நவீன இந்திய நாவல்கள்- என் பார்வை

நடேசன்
(அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழா 2018 இல், இடம்பெற்ற நாவல் இலக்கிய அரங்கில் சமர்ப்பித்த கட்டுரை)

நீலகண்டப்பறவையைத்தேடி – வங்காளம்

ஹோமரின் இலியட் மற்றும் ஓடிசியையும் சேர்த்து பார்த்ததை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம். காவியங்கள் தோன்றி காலங்கள் சரியாக கணக்கிட முடியாத போதிலும் புராதன இலக்கிய பாரம்பரியத்தின் உரிமையாளர்களைக் கொண்டது அக்காலப் பாரதம், இக்காலத் தென்னாசியா.

மிருகங்களை பாத்திரமாக்கிய ஐதீகக் கதைகள் இங்கேயே தோன்றின. அதன் தொடர்ச்சியாகவே உலகெங்கிலும் மிருகங்களைக் கொண்ட ஈசாப் நீதிக்கதைகளில் தொடங்கி மிக்கி மவுஸ் எனும் வால்ட் டிஸ்னியின் கதைகள் உருவாகின. மகாபாரதத்தில் தருமருடன் இறுதிவரையும் நாயொன்று சொர்க்கத்திற்கு செல்கிறது. பாரதத்திலே இயற்கை கதைக்களமாக மாறியது. ஆறுகள், வனங்கள் மற்றும் கடல்கள் இந்திய இலக்கியமெங்கும் செறிந்தள்ளன. மகாபாரதத்தில் பாண்டவர் வனவாசம் சென்றதுபோல் இராமாயணத்திலும் பதினான்கு வருடங்கள் இராமன், சீதை, இலக்குவன் சென்ற காடு வருகிறது. காளிதாசனின் மேகதூதம் போன்று இயற்கையையும் கொண்டாடும் கதைகள் உருவாகிய இடம் பாரதம்.

வங்காள நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத்தேடி நாவலை வாசித்தபோது, புதிய முரண்பாடுகளைத் தன்னிடம் கொண்ட பழங்கால இந்திய இலக்கியத்தின் உண்மையான நேரடி வாரிசாக வங்காள இலக்கியம் இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

வங்காளிகளான ரவீந்திரநாத் தாகூர், சத்யஜித்ரேய் போன்றவர்கள் சர்வதேசப் புகழையடைந்தது தற்செயலான சம்பவமல்ல. மற்றைய இந்திய மொழிகளில் நாவல்கள் வெளியாவதற்க பல வருடங்கள் முன்பாக வங்காளத்தில் நாவலிலக்கியம் (1865 துர்கேசநந்தினி) தொடங்கிவிட்டது. முகமதிய படையெடுப்பு முக்கிய கருவாக அமைந்தது.

வங்காள நாவல்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்பவங்களின் கோர்வையாக வருவதை விட்டு விலகி மன ஓட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தன. பாதர் பதஞ்சலி (1929 )அபராஜிதா(1933) கவிபூதிபூஷண் (Bibhutibhushan Bandyopadhya) போன்றவை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் உருவாகிய நாவல்களே.

இவர்களை அடியொற்றித் தோன்றிய நாவலான அதின் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத் தேடி நாவல், தற்போதைய வங்காளதேசம் எனப்படும் அக்கால கிழக்கு வங்காளத்தில் பிரித்தானியர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த கதையைச் சொல்கிறது .

இந்த நாவல் ஒரு விதத்தில் குறியீட்டு நாவல் என்ற போதிலும் யதார்த்தம் அரசியல் மற்றும் தென்னமரிக்காவில் பிற்காலத்தில் உருவாகிய மாயாஜாலத்தின் கூறுகளையும் கொண்டுள்ளது.

நாவலின் முக்கிய பாத்திரமான மணீந்திரநாத் பாபு, பிரித்தானிய பெண்ணான போலினை காதலித்தபோது மதத்தின் காரணமாக அவரது தந்தையால் அவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காதல் மறுக்கப்பட்ட மணீந்திரநாத் பாபு சித்தப்பிரமை பிடித்து போலினைத் தேடி அலைகிறார். அவரது அலைதலே படிமமாக நீலகண்டப்பறவையைத்தேடி என்பதாக படைப்பாக்கம் பெருகிறது.

இந்திய சுதந்திரத்தின் முன்பாக வங்காளத்தில் இந்து- முஸ்லீம் பிரிவினைக் காலத்தில் தனிமனிதர்களது உணர்வுகள் எப்படி மதத்திற்கும் கலாசாரத்திற்கு இடையில் நசுங்குகிறது என்பதோடு அவர்கள் மன உளைச்சலையும் வெளிப்படுத்துகிறது. அதேபோல் மத உணர்வுகள் கடந்து மனிதநேயம் வெளிப்படுவதையும் இந்த நாவல் காட்டுகிறது .

இந்த நாவலில் மனிதர்கள் மட்டும் கதை சொல்லவில்லை. ஆறு,  மீன், யானை,  மரங்கள் வயல்கள் என்பனவும் கதை சொல்கின்றன . இயற்கையே கதையின் முக்கிய பொருளாக வருகிறது. வாசித்த எவரும் கங்கை மற்றும் பிரமபுத்திரா நதிகள் பல கிளைகளாக பிரிந்தோடும் வங்க நாட்டில் விசா, கடவுச்சீட்டில்லாமல் பிரயாணம் செய்வது தவிர்க்க முடியாது. அழகாகக் காட்சி மயமாக்கப்பட்ட நாவலிது.

நாவலில் இரண்டு பெண் பாத்திரங்கள் என்னைக் கவர்ந்தன . அதில் மாலதி என்ற இந்துப்பெண்ணின் கணவர் திருமணமடைந்த சில நாட்களில் மதக்கலவரத்தில் கொலை செய்யப்படுகிறார். அதன்பின் அந்தப் பெண்ணின் இளமைக்காதல் நினைவுகள் மன நினைவுகளாக வருகிறது. அவள் விதவையானதால் உணவு, உடை ஆகியவற்றுடன் அவள் எங்கு வசிக்கலாம் முதலான கட்டுப்பாடுகள் அவள் மீது திணிக்கப்படுகிறது. ஆனால், அவளது உள்ளத்து உணர்வுகள் உடலின் இளமையின் வேகம் கட்டுப்பாடற்றவை. இங்கு கவிதையின் வார்த்தையில் பெண்ணுடலின் உணர்வுகள் செதுக்கப்படுகின்றன.

ஒரு நாடோடிப்பாடகன் அவளுடைய உடலில் நாடோடிப் பாட்டை இசைக்கிறான்.
“ரசமாகிய விரல்களைக் கொண்டு வாத்தியமாக என்னை வாசி.”

அதற்கு எதிர்மாறாக பதின்மூன்று குழந்தைகளைப் பெற்ற ஜோட்டனின் பாத்திரம். ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து பதினாறு பிள்ளைகளைப் பெற்றவள். “அல்லாஹ்வே உன்னோடு உலகத்தில் எனக்காக ஒருவருமில்லையா “ எனவிக்கி அழுகிறாள் . தனது உடலுக்கு வரி கொடுக்க பக்கிரி சாயபு என்ற மனிதரை நினைத்து ஏங்குகிறாள். அதே வேளையில் தனது இளவயது நண்பரான மன்சூருடன் படகில் கலவி கொள்கிறாள். இறுதியில் பக்கிரி சாயபுவுடன் இடுகாட்டின் அருகே வசிக்கும் போது அவளது ஒரு பிள்ளை கொலராவில் இறந்து அதே இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது. பக்கிசாயபுவும் ஜோட்டனும் இறுதியில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட மாலதியைக் காப்பாற்றுகிறார்கள். பக்கிசாயபுவும் ஜோட்டனும் மனிதாபிமானமிக்க பாத்திரங்களாக வருகிறார்கள்.

ஜலாலி என்ற பெண் பாத்திரம் உணவிற்காக அல்லிக்கிழங்கைத்தேடி குளத்தில் இறங்கி இறக்கும் பாத்திரம். அங்கு தோன்றும் மீனின் பாத்திரம் கபிரியல் மாக்குவசின் மாயாயதார்த்தத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

உணவிற்காக மாலதியின் வாத்தை திருடித் தின்னும் ஜலாலியும், உணவிற்காக ஏங்கும் ஜோட்டனின் பாத்திரமும் வறுமையைக் காட்சிப்படுத்தும் யதார்த்தமாக சித்தரிக்கப்படுகிறது.

மாலதியின் இளம்பிராயத்து தோழர்கள் முஸ்லீம் லீக் மற்றும் இந்துத்துவ அமைப்பில் இணைகிறார்கள் . தலைமறைவு வாழ்க்கையில் தேசசேவை என வன்முறையில் ஈடுபடும் இரஞ்சித் மற்றும் கிராமம் முழுவதும் இந்துக்களுக்கு எதிராகவும் “இஸ்லாத்திற்கு ஆபத்து, இந்த ஆபத்துக் காலத்தில் நாம் நம் மதத்தைக் காப்பாற்றவேண்டும்” என போஸ்டர் ஒட்டும் சாமு ஆகிய இருவரும் இதை மிகவும் தெளிவான அரசியல் நாவலாக்குகிறார்கள்.

இந்த நாவலின் ஒரு முக்கிய பாத்திரமான சோனா என்ற சிறுவனது பிறப்புடன் நாவல் தொடங்குகிறது . ஆனால், அச் சிறுவன் இரண்டு இளம் பெண் சிறுமியர்களைச் சந்தித்து உரையாடும்போது அந்தப்பாத்திரம் நாவலுக்கு எந்த நோக்கமுமற்று நீண்டு விடுகிறது . அதுவே எனக்கு போரடித்த பகுதி . நான் நினைக்கிறேன் நாவலாசிரியரது சிறுவயது நினைவுகளாகத்தான் தேவையற்ற சித்திரிப்பாக இந்தப்பகுதி தொடங்குகிறது .

இந்த நாவல் வாசகனை எளிதாக நெருங்குவதற்கு முக்கியமான காரணம்: சு . கிருஷ்ணமூர்த்தியின் சிறப்பான மொழிபெயர்ப்பு. மீண்டும் இரண்டாவது தடவை படித்த போது பல விடயங்கள் புதிதாக விரிகின்றன. ஆனால், இதில் ஒரு கனியை இறுதிவரையும் தர்மூஜ் வயல் என்றே எழுதி வருகிறார். இறுதியில், எனக்குத் தெரிந்த ஒரு வங்காள தேசத்து பெண்ணிடம் அந்தக்கனி பற்றிக் கேட்டபோது அது வத்தகப் பழம் (தார்ப்பூசணி) என்ற வோட்டர்மெலன் என்று விளக்கினாள்.

செம்மீன்

தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீனை நாவலாகப் படித்தவர்களை விட அதைப் படமாக பார்த்தவர்கள் பல மடங்கு அதிகம். அதிலும் மலையாளி அல்லாதவர்களைத் அத் திரைப்படம் அதிகமாக சேர்ந்தடைந்தது. செம்மீன் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தன. எங்கள் வயதானவர்கள் காதுகளில் நுழைந்து குளியலறை, சமையலறை, மற்றும் பொது நிகழ்ச்சிகளின்போது வாய்களில் வந்த பாடல்களைக் கொண்டது செம்மீன் திரைப்படம்.

தமிழில் இந்த நாவலை வாசித்தவர்களுக்கு சு . ரா ( சுந்தரராமசாமி) மிக அழகாக அதனை மொழி பெயர்த்திருப்பது புரியும்.

செம்மீன், கேரளத்தின் கடற்கரையில் நடக்கும் காதல் கதை. மீன் பிடிக்கும் முக்குவர் குலத்துப் பெண்ணான கருத்தம்மா, நாலாம் மதமென்ற இஸ்லாமிய இளைஞனான பாரீக்குட்டியை காதலிப்பதும் பின்பு பழனி என்ற மீன் பிடிக்கும் இளைஞனை மணந்து மூவரும் இறக்கும் சோகக் கதையே. மிகவும் நேர்கோடான கதை.

சோகங்கள் எப்பொழுதும் எமது இதயத்தை ஆழமாகத் தாக்கி பாத்திரங்களுடன் எம்மை உறவாடவைக்கும் என்பதால் செம்மீனை எப்பொழுதும் வாசிக்க முடியும் .

மூன்று காரணங்களால் நாவலின் சிக்கல்கள் உருவாகின்றன.

கடற்கரை மீனவர்களில் உள்ள ஐந்து ஜாதிகளில் அரயன், வலைஞன், மரக்கான், முக்குவன், மற்றும் ஐந்தாவது ஒரு பஞ்சமர் என்ற சாதிகளில் வலைஞன் மட்டுமே மீன் பிடிக்கத் தோணி மற்றும் வலை வாங்கலாம். மற்றவர் தோணியில் வேலை செய்யவேண்டும். ஆனால் செம்பன்குஞ்சு என்ற முக்குவன் வலையையும் தோணியையும் பரீக்குட்டி என்ற முஸ்லீம் ஒருவனிடம் கடன் வாங்கிய பணத்தில் வாங்குகிறான்.கடனைத் திருப்பிக் கொடுக்கும் நோக்கம் செம்பன்குஞ்சுவிடமில்லை.

இரண்டாவதாக கருத்தம்மா, அவளுடன் சிறுவயதில் ஒன்றாக விளையாடியவனும் தற்போது அவளது தகப்பனுக்குக் கடன் கொடுத்தவனுமான முகம்மதியனான பரீக் குட்டியைக் காதலிக்கிறாள்.

மூன்றாவது அரத்தியர் என்படும் இந்த மீனவ சமூகத்துப் பெண்கள் ஒழுக்கமற்றுப் போனால் கடல் கொந்தளிக்கும். கடலில் சென்றவர்கள் மீண்டும் உயிருடன் வருவது பெண்களின் கற்பொழுக்கத்திலே தங்கியுள்ளது.

இந்த மூன்று முரண்பாடுகளே கதையை முன்னோக்கி நகர்த்துகிறது.

இதுவரையும் மேற்கு கடல் விரிந்தும் பரந்தும் இருக்கிறதே! தோணிகளில் சென்று மீன்களுடன் வருகிறார்களே! அப்படியானால், இதுவரையும் மீனவப் பெண்களை மாசுபடுத்திப் பேசிய கதைகள் பொய்தானா எனக் கருத்தம்மா ஏங்குகிறாள்.

சில நாட்கள் கடல் சிவந்துவிடும். அதைப் “போளை” எனக் குறிப்பிட்டு கடல்த்தாய் ருதுவாகிவிட்டாள் என்பதால் கடலுக்கு மீனவர்கள் போகமாட்டார்கள் என்பதால், கடலை பெண்ணாக கருதிப் பேசுவது அந்தக் கடற்கரை சமூகத்தின் வழக்கம் .

எனக்கு நாவலில் மிகவும் பிடித்த ஒரு இடம்: கருத்தம்மாவின் தாய் இறக்கும் தருணத்தில் பரீக்குட்டியை தனது மகனாக வரித்துக் கொள்கிறாள்.

“பரீக்குட்டி இன்று மட்டுமல்ல என்றைக்கும் கருத்தம்மாவுக்கு அண்ணனாக இருக்கவேண்டும். ஆமாம், அண்ணனாக மட்டுமே இருக்கவேண்டும் “எனச் சொல்லி மன்றாடுகிறாள்.

நாவலின் இந்தத் தருணம் ஹோமரினது இலியட்டில், ஆக்கிலிசால் கொலை செய்யப்பட்ட மகனது உடலுக்கு இறுதி மரியாதை செய்வதற்காக உடலை மன்றாடிக் கேட்ட ஹெக்டரின் தந்தை பிரியத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது.இலியட் திரைப்படத்தில் நான் சொன்ன காட்சி மிக அழகாக வந்துள்ளது.

அங்கு தந்தையின் பாசம் மகன் இறந்த பின்பு வெளிப்படுகிறது. இங்கு இறக்கும் தருணத்திலும் மகளது வாழ்விற்குப் பங்கம் வராமல் பாதுகாக்க விரும்பும் தாயின் மனநிலை மிகவும் அழகாக வெளிப்படுகிறது. செமமீன் படத்தில் தவறிவிட்டது.

சம்ஸ்கார

சமஸ்கிருதத்தில், சம்ஸ்கார எனப் பெயரிடப்பட்ட நாவலும் ஒருவித குறியீட்டு நாவலே. தமிழில் இறுதிச்சடங்கு என அர்த்தம் கொள்ளலாம்.

யு .ஆர் . ஆனந்தமூர்த்தியின் நாவலான சம்ஸ்கார, பிராமண சமூகத்தின் சடங்குகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளில் உள்ளேயுள்ள வெற்றிடத்தை வெளிப்படுத்துவதுடன் அவர்களது சடங்குகளையும் நம்பிக்கைகளையும் நகைச்சுவையாக்குகிறது.

நாவலில் சொல்லப்பட்ட விடயங்கள், அல்ஜீரியாவைக் களமாக வைத்து நாசிகளை குறியீடாக்கி அல்பர்ட் காமு எழுதிய பிளேக் என்ற நாவலை நினைவுபடுத்துகிறது .

பிளேக் என சொல்லாதபோதிலும், அப்படியான ஒரு நோயால் அக்கிரகாரத்தில் இறந்த நாராயணப்பாவை எரியூட்டுவதற்கு அவனது உறவினர்கள் தயங்குகிறார்கள். அவன் மாமிசம் உண்டு கீழ்ஜாதிப்பெண்ணுடன் வாழ்ந்தான் என்பதே மாதவஸ் என்ற உட்பிரிவான பிராமண சமூகத்தினால் அவனுக்கு இறுதிச்சடங்கு செய்யத் தடையாக இருக்கிறது.

இதேவேளை பிராமணனது உடலை மற்றவர்கள் தகனம் செய்ய அவர்களின் விதி இடம்கொடாது. உடலை அடக்கம் செய்யாமல் அக்கிரகாரத்தவர்கள் எவரும் உணவுண்ணமுடியாது. இந்தச் சிக்கலே கதையின் முரண்பாடு.

அவனுடன் வாழ்ந்த பெண் சாண்றி, தனது நகைகளை, நாரயணப்பாவை தகனம் செய்பவர்களுக்குத் தருவதாக அவர்கள் முன் வைக்கிறாள். அதைப் பார்த்த அக்கிகாரத்துப் பெண்கள் அந்த நகைக்காக தனது கணவர்மார் இறுதி தகனத்தை செய்யவேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால், அந்த ஆண்களோ, தங்களை அது மாசுபடுத்தும் என மறுக்கிறார்கள்.

காசியில் வேதங்களை கரைத்துக் குடித்த பிரனேச்சாரிய, இதற்கு விடை சொல்வதற்காக தொடர்ச்சியாக பழைய ஏடுகளைப் பிரித்து படிக்கிறார் . இந்த வேளையில் தொற்றுநோய் பரவி பலர் இறக்கின்றனர். ஏடுகளில் விடை கிடைக்காது, இறுதியில் நேரடியாக இறைவனிடம் விடைகாண்பதற்காக கோவில் சென்று திரும்பி வரும் வழியில் சண்டியோடு பிரனேச்சாரிய உடல் உறவு கொள்கிறார்.

அழுகும் நாராயணப்பாவின் உடல் சண்றியால் இரகசியமாகத் தகனம் செய்யப்படுகிறது .

பிரனேச்சாரிய தனது முறையற்ற நடவடிக்கையால் மற்றவர்களுக்கு வேதத்தை எடுத்துச் சொல்லவோ வழிகாட்டவோ தகுதியில்லை எனக்கருதி ஊரைவிட்டு வெளியேறுகிறார்.

இந்த நாவலில் வரும் பிரனேச்சாரிய நோயுற்ற தனது மனைவிக்கு உணவூட்டுவது, உடல் கழுவுவது எனச் செய்து வருகிறார் . நாற்பது வருட மணவாழ்க்கையில் உடலின்பத்தை காணாத அந்த மனிதர், சண்றியோடு உடலுறவு கொண்டபோது அவருக்கு உடலுறவின் இன்பம் புரிகிறது . பெண்ணுடலின் அழகு புரிகிறது . மீண்டும் வந்து தனது மனைவியின் அழகற்ற உடலைப் பார்க்கும்போது இதுவரையில் தெரிந்து கொள்ளாத விடயங்களை அறிந்து கொள்கிறார்.

தன் மனைவி நோயுள்ளவள். உடலுறவு கொள்ள முடியாதவள் எனத் தெரிந்தே மணந்து கொள்கிறார் . உடலுறவை மறுத்து அவளைப் பராமரிப்பது தவம். அதுவே இறைவனை அடையும் வழி என துறவான வாழ்வை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லியும் தானும் வாழ்ந்தபடி இருந்தவருக்கு இறுதிச் சடங்காக சண்றியுடன் உடலுறவு வருகிறது.

அதன் பின் ஊரைவிட்டு விலகி நடக்கும்போது, புட்டா என்ற வழிப்போக்கனைச் சந்தித்து அவனுடன் களியாட்டவிழாவுக்குச் சென்று அங்கு சேவல் சண்டையை பார்க்கிறார் . அவன் அவரை விபசாரியிடம் அழைத்துச் செல்கிறான். இப்படியான காட்சிகள் மூலம் உலகத்தின் சிற்றின்பத்தை காணுகிறார்.

இறந்த நாரயணப்பாவின் இறுதிச்சடங்குடன் பிரனேச்சாரியவின் பிரமச்சாரிய துறவிற்கு இறுதிச்சடங்கு என்ற இரட்டைக் குறியீடாக நாவல் சித்திரிக்கப்படுகிறது.

அம்மா வந்தாள்

தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், நான் மூன்று முறை படித்த ஒரே ஒரு தமிழ் நாவல். ஒவ்வொரு முறையும் படிக்கும்போதும் மேலும் புதியதாக ஒன்றைப் புரிந்து கொள்ளமுடியும். அதிலும் ஏற்கனவே நான் நான்கு நாவல்களை எழுதி விட்டு மீண்டும் அம்மா வந்தாளை படித்தபோது, எவ்வளவு அழகாக இது எழுதப்பட்டிருக்கிறது என நினைக்க வைக்கும் நாவலிது.

நாவலில் முக்கியமாக முதல் பாகம் முழுவதும் அப்புவின் மன ஓட்டங்களில் கதை சொல்லப்படுகிறது. இது மிகவும் சிறந்த கதைசெல்லும் வடிவம். அப்புவின் மன ஓட்டம் நதியாக புரண்டோடுகிறது. நாவலில் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் கதையின் முக்கிய கரு எரிகுண்டாக இந்துவால் சில வார்த்தைகளில் வீசப்படுகிறது.

இந்து அப்புவைக் கட்டிப்பிடித்தபோது,

“சீ என்ன அசுரத்தனம், அம்மாவைக் கட்டிக்கிறப்போல் எனக்கு என்னமோ பண்ணிறது “ என வேகமாகத் தள்ளுகிறான்.
அப்பொழுது “அம்மாவாம் அம்மா. உங்கம்மாவை ரொம்ப ஒழுங்குன்னு நினைக்கதே. நானாவது உன்னை நினைச்சுண்டு சாகிறேன். உங்கம்மா யாரையோ நினைச்சுண்டு சாகாமல் இருக்கா பாரு. நான் உங்கம்மா இல்லை நான் உன்னைத் தவிர யாரையும் நினைக்கல்லடா. பாவி . அம்மா அம்மா….. என்னு என்னை அவளோடு சேர்க்காதே. எனக்கு ஏமாற்றத் தெரியாது. “

மேற்கூறிய பந்தி மூலம் நாவலின் கருவிற்கு கண்ணியாக வைத்து விடுகிறார். இது மிகவும் நுட்பமான பொறிமுறை . வாசிப்பவர்களை கதையின் ஆழத்துள், நதியில் ஏற்படும் சுழிபோல் இழுத்துக் கொண்டுவிடும். வாசகன் அதிலிருந்து மீளமுடியாது.

இரண்டாம் பாகம் சாதாரணமாக எழுத்தாளரால் கதையாக சொல்லப்படுகிறது. எனக்கு நாவலின் உச்சத்தை விட்டு இறங்குவதுபோல் தெரிந்தாலும் இங்கே குடும்பத்தின் உறவுச்சிக்கல் விளக்கப்படுகிறது .

“ஊஞ்சலில் உட்காந்திருந்த சிவசுவை பார்த்ததும் மீசையை எப்படா எடுத்தே ? ” என்று நான் உளறினேன் .
நான் உளறினேன் ? ஒரு விநாடி அப்படியே கோபு என்று சமைந்துவிட்டேனே “ என அப்பு சிவசுவைத் தனது தம்பி கோபுவாக நினைத்து குழப்பமடைவது மூலம் நாவலின் அடுத்த முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.

“நீ தனி தாண்டா அப்பு . உன்னைத் தனியாக கவனித்து தானடா நான் பிராயசித்தம் பண்ணிக்கணும்?
நீதானே கடைசிப்பிள்ளை எனக்கு “ அம்மா பிளாட்பாரத்தில் வைத்துச் சொல்லும் போது மூன்றாவது முடிச்சைஅவிழ்க்கிறாள் அம்மா.

நாவலின் கடைசிப்பாகத்தில் கதையின் இறுதி முடிச்சை சேலத்தில் இருக்கும் அக்கா அவிழ்க்கிறாள்.

“அம்மாவை நினைச்சா அங்கலாய்ப்பு இருக்கடா. அப்பு …. அப்பாவோடு இருக்கிறது கஸ்டமோ என்னமோ, எனக்குத் தெரியலே… ஆனா கடைசி மூணும்தான் அவ மனசோடு பெத்த குழந்தைகள் என்னு தோணுகிறது . அவ சுயபுத்தியோடுதான் இருக்கா. சிவசுவைப் பார்க்காது இருக்கமுடியாது. நீயும் நானும் மாமியாரும் ஆமடையானும் ஊரும் உலகமும் கோவிச்சுக் கொண்டு என்ன பண்றது. “
வார்த்தைகளால் கதை சொல்லப்படாது சிறந்த நுட்பமான பொறிமுறைகளால் கதை இங்கு விரிகிறது.

இந்த நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஆழமானவை . முழுமையானவை

கணவனாக வரும் தண்டாயுதபாணி மூன்று பிள்ளைகளின் பின்பாக மனைவியின் நடத்தை மாறினாலும் மனைவியை நிராகரிக்கவில்லை. குடும்பத்துடன் வாழ்கிறார். அவரது இயல்புகள் அவரது உரையாடல்கள் மூலம் வெளிவருகிறது. வேதத்திலும் வேதந்தத்திலும் ஈடுபடுகிறார். சோதிடத்தை நம்பாதபோதிலும் தொடர்ச்சியாக வீட்டுச் செலவுகளுக்கு உதவுவதால் மற்றவர்களுக்கு பார்த்துச் சொல்லுகிறார்.

“ஒண்ணையும் புரிஞ்சுக்க சிரமப்படாது பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கணும் அதுக்காகத்தான் ஸ்வாமி நம்மை படைச்சிருக்கார்.“ என தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறார்.

இளம் வயதில் இந்துவின் பாத்திரம் மிகவும் சாதுரியமாக பேசுவதுடன் அப்புவை தொடர்ச்சியாக சீண்டுகிறது. அதேபோல் பாவனியம்மாள் மிகவும் தெளிவாக அப்புவை இந்துவுடன் தனித்து விடுவதும் இறுதியில் இருவரினது பெயரில் சொத்து எழுதுவதால் இருவரினது எதிர்காலத்தை பிணைத்து விடுகிறாள்.

அலங்காரத்தம்மாள் பாத்திரம் மூன்று பிள்ளைகளை கணவருக்கும் மற்ற மூன்று பிள்ளைகளை சிவசுக்கும் பெற்றாலும் அப்புவை வேதம் படிக்க வைப்பது ஒரு வித பாவ சங்கீர்த்தனமாக செய்கிறாள். அவன் வேதம் படித்தால் அவனுடன் சேர்ந்து தனது பாவங்களும் போய்விடுமென்று நினைத்தபோது இறுதியில் அப்பு மறுத்து, இந்துவுடன் இருப்பதாக சொல்லியபோது, நீயும் அம்மா பிள்ளையாக இருக்கிறாய் என்பதால் காசிக்குச் சென்று இறக்கப் போவதாக கதை முடிகிறது.

நீயும் அம்மா பிள்ளையாக இருக்கிறாய் என்ற வசனத்தின் மூலம் வரையறைகளை நீயும் என்னைப்போல் மீறுகிறாய் என்று சொல்லி விடுகிறாள். நாவலின் கதை பிராமண சமூகத்தில் நடக்கும் மீறல்களை வெளிப்படுத்தி விட்டு, இறுதியில் அழகாக முடிகிறது.

காவேரிக்கரையில் தொடங்கிய கதை, அங்கேயே இறுதியில் முடிகிறது.
———–

கிட்டத்தட்ட ஐம்பது வருடத்திற்கு முன்பாக எழுதப்பட்ட இந்த நான்கு நாவல்களும் அந்தந்த மொழிகளில் சிறந்தவை என்பதுடன் அழகான மொழிபெயர்ப்பைக் கொண்டவை. இவைகளை வாசிப்பது மிகவும் சுகமான அனுபவம்.

இந்த நான்கு கதைகளும் எடுத்துக்கொண்ட கருக்கள் இந்தியாவின் கலாச்சாரத்திற்குள் இருப்பவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். இந்திய பாரம்பரியத்தை புரியாத ஒருவரால் நீலகண்டப்பறவையைத்தேடியில் வரும் மாலதியின் அவலத்தைப் புரிந்துகொள்ள முடியாது.
செம்மீனில் கற்புடன் பெண்கள் இருந்தால்தான் மீன்பிடிக்கச் சென்ற மீனவக் கணவன்கள் உயிருடன் திரும்புவார்கள் என்பது அர்த்தமில்லாத விடயமாகத் தெரியும்.

யு . ஆர். ஆனந்தமூர்த்தியே அக்கிகாரத்தவர்களது மூடநம்பிக்கைகளை நகைச்சுவையாக்கும்போது, மற்ற அன்னியர்களால் எப்படி இது வலுவான சிக்கல் என புரிந்து கொள்ளமுடியும்?

அன்னியன் ஒருவனுடன் உறவுகொண்டு குழந்தைகளைப் பெற்று வாழ்ந்த பாவத்தை தனது மகனில் – அவன் வேதம் படிப்பதால் தீர்க்கமுடியும் என்ற அசட்டுத்தனமான முடிச்சை இந்திய நாவலில் மட்டுமே பார்க்கமுடியும்.

இதை நாம் கூட ஏற்போமா?

நவீன இந்திய இலக்கியங்களில் இருக்கும் பலமின்மை பண்டைய இந்திய இலக்கியங்களில் இருக்கவில்லையே?

சகுந்தலையினதோ, பாஞ்சாலியினதோ அல்லது சீதையின் பாத்திரத்தையோ புரிந்துகொள்ள இந்திய கலச்சாரம் தெரியத் தேவையில்லை .

அதேபோல் இராவணனது தன்மை, அருச்சுனனது வீரம் , மற்றும் திருதராட்டினனது புத்திர பாசம் மனித குலத்திற்குப் பொதுவானவை.
மனித சமூகத்தின் மாறாத அடிப்படை விழுமியங்களான பொறாமை , ஆசை காமம், அதிகாரம் , நட்பு என்பவை எக்காலத்திற்கும் பொதுவானவை. மாறாதவை. அவைகளே காலத்தை கடந்து நிற்கும். ஆனால், பிற்காலத்தில் வந்த நம்பிக்கைகள், சாதி, சம்பிரதாயங்கள், மற்றும் மதச் சடங்குகளுடன் கலந்து முரண்பாடுகளை நாவலில் கட்டமைக்கும்போது முழு நாவலே பலமற்றுப் போகிறது.

இப்படியான போக்கு தொடர்ந்தும் வருகிறது. காரணம்?

அக்காலத்தின் வீரியத்தை இழந்து, இக்காலத்தில் சோடையாகி நிற்கிறோமா?
————–0———————

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: