பிரேமலதா (சிறுகதை)

young women

1980 மார்கழி 22 – செவ்வாய்க்கிழமை காலை எட்டுமணி

நடேசன்

குணதாசாவின் அலறல் குளியலறையில் இருந்து கேட்டது

காலையில் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை மெதுவான சத்தத்துடன் கேட்டபடி வேலைக்கு புறப்படத் தயாராக இருந்தேன். அந்த வீட்டில் என்னுடன் வசிக்கும் மற்ற இருவரும் சிங்களவர்கள் என்பதால் நாகரீகம் கருதி தமிழ் வானொலி ஒலிபரப்பின் ஓசையை குறைத்துக் கேட்பது எனது வழக்கம். நெடுஞ்சாலைப் பொறியியலாளரான எனக்கு, இந்த வீடு அரசாங்கத்தால் கெக்கிராவை பிரதேசத்தில் கொடுக்கப்பட்டது. என்னுடன் அங்கிருந்த ஒருவர் எனது உதவியாளர். மற்றவர் விருந்தினர்.

யோசப் மாத்தையா,  யோசப் மத்தையா. உள்ளே வாருங்கள் – சிங்களத்தில் அழைக்கும் குரல் குளியலறையிலிருந்து தொடர்கிறது.

உடனே குளியலறைக்குள் நான் நுழையவில்லை.

காலை வேளையில் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது மட்டும் காரணம் இல்லை. மற்றவர் குளித்துக்கொண்டிருக்கும்போது உள்ளே செல்வது நாகரிகமில்லை – அது ஆணாக இருந்தாலும்.

‘உடனே வாங்கோ’ இம்முறை தமிழில் அந்தக் குரல் கேட்டபோது அது எனக்காக மட்டுமே.

அந்த பங்களாவில் வாழ்பவர்களில் நான் ஒருவனே தமிழன்.

‘என்ன பிரச்சினை?’ என்று அறைக்குள் சென்றபோது. ‘யோசப் ஐயா எனது ஆண்குறி இல்லாமல் போய்விட்டது.’ என்று குணதாசா குளறினான்.

சிரிப்புடன் குளியலறை வாசலில் நின்றபடி ‘என்ன சிரிப்புக்கிடமான கதை குணதாசா… அதுவும்

இந்த காலை நேரத்தில்” என்றேன்.

” யோசப் ஐயா தயவு செய்து உள்ளே வந்து என்னைப்பாருங்கள்’

சகிப்புடன் உள்ளே எட்டிப்பார்த்தேன்.

தனது ஆண்குறியை குணதாசா காட்டினார்.

குணதாசாவின் சாராய வயிறு அவரது ஆண்குறியை மறைத்தாலும் அது ஓரளவு வெளித் தெரிந்தது. தண்ணீர் பட்டு சுருங்கியிருந்தது.

‘சட் அப் குணதாசா… அது எல்லாம் சரியாத்தான் இருக்கு” எனச்சொல்லி விட்டு திரும்பினேன்.

‘இல்லை யோசப் ஐயா’ குளியலறைக்கு வெளியில் வந்தும் குணதாசா அழுதான்.

நாற்பது வயது நிரம்பிய ஒருவர் அழுதால் எப்படி இருக்கும்…?

‘சாரயத்தைக் குறைத்தால் வயிறு குறையும் மற்றவை எல்லாம் தானாக சரியாகிவிடும்’ என்றேன்.
குளியலறை சுவரின் ஆணியில் தொங்கிய டவலை எடுத்து கொடுத்துவிட்டு நான் வேலைக்குச் சென்றேன்.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் கண்டிக்குச் சென்ற குணதாசா மீண்டும் வேலைக்குத்  திரும்பவில்லை. அவரைப்பற்றிய எந்த விடயங்களும் பலகாலமாகத் தெரியவில்லை. அவுஸ்திரேலியா சென்றதாக ஒரு சிலர் பேசியது தெரிய வந்தது.

00000000000000

எண்பதுகளில் கெக்கிராவையில் சிவில் பொறியிலாளராக நெடுஞ்சாலைத்துறையில் வேலை எனக்கு கிடைத்தது. திருமணமாகாமல் இருந்ததால் உத்தியோகபூர்வமாக தரப்பட்ட குவாட்டர்சில் தங்கியிருந்தபோது உதவியாளன் சுமணசிறி சமையல் செய்து கொடுப்பது வழக்கம். இக்காலத்தில் கண்டியில் இருந்து குணதாசா தொலைத்தொடர்பு அதிகாரியாக வந்தபோது பங்களாவின் ஒரு அறையில் அவர் தங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இருபத்தைந்து வயதான என்னை குணதாசா ஐயா என்று விளித்தபொழுது, ‘ வேண்டாம்… யோசப் என்றே அழைக்குமாறு கேட்டும் அவர் அதனை ஏற்கவில்லை. தொடர்ந்தும் ஐயா என்றே என்னை அழைத்தார் குணதாசா.

குணதாசா பல விடயங்களில் என்னோடு ஒத்துப் போகும் மனிதர். அரசியலில் இடதுசாரியாகவும் மதநம்பிக்கை அற்றவராகவும் இருந்தார். சிவந்த நிறத்துடன் உயரமான மனிதர். நாற்பது வயதாகியும் திருமண பந்தத்திற்குள் அவர் கட்டுப்படவில்லை.

‘ஏன் திருமணம் செய்யவில்லை’ எனக்கேட்டபோது – ‘ எனது சம்பளத்தில் என்னையே பராமரிக்க முடியாது…” என்று சொல்லிச் சிரித்தார். அவரது குடிப்பழக்கம் தெரியும் என்பதால் நான் அதிகம் பேசுவதில்லை.

மாலையில் சிலநாட்களில் நண்பர்களோடு மது அருந்திவிடுவார். சில சமயம் வீட்டில் அருந்தும்போது மெதுவாக என்னையும் அழைப்பார். ஆனால் வற்புறுத்துவதோ மது அருந்திவிட்டு உரக்கப் பேசும் இயல்போ அவரிடம் இல்லை.
ஆறு மாதம் இருவரும் ஒன்றாக இருந்தபோது பெண்கள் விடயத்தில் அவரது கைங்கரியங்கள் சில படிப்படியாக எனது காதில் விழுந்தன.

நாற்பது வயது வரை திருமணமாகாமல் இருப்பவர்தானே. இப்பொழுதே முன்தலையில் முடி கொட்டியும் பெரிய வயிறுமாக இருப்பவர். இனி வேறு எக்காலத்தில் வாழ்க்கையை அவர் அனுபவிப்பது…? என்று எனக்குள் யோசிப்பேன்.

வார விடுமுறைநாட்களில் எனது காதலியை பார்ப்பதற்காக பேராதனை பல்கலைக்கழகம் செல்வதால் அவருடைய வார விடுமுறை பொழுதுபோக்குகள் என்னை பாதிப்பதில்லை. சுமணசிறி அவரை பெண்கள் விடயத்தில் கொட்டியா (புலி) என்பான். அவரது பெண் வேட்டைகளை பற்றி சுமணசிறி சொல்லும்போது மாத்திரம் கேட்டுக்கொள்வேன்.

என்னுடன் ஆறுமாதங்கள் இருந்தகாலத்தில் ஒரு வாரம் பல்கலைக்கழகம் விடுமுறையாக இருந்தபடியால் கெக்கிராவையில் தங்கவேண்டியதாகியது.

1980 மார்கழி 20 சனிக்கிழமை

அன்று மாவனல்லையில் இருந்து ஜயசுந்தர என்ற நண்பர் குணதாசாவிடம் வந்திருந்தார்.
மாலையானதும் ஐந்தரை மணிக்கே வானம் கறுத்தபடி இருள் கவ்வத் தொடங்கியது குணதாசா ஜயசுந்தரவிடம் ‘பார்ட்டியை ஆரம்பிப்போமா’ என்று சொல்லியபடி என்னைப் பார்த்தார்;.
அப்படியே ஜயசுந்தர தான் கொண்டுவந்த பிளக் அன்ட் வைற் விஸ்கிப் போத்தலை எடுத்தார். நிச்சயமாக அந்த ஒரு லீட்டர் போத்தல் யாராவது வெளிநாட்டில் இருந்து வரும்போது கொண்டு வந்திருக்கவேண்டும். ஏதோ காரணத்தால் அக்காலத்தில் பிளாக் அன்ட் வைற் விஸ்கி இலங்கையில் பிரபலமாக இருந்தது. முக்கிய விருந்துகளில் பரிமாறப்படும் மதுவாகவும் இருந்தது.
சனிக்கிழமைகளில் சோற்றுக்காக காத்திருக்கும் அண்டங்காகத்தைப்போல் சுமணசிறி குடிப்பதற்கு கிளாஸ்களையும் அதற்கு சோடா மற்றும் இறைச்சிப்பொரியல் என்பனவற்றையும் எடுத்து வைத்தான். ஏற்கனவே தயாரிப்புகள் அமைதியாக நடந்திருக்கிறது. கதிரைகள் வட்டமாக போடப்பட்டு நடுவே சிவப்பு பிளாஸ்டிக் மேசையில் போத்தல்கள் உணவுகள் வைக்கப்பட்டன.

இப்பொழுது மார்கழி மாதத்து நாடகம் தொடங்கிவிட்டது. வெளியே வானமே கவிழ்ந்து நீரை கொட்டியது இரும்புக் கூரையின் அலறலில் தெரிந்தது. குளிர்காற்றும் தன்பங்கிற்கு கண்ணாடி ஜன்னல்களை மீறி உடைப்பதற்கு எத்தனித்தது. தூரத்தில் இடி முழக்கம் கேட்டபடி இருந்தது.

‘நீதான் கண்டியில் இருந்து வரண்ட பிரதேசத்திற்கு மழையை கொண்டு வந்திருக்கிறாய’ என சொல்லிக் கொண்டு கிளாசில் மதுவை குணதாசா ஊற்றியபோது ‘யோசப் ஐயா’ என சுமணசிறி அழைத்தான்.

‘எனக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஆனாலும் வாரவிடுமுறையில் இங்கே இருப்பதில்லை’ என்று சொல்லிக்கொண்டு கிளாஸை எடுத்தேன்.

‘நான் நினைக்கிறன் யோசப் ஐயா குடிக்க வந்ததால்தான் மழையாக இருக்கலாம்’ என்றார் குணதாசா.

‘ குணதாசா, சுமணசிறியின் கிளாசிலும் விஸ்கியை ஊற்றிவிட்டு ‘ஆறுமாதமாக யோசப் மாத்தையாவோடு இருந்தாலும் பார்ட்டி போடுவது முதலாவது இதுவே முறை’. என்றார்.

‘ எங்கள் யோசப் மாத்தையாவைப்போல குணதாசா, இருக்கமுடியாது’ என்றன் சுமணசிறி.

‘எந்த விடயத்தில்?’- ஜயசுந்தர.

‘பெண்கள் விடயத்தில்தான். சரி… குணதாசா மாத்தையா, கடைசியாக உங்களுக்கு நடந்த சம்பவத்தை யோசப் ஐயாவுக்கு சொன்னால் என்ன…? இந்த மழைக்கால பார்ட்டிக்கும் சுவாரஸ்யம் கிடைக்குமே…” என்றான் சுமணசிறி.

‘அது எல்லாம் பரம இரகசியம். பகிரங்கமாக சொல்ல முடியாது” என்று குணதாசா சொல்லியபோது அவரது மதுக்கிளாஸ் காலியாக இருந்தது.

‘என்ன ஐசே சொல்லுறீர்… உமக்குள்ளும் அந்தரங்கமா…? சிறுவயதிலே இருந்தே என்னுடன் ஒன்றாக படித்த நீ… என்னிடம் மறைப்பது எப்படி?’ – ஜயசுந்தர.

‘அப்படியா… சரிதான்… சொல்கிறேன்.’ என்று சொல்லிவிட்டு மீண்டும் மதுவை உறிஞ்சி இறைச்சிப்பொரியலை கடித்தார் குணதாசா.

1980 மார்கழி 18 வியாழக்கிழமை நண்பகல்

‘கடந்த திங்கட்கிழமையில் இருந்து லைன்மேன் சிறில் மூன்று நாட்களாக வேலைக்கு வரவில்லை. இரண்டு லைன்மேன்களுடன் கெக்கிராவை பிரதேசத்திலுள்ள தொலைபேசிகளை பராமரிப்பது எனது பொறுப்பாக இருந்தது. அவனது வீடு ஐந்து கிலோமீட்டரில் உள்ள கிராமம் என்பதால் போய்ப் பார்த்துவிட்டு வருவது எனத் தீர்மானித்தேன்.

முகவரியை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீடு பிரதான பாதையில் இருந்து சில நிமிடநேரம் உள்ளே செல்லவேண்டியிருந்தது. வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது பதினெட்டு வயது பெண்ணொருத்தி குளத்தில் மலர்ந்த ஒற்றைத் தாமரையாயாக சிரித்தபடி வரவேற்றாள். என்னைத் தெரிந்தவள் மாதிரி உள்ளே அழைத்தாள். அழகான சிவப்பு ஜாக்கட் அணிந்து பாதங்களை மறைக்கும்வரை அதே வர்ணத்தில் பூப்போட்ட துணியை இடுப்பில் சுற்றியிருந்தாள்.

சிறிலின் மகளாக இருக்க வேண்டும். அதுவும் அநியாயத்திற்கு இவ்வளவு அழகாக இருக்கிறாள். சிறிலின் தோற்றத்திற்கும் இவளுக்கும் எந்த ஒற்றுமையும் இருக்கவில்லையே…?

வீட்டிற்கு உள்ளே செல்லாமல் சிறிலை கேட்டபோது ‘அனுராதபுரத்தில் தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார்’ எனச் சொல்லிவிட்டு உள்ளே அழைத்தாள்.

‘இல்லை நான் போகிறேன்’

‘உங்களைப்பற்றி சிறில் பல தடவை பேசி இருக்கிறார். உள்ளே வாங்கோ.’

ஓடு போட்ட சிறிய வீடு மிகவும் சுத்தமாக இருந்தது. முன்பகுதி கூடமும் ஒரு அறையும் அதைவிட சிறிய சமையல் கட்டும் சேர்த்து கட்டப்பட்ட வீடு. கூடத்தில் மர பென்ஞ் போடப்பட்டிருந்தது. வீட்டைச்சுற்றி அப்பொழுதுதான் பெருக்கியதால் ஈர்க்கு துடைப்பத்தின் தடங்கள் அழியாமல் தெரிந்தன.

‘மாத்தையாவுக்கு தேநீர் போடுகிறேன்” உள்ளே சென்றாள்.

‘வேறு யாரு வீட்டில்?’

‘இரண்டு குழந்தைகள்’

‘அவர்கள் எங்கே?

‘அவர்கள் சிறிலோடு அம்மா வீடு சென்றிருக்கிறார்கள்” எனச்சொல்லிக்கொண்டு தேநீர் கொண்டுவந்தாள்.

அருகில் வந்தபோது அவளில் இருந்து மல்லிகைப்பூவின் வாசனை அந்த இடத்தை நிறைத்தது. ஆனால் அவளது கூந்தலில் எந்தப் பூவும் இல்லாமல் ஈரமேகமாக பின்புறத்தில் படர்ந்து இருந்தது.

‘இன்று மாத்தையாவுக்கு வேலையா…?

‘பெரிதாக ஒன்றும் இல்லை. மதியத்துடன் முடித்துவிட்டது. மூன்று நாளாக சிறிலைக் காணவில்லை. அதுதான் சிறிலுக்கு என்ன நடந்தது பார்ப்போம் என்று வந்தேன்.”

‘மாத்தையா சாப்பிடவேணும்… நான் கருவாட்டு குழம்பு வைத்திருக்கிறேன்’

‘ஐயோ என்னால் அவ்வளவு நேரம் இருக்க முடியாது.”

‘நீங்கள் வருவதற்கு முன்பே சமைத்து வைத்துவிட்டேன். சோறும் முடிந்துவிட்டது. எல்லாம் தயார்.’ எனச்சொல்லியவாறு பீங்கான் உணவுத்தட்டை முன்பாக வைத்தாள்.
தப்புவதற்கு வேறு வழியில்லை.

‘சிறில் எப்ப வருவார்?’

‘நாளைக்கு வந்துவிடுவார் அவசர வேலையாக போனவர்.”

உணவை அருந்தியபின்பு கையை கழுவிவிட்டு எழுந்தபோது அவள் தனது சிவப்பு மேற்சட்டையின் ஊசியை மெதுவாக கழற்றியபடியும் பின்பு அந்த ஊசியை பூட்டியபடியும் இருந்தாள்.

நான் அவளைப் பார்த்துவிட்டு தட்டில் கையை கழுவியபோது உடலில் உள்ள ஈரம் அப்படியே அந்த தண்ணீரோடு கலந்துவிட்டது போல் உலர்ந்து போய்விட்டதை உணர்ந்தேன். உணவுத் தட்டை எடுக்க முயற்சித்தபோது தானே அந்தத் தட்டை அவள் பெஞ்சில் இருந்து எடுத்தாள்.

அப்பொழுது அவளது உதடுகள் விரிந்து சிரித்தபடி இரண்டு கண்களும் கூரிய இருவாள்களாக எனது இதயத்தில் இறங்கியது.

கையைத் துடைத்துக் கொண்டு அவளை பார்த்தபோது மேல்சட்டை ஊசி அவளது கையில் இருந்தது.
என்னையறியாமல் கையை நீட்டியபோது அந்த ஊசியை கொடுத்தபடி அருகே வந்தவளின் சட்டையில் இரண்டாவது ஊசி மட்டுமே இருந்தது. அதை நான் கழற்றியபோது தனது இடுப்புக்கு கீழான ஆடையை பெஞ்சில் விரித்தாள். வெள்ளைப் பாவாடை நிலத்தில் தழுவியபடி அவளது பாதத்தை தொடர்ந்து மறைத்தது.

‘மாத்தையா கல்யாணம் கட்டாதவர் என்று எனக்குத் தெரியும்.” என்றாள்.

‘வேறு என்ன தெரியும்?’
‘நீங்கள் பெண்கள் விடயத்தில் சிறுத்தைப்புலி அல்லவா…?”

அந்த பெஞ்சின் மேல் இருவரும் இணைந்து வெறிகொண்ட சர்ப்பங்களானோம்.

சில நிமிடங்களின் பின்னர் அவளே வாய் திறந்தாள்.

‘மாத்தையா உடல் பயிற்சி செய்வதில்லையா…?”

‘ஏன் கேட்கிறாய்?’

‘உடலில் தசைகள் முறுக்காக இல்லையே…. அத்துடன் செல்லவண்டியும் இருக்கிறதே.’ எனச்சொல்லி எனது வயிற்றில் மெதுவாக கிள்ளினாள்.

எனது மனதில் ஊசி முனையாக குத்தியது. உடலில் இதுவரை ஏறியிருந்த காம முறுக்கு குளிரில் பாதரசமாகியது. உடல் வெப்பமும் குறைந்தது. எனது உடல் அவளது உடலில் இருந்து மெதுவாக சரிந்தபோது, ‘விளையாட்டுக்குச் சொன்னேன் மாத்தையா…’ எனச்சொன்னவாறு எனது கால்களின் இடையில் தனது தலை பதித்து சுவாசத்தை மறந்தாள்.

இறுக்கமான அவளது அணைப்பினால் உறைந்த இரத்தம் மீண்டும் பாய்ந்தது. பலநாளாக பசித்திருந்த வேட்டை சிறுத்தையாக இயங்கியபோது மீண்டும் ‘மாத்தையா என்னை மன்னிக்கவேண்டும். உடலில் தளர்வு இருந்தாலும் தொழிலில் இருபத்தைந்து வயது இளைஞன் உங்களிடம் மண் கவ்வுவான். உங்களது புகழ் உண்மையானது உங்களை நான் மறக்கமாட்டேன்’ என சீண்டினாள்.
எனது ஆண்மையின் நம்பிக்கை மீண்டும் ஊதிய பலுனாகியது.

இந்தவிடயத்தில் புகழ்ச்சியை விரும்பாத ஆண் யார்தான் இருப்பான்…?

‘ இந்தத் தொழிலில் நான் சுத்தம். குற்றம் குறை சொல்வதற்கு எவருக்கும் இடம் வைப்பதில்லை.’
அவள் அதைக் கேட்கும் நிலையில் இல்லை. அவள் மாத்தையா மாத்தையா என முனகியபடி இருந்தாள். மெதுவான சப்தங்கள் முனகல்களாக அடித்தொண்டையில் இருந்து வார்த்தைகள் சிக்கியபடி வெளிவந்தன. .அவளது உடலும் புயலில் அசைந்த விருட்சமாக சில நிமிடங்கள் குலுங்கியது.
எனக்கு அவளது லீலைகள் விசித்திரமாக இருந்தன. இப்படியான ஒரு பெண்ணை முன்னர் அனுபவித்ததும் இல்லை என நினைத்து உச்சக்கட்டத்தில் தீப்பிளம்பைத் தள்ளும் எரிமலையாக இயங்கியபோது எதிர்பாராதபடி அவளது தொண்டையில் இருந்த காமினி- காமினி-  காமினி என வார்த்தைகள் முன்று தடவைகள் தெளிவாக வந்து விழுந்தன.

யார் காமினி…? யாரை இந்த உச்சஸ்தான கணத்தில் அழைக்கிறாள்.

நான் திடுக்கிட்டபோது அவள் தனது கைகளை என்னிலிருந்து விடுவிக்கவில்லை. மேலும் இறுக்கிவிட்டு சிறிது நேரத்தில் தளர்த்தினாள்.

‘யார் காமினி…?”

‘நான் காதலித்த எங்கள் ஊர் பையன்..” என சொல்லி விட்டு எழுந்து செம்புத்தண்ணியுடன் வீட்டின் பின்புறமாக காற்றில் மிதப்பதுபோல் ஒய்யாரமாக சென்றாள். அவ்வாறு அவள் சொன்னபோது கண்ணையும் சிமிட்டினாள். அவளது குழிவிழுந்த கன்னத்தில் மேலும் செம்மை படர்ந்திருப்பதை அவதானித்தேன்.

எனது வாழ்கையில் அந்த உறவு புது அனுபவமாக இருந்தது. இருவர் உடலுறவில் ஈடுபடும்போது அங்கு இருவர் மட்டும் இருப்பதில்லை என்பது அன்றைய அனுபவத்தில் தெரிந்தது. பல முறைதானே தனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அல்ல பல பெண்களை நினைத்தபடி மற்றொரு பெண்ணை புணர்ந்திருக்கின்றேன். ஆனால்… இவ்வளவு வெளிப்படையாக ஒரு பெண் உடலுறவின் உச்சத்தில் வேறு ஒருவனது பெயரைச் சொல்லி சுகிப்பில் இன்பம் கண்டது எனது வாழ்வில் இதுவே முதல்முறை. அதுவும் ஒரு பெண் இவ்வாறு உண்மையாக வெளிப்படையாக நடந்துகொள்ளும்பொழுது ஆண் அதிர்ச்சி அடைகிறான்.

அவளது காமினி என்ற உச்சரிப்பு என்னை சற்று நிலை குலையச்செய்தாலும் உடனடியாகவே சுதாகரித்துக்கொண்டேன்.

எதுவும் நடக்காததுபோல் உள்ளே வந்தவள் பெஞ்சில் உள்ள துணியை எடுத்து உடுத்திக்கொண்டு மாத்தையாவுக்கு தண்ணீர் வேணுமா..? என்றாள்.

‘ ஆம் ” எனக்கூறிவிட்டு மீண்டும் அவள் புதிதாக கொண்டுவந்த மற்றும் ஒரு செம்பில் இருந்து அருந்தியபோது நீரருந்தாமல் பலதூரம் பாலைவனத்தைக் கடந்த பயணிபோல் அந்தச் செம்பை காலி செய்தேன்.

அவள் நிலத்தில் இருந்து எடுத்துக் கொடுத்த எனது ஆடைகளை அணிந்தபோது – ‘ஜுஸ் குடித்துவிட்டு போங்களேன் “- என்றாள்.

‘வேண்டாம்”

‘நீங்கள் எனது பெயரைக் கேட்கவில்லையே…?”

‘அதுதானே மறந்துவிட்டேன் சரி சொல்”

‘பிரேமலதா…. நீங்கள் எந்த அரசியல்கட்சிக்கு வாக்கு போடுகிறவர்…? எனக்கேட்டாள்.

‘ஏன்…? நான் கம்மியூனிஸ்ட். இந்த வாக்களிப்பு அரசியலில் நம்பிக்கையல்லாதவன்.’

‘மாத்தையா,  எனது பெயரைக் கேட்காமலேயே என்னோடு படுத்தீர்கள். ஆனால் எனது சிறிய வரலாற்றை நீங்கள் கேட்க விரும்பாவிட்டாலும் உங்களுக்கு நான் அதைச்; சொல்லாமல் விடமுடியாது. நாங்கள் வறுமைப்பட்டவர்கள். ஆனால் மானத்தோடு வாழ்ந்தவர்கள். அப்பா ஊரில்  நாட்டு வைத்தியர். எங்கள் குடும்பம் காலம் காலமாக சுதந்திரக் கட்சிக்குத்தான் வாக்கு போட்டு வந்தது. போனவருடம், கடந்த தேர்தலில் எமது கிராமம் மட்டும் மொத்தமாக தேசியகட்சிக்கு எதிராகப் புள்ளடி போட்டது. ஆனால் தேசியக்கட்சிக்கு வெற்றி வந்தவுடன் எனது தந்தை மட்டுமல்ல எமது கிராமத்தவர்கள் பலரும் அடி உதை வாங்கினார்கள். சில வீடுகளை உடைத்து நாசமாக்கினார்கள். ஊர் முழுவதும் அல்லோலகல்லோலமானது. தேசிய கட்சிக்கு எதிராக வாக்கு போட்டதற்கு எனது தந்தையே காரணமென்பதால் அவர்மீதும் தாக்குதல் பலமாக இருந்தது. அவர் வாங்கிய அடியில் சில மாதத்தில் இறந்துவிட்டார். வென்ற அபேட்சகர் மந்திரியாகியதால் அவரது கையாளாக இருந்த சிறில் எனது தலைமயிரை பிடித்து இழுத்து வந்து அவனது இறந்த மனைவியின் பிள்ளைகளுக்குத் தாயாக என்னை தன்வசம் வைத்திருக்கிறான்.

நீளமான அவளது தலைமயிரை அப்படியே தூக்கி முகத்தின் முன்புறமாகப் போட்டபோது முகத்தை மட்டுமல்ல அவளது அடிவயிறுவரையில் அந்த நீண்ட கூந்தல் மறைத்தது. துர்க் கனவுகளில் வரும் தேவதைபோல் பிரேமலதா தோற்றமளித்தாள்.

‘ பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லையா?’ எனக்கேட்டேன்.

‘ எனது அம்மாவின் முறைப்பாட்டை கெக்கிராவை பொலிஸ் விசாரிக்க மறுத்துவிட்டது. இதைபற்றி பேச வந்த நான் சிறு வயதில் இருந்து உயிருக்கு உயிராக நேசித்த எனது காதலன் காமினியை அடித்து ஊரை விட்டே கலைத்துவிட்டான் இந்த சிறில்.

காமினி என்னை இழந்தபின்பு தனது உயிரைத்துறக்க முனைந்தாலும் குடும்பத்தில் உள்ளவர்கள் உயிர்வாழவேண்டும் என்பதற்காக தற்போது கட்டாரில் வாகனமோடுகிறான்.

‘ஆம் பிரேமா, 77 தேர்தல் முடிவுகள் வந்தபோது நானும் கொழும்பில்தான் நின்றேன். வென்ற தேசியக்கட்சியை சேர்ந்தவர்களது அட்டகாசத்தை அங்கே பார்க்க முடிந்தது. காலிமுகத்தில் நான் நின்றபோது பண்டாரநாயக்கா மாத்தையாவின் சிலையில் பச் நிறத்திலான பெயிண்றை ஊற்றி இருந்தார்கள். எங்கள் ஊரில் ஐந்து வீடுகள் உடைக்கப்பட்டன. இலங்கை முழுவதும் மூவாயிரத்திற்கு மேலாக வீடுகளை உடைத்து நாசப்படுத்தியதாக பத்திரிகைகள் சொல்லியது. கொலைகள் நடந்திருக்கலாம் ஆனால் வெளிவரவில்லை. அதே கட்சியின் சண்டியர்கள் தெமில மனுசர்களையும் தேர்தல் நடந்து சில மாதத்தின் பின்பு எங்களுரில் தாக்கி கொலை செய்தார்கள்’ – என்றேன்.

‘இப்பொழுது உங்ளுக்குத் தெரிகிறதுதானே… சிறிலுடன் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட நான் – எனது தந்தையின் மரணத்திற்காகவும் எங்களது குடும்பத்தை அவன் அழித்ததற்காகவும் என் காதலை சிதைத்ததற்கும் சிறிலை எப்படி பழிவாங்க முடியும்…? அதுதான் இப்படி… நான் மற்றவர்களுக்காக பாய் விரிப்பதால் மட்டும்தான் நான் அவனைப் பழி வாங்கமுடியும். எப்பவும் நீங்கள் என்னிடம் வரலாம். விரும்பினால் நண்பர்களைக் கூட என்னிடம் கூட்டிவரலாம்.’

அவள் மேலும் மேலும் அதிர்ச்சிகளையே தந்தாள். இப்படியும் ஒரு பெண்ணா…? அவளை கூர்ந்து பார்த்தேன். அழகிய அவளது முகத்தில் அந்தப் பழியுணர்ச்சியும் மேலும் செம்மையை படரச்செய்துகொண்டிருந்தது.

சமவெளியில் ஓடும் நதியாகி அமைதியாக தலைமயிரை விரித்து அவள் தனது தோளில்போட்டபோது கரு நீலத்தோகையாக அது பிருஷ்டத்தைத் தொட்டது.

இவள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறாளே…. இவளுடனான எதிர்பாராத உறவுகூட யானை உண்ட விளாம்பழமாக தேகத்தில் இருந்த முழுச்சக்தியையும் பிரித்து எடுத்ததுபோல் இருந்தது. எழுந்து செல்ல தடுமாறியயபடி எத்தனித்தபோது அவள் ‘மாத்தையா என்னைப் பிடிக்கவில்லையா…? ” என்று ஏக்கத்துடன் கேட்டாள்.

‘அப்படிச் சொல்லமுடியுமா…?

‘ இன்று இரவும் என்னோடு இருந்து போகலாம்தானே…?’

‘இல்லை…. மீண்டும் ஓரு நாள் வருகிறேன்’ என வெளியேறினேன்.
————————

‘ அட… இவ்வளவு நடந்திருக்கா…? குணதாசாவுக்கு வித்தியாசமான அனுபவம்தான்…” என்ற ஜயசுந்தர கண்களை அகல விரித்தான்.

எனக்கு வாயடைத்துவிட்டது.

நாலு பேருமாக இப்பொழுது பிளக் அன்ட் வைட் விஸக்கி போத்தலை முடித்துவிட்டோம்.

‘கதை கேட்டதில் போதை தெரியவில்லை. நானே அதிகம் குடித்துவிட்டேன்.’

‘இன்னொரு போத்தால் அடித்தால்தான் வெறி ஏறும் – ஜயசுந்தர.

‘இது போதும் எனக்கு’ என்றேன்.

‘இல்லை யோசப் ஐயா நாங்கள் இருவரும் சென்று வாங்கி வாருகிறோம் – குணதாச.

‘பன்னிரெண்டு மணிக்கு மேலாகிவிட்டது…. மழையும் பெய்தபடி இருக்கிறது…’.

தடுக்க நினைத்தபோது குணதாசா எழுந்து கதவடியில் நின்றபடி,

‘எனக்கு கசிப்பு விற்கும் இடம் தெரியும். மிகவும் சமீபத்தில்தான் உள்ளது அந்த இடம். நானும் ஜயசுந்தரவும் மட்டும் போய் வருகிறோம். மாத்தையா நில்லுங்கள் ’ என்றான் குணதாசா.

‘இல்லை நானும் வருகிறேன்’ என்றேன்.

மழைக்கோட்டை அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் நானும் சுமணசிறியும் மற்றைய சைக்கிளில் குணதாசாவும் ஜயசுந்தரவும் மழை பெய்யும் அந்த மார்கழி இரவில் சென்றோம்.

கசிப்புக்காக செல்லவிருந்த இடம் இரண்டு கிலோ மீட்டரில் தம்புள்ளை போகும்பாதையில் இருந்தது. கசிப்பு விற்கும் அந்தக்கடை சிறிய தென்னங்கீற்றால் வேயப்பட்டு அதே தென்னங்கீற்றால் தட்டி அமைக்கப்பட்டிருந்தது. குணதாசா கடையின் வாசலில் தட்டியபோது உள்ளே இருந்து ஒருவர் சிறிய லாம்புடன் வந்தார்.

வந்தவருடன் பேசிவிட்டு வந்த குணதாச ‘எல்லாம் முடிந்துவிட்டதாம் . கடைசியாக இருந்தபோத்தலை பொலிஸ்காரர் வந்து வாங்கிவிட்டார்களாம்.” என்றார்.

‘கசிப்பு காய்ச்சுவதை தடைசெய்யும் பொலிஸே இப்படியா’ என சுமணசிறி எனக்கு பின்னால் இருந்து வெறுப்பை உமிழ்ந்து துப்பினான்.

‘இந்த மனிதர் அரசாளும் கட்சியை சேர்ந்தவர். மந்திரிக்கு வேண்டப்பட்டவர்” என்ற குணதாசா மீண்டும் ‘இங்கிருந்து போகும் மண் ரோட்டில்தான் சிறிலின் வீடு இருக்கு’ என்றார்.

‘நாங்களும் பிரமேலதாவை பார்க்க வேண்டும்போல் இருக்கிறது” என்றான் ஜயசுந்தர.

‘ நாங்கள் போவோமா” – சுமணசிறி

‘சிறில் இருந்தால்…?” என்று நான் தயங்கினேன்.
‘கசிப்பு வாங்க வந்ததாகச் சொல்வோம். நாலு பேராக போனால் அவனுக்கு சந்தேகம் வராது.” குணதாசா.

‘நான் வரவில்லை’ என்றேன்.

‘வந்து தூரத்தில் நில்லுங்கோ’ ஜயசுந்தர.

வேறு வழியில்லை. அவர்களிடம் எஞ்ஜினியர் யோசப் ஐயா கோழை என்ற பட்டத்தை பெற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை.

மண்பாதையில் திரும்பியதும் வானம் பூமி எல்லாம் மழைக்கால இருட்டு எங்களை கரும்பூதமாக விழுங்கியது. மோட்டார்சைக்கிளின் வெளிச்சத்துடன் சில மின்மினி பூச்சிகள் தெரிந்தன. நெல் வயல்களை கிழித்தபடி செல்லும் கிறவலான பாதை தெரிந்தது.

‘லைட்டை அணையுங்கள். நாளைக்கு இந்தப் பாதையால் யார் வந்தது எனத்தெரியாமல் இருக்கவேண்டும்” – குணதாசா.

எனக்கு இதைக்கேட்டதும் ஏற்கனவே இருந்த தயக்கம் பயமாகியது. கெக்கிராவையில் பொறியிலாளராக இருந்து கொண்டு இப்படியான இடத்துக்கு வருவது மானக்கேடு.. இந்த விடயம் எனது காதலி மாலினிக்குத் தெரிந்தால் என்ன நடக்கும்…?

‘சுமணசிறி , எனக்கு லைட் இல்லாமல் ஓடமுடியாது. நீ ஓடு’ என்றேன்.

‘பள்ளம் திட்டியான பாதையில் மோட்டார் சைக்கிள் போய்க்கொண்டிருந்தது. பாதையின் வெள்ளத்தில் தெறித்த தண்ணீர் நல்லவேளையாக ரெயின்கோட்டில் பட்டது. மழைக்காலத்து வயல் பூச்சிகள் ஹெல்மெட்டில் வந்து மோதி தற்கொலை செய்தன. முன்று கிலோமீட்டர்,  முப்பது கிலோ மீட்டர் தூரமாக இருந்தது. யாரும் பேசவில்லை. அந்த இருட்டில் மூன்றாவது கியரில் ஓடும் மோட்டார் சைக்கிளின் ஓசை மட்டுமே கேட்டது.

சிறிது நேரத்தில் குணதாசா ஒரு சிறிய வீட்டின் முன்னால் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது சுமணசிறி அதற்குப்பின்னால் நிறுத்தியபோது நான் சொன்னேன் ‘சைக்கிளை திருப்பி நிறுத்துவது நல்லது. ஏதாவது பிரச்சினை என்றால் ஓடுவதற்கும் வசதியாக இருக்கும்.”
குணதாசா அந்த கும்மிருட்டில் அந்த வீட்டின் வாசலுக்கு குறுக்காக வைக்கப்பட்டிருந்த இரு தடிகளையும் கடந்து சென்றார்.

வெளியே நாங்கள் மூவரும் மவுனமாக மூச்சைவிட மறந்து நின்றோம்.

உள்ளே சென்ற மனிதனை சில நிமிடம் காணவில்லை. நெஞ்சைப் படபடக்க வைத்தது.
திரும்பி வந்த குணதாசா, ‘சிறில் வீட்டில் நித்திரை’ என்றார்.

‘நல்லவேளை…’ என மூச்சை விட்டபடி அவர் சொல்லிக்கொண்டு வந்தபோது மோட்டார் சைக்கிளை மீண்டும் அரைகிலோமீட்டர் வரையில் தள்ளியபடிவந்து ஏறினோம்.

‘கசிப்புமில்லை பெண்ணுமில்லை’ என குணதாசா சொன்னபோது ‘நல்லவேளை தப்பினோம் என சந்தேசப்படு…. காமினி மாதிரி நாமும் கட்டாருக்குத்தான் போகவேண்டியிருக்கும்’ என்றான் ஜயசுந்தர.

1980 மார்கழி 22 திங்கட் கிழமை மாலை ஆறுமணி

குணதாசா வந்து ‘யோசப் ஐயா… மிகவும் விசித்திரமான சம்பவம் நடந்திருக்கு…’ என்றார்.

‘என்ன..?’

‘நேற்று சிறில் வேலைக்கு வந்தான். ‘ஏன் ஒரு கிழமையாக வரவில்லை’ என்று கேட்டபோது அவன் அநுராதபுர சிறையில் இருந்ததாகவும் இன்றுதான் மந்திரி ஐயாவின் உதவியால் பிணையில் வந்ததாகவும் சொன்னான்.”

‘ஏன்…?’

‘மனைவியை கொன்ற குற்றத்திற்காக…. ”

“யாரு பிரேமலதாவா?’

‘ஆமாம்… வேறு ஒரு காதலனோடு ஒன்றாக படுக்கையில் பார்த்ததால் கையில் இருந்த கட்டையால் அவளைக் கொலைசெய்திருக்கிறான். அவன் தப்பியோடி விட்டனாம்.’

‘இது நடந்தது ஒரு கிழமையென்றால் பிரேமலதாவை சந்தித்து நீ தொடர்பு வைத்தது வியாழக்கிழமை. பின்பு சனிக்கிழமை அவளை வீட்டில் சந்தித்தது எப்படி…? அவள் சிறில் தூங்குவதாக சொன்னது…?

‘அதுதான் மிகவும் புதிராக இருக்கிறது’ என்றபோது குணதாசாவின் முகம் பேயறைந்தது போல் வெளுத்தது.

நன்றி மலைகள்கொம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: