம் சொல்கின்றோம் :

நடேசனின் “எக்ஸைல்” குறித்து ஒரு பார்வை

சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்

— முருகபூபதி—–

” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்”

இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன.

அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை – இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் – பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன. நீடித்த உள்நாட்டுப்போரின் பெறுபேறாகவும் இவற்றை ஏற்கலாம்!

அவ்வாறு எழுதியவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் நடேசன். இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.

இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் சப்த தீவுகளில் ஒன்றென அழைக்கப்பட்ட எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர்.

அவர் தனது வாழ்நாளில் முதல் தடவையாக துர்மரணங்களை பார்த்து திகைத்துப்போனதும் அவ்வேளையில்தான். தமிழராய்ச்சி கண்காட்சி ஊர்தியால் மின்சார வயர் அறுந்துவிழுந்து அதன் தாக்கத்தினால் துடிதுடித்து இறந்தவர்களைப்பார்த்த திகைத்துப்போன ஒரு நேரடி சாட்சிதான் நடேசன்.

இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்.

” எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது.”

பாடசாலைக்கு கல்லெறியத்தொடங்கிய மாணவர்கள் எவ்வாறு இ.போ. ச. பஸ்ஸிற்கு கல்லெறிந்து பிரச்சினையை மேலும் கூர்மையாக்கினார்கள் என்பதிலிருந்து தமிழ்த்தலைவர்கள் தொடங்கிய சிங்கள ஶ்ரீ கார் இலக்கத்தகடுகளுக்கு தார் பூசும் இயக்கம், மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நினைவுபடுத்தியவாறு, தமிழகத்திற்கு தப்பிச்செல்லும் இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒரு இளம் குடும்பஸ்தன், எதிர்நோக்கும் சம்பவங்கள், அவலங்கள், சந்திக்கும் நபர்கள், அவர்களின் குணவியல்புகள் முதலான பல்வேறு தகவல்களை இந்த எக்ஸைல் பதிவுசெய்துள்ளது.

நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது.

இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணை பிரித்தாலும் சினிமாவும், கடத்தல் சாமான்களும் எவ்வாறு நிரந்தரமாக இணைத்துவைத்தன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக ஒரு கதை சொல்லியாக பகிர்ந்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சியை அக்காலப்பகுதியில் இராமானுஜம் கப்பலில் பயணித்தவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் புன்னகையுடன் நகர்ந்து செல்ல முடியும்.

இராமேஸ்வரத்தில் இறங்கியதும் ரயில் ஏறி சென்னை செல்லாமல் அந்த ஊரைச்சுற்றிப்பார்க்கும் காட்சி ஒரு உதாரணம். காவி உடுத்த சந்நியாசி கோலத்தில் ஒருவர், இவர் சிலோன்காரன் என்பதை தெரிந்துகொண்டு அட்டையாக ஒட்டிக்கொள்கிறார். ஒரு கமண்டலத்தில் கிணற்று நீரை வைத்துக்கொண்டு கங்கா தீர்த்தம் என்று சொல்லிச்சொல்லியே இவரை வலம் வருகிறார். இவரும் அந்த நபரின் ஆக்கினை பொறுக்கமுடியாமல் அந்த ” தீர்த்தத்தை” பருகுகிறார். இவரிடமிருந்து அதற்கு பணம் கறப்பதுதான் அந்த நபரின் நோக்கம். அந்தக்காட்சியை இவ்வாறு சித்திரிக்கின்றார்: “பருத்தித்துணியில் பட்ட மசாலா குழம்பின் மஞ்சள் கறையாக தீர்த்தம் தந்தவர் ஒட்டிக்கொண்டார்”

நடேசனுடைய ஏழுவயது பருவத்தில் இவரது வீட்டுக்கு வாக்குக்கேட்டுவருகிறார் தமிழரசுக்கட்சி தலைவர் தந்தை செல்வநாயகம். அவரிடம், ” ஏனைய்யா இவ்வளவு தூரம் படகேறி வந்தீர்கள். ஒரு கங்குமட்டையை தமிழரசுக்கட்சி என்று நிறுத்தினாலும் ஊர்ச்சனம் அதற்கு புள்ளிடி போடும்” என்கிறார் நடேசனின் தாய் மாமனார் நமசிவாயம்.

இதிலிருக்கும் அங்கதம் இற்றைவரையில் தொடருகிறது. அந்த பெடறல் கட்சியை எதிர்த்து நிற்கும் தமிழ்க்காங்கிரஸ் வேட்பாளருக்கான கூட்டம், அக்காலத்தில் அந்தக்கிராமத்தில் மின்சாரம் இல்லாதமையினால் ஒரு பெட்ரோ மக்ஸ் வெளிச்சத்தில் நடக்கிறது. வந்தவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவு. அந்த பெட்ரோ மக்ஸ்ஸிற்கு கல்லெறிந்து குழப்புகிறது ஒரு இளம் தலைமுறை.

அன்று நிகழ்ந்த கல்லெறிதல்தான், காலப்போக்கில் துப்பாக்கி வேட்டுக்கள் என்று சொல்லவரும் நடேசன், “புடையன் பாம்பு அக்காலத்தில் குட்டியாக இருந்தது” எனச்சொல்லிவிட்டு அந்த அங்கத்தை கடந்து செல்கிறார்.

இவ்வாறு ஒவ்வொரு அங்கத்திலும் பல துல்லியமான காட்சிகள் வருகின்றன.

மதவாச்சியா, அநுராதபுரம் பிரதேசங்களில் மிருக வைத்திய பணிநிமித்தம் வாழ்ந்த காலத்தில் அமைச்சர் தொண்டமான் உட்பட பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பழகியிருப்பவர் நடேசன். அவர்களுடன் உறவாடிய பாணியிலேயே சென்னையில் கல்வி அமைச்சர் அரங்கநாயகத்துடனும் உரையாடும்போது, தமிழக திராவிட கலாசாரத்தின் பிரகாரம் வணக்கம் சொல்லாதமையினால், அமைச்சரின் அடியாளிடம் வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.

இரண்டு நாடுகளின் அரசியல்வாதிகளிடத்திலும் அடியாள்களிடத்திலும் நிலவும் வேறுபாடு இங்கு அம்பலமாகின்றது.

அத்துடன் கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் ஆசான்களை சேர் என விளித்துப்பழகியிருக்கும் இவரை சென்னையில் ஒரு ஓட்டோ சாரதி, ” சார், சார் ” என்று அழைத்தது திகைப்பையூட்டுகிறது.

இந்தக்காட்சிகளை வாசிப்பில் தரிசிக்கும் வாசகர்களும் குறிப்பாக இலங்கையர்கள் தங்கள் கடந்த கால நினைவுகளுக்குள் மூழ்கிவிடுவார்கள்.

இலங்கையில் இனமுறுகள் தோன்றிய காலத்தில் , தமிழர் தரப்பு நியாயங்களை ஏற்கும் நடேசனுக்கு, , மதவாச்சியில் முன்னர் பணியாற்றும்போது தன்மீதே ஒரு சந்தேகம் வருகிறது. ” எதிர்கால சரித்திரத்தில் பிழையான இடத்தில் நின்றுவிடுவேனோ” என்ற பயம் இவருக்கு வருகிறது.

இந்த இரண்டக வாழ்விலிருந்து விடைபெற்று தமிழகம் சென்று, மூன்று வருடங்களும் இரண்டு மாதங்களும் செலவிட்டவர், அக்காலப்பகுதியில் இணைந்திருந்த தமிழர் மருத்துவ நிலையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் மேற்கொண்ட பணிகளையும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் மத்தியில் குறைந்த பட்ச கருத்தொற்றுமையையாவது ஏற்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் ஆவணமாகவே பதிவுசெய்கிறார்.

இலங்கை – தமிழக, தமிழ் அரசியல் தலைவர்கள் ஆயுத இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் தொண்டில் ஆர்வம் காண்பித்த மருத்துவர்கள், ஆயுதத் தரகர்கள், இந்திய மத்திய உளவுப்பிரிவைச்சேர்ந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்கள் என பலரும் இந்த எக்ஸைலில் வருகிறார்கள்.

ழுத்தாளர் காவலூர் ஜெகநாதன், வாழ்நாள் பூராவும் துறவியாகவே வாழ்ந்து ஈழத்தமிழர்களின் உரிமைக்கும் நலன்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்த டேவிட் அய்யா பற்றியும், வெலிக்கடை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள், மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பியவர்கள், இயக்கங்களுக்குள் நிகழ்ந்த துரோகங்கள், காட்டிக்கொடுப்புகள் பற்றியெல்லாம் விவரிக்கிறது இந்த நூல்.

ஈழப்போராட்டத்திற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர் சிங்கப்பூரில் கைதாகி மரணதண்டனைக் குற்றவாளியாகி, இறுதிநேரத்தில் அங்கு நேர்ந்த அரசியல் மாற்றத்தினால் தப்பிவந்து சென்னையில் அடைக்கலமாகின்றார்.

அவருடைய அடுத்த எதிர்காலத்திட்டம் என்ன தெரியுமா…? சென்னையில் ஒரு தோசைக்கடை வைத்து பிழைப்பது! இந்தக்காட்சி ஈழப்போராட்டத்தின் மொத்த வடிவத்தையே கேள்விக்குட்படுத்துகிறது. நல்லவேளை புலம்பெயர்ந்து சென்று, கடன் அட்டை மோசடியில் அவர் ஈடுபடவிரும்பவில்லை.

தமிழகத்தின் சாராயத்தையும் இலங்கை தென்பகுதி வடிசாரயத்தையும் ஒப்பிடும் காட்சிகளும் இந்த நூலில் வருகின்றன.

ஈழப்போராட்டத்தில் ஆயுதக்கலாசாரத்திற்கு பலியாகாமல், ஆயுதங்களை நேசித்தவர்களுடனெல்லாம் நெருங்கிப்பழகியிருக்கும் நடேசன், தனது இந்துக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழக வாழ்க்கை, வட மத்திய மாகாணத்தில் விலங்கு மருத்துவ பணி, தென்னிந்தியாவில் மருத்துவ நிலையத்தில் மேற்கொண்ட தன்னார்வத்தொண்டு, போரில் கால் ஊனமுற்றவர்களுக்காக ஜெய்ப்பூர் வரையும் சென்ற அனுபவங்கள் என்பனவற்றை விரிவாக நினைவுக்குறிப்புகளாக பதிவுசெய்துள்ளார்.

இந்த அனுபவங்களின் திரட்சியாக இவர் மெல்பன் வந்து இறங்கியதும் நடக்கும் சந்திப்பில், தனது கைக்குட்டையை எடுத்துக்காண்பித்து, “போரில் துன்புற்ற மக்களின் கண்ணீரைத்துடைப்பதற்கு இனியாவது பயன்படுங்கள்” என்ற வேண்டுகோளை விடுக்கின்றார்.

இந்த வார்த்தைக்குள்தான் சுயவிமர்சனம் மறைபொருளாகியிருக்கிறது.

போர் முடிவடைந்த பின்னர் வெளிவந்த பல நூல்கள், அதனை நியாயப்படுத்தியும் கேள்விக்குட்படுத்தியும் பூகோள அரசியலை முதன்மைப்படுத்தியும், தவறவிட்ட இராஜதந்திரங்களை சித்திரித்தும் வெளியாகியிருக்கும் பின்னணியில், எந்தப்பக்கமும் சாராத ஒரு மனிதநேய வாதியின் தார்மீகக்குரலாக நடேசனின் எக்ஸைல் ஒலிக்கிறது.

நனவிடை தோய்தல் உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் எமது வாசகர்களுக்கு புதிய வரவு. அவர்கள் இதுவரையில் பார்க்கத்தவறிய பக்கங்களை இந்த நூலில் தரிசிக்கலாம். எக்ஸைல் – இலங்கையில் மகிழ் பதிப்பகத்தின் புதிய வெளியீடு. நடேசனுக்கு எமது வாழ்த்துக்கள்.

“நூல் அறிமுகம் -நடேசனின் “எக்ஸைல்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Because of Sinhala police shooting to Electric wires, 9 Tamils died during WTRC /Jaffna in 1974! This is the open truth!

  2. சுய விமர்சனம் என்பது நிச்சயம் தேவையான ஒன்றுதான் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அந்த சுய விமர்சனம் ஊடாக எமது அபிலாசைகளை நிறைவேற்ற சீரிய கொள்கைகளை முன்னெடுக்கிறோமா அல்லது எம்மை தொலைத்து விட்டு சரணகதி அரசியல் செய்து எல்லாவற்றையும் இழக்கப்போகிறோமா என்பது ஆதாரமான கேள்வி. நான் படித்தவரையில் நடேசனின் வழி என்பது பின்னையது.
    நடேசன் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று உண்டு. அது என்னவெனில் இன்னும் இருபது தொடக்கம் முப்பது ஆண்டுகளில் பின்வரும் மாற்றங்கள் நிகழும். வவுனியா மற்றும் முல்லைத்தீவில் சிங்களம் பெரும்பான்மையான இருக்கும்/ மன்னார் மற்றும் கிழக்கு மாகாணத்தில் சோனகர் பெரும்பாண்மை ஆக இருப்பார்கள்/ முழு நாட்டிலும் சிங்களமே நிர்வாக மொழியாக இருக்கும் (திருகோணமலை அரச அலுவலகங்கள் போல )/தமிழர்களின் தனித்துவமான கலை மற்றும் வழிபாடு பெரும்பாலும் மறைந்து விட்டு இருக்கும் / ஈழ தமிழர்கள் எண்ணிக்கையில் பறங்கியர் போல அதி சிறுபான்மையினராக ஆகிருப்பார்கள்/ அவர்களின் அரசியல் பலம் ஒழிக்கப்பட்டு இருக்கும். அந்த காலம் வரும் போது நடேசனும் ஏனைய முருக பூபதி போன்றவர்களும் தங்கள் தாய் நாடு திரும்பி அந்த விருப்பமான சூழலில் குடியேறி வாழ்க்கையை தொடரலாம் என்பதே அந்த மகிழ்ச்சியான சேதி.

    ஆனால் ஒரு துக்கமான செய்தியும் உண்டு. சிங்களத்தின் அடுத்த குறி நிச்சயம் சோனகராக இருப்பார்கள் /சோனகரால் தொடங்கப்படும் கிளர்ச்சி சிங்கள கட்டமைப்பை நடுங்க செய்யும்/ மத்திய கிழங்குடன் வலுவான தொடர்பில் உள்ள சோனகருக்கு சவூதி , பாகிஸ்தான் உட்பட முழு முஸ்லீம் நாடுகளும் உதவும், அங்கீகரிக்கும்/ கடும் மத ஒற்றுமை கொண்ட சோனகரிடம் சிங்கள அரசு பாவிக்கும் “கருணா மூலம் பிரித்து அழிக்கும்’ தந்திரம் செல்லவே செல்லாது/ பாகிஸ்தானின் வலுவான ஆதரவு பெற்ற இலங்கை சோனகரை இந்திய எதிரிகளால் விழுத்தவே முடியாது/சாதிவாதம், பிரதேசவாதம் பேசி முஸ்லீம் கிளர்ச்சி இயக்கங்களை பிளவுபடுத்த முடியாது/ சோனகரிடம் “நடேசன்களோ, தேவானந்தாவோ” இல்லை எனவே அவர்களுக்கு எப்போதும் குன்றாத மக்களாதரவு இருக்கும்/ இலங்கை அரசு முற்றுகை போரை நடத்தினால் உலக இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் கொழும்பு கண்டியை சுடுகாடு ஆக்கிவிடும் எந்த கொம்பனாலும் அதை தடுக்க முடியாது/ இந்த உண்மை இப்போது மெல்ல மெல்ல சிங்களத்து புரிந்து வருகிறது/ முழு கிழக்கு மாகாணமும் இணைத்து சுதந்திர இஸ்லாமிய தேசம் உருவாக்கிய தீரும்/ உடனடியாக பெரும்பாலான முஸ்லீம் நாடுகள் அதை அங்கீகரிக்கும்/ ஆகவே இலங்கை துண்டாடப்படுவது விதியின் விளைவு. அதை தடுக்க முடியாது. அப்போது தமிழ் தேசியத்துக்கு எதிராக இலங்கையின் இறையாண்மையை தூக்கி பிடித்த ஐயா நடேசன்/ஐயா முருக poopathy என்ன செய்வார்கள் . அவர்கள் படப்போகும் வேதனையை நினைத்து என் மனம் உருகுகிறது. அவர்களின் மனதை கடவுள் அப்போது அமைதி படுத்த வேண்டும் என்று இப்போதே பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: