நடேசன்
ஆக்ராவில் தாஜ்மாகாலுக்கு அருகே அரைகிலோ மீட்டருக்கு எரிபொருள் வாகனங்கள் செல்லத்தடை உள்ளதால் நானும் மனைவியும் நடந்து செல்ல முயற்சித்தோம். ரிக்ஸா வண்டிக்காரின் தொல்லை தவிர்க்க முடியாமல் ரிக்ஸாவில் தாஜ்மாகால் வாசல் அருகே இறங்கினோம்..
அனுமதி சீட்டுக்கு நின்ற போது ஏதோ ஓரு பழய கோட்டை வாசல் போல் தோன்றியது. மேற்றல் டிக்டேட்டரால் பரிசோதிக்கப்ட்ட பின் உள்ளே நடந்த போதுதான் அற்புதமான காட்சியொன்று கண்களுக்கு தெரிந்தது.
எத்தனை திரைப்படங்கள், புகைப்படங்ககளில் பார்த்து இருந்தாலும் முழுதாக நேரில் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகள் வித்தியாசமானது.
நீல நிறமான ஆகாயத்தின் பின்னணியில் வெண்பளிங்கு கற்களால் அமைந்த தாஜ்மாகால் நீல நிற வெல்வெட் துணியொன்றில் இப்போதுதான் சுத்தமாக துடைத்து காட்சிக்கு எடுத்து வைக்கப்பட்டது போல் இருந்தது. ஒவ்வொரு கால் அடிகளை எடுத்து வைத்து செல்லும்போது புதிய உலகத்தை நோக்கி நடப்பதாக உள்ளுணர்வு கூறியது.
தாஜ்மாகாலில் ஏறுவதற்கு எமது காலணிகளுக்கு உறை போடப்பட்டது. இது சலவை கற்களில் பாதஅணிகளால் ஏற்படும் தேய்வைத் தடுப்பதற்கான நடைமுறை . ஏற்கனவே பல இடங்களில் சலவை கற்கள் தேய்ந்துபோய் இருந்தது. எனது இதயத்தில் ஏற்பட்ட கீறலாக சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதை வரிகளின் – எனது தமிழாக்கம்
‘வைரம், முத்து, இரத்தினங்களின் ஜொலிப்பெல்லாம் மறைந்து விட்டாலும்,
கண்ணீர்த்துளி போல் காட்சியளிக்கும் தாஜ்மாகால் காலம் காலமாக ஒளிபரப்பட்டும்.’
உலகமெங்கும் இருந்து யாவரையும் தன்னருகே கவர்ந்து இழுக்கும் இந்த காதல் சமாதி யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. தாஜ்மாகாலில் நின்று யமுனை நதி எனது கற்பனைக்கு நேர் எதிராக கணுக்கால் அளவு நீரே ஓடியது. நல்ல வேளை நதியின் விதியை பார்க்க மன்னர் ஷாஜகான் உயிரோடு இல்லை.
நான் காதலித்த காலத்தில் நான் பரிசாக கொடுத்த தாஜ்மாகாலிலின் மாதிரி வடிவத்தை பல வருடங்களாக வைத்திருந்த வைத்திருந்த என் மனைவிக்கு எனக்கு தெரிந்த மொகாலய சரித்திரத்தை கூறினேன்..
‘மொகாலய மன்னரான ஜகங்கீரின் ஐந்தாவது மகன் இளவரன் குராம். போர்கலை,
கலைத்திறமை, மற்றும் இராஜாங்க அறிவிலும் திறமை பெற்று ஷாஜகான் (உலகத்தை ஆழ்பவன்) சகோதரர்களை புறந்தள்ளி தந்தை இறந்தவுடன் மொகாலய அரச கட்டில் ஏறினான். பட்டத்து இராணியாக மட்டுமல்ல மந்திரி போலும், மனைவி மும்தாஜ் மகால் உடன் இருந்தாள்.
அரசியல் காரணத்துக்காக ஷாஜகான் பல பெண்களை மணந்து இருந்தாலும் மும்தாஜ் மட்டுமே பட்டத்து இராணியாகவும், அரச பரம்பரை வாரிசுகளை பெற்று தருபவருகவும் இருந்தாள்.
1631ம் ஆண்டு மன்னர் ஷாஜகானுடன் நிறைமாத கற்பிணியாக போர்களம் சென்ற மும்தாஜ் பேகம் அங்கு தனது 14 வது பிள்ளையை பெற்ற பின்பு ஏற்பட்ட குருதிப் பெருக்கால் மரணம் அடைந்தாள். மகாராணி இறந்த பின்பு ஷாஜகான் பலநாள் எவருடனும் பேசவில்லை. இரண்டு வருடம் துக்கம் அனுஸ்டித்தார்.
அரேபிய, பாரசீக, துருக்கிய மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து கட்டிடக்கலைஞர்ளும்
பொருட்களுமாக தருவிக்கப்பட்டு தாஜ்மாகால் முழுமை அடைவதற்கு 20 வருடங்கள் சென்றது.’
தாஜ்மாகாலில் இருந்து ஆக்ரா கோட்டைக்கு சென்ற போது கூறினேன்
‘ஷாஜகான் இங்குதான் பல வருடங்கள் அவுரங்கசீப்பால் சிறையில் வைக்கப்பட்டார்
ஷாஜகானின் கடைசி மகனாகிய அவுரங்கசீப் தந்தையின் அரசை எதிர்த்து மற்றும் சகோதர்களை வென்றும் கொன்றும் மொகாலயப் பேரரசுக்கு மன்னனாகியதும் தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறையடைத்தான். சிறைசாலை யன்னல் வழியாக யமுனை நதியையும் கரையின் அப்பால் உள்ள தாஜ்மாகாலையும் பார்த்தபடி எட்டு வருடங்கள் வாழ்ந்து ஷாஜகான் உயிர் நீத்தான்.. இறந்த தந்தை, தாயின் மீது கொண்ட காதலை மனத்தில் கொண்டு அவுரங்கசீப்பால் மும்தாஜ் அருகே ஷாஜகானின் சமாதியும் அமைக்கப்பட்டது.’
மறுமொழியொன்றை இடுங்கள்