இராமேஸ்வரத்தில் தொடங்கிய எனது இரயில் வண்டிப் பயணம் எக்மோர் இரயில் நிலையத்தில் முடிந்தது. எனக்குத் தெரிந்த கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பத்து மடங்கு இருக்கும். எங்கும் வாரி இறைத்த மணல்போல் மக்கள் கூட்டம். சிறியநாடான இலங்கையில் இருந்து வந்த எனக்கு, இவ்வளவு கூட்டம் என்பது மிகவும் பிரமிப்பைக் கொடுத்தது. இந்தக் கூட்டத்தில் தனிமனிதன் வாழ்வதற்கு எவ்வளவு பாடுபடவேண்டும்? இயற்கை மற்றும் உற்பத்தி வளங்களை எவ்வாறு ஒவ்வொருவரும் பிரிப்பது?
அபரிமிதமான இயற்கை வளங்கள் கொண்ட இலங்கை நாட்டில் இருந்து போர் காரணமாக இந்தியா வந்திருக்கும் எனக்கு, இந்தியக் கரையில் இறங்கியதில் இருந்து இலங்கையில் தோன்றியிருக்கும் இனப்பிரச்சினையானது, தாயின் அரவணைப்பிற்காக முரண்டு பிடிக்கும் இரண்டு குழந்தைகளின் செயலோ என்ற சிந்தனையும் மனதில் தோன்றியது.
பத்து வருடங்களுக்கு முன்புவரையும் தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ தமிழர்கள் படகுகளில் (கள்ளத்தோணி) பிழைப்பதற்கு இலங்கை வந்தார்கள். அவர்களில் பலர் எனது எழுவைதீவின் ஊடாக வந்திருக்கிறார்கள். அங்கு நான் பிறப்பதற்கு முன்பே சிறுபையனாக இராமனாதபுரத்தில் இருந்து எங்கள் ஊருக்கு வந்து, வளர்ந்து இளைஞனாக கள்ளிறக்கும் தொழில் செய்ததுடன், என்னைத் தூக்கி வளர்த்த இராமலிங்கண்ணையின் வேர்வை மணம் இன்னமும் நினைவில் இருக்கிறது. வாட்டசாட்டமான விரிந்த தோள்கள் கொண்ட தேகம். சுருட்டைத்தலை. இருளுடன் போட்டி போடும் தோல் நிறம். ஆனால், அதில் எப்பொழுதும் மினுக்கம் இருந்தது. தோலின் வேர்வைத் துவாரங்களில் இருந்து வரும் வேர்வை கள்ளுமணத்துடன் கலந்திருக்கும். தேகத்தில் மழைக்கால ஆறாக உடலெங்கும்பெருக்கெடுத்தோடும் வேர்வையுடன் அவர் என்னை தூக்கித் தோளில் போடுவது அவரது வழக்கம்.
பலமுறை அம்மா ‘குளித்துப்போட்டு அவனைத்தூக்கடா’ எனக் கத்துவதும் அதற்கு இராமலிங்கண்ணை ‘நீ போ உன் வேலையை பார் சின்னம்மா’ எனக் கூறுவதும் எனது இளமைக்கால ஞாபகம். கள்ளத்தோணியாக பலர் வந்து தங்கி எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு தப்பிச் சென்றுவிடுவர். சிலர் பொலிசாரிடம் பிடிபடுவர். இக்காட்சிகள் சிறுவயதில் நான் பார்த்த சம்பவங்கள். இராமலிங்கம் மட்டும் பாதுகாப்பாக எங்கள் வீட்டில் பல வருடம் இருந்துவிட்டு மீண்டும் இராமநாதபுரம் சென்று தனது நாடார் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததாக பிற்காலத்தில் அறிந்தேன்.
84ஆ ம் வருட காலத்தில் இலங்கையில் ஓட்டோ ரிக்க்ஷா இருக்கவில்லை சாணி வண்டுகளின் தோற்றத்தில் வரிசையாக எக்மோரில் அவற்றைப் பார்த்தது புதுமையாக இருந்தது. அக்கால சினிமா படங்களிலும் ஓட்டோவைப் பார்த்த ஞாபகம் இல்லை. அந்த இடத்தைவிட்டு விலகவேண்டும் என்பது குறிக்கோளாக இருந்ததால் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஓட்டோ வாகனத்தில ஏறி அமர்ந்தேன்;
ஐந்தரை அடி உயரத்தில் ஒரு மெல்லிய இளைஞன் என்னை நோக்கி வந்தான். சுமார் இருபத்தைந்து வயது இருக்கும். சிறிது வாக்குக் கண் தோற்றமுள்ளவன்.
‘எங்கே போகணும் சார் ? என்றபடி சிரித்தபோது அவனது கண்கள் எனக்குப் பின்னால் நின்றவரைப் பார்ப்பது போல் இருந்தது.
என்னைக்கேட்கவில்லை என்ற எண்ணத்தில் மவுனமாக இருந்தேன்
‘உன்னைத்தான் சார் . எங்கே போகவேண்டும்?’;
படிப்பித்த ஆசிரியர்களையும் பிற்காலத்தில் பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர்களையும் தவிர்ந்த எவரையும் சேர் என சொல்லி பழக்கமில்லாத எனக்கு முன்பின் தெரியாத ஒரு இளைஞன் என்னை சேர் என்பதும் மெதுவான அதிர்ச்சியை கொடுத்தது.
‘மாம்பலம் பக்கம்’ ;
‘சிலோனா இல்லை மலையாளியா சார்”
‘சிலோன்’
‘குந்துசார். ஆமா எப்பிடி அங்க தமிழங்களை கொல்லுறாங்களாம் பேமானிங்க’
நான் அவனுடன் அரசியல் பேசத்தயாராக இருக்கவில்லை. மேலும் பயணக்களைப்பு வாயைக் கட்டிப்போட்டது.
‘எவ்வளவு காசு ?’
‘என்ன காசு? நீ நம்மாளாய் இருக்கிறாய். சரி முடிஞ்ச துட்டைத்தா’
‘இல்லை இன்றைக்குத்தான் இந்த நாட்டுக்கு வாறன் எவ்வளவு என்று சொன்னால் நல்லதுதானே’
‘இன்னா சார் நமக்குள்ளே’
‘இல்லை. எவ்வளவு சொல்லப்பா’
‘சரி ஐந்து ருபாய்’
எனக்கு அந்தக்கூலி சரியான கட்டணமா? அல்லது கூட்டித்தான் கேட்கிறானோ என்பது தெரியாது விட்டாலும் அவனது வெளிப்படையான பேச்சில் உண்மையான தன்மை தெரிந்தது.
‘எங்கே தங்கப் போற?”
‘அதுதான் மாப்பலம் போகிறேன்’
‘படிச்சது போல இருக்கிறாய். நல்ல ஹோட்டலுக்கு கூட்டிப் போகட்டுமா?”
‘அதிகம் பணமில்லை ஆனாலும் சுத்தமாக இருந்தால் சரி’
‘நாற்பது ரூபாயில் எல்லாம் இருக்கு. நல்ல வசதி.’
உண்மையில் அவன் காண்பித்த அந்த ஹோட்டலில் அடிப்படைவசதிகள் இருந்தன.
உடல் அலுப்புத்தீர குளித்துவிட்டு கீழே இருந்த சாப்பாட்டு கடைகளை தேடினேன். பெரும்பாலானவை சைவ உணவகங்களாக இருந்தன. எழுவைதீவில் பிறந்து வளர்ந்தபோது மீன் குழம்பு, மீன்சொதி, மீன் பொரியல் , கத்தரிக்காய் பால்கறி அல்லது முருங்கைக்காய் மட்டும் உண்டு வளரந்ததால் எங்கு சென்றாலும் அசைவ உணவைத் தேடுவது எனது பழக்கமாகிவிட்டது. வெள்ளிக்கிழமை மச்சம் மாமிசம் சமைக்காத நாட்களில் குறைந்த பட்சம் பரணில் இருந்த கருவாட்டை நெருப்பில் சுட்டோ அல்லது முட்டையை பனை ஓலையில் வைத்து சூடாக்கிய பின்பு சாப்பிடுவது வழக்கம். ஆடி அமாவாசை போன்ற நாட்களில் மரக்கறி உணவும் வெந்தயக்குழம்பும் தொண்டைக்குள் கசாயம்போல் இறங்கும்
கப்பல் ஏறுவதற்கு முன்பு கடைசியாக மன்னாரில் மாமி கயல் மீனின் பொக்கணங்களை தனியே எடுத்து குழம்பு வைத்து எனக்கு விருந்து வைத்திருந்தார். இராமேஸ்வரத்தில் இறங்கிய நாளில் இருந்து கிட்டத்தட்ட நாற்பத்தியெட்டு மணிநேரமாக மச்சம், மாமிசம் கண்ணில் கூட படவில்லை. இரயிலில் குறைந்த பட்சம் மாமிச மணமாவது மூக்கையடையாதா என்று நினைத்தேன். தயிரும் சாம்பாரும் புளியோதரையுமாக நான் பயணித்த ரயில் மணம் பரப்பியது.
மச்சம் மாமிசத்திற்காக வேறு வழியில்லாமல் அரை மணித்தியாலம் நடந்து ஒரு மதுரா முனியாண்டி விலாஸை கண்டுபிடித்தேன்.
சென்னையில் அக்காலத்தில் மதுரை முனியாண்டி அல்லது கேரளத்து முஸ்லிம்களது கடைகள்தான் என் உயிருடன் உடலை ஒட்டவைத்தன.
மத்தியானம் படுத்துவிட்டு படம் பார்க்க வேண்டும் என நினைத்தவாறு ஹோட்டல் யன்னலால் வெளியே பார்த்தபோது இலங்கை எதிர்கட்சித்தலைவர் என்ற எழுத்துக்கள் தூரத்தே தெரிந்த போஸ்டரில்தென்பட்டது. அமிர்தலிங்கம் அவர்களைக் குறிப்பதாக இருந்தாலும் எனக்கு அப்பொழுது செல்வநாயகம்தான் நினைவுக்கு வந்தார்.
ஏழு அல்லது எட்டு வயது எனக்கு இருக்கும் காலத்தில் ஒரு தேர்தல் நடந்தது. அப்பொழுது தமிழரசுக்கட்சித் தலைவர் செல்வநாயகம் அக்கால தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் வீ ஏ கந்தையாவுடன் எழுவைதீவுக்கு வந்தபோது எங்கள் வீட்டிற்கும் வந்தார். எனது தாய்வழிப் பேரனார் நமசிவாயம் ஓய்வு பெற்ற வாத்தியார். அத்துடன் தபாலதிபராகவும் இருந்தவர். தீவுப்பகுதியில் மோட்டார் வள்ளங்களை ஓட்டியவர்கள் சங்கத்தில் முக்கியமானவர். இதனால் எங்கள் வீட்டுக்கு செல்வநாயகம் வந்தபோது தனது சாய்மனை கதிரையில் அவரை அமரச் சொல்லிவிட்டு எதிரில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அவருக்குப் பக்கத்தில் வீ ஏ கந்தையா அமர்ந்தார்.
செல்வநாயம் மிகவும் மெதுவான குரலில் ‘வாத்தியார் இந்த முறையும் தமிழரசுக்கட்சிக்குத்தான் நீங்கள் போடவேண்டும். உங்கள் உதவிவேண்டும்” என்றார்.
‘ஐயா இதற்காக ஏன் நீங்கள் போட் ஏறிவந்தீர்கள் . ஒரு கங்கு மட்டையை தமிழரசுக்கட்சியென்று நிறுத்துகள். உங்களுக்கு ஊர்சனம் போடும்.”
‘அது எனக்குத் தெரிந்துதான். உங்களையும் பார்க்க வந்தேன். மேலும் சிலர் மற்றவர்களுக்கு வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்’
‘சில நாய்கள் சாராயத்தை நக்குவதற்காக காசை வேண்டியிருக்கும். அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்’.
இந்த சம்பாசணையை என்னோடு எங்களது ஊரில் பலர் எங்களது வீட்டு கொட்டகையில் நின்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
தமிழரசுக் கட்சித்தலைவர் செல்வநாயகமும் வீ ஏ கந்தையாவும்; எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு மாலை நேரத்து மோட்டார் போட்டில் போய்விட்டார்கள்.
இதன்பிறகு அடுத்த கிழமை தமிழ்க் காங்கிரஸ்காரர்கள் ஊரில் உள்ள சிலரைப் பிடித்து ஒரு கூட்டத்திற்கு ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் மின்சாரம் இல்லாதபடியால் பெட்ரோல்மக்ஸின் ஒளியில்தான் இரவில் கூட்டம் நடத்தவேண்டும்.
அந்தக்கூட்டத்திற்கு பத்துக்கும் குறைவானவர்கள்தான் போயிருப்பார்கள். ஆனால் கூட்டத்திற்கு ஒளி கொடுத்த பெட்ரோல்மக்ஸ் மீது சரியாக குறி பார்த்து கல்லெறிந்தபடியால் அந்தக் கூட்டம் கலைந்தது.
அந்தக்கூட்டத்தைக் கலைத்தவர்கள் எங்களது உறவினர்கள். மேலும் அவர்கள் நமசிவாயம் வாத்தியாரால் கண்டு பிடிக்கப்பட்டு திட்டப்பட்டார்கள்.
இதைவிட முக்கியமான விடயம் முழு எழுவைதீவிலும் தமிழரசுக்கட்சிக்குதான் ஆதரவு. ஆனால் எப்படி சிலபேர் மட்டும் தமிழ்காங்கிரஸ் பக்கம் சாய்ந்தார்கள்?
அதற்குக் காரணம் இருந்தது. சிலருக்கு நமசிவாயம் வாத்தியாரை பிடிக்காது அதனால் அவர்கள் எதிர்கட்சியின் பக்கம் நின்றார்கள்.
இந்தச் சிறு சம்பவம் பல விடயங்களை பிற்காலத்தில் எனக்குப் புரியவைத்தது
ஒரு பிரபலமான கட்சியை அரவணைத்துப் பிடித்தால் அதன் சார்பாக வாக்குக் கேட்பவர்களுக்கு எந்தவிதமான அறிவோ, திறமையே, ஏன் ஒழுக்கமோ கூடத்தேவையில்லை. எனது பாட்டனார் நாற்பது வருடகாலமாக ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும் இருந்தவர் அத்துடன் பெரிய மனிதராக அக்காலத்தில் தீவுப்பகுதியெங்கும் அறியப்பட்டவர். அவரே தமிழரசுக்கட்சி சார்பாக கங்கு மட்டைக்கும் போடுவோம் என்கிறார்.
பெட்ரோல்மாக்ஸ் மீது கல்லெறிந்த வன்முறை அக்காலத்தில் அற்பமாக இருந்தாலும் பிற்காலத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு ஒப்பானதுதான்.
என்ன…. புடையன் பாம்பு அக்காலத்தில் குட்டியாக இருந்தது அவ்வளவுதான்.
நமசிவாயம் வாத்தியார் சொல்லாமலே வன்முறை நடந்தது இதை நமசிவாய வாத்தியாரும் வரவேற்பார் உத்வேக உணர்வில் கல்லெறி நடந்தது.
இவை எல்லாவற்றிலும் முக்கியமானது – அக்காலத்தில் தமிழரசுக்கட்சியினருக்கு எதிர்கட்சியாக வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் அங்கே இருக்கவில்லை. தமிழ் காங்கிரஸ் சார்பாக ஒரு சிலர் அங்கு வேலை செய்தது தமிழரசுக் கட்சியினருக்கு பொறுக்க முடியாததாக இருந்தது.
நமது ஊர் அரசியலை மூட்டை கட்டிவிட்டு அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்போம் என பாண்டிபசாரை நோக்கி நடந்தேன். சிறிது தூரம் கூடச் செல்லவில்லை. எதிர்பார்க்காத காட்சியொன்று எனக்காக காத்திருந்தது. மக்கள் வட்டவடிவமாக தெருவை வளைத்து கூட்டமாக நின்றார்கள். நானும் உட்புகுந்து பார்த்தபோது திரைப்பட சூட்டிங் நடப்பது தெரிந்தது
படம் பார்க்க தியேட்டர் போக நினைத்த எனக்கு வழியில் படம் எடுப்பதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. வாழ்க்கையில் முதன் முறையாக திரைப்படம் எடுப்பதை பார்க்கும் வாய்ப்பு சென்னைக்கு வந்த முதல்நாளே கிடைத்திருக்கிறது. நான் எந்தப் படத்திலும் பார்க்காத நடிகர் ஒருவர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் உடையில் பாய்ந்து ஒருவரை பல முறை வித்தியாசமான கோணத்தில் காலால் உதைத்து அடித்துக்கொண்டிருந்தார். நல்ல கறுப்பு நிறம் கட்டுமஸ்தான தேகம். கண்கள் மட்டும் சிவப்பாக இருந்தது. கண்விழிகளில் சிறு இரத்த நாளங்கள் தெரிந்தன. இவ்வளவு காலமும் திரையில் பார்த்த கதாநாயகர்களின் தோற்றத்திற்கு நேர் எதிராக அவரது தோற்றம் இருந்தது எனக்கு வியப்பைத்தந்தது.
பக்கத்தில் நிற்பவரிடம் ‘யார் இவர்?’ எனக்கேட்டேன்.
அந்தமனிதர் என்னை வேற்றுலகவாசியாக விசித்திரமாக பார்த்து விட்டு ‘விஜயகாந்து சார்’ என்றார்.
‘புது நடிகரா?’
‘இரண்டாவது படம். ஆமா சார் நீ எங்கே இருந்து?’
‘சிலோன்காரன்’;
‘அப்படியா சார் அதான் தமில் டிபரண்டாக இருக்கு. நான் மதுரை பக்கமோ என நினைத்தேன். நம்ம விஜயகாந்த் இங்கு பக்கத்திலதான் இருக்கிறார் அவருக்கு இலங்கையர்மேல் மிகுந்த அன்பு ’ என தொடர்ந்து பேசினார்
விஜயகாந்த் பலதரம் பாய்ந்து பாய்ந்து அடித்தார். இடையில் கட் கட் சொன்னார்கள்.
ஓவ்வொரு அடிக்கும் விஜயகாந்தை குறைந்தது ஐந்து முறை பாய்ந்து அடிக்க வைத்தார்கள்.
சினிமா எடுப்பதைப் போன்ற போர் அடிக்கும் விடயம் வேறு எதுவும் இருக்குமா என நினைத்தேன். ஒவ்வொரு விடயத்தையும் பல முறை ஒருவர் செய்யவேண்டி இருந்தது. சடலத்தைக்கூட பல தடவை சூட்டிங் எடுக்க வேண்டி வரும் என நினைத்தேன்.அன்றே சினிமா பட சூட்டிங் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதை விட்டு அகன்றது..விரைவாக அந்த இடத்தை விட்டு விலகி தியேட்டருக்குள் நுழைந்தேன்.
எதுவும் பிரயோசனமாக செய்வதற்கு இல்லை என நினைத்தால் – வெய்யில் மழை மற்றும் வெக்கை என்பனவற்றில் இருந்து ஒதுங்குவதற்கு சினிமா தியேட்டர் எனக்கு புகலிடமாகியது. பிற்காலத்தில் பலதடவை நேரம் போக்குவதற்காக மட்டுமே தமிழ் சினிமாவை பயன் படுத்தினேன். நான் நினைக்கிறேன் தமிழ் சினிமாவின் முதலாவது நோக்கமும் அதுவாகத்தான் இன்னமும் இருக்கிறது. சில வேளையில் அதுவே இறுதி நோக்கமாகவும் உள்ளது.
இலங்கைத் தமிழரை இந்தியத் தமிழரோடு இணைப்பது பாக்கு நீரிணைக்கு அடுத்ததாக இந்த தமிழ் சினிமாவே சங்கிலியாக தொடர்ந்து வருகிறது. அரசியல் மொழி மற்றும் சங்கீதம் மற்றும் மதம் என்பனவெல்லாம் இரண்டாம் பட்சமானவை
மறுமொழியொன்றை இடுங்கள்