வெளிநாட்டுத் தமிழர்களின் உதவிகள்…?

நடேசன்
எக்சோடஸ் 1984

 LTTE  -Dog cage

மனிதர்களை அடைத்த நாய்க்கூடுகள்

தமிழர் மருத்துவ நிலையத்தை சென்னையில் தொடங்கிய காலத்தில் எமக்கு வெளிநாடுகளில் இருந்து பல உதவிகள் வந்து சேர்ந்தன. பெரும்பாலானவை தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்தன.

சில உதவிகள் நாங்கள் கேட்காமலேயே எங்களிடம் எதையும் விசாரித்து தெரிந்து கொள்ளாமலேயே அழையாத விருந்தாளியாக வந்து எங்களை சங்கடத்தில் மாட்டின. அவற்றின் விளைவாக தலையைப் பிய்த்துக்கொண்டு நின்றதi இன்று நினைத்தாலும் சங்கடம்தான். அவை எல்லாம் வெளிநாட்டுத் தமிழர்களால் நிகழ்ந்த சங்கடங்கள்தான்.
எமது அலுவலகத்திற்காக ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்த சில காலத்தில் எமது பெயரில் சென்னை துறைமுகத்தில் அமெரிக்காவில் இருந்து ஒரு பெரிய கொல்கலன் (Container) வந்திருப்பதாகவும் அதில் பாவித்த உடைகள் இருப்பதாகவும் தகவல் வந்தது.

நாங்கள் விழித்தோம்.

இப்பொழுது அந்தக் கொல்கலனை நாங்கள் எடுக்காதுவிட்டால் ஒவ்வொருநாளும் சென்னைத் துறைமுகத்தினருக்கு பணம் கட்டவேண்டும். அதேநேரத்தில் முகவர்கள் இல்லாமல் இந்தியாவில் ஒரு விடயத்தை செய்வது எவ்வளவு கடினம் என்பது சிலகாலம் இந்தியாவில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். நானும் சிவநாதனும் தலையறுந்த கோழிகளைபோல் சென்னைத் தெருவில் ஓட்டோக்களில் ஓடித்திரிந்து கேட்டபோது போராளி இயக்கத்தினர்கள் எமக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். இந்தியாவில் இலஞ்சம் கொடுக்காமல் எதுவும் நகராது. அதற்கு எம்மிடம் பணமில்லை. இந்த நிலையில் துறைமுகவிடயங்களைக்கவனிப்பது மத்திய அரசு அதிகாரிகள். இவர்களிடம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உதவியும் சரிவராது. இந்த நிலையில் ஈழத்து அகதிகள் என்ற அனுதாபத்தை மட்டும் வைத்துக்கொண்டு துறைமுக அதிகாரிகளிடம் பேசி அந்த கொல்கலனை ஒரு கிழமையில் வெளியே எடுத்தோம்.

துறைமுக கொடவினில் (Godown) ) இருந்து சூளைமேட்டுக்கு கொண்டுவர மட்டுமே பணத்தை செலவளித்தோம். அக்காலத்தில் இப்படி சிங்கப்பூரில் இருந்து வந்த ஆயுத கொண்ரயினர் சென்னைத் துறைமுகத்திலே பிடிபட்டது. அந்தக் கொண்டயினரை புளட் இயக்கத்தினர் வெளிக் கொண்டுவந்திருந்தால் ஈழப்போரின் கதாநாயகர் உமா மகேஸ்வரனாக இருப்பார்.

எமது அமைப்பின் பெயருக்கு வந்த கொன்ரயினரை வெளியே எடுத்தாலும்கூட எமது பிரச்சினை தொடர்ந்தது. அமெரிக்காவில் இருந்து அதை அனுப்பியவர்களை தூற்றியபடியே இருந்தோம். அதிலும் டொக்டர் சிவநாதனுக்கு ஆத்திரம் வந்தாலோ அல்லது கொஞ்சம்போதை ஏறினாலோ அவர்; வாயிலிருந்து தூசணம் தாராளமாக வரும். அதைக்கேட்டு ரசித்தடி ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என கலைஞர் தமிழ்நாடு பஸ்களில் எழுதிவைத்த குறளை நினைவில் வைத்து ஓடித்திரிந்த நாட்கள் அவை.

எமது துன்பம் கொன்ரயினரை கொண்டு வந்த பின்னரும் எப்படித் தொடர்ந்தது தெரியுமா…?

