ஆர்ஜனரீனாவில் எனக்குப் பிடித்த இடம் மனிதர்களைப் புதைக்கும் மயானமென்றால் நம்ப முடியுமா?
ரிகலெக்ரா மயானம் -மிகவும் வித்தியாசமானது.


ஆர்ஜனரீனாவின் தலைநகரம். புவனஸ் ஏயர்ஸ் பரண ஆற்றோரத்தில் அமைந்தது. பரண ஆறு அமேசனுக்கு அடுத்த தென்அமரிக்காவின் மிகப்பெரிய ஆறு. அதனது பல கிலோ மீட்டர் அகலமான ஒரு பகுதியில் புவனஸ் ஏயர்ஸ் நகரம் இருக்கிறது. கப்பல்கள் கடலின் வழியே ஆற்றுக்குள் வந்தே புவனஸ் ஏயர்ஸ் துறைமுகத்தை அடையும். இதனால்பிரித்தானியா மற்றும் பிரான்சியக் கடற்படைகள் இந்தப் பகுதியை ஸ்பானியரிடமிருந்து கைப்பற்றப் போர் தொடுத்தன.
நாங்கள் பார்த்த மற்றய தென் அமரிக்க நகரங்கள் போலல்லாது புவனஸ் ஏயர்ஸ் ஐரோப்பிய நகரம்போல் இருந்தது. அகலமான வீதிகள் மிகப் பெரிதான அழகான கட்டிடங்கள் எல்லாம் ஸ்பானியத் தலைநகரம் மாட்ரிட்டை நினைவுக்குக்கொண்டு வந்தது. நாங்கள் சென்ற ஹோட்டலும் ஐரோப்பிய ஹோட்டல்கள்போல் அதிக கவனிப்பற்றது. காலை உணவும் உப்புச்சப்பற்ற பேக்கன் சொசேஜ் வகையறாவாக இருந்தது. இதுவரையும் தென்அமரிக்க நாடுகளில் உள்ளதொலைக்காட்சிகளில் குறைந்த பட்சம் ஆங்கிலத்தில் சி என் என் இருந்தபடியால் அமரிக்கத் தேர்தலை பற்றிய விபரங்கள், விவாதங்களை மற்றும் உலக அரசியல் விபரங்களை அறிய முடிந்தது. ஆர்ஜின்ரீனாவின் ஹோட்டலில் ஒரு ஆங்கிலசனலும் இல்லை. நல்லவேளையாகப் புத்தகங்கள் கைவசம் இருந்தது. இசபல் அலன்டேயின் சிறுகதைகள் கொண்ட புத்தகத்தை அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வந்ததால் வாசிக்க முடிந்தது.
என் மனைவிக்கு அங்கு மிகவும் தாராளமாக பரிமாறும் எம்பனாடோ(Empanadas) எனப்படும் சமோசா மிகப் பிடித்துவிட்டதால் மற்றைய குறைகள் மனதில் நிற்கவில்லை. எம்பனாடோ இறைச்சி சீஸ் வகையறாக்களை உள்ளே வைத்து அவனில் பேக்பண்ணித் தயாரிக்கப்படும்.
எனக்கு நகரத்தை சுற்றிக் காட்டவந்த பெண் இதுவரை உணவாலும் தொலைக்காட்சி இல்லாததால் ஏற்பட்ட கோபத்தைதணித்தாள். அழகாக மட்டுமல்ல எங்களைக் கவனித்த விதம் எதிர்மறையானவற்றை மறக்கச் செய்தது. பயணங்களில் காத்துநிற்றல், விமானம் பிந்துதல், மொழி புரியாமல் தவித்து உதவியற்று உடல் மொழி பேசுதல் என்பன பொறுமையை சோதிப்பதோடு எங்களிடம் இருக்கும் நாங்கள் அறியாத விடயங்களை வெளிக்கொணரும்.
பல பல்கலைக்கழகங்களைக் காட்டி இங்கு தென் அமரிக்க மாணவர்கள் பலர் வந்து ஆர்ஜின்ரீனாவில் கல்வி பெறுவதாகசொன்னாள். ஸ்பானிய மொழிபேசும் நாடுகளில் பெரியதும் மக்கள் தொகை அதிகம் கொண்டது ஆர்ஜனரீனா.
எமது ஹோட்டேலுக்கு பின்பாக இருந்தது நகரத்தின் முக்கிய மயானம். ரிகலெக்ரா மயானம்(Recoleta cemetery) மிகவும் அழகானது 14 ஏக்கர் நிலத்தில் உள்ள இந்த மயானம் உலகத்தில் சிறந்ததொன்றாக பிபிசியாலும் பத்து சிறந்த மயானங்களில் ஒன்றாக சி என் என்னாலும் தெரிவு செய்யப்பட்டது.
