நடேசனின் கருத்துக்கள் தொடர்பாக….
முருகபூபதி
தலைமை என வரும்பொழுது குடும்பத்தலைமை, சமூகத்தலைமை, அரசியல்தலைமை, என பகுத்துப்பார்க்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன.
தமிழ்க்குடும்பங்களில் தாய் வழிச்சமூகம், தந்தை வழிச்சமூகம் முக்கியத்துவம் பெற்ற காலம் முன்பிருந்தது. உலக மாற்றத்தினாலும் – புகலிட வாழ்க்கை தமிழர்களுக்கு மட்டுமல்லாது இலங்கையின் பிற இனத்தவர்களுக்கும் அறிமுகமானதனாலும் நிலைமைகள் பெரிதும் மாறிவிட்டன.
புகலிடத்தில் யாரும் யாரையும் நம்பியில்லை – எவரும் எவரிலும் தங்கியில்லை என்றாகிவிட்டதனால், இன்று தாய்வழி, தந்தை வழிபற்றியல்ல, தனத்தை பெருக்குவதில் – அதற்காக ஓடி ஓடி உழைப்பதிலேயே காலம் கரைந்து கொண்டிருக்கிறது.
ஆனால், புகலிடத்தில் தாய், தந்தையரின் தயவு அவர்களுக்கு கிடைக்கும் ஓய்வுதியச்சலுகைகளைப்பெறுவதற்கும் தமது குழந்தைகளின் பராமரிப்புக்கும் தேவைப்படுகிறது.
புகலிடத்திலிருந்து யன்னல் ஊடாக நீங்கள் இலங்கையைப் பார்க்கிறீர்களா …? என்ற கேள்வியும் எழுகிறது. யன்னல் ஊடாக மனைவி அழகாக தெரிந்தால் சமூகமும் அழகாக தெரியவேண்டியதில்லை.
சமூகம் என்பது நான்குபேர் சம்பந்தப்பட்டதல்ல.
வீட்டோடு மாப்பிள்ளையாகிவிடும் ஒரு ஆண்மகன் அங்கு சந்திக்கும் அவமானங்கள் அதிகம்.
அதே சமயம் புகுந்தவீட்டுக்கு பெருமை தேடித்தரவேண்டும் என எதிர்பார்க்கப்படும் ஒரு பெண் மகள், அங்கே மாமி, மச்சாள்மாரின் கொடுமைக்கு ஆளாகிய கதைகளும் ஏராளம்.
இந்நிலையில் தலைமைத்துவம் என்பது கேள்விக்குரியாகிவிடுகிறது.
இலங்கையில் தமிழர் தரப்பு அரசியலையும் சொல்கிறீர்கள்.
ஜீ.ஜீ. பொன்னம்பலம் பகுதிநேர அரசியல் செய்தாலும், வாரிசு அரசியலைத்தான் அறிமுகப்படுத்தினார். அவருக்குப்பின்னர் குமார், அவருக்குப்பின்னர் கஜேந்திரகுமார். முதலாமவர் தலைவராக, எம்.பி. ஆக, அமைச்சராக அமர்ந்துவிட்டுத்தான் சென்றார். மற்ற இருவரும் தலைவராக இருந்தாலும் பாராளுமன்ற ஆசனம் அவர்களுக்கு கனவாகித்தான்விட்டது.
செல்வநாயகத்தின் பின்னர் சந்திரஹாசன் தலைமையேற்க முடியவில்லை. அமிர்தலிங்கத்தை கடந்து அவரால் நகர முடியவில்லை. தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தனது சமூகப்பணியை அவர் வரையறுத்துக்கொண்டார்.
தமிழர் அரசியலில் ஜனநாயகம் தலைத்தோங்கியிருக்குமானால் அமிரின் பாரியாரும் அவர்கள்தம் புதல்வர்கள் காண்டீபனும் – பகீரதனும் அரசியலுக்கு வந்திருப்பார்கள். யோகேஸ்வரனும் அவரையடுத்து அவர் மனைவி சரோஜினியும் என்ன ஆனார்கள்….?
இராஜவரோதயம் தனது வாரிசாக சம்பந்தனை தந்திருக்கிறார். ஆனால், தமிழர்கள் அனைவரும் அவரது தலைமையை ஏற்றுள்ளனரா….?
சிங்களவர் மத்தியிலும் இந்த வாரிசு அரசியல் வந்தது. ஆனால், சிறுவித்தியாசம். என்.எம். – கொல்வின். – பீட்டர் – டொக்டர் விக்கிரமசிங்கா விதிவிலக்கு. இதில் பீட்டர் கெனமன் பறங்கியர் இனத்தவர்.
டி.எஸ். சேனாநாயக்கா – டட்லியை தந்தார். பண்டாரநாயக்கா ஸ்ரீமாவோவையும் – ஸ்ரீமா – சந்திரிக்காவையும் தந்தார்கள். சந்திரிக்கா தனது கணவர் விஜயகுமாரணதுங்காவையும் தம்முடன் இணைத்தார். விஜயகுமாரணதுங்கா கொல்லப்பட்டார். சந்திரிகா மயிரிழையில் உயிர் தப்பி ஒரு கண்பார்வையை இழந்தார்.
பிரேமதாசா மகன் சஜித்தை தந்தார்.
மலையகத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகனையும் ஆறுமுகன் – செந்திலையும் தந்தார்கள். தொழிற்சங்கவாதி வி.பி. கணேசன் – மானோ கணேசனையும் – பிரபா கணேசனையும் தந்தார். ஆனால், இருவரும் அரசியலில் இரு துருவங்களாகிவிட்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பின் அகால மரணத்தின் பின்னர் தலைமைத்துவத்துக்கு வந்தார் ரவூப் ஹக்கீம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் மூன்றாகவோ நான்காகவோ பிரிந்து எல்லோரும் (?) தலைவர்களாகிவிட்டனர்.
சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறு அரசியல் தலைமைத்துவம் இழப்புகள் – மரணங்களுக்குப்பின்னர் வாரிசாக அமைந்தன. ஆனால், ஆயுதம் ஏந்திய தமிழ் விடுதலை இயக்கத்தலைவர்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தனர். அவர்களிடம் வாரிசு அரசியல் இல்லை. இருந்திருந்தாலும் ஆயுதங்களே அவர்களை மௌனித்திருக்கச்செய்திருக்கும்.
நடேசன் சொல்லுவது போன்று தமிழர் தரப்பில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் ஆண்கள் திருமணமானதும் பெண்வீட்டுக்குச் சென்றுவிடுவதால்தான் தமது தந்தைக்குப்பின்னர் தலைமை தாங்கும் பணியிலிருந்து அந்நியப்படுகிறார்கள் என்பதை ஒரு கருத்தாக ஏற்றாலும், அதனால்தான் இலங்கையில் தமிழர் தரப்பில் சரியான தலைமை உருவாக்கம் பெறவில்லை என்ற வாதத்தை ஏற்கமுடியவில்லை.
தலைமைத்துவம் என்பது ஆளுமையிலும் தங்கியிருப்பது. மற்றவர்கள் குடை பிடிக்க அதில் மழைக்கும் வெய்யிலுக்கும் பாதுகாப்புத்தேடிவிட்டு, தானே குடையை தாங்கும் பாவனை காட்டும் தலைமைத்துவம்தான் பெரும்பாலும் அரசியலில் நீடிக்கிறது.
ஆனால் – தமிழர் குடும்பங்களில் தலைமைத்துவம் தியாகத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் இரக்க சிந்தையாலும் விட்டுக்கொடுத்தலினாலும் நிலைத்திருப்பது.
தனிமனிதர் – குடும்பம் – சமூகம் – அரசியல் இவற்றிலெல்லாம் ஆளுமைதான் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆளுமைதான் தலைமைத்துவத்தின் ஆணிவேர்.
letchumananm@gmail.com
மறுமொழியொன்றை இடுங்கள்