அந்தக் கொன்ரயினரில் இலங்கை – அமெரிக்க பெண்கள் அணிந்த உள்ளாடைகள் ஆண்களின் பெனியன்கள் முதலானவற்றுடன் பாண்டுகள் , சேர்ட்டுகள் மற்றும் சேலைகள் என ஐயாயிரத்துக்குக்கும் மேலான உருப்படிகள் இருந்தன. எமது அலுவலகத்தின் கூரைவரையும் முட்டிக்கொண்டு குவிந்திருந்தன. எல்லாவற்றையும் தரம்பிரிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழ் அகதிகள் வைக்கப்பட்டிருந்த புயல் நிவாரண பாதுகாப்பு மண்டபங்கள் எல்லாம் தமிழக கடற்கரையில் இருந்தன. இவற்றை சுற்றியிருப்பது மீனவ மக்களது கிராமங்கள். இலங்கைப் பெண்கள் சட்டைகள் அணிந்து தங்கள் கணவர்களை வசியம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அகதிமுகாம்களுக்கு நாங்கள் சென்றபோது குப்பங்களில் பேசப்பட்டது எமக்குத் தெரியும்.

அங்கு சென்ற இலங்கைத் தமிழ்ப் பெண்கள் இலங்கை வழக்கப்படி கவுணுகள் அணிந்திருப்பார்கள். பெண்களின் கால்களை சினிமாவில் மட்டும் பார்த்த மீனவகுப்பத்து ஆண்களுக்கு இது வித்தியாசமான கலாச்சார அதிர்வாக இருந்தது. பிற்காலத்தில் பல இளம் பெண்கள் தமிழ்நாட்டு பெண்கள்போல் நீளப்பாவாடை தாவணியுடன் உடையணிந்தார்கள் அத்துடன் பஞ்;சாபி – சுடிதார் உடையும் வந்து இந்த கலாச்சார அதிர்வை பிற்காலத்தில் குறைத்தது.

‘இந்த உடுப்புகளையெல்லாம் பெட்டையளுக்கு கொடுத்தால் அங்காங்கு சிறிய ஈழப் பிரச்சினைகள் குப்பங்ளைச்சுற்றி உருவாகும். அதனால் இதனை நீயே பார்த்துக்கொள்’ எனச் சொல்லிவிட்டு சிவநாதன் போய்விட்டார். அவர் முப்பத்தைந்து வயதையும் தாண்டிவிட்ட திருமணமாகாத ஒழுக்கசீலரான பிரமச்சாரி.

எமக்கு வந்த உடைகளை தரம்பிரிக்கும் வேலை எனது தலையிலும் எங்கள் உதவியாளராக இருந்த கருணாநிதியிலும் விழுந்தது. கருணாநிதி பகலில் பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்வதால் ஒரு வாரகாலம் நான் உடைகளைத் தரம் பிரித்தேன்.

அமெரிக்காவில் இருந்து வந்த வண்ண வண்ண சேலைகளை அகதி முகாம் பெண்களுக்கு கொடுத்து அவற்றை அவர்கள் அணிந்தால் அவர்களின் தோற்றம் எப்படி இருக்கு என நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை. புதிய பறவை திரைப்படம் மனதில் வந்தது. புதிய பறவையில் சௌகார் ஜானகி உடுத்த சேலை அக்காலத்தில் பிரபலமானது.

உள்ளாடைகளை எறிந்துவிட்டேன். சேர்ட்டுகளை முகாம் ஆண்களுக்கு கொடுப்பது என தீர்மானித்தேன் ஆனால் பாண்டுகளைத் தரம் பிரித்தபோது அவை எண்ணிக்கையில் 500 ஆக இருந்தது. 83-84 காலத்தில் இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர்கள் மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், வங்காலைப்பகுதி மீனவர்கள். 85இன் ஆரம்பத்தில் வந்தவர்கள் திருகோணமலைப்பகுதி மீனவர்கள். அதன் பின்னர் மற்றவர்கள் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். ஆரம்பகாலத்தில் இலங்கை கடற்படையினரின் நெருக்கடி தாங்காமல் இந்தியாவுக்கு அவர்கள் வள்ளங்களிலே வந்தவர்கள். இலங்கை கடற்படையினர் போராட்ட இயக்கங்களின் ஆயுத மற்றும் போராளிகள் கடத்தலுக்கு மீனவ மக்கள் துணைபோவதாக நினைத்திருந்தார்கள். அது உண்மையும் கூட

அகதியாக வந்தவர்கள் மன்னார் என எப்படித் தெரியும் எனக் கேட்கிறீர்களா…?

இந்திய கடற்கரையில் வந்து ஒதுங்கும் பெரும்பாலான படகுகளில் லூர்து மேரி -அமலோற்பவ மேரி என மடு மாதாவின் பெயர்கள் எழுதியிருக்கும். ஆழ்கடலில் செல்லும் படகுகிற்கு மடுமாதாவின் பெயர் காப்புறுதி பத்திரம்போல் இருக்கும் என மன்னார் மீனவர்கள் நினைத்திருந்தார்கள்.

அமெரிக்காவில் இருந்து வந்த ஆண்கள் பாண்டுகளை இவர்களுக்கு கொடுக்க முடியாது. அவை நம்மட இயக்கப் பையன்களுக்கு உதவும் என நினைத்தேன். ஆயுதப்போராளிகளும் நல்ல பாண்டுகளை அணிந்து ஆயுதம் ஏந்தட்டும் என நினைத்து பாகுபாடில்லாமல் ஐந்தாகப் பிரித்து தலா நூறு பாண்டுகள் வீதம் ஒவ்வொரு இயக்கத்திற்கும் கொடுக்கத் தீர்மானித்தேன்.

இந்தக் காலத்தில் நாங்கள் விரும்பாத இன்னும் ஒரு செயலில் ஈடுபட நேர்ந்தது. அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இருந்து இயங்கும் ஈழத் தழிழ் சங்கம் – எழுபத்தையாயிரம் ரூபா இந்தியப்பணத்தை எமது தமிழர் நல மருத்துவ நிலையத்தின் பெயரில் செக்காக எழுதி அதனை விடுதலைப்புலிகளுக்கும் ரெலோ இயக்கத்திற்கும் கொடுக்கும்படி கேட்டிருந்தார்கள்.

இவர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கவேண்டும் என அவ்வேளை நினைத்துக் கொண்டேன்.

செக்கை அனுப்பினால் அது காசாக ஒரு மாதத்திற்கு மேல் செல்லும். மேலும் ஆயுதம் தாங்கிய போராளிக்குழுக்களுக்கு கொடுக்கச் சொல்லி எமது பாதுகாப்பையும் தங்களது பாதுகாப்பையும் சிந்திகாமல் அனுப்பியிருக்கிறார்களே…? இந்தப் புலம்பெயர்ந்தவர்கள் என நினைத்துக் கொண்டு அந்தச் செக்கை கிழித்து எறியவும் பல தடவைகள் யோசித்தோம்.

ஆனால் – போராளிகளின் மேல் உள்ள அபிமானம் எம்மை அந்தச் செக்கை காசாக்கச் செய்தது
கோடம்பாக்கத்து வங்கி முகவர் எங்களது நண்பர் என்பதால் உடனே பணத்தை தரமுடியும் என்றார்.
பாண்டுகளை ஒவ்வொரு இயக்கத்திற்கும் – விடுதலைப் புலிகளைத் தவிர மற்றவர்களிடம் இலகுவாக கொடுக்க முடிந்தது. நன்றியுடன் ஏற்றுக்கொண்டார்கள். தகவல் சொல்லி இப்படி பணமும் நூறு பாண்டுகளும் உங்களுக்காக இருக்கிறது என விடுதலைப்புலிகளிடம் சொல்லியனுப்பிய போது யோகி வந்தான். ஏற்கனவே இந்துக்கல்லூரியில் படித்தபோது அறிமுகமானவன். இருவரும் கடையில் தேனீர் அருந்திவிட்டு பாண்டுகளை ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு நண்பகல் நேரத்தில் கோடம்பாக்கம் வங்கியை நோக்கிச் சென்றோம்.

அப்பொழுது ஏற்கனவே இயக்கங்களிடையே உரசல் தொடங்கிவிட்டது. ஏற்கனவே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இயக்கத்தில் இருந்த ஒருவரை வவுனியாவில் விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றிருந்த தகவல் எனக்கு தெரிந்திருந்ததால் ‘நரேன் அது சரி நீங்கள் எல்லாம் ஓன்றாக சேர்ந்து இருக்கிறீர்கள் மேலும் ஈழவிடுதலை என்ற நோக்கம் பொதுவானது என்கிறீர்கள் ஏன் வவுனியவில் ஈபிஆர் எல் எவ் காரரை சுட்டீர்கள்’என்றபோது
நரேன் என்னைப்பார்த்து புன்னகைத்தபடி சொன்னான் ‘தம்பி சொன்னதால் சுட்டோம்’
எனக்கு அதிர்ச்சியால் உடல் குலுங்கியது. ஒரு கணம் எதுவும் கண்ணுக்குத் தெரிய மறுத்தது. மனிதர்களது கொலைகளை இவ்வளவு எளிதாக எடுக்கும் மனிதனாக இவன் எப்போது மாறினான்? பாடசாலைக்காலத்தில் மடிப்பு குலையாத சேட்டை முழங்கைக்கு சிறிது கீழே மடித்து விட்டு கிரிக்கட் – உதைப்பந்தாட்டம் எல்லாம் விளையாடியபடி இந்துக்கல்லூரியில் பல மணவர்களுக்கு ஹீரோவாக இருந்தவன் இப்படியான வார்த்தையை எப்படி உதிர்த்தான்? இவன் என்னோடு பல வருடங்கள் படித்தவன். நண்பனாக இல்லாமல் இருந்தாலும் ஓரே ஓழுங்கையில் பலவருடங்கள் இருந்தவன். குறைந்த பட்சம் கொலையை நியாயப்படுத்தியிருக்கலாம். கொலை செய்யப்பட்டவன் சமூகவிரோதி அது இது என்று வழமையான காரணத்தை சொல்லியிருக்கலாம்.

நடைப்பிணமாக வங்கியுள்ளே சென்று பணத்தை மாற்றி கொடுத்து விட்டேன். அதன் பின்பு எதுவும் பேச மனமில்லை. அப்பொழுது நினைத்தேன் எமது சமூகம் நஞ்சுண்ட சிவனாகி விட்டது என்று. தொண்டையுடன் ஆலகால விஷத்தை தடுத்து நிறுத்த உமாதேவி அங்கிருந்தார் இங்கு யாருமில்லையென—
—–

இந்தக் காலகட்டத்தில் முப்பத்தைந்து வயதான தமிழர் ஒருவர் ஜெர்மனியில் இருந்து வருவதாகவும் ஜெர்மனிய அரசியல் கட்சியொன்றின் (Free democratic party) முக்கிய அங்கத்தவர் எனக் கூறி அத்துடன் அவர் அக்காலத்து ஜெர்மன் வெளிநாட்டு அமைச்சரின் (Hans-Dietrich Genscher) பிரதிநிதி என்றும் சொல்லப்பட்டது.

‘ இலங்கையில் சமாதானம் ஏற்பட்டால் ஜெர்மன் பல கோடி பணத்தில் வட கிழக்கை அபிவிருத்தி செய்யும். அதன் பொருட்டு இங்குள்ள இயக்க பிரதிநிதிகளை சந்தித்து பேசவேண்டும். அதற்கு உதவி செய்யும்படி அவர் கேட்டார். தனது கட்சின் அங்கத்துவ கார்டையும் எமக்கு எடுத்துகாட்டியபோது நாங்கள் அவரை நம்பினோம்.

நல்ல விடயம்தானே என நம்பி போராளி இயக்கத்தவர்களிடம் அனுமதி பெற்று இந்த மனிதருக்காக சந்திப்பு ஒழுங்கு பண்ணியதோடு ரெலோ இயக்கத்திடமும் சிவநாதன் மற்றும் ஈபிஆர்எல் எவ் இடமும் அவரை கூட்டிச் சென்றோம்.

இயக்கங்களிடம் இந்த மனிதர் ஜெர்மன் முதலீட்டிற்கு பதிலாக போராட்டத்தை நிறுத்தி சமாதானம்பேசும்படி கேட்டதனால் இவர் நோக்கம் வெற்றி பெறவில்லை… அந்த மனிதரும் போய்விட்டார்

அந்த மனிதர் அன்று காலையில்போன பின்பு இந்திய மத்திய உளவு நிறுவனத்தின் சென்னை பொலிஸ் எம்மிடம் வந்து ‘உங்களோடு தங்கிய அந்த இலங்கை அரசின் மனிதர் உளவாளி என கருதுகிறோம் அவரை விசாரிக்கவேண்டும்’ என்றாரர்கள்

நாங்கள் திடுக்கிட்டோம்.

‘எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லி அவரது நடத்தையை விளக்கினோம்.

பின்பு யோசித்துப் பார்த்தபோது ஜெர்மன் நாட்டில் இருந்து வந்த அந்த மனிதர் படுக்கை வசதியில்லாத எமது அலுவலகத்தில் ஐந்து நாட்கள் நிலத்தில் படுத்து வாழ்ந்தார் என்பது எங்களுக்கு ஆரம்பத்தில் புதுமையாக இருந்தது. அதே நேரத்தில் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுப்பட்டது.

இதைவிட ஐந்து தமிழர்கள் வடஅமரிக்காவில் இருந்து வந்து சோழா ஹோட்டலில் தங்கியிருந்து என்னையும் டொக்டர் சிவநாதனையும் அழைத்தார்கள். அவர்களை சந்தித்து பேசியபோது அவர்கள் ஒரு பெரிய தொகையை வைத்திருப்பதாகவும் எந்த இயக்கம் ஒரு தாக்குதலை கொழும்பில் நடத்த விரும்புகிறதோ அதற்கு தருவதற்கு தயார் எனவும் கூறினார்கள். இவர்களை எங்களால் நேரடியாக கண்டிக்கமுடியவில்லை. நானும் சிவநாதனும் இதன்பின் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை. இவர்களது பணம் எந்த இயக்கத்திற்கு சென்றது என்பது நிச்சயமாகத் தெரியாததால் அதைச் சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக கொழும்பில் அந்தப்பணம் குண்டாக வெடித்து உயிர்களைப்பலி கொண்டது.

மேற்கூறிய நான்கு சம்பவங்கள் புலம்பெயர்ந்த தமிழர் தொடர்பானவை. அவர்களைப் பற்றிய எனது அபிப்பிராயம் மிகக்காரமானது.

புலம் பெயர்ந்த தமிழர்களில் 99.9 வீதமானவர்கள் இலங்கையை விட்டு வெளியேறும்போது அரசியலில் ஈடுபட்டவர்கள் அல்ல. இலங்கை அரசியல் மட்டுமல்ல உலக அரசியலும் தெரியாதவர்கள். ஆனால்; இயக்க அங்கத்தவர்களாக இருந்தவர்கள் உணர்வு ரீதியாக ஆயுதம் ஏந்த முனைந்தவர்கள். அவர்களில் சிலர் முக்கியமாக புளட் – ஈரோஸ் மற்றும் ஈபிஆர் எல் எவ் . இவர்களுக்கு ஓரளவு அரசியல் தெரிந்தாலும் அவர்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்க வசதிகள் இல்லை. தங்களை புதிய வாழ்க்கையில் நிலைநிறுத்துவதே பெரிய பாடாக இருந்தது.

இந்த நிலையில் மேற்கு நாடுகளில் பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் சார்பாக இயங்குபவர்கள் தங்களை முன்னகர்த்தவும், தங்களது முக்கியத்துவத்தை ஏற்படுத்தவும், இலங்கை அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் இவர்களுக்கு முற்காலத்தில் ஏற்படுத்திய பாதிப்பால் ஏற்படுத்திய மனக்கசப்பைக் காட்ட இந்தப் போராட்டம் அவர்களுக்கு சாதகமானது. ஈழப்போராட்டத்தில் தமிழர்களின் தோல்விக்கு இவர்களே காரணம். இவர்கள் எந்தச்சிந்தனைத்திறனும் அற்ற இராட்சதமிருகம் ஒன்றை உணவூட்டி ஊட்டி வளர்த்திருக்கிறார்கள். அந்த மிருகம் முள்ளிவாய்கால் கரையில் இறுதி மூச்சை விட்டது.இதனால் தமிழர்களின் நியாயமான பல விடயங்கள் தற்பொழுது உலகமெங்கும் ஏன் போராட்டத்திற்கு உதவிய பல தமிழர்களுக்கு அநியாயமானதாக தோற்றமளிக்கிறது.

“வெளிநாட்டுத் தமிழர்களின் உதவிகள்…?” அதற்கு 2 மறுமொழிகள்

  1. At least this time on your 60 th birthday this article is eye opening.
    You did not follow your old style.

  2. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: