நடேசன்
அவுஸ்திரேலியாவில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் பயிற்றப்பட்டும் , நட்பாகவும் இருப்பன. ஆனால், அவற்றில் ஒன்று அல்லது இரண்டு நாய்கள் எப்பொழுதும் உரிமையாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் நெருங்க முடியாதவாறு இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை சிறிய நாய் வர்க்கமாக இருக்கும் . பெரிய நாய்களுக்கு கட்டாயமாகப் பயிற்சி கொடுப்பவர்கள், சிறிய நாய்களுக்கு அவ்வாறு பயிற்சி வழங்குவது குறைவு.
வெளியே செல்லாமல் , வீட்டுக்குள் மட்டுமே பயிற்றப்படாத நாய்கள் வளர்வதால், அவைகளால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பது நம்பிக்கை. அது உண்மையாக இருந்தாலும் குடும்பத்தில் மற்ற உறவினர்களைச்சந்திக்கும்போது பிரச்சினைகள் உருவாகும். குடும்பத்தில் குழந்தைகள் வரும்போது பலருக்கு தலையிடியாகிவிடும். அதனால் நாய் வீட்டிற்கு வெளியே நிரந்தரமாக தள்ளப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
மருத்துவத்திற்காக வரும் காலத்தில்மிருகவைத்தியரை தங்கள் முக்கிய எதிரியாக அவை நினைப்பது தவிர்க்க முடியாதது. அவைகளைப் பொறுத்தவரையில் அவர் ஒருவரே ஊசி போட்டு வலியை உருவாக்குபவர்.
இப்படிப்பட்ட ஜக் என்ற ஒரு சிறிய நாயினதும் அதனது உரிமையாளர் திருமதி வில்லியம் அவர்களதும் வாழ்வின் தருணமிது.
ஜக் என்ற வெள்ளையும் கருப்புமான கலப்பின சிறிய நாய்க்கு தொலைக்காட்சியைத் தொலைவில் இருந்துரிமோட்கருவியால் இயக்குவதுபோல் தூர நின்றபடி கடந்த பன்னிரண்டு வருடங்களாகத் தடுப்பு ஊசி மருந்து போடுவேன்.அதனது அதிஸ்டம், எனது அதிஸ்டமும்கூட, பன்னிரண்டு வருடத்தில் எந்த நோயும் வரவில்லை. அதனால் கையால் தொட்டுப் பரிசோதிக்கும் வாய்ப்பு எனக்கு இருக்கவில்லை.
ஊசி போடும் போது அதனது வாய் கட்டப்பட்டிருக்கும் (Muzzle) . ஆனால், அதன் ஊடாக தொடர்ச்சியாக எனது இரத்தத்தையும் தசையையும் ருசி பார்க்க விரும்பிய தனது நாயின் நடத்தைக்காக உரிமையாளர் திருமதி வில்லியம் மன்னிப்புக் கேட்பார். அவரைப் பொறுத்தவரை திருத்தமுடியாத செல்லப்பிள்ளை. அவர் ஒருவரே அவரது வீட்டிலிருப்பதால் அவருக்குப் பிரச்சினையில்லை. மேலும் இந்த ஐக்கின் குணம் தனக்குப் பாதுகாப்பு என்ற எண்ணமும்உள்ளது.
‘உங்களது நாய் ஆரோக்கியமாக இருப்பதால் எதுவித பிரச்சனையும் இல்லை ஆனால் உடல்நலம் குறைந்தால் நான் பரிசோதிப்பதற்கு ,மயக்க மருந்து கொடுக்கவேண்டும் என ஒவ்வொரு வருடமும் மறக்காமல் சொல்வேன்.
இப்படிப் பல வருடங்கள் கழிந்தது. நானும் தற்போது கிழமையில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை என்பதால் இருவருடங்களாக அவரைப் பார்க்கவில்லை. ஐக்கை பார்க்காதது எனக்கு ஒரு குறையாகத் தெரியவில்லை.
இந்த வருடத்தின் ஆரம்பக் காலத்தில் என்னைப் பிரத்தியேகமாக பார்க்க விரும்பி நான் வேலைசெய்த நாளில் திருமதி வில்லியம் வந்தார்
நான் சந்தித்த ஆரம்ப காலங்களில் , மத்திய வயதில் இருந்த திருமதி வில்லியத்திற்கு முகத்தில் சுருக்கம் விழுந்திருந்தது. எதுவித அலங்காரமுமற்று நரைத்த தலையுடன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தில் இருந்தார்.
செல்லப்பிராணிகளை மட்டுமல்லஅவர்களது உரிமையாளர்களது மாற்றங்களை அவதானிப்பது தவிர்க்க முடியாது. சுக துக்கம் பற்றிய பொதுவான விசாரணை மட்டும் செய்துவிட்டு ஐக்கைப் பற்றி விசாரித்தேன்.
‘ஜக் வாயில் இருந்து மணம் வருகிறது. பல்லை சுத்தம் பண்ணவேண்டும்’
‘என்னால் ஒருநாளும் ஜக்கின் பல்லைப் பார்க்க முடிவதில்லை’ என்றேன்.
அவரது மார்போடு இறுக அணைக்கப்பட்டு வாய் கட்டாமல் இருந்த ஐக்கை பார்க்க முயற்சித்தபோது தனது கோரைப் பற்களால் என்னைக் கடிக்க முன்நோக்கிப் பாய்ந்தது.
14 வருடங்களில் அதனது குணத்திலோ அல்லது உடலிலோ எதுவித மாற்றத்தையும் காணமுடியவில்லை. திருமதி வில்லியம் உறுதியாக மார்போடு சேர்த்து பிடித்திருந்தபடியால் ஐக்கால் என்னை நோக்கி வரமுடியவில்லை. ஆனாலும் எனக்குக் குறைந்த பட்சம் அதனது அகலவிரித்த வாயில் உள்ள பற்களைப் பார்க்க முடிந்தது.
‘பெரிதாக வாயில் எதுவித புண்ணும் தெரியவில்லை. பல் முரசுகள் சிவப்பாகத் தெரிந்தது. வயதுக்கேற்ப சிறிது முரசுகரைந்துள்ளதால் சிவப்பு நிறம் தெரிகிறது.’
அடுத்த கிழமை ஜக் கிளினிக் கொண்டு வரப்பட்டதும் வாயில் வழக்கம்போல் கட்டிவிட்டு மயக்கி பின்பு பல்லைச் சுத்தப்படுத்தினேன். பதினாலு வயதானாலும் பற்கள் மிகவும் உறுதியாக இருக்கிறது. மேல் கடைவாய்ப் பல் ஒரு இடத்தில்உடைந்திருந்தது . அதைப் படம் எடுத்தோம். சிவந்த முரசுகளைச் சுத்தப்படுத்தி அன்ரிபயற்றிக் ஊசியைஏற்றினேன்.
அன்று மாலையில் அதனது மயக்கம் தெளிந்ததும் ஜக்கை வீட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று எனது நேர்ஸ் திருமதி வில்லியத்திடம் தொலைப்பேசியில் சொன்னாள்.
தொலைபேசியை வைத்துவிட்டு எனது நேர்ஸ் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
‘ உங்களுக்குத் தெரியுமா…? திருமதி வில்லியம் வீட்டில் களவு போய்விட்டது’ என்றாள்.
‘என்ன போய்விட்டது?.
திருமதி வில்லியம் எங்கள் கிளினிக்கின் அருகில் இருப்பதாலும் களவு எங்கள் பகுதியில் நடந்தது என்பதாலும் அக்கறையாக விசாரித்தேன்.
‘ஜக்கை வீட்டு லொண்டரியில் அடைத்துவிட்டு நகைகளையும் காசையும் சிலநாட்கள் முன்பாகத் திருடியிருக்கிறார்கள்’ .
‘திருமதி வில்லியம் எங்கே? ‘
‘அவர் பேரப்பிள்ளை உதைபந்து விளையாடுவதைப் பார்க்கப் போயிருந்தபோதே நடந்தது.’
‘ பகலிலா?’
‘மாலையில்’
சம்பவம் நடந்தன்று மாலையில் திருமதி வில்லியம் வந்தார். நான் ஜக்கின் பல்லைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது அவரது கையிலிருந்த ஜக் என்னைப் பார்த்து உறுமியது
அப்போது திருமதி வில்லியம் ‘இந்தச் சண்டித்தனத்தை திருடன் வந்தபோது காட்டியிருக்கலாம்’ எனக்கோபமாகச் சொன்னார்.
‘உண்மைதான் . ஆனாலும் இருபது வருடத்தின் முன்பாக நான் வேலைசெய்த தென்அவுஸ்திரேலியாவில் நடந்தவிடயத்தை கேள்விப்பட்டால் ஜக் கடியாமல் இருந்தது நல்லது என நீங்களே தீர்மானிப்பீர்கள்.’
தலையை அசைத்தபடி என்னைப் பார்த்தார்.
‘இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு அடிலயிட்டிற்கு 300 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ஊரில் நான் வேலைசெய்துகொண்டிருந்தபோது நடந்த கதையிது.
அந்தப் பகுதியில் உள்ள ஒரு மிருக வைத்தியசாலை அடிக்கடி உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது. பணமும் மருந்துகளும் பல முறை திருடப்பட்டது. மிருக வைத்தியருக்கு என்ன செய்வதென்றுதெரியவில்லை.
இறுதியில் தனது வைத்தியசாலையை மூடுவதற்குக் கூட எண்ணியிருந்ததாகக் கேள்விப்பட்டேன். கடைசி முயற்சியாக அந்த மிருகவைத்தியர் புளு கீலர் சாதியைச் சேர்ந்த தனது நாயை இரவு வைத்தியசாலைக்குள் காவலுக்கு விட்டிருந்திருக்கிறார். ஒரு நாள் காலையில் வந்து வைத்தியசாலையைத் திறந்தபோது கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. வாசலை நோக்கி எதிர்கொண்ட நாயின் முகத்தில் சில துளிகள் இரத்தம் பட்டிருந்தது.
ஆனால் பெரிதாக எந்தக் காயமும் தெரியவில்லை. நாயை மேசைக்கு எடுத்துச் சென்று கவனமாகப்பார்த்தபோது கால்களில் இரத்தம் தெரிந்தது. ஆனால் உடலில் காயம் எதுவுமில்லை. வாயைத் திறந்து பார்த்தபோது அங்கும் எதுவும் இல்லை. பின்பு தனது வைத்தியசாலையை அவதானித்தபோது நாய்களை வைத்திருக்கும் கூடுகள் இருந்த அறையில் நிலத்தில் திட்டுத்திட்டாக அதிக இரத்தம் தரையெங்கும் கோலம்போட்டிருந்தது. நாய் இருக்கும் கூடுகளிலும் சுவர்களிலும் அங்காங்கு இரத்தத்கறைகள் தெரிந்ததன.
அவசரமாக மீண்டும் நாயைச் சோதித்து பார்த்த போது நாயில் எந்தக் காயமும் இல்லை என்பது உறுதியாகியதால் இரவு யாரோ வந்து நாயிடம் கடி வாங்கியிருக்கிறார்கள் என்பது புலனாகியது.
இனி இந்தப் பக்கம் வரமாட்டான் அந்தத் திருடன் என நினைத்து மனத்துக்குள் சந்தோசமாக தனது வேலையைத் தொடங்கினார் அந்த மிருகவைத்தியர்.
சில நாட்கள் செல்ல வைத்தியசாலைக்குள் அழுகிய மணம் வந்தது. வழக்கமாக நாய் , பூனையின் கழிவுகளிலோ ,மருந்துகளில் இருந்தோ வரும் மணத்திலிருந்து மாறுபட்ட மணமாக இருந்தது. மணம் எங்கிருந்து வருவதென்று புரியவில்லை. கடைசியாகக் கூரைப்பகுதியில் ஏதாவது பிராணிகள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் மான்கோல்(Manhole))எனப்படும் கூரைக்கும் சீலிங்கின் ஊடக செல்லும் பாதையைத் திறந்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது
அந்த இடைவெளியில்அலங்கோலமாக அழுகிய நிலையில் ஒரு மனித சடலம் கிடந்தது.
அதன் பின்பு பொலிஸ் விசாரணை, போஸ்ட்மோட்டம், கொரணர் விசாரணை என பலதும் நடந்தது விடயம் தெளிவாகியது .
கதவைத் திறந்து உள்ளே திருடவந்தவன் நாயால் கடிக்கப்பட்டதும் வாசலுக்கு ஓடமுடியாது கூரைக்கு ஓடியபோதுஎதிர்பாராமல் மின்சார வயரில் சிக்கி இறந்திருக்கிறான். ஜக் திருடனைக் கடித்திருந்தால் இப்படி ஒரு பிரச்சினைவந்திருக்கலாம் இல்லையா? ‘ என்றேன்
‘ஜக் திருடனைக் கண்டு எங்கள் பாத்ரூமில் உள்ள வோசிங் மெஷினின் பின்னால் ஒளிந்திருந்தது.’
‘ஜக்கிற்கும் அந்த புளு கீலருக்கும வித்தியாசம் இருக்கிறது. அவற்றைச் சிறிய அறையில் எதிர்பாராமல் சந்தித்தால் சமாளிப்பது இலகுவானதல்ல என்றாள்’ எனது நேர்ஸ்.
வாழும்சுவடுகள் மிருகவைத்திய அனுபவங்களைக்கொண்டது -காலச்சுவடுகளால் 2015 ல் வெளியிடப்பட்டது
மறுமொழியொன்றை இடுங்கள்