எஸ்.எல். எம்.ஹனிபா
(அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியச் சங்கத்தின் வாசிப்பனுபவ அரங்கில் வாசிக்கப்பட்டது)
சிறுகதை வாழ்வின் ஒரு தருணத்தை காட்டுவது என்கிறார்கள். மேலே போய் உதாரணம் சொல்வதானால் காட்டில் ஒரு மின்னல் ஒளியில் நாம் காணும் தரிசனம் போன்றது .
சிறுகதை, கவிதை மற்றும் நாவலுக்குப் பின்னாக வந்த இலக்கிய வடிவம். முக்கியமாக அமரிக்காவில் மாத வாரச் சஞ்சிகைகள் உருவாகியபோது அதற்கு ஏற்றதான இலக்கிய வடிவம் இந்தச் சிறுகதை .
விஞ்ஞானம்போல் இலக்கியத்திற்குத் திட்டமான விதிகள் இல்லாத போதிலும் சிறுகதையின் கருவையும் அதன் முடிவையும் முக்கியமானதென்பார்கள். இதில் கரு என்பது வெவ்வேறு சமூகத்திற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாறுபடும். ஆனால் முடிவு பெரும்பாலும் கதையின் தரத்தை தீர்மானிக்கும்.
முடிவுகள் இரு விதமாக அமையும்.
முரண்ணகை(Irony)
கதை ஒரு விடயத்தை எடுத்துச் சொல்லி இறுதியில் எதிர் மாறாகக் கதை முடிவது.
புதுமைப்பித்தனின் பொன்னகரம்;- பொன்னகரம் என்ற பகுதியில் பகுதியில் வாழும் ஏழைப் பெண் கணவனுக்குக் கஞ்சி கொடுத்துப் பராமரிப்பதற்காக தனது உடலை விற்று பணம் பெறுகிறாள். இங்கே புதுமைப்பித்தன், “என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே. இதுதான் ஐயா பொன்னகரம்“ என முரண்ணகையாகக் கதையை முடிக்கிறார்.
நண்பர் முருகபூபதியின் தினம் என்ற கதையில் மெல்பனில் ஒருவர் போராட்டத்திற்கு இளைஞர்கள் இல்லை என்று அங்கலாய்க்கிறார். ஆனால் எழுத்தாளர் அவரது ஆண்பிள்ளைகள் ஐவர் மெல்பனில் இருப்பதாக முடிக்கிறார்.
மற்றையது கதைகள் புதிய அனுபவம் அல்லது ஒரு ஞானோதயம் அடைதல் (Epiphany )போன்று முடிவுபெறும்.
த டெட் (The Dead) என்ற ஜேம்ஸ் ஜொய்ஸ் கதையில் விருந்திற்குப் போன கணவன் மனைவி வீடு திரும்புகிறார்கள்.விருந்தில் பாடிய பாட்டொன்றால் மனைவி மனங்கலங்குகிறாள். அந்தப் பாடல் இறந்த அவளது காதலனை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அன்றிரவு மனைவியிடம் உறவு கொள்ள நினைத்துக்கொண்டிருக்கும்போது மனைவி தனக்கு முன்பு ஒருவனைக் காதலித்திருக்கிறாள். அந்தக் காதலுக்குரியவன் இறந்துவிட்டான் என்று மனைவி மூலம் தெரிந்து கொண்ட கணவன் அன்று உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பது அந்தக் கதையின் சிறப்பாக வருகிறது. இதுவரையும் மனைவியின் முதல் காதல் தெரியாத ஒரு விடயம் என்பது மட்டுமல்ல மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் விடயமாக முடிவது புதிய அனுபவம்.
இப்படியான மனித விழுமியமொன்றை தரிசனப்படுத்தும் கதையே எஸ்.எல். எம் ஹனீபா எழுதிய மக்கத்துச்சால்வை என்ற அவரது முத்திரைக்கதை. மனித மனத்தின் அடிப்படை உணர்வான பொறாமை மற்றும் அகங்காரத்துடன் எதிரியைப் போட்டியில் வெல்லவேண்டுமென்ற ஆசை எவருக்குமுண்டு. அதற்கு சிலர் நேர்மையான வழியை மட்டும் தேடும்போது பலர் நேர்மையற்ற பாதையிலும் செல்வார்கள். அதேவேளையில் வெல்லும்போதோ அல்லது நினைத்ததை அடையும்போது எதிரியின் மீது நன்மதிப்பு ஏற்படுகிறது. அப்படியான உயர்ந்த மனித உணர்வே இறுதியில் வெல்வதாக இந்தச் சிறுகதை படம் போட்டுக்காட்டுகிறது.
இந்தக்கதையின் களம் முஸ்லீம்கள் மத்தியில்- இலங்கையின் கிழக்கு மாகாணம். ஆனால் எந்தச் சமூகத்திலும் எந்தக் கலாச்சாரத்திலும் இந்தக்கதை பொருந்தக்கூடியது.
வேலி என்ற கதை அழகான பெண்ணைத் திருமணம் செய்த சில காலத்திலே, கணவன் காலில் காயமடைந்து முடவனாகிறான்.மனைவியின் அழகு அவனுக்கு உச்சி மரத்துப் பழமாகிறது. அந்தப் பெண் நிறைந்த இளமையின் தாகத்தை அனுபவிக்க முடியாதபோது வேறு ஒருவனைச் சந்தித்து அவனோடு போக துணிகிறாள். ஆனால் கணவன் தன்னை அளவிற்கு அதிகமாக நேசிப்பதைக் கண்டு தனது முடிவை மாற்றிக்கொள்கிறாள். கரு வழக்கமான ஆண்மையக் கருத்து. கதையின் அழகு தேன்சிந்தும் மொழி நடை
தீட்டு என்ற கதை மகனுக்கு காசசோய் வந்து அவன் துரும்பாய் இளைத்து விடுகிறான். மகனுக்குப் பேய் பிடித்ததாகச் சொல்ல அதற்கு பேயோட்டுபவர் வந்து சடங்கு செய்கிறார். சடங்கின் இறுதி நிகழ்வு ஆலமரத்தடியில் நடக்கிறது. அங்கு பேயோட்டும்போது அவன் இரத்த வாந்தி எடுத்து மரணமடைகிறான். ஆனால் தாய் யாரோ தீட்டுள்ள பெண் அந்த இடத்திற்கு வந்ததால் இரத்தவாந்தி எடுத்ததாகக் கதறி அழுகிறாள். இது சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கையைச் சாடும் கதை.
பொம்மைகள்;- சமூகத்தில் வசதியற்றவர்கள் பெண் குழந்தைகளை எப்படியாவது கரை சேர்த்துவிடுவோம் என்ற நோக்கில் குழந்தைப் பருவத்திலே வயதானவர்களுக்குத் திருமணம் முடித்துவைக்கும் கதை. இது இஸ்லாமிய சமூகத்தில் அதிகமாக நடந்தாலும் மற்றைய சமூகங்களிலும் நடக்கிறது.
பேய்களுக்கு ஒரு வாழ்க்கை;- ஆற்றில் நிர்வாணமாகக் குளிக்கும் பெண் பேயாகப் பார்க்கப்படும் மிகவும் சிறிய கதை. ஆனாலும் இறுதியில் மாற்றிக் கட்ட வசதியில்லாத தாயின்அவல நிலையால் இரவில் யானைகளுக்குப் பயந்தபடி தனது குழந்தைகளை காவலுக்கு வைத்து விட்டுத் தாய் ஆற்றில் குளிக்கிறாள் என முடியும்போது இதயத்தில் சுருக்கெனத் தைக்கும்.
மேற்சொன்ன மூன்று கதைகளும் நல்ல கதைகள் ஆனால் குறிப்பிட்ட சமூகத்துக்குரியவை. சமூகம் மாறும்போது அவை வலுவிழந்துவிடும். எமது போர்க்காலக்கதைகள் போல. இவற்றை மற்றைய சமுகத்தவனால் மட்டுமல்ல அடுத்த தலைமுறையினரால் புரிந்து கொள்ளமுடியாது போய்விடும். இது மாதிரியான ஏராளமான தென் இந்தியகதைகளை நான் வாசித்திருக்கிறேன். சாதியையோ அல்லது சமுக அமைப்பை வைத்துக் கதையை வரைந்தால் அந்தப் பகைப்புலம் பிற்காலத்தில் அகலும்போது கதை தொன்மையாகிவிடும்
விமர்சனம் என்ற கதை மிகவும் நுட்பமானது. திருடனுக்கு வாழ்க்கைப்பட்டவளது மனநிலையையும் ஊரில் அவர்களைப்பற்றிப் பேசும் பெண்ணினதும் நிலையை மனதளவில் ஒப்பிடுகிறது. இந்தக்கதை மனிதனின் மனவியல்பைக் காட்டுகிறது.
வேட்டை – என்பது மேலதிகாரிக்கு ஓயாமல் பல வேலைகளைச் செய்வதோடு இறுதியில் வேட்டையாடி மானிறச்சி கொண்டு செல்லும் ஒருவன் தனது மனைவி அந்த மேலதிகாரியுடன் இருப்பதை அறிந்து விசனப்படும் கதை.
வேட்டையும் விமர்சனமும் முரண்ணகையை தொட்டுக் காட்டும் கதைகள்.
எஸ்.எல். எம் ஹனீபாவின் சாதாரண கதைகள்கூட மனத்தில் படமாக இடம் பிடிக்கக்கூடியது. காரணம் அவரது எழுத்துத் திறமை. அவரது வார்த்தைகள் குரான் அல்லது பைபிள்போல் சிறிய பந்தியாகவோ அல்லது ஒற்றை வசனமாக வரும். அதில் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்திருக்கும். செயற்படு வினைச் சொற்களை (Active verbs) பாவித்திருக்கிறார்-
உதாரணத்திற்கு வேட்டையில்
“காதனுடைய பாதங்களில் குத்திய முட்களெல்லாம் ‘சுருக் ‘ என்ற ஓலத்துடன் முனை மழுங்கின. “
சாதாரண எழுத்தாளன் எப்படி எழுதியிருப்பான் ?
“காதனுடைய காலின் குத்திய முள்ளை அவன் அலட்சியப்படுத்தினான். “
இன்னும் கொஞ்சம் நல்ல எழுத்தாளன் “காதனது பாதங்களில் முள்ளுகள் குத்தி முனை மழுங்கின” என எழுதியிருப்பான்.
எஸ்.எல். எம் ஹனீபா நான் வாசித்த தமிழ் எழுத்தாளர்களிலே சிறப்பான புனைவுமொழியை கைவரப்பெற்றவர். மிகவும் சிக்கனமான எழுத்தாளர். அவரை அடுத்தமுறை சந்திக்கும்போது கண்ணன் குருஷேத்திரத்தில் கர்ணனிடம் யாசித்ததுபோல் பாவிக்காமல் வைத்திருக்கும் இந்த மொழி திறமையில் சிறிதளவாவது எனக்குத் தரும்படி கேட்பேன்.
காலச்சுவடு பதிப்பகம்
மறுமொழியொன்றை இடுங்கள்