எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்
கலாநிதி அமீர் அலி
( பொருளியல்துறை – மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா)
(அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் மெல்பனில் நடைபெற்ற நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்ட உரை)
இத்தலைப்பிலே ஒரு பெரும் சிக்கலுண்டு. அதனைத் தெளிவுபடுத்துதல் முதலில் அவசியம். தமிழ் என்பது ஒரு மொழியின் பெயர். முஸ்லிம் என்பது ஒரு மதத்தவரின் பெயர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவரும் மொழிவாரியாக நோக்கின் தமிழரே. எனவே தமிழரென்ற பெயரை மொழிவாரியாக மட்டும் உபயோகப்படுத்தினால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல அம்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட அனைவருமே தமிழராகின்றனர். அதேபோன்று இஸ்லாத்தைப் பின்பற்றும் எவ்வினத்தவராயினும் அவர்கள் முஸ்லிம்களே. ஆகவே, தமிழரென்பது எவ்வாறு ஒரு தனிப்பட்ட இனத்தவருக்குமட்டும் சொந்தமான பெயராக இருக்க முடியாதோ அதேபோன்று முஸ்லிம் என்பதும் ஒரு தனிப்பட்ட இனத்தவரின் பெயராக இருக்க முடியாது.
இதனைத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் தமிழ்நாட்டு முஸ்லிம்கள். ஆகவேதான் அவர்கள் தங்களைத் தமிழரென்று மனங்கூசாமல் அழைக்கின்றனர். அத்துடன் நின்றுவிடாமல் இன்னுமொரு படியேறி தாம் திராவிட முஸ்லிம்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர். எனவே அவர்கள் இனத்தால் திராவிடர், மொழியால் தமிழர், மதத்தால் முஸ்லிம்கள். இதனாலேதான் ஒரு முறை அண்ணாத்துரை அவர்கள் தமிழக முஸ்லிம்களை “காலணாக்கள்” என வருணித்தார். காலணா இன்றி முழு அணா எவ்வாறு உருவாக முடியாதோ அதேபோன்று முஸ்லிம்கள் இல்லாமல் தமிழகம் இயங்கமுடியாதென்பதை அவருடைய புலமைப் பாணியிலே சுட்டிக்காட்டினார்.
இதனோடு ஒப்பிடுகையில் ஏன் தமிழையே தாய்மொழியாகக் கொண்ட இலங்கைவாழ் முஸ்லிம்கள் தம்மைத் தமிழரென இனங்காணத் தயங்குகின்றனர்? அதேவேளை ஒரு திராவிடரோ சிங்களவரோ சீனரோ இஸ்லாத்தைத் தழுவிவிட்டால், அவர் தன்னை முஸ்லிமென்று அழைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இச்சிக்கல் ஏன் தெளிவடையாமல் ஒரு தீராத பிரச்சினையாகவும் நல்லிணக்கத்தைக் குலைப்பதொன்றாகவும் தமிழ்மொழியைத் தாய்மொழியகக் கொண்டவரிடையே இன்றுவரை நிலைத்திருக்கின்றது?
தமிழ்ப் பேசும் மக்கள் என்ற போர்வைக்குள் முஸ்லிம்களை உள்ளடக்கியமை ஓர் அரசியல் உபாயமேயன்றி அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு வழியல்ல. முஸ்லிம்களின் தயக்கத்துக்குரிய காரணங்களை ஆராய்ந்தபின்னர் எழுத்தாளர்களின் பங்களிப்பையும் பணிகளையும்பற்றி விபரிக்கலாம்.
அதற்கு முன்னர், இத்தலைப்புக்குள் நல்லிணக்கம் என்ற ஒரு வார்த்தையும் இருக்கின்றது. இந்த நல்லிணக்கம் தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா தமிழரென்ற இனத்துக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலா என்பதை ஆராயின் தமிழுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நல்லிணக்கம் அன்றுமிருந்தது, இன்றுமிருக்கிறது, இன்னுமிருக்கும்.
ஆனால், இந்த நல்லிணக்கம் எந்த அளவுக்கு ஆழமானது என்பதிலும் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறது. இன்று இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமின்றி சிங்களப் பகுதிகளுக்குள் வாழும் முஸ்லிம்களும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ளமையையும், அம்முஸ்லிம்களின் மத்தியிலிருந்து அற்புதமான பல தமிழிலக்கியப் படைப்புகள் ஆண்டுதோறும் வெளிவந்து கொண்டிருப்பதையும், மேலும் அவர்களின் மார்க்கச் சொற்பொழிவுகளெல்லாம் தமிழ் மொழியிலேயே பள்ளிவாசல்களில் நடைபெறுகின்றன என்பதையும் நோக்குகையில் தமிழுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள நல்லிணக்கம் காலத்தையும் வென்றதொன்று என்பதை மறுக்க முடியாது.
ஒன்பது மாகாணங்களில் தமிழ் வளர்ப்போர்
1970 களில் கல்வி மந்திரியாக இருந்த பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் மட்டக்களப்பில் ஒரு பொது மேடையிலே உரையாற்றியபோது அங்கு குழுமியிருந்த இந்து, கிறிஸ்தவத் தமிழர்களை நோக்கி, “நீங்கள் இரண்டு மாகாணங்களில் தமிழை வளர்க்கிறீர்கள், நாங்களோ ஒன்பது மாகாணங்களிலும் வளர்க்கிறோம்” என்று பெருமையுடன் பேசியதை நான் கேட்டேன். அதுமட்டுமன்றி, இன்றும்கூட ஒரு தனிச் சிங்களக் கிராமத்திலே ஒரு தமிழ்ப் பத்திரிகையையோ புத்தகத்தையோ பலரும் கேட்கும்படியாக ஒருவர் குரலெழுப்பி வாசிப்பாராயின் அவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருப்பார். இவ்வாறு தமிழ் மொழியுடன் இரண்டறக் கலந்து வாழும் இம்முஸ்லிம்கள் ஏன் தம்மை மொழிவாரியாகவேனும் தமிழரென அழைப்பதற்குத் தயங்குகின்றனர்? இது ஒரு புதிராகத் தோன்றவில்லையா?
இந்தப் புதிருக்கு விடை காணவேண்டுமானால் தமிழுக்கு முஸ்லிம்களிடையே என்ன அந்தஸ்து நிலவுகின்றதென்பதை முதலில் விளங்கவேண்டும். இலங்கைக்குள் இஸ்லாம் புகுந்த நாள் தொடக்கம் இன்றுவரை அரபு மொழியே இஸ்லாத்தின் மொழி. ஆதலால் அந்த மொழியின் ஸ்தானத்தில் வேறெந்த மொழியையும் உயர்த்திவைக்க முடியாதென்ற ஒரு கொள்கையை பரம்பரை பரம்பரையாக முஸ்லிம் மதத் தலைவர்கள் போதித்து வந்துள்ளனர். இதனாலேதான் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து வெளிவந்த எத்தனையோ இஸ்லாமியத் தமிழ் நூல்கள் அரபுத்தமிழ் என்ற ஒரு புதிய லிபியில் எழுதப்பட்டன. அது எழுத்துவடிவில் அரபி, ஓசைவடிவில் தமிழ். இன்று அந்த லிபி வழக்கிலில்லை. என்றாலும்கூட மதத்தலைவர்களின் தவறான ஒரு போதனையால் தமிழரென்ற இனத்துக்குள்ள தமிழ்ப்பற்று தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களுக்கு இல்லையென்றே கூறுவேன்.
இதனாலேதான் 1950களில் மொழிப் பிரச்சினை தலைதூக்கியபோது முஸ்லிம் தலைவர்கள் எந்தத் தயக்கமுமின்றிச் சிங்களத்தை ஆதரித்தனர். சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியபோது ஓரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதி அரபியிலே அந்த எழுத்தை எழுதி மோட்டார் வாகனங்களில் ஒட்டுமாறு தம் முஸ்லிம் ஆதரவாளர்களைத் தூண்டினார். முஸ்லிம் வைதீக மதவாதிகளைப் பொறுத்தவரை தமிழோ சிங்களமோ ஆங்கிலமோ, அரபி தவிர்ந்த வேறெந்த மொழியோ, அவையெல்லாம் நிச்சயமற்ற இந்த உலக வாழ்வுக்கு மட்டுமே வேண்டியவை. அரபு மொழி மட்டுமே இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் ஒரு மொழி என்ற கொள்கை இன்றும் பரவலாக நிலைத்திருப்பதால், தமிழை முஸ்லிம்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தபோதும்கூட அவர்களது தமிழ் மொழிப்பற்று ஆழமானதொன்றல்ல என்பதே எனது வாதம். முஸ்லிம்கள் அரபு மொழியையே கற்கவேண்டும், பேசவேண்டும், எழுதவேண்டும் என்ற பிரச்சாரம் 1980களுக்குப்பின் வைதீகவாதிகளால் பல நாடுகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளதை இச்சந்தர்ப்பத்தில் மறத்தலாகாது.
எனவே, மொழிவாரியாக நோக்கினும் இனவாரியாக நோக்கினும் நல்லிணக்கம் என்பது தமிழரென்ற ஒரு தனி இனத்துக்கும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களுக்குமிடையே ஒரு பிரச்சினையாக இலங்கையில் தோற்றமெடுத்துள்ளதில் ஆச்சரியமில்லை. இது ஒரு கசப்பான உண்மையென்பதை யாரும் மறுக்கமுடியாது.
இது தொடர்பாக இன்னுமொரு கேள்வியையும் முன்னிலைப்படுத்த வேண்டியுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களவரும், தமிழரும், முஸ்லிம்களும் மிகநெருக்கமாகவும் பரஸ்பர நல்லிணக்கத்துடனும் வாழ்ந்துவந்த இலங்கையில் எப்போதிருந்து அந்தப் பரஸ்பரச் சூழல் மாறத்தொடங்கியது? குறிப்பாக தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே ஆயிரமாண்டுகளாக நிலவிவந்த நல்லிணக்கம் எப்படி எங்கே யாரால் நிலைகுலைக்கப்பட்டது? இதற்குரிய விடைகளை விளங்காமல் நல்லெண்ணெத்தை எப்படி வளர்ப்பதென்பதைத் தெளிவாக ஆராய முடியாது. அந்த விடைகளைக் காண வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவது அவசியம்.
அவ்வாறு புரட்டும்போது தோன்றுகின்ற ஒரு முக்கிமான வரலாற்றுண்மையை இங்கே சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள் ஒரு கலப்பினத்தவர். ஆரம்பத்தில் அரேபியத் தீபகற்பத்திலிருந்தும், பாரசீகத்திலிருந்தும் அவர்களின் மூதாதையர் இலங்கைக்கு வந்திருந்தாலும் காலவோட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்திய உபகண்டத்திலிருந்தே வந்து குடியேறியுள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் இலங்கையைக் கைப்பற்றியபோது வருடந்தோறும் 500 அல்லது 600 முஸ்லிம்களாவது அங்கிருந்து வந்தனரென்று ஒரு போர்த்துக்கீச வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். பின்னர், பதினேழாம் நூற்றாண்டில் ஒல்லாந்தராட்சி தொடங்கியபோது இந்தோனேசிய முஸ்லிம் குடும்பங்கள் பல அங்கிருந்து ஒல்லாந்தரால் வெளியேற்றப்பட்டு இலங்கையிலே குடியேற்றப்பட்டனர். ஆகவே, இலங்கை முஸ்லிம்கள் அரேபிய-பாரசீக-இந்திய-மலாய குருதிக் கலவையால் உருவாகிய ஒரு கூட்டம். இது தந்தையர் வழியாக முஸ்லிம்களின் பூர்வீகத்தைக் கிளறும்போது தோன்றும் ஓருண்மை. ஆனால் தாய்வழியிலே அப்பூர்வீகத்தைக் கிண்டினால் வேறோர் உண்மை வெளிவரும். அதாவது ஆதியிலே வந்து குடியேறிய முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் ஆண்களே.
அவர்கள் குடும்பங்களாக தாய், மனைவி, மக்களுடன் வந்து குடியேறவில்லை. மாறாக, இங்குள்ள சிங்கள, தமிழ், முக்குவ, பெண்களைத் திருமணம்செய்தே தமது குடும்பங்களைப் பெரும்பாலும் பெருக்கியிருக்க வேண்டும். எனவே இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை ஆண்வழியில் நோக்குகையில் அது மத்திய கிழக்கிலோ, இந்திய உபகண்டத்திலோ, மலாயதீவுக்கூட்டுக்குள்ளேயோ போய்முடியலாம். ஆனால், தாய்வழியில் நோக்குகையில் அது ஒரு சிங்களத்தியிலோ தமிழச்சியிலோதான் முடிவடையும். அவ்வாறாயின் இலங்கை முஸ்லிம்கள் அங்குவாழ் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் மச்சான்களும் மாமன்களுமாகின்றனரல்லவா?
இதை ஏற்றுக்கொண்டால் பொது பல சேனையும், சிங்ஹ லேயும், யாழ்நகரிலே புதிதாக உருவாகத் துடிக்கும் சிவ சேனையும் முஸ்லிம்களை நோக்கி, ” நீங்கள் அரேபியாவுக்குச் செல்லுங்கள் ” என்று கூறுவதில் ஏதேனும் அர்த்தமுண்டா? இலங்கை இன்று எதிர் நோக்கும் பேரினவாதச் சூழலில் தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கத்தைப்பற்றிக் கலந்துரையாடும் நாம் இந்த வரலாற்றுண்மையை மனதிற் கொள்ள வேண்டும்.
இன நல்லிணக்கத்திற்கு நேர்ந்த பின்னடைவு
அது ஒரு புறமிருக்க, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காற்பகுதிவரை இலங்கை முஸ்லிம்களிடம் தமது இனம்பற்றிய வாதப்பிரதிவாதங்கள் எழவே இல்லை. அவர்கள் யாரென்பதுபற்றி அவர்களுக்கே தெளிவான ஒரு விளக்கமிருக்கவுமில்லை. இந்தச் சூழலிலேதான் பிரித்தாளும் பிரித்தானியரின் குடியேற்ற ஆட்சி அப்போதிருந்த இலங்கைச் சட்டசபையிலே இனவாரியாகப் பிரதிநிதிகளை நியமிக்கலாயிற்று. தமிழரின் பிரதிநிதியாக சேர் பொன்னம்பலம் இராமநாதன் அப்போது நியமனம் பெற்றிருந்தார். ஆனால், 1880 களில் முஸ்லிம்களுக்கும் ஒரு பிரதிநிதி அச்சட்டசபையிலே நியமனமாகக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எழுந்தது. இதை உணர்ந்த இராமநாதன், ” முஸ்லிம்களும் தமிழர்களே, ஆனால் அவர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள் எனவும் அவர்கள் பேசுவது தமிழ், அவர்களின் சமூக சம்பிரதாயங்கள் எத்தனையோ தமிழரின் சம்பிரதாயங்களே” எனவும் வாதிட்டு அவரது வாதத்தின் அந்தரங்க நோக்கமாக முஸ்லிம்களுக்கெனத் தனிப்பட்ட பிரநிதித்துவம் தேவையில்லையென்ற கருத்துப் பொதிந்திருந்ததை முஸ்லிம்கள் உணர்ந்தனர்.
இதனால் கொதிப்படைந்த சித்தி லெப்பை, ஐ. எல். எம். அப்துல் அஸீஸ் போன்ற முஸ்லிம் தலைவர்கள் இனத்தால் முஸ்லிம்கள் சோனகரென்றும், அவர்களையே ஆங்கிலத்தில் மூஅர்ஸ் என்று அழைக்கின்றனரென்றும், அப் யெர்களைப்பற்றிய ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரையை எழுதி வெளியிட்டு அரசாங்கத்தின் கவனைத்தை ஈர்த்தனர். இந்தப் பெயர்களின் வரலாற்றுத் தோற்றத்தைப்பற்றிய சர்ச்சைக்குள் நான் இங்கு நுழைய விரும்பவில்லை.
அது இவ்வுரையின் தலைப்புக்குத் தேவையுமில்லை. இருந்தும் இப்போராட்டத்தில் முஸ்லிம்கள் வெற்றிகண்டு சட்டசபையில் தமது சமூகத்துக்கெனத் தனிப்பிரதிநிதி ஒருவரையும் பெற்றுக் கொண்டனர். ஆனால், துரதிஷ்டமாக இந்தச் சம்பவமே முஸ்லிம்களுக்கும் தமிழருக்குமிடையே குறிப்பாக தமிழ்த் தலைவர்களுக்குமிடையே முதன்முதலாக ஒரு கசப்புணர்வைத் தோற்றுவித்தது. இந்தக் கசப்புணர்வே அரசியல் உருவத்தில் படிப்படியாக வளர்ந்து இரு சமூகத்தாரிடையேயிருந்த நல்லெண்ணத்தைச் சிதைக்கலாயிற்று.
1915ஆம் ஆண்டு வெடித்த சிங்கள-முஸ்லிம் இனக்கலவரத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் சிங்கள கடும்போக்கு தீயசக்திகளினால் தாக்கப்பட்டு பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தமையை வரலாற்றேடுகள் வெளிப்படுத்தியுள்ளன. அந்தக் கலவரத்துக்குத் தூண்டுதல் வழங்கிய பல பௌத்த சிங்களத் தலைவர்களை அரசு கைது செய்து சிறையிலடைத்ததையும் அதே வரலாறு சுட்டிக்காட்டுகின்றது. ஆனால், அந்தக் கைதிகளின் விடுதலைக்காக இங்கிலாந்துவரை சென்று வாதாடியவர் தமிழரின் தலைவர் இராமநாதன் என்பது முஸ்லிம்களுக்கு எத்தகையதொரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்குமென்பதை அன்றையத் தமிழ்ச் சமூகம் உணரத்தவறியதால், ஏற்கனவே இராமநாதனால் உடைபட்ட தமிழர்-முஸ்லிம் நல்லிணக்கம் மேலும் சிதறுண்டது. பின்பு, 1930, 1940களில் இந்தியச் சுதந்திரப் போராட்டம் பாக்கிஸ்தான் பிரிவினைப் போராட்டத்தைத் தோற்றுவித்தபோது தமிழ்த் தலைவர்களும் அவர்தம் ஆதரவாளர்களும் காந்தி பக்தர்களாகமாறி காங்கிரசை ஆதரித்துநிற்க, முஸ்லிம் தலைவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் ஜின்னாவின் பக்தர்களாக நின்று முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர். இந்த நிகழ்வு தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இருந்த உறவை தொடர்ந்து நலிவடையச் செய்தது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு சிங்களவர்- தமிழர் உறவு பாஷைப் பிரச்சினையால் வேகமாகச் சிதைவுறத் தொடங்குவதற்கும் முன்பாக எழுந்த முஸ்லிம் பாடசாலைப் போராட்டம் முஸ்லிம் – தமிழர் நல்லுறவை மேலும் சீரழித்தது. இது ஒரு கசப்பான போராட்டம். இன்றுவரை இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிபற்றி ஆராய்ந்த ஆய்வாளர்களெவரும் இந்தப் போராட்டத்தைப் பற்றிப் பூரணமாக ஆராயாதது ஒரு பெருங்குறையே. அதைப்பற்றி இங்கு விளக்கமளிக்க நான் விரும்பவுமில்லை. ஆனால், அப்போராட்டத்தத்தைத் தொடர்ந்து மேலும் பல பிரிவினைவாதங்கள் நமது இரு சமூகங்களுக்கிடையேயும் ஒன்றன்பின் ஒன்றாக வளரலாயின. உதாரணத்துக்குச் சில: இலங்கை வானொலியின் தேசிய தமிழ் ஒலிபரப்பில் முஸ்லிம்களுக்கென பிரத்தியேக நேரம் தேவை என்ற கோரிக்கை, காலையிலே இடம்பெற்ற நற்சிந்தனை நிகழ்ச்சியிலும் சைவ நற்சிந்தனை, கிறித்தவ நற்சிந்தனை, இஸ்லாமிய நற்சிந்தனை என்ற பிரிவு ஏற்பட்டமை தமிழ் இலக்கியத்திலே முஸ்லிம் தமிழ் இலக்கியத்தை மட்டுமே முஸ்லிம் பாடசாலைகளிற் படிப்பிக்கும் முயற்சி, என்றவாறு கலையையும் கல்வியையும் சிந்தனையையும் இனவாரியாகவும் மதவாரியாகவும் பிரித்ததனால் முஸ்லிம் – தமிழர் நல்லிணக்கம் ஓயாது சரிவடைந்தது.
இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல் அமைந்ததுதான் தமிழரதும் முஸ்லிம்களதும் அரசியல் போக்கு. தமிழரின் அரசியல் தலைவர்களும் முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களும் ஒருவரையொருவர் என்றுமே நம்பியதில்லை. தமிழரசுக் கட்சித்தலைவர்களோ இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர்களோ என்றுமே முஸ்லிம்களை சமநிலையில் வைத்துக் கணித்ததுமில்லை. அதேபோன்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ்த் தலைவர்களைத் தமது இனத்தின் பரம எதிரிகளாகவே கருதினர். உதாரணத்துக்காக சில தலைவர்களின் வெளிப்படையான கூற்றுக்களை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:
முஸ்லிம்களைப்பற்றித் தமிழ்த் தலைவர்களின் சில கூற்றுக்கள்:
“நீங்கள் (முஸ்லிம்கள்) தராசோடும் முழக்கோலோடும் வந்தீர்கள், நாங்களோ வாளுடன் வந்தோம். உங்களை எப்படி நாங்கள் சமநிலையில் வைத்துப் பேசலாம்.”
“நீங்கள் அங்காடியில் வியாபாரம் செய்ய இடம் கேட்கிறீர்கள், நாங்கள் அரண்மனையிலே அந்தஸ்துக்காகப் போராடுகிறோம்.”
“நீங்களோ மாளிகைகளிலே வாழ்ந்துகொண்டு உங்கள் பாடசாலைகளை மாட்டுத் தொழுவங்களாக வைத்திருக்கிறீர்கள். நாங்கள் மண்குடிசைகளிலே வாழ்ந்துகொண்டு எங்கள் பாடசாலைகளை மாளிகைகளாக வைத்திருக்கின்றோம்.”
“ஆகவே உங்களை எவ்வாறு நாங்கள் சமநிலையில் வைக்கலாம்?”
தமிழரைப்பற்றி முஸ்லிம் தலைவர்களின் சில கூற்றுக்கள்:
“மூன்று தமிழனைத்தான் நம்பலாம்: இறந்தவன், இன்னும் பிறவாதவன், புகைப்படத்திலிருப்பவன்”
“தமிழன் ஒரு காபிர் (இறைவனை நிராகரிப்பவன்) காபிரின் உறவு கரண்டைக் காலுக்குக் கீழ.”
“தமிழனையும் சிங்களவனையும் சேரவிட்டால் நாம் மூழ்குவோம், பிரித்துவைத்தால் நீந்துவோம்.”
இக்கூற்றுக்களை மையமாகவைத்து வளர்ந்த இன உணர்வும் இன உறவும் எவ்வாறு நல்லிணக்கத்தை இரு சாரார்க்குமிடையே வளர்க்க முடியும்?
இவ்வாறு ஒருவரை மற்றவர் நம்பாமல் வாழ்ந்த சூழலில் வியாபாரத் திறனுள்ள முஸ்லிம்களும் அவர்களின் தலைவர்களும் பெரும்பான்மை இனத்துடன் சேர்ந்து தமிழரின் கண்ணீரிலே அரசியல் இலாபம் தேடியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 1950களிலிருந்து 2009 வரையுள்ள இலங்கையின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களின் அரசியல் அத்தியாயத்தினுள் இழையோடி நிற்கும் ஒரே உண்மை இதுதான். இதனைப் பூசி மெழுக வேண்டிய அவசியமில்லை.
ஆனாலும் இத்தனைக்கும் மத்தியிலே வடக்கிலும் கிழக்கிலும் அதுவும் குறிப்பாகக் கிழக்கில் வாழும் தமிழரையும் முஸ்லிம்களையும் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் பிட்டும் தேங்காய்ப் பூவும்போன்று நெருங்கி வாழ்கின்றனரென்று மேடைப் பிரசங்கிகள் வாயாரப் புகழ்வதையும் கேட்கிறோம். நெருங்கி வாழ்வது வேறு. இணங்கி வாழ்வது வேறு. இந்தப் பிரசங்கிகளிடம் நான் கேட்கும் கேள்வி இதுதான்: நீங்கள் குறிப்பிடும் பிட்டு வண்டுப் பிட்டா? குழல் பிட்டா? வண்டுப் பிட்டுக்குள் மாவும் தேங்காயும் கலந்திருக்கும். ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிப்பது கடினம். ஆனால், குழல் பிட்டில் தேங்காயும் மாவும் ஒன்றின்மேல் மற்றது ஓரத்தில் தொட்டுக் கொண்டிருந்தாலும் அவை உண்மையிலே பிரிந்துதான் இருக்கின்றன. கிழக்கிலே இதைத்தான் காண்கிறோம். மட்டக்களப்புக்குத் தெற்கே முஸ்லிம்கள் வதியும் காத்தான்குடி மாவென்றால் அதன் இருகோடியிலும் அமைந்துள்ள தமிழ்க் குடிகளின் ஆரையம்பதியும் கல்லடியும் தேங்காய்ப்பூ. முஸ்லிம்களின் சாய்ந்தமருதூரும் நிந்தவூரும் தேங்காய்ப்பூவென்றால் அவ்வூர்களுக்கு நடுவிலே சிக்கியிருக்கும் தமிழர்களின் காரைதீவு மாவு. அதேபோன்று மட்டக்களப்புக்கு வடக்கே முஸ்லிம்களின் ஏறாவூர் தேங்காய்ப்பூ என்றால், அதன் இருமருங்கிலுமுள்ள தமிழர்களின் தன்னாமுனையும் செங்கலடியும் மாவு. இப்படி நெருங்கி வாழும் இரு இனங்களின் உறவு ஓர உறவா? ஆழ உறவா?
குழல் பிட்டு வண்டுப் பிட்டாக மாறவேண்டுமாயின் இன உறவு ஆழமானதாக மாறவேண்டும். அந்த உறவு பல பரிமாணங்களில் வடிவெடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, குடும்பங்களிடையே திருமணங்களும் விருந்துபசாரங்களும் இளைஞர்களிடையே இனங்கலந்த விளையாட்டுக் கழகங்களும், இசைக் குழுக்களும், கலாசார நிகழ்வுகளும், புத்திஜீவிகளிடையே இனங்கலந்த இலக்கிய மன்றங்களும், வாசகர் வட்டங்களும், சமூகசேவை இயக்கங்களும் என்றவாறு பல வடிவங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் கலந்துறவாடும்போதுதான் இன உறவும் நல்லிணக்கமும் ஆழமாகக் காலூன்றும். வடக்கிலும் கிழக்கிலும் இந்த வடிவங்கள் உண்டா? இல்லையென்றால் இவ்விரு சமூகத்தாரின் உறவு ஓர உறவே.
சந்தையிலே மட்டுமே இவ்விரு இனங்களும் சந்தித்து உறவாடுகின்றன. ஒரு முஸ்லிமோ தமிழனோ ஒரு பொருளையோ சேவையையோ இன்னொரு தமிழனுக்கோ முஸ்லிமுக்கோ விற்கிறான். மற்றவன் அதை வாங்குகிறான். அத்துடன் அவர்களின் உறவு அடுத்த சந்தைச் சந்திப்புவரை பூரணமாகிவிட்டது. முன்னர் குறிப்பிட்ட அர்த்தபுஷ்டியுள்ள உறவுப் பரிமாணங்களெல்லாம் தத்தமது சொந்த இனத்துக்குள்ளேதான் காணப்படுகின்றன. இதுதான் வடக்கிலும் கிழக்கிலும் இன்று நாம் காணும் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை மூடிமறைத்துவிட்டு, நாங்கள் பிட்டும் தேங்காய்ப்பூவும்போல் நெருங்கி வாழ்கிறோம் என்று பறையடிப்பதில் எந்த அர்த்தமுமில்லை. சந்தை உறவைக்கூட இனி வேண்டாமென்று இன்று ஓர் இயக்கம் வடக்கிலும் கிழக்கிலும் தலைவிரித்தாடுவதை யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும், கிரானிலும் காளான்கள்போன்று தோன்றிமறையும் சுவரொட்டிகள் அம்பலப்படுத்துகின்றன.
இன்று காணப்படும் ஓர உறவை ஆழ உறவாக்கினாலன்றி இவ்விரு சமூகங்களுக்கிடையேயும் நல்லிணக்கமென்பது வெறும் மேடைப் பேச்சாகத்தானிருக்கும். இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதில் எழுத்தாளர்களின் பணியும் பங்களிப்பும் அவசியமாகின்றது. இது காலத்தின் கட்டாயம்.
எழுத்தாளர் என்பவர்கள் ஒரு சமூகத்தின் புத்திஜீவிகள் என்ற வட்டத்துக்குள் அடங்குவர்.; தற்கால அரசறிவியல் எழுத்தாளர்களை ஒரு சமூகத்தின் ஆறாவது பிரிவுக்குள் அடக்குகின்றது. இந்தப் பிரிவுகளின் வரலாற்றை இங்கே சுருக்கமாக விளக்குவது இவ்வுரையின் தலையங்கத்துக்கு அவசியமாகின்றது. பிரஞ்சுப் புரட்சிக்காலத்தில் மூன்று சமூகப் பிரிவுகளையே அரசறிவியல் வகுத்திருந்தது. முதலாம் பிரிவில் மதபீடத்தையும் இரண்டாம் பிரிவில் பிரபுத்துவத்தையும் குறிப்பிட்டு இவ்விரண்டினதும் மேலாதிக்கத்தினுக்கு எதிர்பலமாக பொதுமக்களை மூன்றாம் பிரிவில் அடக்கியது.
ஆனால், காலவோட்டத்தில் பொதுமக்களின் பலம் சந்தைச் சரக்காக மாறத்தொடங்கவே பிரதான ஊடகத்துறையை நான்காவது சக்தியாக அரசறிவியல் கருதியது. இத்துறை சமூகப்பிணிகளை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி அதற்குப் பரிகாரந்தேடும் பொறுப்பை ஆட்சியாளர்களுக்கு வலிந்துரைத்து ஒரு பயனுள்ள அதேவேளை பலமுள்ள சக்தியாக சமூகத்தில் இயங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் ஆட்சியாளர்களின் கைப்பிள்ளையாக மாறத் தொடங்கியதனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி சமூக ஊடகத்துறையை சமூகத்தின் ஐந்தாம் பிரிவாக மாற்றி அது ஒரு மாற்றுப்பலமுள்ள சக்தியென இயங்குமென அசறிவியல் எதிர்பார்த்தது.
ஐயோ! அதுவும் நான்காவது பிரிவின் மேலாதிக்கத்துக்கு அடிமையாகக்கூடிய வாய்ப்பிருப்பதனால் ஓர் ஆறாம் பிரிவை அரசறிவியல் இன்று இனங்கண்டுள்ளது. இந்த ஆறாவது பிரிவுக்குள் சமூகத்தின் நிலபரங்களையும் அங்கே நடைபெறும் மாற்றங்களையும் கூர்மையாக நோக்கி அவற்றுள் நல்லதைப் போற்றி அல்லதைத் தூற்றி அறிவுபூர்வமாகத் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் புத்திஜீவிகள் அடங்குவர். எழுத்தாளர்களும் இந்தப் பிரிவின் முக்கிய அங்கத்தவர்களே.
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உயர் மட்டத்தில் அதாவது இலக்கிவாதிகளிடையேயும் அறிவுஜீவிகளிடையேயும் நல்லிணக்கம் வளர்ந்திருக்கிறது, வளர்கிறது, இன்னும் வளரும். ஆனால், கண்ணாடிச் சாளரத்தினூடாகக் கண்ணைக் கவரும் வண்ண ரோஜாக்களைப் பார்த்துவிட்டு வெளியிலே வசந்தம் பிறந்துவிட்டதென்று கூறமுடியுமா?
எனவே பிரச்சினை உயர்மட்ட மக்களுக்கிடையே இல்லை. ஆய்வாளன் அப்துல் கரீமும் இலக்கியவாதி இராமலிங்கமும் அரங்குகளிலும் அங்காடித் தெருவிலும் அகந்திறந்து பேசி உறவாடி உண்டு களித்திருக்கலாம். ஆனால், இரு சமூகங்களினதும் அடிமட்டத்தில் வாழும் கந்தசாமியும் கச்சி முகம்மதுவும் அவ்வாறு உறவாடுகிறார்களா? அவர்களின் உறவைப் பிரித்துத்தானே அரசியல்வாதி தன்கோட்டையைக் கட்டுகிறான். அவனின் கோட்டையைத் தகர்த்தெறிந்து இன நல்லிணக்கத்தை வளர்க்க எழுத்தாளர்கள் என்ன செய்யவேண்டும்? இதுதான் இன்று எம்மை எதிர்நோக்கும் வினா.
புத்திஜீவிகளுக்கேயுரிய ஒரு முக்கிய பண்பு உண்மையை அதாவது யதார்த்த நிலையை ஒளிவுமறைவின்றித் துணிவுடன் கூறுதல். “அச்சமுடையார்க்கு அரணில்லை” என்று எச்சரிக்கிறது குறள். ஆகவே எழுத்தாளர்கள் யதார்த்தத்தைத் தமது எழுத்துக்கள் மூலம் பக்கச்சார்பின்றி வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தும் படைப்புகளின் வடிவங்கள் மாறுபடலாம். அவர்கள் எழுதுவது நாவலாகலாம், சிறுகதையாகலாம், கவிதையாகலாம், நாடகமாகலாம் அல்லது கட்டுரையாகலாம். ஆனால் யதார்த்தம் திரிபடையக்கூடாது. அதிகாரத்துக்குப் பயந்தும், அது வழங்கும் சலுகைகளில் மயங்கியும், உண்மையை எழுத ஓர் எழுத்தாளன் தயங்குவானாயின் அல்லது உண்மையைத் திரிபுபடுத்தி எழுதுவானாயின் அவனுடைய எழுத்துக்களுக்கு சமூக மாற்றத்தையேற்படுத்தும் சக்தியிருக்காது. ஒரு போர்வீரனின் வாளைவிட எழுத்தாளனின் பேனா வலுவானதென்ற முதுமொழி அவனுக்குப் பொருந்தாது. அவனுடைய எழுத்தால் சுயலாபம் பெருகலாம், ஆனால், பொதுநலன் பெருகமுடியாது. ஆகவே முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களின் இன்றைய மகத்தானதொரு பணி தமது சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுவதற்குத் தடையாக விளங்கும் காரணிகளைப்பற்றிய உண்மைகளையும், அதே சமயம் நல்லிணக்கம் வளர்வதற்குச் சாதகமாக விளங்கும் வரலாற்றுச் சம்பவங்களையும் துணிவுடன் பொதுமக்கள் அறியுமாறு செய்தலாகும். அவ்வாறான இரண்டொரு உதாரணங்களை இங்கே சுருக்கமாக விளக்குவது பொருந்துமென நினைக்கிறேன். நான் கிழக்கிலங்கையிலே பிறந்து வளர்ந்தவனாகையால் கிழக்கை மையமாகக் கொண்டே இந்த விளக்கத்தைத் தரவிரும்புகிறேன்.
தமிழ்த் தேசியவாதம் என்ற போர்வையின்கீழ் இந்துத்துவ வாதமும் முஸ்லிம்களின் உரிமைகள் என்ற போர்வையின்கீழ் அடிப்படைவாத இஸ்லாமியமும் இவ்விரு சமூகங்களையும் இன்று பிரித்தாளப்பார்க்கின்றன. இப்பிரிவினைக்குத் தூபம்போடுவதுபோல் தமிழ் – முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். ஒரு பக்கம் போலி மதவாதிகளின் முகமூடியைக் கிழித்தெறிந்து மறு பக்கம் இன வெறிபிடித்த அரசியல்வாதிகளையும் இனங்கண்டு உண்மையின் யதார்த்தத்தைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது எழுத்தாளர்களின் இன்றையப் பணி. இன்றைய சூழலில் இந்த ஒன்றைச் செய்தாலே நல்லிணக்கம் வளர எழுத்தாளர் ஆற்றும் வகிபாகம் பூரணமாகிவிட்டதென்று கருத இடமுண்டு.
மட்டுநகருக்குத் தெற்கே சுமார் பதினைந்து கிலோமீற்றர் தூரத்திலுள்ளது குருக்கள்மடம் என்னும் தமிழ்க் கிராமம். சுமார் நான்கு வருடங்களுக்குமுன் அங்கே அமைந்துள்ள கோயிலுக்கு நான் சென்றபோது அக்கோயிலின் நடுவே தலையில் தொப்பியுடன் செதுக்கப்பட்ட ஒரு கற்சிலையைக் கண்டு வியந்து அச்சிலையைப்பற்றிய தகவல்களை அறிய முயன்றேன். அது பட்டாணியர் சிலையென்றும் வருடாவருடம் பட்டாணியர் பூசை அந்தச் சிலைக்காக நிகழ்வது வழக்கமென்றும் அவ்வூர் மக்கள் கூறினர். யார் அந்தப் பட்டாணியர் என்று ஆராய்ந்தபோது அவர்கள் முஸ்லிம்களென்றும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் திமிலர்களுக்கும் முக்குவர்களுக்குமிடையே அங்கு நடந்த ஒரு போரில் முக்குவர்களுடன் பட்டாணியர் சேர்ந்து போரிட்டு வென்றதால் அந்த முஸ்லிம் போராளிகளுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே அந்தச் சிலையென்றும் வருடந்தோறும் அதற்கொரு பூசை நடைபெறுவதென்றும் அறிந்தேன். ஓர் இந்துக் கோயிலில் முஸ்லிம்களுக்காக ஒரு பூசையா என்று ஆச்சரியப்பட்டுச் சந்தோஷப்பட்டேன். பின்னர் எப். எக்ஸ். சி. நடராசாவி;ன் “மட்டக்களப்பு மான்மியம்” நூலைப் புரட்டியபோதுதான் மட்டக்களப்புக்குத் தெற்கேயுள்ள அத்தனை இந்துக் போயில்களிலும் வருடந்தோறும் நடைபெறும் முதற் பூசை பட்டாணியர் பூசை என்ற அந்த வியப்பான உண்மையை உணர்ந்தேன்.
இன நல்லிணக்கம் வளர இதைவிடவும் ஒரு சிறப்பான உதாரணம் தேவையா? என்ன பரிதாபம்? கடந்த வருடம் நான் மீண்டும் குருக்கள்மடம் கோயிலுக்குச் சென்றபோது அந்தச் சிலை அங்கில்லை. அதை கோயிலுக்குள்ளிருந்து நீக்கி வெளியே ஒரு கூட்டுக்குள் வைத்திருப்பதாக அறிந்தேன். ஏன்? இந்துத்துவம் தலையிட்டுவிட்டதா? தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்களே! ஏன் இதுவரை உங்கள் பேனாவுக்கும் கணினிக்கும் இந்த உண்மை எட்டவில்லை? ஒரு வேளை எட்டியிருந்தும் எடுத்துச் சொல்லத் தயங்கினீர்களோ?
மிக அண்மையில் நடைபெற்ற இன்னுமொரு அசம்பாவிதமான நிகழ்வு. திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கடமைபுரிந்த ஓரிரு முஸ்லிம் ஆசிரியைகள், முஸ்லிம்களின் உரிமை என்ற பெயரால் இன நல்லிணக்கத்தைக் குலைப்பதற்காக அரங்கேற்றிய ஒரு விஷப் பரீட்சை. அக்கல்லூரியின் சட்டதிட்டங்களுக்கமைய வழமைபோல் சேலை உடுத்துவந்த முஸ்லிம் ஆசிரியைகள் சடுதியாக, யாரோ சில அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலால், நாட்டுக்கொவ்வாத அபாயா உடையை அணிந்து சென்றதாலும் அவர்களுக்கெதிராகக் கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கையெடுத்ததாலும் தமிழ் முஸ்லிம் கலவரமொன்றே திருகோணமலையில் வெடிப்பதற்கு ஏதுவாயிற்று.
ஒரு நிறுவனத்திற் பணிபுரிய வேண்டுமாயின் அந்நிறுவனத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டாக வேண்டும். அதற்கு விருப்பமில்லையென்றால் அங்கே பணிபுரிய முடியாது. ஒரு பள்ளிவாசலுக்குள் யாராவது நுழையவேண்டுமென்றால் பாதணிகளுடன் நுழைய முடியாது. அந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட விருப்பமில்லையென்றால் பள்ளிவாசலுக்குள் நுழையக்கூடாது.
எனது கேள்வி இதுதான்: ஏன் அங்குள்ள முஸ்லிம் எழுத்தாளர்கள் இந்த உண்மையை எடுத்துக் கூறி தங்கள் எழுத்தின்மூலம் அவ்விஷமிகளின் செயலைக் கண்டிக்கவில்லை? இதுவரை அவர்கள் இச்சம்பவம்பற்றி மௌனியாகவே இருக்கின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களை எதிர்க்க முடியாத கோழைத்தனமே இதற்கு முக்கிய காரணம். இதே கோழைத் தனத்தைத்தான் முஸ்லிம் பெண்களின் உரிமைப்போராட்டத்திலும் நான் இலங்கையிலே காண்கிறேன். அதேபோன்று முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளைத் தமிழியக்கங்கள் கையாண்டபோது தமிழ் எழுத்தாளர்களின் பேனாக்கள் ஏன் அவற்றைக் கண்டிக்க மறுத்தன? எழுத்தாளர்கள் கோழைகளானால் சமூகமாற்றம் ஏற்படமுடியுமா? இன நல்லிணக்கந்தான் வளரமுடியுமா? நான் சுருக்கமாகக் கூறுவதென்னவெனில் எழுத்தாளர்களுக்கு உண்மையைக் கூறும் துணிவு வேண்டும். ஒவ்வோர் எழுத்தாளனும் ஏதோ ஓர் இனத்தைச் சேர்ந்தவனே. இலங்கையைப் பொறுத்தவரை ஒரு தமிழ் எழுத்தாளன் இந்துவாகவோ முஸ்லிமாகவோ கிறித்தவனாகவோ ஏன் பௌத்தனாகவோ இருக்கலாம். ஆனால், தனது இனம் தவறிழைக்கின்றபோது அதைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்க அவனது பேனாவோ கணினியோ தயங்கக்கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் அண்மையில் சிவ சேனை இயக்கம் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கெதிரான மாட்டிறைசி பற்றிய பிரச்சாரமொன்றை அவிழ்த்துவிட்டபோது அதனைத் துணிவுடன் எதிர்த்துக் கருத்து வழங்கிய பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களை என்னால் பாராட்டாமல் இவ்வுரையைத் தொடர முடியாது.
இன்று கிழக்கிலே தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையேயுள்ள ஓர உறவைக்கூட முற்றாகத் துண்டித்து இரு இனங்களையும் போர்க்கொடி தூக்கவைக்கிறது அங்கே நிலவும் நிலப் பிரச்சினை. கிழக்கின் மொத்த சனத்தொகையில் முப்பது சதவிகிதத்தைக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு ஆக மூன்று சதவிகித நிலமே உண்டென்கிற உண்மை ஏன் அரசியல்வாதிகளாலும் எழுத்தாளர்களாலும் மூடிமறைக்கப்படுகின்றது? அந்தப் பிரச்சினையைச் சாட்டாகவைத்து ஒரு முஸ்லிம் அரசியல்வாதி தனது அரசியற் செல்வாக்கைக்கொண்டு கோயிலுக்குரிய நிலமொன்றை முஸ்லிம்களுக்கு வழங்கியமையை அவரது ஒளிநாடாவே உலகுக்குப் பறைசாற்றியுள்ளது.
அந்த அநீதியை எந்த முஸ்லிம் எழுத்தாளன் கண்டித்தான்? அதேபோன்று பள்ளிவாசல் நிலமொன்றைத் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் இந்துப் பிரார்த்தனை மண்டபமாக மாற்றியுள்ளதை எந்தத் தமிழ் எழுத்தாளனின் போனாவும் கணினியும் கண்டித்தன? பல்லாண்டு காலமாக நாலைந்து ஏக்கர் நிலத்தை மயான பூமியாகப் பாவித்த தாழ்த்தப்பட்ட சில தமிழ்க் குடிகளை ஒரு முஸ்லிம் செல்வச் சீமான் விரட்டியடித்து, அந்த நிலங்களுக்குச் சொந்தங்கொண்டாடிய சங்கதி அங்குள்ள எந்த எழுத்தாளனின் செவிகளையும் எட்டவில்லையா? எட்டியிருந்தும் அதைக் கண்டித்தெழுதத் துணிவு வரவில்லையா? ஆகையினாலேதான் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் எழுத்தாளர்களுக்கு யதார்த்தத்தைத் துணிந்து கூறும் சக்தி வேண்டுமென்று. அது இல்லையென்றால் இனநல்லிணக்கத்தைப்பற்றிப்பேசும் அருகதை அவர்களுக்கில்லையென்றுதான் கூறுவேன். அன்றைய முற்போக்கு எழுத்தாளர்களின் பதிய தலைமுறையொன்று இன்று அங்கே உருவாகவேண்டியுள்ளது.
எழுத்தாளர்களை எதிர்நோக்கும் சவால்
துணிவுள்ள எழுத்தாளர்களும் தனியாக நின்று எதையும் சாதித்துவிட முடியாது. இனநல்லிணக்கம் என்பது சமூக முன்னேற்ற இயக்கங்களின் அயராத கூட்டு முயற்சியின் விளைவாக ஏற்படுவதொன்று. சமூக முன்னேற்ற இயக்கங்களின் ஓர் இன்றியமையாத அங்கமாக அமைவனதான் எழுத்தாளர்களின் மன்றங்களும், அவை நடத்தும் மாநாடுகளும், நூல் வெளியீட்டு விழாக்களும. இவற்றின் வெளியீடுகளும் செய்திகளும் பொதுமக்களைச் சென்றடைகின்றனவா என்பது ஒரு முக்கியமான கேள்வி. வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிச் சாதனங்களும் வானொலிப் பெட்டிகளும் தினசரிகளும் காணப்பட்டாலும், அவை பரப்புகின்ற செய்திகளும் காட்டுகின்ற காட்சிகளும் அக்காட்சிகளைப் பற்றிய விமர்சனங்களும் செய்தித்தாபனங்களின் இலாபத்தையும் சந்தை விருத்தியையும் பிரதான இலக்காகக் கொண்டு வெளியிடப்படுவதால் உண்மைகள் அங்கே பெரும்பாலும் மூடிமறைக்கப்படுகின்றன.
இந்த வியாபாரச் சூழலில் உண்மைக்காகப் போராடும் எழுத்தாளர்கள் தமது கருத்துக்களைப் பொதுமக்களிடையே பரப்ப இயலாமல் திண்டாடுகின்ற நிலமையைப் பரவலாக உலகெங்கும் காண்கிறோம். இதற்குப் பரிகாரமாக சமூக வலைத்தளங்களை எழுத்தாளர்கள் கையாள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், வறுமைப் பிணியால் வாடும் கோடிக்கணக்கான மக்களிடையே இத்தளங்களை நாடும் சக்தி இல்லையே! இது இனநல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவேண்டுமென முயற்சிக்கும் எழுத்தாளர்களை எதிர்நோக்கும் ஒரு புதிய சவால்.
இன நல்லிணக்கத்தை வளர்க்க மதஸ்தாபனங்கள், அதாவது கோயில்களும் மசூதிகளும், அவற்றில் பணியாற்றும் மதபோதகர்களும், அவற்றைப் பராமரிக்கும் நிர்வாகிகளும் பிரதான பாகத்தை வகிக்கின்றனர் என்பதை மறுக்கமுடியாது. எழுத்தாளர்களுக்கும் மதஸ்தாபனங்களுக்குமிடையே நெருங்கிய உறவு ஏற்படவேண்டியுள்ளது. வாசகர்கள் விரைவாகக் குறைந்துகொண்டு செல்லும் ஒரு சூழலில் கருத்துகளும் வார்த்தைகளும் செவிவழியாகவே பொதுமக்களைச் சென்றடையவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை வாராந்தம் வெள்ளிதோறும் மசூதியிலே நடைபெறும் பிரசங்கம் மிகமுக்கியமான ஒரு நிகழ்வு. இலங்கையில் நான் சமூகமளித்த எத்தனையோ வெள்ளிக் கிழமைப் பிரசங்கங்களில் இனநல்லிணக்கம் பற்றிய ஒன்றையேனும் இதுவரை நான் கேட்டதில்லை. இதைப்பற்றி நான் பல இமாம்களிடம் முறையிட்டும் பலனில்லை. இந்துக் கோயில்களின் நிலைபற்றி எனக்கெதுவும் தெரியாததனால் அதைப்பற்றி எதுவும் என்னால் சொல்ல முடியாது. மதக் கோட்டைகளுக்குள் எழுத்தாளர்களின் கருத்துக்கள் எவ்வாறு நுழையலாம்? இது ஆராயப்படவேண்டிய ஒரு விடயம்.
மேற்கொள்ள வேண்டிய ஆக்கபூர்வமான பணிகள்
இறுதியாக ஒன்றைக் கூறி எனது உரையை நிறைவுசெய்யலாமென நினைக்கிறேன். மெல்பனிலும், லண்டனிலும், டொரொண்டோவிலும் முஸ்லிம்- தமிழர் நல்லிணக்கத்தைப்பற்றி எழுத்தாளர்களும் கல்விமான்களும் கூடிக் கலந்துரையாடுவதும் மாநாடுகள் அமைப்பதும் இலகு. அவை வரவேற்கத்தக்க முயற்சிகள் என்பதை மறுக்கவில்லை. ஆனால், அவ்வாறான கலந்துரையாடல்கள் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் நடத்தப்பட வேண்டும். இலங்கையிலே இவ்வாறான ஒரு கலந்துரையாடலை நடத்துவதானால் கொழும்புத் தமிழ்ச் சங்கமே கதியென்ற நிலைதான் இன்று காணப்படுகின்றது. என்னைப் பொறுத்தவரை அதுகூட பொருத்தமான ஒரு தலமல்ல.
ஏனென்றால் பிரச்சினை கொழும்புக்கு வெளியேதான் காணப்படுகிறது. சாக்கடையிலிருந்துதான் நுளம்புகள் உற்பத்தியாகின்றன. நுளம்புத் தொல்லையை முற்றாக ஒழிக்கவேண்டுமாயின் முதலில் சாக்கடையைச் சுத்தப்படுத்த வேண்டும். எழுத்தாளர்களே! சாக்கடையை நோக்கி உங்களின் எழுத்தாணிகளும் கணினிகளும் படையெடுக்கட்டும். இதுதான் உங்களை எதிர்நோக்கும் இன்றைய மகத்தான பணி.
“நாமார்க்கும் குடியல்லேம், நமனையும் அஞ்சேம்.”
எனக்கிந்த வாய்ப்பினைத் தந்தமைக்காக அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன். வணக்கம்.
—0—
மறுமொழியொன்றை இடுங்கள்