மெல்மேனில் உள்ள ஸ்பிரிங்வேல் மயானம் பூங்காவனம்போல் இருக்கும். ஒரு விதத்தில் இங்கு புதைக்கப்பட்டவர்கள் அதிஸ்டசாலிகள் என ஒவ்வொரு மரணநிகழ்வுக்கும் செல்லும்போது நினைத்துக்கொண்ட என்னை இது தூக்கி வாரிப்போட்டது. மயானம் என்ற சொல்லை மாற்றி சிற்பங்களின் கூடம் எனலாம். அங்கு நிலத்திற்கு மேலாக உடல்களை வைத்து கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன்மேல் இறந்தவர்களைச் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள்.
நமது நாடுகளில்கூட இதைக் கடைப்பிடிக்கலாம். ஆங்காங்கு தெருமுனையில் வைத்து பறவைகளால் மற்றும் வாகனங்களின் புகையால் அழுக்காவதை விட ஒரு இடத்தில் எல்லோரையும் வைத்து அதைப் பராமரிக்கமுடியும். ஆர்ஜன்ரீனாவின் ஜனாதிபதிகள், மந்திரிகள், கவிஞர்கள், நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானிகள் எல்லா தங்களது இறுதி மூச்சை விட்டபின்பு இங்குதான் நிம்மதியாக உறங்குகிறார்கள். உல்லாசப்பிரயாணிகள் எங்களைப்போல் கூட்டமாக வந்தார்கள். வழிகாட்டிகள் சகிதம் அவர்கள் நிரை நிரையாக அமைந்திருந்தஅந்தச் சமாதிகள் ஊடாக சென்றபோது அங்கு பூனைகள் மிகவும் நிம்மதியாக எவரையும் பொருட்படுத்தாமல் உறக்கத்தில்இருந்தன . சில எழுந்து சோம்பல் முறித்தவையும் முகபாவத்தில் ஏதோ தங்களுக்குச் சொந்தமான இடத்தை யார் இவர்கள் பார்க்க என்பதைப்போல் இருந்ததைப் பார்த்து நான் ‘இறந்தவர்களுக்குத் துணையாக பூனைகள் மட்டுமே’ என்று சொல்லிவாய் மூடுவதன் முன்பு ஒரு இடத்தில் பலர் குடும்பங்களாகக் கூடி மலர்வளையங்களை வைத்தபடி இருந்தார்கள்.
‘இதுதான் ஈவா பிரானது சமாதி இன்னமும் மக்கள் மறக்க முடியாதா பெண் என்றாள்


ஈவா கிராமப்பகுதியில் தந்தையின் பெயர் தெரியாத குழந்தையாகப் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து நாடக நடிகையாக விரும்பி நகரத்திற்கு வந்தார். ஆர்ஜன்ரீனாவில் ஏற்பட்ட புவி நடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கில் இறந்தவர்களுக்கு உதவிசெய்வதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட நிவாரண நிகழ்ச்சியில் ஈவா பெரோனை சந்தித்து பின்பு இருவரும் தொடர்பில் இருந்தனர். பிற்காலத்தில் பெரோன் தொழில் மந்திரியாகப் பதவியேற்று அவரது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் கைதுசெய்ப்பட்டபோது பெரோனுக்காக மக்கள் போராட்டம் வெடித்தது. பிரபலமான பாடகி, ரேடியோ அறிவிப்பாளர், சினிமா நடிகை என்ற வகையில் ஆர்ப்பாட்டங்கள் கலாச்சார நிகழ்வுகளில் ஈவாவின் பங்கு பெரிதாக இருந்தது. மக்கள் மத்தியில் பிரபலமான ஈவாவை சிறையில் இருந்து வெளிவந்த பெரோன் மணந்தார்.
1946ல நடந்த தேர்தலில் ஈவா, பெரோனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஏற்கனவே வானொலி சினிமா எனப் பிரபலமாகஇருந்த ஈவா கணவர் பெரோனின் வெற்றிக்கு மிகவும் முக்கியமாக இருந்தார்.
பெரோனின் அரசாங்கம் இருந்த காலத்தில் ஈவா பெண்கள் சமஉரிமைக்கு பாடுபட்டதுடன் பெண்களுக்காகக் கட்சியை உருவாக்குகிறார். அவரால் உருவாக்கப்பட்ட பவண்டேசேன் மூலம் வைத்தியசாலைகளை உருவாக்கி ஏழைகளுக்கு உதவினார். கர்ப்பப்பையின் கழுத்தில் ஏற்பட்ட புற்றுநோயால் ஈவா 1952 ம் ஆண்டு தனது 33 வயதில் மரணமடைந்தபோது முழு ஆர்ஜன்ரீனாவும் கதறியது. எந்தப் பதவியிலும் இருக்காத போதிலும் நாட்டின் ஆத்மரீதியான தலைமையை இழந்ததாகக் கலங்கியது.
ஈவா இறந்த பின்பு இராணுவம் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஈவாவினது உடலை இத்தாலிக்குக் கடத்தி அங்கு புகைத்தது. புரட்சிக்கு முன்பாக ஐரோப்பாவிற்கு தப்பியோடிய பெரோன் புதைத்த உடலை 16 வருடங்கள் பின்பாக மீட்டெடுத்த ஸ்பெயினில் தனது வீட்டில் வைத்திருந்தார். 1973 மீண்டும் ஆர்ஜன்ரீனாவில் பெரோன் தலைவராகியது ஈவாவின் உடல் மீண்டும் கொண்டு வந்து இந்த மயானத்தில் புதைக்கப்பட்டது.
ஆர்ஜன்ரீனாவில் ஈவா எந்தக் காலத்திலும் மறக்கப்படாத பெண்மணி எனச் சொல்லப்படுவதை என்னால் அந்த மயானத்தில் பார்க்க முடிந்தது. பல குடும்பங்கள்அமைதியாக மலர்வளையங்களை அங்கு வைத்து விட்டுச் சென்றார்கள் . மற்றைய நாட்டில் தலைவர்கள் இறந்ததும் அவர்களுக்கு மற்றைய தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்துவது போன்ற நிகழ்வல்ல இங்கு நடந்தது. மலர் வளையத்தை வைத்தவர் சாதாரண மனிதர்கள்; தங்கள் மரியாதையை எந்த வற்புறுத்தலும் இன்றி செலுத்துகிறார்கள்.
எகிப்தில் நான் பார்த்த பென்சில் போன்ற நீளமான அமைப்புகள் ஒப்லிக்(obelisk) கருங்கல்லில் செதுக்கி எடுத்தவை. எகிப்தில் இருந்ததை ரோமர் பின்பு பிரித்தானியர் மற்றும் அமரிக்கர்கள் எடுத்துச்சென்று தங்கள் ஊர்களில் வைத்துள்ளார்கள். புவனஸ் அயர்சின் மத்தியில் உள்ளது கொங்கிறீட்டாலும் வெண்கற்களாலும் 67.5 மீட்டர் உயரமாக உள்ளது.


புவனஸ் அயர்சின் மெட்டபோலிட்ன் கத்தோலிக்க தேவாலயம் இது பல காரணத்தால் முக்கியமானது. வெளியாலே நின்று பார்த்தால் உயரமான துண்களுடன் இருந்த முன்பகுதி கிரேக்க கட்டிடகலையில் அமைந்துள்ள அமரிக்க நீதிமன்றங்களினது போலிருந்தது. உள்ளே சென்றபோது ஆரஜன்ரீனா பெரு மற்றும் சிலி என்ற மூன்று நாடுகளையும்ஸ்பானிய காலனி ஆதிகத்தில் இருந்து சுதந்திரம் பெறவைத்த சான் மாட்டின் என்ற தேசிய வீரரின் சமாதியும் சிலையும்இடது பக்கத்தில் இருந்தது. அந்தப் பகுதியை இரண்டு இராணுவ வீரர்கள் 24 மணிநேரமும் காவலிருப்பார்கள். அங்கு காவலர்கள் மாறும் நேரத்தில் நாங்கள் போனதால் அந்த சடங்கைப் பார்க்க்கூடியதாக இருந்தது. இராணுவ வீரனது சமாதி ஆலயத்துள் இடம்பெறுவதா என பலர் பிரச்சனை உருவாக்கியதால் சிலையிருக்கும் பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்ஆலயத்தின் வாசலாலே செல்லவேண்டும்
இந்த சேச்சில்தான் பாப்பாண்டவர் பிரான்சிஸ் காடினலாகும்வரை சேவையாற்றினர். இவரது இளமையான தோற்றங்கள் புகைப்படமாக இங்குள்ளன.
பாப்பாண்டவர் பிரான்சிஸ்சைப் பற்றி ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் இவர்களது குடும்பம் இத்தாலியில் இருந்து ஆரஜின்ரினாவில் குடியேறியவர்கள் என்பதும் அவரது தாய் மகனை மருத்துவராகக் கற்பிக்க விரும்பிய போது மகனும் சம்மதித்தான். பின்பு குருமடத்துக்கு செல்லும் முடிவைச் சொன்னதும் தாய் ‘ஏன் பொய் சொன்னாய்’ எனக்கேட்டுக் கோபித்தபோது ‘அம்மா நான் மனங்களுக்கு மருத்துவராகப் போகிறேன்’ என்று சமாதானப்படுத்த முயன்றார்.
