அசோகனின் வைத்தியசாலை.

ஜேகே JK

நோயல் நடேசன் அவர்களுக்கு இரண்டு விஷயங்களை முதலில் சொல்ல விரும்புகிறேன். முதலாவது நன்றி. இந்த நூலைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்தமைக்கு நன்றி. இரண்டாவது மன்னிப்பு.
நடேசனுடைய அரசியல் பார்வைகள், நடவடிக்கைகள் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது. மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கிறது. அந்த அபிப்பிராயம், நடேசனின் நாவல் இப்படித்தான் இருக்குமோ? என்கின்ற ஒரு முன்முடிபை என்னுள் ஆரம்பத்தில் ஏற்படுத்தியது. ஒருவர் மீதான அபிப்பிராயங்கள் அவருடைய படைப்பை அணுகும்போது தடையாக இருக்குமென்றால், அது வாசகனுடைய பெரும்தோல்வி ஆகிறது. இந்த நாவலின் முதல் ஒருசில பக்கங்களை, தோல்வியடைந்த வாசகனாகவே அணுகினேன். அதற்காகத்தான் இந்த மன்னிப்பு. பின்னர் நாவலுக்குள் இழுத்துச்சென்று, என்னையும் ஒரு பாத்திரமாக்கியதன் மூலம் நடேசன் எழுத்தாளராக வெற்றியடைகிறார்.
என் உடைந்த மூக்கு, உடைந்த மூக்குதான்.
வாசிப்பு என்பது ஒரு மனநிலை. வாசிப்பு என்பது ஒரு அனுபவம். அது ஒரு பயணம். ஒருவித மறுபிறப்பு. கூடு விட்டு கூடு பாய்ந்து, இன்னொருவனின் வாழ்க்கையை வாழ்ந்துபார்க்க கிடைக்கின்ற ஒரு சந்தர்ப்பம். Inception திரைப்படத்தில் நாயகனும் அவனுடைய குழுவினரும், மனிதர்களுடைய மூளையில் கனவுகளை விதைத்து, அந்தக் கனவுகளில் தாமே பாத்திரங்களாக உருமாறி, அவர்களோடு உறவாடி, அந்த மனிதர்களின் ஆழ்மனது எண்ணங்களை அறிய முற்படுவார்கள். அதிலே ஆரியாட்னே என்கின்ற பெண் கட்டட கலைஞர் ஒருத்தி வருவாள். கனவிலே தன்னைச்சுற்றிய கட்டடங்களையும் மனிதர்களையும் சிருஷ்டிப்பது அவள் வேலை. நினைக்க நினைக்க காட்சிகளும் அமைப்புகளும், விரிவடைந்து விரிவடைந்து, அவள் உருவாக்கும் கனவு, நாமறியாத பிறிதொரு வாழ்க்கையை வாழவைக்கும். ஒரு நாவல் செய்யும் வேலையும் அதுதான். எம் மனக்கண்ணில் ஒரு வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுவது அதன் வேலை. சிறந்த நாவல் என்றால் அந்த வாழ்க்கையை எங்களையும் வாழவைக்கும்.
அசோகனின் வைத்தியசாலை ஒரு சிறந்த நாவல்.
சுந்தரம்பிள்ளை. இலங்கையைச்சேர்ந்த ஒரு மிருகவைத்தியர். ஆஸ்திரேலியாவுக்கு குடிபுகுந்து, விலங்குப் பண்ணைகள் இருக்கும் தூர பிரதேசங்களில் வேலை செய்து, பல்வேறு காரணங்களால் எந்த வேலையும் நிரந்தரமாக தாங்காமல் போகவே, மெல்பேர்னுக்கு வந்து ஒரு நகர்ப்புற மிருகவைத்தியசாலையில் பணி புரிகிறார். மாமன்னர் அசோகன் தன் ராஜ்ஜியம் எங்கும் மனிதர்களுக்கு போலவே மிருகங்களுக்கும் வைத்தியசாலைகளை அமைத்தாராம். சுந்தரம்பிள்ளை பணிபுரியும் வைத்தியசாலையும், சேவை நோக்கி கருதி அமைக்கப்பட்ட ஒரு வைத்தியசாலை.
அங்கேதான் நாவல் தன் வேலையை காட்டத்தொடங்குகிறது. ஒன்றன் பின் ஒன்றாக பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. கார்லோஸ், சாம், ரிமதி, பார்தொலியஸ், ஜோசே, மரியா, மிஷேல், மோரின், ஜோன், சாருலதா, ஷரன் என்று அறிமுகமாகும், பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னாலே அவர்களுடைய தனிமனித குணம் இருக்கிறது. அவரவர் இனம் சார்ந்த கலாச்சாரம் இருக்கிறது. எல்லோருக்குமிடையான பிணைப்பும் பிரிவும் தெரிகிறது. இவர்கள் எல்லோரும் ஆஸ்திரேலியாவில் வாழுவதால், இந்த நாட்டின் அடையாளம் இந்த நாவலின் ஊடாக ஓரளவுக்கு புலப்படுகிறது.

Book Image
அசோகனின் வைத்தியசாலை நாவலை வாசிக்கும்போது மூன்று தளங்கள் நம்முன்னே விரிகின்றன. முதல் தளம் அனுபவத்தளம். அந்த மிருகவைத்தியசாலை என்கின்ற களம். எழுத்தாளர் ஒரு மிருக வைத்தியராக இருப்பதால் மிக நுணுக்கமான பார்வைகளை, நாம் இதற்குமுன் கேட்டறியாத ஒரு களத்தினை அங்கே காண்கின்றோம். ஒரு மிருகவைத்தியசாலை எப்படி இருக்கும்? என்பதை நாமே சிருஷ்டிக்கிறோம். அங்கே, நோய் வாய்ப்பட்ட மிருகங்களோடு காத்திருக்கும் மனிதர்கள். கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் மிருகங்கள். கருணைக்கொலைகள். வைத்தியசாலை ஊழியர்கள். வைத்தியர்கள். இதெல்லாமே புதிதான விஷயங்கள். நாம் வாசித்தறிந்த இலக்கியங்களில் மிருகவைத்தியசாலை களத்தை இவ்வளவு நுணுக்கமாக கையாண்ட ஒருநாவல் இதுவரைக்கும் வெளிவந்ததாக எனக்குத்தெரியவில்லை. ஒரு களம். அதில் சில மனிதர்கள். அவர்களைச்சுற்றிய சம்பவங்கள் என்று மட்டுமில்லாமல், கதை சொல்லி தன்னுடைய சிந்தனைகளையும் ஆங்காங்கே விட்டுச்செல்கிறார். அதில பல சிந்திக்கத்தகுந்தவை. உதாரணத்துக்கு, மதகுருமார்கள் தவறுகள் செய்வது பற்றிய ஒரு கருத்து. மதகுருக்களும் மனித வர்க்கத்திலிருந்து குருக்களாக மாறியவர்களே ஒழிய, தேவதூதர்கள் அல்ல. ஆகவே அவர்களுக்கும் மனிதனுக்கேயுரிய சாதாரண பலவீனங்கள் இருந்தே ஆகும் என்கிறார் நடேசன். இன்னொரு இடத்தில், தனி மனித பழிவாங்கல்கள், சுயபச்சாதாபம், பொதுவாக ஒரு இனத்துக்கு ஏற்படும்போது, அந்த ஒடுக்கப்படும் இனத்துக்கு, இயல்பாக தேசிய உணர்வு தலை தூக்குகிறது என்கிறார். இப்படி கதையில் ஆங்காங்கே சில தர்க்கரீதியான, உணர்ச்சிவசப்படாமல் சொல்லப்படுகின்ற கருத்துக்கள் கதை சொல்லியின் பார்வையில் நோயல் நடேசனால் முன்வைக்கப்படுகின்றன.
நாவலில் சுந்தரம்பிள்ளை காண்கின்ற மனிதர்களில் அனேகமானவர்கள் சராசரி மனிதர்களை விட சற்று பிறழ்ந்த பண்புகளை வெளிக்காட்டுபவர்கள். Abnormal characters. கார்லோஸ், பெண்கள் மீதான பலவீனம் கொண்டவன். ஷரோன், தன் உடலழகை பயன்படுத்தி காரியம் சாதிப்பவள். அவளுக்கு கொடுமைக்கார கணவனாக கிறிஸ்டியன். இறுதியில் கொல்லப்படுகிறான். வைத்தியசாலையில் மற்றவர் முதுகிலே குத்துகின்ற ரிமதி, ரோன் போன்றவர்கள். ஜீன் வேறு உலகத்தில் வாழ்பவள். நோய்வாய்ப்பட்ட ஜோன், அவன் மனைவி மிஷெல், மிஷெலின் புதுக்காதலன் மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இது ஸ்டீபன் ஹோக்கிங்கின் முதல் மனைவியினுடனான வாழ்க்கையை ஞாபகப்படுத்துகிறது. வேலைநேரத்தில் மதிய இடைவேளையில் வைத்தியர்கள் பப்புக்கு அல்லது கிளபுக்கு போகிறார்கள். நாம் எல்லோரும் இப்படியான மனிதர்களை அறிந்திருக்கிறோம். ஆனால் இவர்கள் சிறுபான்மையினரே. பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் சாதாரண குணங்களோடு சாதாரண வாழ்க்கையை வாழ்பவர்கள். ஆனால் நடேசன் ஏன் சிக்கல்கள் நிறைந்த பாத்திரங்களாலே இந்த நாவலை நிரப்பியிருக்கிறார்? என்றால், அதுதான் அவருடைய இரண்டாவது தளம். அடையாளச்சிக்கல். ஆங்கிலத்தில் Identity Crisis என்பார்கள்.

புலம்பெயர்வு சார்ந்த அடையாளச்சிக்கல் என்பது புதிதாக ஒரு நாட்டுக்கு குடியமரும் ஒருவர் எதிர்கொள்கின்ற அக மற்றும் புறச்சிக்கல்கள். அதுதான் கலாச்சார அதிர்ச்சி. ஒரு குடியேறி என்பவன் கமராவோடு அடர் காட்டுக்குள்ளே திரியும் புகைப்படக்கலைஞன் போன்றவன். அவன் அடிக்கடி தனக்கு காணக்கிடைக்காத மிக அருமையாக விஷயங்களை மட்டுமே படம் பிடிப்பான். எறும்புகளையும் காகங்களையும் குட்டி குட்டி பறவைகளையும் விட்டுவிடுவான். நடேசன் செய்வதும் அதுவே. அவர்காட்டும் பாத்திரங்கள், அவருடைய நிஜ அனுபவத்தில் அதிர்ச்சியை கொடுத்த மனிதர்களாகவே இருந்திருக்கவேண்டும். ஆனால் இதில் உள்ள ஆபத்து என்னவென்றால், இதுதான் நிஜ ஆஸ்திரேலியாவோ என்கின்ற ஒருவித அபிப்பிராயத்தை வாசிப்பவருக்கு இது ஏற்படுத்திவிடும். நான் பணி புரியும் நிறுவனத்தில் நடேசனின் பாத்திரங்களில் ஒன்றையோ இரண்டையோ மாத்திரமே பார்த்திருக்கிறேன். ஏனையவர்கள் சாதாரண சுக துக்கங்கள் நிறைந்த, ஓரளவுக்கு தார்மீக நெறிகளால் நிரம்பப்பெற்ற மனிதர்கள். சொல்லப்போனால், ஒரு சராசரி சுந்தரம்பிள்ளைதான் பொதுவான ஆஸி சமூக அமைப்பில், பீட்டராகவோ, ஜிம்மாகவோ, செரில் ஆகவோ இருக்கிறான். சுந்தரம்பிள்ளை ஒரு குடியேறி என்பதால் இந்த சராசரிகளை நாவல் கவனிக்கத்தவறிவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு வீதியூனாடாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணம் செய்யும். ஒன்றிரண்டு விபத்தை சந்திக்கும். விபத்துகள் மாத்திரமே செய்தி ஆவதால் அந்த வீதி ஒரு ஆபத்தான வீதி என்கின்ற தோற்றப்பாடு வந்துவிடலாம். அசோகனின் வைத்தியசாலை அப்படியொரு தோற்றப்பாட்டை ஆஸ்திரேலியா மீது ஏற்படுத்துகிறது என்பது என்னுடைய அபிப்பிராயம்.

இந்திய, மேலைத்தேய அடையாளச்சிக்கல்கள் சார்ந்து இரண்டு முக்கிய நூல்களை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஒன்று மஞ்சு கபூர் எழுதிய “The Immigrant”. மற்றையது லாஹிரி எழுதிய “The Namesake”. இரண்டுமே இந்தியாவிலிருந்து அமேரிக்கா, கனடாவுக்கு குடியேறும் குடும்பங்கள் எதிர்கொள்ளும், சிக்கல்களை சொல்லும் நாவல்கள். அந்த சிக்கல்களை தெளிவாக புரியவேண்டுமென்பதற்காக, அந்த நாவல்கள் குடியேறிகளின் இந்திய, மேலைத்தேய, இரண்டு வாழ்க்கை அனுபவங்களையும் கதையில் விரிவாக சொல்லும். ஆக வாசிப்பவனும் நாவலின் பாத்திரம் புதிய நாட்டில் குடியேறும்போது, குடியேறியின் மனநிலையை அடைந்துவிடுகிறான். ஆனால் “அசோகனின் வைத்தியசாலை”, சுந்தரம்பிள்ளையின் ஆஸ்திரேலிய வாழ்க்கையை மாத்திரமே சொல்லுகிறது. அவரின் ஈழத்து வாழ்க்கையை விட்டுவிடுகிறது. இது தமிழ் நாவல் என்பதாலும், வாசகர்கள் ஈழத்து வாழ்க்கையை அறிந்திருப்பார்கள் என்ற அனுமானத்தினாலும் நடேசன் அதை சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். அல்லது அந்த வாழ்க்கையை அவருடைய முதல் நாவலான வண்ணாத்திக் குளத்தில் எழுதியதும் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த நாவலை எதிர்கால தலைமுறை வாசிக்கும்போது, சுந்தரம்பிள்ளையின் சிந்தனைகளை தொடர்புபடுத்துவதற்கு, அவனுடைய ஈழத்து வாழ்க்கையை அவர்கள் அறிந்திருக்கவேண்டியது அவசியமாகும். எது எப்படியோ ஈழத்து வாழ்க்கையில் நடேசன் எப்படி அரசியலை புகுத்துவார் என்பதை ஓரளவுக்கு அறிவோம் என்பதால், அவர் அந்த பகுதியை எழுதாமல் விடுத்ததில் பெரிதாக ஏமாற்றம் இல்லை!
சுந்தரம்பிள்ளை அந்த வைத்தியசாலைக்கு முதன்முதலில் வேலைக்கு சேருகிறான். அவனுடைய மேலதிகாரி கார்லோஸ் முதல்நாளே அவனிடம் “வைத்தியசாலையின் எந்த உள்ளக அரசியலிலும் ஈடுபடாதே” என்று எச்சரிக்கிறான். அப்போது அந்த வைத்தியசாலையில் வாழ்கின்ற கொலிங்வூட் என்கின்ற பூனை சுந்தரம்பிள்ளைக்கு அருகே வருகிறது.
“இந்த மனிசன் எதையுமே மறைக்காமல் வெளிப்படையாக இப்படித்தான் பேசுவான். நாகரிகம் அற்றவன்”
என்கிறது. ஆமாம் பூனை பேசுகிறது.
நாவலின் மூன்றாவது தளம் இங்கேதான் விரிகிறது.

இதுவரை மனிதர்களின் தளமாக இருந்த நாவல் மிருகங்களின் பார்வையையும் காட்ட முனைகிறது. இந்த தள விரிவாக்கம் மிருகங்களின் உளவியலை சொல்வதற்கு அல்ல. மிருகங்கள் பேசுவதன்மூலம், அந்த வைத்தியசாலையை இன்னொரு கண்ணோட்டத்தில் கதைசொல்லி பார்க்க ஆரம்பிக்கிறார். இதுவரைக்கும் சுந்தரம்பிள்ளை, ஒரு குடியேறியாக, அடையாளச்சிக்கல் நிறைந்தவனாக கதையை நகர்த்திக்கொண்டு போகையில், அவனுக்கு ஆஸ்திரேலியா கலாச்சாரம் சார்பாக பதில் சொல்ல ஒரு பாத்திரம் வேண்டுமே. அதுவும் கதைசொல்லி (narrator) பாத்திரம் வேண்டும். அதற்காக நடேசன் தெரிவு செய்ததுதான் கொலிங்வூட் என்கின்ற பூனையின் பாத்திரம்.
கொலிங்வூட் வைத்தியசாலையிலேயே வளர்கின்ற ஒரு பூனை. ஊழியர்களுக்கு ஒரு செல்லப்பூனை. அதனாலேயே அந்த வைத்தியசாலை தன்னுடைய சொந்த தேசம் என்கின்ற எண்ணம் அந்தப்பூனைக்கு வருகிறது. வைத்தியசாலைக்கு ஒரு இழுக்கு என்றால் அதனாலும் தாங்கமுடிவதில்லை. தாம் இருக்கும் இடத்தின் மீதான பாசம் அது. அது ஒருவித மனச்சாட்சியும் கூட. இன்னொரு பூனை, அந்த வைத்தியசாலைக்குள் அத்துமீறி ஒளியும்போது, கொலிங்வூட் தன் உயிரைப் பணயம் வைத்து கண்டுபிடித்து காட்டிக்கொடுக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட அந்த பூனை கருணைக்கொலை செய்யப்படுகிறது. ஊழியர்களை எல்லாம் தன் கைக்குள் போட்டுவைத்திருக்கிறது. ஒவ்வொருத்தரையும் அவருடைய பலம் பலவீனங்கள் என்ன என்று எடை போட்டு, யாரோடு எப்படி பழகவேண்டும் என்று சுந்தரம்பிள்ளைக்கு அவ்வப்போது அறிவுரையும் கூறுகிறது. சுந்தரம்பிள்ளை பலவீனமடையும் இடங்களில் எச்சரிக்கையும் செய்கிறது. கொலிங்வூட் ஒருவகையில் ஆஸ்திரேலிய கலாச்சாரத்தின் ஆன்மா என்றும் கூறலாம். கொலிங்வூட் என்கின்ற பாத்திரப்படைப்பில் சொல்லாமல் விட்ட செய்திகள் ஏராளம். அது வாசகர் எழுத்தாளராகும் பகுதிகள். வெற்றுத்தாள்களாக நடேசன் எழுதாமல் விட்டிருக்கிறார்.

எனக்கு கொலிங்வூட்டின் வாழ்க்கையில் இருக்கின்ற எளிமை மிகவும் பிடித்தது. ஒரு வைத்தியசாலை வட்டத்துக்குள் வாழ்க்கை. சமயத்தில் சுந்தரம்பிள்ளையோடு அவன் வீட்டுக்கும் போகிறது. வைத்தியசாலையில் எல்லோரோடும் நட்பு பாராட்டுகிறது. யாரோடும் சச்சரவு இல்லை. சண்டை இல்லை. சிறந்த மனச்சாட்சி உள்ள, தர்க்கரீதியான அறிவு கொண்ட பூனை. முதுமை அடைய, மிக இயல்பாக இறப்பைக்கண்டு அஞ்சுகிறது. இறக்கும் தருவாயில், “என்னை ஒழுங்காக கருணைக் கொலை செய்” என்று சுந்தரம்பிள்ளையிடம் சொல்லிச் சாகிறது. எங்கள் ஊரிலே சொல்லுகின்ற “நல்ல சா” கொலிங்வூடுக்கு.

கொலிங்வூட் என்கின்ற பூனைக்கு அமைகின்ற நிம்மதியான வாழ்க்கை ஏன் மனிதர்களுக்கு இப்போதெல்லாம் நிகழ்வதில்லை? இந்த இடத்தில் என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் டக்ளஸ் அடம்ஸ் ஞாபகத்துக்கு வருகிறார். அவருடைய புகழ் பெற்ற “Hitchhiker’s guide to galaxy” நாவலில் இப்படி ஒரு வாசகம் வரும்.
In this planet earth, lots of the people are mean, and most of them are miserable. Many are increasingly of the opinion that they had all made a big mistake in coming down from the trees in the first place. And some say that even the trees had been a bad move, and that no one should ever have left the oceans.

“பூமியில் பெரும்பாலான மனிதர்கள் கேவலமானவர்கள். பரிதாபமானவர்கள். பலர் தங்கள் இனம், மரத்திலிருந்து கீழே இறங்கி வந்ததே தவறு என்று எண்ணத் தொடங்கிவிட்டார்கள். அதிலும் சிலர் தாங்கள் சமுத்திரங்களிலிருந்து தரைக்கு வந்ததே தவறு என்று சொல்லிக்கொள்வார்கள்”
பேசுகின்ற பூனையான கொலிங்வூட்டின் வாழ்க்கையோடு சக மனிதர்களின் வாழ்க்கையை ஒப்பிடும்போது, நமக்கும் மீண்டும் மரங்களுக்கு சென்றுவிடலாமா என்றே எண்ணத்தோன்றுகிறது. வாசிப்பவனுக்கு ஏற்படுகின்ற இந்தச் சிந்தனையே, “அசோகனின் வைத்தியசாலை” நாவலின் வெற்றி என்று நான் நினைக்கிறேன்.
http://www.padalay.com

About noelnadesan

Commentator and analyst of current affairs.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.