From his family
”Prof. Henry Arunachalam Sathananthan has passed away peacefully on the 18th of August 2016 at the age of 81. He has been taken away to meet his beloved mum Ruby, wife Bernadine and sisters Sita and Luckshmi in heaven. He is leaving behind 3 sons, a daughter and their spouses and 7 grandchildren, 3 brothers and a sister and nephews, nieces and their children. He will have a private send off with his family. Please Pray for his soul to be in eternal peace”
நானும், நண்பர் சிவநாதனும் சில நாட்களுக்கு முன்பு பேராசிரியர் ஹென்றி சதானந்தின் வீட்டிற்கு சென்று அவரைப் பார்த்தபோது நெஞ்சிற்கு திருப்தியாக இருந்தது. அதே வேளையில் மிகவும் கஸ்டப்பட்டு சுவாசித்தபடி எங்களுடன் பேசினார். அவரது கவலை, இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும். அதற்காக ஏதாவது செய்யும்படி என்னைப் பார்த்துக் குழந்தைத்தனமாக கேட்டார் .
‘சதா, வெளிநாட்டவாரன எம்மால் எதுவும் செய்யமுடியாது. அவர்களுக்கு என பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களுக்கே அந்த உரிமையுள்ளது.’
‘இல்லை நடா, அவங்களைப் பார்த்தால் ஏதாவது விடயத்தை செய்து முடிப்பவர்கள்போலத் தெரியவில்லை.
என்ன செய்வது அவர்களின் தலைவிதி என சொல்லவில்லை
அதைவிட எதுவும் சொல்லி அவரைக் கஸ்டப்படுத்தாமல், அவரது தனிப்பட்ட விடயங்களை பேசிக்கொண்டிருந்து விட்டு வெளியேறினோம். ஒரு மணி நேரம் வாகனத்தில் போய் அரை மணிநேரம் பேசியது ஏதோ போல் இருந்தது. ஆனாலும் ஒவ்வொரு வார்த்தைகளும் மரதனோட்டப் பந்தயத்தில் ஓடி முடித்தவரது வசனம்போல் வெளிவந்தது. அவரது நுரையீரல் அவரது நாக்கிற்கு ஒத்துழைப்புக் கொடுக்க மறுத்தது. அவரது கஸ்டத்தை நாம் அதிகநேரம் இருந்தால் அதிகரிப்பதாக இருக்கும் என்பதால் விடைபெற்றோம்.
2008 ல் இலங்கையின் வடபகுதிப் போரின் காலப்பகுதியில் மெல்போனுக்கு வந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித போகலகமயுடன் மெல்பேன் வின்சர் ஹொட்டலில் உதயம் பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் மதிய உணவிற்கு எனக்கு அழைப்பு வந்தது. உணவை முடித்துக்கொண்டு, அமைச்சரிடம் ‘தனியாக பேசமுடியுமா?’ என்றதும் அவர் தனது அறைக்கு அழைத்தார். அப்பொழுது நானும் வருகிறேன் என பேராசிரியர் சதாநந்தனும் வந்தார்.
வன்னியில் பெரும்போர் நடந்துகொண்டிருந்த காலம் விடுதலைப்புலிகள் மக்களை செம்மறிக்கிடையை சாய்க்கும் இடையனாக யுத்தகளத்திற்கு கொண்டு சென்றிருந்தார்கள்.
அமைச்சர் போகலகம என்னைப் பற்றி கேள்விபட்டிருந்ததால் அதிக அறிமுகம் தேவையிருக்கவில்லை. பேராசிரியர சதாநந்தன் ஏற்கனவே சேர் பொன் அருணாசலத்தின் பேரன் என்பதை அறிமுகப்படுத்தியதால் மிகவும் சுமுகமான நிலையில் எமது பேச்சு இருந்தது.
நான் சொன்னேன் ‘ விடுதலைப்புலிகளுடன் சன்டையிடுவதை பற்றி எமக்கு எந்த ஆட்சேபனையுமில்லை ஆனால் மக்களை ஏதாவது விதமாக அவர்களிடமிருந்து விடுவிக்கமுடியுமா?’
‘அதற்காக நாங்கள் எதுவும் செய்வதற்கு தயார். இதைப் பற்றி பேச தமிழ் அரசியல் கட்சிகள் தயாரில்லை. அதேபோல் வெளிநாட்டில் உள்ள தமிழரும் அரசாங்கத்துடன் பேசவிரும்பவில்லை. நாங்கள் இதில் என்ன செய்யமுடியும்?’
‘விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொள்ளாத பல தமிழர்கள் பல நாடுகளிலும் இருக்கிறார்கள். தங்களது உயிர்களைப்பாராது விடுதலைப்புலிகளை கண்டித்தும், எதிர்த்தும் வேலை செய்கிறார்கள். அவர்கள் சில பேருடன் அரசாங்கம் பேசினால் என்ன?
‘அது நல்ல ஐடியா நடா’ என்றார் சதா
‘சரி டொக்டர், அதை நீங்களே ஒழுங்கு பண்ணுங்கள். அரசாங்கத்தை இதற்கு சம்மதிக்க வைப்பது எனது பொறுப்பு’ என்றார் அமைச்சர் போகலகம’
‘தற்போதய நிலையில் கொழும்புக்கு வர தயங்குவார்கள். வேறு பொதுவான இடமாக இருந்தால் நல்லது’
‘நாங்கள் புதுடெல்லியில் வைப்பதற்கு முயற்சிக்கிறோம்.’ என விடைபெற்றார்
இந்திய அரசாங்கம் மறுத்தது. பின்பு சிங்கப்பூரில் சங்கர லா ஹொட்டேலில் நடத்த முயன்றபோது அதுவும் விடுதலைப்புலியாதரவாளர்களின் சதியால் பாதுகாப்பைக் காரணம் காட்டி இரத்துசெய்யப்பட்டது. அதன்பின் 2009 மார்ச்சில் அந்த கொன்பரன்ஸ் கொழும்பில் நடந்தது.
இந்த கொன்பரன்ஸ் ஒழுங்கு படுத்துவதற்கு வேலைகளை நான் செய்தாலும் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தவர்கள் இருவர். ஒருவர் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம், மற்றவர் பேராசிரியர் சதாநந்தன். நான் ஒழுங்கு பண்ணிய பலர் கொழும்பு என்றதும் பின்னடித்துவிட்டார்கள்.கொழும்பு போய் வந்த ஒரு சிலர் தாங்கள் செய்த வாழ்நாள் தவறுகளில் இதுவும் ஒன்றென்றனர். நாங்கள் போய் வந்த பின்பு கொலை மிரட்டல், வானொலியில் அவதூறுகள் என அவுஸ்திரேலிய புலி ஆதரவாளர்கள் செய்தது பலரது குடும்பங்களில் பிரச்சினைகளை உருவாக்கியது.
விஞ்ஞானப்பேராசிரியரான சதாநந்தன் அந்த கொன்பரன்சில் கலந்துகொண்டதுடன் இறுதி வரையுயும் இலங்கைக்கு சென்று பல்கலைக்கழகங்களில் கற்பித்தும் மற்றய உதவிகளையும் செய்வார். அவரது ஆய்வுப் பகுதி பெண்களின் முட்டைகளை எடுத்து வெளியே கருதரிப்பு செய்து பின் உள்ளே வைப்பது. அவரது ஆய்வை இளைப்பாறிய பின்பும் மொனாஸ் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக செய்தார். இலங்கையில் ஆடு வளர்ப்பதும் அதன் இனப்பெருக்கதிலும் அவருக்கு ஆவல். அதற்கு என்னை அடிக்கடி சேர்ந்து வேலைசெய்ய அழைப்பது வழக்கம். நான் ஆட்டைவிட்டு அதிக தூரம் வந்துவிட்டேன் என மறுப்பேன்.
பேராசிரியரான சதாநந்தன் புகழ்பெற்ற பரம்பரையில் வந்தவர் என்பதாலும் இலங்கை தமிழ் அரசியலில் எதுவும் செய்யமுடியவில்வை என்ற மனக்குறையுடனதான் இறந்திருப்பார். சிலவேளையில் அவர் குழந்தைபோல் பேசுவர். கொழும்பில் வெள்ளி கரண்டியை வைத்துக்கொண்டு பிறந்ததால் அவருக்கு யாழ்பாணத்து அரசியல் வரட்சி புரியவில்லை என நினைப்பேன்.
நல்ல மனிதர்’ விஞ்ஞானி’ பேராசிரியர்’ பலசமூக வேலைகளைத் தொடர்ந்து செய்தவர். அவரையும அவரது திறமைகளையும் அவுஸ்திரேலியா புரிந்துகொண்டு அவரைக் கவுரவித்தது. வாழ்க்கையை அனுபவித்தவர். அவரது நினைவுகளை மனதில் வைத்து அவருக்கு விடைகொடுப்போம்.
மறுமொழியொன்றை இடுங்கள்