பாப்பாண்டவர் ஜோன் போல், 33 வருடங்களின் பின் இறந்தபோது வத்திக்கானில் உள்ள இருபிரிவினரில் வலதுசாரிகளால் ஜெர்மன் பெனடிக்ரலஸ் (Ratzinger) ஆதரித்தார்கள். அப்பொழுது சிறுபான்மையான வந்தபோது இடதுசாரிகள் காடினல் பிரான்சிசை முன் தள்ளினார்கள்;. அப்பொழுது நிராகரிக்கப்பட்ட காடினல் பிரான்சிஸ் பிற்காலத்தில் முற்போக்குவாதிகளின் கையோங்கியதால் பாப்பாண்டவரானார்.
ஒவ்வொரு சேச்சுக்கு சென்றால் அங்கு வணங்குவது எனது மனைவியின் வழக்கம். நான் பெரும்பாலான சேச்சுகளின் கட்டிட வேலைப்பாடுகளைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டு வெளியே வந்துவிடுவேன்.
‘ஏன் இந்த சேக்சில் இவ்வளவு நேரம்? என்ற கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை காரணம் அது பெரிய பதிலாக இருக்கும்.ஐரோப்பிய கட்டிடக்கலை ஓவியம் போன்றவற்றின் வரலாறுகளை சேச்சுகளில் மட்டுமே பார்க்க முடியும். அந்தரீதியால் அவைகள் ஒரு அருங்காட்சியகத்திற்கோ படிப்பகத்திற்கோ சமமானவை. தென்னமரிக்காவில் சேச்சுகள் 16 நூற்றாண்டின் பின்பாக கட்டப்பட்டவை என்பதால் கிட்டத்தட்ட மறுமலர்ச்சி காலத்தின் பின்பான ஒரே மாதிரியான கட்டிடக்கலையைக் கொண்டவை. மெற்றப்போலிட்டன் சேர்ச் வித்தியாசமானது.

மெற்றப்போலிட்டன் சேர்ச்
கத்தோலிக் மதத்திற்கு 7 நூற்றாண்டில் இஸ்லாம் முக்கிய எதிரியாகியது. சிரியா, துருக்கி மற்றும் எகிப்து கிறிஸ்துவ மதத்தின் ஆரம்பவிளை நிலங்கள். இன்னமும் கிறிஸ்துவமதத்தின் பல எழுத்துகளைக் கொண்ட பப்பரஸ் பகுதிகள் எகிப்தில் அகழ்ந்து எடுக்கப்படுகிறது. கிறிஸ்துவம் பின்பு புரட்டஸ்த்தாந்து மதமாகப் பிரிந்தபோது ஐரோப்பாவில் பல நாடுகளில் கத்தோலிக்க மதம் சிறுபான்மையாகியது. இப்பொழுது தென் அமரிக்காவில் பென்ரிக்கோஸ்ட் மற்றும் இயோகாவின்சாட்சிகள் அதிகமான மக்களை மட்டுமல்ல முக்கியமான அரசியல்வாதிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளை கைப்பற்றி இருப்பதால் கத்தோலிக்க மதம் தன்னை வைத்திருக்கப் போராட வேண்டியுள்ளது.
கம்மியூனிஸ்டுகளின் வீழ்ச்சி தொடங்கிய காலத்தில் போலந்தைச் சேர்ந்த ஜோன் போல் எப்படியாக போலந்து மக்களுக்கும் மற்றைய கமியூனிஸ்ட் அல்லாதவர்களுக்கும் குரலாக இருந்ததுடன் தொடர்ச்சியாக மிகவும் பழமை வாய்ந்த கத்தோலிக்க சமயத்தின் கொள்கைகளின் பிரதிநிதியாக இருந்தாரோ அதற்கு நேர்மாறாக தொழிற்பட்டு கத்தோலிக்க மதத்தின் முற்போக்கு வாதப் பிரதிநிதியாக தொழிற்படவேண்டிய கட்டாயமான பொறுப்பு,பாப்பாண்டவர் பிரான்சிஸ் மேல் சுமத்தப்பட்டுள்ளது.
கற்பத்தடை ,ஆண் பெண் சமத்துவம் மற்றும் திருமணங்களில் சமத்துவம் என்பனவற்றை அங்கீகரித்து மதங்களின் சமத்துவத்தையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக மதபீடத்தை கொண்டு நடத்துவதன் மூலமே கத்தோலிக்க மதம் சாதாரணமக்களின் வாழ்வில் முக்கியப் பொருளாக இருக்கமுடியும் என உணர்ந்த மகானை வைத்திருந்த கருப்பையானது அந்த மெட்டபோலிட்டன் சேர்ச் என்பதால் அதிக நேரம் அங்கு செலவிட்டேன் என்பது பெரிய பெரிய பதிலாக இருக்கும். எனது மனைவிக்கும் அதைக் கேட்கும் பொறுமை இராது என்பதால் சிரிப்போடு அங்கிருந்து விலகினேன்.
noelnadesan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி