ஜெயமோகன்

2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் நான் வெளியிட்ட உதயம் இருமொழி (தமிழ்ஃஆங்கிலம்) பத்திரிகையின் 12 ஆவது நிறைவுவிழாவுக்கு அவரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்திருந்தேன். அப்பொழுதும் பலர் அவரை அவுஸ்திரேலியாவுக்கு நடேசனது அழைப்பில் போகவேண்டாம் என தடுத்தார்கள். அவர் வந்தால் அவரது வருகைமூலம் தமிழ்த்தேசியத்துக்கு துடக்கு வந்துவிடும் என கனவுகண்டார்கள். இங்கு அவரது நிகழ்வுகளை பகிஷ்கரிக்க ஆர்பாட்டம் செய்யவும் தயாரானார்கள். அந்த நிகழ்ச்சியில் அவுஸ்திரேலியாவின் பிரபல நாளிதழான the Age இன் இணை ஆசிரியர் ஜேம்ஸ் பட்டன் அவர்களும் பேச இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கான அனுமதிச்சீட்டுகளையும் பலருக்கு விநியோகித்திருந்தேன். எனினும் இந்த நிகழ்ச்சியை பின்னர் இரத்துச்செய்தேன். அந்த விவரம் தெரியாதவர்களுக்குப்பயந்தல்ல, என்னால் எனது நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு எந்தப்பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதனால்தான்.

எனினும் ஜெயமோகன் எனது அழைப்பை ஏற்று வருகைதந்தார். மெல்பனிலும் சிட்னியிலும் குறைந்த எண்ணிக்கையில் வருகைதந்தவர்கள் மத்தியில் ஜெயமோகன் சிறப்பாக உரையாற்றினார்.
குறிப்பிட்ட காலகட்டத்தில் மெல்பனில் நடந்த ஒன்பதாவது எழுத்தாளர் விழாவிலும் அவர் கலந்துகொண்டார். எனினும் அதில் அவரை பேசவிடாமல் ஊமையாக்கினார்கள்.
தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர், புத்திஜீவி ஜெயமோகன். ஆனால் நடேசன் அழைத்தால் அவர் போகக்கூடாது. இது என்ன வாதம்? இப்படிச்சொல்பவர்கள் எல்லாம் இலக்கியவாதிகளாம்!

குளத்தோடு கோவித்துக் கொண்டு தங்கள் பிருஷ்டத்தை கழுவாத இவர்களினால் யாருக்கு நட்டம்?

ஜெயமோகனை அவுஸ்திரேலியாவில் பகிஷ்கரிக்கவேண்டும் என்று கோஷம்போட்ட பல தமிழ்த்தேசியவாதிகள் ஏற்கனவே மட்டுமல்ல இன்றும் பலரை இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியா அழைத்துவந்து தமிழ்தேசியம் பேச வைத்து கரகோசம்போட்டார்கள்.

ஆனால் என்ன பயன்? ஒன்றும் இல்லை.

ஆனால் அவுஸ்திரேலியா வந்த ஜெயமோகன் இந்தக்கண்டம் பற்றி எழுதிய ‘புல்வெளிதேசம்’ நூல் தமிழ் இலக்கியப்பரப்பில் அவுஸ்திரேலியாவை இனம் காட்டியது.

ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பற்றி அதிகம் எழுதிய ஒருவர் ஜெயமோகன். தமது நூல் ஒன்றில் மு.தளையசிங்கம், எஸ்.பொ, சிவத்தம்பி, சேரன், அ.முத்துலிங்கம், ஆகியோரைப்பற்றி விரிவாக எழுதியவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சிப்போக்கை தொடர்ந்து அவதானித்துவருபவர். அதேவேளை ஈழ அரசியலையும் அதிகம் தெரிந்து கொண்டிருப்பவர். மேலும் தெரிந்துகொள்ள விரும்புபவர். அப்படிப்பட்ட ஒரு தமிழகப்படைப்பாளி இலங்கை சென்றுவரவிரும்புவது இயல்பானதே.

இதனை எதிர்க்கும் மரமண்டைகள், ஒருவரது தனிப்பட்ட உரிமையை நிராகரிக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் மனித உரிமை பற்றி பேசுகிறார்கள். ஜெயமோகனுக்கு இலங்கையை பார்க்க விருப்பம் இருப்பது போன்று இலங்கையில் அவரது வாசகர்கள் பலருக்கு அவரைச்சந்தித்து உரையாட விருப்பம் இருப்பதும் இயல்பானதே. மற்றவர்களின் இந்த சாதாரண விருப்பத்தைக்கூட நிராகரிக்கும் கழிசடைகள் தொடர்ந்தும் இலங்கை குறித்து பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கின்றன.

ஜெயமோகன், பால்சக்காரியாபோன்று மலையாளத்திலோ அல்லது இந்தியிலோ எழுதுபவராக இருந்தால் இப்படியான அலுப்புகளில் இருந்து தப்பி இருப்பார்.

ஒரு நல்ல இலக்கியவாதி, பத்திரிகையாளன் உலகின் எந்தப்பாகத்திற்கும் சென்று மக்களை சந்தித்து புரிந்துகொள்ளவேண்டியவற்றை அறிந்து கொள்ளுவதன்மூலம்தான் வாசகர்களுக்கு பாலமாக இருப்பான். இதை இந்த நந்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் சோழர்காலம் பற்றி அறிந்து தமது நாவல்களில் எழுதுவதற்காக இலங்கை சென்று வந்த கல்கி, அகிலன், ஆகியோரும் தீபம் பார்த்தசாரதி, கு. அழகிரிசாமி, தொ.மு. பாஸ்கரத்தொண்டமான், மற்றும் இலங்கையிலிருந்து அகதிகளாகி தமிழ்நாடு மண்டபம் முகாமிலிருந்த ஈழத்தவர் பற்றி மாணிக்க கங்கை நாவல் எழுதுமுன்னர் இலங்கைவந்துசென்ற ராஜம் கிருஷ்ணன், பத்திரிகையாளர்கள் வாசந்தி, கோமல் சாமிநாதன், கஸ்தூரிரங்கன், பாரதிஇயல் ஆய்வாளர்கள் தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன், முனைவர் அரசு, அ. மார்க்ஸ், பா.ஜெயப்பிரகாசம், படைப்பிலக்கியவாதிகள் தோப்பில் முகம்மது மீரான், சின்னப்ப பாரதி உட்பட பலர் வந்துசென்றிருக்கிறார்கள்.

இந்த வரலாறு தெரியாமால் இலங்கையை புறக்கணிக்கவேண்டும் எனச்சொல்லும் இந்த நந்திகள் அதன் மூலம் எதனைச்சாதிக்கப்போகிறார்கள், இலங்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கையில் எத்தனை போர் வந்தாலும், எத்தகைய அடக்குமுறைகளை அவர்கள் சந்தித்தாலும் எத்தனை அரசாங்கங்களை அவர்கள் எதிர்நோக்கினாலும் இலங்கைத்தமிழர்களின் கலை, இலக்கிய, பண்பாட்டுவேர்கள் தூர்ந்து போய்விட மாட்டாது என்பதை இந்த குறுக்கே நிற்கும் நந்திகள் தெரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையில் பாரதிக்கும் கம்பனுக்கும் வள்ளுவனுக்கும் காலாதிகாலமாகத்தான் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இவர்கள் மூவரும் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள் என்பதற்காக ஈழத்தமிழன் அவர்களை புறக்கணிக்கவில்லை. பாரதி நூற்றாண்டை தமிழகமே மறந்திருந்தபோது இலங்கையில் நாடளாவிய ரீதியில் பாரதி நூற்றாண்டை கொண்டாடியவர்கள் ஈழத்தமிழர்கள். இன்றும் கொழும்பில் வருடாந்தம் கம்பனுக்கு விழா நடக்கிறது. வள்ளுவருக்கு வடக்கு, கிழக்கு மலையகம் மட்டுமல்ல தமிழ்க்குக்கிராமங்களிலும் விழா நடைபெறுகிறது. அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் தமிழ்தின விழாக்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. ஈழத்தமிழ் இலக்கியம் தொடர்ந்தும் சாதாரண தமிழ் மக்களிலிருந்து பல்கலைக்கழக மட்டம் வரையில் உயர்ந்து எழுச்சிபெற்றுக்கொண்டுதானிருக்கிறது.

அத்துடன் ஈழத்து தமிழ் இலக்கியவதிகளின் படைப்பு இலக்கிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மட்டுமன்றி தமிழகத்தின் பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சின்னப்பபாரதி உட்பட பலரது படைப்புகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சிங்கள வாசகர்களுக்கு சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த அரிய செயல்கள், தமிழகத்திலிருந்து வீறாப்பு பேசும் வாய்ச்சொல் வீரர்களான, இலங்கை செல்லவிரும்பும் தமிழக படைப்பாளிகளைத் தடுக்கும் அந்த நந்திகளுக்குத தெரியுமா?

தமிழர்கள் தமது விடுதலையை சிங்களவர்களிடம் இருந்து பெறுவதற்கு முன்பு இந்த முட்டாள்தனமும் சுயநலனும் பேசும் வக்கிரங்களிடம் இருந்து விடுதலை பெறவேண்டும்.

“ஜெயமோகன்” மீது ஒரு மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: