
கையை நீட்டி கடன் அட்டையைத் தந்தபோது மிஷேலின் முன் கையில் பச்சை குத்தியிருந்த வார்த்தைகள் ஆங்கிலம் போலிருந்தது.
” இது என்ன எழுதியிருகிறது? வார்த்தைகள் புரியவில்லை.” எனக் கேட்டேன். அவளது கையை நீட்டிப் பிடித்தபடி என்னைப் பார்த்தாள். அவள் மட்டுமல்ல. எனது நேர்ஸ், அவளது தாய், தந்தை, அவரது கையிலிருந்த சிறிய பிறவுன் நிற சுவாவா (Chihuahua) நாயும் பார்த்தது.
“இந்தப் பச்சை குத்தியதை நான் இதுவரையும் பார்க்கவில்லையே. இதன் என்ன அர்த்தம் என்ன?” என்றேன்
“நான் உங்களுக்கு லத்தீன் புரியும் என நினைத்தேன் ” என்றாள் ஆச்சரியத்துடன்.
“ஆங்கிலமே கஸ்டப்பட்டு படித்தது இதில் எப்படி லத்தீன்? புரியவில்லை.”
“கடைசி சுவாசம் வரும் வரையில் நான் உயிர் வாழ்வேன் ”
“உண்மையாகவா? ”
“போன கிழமைதான் இதைக் குத்தினேன். ”
வார்த்தைகள் எதுவும் என்னிடமிருந்து வெளிவரவில்லை.லத்தீன் மட்டுமல்ல, தெரிந்த ஆங்கிலமும் கை கொடுக்க மறுத்தது.
அவளுக்கு ஆறுதலாக என்ன வார்த்தைகள் சொல்வது? இன்றா, நேற்றா? கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக மிஷேலைத் தெரியும். ஒவ்வொன்றாக சரிந்து விழுந்த அவளது வாழ்வின் பல அத்தியாயங்களை எனக்கு, அவள் நேரடியாகவும் எனது நர்ஸ்கள் மூலமும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொண்டவள். வாழ்க்கையின் இறுதித் தருணத்தையும் நெஞ்சுரத்துடன் எதிர் கொள்வதன் சாட்சியாக அவள் தனது கைகளில் எழுதியது. மற்றய பெண்கள் போல் தன்னை அழகு படுத்தவோ, அடையாளத்தை வெளிப்படுத்தவோ, இல்லைக் காதலனது பெயரையோ எழுதவில்லை. நாற்பத்தைந்து வயதில் – அவளது நிலையில் பச்சை குத்திக் கொண்டது, அவளுக்காக. ஒவ்வொரு நாளும் அதைப் பார்த்து மனஉறுதி பெறுவதற்காக. தன்னைத் திடப்படுத்தி அதையே மனதுக்குள் சொல்லிக் கொள்ள விரும்பியிருந்தாள் என்பது எனக்குப் புரிந்தது.
வார்த்தை பஞ்சத்தை சமாளித்தபடி “இந்த கைகளை போட்டோ எடுக்கட்டுமா? ” என்றேன்.
எனது கேள்வியை கேட்டுச் சிரித்தபடி, அவளது அழகிய கண்களை சிமிட்டிவிட்டு எனக்காகப் பச்சை குத்திய கையை உயர்த்தினாள்.
எனது மேசையில் இருந்த அலைபேசியை எடுத்து போட்டோவை எடுத்தேன். முதல் போட்டோவில் பின்புலத்தில் மிஷேலின் தந்தை தெரிந்தார்.அவரை விலகச் சொல்லிவிட்டு மீண்டும் அவளது கையைப் போட்டோ எடுத்தேன்.
பதினைந்து வருடங்களுக்க முன்பாக நான் சந்தித்தபோது அவள் திருமணமாகியிருந்தாள். 30 வயதிருக்கும். கோல்ஸ் என்ற பெரிய கொம்பனியில் விற்பனைப்பகுதியில் நல்லவேலையில் இருந்தாள். என்னிடம் இரண்டு லாபிரடோர் நாய்களை வைத்தியத்திற்காகக் கொண்டுவருவாள்
சாதாரணத்திலும் உயர்ந்தவள். பெரிய நீல நிறமான கண்கள். தங்க நிறமான கேசம். செதுக்கிய கூர்மையான மூக்கு. அகலமான உதடுகளுடன் சிரித்தபடியே இருப்பாள். அளவுக்கு அதிகமாக அழகு அவளிடமிருந்தது. அவளுடைய கறுத்த லாபிறடோர் நடக்க முடியாமல் வந்து நான் கருணைக்கொலை செய்தேன். அன்று மட்டுமே அவளிடம் சிரிப்பில்லை. அதன் பின்பு சந்தனக்கலர் லாபிறடோரரிடம் மிகவும் பாசமாக இருந்தாள்.அந்த நாய்க்கு ஒரு நாள் உணவருந்தாதபோதுகூட என்னிடம் அழைத்து வருவாள். ஒரு நாள் கண்கலங்கியபடி நாயைக் கொண்டு வந்தபோது “என்ன விடயம்? ” எனவிசாரித்தேன்.
ஏதாவது சிறிய விடயமாக இருக்கும் என நினைத்துக் கேட்ட எனக்கு அவளது பதில் எதிர்பாராதது. திகைத்துவிட்டேன்.
கணவனிடமிருந்து பிரிந்து விட்டதாகக் கூறினாள். எனது நேர்சுடன் மேலும் கதைத்தபோது கருப்பையில் பிரச்சனையால் குழந்தை வாய்ப்பு இல்லை என்றதால் கணவன் பிரிந்து விட்டதாகக் கூறினாள். இந்த நாய் மட்டும் இப்பொழுது என்னுடன் உள்ளது என்றும் அந்த நாயின் தோலில் சில கட்டிகள் உள்ளது. அவற்றை அகற்றவேண்டும் என்றாள்
அவை சாதாரணமான கொழுப்புக்கட்டிகள் என்றபோதும் பிடிவாதமாக அவற்றை அகற்றச் சொன்னாள். பலகாலமாக அந்தக்கட்டிகள் இருந்தன. இதுவரையும் அவற்றைப் பற்றி கவனிக்காமல் இருந்தவள் பொம்மையோடு தூங்கும் குழந்தையின் மனநிலையில் இப்போது நாயின்பால் கவனத்தைத் திருப்புகிறாள்போல என நினைத்து நாங்கள் அவற்றை அகற்றினோம்
தனது வந்த வேலை முடிந்தாலும் ஐந்து நிமிடத்திற்கு ஆறுதலாக நின்று பேசுகிறதும் சிரிப்பதும் மிஷேலது வழக்கம் என்பதால் எனது நேர்சுகள் இருவருக்கும் அவளைப் பிடித்துவிட்டது. அந்தரங்கமான விடயங்களைப் பரிமாறும்போது நான் விலகிவிடுவேன்.
ஒரு நாள் கறுத்த லாபிறடோருக்கு முடக்குவாதம் வந்தது அதை அதற்காக வைத்தியம் செய்தோம். இறுதியில் அதுவும் இறந்தது. நாய்கள் இல்லாததால் சில வருடங்கள் எங்களுக்கு மிஷேலுடன் தொடர்பற்றுப் போய்விட்டது
ஒருநாள் எனக்கு எனது நேர்ஸ் ஷரன் வந்து ‘மிஷேலுக்கு கான்சர்.இப்பொழுது வேiலையை விட்டுவிட்டாள் ” என்று சொன்னதும் நான் திகைத்துவிட்டேன்.
இந்த வயதிலா? அதுவும் ஏற்கனவே நமது நாடுகளில் குழந்தை இல்லையென்பதால் புறக்கணிப்பதுபோல் கணவனால் விலத்தப்பட்டிருப்பவளுக்கு ஏன் இந்தச் சோதனை?
மிஷேலின் பெற்றோர் குரோசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள். ஒரே பிள்ளையானதால் வயதான பெற்றோர்கள் மட்டுமே அவளது சொந்தங்கள்
ஒரு நாள் அது மெல்பேனின் கார்த்திகை மாதம். மெதுவான காலைநேர இளவெயில். நானே கதவைத் திறந்தேன். அவளது முகத்தில் இருளாக இருந்தது. புதியவர்களாக இருக்கிறார்களே என உள்ளே அழைத்தேன். காலை ஒளிக்கு கண் மெதுவாக இசைவாக்கமடைந்ததும் என்னால் நம்பமுடியவில்லை. அவளது ஒரு கையில் சிறிய சுவாவா எனப்படும் நாய்க் குட்டியிருந்தது. மறுகையில் கைத்தடியிருந்தது அவளது பின்னால் பெற்றோர் நின்றனர். அதே முகம் ஆனால்!
உருவத்தைப் பார்த்தபோது எங்களுக்கு நம்பமுடியவில்லை முன்பு இருந்த மிஷேல் அந்தக் காலை நேரத்தில், மாலை நேரத்து நிழலாக நின்றாள். அழகு, இளமை, மற்றும் ஆரோக்கியம் தற்காலிகமான கொடைகள். அவை நமது பெற்றோரால் தோம்பாகத் தரப்பட்ட சொத்துக்கள் அல்ல. ஓடும் நதியிலிருந்து கையால் அள்ளிய நீர்போல் நிரந்தரமற்றது என்பதற்கு சான்றாக இருந்தாள்.
ஆனால் அவளது சுபாவம் மட்டும் மாறவில்லை. புன்னகையை எங்களது சிறிய கிளினிக்கில் விதைத்தபடி அந்த நாய்க்குட்டி கைகளில் கீறிவிடுகிறது எனச் சொல்லி நகங்களை வெட்டும்படி கேட்டாள்.
இப்போது அவளுடன் பெற்றோர்கள் எழுபதை தாண்டியவர்கள் இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் மகளை பாராமரிக்கிறார்கள்.அவளுக்காக அவளது நாய்க்குட்டியையும் பராமரிக்கிறார்கள்.
தனது நோய்க்காக தொடர்ச்சியான மருத்துடன் சிகீச்சையையும் பெறுவதாகச் கூறினாள். நாங்கள் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. எந்த ஒளிவுமறைவுமற்று அவளே சகல விடயத்தையும் சொன்னாள்
தற்போது ஐந்து வருடங்களாகி விட்டது. சில நாட்களில் கைத்தடியுடன் வருவாள். “இப்பொழுது ஓரளவு பரவாயில்லை என்றும் ஆனால் கார் ஓட்டமுடியாது. அன்றாட சொப்பிங் மற்றைய தேவைகளுக்கு பெற்றோரை நம்பிருப்பதாகவும், அந்தச் சிறிய நாய் தன்னை விட்டு விலகுவதில்லை ” என்றாள்.
கடைசியாக வந்தபோது அவளில் நல்ல மாற்றம் தெரிந்து” ” உற்சாகமா இருக்கிறாய்” ” என்றேன். அழகான புன்சிரிப்புடன் ஒவ்வொரு நாளும் வாழ்வதாகத் தனது கையை உயர்த்திக் காட்டினாள்.
yarlpavanan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி