என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்


வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து கனடா டொரன்டோ வரையில் வியாபித்து நின்ற ஈழத்தின் மூத்த படைப்பாளி
நிலவிலிருந்து பேசியவர்களை பனஞ்சோலைக்கிராமத்தில் சித்திரித்த எழுத்துப்போராளி
முருகபூபதி
யாழ்ப்பாணம் அரியாலையில் செம்மணி வீதியில் சில மாதங்கள் ஒரு வாடகைவீட்டில் வசிக்க நேர்ந்தது. 1983 தென்னிலங்கை வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தோம். இலக்கிய நண்பர்கள் மல்லிகை ஜீவா சைக்கிளிலும் கே. டானியல் தனது மோட்டார் சைக்கிளிலும் வந்து பார்த்துவிட்டுச்செல்வார்கள்.
தென்னிலங்கையில் நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் அரியாலையைவிட்டு புறப்படத்தயாரானோம். ஊரிலிருந்து எடுத்துவந்த பெருந்தொகையான புத்தகங்களையும் சில கதிரைகள் மேசையையும் அயலில் ஒரு வீட்டில் ஒப்படைத்தோம்.

1984 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரியாலைக்கு விடைகொடுத்துவிட்டு, ஒருநாள் காலை புறப்படுவதற்கு தயாராகியிருந்த வேளையில், அதற்கு முதல் நாள் இரவு ஏழுமணியளவில் அவர் என்னைத்தேடி தனது சைக்கிளில் வந்தார். வந்தவரை அமரச்சொல்வதற்கும் அந்த வீட்டில் கதிரைகள் இல்லை. தரையில் ஒரு பாயைவிரித்து, ” தரையிலிருந்து பேசுவோம்” என்றேன்.

அவர் உரத்துச்சிரித்துக்கொண்டு அமர்ந்தார். அன்று நெடுநேரம் பேசினோம். அவரது சிரிப்புக்கு காரணம் இருந்தது. அவர்தான் கனடா டொரன்டோவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் என்.கே. ரகுநாதன். அந்தச்சிரிப்பை இனிமேல் நாம் காணமுடியாது.

அன்றைய சந்திப்பில் அவர் உரத்துச்சிரித்தமைக்கு அவர் 1960 களில் எழுதிய நிலவிலே பேசுவோம் சிறுகதைதான் அடிப்படைக்காரணம். எனது புத்தகங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் அரியாலையிலிருந்து நண்பர் புதுவை ரத்தினதுரை எடுத்துச்சென்றார். கதிரைகளையும் மேசையையும் மல்லிகை ஜீவா எடுத்துச்சென்றார்.
புத்தகங்களும் கதிரை , மேசைகளும் என்னவாயின? என்பதும் தெரியாது, புதுவை ரத்தினதுரைக்கு என்ன நடந்தது ? என்பதும் தெரியாது. அக்காலப்பகுதியில் என்னைப்பார்க்க வந்த டானியல் தமிழ்நாட்டில் மறைந்தார். மல்லிகை ஜீவா கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். நான் அவுஸ்திரேலியாவுக்கு முதலிலும் ரகுநாதன் அதன்பின்னர் கனடாவுக்கும் புலம்பெயர்ந்தோம். புதுவை காணாமல் போனார். எங்கள் இலக்கியவட்டத்திலிருந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது எஞ்சியிருப்பது அவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரமே!

நாமெல்லாம் இலக்கியவாதிகளாக இருந்தபோதிலும் இஸங்களினால் பிளவுபட்டிருந்தோம். சிலர் ஒருவருடன் ஒருவர் முகம் பார்த்தும் பேசாதிருந்தனர். டானியலும் ஜீவாவும் ரகுநாதனும் அரசியலிலும் ஒன்றிணைந்திருந்து பல மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள். எனினும் மாஸ்கோ – பீக்கிங் என அரசியல் கோட்பாடுகளில் பிளவு தோன்றியவேளையில் ஜீவா மாஸ்கோ சார்பு நிலையெடுத்தார். புதுவை உட்பட ஏனைய இருவரும் பீக்கிங் அணியில் இணைந்திருந்தனர்.
நான் வெளிப்பிரதேசத்தைச்சேர்ந்திருந்தாலும் இவர்கள் அனைவருடனும் தோழமையுடனும் சகோதர வாஞ்சையுடனும் உறவுகொண்டிருந்தேன். அதனால் அவர்களிடையே ஏற்பட்ட ஊடல்கள் உரசல்களை போக்குவதற்கும் அவ்வப்போது முயன்றேன்.

ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் – டானியலின் பஞ்சமர், ஜீவாவின் மல்லிகை – புதுவை, வரதபாக்கியான் என்ற புனைபெயரில் எழுதிய கவிதைகள் – இவைதான் எங்கிருந்தோ என்னை இவர்களுடன் இணைத்தது. ஆலயப்பிரவேசம், தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் புதுவை தவிர ஏனையோர் ஈடுபட்டு முன்னணியில் நின்ற காலத்தில் நான் வடக்கிலிருக்கவில்லை. அங்கு படிக்கச்சென்ற பருவத்தில் எனக்கு 12 வயதுதான். இலக்கியப்பிரவேசத்தின் பின்னர் (1972 முதல்) இந்த மூத்தவர்களுடன் எனக்கேற்பட்ட உறவுக்கு என்றைக்கும் விக்கினங்கள் வரவில்லை.

ரகுநாதன் மறைந்தார் என்ற செய்தி என்னை வந்தடைந்தபோது கடந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. ரகுநாதன், இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையிலும் அங்கம் வகித்திருந்தார். தோழர் ரோகண விஜேவீராவின் மைத்துனர்தான் எச். என். பெர்ணான்டோ. யாழ்ப்பாணம் செல்லும் வேளைகளில் ரகுநாதனை சந்திப்பது வழக்கம். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடந்தபோதும் ரகுநாதனை அங்கு சந்தித்தேன். அதன்பின்னர் அவுஸ்திரேலியா வந்தபின்னரும் அவருடன் கடிதத்தொடர்புகள் இருந்தன.
அவருக்கும் டானியலுக்கும் இடையே நீடித்த முரண்பாடுகள் குடும்பப் பகையாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் எழுதும் கடிதங்களில் சமாதானத் தூதுவராகியிருந்தேன். 22-07-1997 ஆம் திகதி ரகுநாதன் எனக்கு எழுதிய நீண்ட கடிதமும் எனது கடிதங்கள் நூலில் இடம்பெற்றுள்ளது.
அந்தக்கடிதமும் ஒரு இலக்கியக்கடிதம்தான் என்பதனால் அவரது நினைவாக இங்கு பதிவுசெய்கின்றேன்.

அன்புள்ள முருகபூபதிக்கு வணக்கம். உங்கள் கடிதம் 28-05-97 இல் கிடைக்கப்பெற்றேன். பதில் எழுதச்சுணங்கியதற்கு மன்னிக்கவும். நண்பர் ராஜஶ்ரீகாந்தனும் உங்களுக்கு ஒரு புத்தகம் அனுப்பிவைத்தது மகிழ்ச்சிக்குரிய விடயம். நண்பர்கள் மாறி மாறிப் படிக்க வசதியாயிருக்கும்.
இளைய பத்மநாதன், புத்தகத்திலுள்ள கதைகளை – விசேடமாக முன்னுரையைப்பற்றி ஏதாவது குறிப்பிட விரும்பினால் அன்புடன் வரவேற்பேன். அவரை எனக்கு எழுதச்சொல்லுங்கள். நீங்கள் ” படித்தோம் சொல்கின்றோம்” பகுதியில் ஏதாவது எழுத இருந்தால் எழுதி, அதன் நறுக்கினை எனக்கு அனுப்புங்கள்.
East or west home is the best என்று எழுதியிருக்கிறீர்கள். எந்த மனிதனுக்கும் தான் பிறந்து வளர்ந்த மண்ணில் வாழ்வது போன்ற இனிய வாழ்வு அமையாது. பல்லுக்குப்பல் சில்லுக்குச்சில் என்று இணைந்துபோக வேண்டிய யந்திர வாழ்க்கைதான். காலமாற்றத்தால் அதன் கடும்போக்கு இறுகிக்கொண்டு போகிறது. யாரும் விலகிப்போக முடியாத கொடுமை. எழுதமுற்பட்டால், நிறைய எழுதவேண்டிவரும் என்றுதான் இழுத்தடித்துக்கொண்டு வந்தேன். அப்படி இருந்தும் இன்று காலை எழுதத்தொடங்கு முன் அருட்டலுக்காக உங்கள் கடிதத்தை ஒரு தடவை மேலோட்டம் விட்டபோது, மேலும் பின்தள்ளப்பட்டேன். எனினும் உற்சாகத்தை கைவிடாமல் இப்போது ( மாலையில்) இதனை எழுதுகிறேன்.

பழைய பகைமைகள் மறைந்திருக்கும் என ஒரு வரி எழுதியுள்ளீர்கள். எனக்கு, அதற்கு என்ன பதில் எழுதுவதென்று தெரியவில்லை.
அரியாலையில் சந்தித்து சற்று நீண்டு உரையாடிய ஞாபகம் எனக்குண்டு. அன்று அவற்றை விரித்துரைத்திருப்பேன் போலும்.
எழுத்தாளன் நேர்மையானவனாய் இருக்கவேண்டும் என்று என் ‘தசமங்கல’ வெளியீட்டு விழாவில் கொதிப்படைந்து பேசிவிட்டேன். இப்போது கொழும்பில் அது முக்கிய பிரச்சினையாகிவிட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன் ‘பொன்னீலன்’ என்ற தமிழக எழுத்தாளர் இங்கு வந்து, ( இ.மு. எ.ச. கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டு) ” எழுத்தாளன் எழுதும்போதுதான் இலட்சியவாதி. எழுதாதபோது அவன் சாதாரண மனிதன்” என்று சொல்லிவிட்டுப்போய்விட்டார்.

நான் அதைகக்கண்டித்து வீரகேசரியில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பகுதியை ‘ குமுதம்’ பிரசுரித்து பொன்னீலனுக்கு தொல்லை கொடுத்தது. குமுதம் 3 இதழ்களில் – அந்த விவாதம் நடந்தது. அந்த வேகத்தில்தான் நான் என் கூட்டத்திலும் பேசவேண்டி ஏற்பட்டது.
அதுசம்பந்தமான பத்தி எழுத்தாளரின் கண்ணோட்டத்தை அனுப்புகிறேன். படித்துப்பார்க்கவும். நீங்கள் எங்கே நிற்கிறீர்களோ தெரியாது. ஆனால், இந்தக்கட்டுரையாளர் தன்னையே தோலுரித்து, நிர்வாணக்கோலத்தை காட்டுகிறார்.

Intelligentsia – களை மட்டமாக மதிப்பிடக்கூடாதாம். கடைசி வரி: ஒழுக்கம் எது, நேர்மை எது, எது சரி, எது பிழை என்பதனை நாங்கள் தீர்மானிக்க முடியாதாம்.
இந்த எழுத்தாளர் மனையாட்டியுடன் வீதியில் செல்லும்போது எதிரே வருபவன், அவளைத்துகிலுரிந்து பலாத்காரம் செய்யும்போது – அப்போது அவர் உரைகல்லைத்தேடி ஓடுவார். சரி எது? பிழை எது? ஒழுக்கம் எது? என்று தெரியாத மேதையல்லவா அவர்!
இவற்றை நினைத்தால், இந்த அயோக்கியர் எழுதும்போது நமக்கேன் பேனா? என்ற எண்ணம்வரும். என்றாலும் நான் சோர்ந்துபோய்விடவில்லை.
சந்தோஷமாக இருக்கிறேன். அமைதியாக இருக்கிறேன். எதிர்நீச்சல்களும் தழும்புகளும் அந்தந்த நேரத்தில் என்னைத் தொல்லைப்படுத்தினாலும் அதன் பலன்களை இப்போது குடும்ப ரீதியாகப் பெருமையோடு அனுபவிக்கிறேன்.

பிள்ளைகள் – திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன், ஜனனி, கனடா, லண்டன், ஜெர்மனியில் இருக்கிறார்கள். கடைசிப்பெண் இங்கு தனியார் நிறுவனத்தினில் பணிபுரிகிறாள். பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியது எனக்கு மகிழ்ச்சியான விடயமல்ல. சந்தர்ப்ப சூழ்நிலை.
எனது ‘ கட்டை விரல் ‘ கதையில் நான் யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
பதிலை எதிர்பார்ப்பேன். அன்புடன் ரகுநாதன்.

இக்கடிம் எழுதப்பட்டு இரண்டு வருடகாலத்தில் 1999 ஆம் ஆண்டு இலங்கை சென்றவேளையில், தெஹிவளையில் மிருகக்காட்சி சாலைக்கு பின்னாலிருந்த வீதியில் அவரது வீட்டுக்குச்சென்று ரகுநாதன் தம்பதியரின் அன்பான உபசரிப்பில் திளைத்தேன்.

1929 ஆம் ஆண்டில் வடமராட்சியில் வராத்துப்பளை என்ற கிராமத்தில் ஒரு அடிநிலைக்குடும்பத்தில் பிறந்து, அக்கால கட்டத்தின் சமூக ஒடுக்குமுறைக்கு மத்தியில் படித்து, ஆசிரியராகவும் படைப்பிலக்கிய வாதியாகவும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்தில் நின்ற போராளியாகவும் திகழ்ந்திருக்கும் ரகுநாதன், தனது “கட்டை விரல் ” சிறுகதையில் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் தன்னை முழுமையாகவே வெளிப்படுத்தியிருந்தது, 2004 இல் அவர் எழுதியிருந்த ” ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி” நவீனத்தில்தான்.

சுயசரிதையையும் ஒரு நாவலாக விரித்து எழுதமுடியும் என்பதை நிரூப்பித்திருப்பவர் ரகுநாதன். காலம் காலமாக அவரது சமூகம் செய்துவந்த தொழிலிருந்து தன்னை விடுவித்து படிக்கவைத்து உருவாக்கி மானுடனாக்கிய தனது அருமை அண்ணன் தம்பிப்பிள்ளைக்கும் பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்புத்தாய் வள்ளியம்மைக்கும்தான் அந்த நாவலை சமர்ப்பணம் செய்திருந்தார்.

வர் அந்தக்கடிதத்தில் எழுதியிருந்தவாறே எதிர்நீச்சலையும் தழும்புகளையும் கடந்துவந்தவர்தான். எல்லாம் கடந்துபோகும் என்பார்கள். வடமராட்சி வராத்துப்பளையிலிருந்து நிலவிலே பேசுவோம் என்ற கதையை எழுதிய 1960 காலப்பகுதிக்கும் இன்று அவர் கனடாவில் மறைந்திருக்கும் 2018 காலப்பகுதிக்கும் இடையில் சமூகத்திலும் அவரது சிந்தனைகளிலும் நிறைய மாற்றங்கள் நேர்ந்திருக்கலாம்.

அன்று அவர் தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார். கந்தன் கருணை என்ற நாடகத்தையும் எழுதி, வடபிரதேசம் எங்கும் அதனை கூத்துவடிவிலும் அரங்காற்றுகை செய்வதற்கு தூண்டுகோலாகத் திகழ்ந்தார்.
கனடாவில் தமிழ் ஓதர்ஸ் இணையத்தளத்தின் அகில் சாம்பசிவத்திற்கு வழங்கிய நேர்காணலில், “அன்றிருந்த நிலை இன்றில்லை” என்ற சாரப்பட சொல்லியிருக்கிறார்.
ஆனால், ரகுநாதன் மறைந்திருக்கும் இந்தவேளையிலும் தென்மராட்சியில் வரணி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் அதே அடிநிலை சமூகத்தவர்களும் தேரின் வடம்பிடிக்க அனுமதிக்கமுடியாது என்று மேட்டுக்குடி சமூகம் தடுத்து, பெக்கோ (ஜேசிபி) எனப்படும் இயந்திரத்தின் மூலம் தேரை நகர்த்தியிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது.

ரகுநாதன், டானியல், ஜீவா , செ. கணேசலிங்கன், மு. தளையசிங்கம் உட்பட பல எழுத்துப்போராளிகளும் , அன்றைய சமூக விடுதலைப் போராளிகளும் தத்தமது கிராமத்தின் எழுச்சிக்காக தொடர்ச்சியாக எழுதி வந்திருந்தபோதிலும், இடையில் வடபிரதேசம் எங்கும் இனவிடுதலைக்காக ஆயிரக்கணக்கில் இளம் குருத்துக்கள் களமாடி மடிந்தபோதிலும் இன்னமும் அங்கு இதுவிடயத்தில் மாற்றம் இல்லை என்பதை காணாமலேயே நண்பர் ரகுநாதனும் தனது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்.

துப்பாக்கி ஏந்திய ஈழ விடுதலை இயக்கங்களுக்குப் பயந்து சாதிவேற்றுமை பார்ப்பது குறைந்துவிட்டது எனச்சொன்னாலும், அந்த இயக்கங்களின் துப்பாக்கிகளுக்குப் பின்னால்தான் அந்த வேற்றுமை மறைந்திருந்தது என்ற உண்மையையும் ரகுநாதன் ஏற்றுக்கொண்டிருந்தவர்.

அவர் 1960 களில் எழுதியிருந்த நிலவிலே பேசுவோம் சிறுகதையை வெளியிட்டது, தந்தை செல்வநாயகம் நடத்திய சுதந்திரன் பத்திரிகை. அதனை தெரிவுசெய்து பதிவேற்றியவர் அச்சமயம் அங்கு ஆசிரிய பீடத்திலிருந்த மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் அ.ந. கந்தசாமி. இவர்தான் எங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கீதத்தையும் இயற்றித்தந்தவர்.

சுயசரிதைப்பாங்கில் ரகுநாதன் எழுதியிருக்கும் ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி நூலை, வரலாற்றுச்சித்திரம் எனக்கூறியபோதும், “இது ஒரு நாவலாக அமைந்துள்ளது” என்றுதான் அதனை வெளியிட்டிருக்கும் குமரன் பதிப்பகம் செ. கணேசலிங்கன் சொல்கிறார்.
1929 இல் பிறந்திருக்கும் ரகுநாதன் தனது 31 வயதில் சாதிக்கொடுமையை பிரசார வாடையின்றி அழகியலுடன் நிலவிலே பேசுவோம் என்ற தலைப்பில் சிறுகதையாக எழுதி, ஈழத்து சிறுகதை வளர்ச்சியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியிருப்பவர்.
எனினும் அதன்பின்னர் பல வருடங்கள் கடந்து 1991 ஆம் ஆண்டில்தான் – இனவிடுதலைப்போரும் தொடங்கியபின்னர்தான் ஒரு பனஞ்சோலைக்கிராமத்தின் எழுச்சி என்ற நவீனத்தை எழுதுகிறார். அதனை ” ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை” என்ற தலைப்பில் எழுதியிருந்தால் அந்தத் தலைப்பில் அழகியல் இருந்திருக்கும் என்பதுதான் எனது நம்பிக்கை. ” எழுச்சி” என்றவுடன் படைப்பிலக்கியத்தின் அழகியல் மங்கி, பிரசாரம் மேலோங்கிவிட்டது என்பதே எனது பார்வை.
எனினும் அந்த நாவலின் உள்ளடக்கம், வடபிரதேசத்திற்கு அப்பால் வாழ்ந்த என்போன்ற வாசகர்களுக்கு பல செய்திகளைச் சொல்கிறது. அவர்களின் எதிர்நீச்சலை, பெற்ற ஆழமான தழும்புகளை, ஒடுக்குமுறைகளை, பாடசாலைகளிலும் தேநீர்க்கடைகளிலும் நிகழ்ந்த பாகுபாடுகளை, அடிநிலை மக்களதும் மேட்டுக்குடியினரதும் இயல்புகளை பதிவுசெய்கிறது.

கற்பகத் தருவின் பயன்பாட்டையும் பண்பாட்டுக்கோலத்தில் அதன் வகிபாகத்தையும் புனைகதையாக ரகுநாதன் சிறப்பாக சொல்லியிருக்கிறார். இந்த நூலின் பின்னிணைப்பில், பனஞ்சோலைக்கிராமத்தின் சமூக அமைப்பையும் பனைமாதாவின் அருட்கொடைகளையும் விளக்குகிறார்.
“ஈழத்து இலக்கியத்தில் இடம்பெறும் மொழிவழக்குகள் தமக்குப்புரியவில்லை” என்று கூறிவரும் தமிழக எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு இந்த நவீனத்தின் ஊடாக வடக்கின் ஆத்மாவை அம்மக்களின் மொழிவழக்குகளை அடிக்குறிப்புகளாக பின்னிணைப்பில் விளக்கியுள்ளார் ரகுநாதன். இந்த நூல் தமிழகத்தில்தான் முதலில் வெளியானது!

1970 காலப்பகுதியிலேயே ரகுநாதனின் கந்தன் கருணையே காத்தவராயன் பாணிக்கூத்தாகி, அம்பலத்தாடிகளின் மேடையில் அரங்கேறியது எனவும், ரகுநாதனின் கந்தன் கருணை அப்படியே அச்சொட்டாக கூத்துவடிவம் பெற்றுவிடவில்லை. சாதிக்கொடுமைகள் பற்றிய பல விளக்கங்களும் மா ஓவின் சிந்தனைகளும் சேர்க்கப்பட்டன என்றும் 1997 இல் எனக்கு வழங்கிய நேர்காணலில் அண்ணாவியார் இளை பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
ரகுநாதனும் தனது மூலப்பிரதியை சிறுபிரசுரமாக வெளியிட்டுள்ளார்.

ரகுநாதனின் தென்னிலங்கை இலக்கிய நண்பர் கே. ஜி. அமரதாசவுக்கு ஒரு துயரச்செய்தி கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றில் ரகுநாதனின் புதல்வன் காயப்பட்டுவிட்டதை அறிந்திருக்கும் அமரதாச தனது குடும்பத்தினரிடம் சொல்லி மிகவும் கவலைப்பட்டுள்ளார். இதுவிடயத்தை அமரதாசவின் மரணச்சடங்கின்போது அவரது மகன் அமர அமரதாச ( தற்போது லேக்ஹவுஸ் பொது முகாமையாளர்) என்னிடம் தெரிவித்தார். இந்தத்தகவலை வீரகேசரி வாரவெளியீட்டில் எழுதியிருந்தேன். அதனை யாழ்ப்பாணத்திலிருந்து படித்துவிட்டு, கொழும்புக்கு வந்த ரகுநாதன், என்னை சந்தித்து முகவரி பெற்று அமரதாசவின் வீடு சென்று குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்து அவர்களின் துயரத்திலும் பங்கேற்றார்.

நெஞ்சத்துக்கு நெருக்கமாக வாழ்ந்தவர்கள் மறையும்வேளையில் அவர்கள் பற்றிய நினைவுகளே மனதில் அலைமோதும். ரகுநாதனுக்கு இந்த மண்ணிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. ஆனால், அவர் எந்த மக்களுக்காக தனது எழுத்தையும் வாழ்வையும் அர்ப்பணித்தாரோ, அந்த மக்களுக்கு இன்னமும் பூரண விடுதலை கிடைக்கவில்லை என்பதற்கு அவர் மறைந்திருக்கும் காலத்தில் தென்மராட்சி சம்பவம் ஒரு சான்றாதாரம்.
நண்பர் என். கே. ரகுநாதனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. அவரது குடும்பத்தினரின் துயரிலும் பங்கேற்று இந்த நினைவுப்பதிகையை சமர்ப்பிக்கின்றேன்.
letchumananm@gmail.com
—0—

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: