சிறிபதி பத்மநாதன் நினைவுகள்

அவரது காதருகே, ” அங்கிள், அந்தக் காலத்தில் யாழ்ப்பாண அரசன் சங்கிலியன் தோப்பில் இருந்ததுபோல இருக்கிறீர்கள். அதற்கு உங்கள் மருமகனுக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என்றேன். அவருக்கு நான் சொன்னது கேட்டிருக்குமா என்று ஒரு சந்தேகம் . அவரது புலன்களில் காது மட்டும் மந்தமாக இருந்தது.

வழமையில் அவர் திரும்பி முகத்தைப் பார்ப்பார். பின்பு அடித்தொண்டையில் என்ன? எனக் கேட்பார். மவுனமாக முகத்தைப் பார்ப்பார். அன்று நான் சொல்லியது புரிந்து விட்டது .

மெதுவான சிரிப்புடன் எனது கையைப்பிடித்தபடி எனது காதருகில் வாயை வைத்து, “உம்முடைய நண்பன், அதுதான் ”

அவரிடம் இருந்த நகைச்சுவை உணர்வை நான் அறிவேன். யாழ்ப்பாணத்தில் கடைகளில் வரி வசூலிக்கச் சென்ற போது இரண்டு கணக்குப் புத்தகங்களை வைத்துக் கடை முதலாளிகள் தன்னை ஏமாற்ற முயற்சித்ததையும் அதைத் தான் முறியடித்ததையும் பற்றி பல கதைகளை எனக்குச் சொல்லியிருக்கிறார்.

அவரது பேச்சைக் கேட்கும்போது, 92 வயதில் இவ்வளவு தெளிவாக பேசியும் சிந்திக்கவும் முடிகிறதே என பொறாமை தலைதூக்கும் வகையில் யோசிப்பேன். என்னிலும் முப்பது வயது அதிகமானவர். அதாவது எனக்கு முந்திய தலைமுறை. அவரிடம் பழைய யாழ்ப்பாணம் பற்றிய பல விடயங்கள் பொக்கிசமாக இருந்தன.

எங்கள் சமூகத்தில் தகப்பனும் மகனும் உரையாடும் பண்பில்லை. காரணம் அதிகார உறவு முறையில் தகப்பன் சொல்வதை மகன் கேட்கவேண்டும். ரீன்ஏஜ் என்ற 13 வயது வரையும் குழந்தைப் பருவத்தில் அப்பாவே உலகமாக இருக்கும் . தந்தை சகல அதிகாரங்களும் கொண்டவர். ஆனால், அதிகாரம் வெளியே தெரியாது . குழந்தைப் பருவம் மாறிய பின்பு உலகச் சர்வாதிகாரிகளுக்கு போட்டியாக மகன்களில் கண்களில் அப்பா உலாவுவார். கொஞ்சம் அமைதியான அப்பாகவிருந்தால், அம்மா கூட ” அப்பாவுக்குச் சொல்லுவேன்” எனஅவரை உருமாற்றி வைத்திருப்பார்கள். இந்த நிலையே என் வீட்டிலும் இருந்தது.

இரண்டு வருடங்கள் முன்பாக யாழ்ப்பாணம் சென்றபோது நண்பன் ரவீந்தரராஜின் மாமனான பத்மநாதனையும் பார்க்கச் சென்றேன் வலம்புரி, உதயம் ஆகிய இரண்டு பத்திரிகைகள் அவர் அருகில் கதிரையில் இருந்தன. டான் தொலைக்காட்சி பார்த்தபடி தனது சாய்வு நாற்காலியில் இருந்தார். நல்லூர் பின் வீதியில் அவரது மேல் மாடி வீடு அமைந்திருந்தது . அது அவரும் மனைவியும் இருப்பதற்காக சில காலத்தின் முன்பு கட்டப்பட்டது . மனைவி மறைந்தபின்பு பத்மநாதன் மட்டுமே அங்கு இருந்தார். வயதான காலத்தில் மற்றவர்கள் கோயில் குளமெனத் தேடிப் போகவேண்டும். இவருக்கு அந்த சிரமமும் இல்லை. இவரது இடமே கோயிலுக்கு அருகில். நான் நினைக்கிறேன், பூசை செய்யும் குருக்களுக்கு நல்ல குரல்வளம் இருந்தால் இவருக்குக் கேட்கும் தூரத்தில் இருப்பார். வீடிருந்த இடம் நல்லூர் கோயிலில் இருந்து கால் கிலோ மீட்டர் தூரமுமில்லை.

அவருக்கு உணவு சமைத்துக் கொடுப்பதற்கு பாப்பா என்ற பெண் இருந்தார். அவரே எனக்கு அன்று மதிய சாப்பாடும் தந்தார். மிகவும் சுவையான உணவு.மற்றைய நேரங்களில் பார்த்துக்கொள்வதற்கு அவரது உறவினரான அம்மா ஒருவர் இருந்தார். இப்படி தொடர்ச்சியான கவனிப்புடன் இருப்பது இந்தவயதில் கொடை! அதனாலே அவரை “அரசன் போலிருக்கிறீர்கள்” என்றேன்
இலங்கை அரசியலை அக்குவேறாக அலசியபடி தற்போதைய ஆட்சியை குறை கூறினார். யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவ வசதிக்குறைவு பற்றி முறையிட்டார். “பணத்தைக் கொடுத்தாலும் கவனிப்பு இல்லை “என்றார்.
ஒரு மூத்த தலைமுறையில் உள்ளவர். தலைமுறை இடைவெளி தெரியாது மிகவும் சுவையாக பேசுவார். ஒரு எழுத்தாளனாக அவரிடம் ஆறுதலாகக் கதை கேட்க விரும்பினாலும் நேரமின்மையால் அவரை வெளியே அழைத்து வந்து அவருடன் ஒன்றாக நின்று படத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினேன்.மீண்டும் யாழ்ப்பாணம் வந்து ஆறுதலாகச் சந்தித்து கதை கேட்பேன் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு வெளியேறினேன்.

இனி எனக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.

இலங்கை வருமான வரித் திணைக்களத்தில் வேலை செய்து, இறுதியில் யாழ்ப்பாணத்தில் உயர் பதவி வகித்து இளைப்பாறியவர் திரு. சுப்பிரமணியம் சிறிபதி பத்மநாதன். பல வருடங்கள் கன்பராவில் மகள் மருமகனுடன் இருந்தவர்.

எனது நண்பனின் மாமா என்பதால் பல தடவை சந்தித்து பேசியதுடன் அரசியலில் வாதிட்டும் இருக்கிறேன். அவர் ஒரு தமிழ்த் தேசியவாதி.

இவைகளுக்கு அப்பால் அவுஸ்திரேலியாவில் உதயம் பத்திரிகைக்கு வரும் தபால்களைப் பார்த்தால் கான்பராவில் இருந்து ஒவ்வொரு மாதமும் பல வாசகர் கடிதங்கள் வரும். அவைகள் பல்வேறு விடயங்களில் பல்வேறு புனைபெயரில் வரும். பல அரசியல் சார்பானவையாகவும் தமிழ்த் தேசியம் சார்ந்துமிருக்கும்.ஒரு கடிதம் நீலம் மற்றையது கறுப்பு, ஏன் பச்சை எழுத்திலும் வரும்.
யாரடா இப்படி ஒரு வாசகர் இருக்கிறாரே என்று வியந்தபடி அவற்றைப் பிரசுரிப்பேன். பிற்காலத்தில் சொந்தப்பெயரில் வந்தபோது எழுத்துகள் ஒரே மாதிரிஇருப்பதை அறிந்து அவையெல்லாம் ஒருவரே எழுதியிருக்கிறார் எனக் கண்டுபிடித்தேன்.

12 வருட காலத்தில் உதயம் இதழில் மறைந்த கலாநிதி கந்தையாவின் படங்களும் திரு. பத்மநாதனின் வாசகர்கள் கடிதங்களுமே அதிகமாகவந்திருக்குமென நினைக்கிறேன். பத்திரிகை ஆசிரியர் மிகவும் விரும்புவது ஆசிரியருக்கு வரும் கடிதங்களே. கான்பரா சென்றபோது அவருக்கு நன்றிசொன்னன்.

எமது பத்திரிகை தனது கருத்தை பிடிக்காது பிரசுரிக்காமல் விடக்கூடாது என்பதற்காகவே பல கடிதங்களை அனுப்பியிருந்தார் என அவர் சொல்லாமல் புரிந்துகொண்டேன்.

இவ்வருடம் கார்த்திகை மாதத்தில் பத்மநாதன் நம்மைவிட்டு மறைந்தாலும் அவரது பூவுலக வாழ்வைப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள் உறவினர்களும் நண்பர்களும் கொண்டாட வேண்டும். தான் வாழ்ந்த காலத்தில் உறவினர்கள், பழகியவர்கள் நண்பர்களுக்கு காலத்தால் அழியாத சுவையான நினைவுகளையும் விட்டுவிட்டே சென்றுள்ளார் என்பது நிறைவானது.

“சிறிபதி பத்மநாதன் நினைவுகள்” மீது ஒரு மறுமொழி

  1. Great Story! Great Tamil! Great expression! Write more on interesting people & places!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: