
காலை பத்துமணிக்கு குனிந்தபடி ஏதோ எழுதிக் கொண்டிருந்தான் சந்திரன். சிண்டி பக்கதில் வந்து நிற்பதை உணர்ந்து திரும்பாமல் “ஹலோ சிண்டி எப்படி இருக்கிறாய்?”
அவளது கை இப்போது அவனது தோளில் இருந்தது. எழுதியதை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.
சிண்டியின் தலைமயிர் அரைவாசி பின்தோளிலும் மற்றப்பாதி நெஞ்சிலும் கிடந்தது.
“என்ன சிண்டி, இதுதான் பாஸ்சனா? “
“சட்அப்!. உங்களுக்கு தெரியுமா தலைமயிரை கழுவி காய வைக்க நான் எவ்வளவு கஸ்டப்படுகிறேன் உங்களுக்கு பிரச்சனை இல்லை” என சந்திரனின் தலையில் தட்டினாள்.
“என்னை மாதிரி வெட்டலாம் தானே?.”
“மனம் வரவில்லை.”
“உண்மைதான் இந்த பொன்னிற மயிர்களை வெட்ட தலையை அலங்கரிப்பவர்களுக்கும் மனம் வராது. இயனுக்கும் மனம் வராது.”
“என்ன ரொமாண்டிக் மூடில் இருக்கிறாய். மனைவியின் நிலை எப்படி? “
“அதை கேட்டு பிரயோசனம் இல்லை. பைபோலர் டிசீஸ் என்கிறார் டாக்டர்”
“பல பிரபலங்களுக்கு இந்த வருத்தம் உண்டு. இலகுவில் கட்டுப்படுத்தலாம். நீ கவலைப்பட வேண்டாம். உனது உதவியும் பராமரிப்பும் தேவைப்படும்.”
“இதைத்தான் டாக்டரும் சொன்னார்.”
“உனக்கு ஜுலியாவிடம் இருந்து போன் வந்தது. உன்னிடம் நம்பர் இருக்கிறதாம்.”
சிண்டி தகவலாக பொதுவாகக் கூறினாலும் சந்திரன் மனதில் நெருடியது. சிண்டியின் முகத்தைப் பார்க்காமல், “அப்படியா” என கூறிவிட்டு திரும்பவும் எழுத தொடங்கினான். சிண்டி, பின்பு பார்க்கலாம் எனக் கூறிவிட்டு சென்று விட்டாள்.
கடந்த மூன்று வருடங்கள் சிண்டியிடம் பலதடவை தனிப்பட்ட விடயங்களை பேசி இருக்கிறான். அவளது ஆலோசனை உதவிகளை கேட்டும் பெற்றும்; இருக்கிறான். இந்த விடயத்தை ஒளித்து வைப்பது சங்கடத்தை கொடுத்தது.
பரிசோதனை சாலையில் வாசல்வழியாக வந்து வெளியேறினான் வெளியில் பொது டெலிபோன் உள்ளது. காசு போட்டுப் பேசலாம். லாப்பில் உள்ள போனை எடுத்து சிண்டி முன் நின்று பேச மனம் இடம் தராததால் தான் ரெலிபோன் பூத்தை அடைந்தான். மாணவர்கள் பலர் எதிர்பட்டாலும் நல்லவேளையாக பூத்தில் ஒருவரும் இல்லை. இருபது சத நாணயத்தைப் போட்டுவிட்டு ஜுலியாவின் இலக்கத்தை டயல் செய்தான்.
சந்திரன் என மறுமுனையில் குரல் வந்தது.
“என்ன ஜுலியா?”
“இந்தப்பக்கம் எப்ப வருகிறீர்கள்.”
“ஏதாவது விசேடமா? “
“பார்க்க விருப்பமாக இருக்கு. இன்றைக்கு வரமுடியுமா?” “
“சரி வருகிறேன்”
போனை வைத்து விட்டு திரும்பி பார்த்தான். எவரும் தெரிந்தவர் இல்லை. நிம்மதியுடன் பரிசோதனை சாலைக்கு வந்தான்.
மேசையில் அமர்ந்தபடி ஜுலியாவிடம் போவதைப் பற்றி மனம் எண்ணியது.
‘ தேவையில்லாமல் மேலதிகமாக ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டேனே. இந்த விடயத்தை எவருக்குமே தெரியாமல் எப்படி வைத்திருப்பது? ஜுலியாவின் தொடர்பு நிரந்தரமற்றதா? . சோபாவுடன் குடும்பம் நடத்திக் கொண்டு எப்படி இரட்டை வாழ்க்கை வாழ முடியும்?’
ஒருவருக்கு பதிலாக இருவரை ஏமாற்றுகிறேன். ஜுலியாவை நினைக்கும்போது குற்ற உணர்வுகளை மீறி உடலுறவுத் தாகங்கள் விடாய் எடுக்கத் தொடங்கியுள்ளது. காய்ந்து வரண்டு போன நீர்ப்பாசன வாய்க்காலில் புதுவெள்ளம் பாய்ந்து வந்தால் மண்ணுக்குள் மக்கியிருந்த புல்லுகளும், பூண்டுகளும் விழித்து எழுந்து பச்சை நிறமாக்குவது போன்ற ஆனந்தமான சுகஅனுபவம் அவனது உடலில் நீக்கமற நிறைகிறது. கண்ணோ, மனமோ வேலைகளில் ஒத்துழைக்க மறுத்ததால் நூலகத்துக்கு சென்றான். அங்கு கட்டுரைகளையும் போட்டோ பிரதி பண்ணினால் பிரயோசனமாக இருக்கும் என்று நினைத்தான். போட்டோ பிரதி பண்ணும் போதும் ஜுலியாவின் நிர்வாண உடம்பு வீடியோவில் வேகமாக செல்லும் படம் போல் ஓடியது.
பல்கலைக் கழகத்துக்கு அருகில் உள்ள ரிச்மண்ட் பகுதியில் சநதிரனுக்கு இடம் கிடைத்தது. தென்கொரியாவில் இருந்து வந்த ஒரு தம்பதியினருடன் வீட்டை பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இந்த இடத்தை ஒழுங்கு செய்தவன் குண்டல்ராவ். சில நிமிடத்தில் பல்கலைக்கழகம் செல்லவும் இரவு நேரத்தில் லைபிரறி ஆராய்ச்சிக்கூடம் செல்லவும் சந்திரனுக்கு வசதியாக இருந்தது. வாரநாட்களில் தெருப்போக்கு வரத்து நெரிசலில் திணற வேண்டிய தேவையும் இல்லாமல் போய்விட்டது.
இராசநாயகம் இராசம்மா தம்பதிகள் கோம்புஸ்சில் இருந்த தங்களது பிளாட்டை காலி செய்து விட்டு மகளுடன் ஐக்கியமாகி விட்டார்கள். மருமகன் வீட்டில் இல்லை என வெளிப்போக்காக கவலை தெரிவித்தாலும் இராசம்மா மகளுடன் பேரப்பிள்ளையுடன் இருப்பதை தனது இலட்சியமாக நினைத்தாள். ஆரம்பத்தில் சந்திரன் இடஞ்சலாக இருந்தான். இப்பொழுது சந்திரனே இதற்கு வசதி செய்தது இரண்டு மடங்கு சந்தோசம். சொப்பிங், சமையல், குழந்தை பராமரிப்பு எல்லாவிடயத்தையும் தனது கையில் எடுத்து விட்டாள். இதனால் அவளுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் வந்து பொருந்தியதாகவும் இராசம்மா மகிழ்ந்தாள்.
இராசம்மா அக்காலத்தில் பிறந்திருந்தால் ஏதோ ஒரு நாட்டுக்கு ராணியாக இருந்திருக்க முடியும். அந்த அளவுக்கு மற்றவர்கள மேல் ஆளுமை செலுத்தும் தன்மை கொண்டவள். இராசநாயகம் ஆரம்பத்தில் எகிறியோ திமிறியோ இருந்திருக்கலாம்.பிற்காலத்தில் தலையாட்டி இராசம்மா சொல்வதை ஆமோதித்து வருவதே அவரது பழக்கமாக மாறிவிட்டது. இராசம்மா செய்யும் விடயங்கள் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு இருந்ததுவே இதன் காரணமாகும்.
சாதாரண எழுதுவினைஞராக சேர்ந்து பின்பு கட்டட திணைக்களத்தில் தலைமை அதிகாரியாக ஓய்வு பெற்றவர். வீட்டில் அடக்கி வாசித்தது வேலை இடத்தில் உதவியதா இல்லை. வேலை இடத்தில் அமைதி காத்தது வீட்டில் உதவியதா என்பது விவாதத்துக்கு உரிய விடயம். இவரது நேர்மையும் திறமையும் கட்டட திணைக்களத்தில் பிரபலமானது. அமைச்சர் பிரச்சனைகள் புரிந்து கொள்வதற்கு வண்டி அனுப்பி அவரை வரவழைப்பது வழக்கம். கடைசிவரையும் சம்பளத்தைத் தவிர எதுவும் மேலதிகமாக கைநீட்டி வேண்டாதவர் என்பதும் அவரை அறிந்தவர்களுக்கு தெரியும்.
இராசம்மாவின் ஆளுமையும், கட்டுப்பாடும் சோபாவையும் கார்த்திக்கையும் ஆழமாக பாதித்தன. விடுதலை இயக்கத்தில் சேரும்வரை காரத்திக் தாய் சொல்லை தட்டாத பிள்ளை. சோபாவும் தாயை எதிர்த்து பேசியதில்லை. ராசம்மாவை இதற்காக எவரும் குறைகூற முடியாது. ஐம்பது வயதிலும் மற்றவர் விடயங்களில் தலையிடாது தனது குடும்பத்தை மட்டும் ஒரே குறிக்கோளாக நினைத்து கடமையை செய்பவரை எப்படி குறை சொல்வது?.
இப்படியான தன்மையுள்ள இராசம்மாவுக்கு சோபாவின் மனத்தளர்ச்சி அறிந்ததும் தனது சேவை மகளுக்கு தேவை என நினைத்து இருபத்திநாலு மணிநேரமும் நடக்க தலைப்பட்டாள். குட்டி போட்டபின் தன் குட்டிகளை கண்ணும் கருத்துமாக காப்பாற்றும் பெட்டை நாயின் தன்மையை இராசம்மா பெற்றிருந்தாள். சந்திரனுக்கு இந்த விடயத்தில் எதுவித ஆடசேபணையுமில்லை. இரவுபகலாக ஆய்வுகளைத் தொடர்வதற்கும் ஜுலியாவின் தொடர்புகளை அதிகரித்துக் கொள்வதற்கும் இந்த ஏற்பாடு வசதியாக இருந்தது.
—–
ஜுலியாவிடம் கூறியபடி அங்கு சென்றபோது மாலை நாலுமணியாகி விட்டது. காரை நிறுத்தி கதவின் இரும்பு வளையத்தை தொட முன்னரே கதவு திறந்து கொண்டது. வழக்கமாக முகத்தை நீட்டும் ரைகரையும் காணவில்லை. திறந்த கதவின் பின்னாலிருந்து ஜுலியா வந்தாள்.
“எங்கே ஜுலியா ரைகரை காணவில்லை?”
“சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டின் பின்பகுதியில் விட்டுவிட்டேன்”.
காத்திருக்க பொறுமை இழந்தவளைப் போல அவனை அணைத்து வாய்க்குள் நாக்கை செலுத்தி ஆவேசமாக முத்தமிட்டாள். படுக்கை அறைக்கு சென்ற சந்திரனுக்கு மாறுதல் தெரிந்தது. கட்டில் நேர்த்தியாக விரிக்கப்பட்டு இருந்தது. புத்தக அலுமாரி ஒழுங்காக அடுக்கப்பட்டு இருந்தது. கட்டிலின் அருகில் உள்ள மேசையில் கண்ணாடி கூசா தண்ணீர் நிரப்பியும் இரண்டு கிளாசுடன் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. அறையில் சுகந்த மணம் வீசியது. ஒவ்வொரு இடத்திலும் எதிர்பார்ப்பு தெரிந்தது. யன்னலின் சீலை விலகி இருந்தது. இப்பொழுது சந்திரனுக்கு புரிந்தது. இப்படி தட்டாமல் கதவை திறந்த இரகசியம் சந்திரனுக்கு வெட்கம் வந்தது. “இவ்வளவு வரவேற்புக்கு நான் தகுதியானவன் தானா? என்று அவநம்பிக்கையுடன் பல எண்ணங்கள் மனத்தில் நிறைத்துக் கொண்டு கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தான்.
“கமோன் இந்த படுக்கை முழுவதும் உங்களுக்குதான்” என தழுவினாள்.
சந்திரனின் வெட்கம் கரைந்ததும் அதே இடத்தில் உன்மத்தமான காம உணர்வுகள் ஏற்பட்டன. ஜுலியாவின் நிலையும் அதேபோல்தான் என்பதையம் உணர்ந்தான். ஊடல் உறவின்போது அவளது தொண்டையில் இருந்து எழுந்த உணர்வுகள் அவனை சிறிது திடுக்கிட வைத்தது. அரைகுறையாக பிச்சை எடுத்து சாப்பிட்டவனுக்கு விருந்து வைத்த ஜுலியாவிடம் இருந்து வெளிக் கிளம்பிய உணர்வின் அதிர்வுகளை புரியாத சந்திரன் விலக முயன்றான்.
“உன்னை விடப் போவதில்லை” என பலமாக கட்டியணைத்தாள்.
சிறிதுநேரத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்டு “இன்றைக்கு உன்னில் மாற்றம் தெரிகிறதே. அன்று மாதிரி இல்லை.”
“நான் உனக்கு சொல்லத்தான் வேண்டுமா?.” எனக் கண்ணை மூடியபடி சிரித்தாள்.
“இரகசியம் என்றால் வேண்டாம் “.
“அன்று எதிர்பாராமல் என்னை நீ அழைத்தாய். இன்று உன்னை எதிர்பார்த்து எனது உணர்வுகளை தேக்கி வைத்துககொண்டு எப்போது வருவாய் என காத்துக் கொண்டிருந்தேன். உன்னை கண்டதும் தேக்கி வைத்த அணை திறந்த போது பாய்ந்து வரும் ஆற்று நீர்போல வந்தன” என சிரித்தபடி அணைத்தாள்.
“அப்படியா பெண்களின் இரகசியங்கள் எனக்கு புரியாது. சோபா இதைப்பற்றி என்னோடு பேச மாட்டாள். கலவி என்பது ஏதோ ஒரு குற்றம் என நினைக்க வைத்து விடுவாள். திருமணத்திற்கு பின்தான் உடல் உறவும் என்ற சமூக கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தவன் நான். எனக்கு திருமணத்தின் பின் இப்படியாகி விட்டது.”
“சரி சலித்துக் கொள்ளாதே, மனஅழுத்தத்தில் இருப்பவளுக்கு எப்படி கலவி இனிக்கும்? மருந்துகள் எடுத்தால் கூட கலவியின் தன்மையை பாதிக்கும்.
“இது எப்படி உனக்கு தெரியும்? “
“அனுபவத்தில் சொல்கிறேன்.”
“என்ன? “.
சாதாரணமாக கேட்டாலும் நெற்றியில் யாரோ குறி வைத்து கல்லெறிந்தது போல் இருந்தது. இறுக அணைத்திருந்த கைகள் தளர்ந்தன.
“இன்றைக்கே சொல்லவேணுமா? “ என அவன் மார்பில் தலை வைத்துப் படுத்தாள்.
“சொல்லுவது சொல்லாமல் விடுவது உன்னைப் பொறுத்தது. ஏன் ஆவலை கிளறி விட்டாய்.? “
“சந்திரன் எனக்கு மனஅழுத்தம் சிறுமியாக இருந்தபோதே இருந்து வருகிறது. எனது மனோ வைத்தியரின் விலாசத்தைதான் நான் உனக்கு தந்தேன்.”
“உண்மையாகவா? “ என்றவாறே நிமிர்ந்து கட்டிலின் தலைமாட்டில் சாய்ந்தான்.
“நான் புரசாய்க் என்ற மருந்தை எடுக்கிறேன் இந்த மருந்தை உண்பவர்களுக்கு கலவியில் நாட்டம் குறைவு. ஒரு கிழமைக்கு முன்பு மருந்தை நிறுத்தி விட்டேன். இப்போது உனக்கு பரிந்திருக்கும் என நினைக்கிறேன்.”
எதுவும் போசமல் மௌனமாக இருந்த சந்திரனிடம் மீண்டும் “பைப்போலர் நோயுள்ள மனைவியிடம் இருந்து தப்பி மனஅழுத்தம் உள்ள காதலியிடம் தஞ்சம் அடைந்திருக்கிறாய் என்பது அதிர்ச்சியாக உள்ளதா? “
“அதிர்ச்சி மட்டுமல்ல, எந்த பதிலும் வார்த்தைகளாக வெளிவர மறுக்கிறது.”
“அப்படியே கட்டிலில் படுத்திரு. நான் குளித்துவிட்டு உனக்கு சமைக்க போகிறேன்.”
“சமைக்க வேண்டாம். இருவரும் வெளியே போய் சாப்பிடுவோம் “
இருவரும் குளித்துவிட்டு கடற்கரைப் பகுதியில் உள்ள சீன கடையில் உணவருந்தினர்.
சாப்பாட்டின் பின் மீண்டும் வீடு வந்ததும், “சந்திரன் இன்று என்னோடு தங்குவாயா?” “
“எனக்கு மாற்று உடுப்பில்லை. மேலும் உனது மகன் வரும் நேரமல்லவா?”
“உடுப்பு பிரச்சனை நான் தீர்க்கிறேன். மைக்கல் வருவதற்கு ஒரு மணியாகி விடும”;.
“உன்னோடு தங்கினால் இரவெல்லாம் என்னால் தூங்க முடியாது. நாளை லாப்பில் வேலை செய்ய வேண்டும்” என்று கூறியபடி அவளைப் பின்தொடர்ந்தான்.
கட்டிலின் பக்கத்தில் இருந்த புகைப்பட அல்பத்தை எடுத்துக்காட்டி “இதுதான் அப்பா, இது அம்மா அது மைக்கலின் தகப்பன் “ என காட்டினாள்.
“உனது முதல் திருமணம் இவரோடுதான் நடந்ததா? “
“மார்க்கோடு திருமணம் நடக்கவில்லை. இருவரும் வீட்டைவிட்டு ஓடிவந்தோம்.”
“உனக்குப் பின்னால் பெரிய கதை இருக்கிறது போல இருக்கிறது.”
“கதையில்லை. தொடர் நாவலே இருக்கிறது.”
“இன்று இரவு உனது வரலாற்றை கேட்கிறேன்”.
சந்திரன் கட்டிலில் ஏறி படுத்தான். அவளும் பக்கத்தில் படுத்தாள்.
மறுமொழியொன்றை இடுங்கள்