உலகத்தின் சகல மக்களது எழுத்து வடிவம் தொடங்கி 5000 வருடங்கள் மட்டுமே என அறிந்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எந்த சமூகத்தினர் முதல் எழுதினார்கள் என்பது பெரிய புதிர்.
குறியீட்டு வடிவங்கள்தான் ஆரம்பத்திலே இருந்திருக்கும் என்பது பலரது எண்ணம்.
நமது மொழில் எழுத்து வடிவத்திற்கு குறைந்தது 2500 வருடவரலாறு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மொழி ஆராச்சியாளனோ , வரலாற்று ஆசிரியனோவாக இல்லாதபடியால் எனக்கு புரிந்த விடயங்களையே பேச விரும்புகிறேன்.
தமிழ் மொழியில் தற்போது எழுதுபவர்களில் பெரும்பானவர்கள் சிறுகதை, நாவல், கவிதை எழுதுபவர்கள் மட்டுமே. மற்றவர்கள் பேசுவதற்கு மட்டுமே தமிழ் மொழியை பாவிக்கிறர்கள். இதனால் எழுதுவது, வாசிப்பது குறைந்து விடுகிறது. இலக்கியவாதிகள் எழுதும்போது அதை யார் வாசிப்பார்கள் இலக்கியவாதிகள் மட்டுமே. இது மற்றய பொருளாதார உற்பத்தி விதிகளில் இருந்து மாறுகிறது. உற்பத்தியாளர்கள் நூகர்வோரை கணக்கில் எடுத்துதான் உற்பத்தி செய்வார்கள்
இதனால் யாருக்கு நட்டம்?
சமஸ்கிருதம், லத்தீன் போன்ற மொழிகள் மதத்தின் மொழிகளாக இருந்தது மதகுருமார் தங்களது சொத்தாக வைத்து காத்தனர். லத்தீனில் இருந்த பைபிளை ஆங்கிலத்திற்கு மாற்றுவதற்கு மிக பெரிய எதிர்ப்பு வத்திகானில் இருந்தது. இங்கிலாந்து மன்னர் அதை மொழி மாற்றம் செய்தால் அது சாத்தியமாகியது. இதேபோல் சமஸ்கிருத மொழியை பிராமணர்கள் மட்டும் பாவிப்பதால் இப்பொழுது சில சுலோகங்களை சொல்வதுடன் முடிந்து விட்டது. மற்றய எவருக்கும் அக்கறை இல்லை. எனக்கு தெரிந்தவரையில் சமஸ்கிருதம் மிகவும் செழிப்பானதும், பல பேரிலக்கியங்களைக் கொண்டதுமானது. ஆனால் தற்போது இறந்துபோன மொழிகளாக கருதப்படுகிறது.
சமஸ்கிருதத்தைப்போல் தமிழையும் இந்திய அரசாங்கம் செம்மொழியாக அங்கீகரித்துள்ளது. இது பலருக்கு சந்தோசம் கொடுத்தது. ஆனால் எனக்கு பயத்தைக் கொடுக்கிறது.
இப்படியான அங்கீகாரம் கலியாண வீட்டிற்கு மட்டும் பாவிக்கும் பெரிய பாத்திரம் போன்றது. மற்றப்படி நாளாந்த பாவிப்பிற்கு உதவாது
இப்படியான பேரபாயம் சமானிய மக்கள் பேசப்படாத மொழிக்கு வரலாம். முக்கியமாக தமிழில் படித்து வளர்ந்த புலம் பெயர்ந்த எங்கள் பலருக்கு ஒரு பந்தி தமிழில் எழுதமுடியாத நிலை உள்ளது.
இது ஏன் ?
நாங்கள் எழுதினால் கம்பன் மாதிரி காவியமோ அல்லது புதுமைப்பித்தன்போல் சிறுகதையோ எழுதவேண்டும். அல்லாவிடில் எழுத தயங்குகிறோம்.
இந்த தயக்கமே நமது மொழிக்கு நட்டத்தைத் தருகிறது.
நான் நினைக்கிறேன். சாதாரணமானவர்கள் தங்களது சாதாரமான விடயங்களை எழுதும்போதுதான் தமிழ் இலக்கியவாதிகள் என்ற மதகுருமாரிடம் இருந்து தமிழை சிறை மீட்க முடியும்.
நாம் பார்த்த படத்தையோ, இல்லை நாம் சென்று வந்த நாட்டில் பார்த்த விடயத்தையோ எழுதும் போது, எங்கள் கைகளில் மெதுவாக சரஸ்வதி தவழுகிறாள்.
ஐரோப்பிய ஓவியமொன்றில் மத்தியு வேதாகமத்தை எழுதும்போது படிப்பறிவில்லாத மத்தியுவின் கையை ஏன்ஜல் ஒன்று கை பிடித்து எழுதுவதாக அமைந்திருந்தது.மத்தியு அந்த சித்திரத்தில் முரட்டுத்தனமான கால்களும் கைகளும் கொண்ட விவசாயியாக வரையபபட்டுள்ளது.அது காளிதாசன் புலமை பெற்றது போன்ற , அற்புதமான கற்பனை.
நான் எனது சொந்த கதைக்கு வருகிறேன்
நான் அவுஸ்திரேலியவில் முதல் எழுதிய கட்டுரை ஆசிரியராக இருந்த எனது நண்பரால் கிழித்து போடப்பட்டது
இரண்டாவது கட்டுரையை எழுதியபோது முருகபூபதியிடம் கொடுத்து திருப்பி எழுது என சொல்லப்பட்டது. இவ்வளவிற்கும் பத்திரிகையை பொறுப்பாக நடத்தியது நான்
இந்த நிலையில் இருந்த நான், நாவல்களையும் மற்றும் பல புத்தகங்களையும் எழுதிவிட்டேன்.
இன்னமும் நான் இலக்கியவாதியாக நினைக்கவில்லை. ஏதோ ஒரு தேவதை கையை பிடித்து எழுதுவதாக தெரிகிறது.
நான் ஒரு மிருக வைத்தியர். எனது அனுபவங்களை எழுதுகிறேன்.
எனககு மட்டுமா அனுபவங்கள் நிகழ்கிறது?
இலங்கையில் இருந்து வந்த பலர் தங்கள் அனுபவங்களை எழுதும்போது அவை மற்றவர்களுக்கு தெரிகிறது- அடுத்த சந்ததிக்கு செல்கிறது.
நம்மில் எத்தனையோ பேர்கள் , பல விதமான தொழில்களில் இருக்கிறோம். பல விடயங்களை சந்திக்கிறோம். இப்பொழுது உள்ள கணணி யுகத்தில் முகநூல் இணையம் என பாவித்து நம்மால் எழுதமுடியும்.
நான் நண்பர் முகுந்தராஜா எமக்கு முக்கிய வழியை காட்டியாக இருக்கிறார். தமிழில் நேரடியாக கம்பியுட்டரில் எழுத முடியாது இருந்த என் போன்றவர்களுக்கு அவரது ஈ பலகை ஒரு வரப்பிரசாதம். என்னால் இப்பொழுது முகநூலில் நேரடியாக தமிழில் எழுத முடிகிறது
அவர் ஒரு கம்பியுட்டர் நிபணர். அவர் செய்ததுபோல், நம்மில் பலருக்கு செய்யத் தெரியாது ஆனால் நாம் எல்லோரும் நினைத்தால் தமிழில் எழுத முடியும் பலரும் பல விடயங்களை எழுதும்போது தமிழ் பலரிடம் செல்லும்.
இப்படி சொல்கிறானே எப்படி எழுதுவது என்பதை நினைப்பவர்களுக்கு நான் ஒரு சாதாரணமான சம்பவத்தை எழுதியதை உங்களுக்கு படித்து காட்டுகிறேன்
மாபியாவின் நாய்
எனது கிளினிக்கில் பணியாற்றும் நேர்ஸ் கெலி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது அவளது முகத்தில் குருதிச் சிவப்பாக செம்மை படர்ந்து. சிலந்திவலை பின்னியதுபோல் அவளது முகத்தில் மாற்றம். கண்களும் அகல விரிந்து இமைகள் படபடத்தன.
‘என்ன நடந்தது?” என்று எனது வேலையை சற்று நிறுத்திவிட்டுக் கேட்டேன்.
அப்பொழுது எனது முகத்தில் மாஸ்க்கை அணிந்தவாறு – மயக்கப்படுத்திய நாயொன்றின் பல்லுகளை சுத்தப்படுத்தித்திக்கொண்டிருந்தேன்.
கெலி உடனே தொலைபேசியில் பேசுவதை நிறுத்திவிட்டு – ‘அந்த நாயை உடனே தங்களிடம் தரவேண்டும். இல்லையென்றால் தங்களது கொமன்செரஸ் (Comancheros) மோட்டார் சைக்கிள் குழுவிற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிவருமென சொன்னான்’ என்றாள் பதற்றத்துடன்.
‘பொலிசுக்கு போன் பண்ணு’ – என்றேன்.
‘நான் நகரசபைக்கு போன் பண்ணுகிறேன். அவர்கள் இந்த நாயைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.’ – என்றாள் கெலி.
நான் எனது வேலையைத் தொடர்ந்தேன்.
நகரசபை ஊழியர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு என்னைப் பார்த்து –
‘தங்களால் பொலிசை அனுப்பி நாயை எடுக்கமுடியுமாம். அதே வேளையில் நீங்கள் அவர்களிடம் இந்த நாயை ஒப்படைப்பது நல்லது என நினைத்தால் அதைச் செய்தாலும் பரவாயில்லையாம். பின்பு அவர்களிடம் நாம் நேரடியாக இதை பொலிஸ் மூலம் பார்த்;துக் கொள்ளலாம் என்கிறார்கள்’ என்றாள் கெலி.
‘சரி அவர்கள் வரட்டும்;’ எனக் கூறிவிட்டு மீண்டும் எனது வேலையைத் தொடர்ந்தேன்
அவுஸ்திரேலிய மோட்டார் சைக்கிள் குழுக்கள், பாதாள உலக கோஷ்டிகள் போன்று இயங்குபவை. ஆரம்பத்தில் ஓன்றாக இருந்த இக்குழுக்கள் பிற்காலத்தில் இலங்கையில் முன்பிருந்த ஆயுத இயக்கங்கள் போன்று பிரிந்து மோதிக்கொண்டவை மட்டுமல்ல – போதைப்பொருள் விநியோகம்,நைட்கிளப் மற்றும் விபசாரவிடுதி போன்ற தொழில்களிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருப்பவை. இவர்களது பெரும்பாலான குற்றங்கள் இவர்களுக்கு இடையே நடப்பதால் சாதாரண மனிதர்களுக்கு அதிகம் இடையூறாக இருப்பதில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான விடயம். முக்கியமாக ஐஸ் என்னும் போதைப் பொருளை கடத்துவதை இவர்கள் கையேற்றிருப்பதால் தற்பொழுது பொலிஸாரின் கவனத்துக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இந்தக் குழுக்களில் தற்போது பிரசித்தமான கொமன்செரஸ் மோட்டார் சைக்கிள் குழுவினர் எனது சிறிய மிருகவைத்திய கிளினிக்கிற்கு விஜயம் செய்யவேண்டியதான தேவை வந்து எதனால்?
ஒரு அழகிய பெண்ணின் கண்ணீரால்தான் என்பதுதான் சுருக்கமான பதில்.
முதல் நாள் மதிய நேரம் எனது நேர்ஸ் கெலி மதிய உணவு வேளையில் வெளியே சென்றிருந்தபோது நான் மட்டும் தனித்திருந்தேன். ஒரு இளம் அவுஸ்திரேலியப் பெண் ஒரு செந்நிற நாயை எனது கிளினிக் வாசலுக்கு இழுத்து வந்தாள். சிவப்பு நிறமும் வட்டமான தலையும் எடுப்பான தோள்களும் தொடையில் தசைகள் விம்மிபுடைத்த சுமார் முப்பது கிலோ எடையுள்ள ஆண் நாய். அது சண்டைக்காக அமெரிக்காவில் வளர்க்கப்படும் அமெரிக்கன் பிற் புல் ரெரியர் இனத்தைச் சேர்ந்தது. இந்த இனத்து நாய்களின் மேல் – கீழ்த்தாடை எலும்பை இணைக்கும் தசை மிகவும் உறுதிவாய்ந்தது மட்டுமல்ல – சண்டையின்போது கடித்தால் பூட்டுப்போல் மூடிக்கொள்ளும் தன்மையுமுள்ளது. இந்தத்தன்மையால் நாய்களுக்கிடையில் சண்டையில் ஈடுபடுவதற்காக ஏற்றதாகிறது.
நாயை பார்த்த உடனே எனக்குப் புரிந்து விட்டது. இது தடை செய்யப்பட்ட நாய் என்பதும் இந்த இனத்து நாயால் மெல்பனில் குழந்தையொன்று கொல்லப்பட்டதால் இந்த நாயினத்தை (Breed) இறக்குமதி செய்வதோ இனவிருத்தி செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. இந்த இன நாய்களை ஏற்கனவே வைத்திருப்பவர்கள் நகர கவுன்சிலில் ஆபத்தான நாய்கள் என பதிவு செய்து விட்டு கவனமாக வளர்க்க வேண்டும்.
நாயை இழுத்து வந்த அந்தப் பெண் வரமறுத்த நாயை கஷ்டப்பட்டு இழுத்தபடி எனது கிளிக்கின் தரையில் அமர்ந்து விட்டாள்.
வழமையாக வருபவர்கள் அமருவதற்கு இருக்கும் ஆசனத்தில் அமராமல் நிலத்தில் இருப்பதிலிருந்து அவள் அந்த நாயை இழுத்து களைத்துப்போய் இருக்கிறாள் என்பதைக் காட்டியது
‘இந்த நாய் என் வீட்டின் முன்பாக வீதியில் நின்றது. யாருடயது எனத் தெரியாது. அங்கே தொடர்ந்து விட்டிருந்தால் யாராவது நகரசபைக்கு அறிவித்தால் அல்லது பிடித்துக் கொண்டு போய் கொடுத்தால் இந்த நாயை கருணைக் கொலை செய்துவிடுவார்கள். எனவே தயவுசெய்து இந்த நாயை உங்கள் கிளினிக்கில் இன்று இரவு வைத்திருக்க முடியுமா?” எனக்கேட்டாள். அவளது கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது.
‘நீ ஏன் இதனை உனது வீட்டில் வைத்திருக்கமுடியாது? நாங்கள் இங்கு கூண்டில்தான் வைத்திருக்கலாம். மேலும் நாளை எப்படியும் நகரசபையிடம் கொடுக்க வேண்டியிருக்கும்.” என்றேன்.
‘என்னிடம் இதே இனத்து நாயொன்றுள்ளது. இதனையும் வைத்திருந்தால் – இரண்டும் ஆண் நாய்களானபடியால் அவை சண்டையில் ஈடுபடும். நாளைக்குள் உரிமையாளர் தேடிக்கொண்டு வந்துவிடுவார் என நம்புகிறேன்.’ என்றாள் அந்தப் பெண்.
‘ சரி… இன்றைக்கும் மட்டுமே என்னால் இங்கு வைத்திருக்கமுடியும். மேலும் எனது நேர்ஸ் வந்தபின் மைக்கிரோசிப் இலக்கத்தை அறிந்து உரிமையாளரை தொடர்பு கொள்வோம். இந்த நாயை அப்படியே கூண்டில் விட்டு விட்டு செல்லவும்’ என்றேன்.
நாயை அவள் கூண்டுக்குள் அடைப்பதற்கு இழுத்தபோது அது வரமறுத்தது.
‘இந்த அறையில் விட்டுவிடு’ எனச் சொன்னேன். அவள் அந்த நாயை அங்கு விட்டபோது அதனது முகத்தில் கோபம் தெரிந்தது.
அந்தப் பெண் ஏதோ கொலைக்களத்தில் நாயை விட்டுச் செல்வதுபோல் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டும் தனது கண்ணீரை கையால் துடைத்தபடியும் சென்றாள்
சிறிது நேரத்தில் எனது நேர்ஸ் கெலி வந்து நாயின் முதுகில் மைக்கிரோசிப் ஸ்கானர் மூலம் அதனது இலக்கத்தை வாசித்துவிட்டு இணையத்தில் தேடியபோது அதனது உரிமையாளர் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜீலோங் நகரில் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
மைக்கிரோசிப் இலக்கம் மத்திய பதிவகத்தில் – அதன் உரிமையளர் மற்றும் அவர்களது விலாசம் என்பன பதிவாகியிருக்கும். அதை இணைய மூலமாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த அறையில் நாயை இரவு முழுவதும் தங்குவதற்கு விடமுடியாது. ஆதனால் அந்த அறையை நாசமாக்கி விட முடியும் ஆனால் முப்பது கிலோ எடையுடன் சண்டைக்காக வளர்க்கப்பட்ட அந்த நாயிடம் எமது பலத்தை பிரயோகித்து கூட்டில் அடைப்பது முடியாத காரியம். ஒரேவழி மயக்க மருந்துதான். ஆனால் நாயை நெருங்கி ஊசி போடுவது கடினமாக இருந்தது. குளிகையாக கொடுப்பது என முடிவு செய்து வழக்கத்தை விட நாலுமடங்கு அதிகமான மயக்க மருந்தை ரியூனா மீனில் கலந்து கொடுத்தபோது அதனது கால்கள் அரைமணி நேரத்தில் மெதுவாக ஆட்டம் கண்டது. கண்கள் இரண்டும் சொருகியது.
இருவரும் மெதுவாக கூண்டின் உள்ளே அதனை தள்ளி மூடியபோது ஏதோ பெரிய சாதனையை செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
மறுநாள் காலை ஜீலோங்கில் இருக்கும் அந்த நாயின் உரிமையாளருடன் தொடர்பு கொண்டபோது ‘தான் ஏற்கனவே மெல்பனில் ஒருவருக்கு அதனைக் கொடுத்துவிட்டதாகவும் தற்பொழுது தனக்கும் அந்த நாய்க்கும் எதுவித தொடர்பும் இல்லை” என்றும் சொன்னார்.
‘இனிமேல் நாயை இங்கு வைத்திருப்பதில் பயனில்லை’’ என்று நேர்சிடம் சொன்னேன்.
‘நகரசபைக்கு நாய் போனால் நிச்சயமாக கருணைக்கொலை செய்யப்படும்’ என்றாள் நேர்ஸ்.
சங்கடமான நிலைமை. என்ன நடக்குமென்று தெரிந்தபடியால் நாயை நகரசபைக்கு அனுப்ப விருப்பமுமில்லை. அதே வேளை வேறு மாற்று வழியுமில்லை.
மீண்டும் காலை பத்து மணியளவில் ஒரு பெண் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த நாய் தனது காதலனுடையது என்றும் அவன் வந்தால் அதைக் கொடுத்து விடும்படியும் கூறினாள்.
‘ ஏதாவது அத்தாட்சி சான்றுடன் வந்தால் நாயை எடுத்துச் செல்லலாம் ” என்றேன்.
உடனே அவள் ‘ தனது காதலன் கோபக்காரன்” என்றாள்.
இதை நேர்ஸ் கெலி எனக்குச் சொன்னபோது ‘சரி…. அவளது கோபக்கார காதலனையும்தான் பார்ப்போமே…” என்றேன்.
அந்தக் காதலன்தான் கெலியை முகம் சிவக்க வைத்தவன்.
…..
நான் அதுவரையில் பார்த்த நாயின் பற்களை சுத்தம்செய்யும் வேலையை முடித்தபோது கதவு தட்டிய சத்தம் கேட்டது.
நான் கதவைத் திறந்தது பார்த்தேன். சுமார் முப்பது வயதான இரு வாட்டசாட்டமான இளைஞர்கள் முற்றாக வழித்த தலையுடன் நீலடெனிம் அணிந்தபடி கருப்பு பெனியன் கை கழுத்துகள் நெற்றி எங்கும் பல பச்சை குத்திய சித்திரவேலைப்பாடுகளுடன் நின்றார்கள். தோற்றத்தில் இருவரும் அண்ணன் தம்பிபோல் தெரிந்தது. அவர்களது தோற்றம் அவர்களை சாதாரமானவர்களில் இருந்து பிரித்துக் காட்டியது
எவ்வித அறிமுகமும் செய்யாமல் ‘எங்கள் நாயை நீங்கள் வைத்திருக்கிறீர்களா?” எனக்கேட்டார்கள்.
‘உங்களது நாயா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பிற் புல் ரெரியரை வைத்திருக்கிறோம்.” என்றேன்.
‘அது எங்கள் நாய்.’ என்றார்கள்.
‘ உங்கள் நாயை பாதுகாப்பாக இங்கு கொண்டுவந்த அந்தப்பெண்ணிற்கும் எனக்கும் நன்றி இல்லையா?” எனக்கேட்டேன்.
இருவரும் வெட்கத்தால் முகம் சிவந்தபடி ‘மன்னிக்கவும் டொக்டர்’ என்றனர்
வார்த்தைகளால் இரத்தம் வராமல் கொலைகூட செய்யமுடியும். இரண்டு மாபியா அங்கத்தினரும் இப்பொழுது சாதாரண அவுஸ்திரேலியராகி விட்டதை புரிந்துகொள்ள முடிந்தது.
‘ உங்களது நாய் உங்கள் தவறினால் இப்பொழுது இறந்திருக்க வேண்டியது. அதை உங்களது உடைமைக்கு நீங்கள் மாற்றவில்லை. நாங்கள் நாய் மீதுள்ள காருண்ணியத்தால் நாயை பாதுகாத்தோம். தயவு செய்து உடனே தேவையானதை செய்யுங்கள்” என்றேன்.
‘உங்கள் நேர்சிடம் பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன்’ என்றான்; சிறிது உயரமானவன்.
‘அவளிடம் நீங்களே கேளுங்கள். நகரசபைக்கு உங்கள் நாய் போகாமலிருக்க அவளே காரணம்’ என்று சொன்னபோது எனது நேர்ஸ் கெலி வெளியே வந்தாள்.
அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு – அவர்கள் நாயை எடுத்துக்கொண்டு சென்றார்கள்.
‘நல்லவேளை… தப்பினோம். துப்பாக்கியோடு மிகப் பெரிய குழுவாக வந்து கிளினிக்கை உடைப்பார்களோ எனப்பயந்தேன்” என்றாள் கெலி.
‘நாங்கள் நாயை பொலிஸ்ஸில் கொடுப்பதற்கான சாத்தியக்கூறு இருந்தது.அதனால் யாருக்கு என்ன பயன் உள்ளது. அதனால்தான் அவர்களிடம் சான்றுப்பத்திரத்தை நான் கேட்கவில்லை. மேலும் அதைக் கேட்டுத்தான் நாம் எதை சாதிப்போம். மேலும் அந்த நாய்க்கு இவர்கள்தான் உரிமையாளராக முடியும். அல்லாவிடில் நாய் கருணைக்கொலை செய்யப்படும்.’ என்றேன்.
மரணத்தில் இருந்து ஒரு நாயைக் காப்பாற்றியதும் மாபியாக்காரர்களை மன்னிப்பு கேட்க வைத்ததும் பெரியவிடயம்தானே?
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நிகழ்ந்த கலை – இலக்கிய சந்திப்பில் பேசியது. —0—
மறுமொழியொன்றை இடுங்கள்