இரண்டு வருடங்கள் முன்பாக ஸ்பானிய வகுப்பில் சேர்ந்து ஸ்பானிய மொழியை படித்தேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் படித்தபின் ஸ்பானிஸ் மொழி தெரிந்துவிட்டது என்ற எண்ணத்தில் வகுப்பை நிறுத்தினேன். அதற்கு வீண் செலவு என்ற கருத்து வீட்டில் இருந்ததும் ஒரு காரணம். ஆனால் இந்த அறிவை வைத்து ஸ்பானிய படங்களைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற முடிவுடன் வகுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். தற்போது இரண்டு வருடங்களில் ஸ்பானிஸ் மொழி எதுவும் என்னிடம் மிஞ்சியிருப்பதாக தெரியவில்லை ….?
இலங்கையில் இருந்தகாலத்தில் இலங்கையின் தென்பகுதி மக்களிடையே வேலை செய்ததால் சிங்கள மொழியை எழுத முடியாவிடினும் பேசவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. ஆனால் கால் நூற்றாண்டு கால அவுஸ்திரேலியா வாசத்தால் அரைவாசிக்கு மேல் மறந்துவிட்டது என்பதை மீண்டும் இலங்கை சென்றபோது உணர்ந்துகொண்டேன்.
பயன்பாடு இல்லாத மொழி அழிந்துவிடும் என்பதற்கு நானே ஒரு சாட்சி.
மொழி முக்கியமானதா?
அழியாமல் பாதுகாக்க வேண்டியதா?
தற்காலத்தில் ஆங்கில மயப்படுத்தப்பட்ட கணினியுகத்தில் கேட்கப்படவேண்டிய கேள்வி.
மிருக விஞ்ஞானம் ,உயிரியல் என்பவற்றில் சிறிது பழக்கமுள்ளதால் தற்காலத்தில் இருந்து சற்று முன்னோக்கி பார்க்கிறேன்;. அதாவது சில மில்லியன் வருடங்கள் முன்பாக வானரங்கள் மற்றும் மனிதக் குரங்குகளில் இருந்து இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கியதாலும் ,மூளை விருத்தியடைந்ததாலும் மனிதன் அவற்றில் இருந்து வேறுபடுகிறான். இதைவிட முக்கியமான ஒரு விடயமாக ஆதி மனிதர்களிடம் மொழி தோன்றுகிறது.
மொழி எமது சிந்தனையை எண்ணத்தை மற்றவர்களிடம் பரிமாற உதவுகிறது. அதேபோல் கவலை, காதல், வெறுப்பை மற்றவர்களிடம் வெளிப்படுத்தவும் உதவுகிறது.
மிருகங்களுக்கும் சத்தமிடமுடியும் என நீங்கள் கூறமுடியும். ஆனால் ஆராய்ச்சியின்படி 12 விதமான ஒலியையே அவைகளால் வெளிப்படுத்தமுடியும். ஆனால் மனிதர்களாகி நாம் 50 விதமான ஒலியை வெளிப்படுத்துகிறாம். அந்த 50 விதமான ஒலியைவைத்து ஒரு இலட்சம் வார்த்தைகளை உருவாக்கமுடியும்.
மொழியில் இலக்கணம் உருவாகிறது. குழந்தைகள் ஆரம்பத்தில் பேசும்போது மழலை மொழியிலே முதல் இலக்கணம் உருவாகிறது. இதில் மொழியின் வளர்ச்சியை தொடர்ந்து பேணுவதற்காக நமது மூளை பெரிதாகிறது.
வோகல்கோட்(vocal cord) எனப்படும் குரல்ணாண் மற்றைய மிருகங்களுக்கு வாய்க்கு சமீபத்திலும் மனிதர்களில் வாய்க்கு தூரத்திலும் உள்ளது. இப்படி கீழ் இறங்கியது நாங்கள் பேசுவதற்கு ஏற்றதாகிறது. இதேபோல் குழந்தைகளுக்கு மற்றய மிருகங்கள் போல் ஆரம்பத்தில் மேலே இருந்து கீழ் இறங்குவதுடன் இந்த பதினாலு வயதில் குரல்ணாண் தடிப்பாகிறது என்பதை எந்தத் தாய் தந்தையராலும் தெரிந்து கொள்ளமுடியும். எமது சிறுவயதில் பேசிய மொழியே எமது மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இது மட்டுமா?
தற்கால மனிதன் தோன்றி ஒரு இலட்சம் வருடங்களில் ஐயாயிரம் மொழிகளுக்கு மேல் உருவாகியது. ஒவ்வொரு மொழியும் தன்னைசுற்றி 5000 மேற்பட்ட கலாச்சாரமுள்ள சமூகங்களை உருவாக்கி இருக்கிறது.
தற்பொழுது நாம் நாமாக இருப்பதற்கு உதவுவது எந்த மொழி ?
நாம் மழலையில் பேசிய மொழியாகும்
மீண்டும் நான் தொடங்கிய இடத்திற்கு வருகின்றேன்.
தேவபாஷை எனப்பட்ட லத்தீனில் இருந்த விவிலியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க அக்காலத்தில் போப்பாண்டவரும் மற்றும் கத்தோலிக்க உயர்பீடத்தினரும் எதிர்த்தனர். ஆனாலும் இங்கிலாந்தில் மன்னர் ஜேம்ஸ் அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவால் விவிலியம் மொழி பெயர்க்கப்பட்டது. அதனாலே இப்பொழுதும் கிங் ஜேம்ஸ் பைபிள் என்பார்கள். அப்படிப்பட்ட லத்தீன்மொழி தற்பொழுது இறந்த பாஷையாகிவிட்டது . ஆனாலும் ஆரம்பத்தில் மாக், மத்தியே ,ஜோன், லுக் ஆகியோர் ஆரம்பத்தில் விவிலியத்தை எழுதினார்கள் ஆனால் சாதாரணமக்களால் பேசப்பட்ட கிரேக்க மொழி இன்னமும் இருக்கிறது.
இதேபோல் தேவபாஷையான சமஸ்கிருதம் மிகவும் செழிப்பான இலக்கியங்களையும்; வேதங்களையும் மற்றும் சாத்திரம் முதலானவற்றையும் எழுதிய மொழி. ஆனால் தற்பொழுது பிராமணர்கள் சுலோகம் சொல்வதற்கு மாத்திரம் பாவிக்கப்படுகிறது.
இதைச் சொல்வதன் காரணம்… நமது தமிழுக்கு இப்படியான நிலைமை வரக்கூடாது என்ற ஆதங்கமே.
தமிழ்நாட்டில் கொஞ்சம் ஆங்கிலம் படித்தவர்கள் ஆங்கிலத்திலே பேசுகிறார்கள். அதாவது படித்தவர்களின் மொழியாகிறது. தமிழ் பாமரர் மட்டும் பேசும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அப்படி பேசுபவர்களை நாம் குற்றம் சொல்ல முடியாது. தமிழில் அறிவியல், கணிதம், பொருளாதாரம் முதலான விடயங்கள் எழுதப்படுவதில்லை. இலக்கியம் தமிழில் படைக்கப்பட்டாலும் அது எத்தனை பேருக்குத் தேவைப்படும்…?
ஆங்கிலம் படித்தவர்கள் ஆங்கிலத்திலே வாசித்துவிடுவார்கள். அப்படியானால் தமிழ் இலக்கியம் ஒரு சதவீதமானவர்களால் வாசிக்கப்படுமா?
நாம் வாழும் சமூகத்தில் எந்த விடயத்தையும் பொருளாதாரம் கட்டுப்படுத்துகிறது. பொருளாதாரத்திற்கு தேவையான விடயங்களும் இல்லாதபோது யாருக்கு மொழி தேவைப்படும்?
என்னைப்பொறுத்தவரை சதாரணமான தமிழ் குடிமக்களுக்கு தமிழ் சினிமாப்பாட்டுக் கேட்பதற்கும், சீரியல் பார்ப்பதற்குமே தற்பொழுது தமிழ் தேவையாக இருக்கிறது.
ஈழத்தைப் பொறுத்தவரை நாங்கள் மணவர்களாக இருந்த காலம், தமிழுக்கு சிறந்த காலம். தமிழ் மாணவர்கள் தமிழிலே உயர்தர வகுப்புவரையும் படிப்பது மட்டுமல்ல ,மருத்துவ, மிருக மருத்துவ மாணவர்ளும் முதல் இரண்டு வருடமும் தமிழிலே படித்து பரிட்சை எழுதமுடியும். பொருளாதாரம், அரசியல் போன்ற பாடங்கள் எடுத்து பட்டதாரியாக முடியும். இப்படியான தேவைகளுக்காக பல புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இன்னமும் இந்த நிலைமை தொடர்கிறது.
ஆனால் இலங்கைத் தமிழர்கள் மிகவும் சிறிய தொகையினர். அதைவிட அரசு அதிகாரமற்றவர்கள். ஒரு விதத்தில் சில்லறைக் காசுகள்.
சங்கம் வளர்த்த தமிழ் நாட்டினர் பழைய பெருமைகளை பேசுவதை குறைத்து எதிர்காலத்தில் தமிழ் மொழி தொடர்ந்தும் பேச்சு, எழுத்து மொழியாக இருப்பதற்கான அதன் எதிர்காலத்துக்கான வழிகளைத் திறக்க முயன்றாலே தமிழ் புழக்கத்தில் இருக்கும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் வளர்ப்பது நல்ல விடயம். அது கேக்கின் மேல் வைக்கும் ஐசிங் மாதிரி. ஆனால் கேக்கை நமது நாடுகளில்தான் உருவாக்க வேண்டும் என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்
தமிழில் நல்ல மாற்றம் ஏற்பட்டதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரையும்விட முகநூல் ஸ்தாபகர் Mark Zuckerberg முக்கியமானவர். காரணம் அவரால் தமிழை பலர் எழுதுகிறார்கள்.
நல்ல விடயத்தை எழுதுகிறர்களோ இல்லையோ, எழுதுகிறார்கள்.
தமிழை வளர்க்க வீரமாமுனிவர் என்ற இத்தாலியர் போல் Mark Zuckerberg என்ற அமெரிக்கருக்கு நான் தலை வணங்குகிறேன். அதுவும் தமிழுக்காக,
(SRM பல்கலைகழகத்தால் பயிறறப்பட்டு வெளிவந்த தமிழ் ஆசிரியர்கள் பட்டமளிப்பு விழாவில்: மெல்பேன் மொனாஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பேசப்பட்டது)
மறுமொழியொன்றை இடுங்கள்