தமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா

எக்சைல் 1984
டேவிட ஐயா
நடேசன்

மறைந்த கட்டிடக்கலைஞரும் இலங்கை காந்தீயம் அமைப்பின் ஸ்தாபகருமான டேவிட் ஐயாவை நாம் நினைவு கூரவேண்டும். அதை எப்படி என்பதுதான்…? என் முன்னால் நிற்கும் கேள்வி.

இறந்தவர்களை நினைவில் நிறுத்துவது நமது கலாச்சார விழுமியத்தை சேர்ந்தது. உறவினர்கள், பழகியவர்கள் ஒருவரது பிரிவை துயராக கருதுவார்கள்.

நன்றாக முதுமையடைந்து முனிவர்போல் வாழ்ந்து இறந்தவர் டேவிட் ஐயா. மரணத்தை வெல்லமுடியாத நிலையில் இதில் துயரப்படாமல் அவர் செய்தவற்றை நினைக்கவேண்டும். அவர் இலங்கைத் தமிழராக திருமணம் செய்யாது பொது வாழ்வில் இருந்துவிட்டுச் சென்றவர். அவர் வாழ்வையும் பணிகளையும் உணர்வு நிலைக்கு அப்பால் நின்று பார்ப்பது எமக்கு அவசியம்.

ஐம்பதுகளில் உலகின் மிகசிறந்த பல்கலைக்கழகமென கருதப்பட்ட அவுஸ்திரேலியா மெல்பன் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றவர். அதன் பின்பு இங்கிலாந்தில் நகர் மயமாக்கத் துறையில் கற்றவர்.
அதன்பின்பு கென்யாவில் சிலகாலம் தொழில் புரிந்தவர்.

ஐம்பதிற்கு பின்பே ஐரோப்பா வட அமெரிக்கா தவிர்ந்த உலகத்தின் மற்றைய நாடுகளில் நகர்மயமாக்கம் நடந்தது. இந்தக்காலகட்டத்தில் டேவிட்ஐயா எவ்வளவு முக்கியமான மனிதராக இருந்தார்…?

அவராலும், டொக்டர் இராஜசுந்தரத்தாலும் உருவாக்கப்பட்;ட காந்தீயம் அமைப்பு அக்காலத்தில் வெளிநாட்டு தமிழர்களின், ஆதரவு பெறப்பட்ட முதலாவது தன்னார்வ நிறுவனம். அவர்கள் இருவரும் தமது காந்தீயம் ஊடாக காணியற்ற மலையக மக்களுக்கு காணிகள் வழங்கி குடியமர்த்துவதற்கு முன்வந்த பணி சாதாரண முயற்சியல்ல.

இலங்கைத் தமிழர் அரசியல் முக்கியமாக மூன்று தரப்பினால் உருவாகியது.
( 1) அதிகாரத்தில் ஆசையுள்ளவர்கள் சாகும் வரையும் கதிரையில் இருப்பவர்கள்.
( 2)பணம் சம்பாதிக்க விரும்பியவர்கள்.
(3) மற்றவர்கள் முக்கியமாக இளைஞர்கள், உணர்வு மேலிட்டு உயிரையும் உறுப்புகளையும் காவுகொடுத்தவர்கள்.

இப்படிப்பட்ட இடத்திற்கு டேவிட்ஐயா தான் உருவாக்கிய காந்தீயத்தையும் தன்னையும் பலியிட்டதன் மூலம் அவரது அறிவு, படிப்பு எல்லாம் அவரைக் கைவிட்டது.

பலநாடுகளில் போராட்ட இயக்கங்களில் இருந்து விரக்தி அடைந்தவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல் போராட்ட இயக்கங்கள், தன்னார்வ நிறுவனங்களை நிறுவி அதன்மூலம் பணம் வசூல் பண்ணுவதையும் பார்த்திருக்கிறேன். இதற்கு உதாரணங்கள் விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வுக்கழகம்(TRO) மற்றும் தமிழர் மருத்துவ நிலையம்(TAMED) என சில அமைப்புகளை அவுஸ்திரேலியாவில் வைத்திருந்தார்கள். ஆனால் காந்தீயம் போன்ற நேர்மையான தன்னார்வுத்தொண்டு நிறுவனத்தை போராளிகள் அமைப்பாக மாற்றியதில் டேவிட்ஐயாவுக்கு முக்கிய பங்குண்டு.

இங்கே நாம் சொல்ல விரும்பும் விடயம் ஒன்றுள்ளது. அதாவது தமிழர்களில் பலதுறைகளில் நிபுணத்துவமும், திறமையும் உள்ள பலர் அநியாயத்துக்கு நல்லவர்களாகவும், அதேநேரத்தில் அரசியலில் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்களாக இருந்து வருகிறார்கள் என்பதற்கு டேவிட் ஐயா உதாரணமாகத் திகழ்ந்தார்.

எனது நண்பர் ஒருவர் பொறியியலாளர். அடிக்கடி என்னுடன் டேவிட் ஐயாவைப் பற்றி பேசுவார். மெல்பன் பல்கலைக்கழகத்தில் தாம் இருவரும் ஒன்றாக படித்ததாகவும் சொல்வார். அப்பொழுது நான் அவரை எனக்கு நன்றாகத் தெரியும் என்பேன். ஈழ விடுதலைப்போராட்டம் என்ற கனவின் சிறையில் தனது செட்டையை மாட்டிக்கொண்டு தொடர்ந்தும் பல துன்பங்களை அனுபவித்த மனிதர் அவர். ஆனால் அவரது அரசியலில் எந்த நம்பிக்கையும் எனக்கிருக்கவில்லை.

இந்த பொறியியலாளர் மலையகத்தைச் சேர்ந்தவர் என்பதால் வட-கிழக்குக்கு வெளியே இருக்கும் மக்களுக்கு நியாயம் கிடைக்காத விடுதலைப் போராட்டம் என்ற எனது அரசியலில் ஒத்துபோவார்.

2005 ஆம் ஆண்டளவில் முன்னர் மெல்பனில் டேவிட் ஐய்யர்வுடன் படித்த அந்த நண்பர், கடிதமொன்றை எனக்குக் காட்டினார். அந்தக் கடிதம் அவருக்கு அவரோடு படித்த டேவிட் ஐயா எழுதியது.
அதைப் படித்தபோது, அதில் இருந்த ஒரு வசனம் என்னைச் சிந்திக்க வைத்தது.

‘தமிழர்கள் எல்லோரும் தற்பொழுது தம்பி பிரபாகரனது இளந்தோள்களில் எல்லா பாரத்தையும் திணித்துள்ளோம். அவனால் இதை தனியே சுமக்க முடியாது. வெளிநாட்டுத்தமிழர்கள் இந்தப்பாரத்தை குறைத்து உதவவேண்டும்” என்பது அந்த வாக்கியம்.

இதைப் பார்த்ததும், பின்னர் அவரைப்பற்றிய நேர்முகத்தை வாசித்தபின்பும் பலமுறை நான் சந்தித்திருக்கும் டேவிட் ஐயாவை நினைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் – எழுதுவதற்கு சந்தர்ப்பம் வரவில்லை.
அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது நண்பர் டொக்டர் சிவநாதன்.

மட்டக்களப்பு சிறையில் இருந்து தமிழ்ப் போராளி இயக்கத்தினர் சிறையுடைத்து வெளியேறியபோது அவர்களில் டேவிட் ஐயாவும் ஒருவர். இந்தச் சிறையுடைப்பிற்கு இரண்டு இயக்கங்கள் அதாவது, தமிழ் மக்கள் விடுதலை இயக்கம்(PLOT) மற்றும் ஈழ மக்கள் விடுதலை இயக்கம் (EPRLF) என்பன உரிமை கோரி துண்டுப்பிரசுரம் விநியோகித்தன. இவர்கள் தப்பி வந்தபோது கிழக்கு மாகாணத்தின் வாகரைப்பிரதேசத்தில் அரசாங்க மருத்துவராக இருந்த டாக்டர் சிவநாதன் தப்பியவர்களுக்காக உதவி செய்ததால் இலங்கையை விட்டு பின்னர் வெளியேறியவர். இப்படி ஒன்றாகத் தப்பியவர்கள் பின்பு தங்களது இயக்க வள்ளங்களில் பிரிந்து இந்தியாவுக்கு புறப்பட்டனர்.

எனது நண்பர் டொக்டர் சிவநாதன் வந்த வள்ளம் புளட் எனும் தமிழ்ஈழமக்கள் விடுதலைக்கழகத்தை சேர்ந்ததால் அவர்களுடன் பின்பு தேனி பிரதேசத்தில் அவர்கள் அமைத்த முகாமில் சிலகாலம் தங்கியிருந்தார். டேவிட் ஐயா மீது வாரப்பாடாக இருந்தவர் டொக்டர் சிவநாதன்

சிவநாதன் புளட் இயக்கத்தில் இருந்து தனது தொடர்புகளை துண்டித்துக் கொண்டாலும் தனிப்பட்ட ரீதியில் அவர்களுடன் பழகுவார். அவரை தமிழர் மருத்துவ நிதியத்தின்(MUST) பொருளாளராக பிரேரித்தவர் அக்காலத்தில் வாசுதேவா. அவரே அதேபோல் டொக்டர் இராஜசுந்தரத்தின் மனைவியான சாந்தியக்காவை தமிழர் மருத்துவ நிதியத்தின் உபதலைவராக்கியவர். சாந்தியக்கா எந்த இயக்கங்களுடனும் தொடர்புபடாமல் சென்னை எக்மூர் பொலிஸ் வைத்தியசாலையில் வேலை செய்தபடி அந்த அமைப்பின் உதவித் தலைவராக இருந்தார்.

இந்தக்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தைப் பற்றி ஒவ்வொரு நாளும் பல தகவல்கள் டொக்டர் சிவநாதனுக்கு வரும். அந்தப் தகவல்கள் குறித்து தனது தலையில் அடித்தபடி ‘இவங்களைத் திருத்த இயலாது’ என்று வேதனையுடன் எனக்குச் சொல்வார்.

தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOT) உள்மோதலில் பலர் கொல்லப்படுவதாகவும் காணாமல் போய்விடுவதாகவும் அதன் செயலதிபரான உமாமகேஸ்வரனது தலைமை பிடிக்காது இயக்கத்தில் பிளவு ஏற்படுவதாகவும் பலர் வந்து வந்து அவரிடம் சொல்வதும் அதை அவர் என்னிடம் திருப்பிச்சொல்லிவிட்டு உமா மகேஸ்வரனை திட்டுவார்.

ஒரு நாள் நடுப்பகலான நேரம். நானும் சிவநாதனும் வேலை செய்து கொண்டிருந்தபோது எங்களது சூளைமேடு தெருவில் உள்ள அலுவலகத்திற்கு சந்ததியாரும் டேவிட் ஐயாவும் வந்தார்கள். ஏற்கனவே பலமுறை அறிமுகமானவர்கள். அவர்கள் மிகவும் கலவரமடைந்திருந்தார்கள்.

அன்று சந்ததியார் பேசியதைக் கேட்டபடி இருந்தேன். நான் அதிகம் பேசவில்லை. அவர்கள் பேச்சுக்கள் இயக்கத்தில் நடக்கும் உட்கொலைகளைப் பற்றியும் உமாமகேஸ்வரனது சர்வாதிகாரமான போக்கையும் பற்றியதாக இருந்தது.

இதில் சந்ததியார் மிகவும் நேர்மையான மனிதர் எனக்கேள்விப்பட்டதால் அவர் மீது மதிப்பு இருந்தது. அதேவேளையில் அக்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைக் கழகம்(PLOT) , இந்திய அயலுறவுக்கொள்கையின் தவறான செயற்பாட்டை சுட்டிக்காட்டி, சந்ததியார் வங்கம் தந்த பாடம் என்ற சிறிய கைநூலை வெளியிட்டார். அந்தக் கைநூல் தமிழ்மக்கள் விடுதலைக்கழகத்தின் இந்திய விரோதப்போக்கை எடுத்துக்காட்டியதாக பலரால் சொல்லப்பட்டது. எனக்கும் அந்த கருத்தியல் கசப்பாக இருந்தது. இந்தியாவை விரோதித்து இலங்கைத் தமிழர் எந்த முன்னேற்றமும் அடைந்துவிட முடியாது என்பது எனது அறிவுக்கு அக்காலத்தில் புரிந்திருந்தது.

தொடர்ச்சியாக அவர்களின் உள்கட்சி மோதல்களைப் பற்றிப் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த என்னை அவர்களும் பொருட்படுத்தவில்லை. கடைசியாக சந்ததியாரிடம் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்றேன்.
சந்ததியார் ‘ஆம் கேளுங்கள் ’ என்றார்.

‘நீங்கள்தான் உமாமகேஸ்வரனோடு மிக நெருங்கிப் பழகிய மனிதர். அதுவுமல்லாது உமாவை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தவர். பலகால நட்பும் பழக்கமுமுடைய உங்களுக்கு அக்காலத்தில் உமாவின் சர்வாதிகாரத்தன்மை புரியவில்லையா? ’

சந்ததியார் சிறிது நேரம் யோசித்துவிட்டு ‘உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது’ எனக்கூறிவிட்டு எழுந்து போகும்போது ‘உங்களை மீண்டும் சந்திப்பேனா என்பது தெரியாது’ என சொல்லிவிட்டு டேவிட் ஐயாவுடன் வெளியேறினார்.

அந்த வார்த்தை என்னை கதிகலங்க வைத்தது. மக்கள் விடுதலை கழக இயக்கத்தில்(PLOT) நேர்மையான மனிதன்; என சிவநாதன் சந்ததியார் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

சிலநாட்களின் பின் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன்

இரவு நேரத்தில் சந்ததியாரைத் தேடிச்சென்ற தமிழ் மக்கள் விடுதலைக் கழக கோஷ்டியினர், சந்ததியார் என நினைத்து டேவிட் ஐயாவை ஒரு சாக்கில் கட்டி தூக்கிச்சென்றனர். பின்னர் தாம் தூக்கியது டேவிட் ஐயா இல்லையென என அறிந்ததும் சென்னையில், அண்ணாநகர் அருகே உள்ள மயனமொன்றின் அருகில் அவரை விட்டுச் சென்றனர்.

டேவிட்ஐயாவால் கொலைகார முகுந்தனும்(உமா மகேஸவரன்) கூட்டாளி வாசுவும் (மட்டக்கிழப்பைச் சேரந்த வாசுதேவா)என பிரபலமான கட்டுரை எழுதப்பட்டது.அக்காலத்தில; அவரது துணிவை நாங்கள் எல்லோரும் பாராட்டினோம் ஒருவிதத்தில் உமாவின் சரிவிற்கும அவரது இந்தக்கட்டுரை உதவியது.

அதன் பின்பு கிட்டத்தட்ட உமா மகேஸ்வரன்குழுவால் வர இருந்த சாவை பல வருடங்கள் ஏமாற்றி 30 வருடங்கள் அவர் வாழ்ந்திருக்கிறார். அந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்பு சில நாட்களில் சந்தியார் காணாமல்போனது செய்தியாகியது.

தமிழ் மக்கள் விடுதலைக்கழகம், ஈழவிடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை தரக்கூடியதாக முற்போக்கு கொள்கைகளும் ,வெளித்தொடர்புகளும் கொண்டு போராட்ட இயக்கமாக ஆரம்பத்தில் இருந்தது . ஒரு காலத்தில் 6000 இற்கும் மேற்பட்ட பயிற்றப்பட்ட இளைஞர்கள் இருந்தனர்.

ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி(EPRLF) மற்றும் தமிழ்ஈழ விடுதலை(TELO) இயக்கத்தை அழித்தும் ஈழ புரட்சிகர (EROS)இயக்கத்தை தங்களுடன் சேர்த்தும், அழித்த விடுதலைப்புலிகளுக்கு, அதிக வேலை வைக்காமல் தன்னைத்தானாக அழித்த இயக்கமாக தமிழ் மக்கள் விடுதலைக்கழகம்(PLOT)இருந்தது.

87 ஜூலை மாதம் நான் இந்தியாவை விட்டு வெளியேறும்போது எனது இலங்கை பாஸ்போட்டில் இருந்த இந்திய விசா காலாவதியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. அப்பொழுது எனக்குத் தெரிந்த ஒரு இந்திய உளவுத்துறை அதிகாரியின் மூலமாக விசாவை புதுப்பித்தேன். அக்காலத்தில் இந்திய மண்ணில் ஈழ இயக்கங்கள் செய்த உட்கொலைகளின் பட்டியல் ஒன்றை அந்த அதிகாரி தம்வசம் வைத்திருந்தார். அதில் 250 இற்கும் மேற்பட்டவர்களை கொலை செய்து உமா மகேஸ்வரனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை இயக்கம்(PLOT) முன்னணியில் இருந்தது. விடுதலைப்புலிகள்(LTTE) 32 கொலைகளையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(TELO) 18 கொலைகளையும் செய்திருந்தன. ஈழமக்கள் விடுதலை இயக்கமும் (EROS)ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியும் (EPRLF) செய்த கொலைகள் பற்றிய பட்டியல் அவரிடம் இல்லை.

ஆனால, விசாவை புதுப்பித்து நான் வெளியேற இருந்த கால எல்லையில் 4 பேரை ஈழவிடுதலை இயக்கம் (EROS)மதுரையில் கொலை செய்ததாக தகவல் வந்தது. இந்தப் பட்டியலும் அந்த அதிகாரியிடம் இருந்தது. இதை விட பல கொலைகள் அவர்களிடம் போகாது இருக்கவும் சாத்தியம் உள்ளது…? மேலும் அந்தப் பட்டியலின் காலம் 87 நடுப்பகுதியாகும். அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடந்த காலப்பகுதியாகும்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு வெளியேறிய பின்பாக டேவிட் ஐயாவை மீண்டும் ஒரு முறை இந்தியாவில் சந்தித்தேன். அவரோடு பேசியதில் தெரியவந்த விடயம் அவர் தமிழர் தரப்பு பிரிவினையை மிகவும் பலமாக ஆதரிக்கும் மனிதராகவும் சிங்கள எதிர்ப்பில் மிகவும் உறுதியானவராகவும் இருந்தார்.

அவரது சிங்கள எதிர்ப்பு, இன எதிர்ப்பாகத்தான் தெரிந்தது. அதனாலேதான் அவரால் பின்னாட்களில் விடுதலைப்புலிகளில் நம்பிக்கை வைக்க முடிந்தது.

டேவிட் ஐயா கிறிஸ்தவராக இருந்தாலும், அவரது வாழ்க்கை இந்து சமயத்து சாமிகள்போல் இருந்தது. திருமணம் செய்து கொள்ளாதது மட்டுமல்ல, உடைவிடயத்திலும் அவர் மிகவும் உறுதியாக இருந்தார்.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிச்சயமாக சப்பாத்து அணிந்திருப்பார். ஆனால் இந்தியாவில் அவரை செருப்புடன் நான் கண்டதில்லை. டொக்டர் சிவநாதன் ‘ஐயா தழிழீழம் கண்டபின்புதான் செருப்பு அணிவார் ” என்று சொல்லி சிரிப்பார் . அதில் எவ்வளவு உண்மை – பொய் இருக்கிறது என்பது தெரியாது.

ஓரு ஈழப் பிரிவினைவாதியாக தன்னை ஒறுத்து முனிவராக நடந்தார். ஆனால் அவரது பிடிவாதத்தில் பல பிற்போக்கான தன்மைகள்தான் தெரிந்தன. ஆரம்பத்தில் காந்தீயம் என்ற அழகான குழந்தையை பெற்று அதை பொறுப்பாக அவர் வளர்க்கவில்லை. ஆயத இயகத்தினரிடம் அதனைக்காவு கொடுத்தார். ஆரம்பத்தில் உமா மகேஸ்வரனையும் பின்பு பிற்காலத்தில் பிரபாகரனையும் நம்பினார். புலிகள் மூலம் ஈழத் தமிழர்களுக்கு விடிவு வரும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

கடைசிவரையும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுவரும் என ஒரு யோகிபோல் அதேநேரத்தில் பிடிவாதமான குழந்தையாகவும் தன்னை சுற்றி கற்பனைகளால் சுவர் எழுப்பியபடி வாழ்ந்த மனிதர்.

ஈழப் போராட்டத்தில் ஏதோ வகையில் பங்கு கொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவரும் வெல்லாத அந்தப் போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாகரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்.

ஆனால், டேவிட் ஐயா எவ்வளவு மனச்சுமையுடன் தனது இறுதிநாட்களை கழித்திருப்பார் என்பதை எண்ணித்தான் என்னால் அவரை நினைவு கூரமுடியும்.

“தமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா” மீது ஒரு மறுமொழி

  1. ALL MILITANT ORGNS WERE DISATERS TO ALL TAMIL PEOPLE IN SRILANKA & ABROAD!
    NO UNITY & PROGRESS/SUCCESS BECAUSE OF IGNORANCE,EGOISM,IDIOTISM,OVER-CONFIDENCE, MISTRUST, OPPORTUNITISM,SELFISHNESS & UNDEMOCRACY!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: