கனவு தேசம்


ஹெல்சிங்கியில் இருந்து மூன்று மணி நேரத்தில் எம்முடனிருந்த ஐம்பது பேருடன் பஸ் சென்ட் பீட்டர்ஸ்பேக் அடைந்தது. ரஸ்சிய எல்லையில் எங்கள் கடவுச்சீட்டுகள் பரிசோதிக்கப்பட்டன.

எமது வழிகாட்டியான வெரோனிக்கா முப்பது வருடங்களாக ரஸ்சியாவிற்கு வந்து போவதோடு ரஸ்சிய மொழியையும் தெரிந்தவர். சோவியத் யூனியன் இருந்த காலத்தில் தரைபாதையால் செல்லும்போது மூன்று இடங்களில் இறக்கி ஏற்றுவார்கள் என்றார். எங்கள் பஸ்சை மூன்று இடத்தில் மறித்தாலும ஒரு இடத்தில் மட்டும் எம்மை இறக்கிப்பாஸ்போட்டைப் பரிசோதித்தார்கள். மற்றைய இடத்தில் பஸ்சின் உள்ளே வந்து பாஸ்போட்டை வாங்கிப் பார்த்துவிட்டுத்தந்தார்கள். கடைசியாக ஒரு இடத்தில் எதுவும் கேட்காமல் சாரதியிடம் பேசிவிட்டு வாகனத்தடையை உயர்த்திஅனுமதித்தார்கள்.

இதைத்தான் அக்காலத்தில் இரும்புத்திரை என்றார்களா?

எமது பஸ் சாரதி ஹங்கேரியை சேர்ந்தவர். எங்களது ரூர் கம்பனி பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்டது .எங்களது வழிகாட்டி வெரோணிக்கா ஒல்லாந்து. ஏன் எமது சாரதியும் பஸ்சும் ஹங்கேரி என்ற காரணத்தைவினவியபோது ” பஸ் பதிவுக்கட்டணம், சாரதி வேதனம் குறைவு. இவர்கள் எல்லோரும் சுதந்திரமான ஒப்பந்தத்தில் வேலை செய்பவர்கள்.” என்ற பதில் வந்தது.

ரஸ்சியா எனக்கு ஒரு கனவு தேசம். பல வருடங்கள் சமதர்ம பூமியென நம்பி கமியூனிசம் சோசலிசம் என்றகோட்பாடுகளால் மயக்கப்பட்டதால் சோவியத் யுனியன் உடைந்தபோது எனக்கு கோர்பச்சோவில் கோபம் வந்தது. நான் நினைக்கிறேன்: அக்காலத்தில் பொதுவுடமையை ஆதரித்த எவருக்கும் படுகொதிவந்திருக்கும்.கோர்பச்சேவ் சீ ஐ ஏ யால் வாங்கப்பட்டமனிதர் என பலர் முடிவுகட்டியிருப்பார்கள்.

ஆழமாக யோசித்தால் உயிர்ப்பலியில்லாமல் 70 வருடங்கள் நடந்த சர்வாதிகார அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவந்ததற்கு சோவியத் மக்கள் மட்டுமல்ல, உலகமக்கள் எல்லோரும் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் எனநினைக்கிறேன்.

பஸ்சில் பயணித்தபோது மேற்கு ரஸ்சியப்பகுதி, வட ஐரோப்பிய நாடுபோல் பைன் மரங்கள் நிறைந்த நிலப்பகுதியாகஇருந்தது. நாங்கள் போன பாதையே ஹிட்லரின் படைகள் சென்ற பாதையாகும்.அக்காலத்தில் பின்லாந்துப்படையினர் நாசிகளின் கையாட்கள்.

ரஸ்சியா பத்தாம் நூற்றாண்டுவரையில் கிரேக்கர்கள்போல் நகரங்களை ஆண்ட பல மன்னர்களை கொண்ட பிரதேசம்.அத்துடன் ஆதிகால கிரிக்க நாட்டவர்களைப்போல் போல் பண்ணை அடிமைகளை வைத்திருந்த நாடு. பண்ணை அடிமைகளை மனிதர் எனஅழைக்காமல் ஆத்மாக்கள் என அழைத்தார்கள். இதை கோகுல், தாஸ்தேஸ்கி போன்றவர்களினது நூல்களில் ◌பார்க்கலாம்

சிலாவிக் நாகரீகம் ஆரம்பத்தில் தொடங்கிய இடம் தற்கால உக்ரேனியத் தலைநகரான கீவ் நகரப்பகுதியே.அக்காலத்தவர்கள் சிலாவிய மக்கள்,பேசும் மொழியை மட்டும் கொண்டிருந்தார்கள். இவர்களிடம் நிறுவனப்படுத்தப்பட்ட மதமிருக்கவில்லை. கிறிஸ்தவத்திற்கு முன்பான இயற்கைச்சக்திகளை வழிபடுபவர்களாக இருந்தார்கள்.

10 ஆம் நூற்றாண்டில் அரசாண்ட விளடிமீர்(1988-989) என்ற இளவரசன் அக்கால பைசான்ரின் (Byzantine : Present Turkey and Greece)) என்படும் சாம்ச்சிராச்சியத்தின் இளவரசியை மணம் முடிக்க எண்ணியபோது பைசான்ரின் மன்னன் அக்கால மதமாகிய ஓதடொக்ஸ் கிறீஸ்துவ மதத்திற்கு மாறவேண்டுமென விளடிமீர் மீது நிபந்தனை வைத்தான். அதற்கான பத்திரங்களில் கையெழுத்திட மொழியில்லை. வேறு ஊடகங்கள் இல்லாத காலத்தில் மதத்தை பரப்புவதற்கு எழுதும் மொழி வேண்டும்.

வின்ரர் பலஸ் – பீட்டர் அன் போல் கோட்டை

அதுவரையும் எழுத்தில்லாமல் வாய்மொழி மட்டும் பேசிவந்த சிலாவிக் மக்களுக்கு புரிவதற்காக எழுத்தை உருவாக்கி,அதில் விவிலியத்தை எழுத இரண்டு பேராசிரியர்களை ( Cyril and Methodius,) பைசான்ரின் மன்னன் பணித்தபோது,அவர்களே மிகவும் அழகான சிலாவிக் மொழியை உருவாக்கினார்கள்.

ஆரம்பகால கத்தோலிக்க அதிகாரபீடம், விவிலியத்தை எழுதுவதற்கு கீபுறு கிரேக்கம் மற்றும் இலத்தீனை மட்டுமே அங்கீகரித்திருந்தபடியால், சிலாவிக் மொழியில் எழுத அனுமதிக்கவில்லை. பின்பு மிகத் தயக்கத்துடன் சம்மதித்தார்கள்.சிலாவிக் மொழியில் எழுதப்பட்ட விவிலியம், கிரேக்க மற்றும் சிலாவிக் மொழியை உள்ளடக்கியதால் ஆங்கிலத்தில்மொழி பெயர்க்கப்பட்ட விவிலியத்திலும் உன்னதமானது என்கிறார்கள்.

பிற்காலத்தில் ரஸ்சிய இலக்கியவாதிகளான புஷ்கின் , தாஸ்தவஸ்கி , டோல்ஸ்ரோய் போன்றவர்கள்உருவாகியதற்கு இந்த மொழியே காரணம். எழுத்து மொழியை உருவாக்கியவர்களைக் கவுரவிப்பதற்காக இதை சிறிலிக் எழுத்துகள் என்கிறார்கள்

கீவ் நகரில் உருவாகிய சிலாவிக் அரசு , மொங்கோலிய படையெடுப்பால் அழிந்தபோது, மாஸ்கோ நதியால் பாதுகாக்கப்பட்ட பிரதேசம் தலைநகராகியது. அதன் பின்பு மாமன்னன் பீட்டரால் 1703 பீட்டர்ஸ்பேர்க் நெவோ நதிக்கரையின் சதுப்பு நிலத்தில் அமைக்கப்பட்டது.

பல தடவைகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அழிவுகள் பீட்டர்ஸ்பேர்க் நகரத்திற்கு ஏற்பட்டுள்ளது. தாஸ்தவஸ்கி தனது ” நோட்ஸ் புறம் அன்டர் கிரவுண் ” என்ற நூலில் சவக்குழி தோண்டும்போது தண்ணீர் வருமென்கிறார். 1917இல் போல்விசுக்கிளர்ச்சியின் பின் மீண்டும் மாஸ்கோ தலைநகராகியது.

பீட்டர் இலங்கையில் பராக்கிரமாகு, இந்தியாவில் அசோகமன்னன் போன்றவன்.

இந்த நகரத்தை உருவாக்க ஏராளமான பண்ணை அடிமைகள் உழைத்தார்கள். அவர்களில் ஆயிரக்கணக்கில் இறந்தார்கள்.அவர்களது வியர்வை, உதிரம், மற்றும் எலும்புகளின் மீது நகரம் அமைக்கப்பட்டதாக புஷ்கின் கவிதை பாடியிருக்கிறார். நாசிகளால் நகரத்தின் பெரும்பகுதிகள் அழிக்கப்பட்டு விலைமதிப்பான பொக்கிசங்கள் சூறையாடப்பட்ட பீட்டர்ஸ்பேர்க் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டது. தற்பொழுது உலகத்தில் மிகவும் அழகான நகரங்களில் ஒன்றாகும். பெரிய மாளிகைள், தங்கத்தகடுகளால் வேயப்பட்ட தேவாலயங்கள் இத்தாலி, பிரான்சிய கட்டிக்கலைஞர்களை அழைத்து பெரும் செலவில்அக்காலத்தில் கட்டப்பட்டன. அவை தொடர்ச்சியாக மராமத்து செய்து புதிதாக பேணப்படுவதை பார்க்கக்கூடியதாக .

நாங்கள் சென்ற நேவா நதிக்கரையில் இருந்த பீட்டர் அண்ட் போல் தேவாலயமும் கோட்டையும் ஆரம்பத்தில் மரத்தால்உருவாக்கப்பட்டவை. பிற்காலத்திலே செங்கல்லில் அமைக்கப்பட்டது. அரசகுடும்பத்தினது உடல்களின் சமாதிகள்இங்குள்ளன. போல்சவிக்கால் கொலை செய்யப்பட்ட ஜார் மன்னரதும் அவரது குடும்பத்தினரதும் சமாதிகள் அங்கு உள்ளன. பழைய சுரங்கத்தில் ஏறியப்பட்ட எலும்புகளை கண்டுபிடித்து அவற்றை இங்குகொண்டு வந்து சமாதிக்குள்வைத்திருக்கிறார்கள். கமியூனிஸ்டுகள் அரசாண்ட 70 வருட காலத்தை சாதாரண ரஸ்சிய மக்கள் இருளடைந்த காலமாக கணிக்கிறார்கள்.

ஜார் மன்னரதும் அவரது குடும்பத்தினரதும் சமாதிகள்

இந்த வளாகத்தில் அமைந்துள்ள கோட்டையிலே தாஸ்தவஸ்கி ஆரம்பத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தார். அதன் பின்பே துப்பாக்கியால் மரணமடையவிருந்தார். கடைசி நிமிடத்தில் மரணதண்டனை நிறுத்தப்பட்டு நான்கு வருடங்கள் சைபீரியாவுக்கு கடத்தப்பட்டார். இந்த சிறைச்சாலைக்கு பல ரஸ்சிய எழுத்தாளர்கள் வந்து சென்ற பெருமையுள்ளது.

இங்கு மகா பீட்டரின் வெண்கலச்சிலை சிலையுள்ளது . (6’8” ) பீட்டர் அக்காலத்திலே மற்றைய ஐரோப்பிய அரசர்களில் விட உயரமாவர்.

கோட்டையருகில் உள்ள பூங்காவில் ரஸ்சிய இலக்கியத்தின் தந்தை எனப்படும் புஷ்கினது சிலையைப் பார்க்க முடிந்தது.கவிஞர் அலக்ஸ்சாண்டர் புஷ்கின், மாமன்னர் பீட்டரைப்போல் இந்த நகரத்தில் எங்கும் நிறைந்தவர். 1799ஆம் ஆண்டுபிறந்தவர். இவரது தாய்வழி ஆபிரிக்க முஸ்லீம். ஆனால் புஷ்கினது தந்தை வழி ரஸ்சிய பிரபுத்துவ குடும்பம். பீட்டர்மன்னரின் இராணுவத்தில் அதிகாரியாக இருந்தவரது மகளே புஸ்கினின் தாய். இந்த ஆபிரிக்க கலப்பைபற்றி பெருமையாக புஷ்கின் பேசியுள்ளார். சிறுவயதில் மிகவும் துடியாட்டமும் குறும்புத்தனமும் கொண்ட புஷ்கின்அ ரசநிர்வாகிகளை பயிற்றுவிக்கும் கல்லூரிக்கு சென்றாலும் மன்னருக்கு எதிரான கோசங்களை கிளப்பியதால், தலைநகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கோக்கஸ் மலைப்பிரதேசம் மற்றும் கருங்கடல் பிரதேசங்களில் வாழ்ந்தகாலத்தில் தொடர்ச்சியாக பெண்களை திரத்துவதிலும் மற்றவர்களது மனைவிமாரை காதலிப்பதுமாக இருந்ததால் பல இடங்களில் இடம் மாறியபடியிருந்தார்.இக்காலத்தில் புஷ்கின் ரஸ்சியாவின் பெரும் கவியாக பிரபலமடைந்தார். அவரது காதல் கவிதைகள் ரஸ்சிய மொழியில் பைரனுக்கு இணையாக இருந்தன.

1825 மன்னனை (Nickolai 1)கவிழ்த்து குடியரசைத்தோற்றுவிக்க புஷ்கின் நண்பர்கள் எடுத்த முயற்சி தோல்வியடைந்தபோது புஷ்கின் தப்பிவிட்டாலும், அவரது எழுத்துக்கள் நேரடியாக அரசனால் தணிக்கை செய்யப்பட்டது.

அலக்ஸ்சாண்டர் புஷ்கின், மாமன்னர் பீட்டர்

கவிதைகளில் மட்டும் புஷ்கின் பிரபலமாக இருக்கவில்லை. பெண்களுடன் உறவுகொள்வது சூதாட்டம் என்பவற்றால்அதிக அளவு கடனாளியாகவும் இருந்தார்

பிற்காலத்தில் பீட்டர்ஸ்பேக் வந்து நட்டாலிய என்ற அழகிய பெண்ணை மணம் செய்கிறார். நட்டாலியாவின் அழகால் பலர் கவரப்பட்டனர். அக்காலத்தில் மன்னரின் இராணுவ அதிகாரியாக கடமை புரிந்த பிரான்சிய அதிகாரிநட்டாலியாவின் மீது கண் வைத்து திரிந்ததால் ஆத்திரமடைந்த புஸ்கின் பிரான்சிய அதிகாரியை துப்பாக்கிச் சண்டைக்கு அழைத்து அந்தச் சண்டையில் காயமடைந்து மிகவும் குறைந்த வயதில் மரணமடைகிறார்.

புஷ்கினது கவிதைகள் காதலையும் தேசிய உணர்வையும் தூண்டுபவை என்பதால் மிகவும் கவுரவிக்கப்பட்ட கவியாக ரஸ்சிய மக்களது மனங்களில் இருக்கிறார். அவரது சிலைகள் ரஸ்சியா முழுவதும் உள்ளன. அவரது சமாதியில் இன்றும் யாராவது மலர்களை வைத்தபடியிருப்பார்கள்.

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கனவு தேசம்

 1. Shan Nalliah சொல்கிறார்:

  Great..I enjoyed Your travel stories! Thanks! Please travel more & write mote!

 2. Premaraj.t சொல்கிறார்:

  ஆழமாக யோசித்தால் உயிர்ப்பலியில்லாமல் 70 வருடங்கள் நடந்த சர்வாதிகார அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவந்ததற்கு சோவியத் மக்கள் மட்டுமல்ல, உலகமக்கள் எல்லோரும் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் ..iஎன நினைக்கிறேன் true , i was never a communist , but beleived in Socialist ideas, luckly Sweden which workers party was influenced by communist, but realised, that communism never Works, however good it was , its against the human sprit … and they built a socialist state , other Noric countries followed them

 3. noelnadesan சொல்கிறார்:

  உண்மையில் நான் டென்மார்க் நோர்வே போன்ற நாடுகளின் நாங்கள் தேடிய சமத்துவம் இருக்கிறது. முதல் இல்லாது எதுவும் ஏலாது . அதன் பின்பு மனிதர்களது தகமை இயல்புகளை வெளிப்படுத்தவேண்டும் . கம்மியுனிச நாடுகள் செய்தது எல்லாம்அதிகாரத்தை வைத்து மற்றவர்களைக் கட்டுப்பபடுத்தியது . ஒரு காலத்திற்கு பின்பு வேலை செய்யவில்லை

 4. ஜெ.கோவிந்தன் சொல்கிறார்:

  தங்களின் கண்களால் உலகனை பார்க்கின்றோம்!!இனிமை அருமை !!! நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.