அயற்சியை அந்நியப்படுத்திய ஆளுமை ஜெயமோகன்

ஜெயமோகனின் புறப்பாடு
முருகபூபதி
(அண்மையில் கனடா இலக்கியத்தோட்டம் வழங்கிய இயல்விருதினைப் பெற்றுக்கொண்ட படைப்பிலக்கியவாதி ஜெயமோகனுக்கு கனடா காலம் இதழ் சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்ற கட்டுரை.)

தமிழ் இலக்கியப்பரப்பில் சமகாலத்தில் என்னை பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் படைப்பாளி திரு. ஜெயமோகன் அவர்கள்தான் எனச் சொல்வதன் மூலம் ஜெயமோகன் வழிபாட்டில் நான் என்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றேன் எனச்சொல்லமுடியாது.
வாசிப்பு அனுபவம் காலத்துக்குக்காலம் மாறிக்கொண்டிருப்பது. ஒரு காலத்தில் ஒரே இரவில் சிவகாமியின் சபதம் படித்தவர்தான் ஜெயமோகன். அவருக்கு ஆரம்பத்தில் ஆதர்சமாக இருந்த சுந்தரராமசாமி தமது ஜே.ஜே. சில குறிப்புகளில் ” உங்கள் சிவகாமி சபதம் முடித்துவிட்டாளா…? ” என்று ஒரு பாத்திரத்தின் வாயிலாகக்கேட்டு அங்கதம் பேசுவார்.
ஜெயமோகனுக்கும் சுந்தரராமசாமிக்கும் வாசிப்பு அனுபவம் மாறியதுபோன்று என்னைப்போன்ற வாசகர்களுக்கும் மாறலாம்.
1962 ஆம் ஆண்டு பிறந்த ஜெயமோகனுக்கு – இந்தப்பத்தியை நான் எழுதிக்கொண்டிருக்கும்பொழுது 53 வயது பிறந்துவிட்டது. அவர் எழுதத்தொடங்கியபொழுது என்னைப்போன்ற பலர் எழுதி விருதுகளும் வாங்கிவிட்டதாக (நான் உட்பட) பெருமையடித்துக்கொண்டவர்களே.
ஆனால் , மிகவும் குறுகிய காலத்துள் நிறையவே வாசித்து நிறையவே எழுதிவிட்டவர் ஜெயமோகன். இவரது வாசிப்புத்தளம் மிகவும் விரிவானது. அவருடைய தாயார் விசாலாட்சி அம்மாவிடம் இருந்து உள்வாங்கப்பட்டது.
ஜானகிராமனின் கதைகளை படித்துவிட்டு சரஸ்வதி தேவிக்கு காதல் கடிதம் எழுதக்கூடிய விடலைப்பையன் என்ற தீர்மானத்துக்கு வந்த அந்த அம்மாவுக்கு மகனாகப் பிறந்தவருக்கோ, ஜானகிராமனின் புத்திசாலித்தனமான பெண்பாத்திரங்களில் வரும் ஒருத்தியைப்போல ஒரு பெண் மனைவியாகக் கிடைக்கவேண்டியிருந்தது தவம். அந்தத்தவம் பலன் தந்த பெருமிதம் கிட்டிய பாக்கியவான் ஜெயமோகன்.
தமது முதல் கதையை ரத்னபாலாவில் எழுதி அதற்கு ஐந்து ரூபா சன்மானம் பெற்ற இவர், தொடர்ச்சியாக அயராமல் எழுதினார். சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், அறிவியல், அரசியல், வாழ்க்கை வரலாறு, காப்பியம், வரலாறு, இலக்கியத்திறனாய்வு, பழந்தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, அனுபவம், தத்துவமும் ஆன்மீகமும், பண்பாடு, சுகநலம், இவ்வாறு பல்வேறு துறைகளில் எழுதிக்கொண்டே திரைப்படங்களுக்கும் வசனம் எழுதுகிறார். சில மலையாளப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்படும்பொழுது அவற்றுக்கும் வசனம் எழுதுகிறார்.
தொழிலுக்குச்சென்றார். காலையில் சேவல் கூவும்பொழுதில் மனைவி மக்கள் விழித்துக்கொள்ளும் முன்பே எழுந்து தமது பிரியமான பிராணிகளுக்கு உணவூட்டுகிறார். சமைக்கின்றார், மனைவி மக்களின் உடைகளுக்கு ஸ்திரி போட்டு வைக்கிறார். அதற்கிடையில் அரைமணிநேரம் தியானமும் செய்கிறார். தமக்கு வரும் மின்னஞ்சல்களுக்கு பதிலும் எழுதுகிறார். மகாபாரதம் -வெண்முரசு தொடரும் எழுதுகின்றார். விவாதங்களுக்கு பதில் அளிக்கின்றார். பிள்ளைகளுக்கு கதைகளும் சொல்கிறார். அடிக்கடி வெளியூர் சென்று கூட்டங்களிலும் உரையாற்றுகிறார்.
இனிச்சொல்லுங்கள் அவர் குறித்த எனது பிரமிப்பு நியாயமானதுதானே….?
பொதுவாகவே படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் குறித்து ஒரு மதிப்பீடு இருக்கிறது. காலம் காலமாகவே அந்த மதிப்பீடு வாய்ப்பாடாகவே பரப்பப்படுகிறது.
இந்த வர்க்கத்தினருக்கும் நிருவாகத்திற்கும் வெகு தூரம். பொறுப்பான எந்த வேலையையும் இவர்களிடம் ஒப்படைக்க முடியாது. முக்கியமாக குடும்பப்பொறுப்புகள். இவர்களுக்கு நாட்டில் காய்கறி என்ன விலை என்பதும் தெரிவதில்லை. எரிபொருள் விலை மாற்றமும் தெரியாது.
ஆனால் — இந்த முழுநேரப்படைப்பாளிக்கு யாவும் அத்துப்படி. குழந்தை வளர்ப்பு உட்பட, நோய்களுக்கான நிவாரணிகளையும் தெரிந்து வைத்திருக்கிறார்.
” வீட்டிலே மின்குமிழ் செயல் இழந்துவிட்டால், புதிய மின் குமிழ் கூட தனக்கு மாற்றத்தெரியாது ” என்று கேரள இலக்கிய மேதை தகழி சிவசங்கரன்பிள்ளை சொல்வார்.
இந்தச்சிவசங்கரன்பிள்ளை பற்றிய ஜெயமோகனின் மதிப்பீடும் சற்று வித்தியாசமானது.
” தகழியின் எழுத்துக்கள் யதார்த்தவாதம். ஆனால், யதார்த்தவாதம் ஒரு கட்டத்தில் இலட்சியவாதக்கனவைச்சென்று தொட்டாகவேண்டும். அதுவே அதன் உச்சம். அந்த உச்சத்தை தகழி சென்று தொடவே இல்லை. ஆகவே, முழுக்க முழுக்க பொதுப்புத்தி சார்ந்த எழுத்தாகவே அவரது இலக்கியம் நின்றுவிட்டது ” – எனச்சொல்லும் ஜெயமோகன் பாரதி, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா, முத்துலிங்கம் குறித்தும் சொல்லும் மதிப்பீடுகளும் காந்தி, பெரியார், அம்பேத்கர், உட்பட பலர் பற்றியும் வைத்திருக்கும் மதிப்பீடுகளும் தீவிர வாசக அனுபவத்தின் விளைவுகள்.
அவ்வாறே நாமும் ஜெயமோகன் குறித்து மதிப்பீடுகளை முன்வைக்க முடியும். அவரை தீவிரமாக வாசித்தால் மாத்திரமே அது சாத்தியம்.
இந்தப்பத்தியில் முதலில் குறிப்பிட்டதுபோல் வாசிப்பு அனுபவமும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டிருப்பது. ஒரு காலத்தில் நானும் பலரையும் போன்று ஜெயகாந்தனை விரும்பிப்படித்தேன். அதன் பின்னர் எனது வாசிப்பு தளத்தில் பலரும் வந்து போய்விட்டார்கள்.
தற்பொழுது ஜெயமோகனை விரும்பிப்படிக்கும் என்னைப்போன்ற வாசகர்களிடத்தில் பிறிதொரு காலத்தில் மற்றும் ஒருவர் விருப்பத்துக்குரிய படைப்பாளியாக மாறிவிடலாம்.
அதனால்தான் தொடக்கத்திலேயே ஜெயமோகன் வழிபாட்டில் நான் ஈடுபடவில்லை எனச்சொல்லிவிட்டேன்.
சமகாலத்தில் தமிழ்ச்சூழலில் அதிகமான பக்கங்கள் எழுதிய கின்னஸ் சாதனையாளன் என்றும் ஜெயமோகனைச் சொல்ல முடியும். கூட்டிக்கழித்துப்பார்த்தால் பல்லாயிரம் பக்கங்கள் வரையில் இவர் எழுதியிருப்பார் என்று உறுதியாகச்சொல்லமுடியும்.
இவர் மீதான பிரமிப்புக்கு மற்றும் ஒரு காரணம். அவர் கடந்து வந்த பாதையில் அவருக்கு நேர்ந்த பெரிய இழப்புகள். அதனைக்கடப்பதற்கு அவர் தேசாந்தரியாகவும் அலைந்து உணவுக்கும் இரந்திருக்கிறார். காலம் அவரை துரத்தியிருக்கிறது. தமது அனுபவங்களையெல்லாம் புத்திக்கொள்முதலாக்கிக்கொண்டு தன்னைத்தானே சீர்படுத்தியவாறு மற்றவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கிறார்.
அவரது தாயார் தேர்ந்த வாசகி, வாய்த்திருக்கும் மனைவியும் சிறந்த வாசகி. இந்த இரண்டுபேரும் வாழ்க்கை குறித்த அவரது தேடுதலில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷங்கள். தாயும் தாரமும் அமைவதும் கொடுப்பினைதான். ஜெயமோகனின் சாதனைகளுக்குப்பின்னால் இவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் சொல்லி நாம் அறியவில்லை. அவரது எழுத்துக்களே சொல்லிக்கொண்டிருக்கின்றன.
2009 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் வதியும் நண்பர் நடேசனின் அழைப்பில் வந்தபொழுது, சில நாட்கள் எமதில்லத்தில் தங்கியிருந்த அவரும் அவரது மனைவி அருண்மொழியும் என்னுடன் உரையாடியதை விட எனது மனைவி மாலதியுடன் உரையாடியதே அதிகம்.
நான் ஜெயமோகனின் எழுத்துக்களை படித்தேன். எனது மனைவி அவர்களின் இயல்புகளைப் படித்தாள். அன்று முதல் எங்கள் இல்லத்தில் தினமும் ஜெயமோகனின் பெயர் உச்சரிக்கப்படாத நாளே இல்லை எனலாம்.
எதனையும் துல்லியமாக அவதானிக்கும் இயல்பைக்கொண்டவர் ஜெயமோகன். எங்கள் விக்ரோரியா மாநிலத்தில் கோடை காலத்தில் அடிக்கடி காட்டுத்தீ (Bush Fire) அபாயம் வரும். மெல்பன் நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன் ஜெயமோகன் தம்பதியர் காட்டுத்தீயால் எரிந்த பிரதேசங்களைச்சென்று பார்த்தனர்.
எங்கள் வீட்டுக்குச் சமீபமாக இருக்கும் பௌத்த விஹாரைக்கு அவர்களை அழைத்துச்சென்றேன். பின்னர் கன்பராவிலிருக்கும் கவிஞி ஆழியாள் மதுபாஷினியும் அவரது கணவரும், அவர்களை கன்பரா மாநிலத்துக்கு காரில் அழைத்துச்சென்றார்கள். மெல்பனில் நடேசனின் மாமனாருடன் ( அவர் ஒரு மருத்துவர்) உரையாடியிருக்கிறார். எமது ஒன்பதாவது எழுத்தாளர் விழாவிலும் கலந்துகொண்டு நாம் அழைத்த ஈழத்தின் மலையக மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு எமது சார்பில் விருதும் வழங்கி வாழ்த்தினார்.
நாடு திரும்பிய பின்னர் ஜெயமோகன் எழுதிய புல்வெளி தேசம் நூலில் நாங்கள் இந்த நாட்டில் பல வருடங்கள் வாழ்ந்தும் தெரிந்து வைத்திருக்காத பல தகவல்களை மிகவும் துல்லியமாக அந்த நூலில் பதிவுசெய்தும் எம்மை பிரமிக்கவைத்தவர்.
நாம் வாழும் அவுஸ்திரேலியாக்கண்டத்தில் பெரும்பகுதி புல்வெளிகள்தான். மக்களின் தொகை அன்னளவாக இலங்கையின் குடிசனத்தொகைதான். அந்த நூலுக்கு அவர் சூட்டியிருந்த பெயர் மிகவும் பொருத்தமானதே.
ஈழ இலக்கியம்

ஈழத்து இலக்கியம் குறித்து தமிழகத்தின் மதிப்பீடுகள் காலத்துக்கு காலம் மாறிக்கொண்டிருக்கிறது. அங்கு எம்மவர்களுக்குரிய சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற பொதுவான மனக்குறை இன்னமும் நீடிக்கிறது. ஜெயமோகனின் ஈழத்து இலக்கியம் குறித்த மதிப்பீடுகளும் வித்தியாசமானவை.
அவர், கங்கை பகீரதனைப்போன்று , கலைமகள் கி.வா. ஜகந்நாதன் போன்று மேலோட்டமாக கருத்துச் சொல்லவில்லை. ” ஈழ இலக்கியத்தின் தொடக்கம் தமிழ்நாட்டைவிட காலத்தால் முந்தையது, தமிழ் நாட்டை விடவும் தீவிரமனது என்றும் ஈழத்தவர்கள் தாம் சந்திக்கநேர்ந்த வரலாற்றுச்சவால்களை படைப்புத்தளத்தில் சந்திக்கவில்லை என்றும் எனினும் தனக்கு எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் எஞ்சியது.” – என்றும் வருத்தம் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு ஜெயமோகன் தமது சிறுகதைகள், நாவல்கள் தவிர்ந்து எழுதும் மதிப்பீடுகளே அவரை சர்ச்சைக்குரியவராக பார்க்கும் சூழ்நிலைகளையும் உருவாக்கிவிடுகிறது.
விவாதங்கள் தெளிவை நோக்கி நகரவேண்டும். ஆனால், முகநூல்கள் மேலும் மேலும் குழப்பங்களையே வரவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில் ஜெயமோகனும் அதில் அவ்வப்பொழுது சிக்கிவிடுவது ஏமாற்றத்தை தருகிறது.

அவர் தமது ஆக்க இலக்கியப்படைப்புகளில் மாத்திரம் தமது தீவிரத்தை காண்பித்தால் போதுமே என்று உரிமையுடன் சொல்லத்தோன்றுகிறது.
ஜெயமோகனின் ஒவ்வொரு படைப்பையும் தனித்தனியாக மதிப்பீடு செய்யும்பொழுது எமக்குள்ளும் தேடுதல் மனப்பான்மை வளருகின்றது. அத்துடன் எம்மையும் நாம் தேடுகின்றோம். சுயவிமர்சனமும் செய்துகொள்கின்றோம்.

இவர், தமது படைப்புகளில் தமது அனுபவங்களை பதிவுசெய்வதுடன் புதிய புதிய கருத்தாக்கங்களையும் விதைத்துவிடுகிறார். அந்த விதைகள் விருட்சங்களாகின்றன.
நாளுக்கு நாள் தொடர்பாடல் நவீனமயமாகி உறவுகள் அந்நியப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மின்னஞ்சல், டுவிட்டர், முகநூல் என்று மக்களின் நேரடி உரையாடல் அருகிக்கொண்டிருக்கிறது. வாசிப்பு குறைந்துகொண்டிருக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் தமக்கென ஒரு பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டு தினமும் பேசிக்கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.
அமெரிக்காவில் வதியும் ஒரு வாசகர் தமக்கு ஆண் குழந்தை பிறந்த நற்செய்தியை மின்னஞ்சலில் தெரிவித்து தமது குழந்தையை ஆசிர்வதித்து சில வார்த்தைகள் சொல்லுமாறு கேட்கிறார். வழக்கமாக என்ன நடக்கும் ” வாழ்க.. வளர்க …” என்ற பாணியில் நான்குவரி பதில் எழுதுவார்கள்.
ஆனால் , ஜெயமோகன் தமக்கு மகன் அஜிதன் பிறந்த பொழுது என்ன உணர்ந்தாரோ….எப்படி அந்தக்குழந்தையை சீராட்டினாரோ என்பதை ஒரு தாயுமானவன் போன்று பாடம் நிகழ்த்தி பதில் வரைந்திருக்கிறார்.

நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவில் எனது இரண்டு மகள்மாரும் பிள்ளைப்பேறுக்கு தயாரானபொழுது மருத்துவமனையில் மருமகன்மாரையும் அழைத்து பல விடயங்களை சொல்லிக்கொடுத்தார்கள். பயிற்சி அளித்தார்கள்.

எனக்குத்தெரிந்த பலர் இலங்கையில் தமது குழந்தைகளை தயக்கத்தினாலும் பயத்தினாலும் கையில் தூக்குவதற்கே அஞ்சியதை அறிவேன்.

தமது குடும்பம், குழந்தைகள் குறித்து கொண்டிருக்கும் கரிசனைகள் – வாழ்ந்த வாழும் வீடுகள் குறித்த துல்லியமான நினைவுகள் – படித்த நூல்கள் – சந்தித்த மனிதர்கள் பற்றிய மதிப்பீடுகள் என்பனவெல்லாம் ஜெயமோகனின் சிறப்பியல்புகள். அந்த இயல்புகளையும் அவர் இலக்கியமாக்கிவிடும் திறன் மிக்கவர். அந்த இயல்புகள் முன்மாதிரியாக இருப்பவை.
அவரது நட்பு எமக்கு கிடைத்தமையினால் 2009 இல் அவர் எமதில்லத்தில் சந்தித்த மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் குறித்தும் சிறந்த மதிப்பீடுகளை உருவாக்கிக்கொண்டு, சுமார் ஐந்து ஆண்டுகளில் (2014 இல்) அவரை அழைத்து விஷ்ணுபுரம் விருதும் வழங்கி அவரது நூல்களையும் வெளியிட்டு வைத்திருக்கிறார்.

இந்தச்செயல் ஊடாக தமிழகத்திற்கு ஜெயமோகன் நல்ல செய்தியையும் வழங்கி எம்மவர்களின் மேதாவிலாசத்தை மேம்படுத்தியிருக்கிறார்.
ஜெயமோகன் வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பது எமக்குப்பெருமை தருவது.
( நன்றி காலம் – கனடா)
—0—
letchumananm@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: