சிரித்திரன் சிவஞானசுந்தரம்

திரும்பிப் பார்க்கின்றேன்

தமிழர்களைத் தட்டி எழுப்பிய பெரியோர் யார் ?
கேள்வியால் வாழும் கார்டுன் கலைஞர்
Sirithiran Sivagnanasuntharam
முருகபூபதி

ஒருவர் தாம் பிறந்த நாளிலே பிறந்தநாள்தான் கொண்டாடுவார். ஆனால் யார்தான் இந்த உலகில் தாம் பிறந்த தினத்திலேயே தமது இறந்த நாளையும் பதிந்துவிட்டுச்செல்வார்? யோசித்துப்பாருங்கள்.
இவ்வாறு அபூர்வமான நிகழ்வுகள் சிலருக்குத்தான் சம்பவிக்கும். மறைந்தவரின் பிறந்தநாளை கொண்டாடுவதா அல்லது இறந்த நாளை நினைத்து அழுவதா? தாம் பிறந்த தினத்தையே இறந்த தினமாக்கிவிட்டுச் சென்ற ஒருவர் எம்மத்தியில் வாழ்ந்தார்.
அவர்தான் எங்களையெல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டிய சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம்.
03-03-1924 இல் கரவெட்டியில் பிறந்தார். 03-03-1995 இல் பிறந்த ஊரிலேயே மறைந்தார். நான்கு ஆண்டுகளில் அவர் பவளவிழாவை நெருங்கியிருப்பார். அவரது பிறந்த நாளில் மனைவி மக்கள் அதனைக் கொண்டாடும் சூழ்நிலையில்லை. போர்மேகங்கள் சூழ்ந்திருந்த அக்காலத்தில் – எல்லோரையும் சிரிக்கவைத்துக்கொண்டிருந்த அவர் பக்கவாத நோயினால் அவதியுற்று அந்திமகாலத்தில் கண்ணீர் உகுத்தவாறே வாழ்ந்து தான் பிறந்த தினத்தன்றே தனது கண்களை நிரந்தரமாக மூடிக்கொண்டார்.

தமிழர்களைத் தட்டி எழுப்பிய பெரியோர் யார்? இது கேள்வி
அநுராதபுரத்தில் ரயிலேறும் சிங்களச்சகோதரர்கள். இது பதில்.
இப்படி யதார்த்த பூர்வமாக எம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டிய எழுத்தாற்றல் மிக்க ஒருவராக அவர் எம்மத்தியில் வாழ்ந்தார்.

இலங்கையில் நானறிந்த வரையில் 1958 – 1977 – 1981 – 1983 காலப்பகுதியில் நடந்த இனவாத வன்செயல்களின்போதெல்லாம் அநுராதபுரத்தை தமிழர்கள் அநியாயபுரம் என்று வர்ணித்துப் பேசியதையும் அறிவேன்.

சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் படிக்கச்சென்று விடுமுறை விட்டதும் கொழும்புக்கு பகல் அல்லது இரவு ரயிலில் பயணித்திருக்கின்றேன்.

எம்மவர்கள் ரயில் இருக்கையில் கால் கை நீட்டி ஆழ்ந்த உறக்கத்திலிருப்பார்கள்.

அநுராதபுரத்தில் ஏறும் சிங்களப்பயணிகள் தமிழர்களை தட்டி எழுப்புவதைப்பார்த்திருக்கிறேன். நானும் அவ்வாறு தட்டி எழுப்பப்பட்டவன்தான்.

பல வருடங்களின் பின்னர் சிரித்திரன் சஞ்சிகையின் அபிமான வாசகனாகியதும் – அதில் வரும் மகுடி – கேள்வி பதில் பகுதியைத்தான் முதலில் படிப்பேன்.

ஒரு இதழில்தான் மேலே குறிப்பிட்ட கேள்வியும் பதிலும் இடம்பெற்றிருந்தது. அப்பொழுது நான் நீர்கொழும்பில் படித்துக்கொண்டிருந்த காலம்.

எங்கள் நீர்கொழும்பு அல்ஹிலால் மகா வித்தியாலய விஞ்ஞான ஆசிரியர் ராஸிக் சேர் ஒருநாள் என்னிடமிருந்த சில சிரித்திரன் இதழ்களை வாங்கிச்சென்றுவிட்டார்.

பின்னர் – அதிலிருந்த நகைச்சுவைத்துணுக்குகளை தொகுத்து ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியையே மாணவர்களைக்கொண்டு பாடசாலை விழாவில் மேடையேற்றிவிட்டார்.

சவாரித்தம்பர் – சின்னக்குட்டி – மைனர் மச்சான் – மிஸ்டர் அன்ட் மிஸிஸ் டாமோடரன் முதலான பாத்திரங்களை இன்றைக்கும் நாம் நினைத்து நினைத்துச் சிரிக்கவைத்தவர் சிவஞானசுந்தரம்.
பாடசாலைப்பருவத்திலிருந்து சிரித்திரன் வாசகனாக இருந்தபோதிலும் எனது பெயரையும் பத்திரிகையில் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் மகுடிக்கு சில கேள்விகளை அவ்வப்போது அனுப்பியிருக்கிறேன்.

சிரித்திரன் ஆசிரியரைப்பார்க்கவேண்டும் என்ற ஆவல் 1972 இற்குப்பின்னர்தான் துளிர்த்தது.

அந்த முதல் சந்திப்பு எதிர்பாராதது. அத்துடன் விந்தையான அனுபவத்தையும் தந்தது.

இனி அந்தச்சம்பவத்தை சித்திரிக்கின்றேன்.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவுள்ள ரஜேஸ்வரி பவான் சைவஹோட்டலில் ஒருநாள் முற்பகல். அந்த மாதத்து சிரித்திரன் இதழை வாங்கிக்கொண்டு தேநீர் அருந்துவதற்காக உள்ளே செல்கின்றேன்.

அங்கே எழுத்தாளரும் வானொலி நாடக ஆசிரியருமான நண்பர் கு.ராமச்சந்திரன் ஒருவருடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்துகிறார்.
ஹலோ முருகபூபதி. வாருங்கள். இதோ இவர்தான் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம். ஐயா இவர்தான் முருகபூபதி. அறிமுகப்படலத்துடன் அவர்களுக்கு அருகில் நானும் அமர்கின்றேன்.

கண்டது மகிழ்ச்சி. கேள்வி மாத்திரம் கேட்கிறீர். ஏதும் கதை எழுதித்தரலாமே.

புன்னகைத்தவாறே உரையாடுகிறார்.
இப்பொழுதுதான் இம்மாத சிரித்திரன் வாங்கினேன். – கையிலிருந்த இதழைக்காண்பித்தேன்.

நீங்கள் அதற்கு நன்றி சொல்லவேண்டியவர் எனது மனைவி -என்றார் சிவஞானசுந்தரம்.

புரியவில்லையே என்றேன். அவர் விளக்கினார்
சுவாரஸ்யமான கதையொன்று கிடைத்தது.

குறிப்பிட்ட சிரித்திரன் இதழ் பிரதிகளை பெரிய பார்சலாகக் கட்டி யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் முதல்நாள் காலை சேர்ப்பித்திருக்கிறார். அன்று இரவு தபால் ரயிலில் அந்தப் பார்சல் கொழும்புக்கு புறப்படும். குறிப்பிட்ட பார்சலுக்கான சீட்டை கொழும்பு கோட்டையில் கொடுத்துத்தான் பார்சலைப்பெறவேண்டும். அன்று இரவு அந்த ரயிலில் கொழும்பு பயணமாகவிருக்கும் சிவஞானசுந்தரம் அந்தச்சீட்டுடன் சென்றால்தான் பெறமுடியும்.

யாழ்ப்பாணத்தில் சஞ்சிகை பிரதிகளை விநியோகித்துவிட்டு இரவு ரயிலுக்கு புறப்பட்டுவிட்டார். பயண அவசரத்தில் சேர்ட்பொக்கட்டில் இருந்த குறிப்பிட்ட சீட்டை எடுத்துவரவும் மறந்துவிட்டார். ரயில் ஏறி நாவற்குழியும் கடந்தபின்புதான் தனது மறதிக்காக தன்னைத்தானே நொந்துகொண்டு பயணித்திருக்கிறார்.
வீட்டிலே அவரது மனைவி கணவரின் உடைகளை துவைப்பதற்காக எடுத்தபொழுது குறிப்பிட்ட சீட்டைக்கண்டுள்ளார். பிறகு நிதானமாக அந்தச்சீட்டை ஒரு கடித உறையில் வைத்து ராஜேஸ்வரி பவானின் முகவரியும் எழுதி – மேலதிக முத்திரைகளும் (Late fee stamps ) ஒட்டிய பின்பு அச்சுக்கூடத்திலிருந்த பணியாளரை அழைத்து குறிப்பிட்ட கடித உறையை – கணவர் சிரித்திரன் ஆசிரியர் பயணம் செய்யும் அதே இரவு தபால் ரயிலில் தபால் Compartment இல் சேர்ப்பிக்கச்செய்துள்ளார். அந்த ஜனநெரிசலில் பணியாளரால் ஆசிரியரை தேடிக்கண்டு பிடிக்கமுடியாது என்ற காரணத்தினால்தான் திருமதி சிவஞானசுந்தரம் துரிதமாக – சமயோசிதமாக அப்படிச்செய்தார்.

மிகுந்த யோசனையுடனும் கவலையுடனும் கொழும்புக்கு காலையிலேயே வந்துவிட்ட சிவஞானசுந்தரம் கொட்டாஞ்சேனை சென்று உடைமாற்றி குளித்துவிட்டு ராஜேஸ்வரி பவனுக்கு வந்து அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு தகவல் அனுப்புவது அல்லது கோட்டை ரயில் நிலையம் சென்று நடந்ததைச்சொல்லி பார்சலைப்பெற்றுக்கொள்ள முயற்சிப்பது என்ற எண்ணத்தில் வருகிறார்.

ஆனால் – என்ன ஆச்சரியம் ? குறிப்பிட்ட அவசரத்தபால் ராஜேஸ்வரி பவனுக்கு விநியோகிக்கப்பட்டு அங்கிருந்த ஒரு ஊழியர் ரயில்நிலையம் சென்று அதனைப்பெற்றுவந்து விநியோகத்துக்கும் வைத்துவிட்டார்.

சிரித்திரன் ஆசிரியர் இந்தச்சம்பவத்தை என்னிடம் சொன்ன காலகட்டத்தில் – கவிஞர் கண்ணதாசன் – மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் – என்ற பாடலை இயற்றியிருக்கவில்லை.

இதுபோன்ற சம்பவங்களை அனுபவித்துப்பார்த்தவர்கள்தான் – மனைவி ஒரு மந்திரி – என்று சொன்னார்களோ தெரியவில்லை.

சிவஞானசுந்தரம் சுவாரஸ்யமான மனிதர். அவருடன் உரையாடிக்கொண்டிருந்தால் நேரம் செல்வதே தெரியாது. அவரது உரையாடலில் அங்கதச்சுவை மிளிரும். என்னைக்காணும் போதெல்லாம் சிரித்திரனுக்கு ஏதும் எழுதித்தருமாறு கேட்பார். ஆனால் அவரது வேண்டுகோளைத்தான் என்னால் பூர்த்திசெய்ய முடியாமல் போய்விட்டது.

வாசகர்களை சிரிக்கவைத்துக்கொண்டே இருந்தவர் அந்திமகாலத்தில் பக்கவாதம் வந்து கண்ணீர் உகுத்தவாறு நனவிடை தோய்ந்தார் என்ற தகவலை அறிந்தபோது நெஞ்சு கணத்துப்போனது.
இலங்கையில் தமிழ்ச்சூழலில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அதற்காகவே ஒரு இதழை நீண்டகாலம் நடத்திய சாதனையாளர்தான் சிவஞானசுந்தரம்.

இலங்கையில் குறிப்பாக வடமாகாண மக்களின் ஆத்மாவையே தனது கேலிச்சித்திரங்கள் – நகைச்சுவைத்துணுக்குகளினால் பிரதிபலித்தவர்.
பல துணுக்குகள் சிறுகதைகள் நாவல்களுக்கு கருப்பொருளாகக்கூடியவை. எனது கற்றுக்கொள்வதற்கு (கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழில் வெளியானது) என்ற சிறுகதையில் சிவஞானசுந்தரத்தைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
ஈழத் தமிழ் மக்களின் புலப்பெயர்வைப்பற்றி சிவஞானசுந்தரம் எப்பொழுதோ தீர்க்கதரிசனமாக பதிவு செய்த ஒரு துணுக்கு இதோ:-
ஒரு எழைத் தந்தை சொல்கிறார்.:-
எனது மகளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடினேன்.
அவள் கறுப்பு. அழகில்லை என்றார்கள்.
அவள் படிப்புக்குறைவு என்றார்கள்.
அவளுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்றார்கள்.
அவள் சாதியில் குறைவு என்றார்கள்.
அவளுக்கு கொடுப்பதற்கு சீதனம் இல்லை என்றார்கள்.
இப்பொழுது அவள் லண்டன் சீமையில் வெள்ளைக்காரனைக்கட்டி
சந்தோசமாக சீவிக்கிறாள்.
அவரது சுயசரிதை கார்ட்டுன் ஓவிய உலகில் நான் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. மல்லிகைப்பந்தல் வெளியீடாக இரண்டு பதிப்புகள் கண்டது இந்நூல்.
சிரித்திரன் சிவஞானசுந்தரத்தின் மானசீகக் குரு தமிழகத்தின் பிரபல கேலிச்சித்திர ஓவியர் மாலி.
மாலி – கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் இலங்கை வந்த காலத்தில் சிவஞானசுந்தரத்திற்கு வயது பத்து. பருத்தித்துறையில் சித்திவிநாயகர் பாடசாலையில் நடந்த கல்கி – மாலி வரவேற்புக்கூட்டத்தில்தான் அவர்களை பார்த்திருக்கிறார். மாலி கையிலே ஒரு வெண்கட்டியை எடுத்துக்கொண்டு மேடையிலிருந்த கரும்பலகையில் அன்றைய அரசியல் தலைவர்களின் உருவங்களை கேலிச்சித்திரமாக வரைகிறார். அந்தக்காட்சி சிறுவன் சிவஞானசுந்தரத்தின் மனதையும் ஆக்கிரமித்துவிடுகிறது.
பத்திரிகைகள் இதழ்களில் கேலிச்சித்திரம் வரைபவர்கள் பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் அரசியல்வாதிகளையே குறிவைப்பார்கள்.
இலங்கை – இந்தியாவில் மட்டுமல்ல உலகநாடுகள் அனைத்திலும் விடிந்தால் அரசியல் தலைவர்கள் பத்திரிகை – இதழ்களை கையில் எடுத்தவுடனேயே பார்க்கும் பக்கம் கேலிச்சித்திரம் பதிவாகியுள்ள பக்கம்தான்.

அன்றைய நாளில் தம்மைப்பற்றி ஏதும் வரைந்திருக்கிறார்களா? என்ற ஆர்வத்துடன்தான் பத்திரிகை – இதழ்களை புரட்டுவார்கள்.
இலங்கையில் ஆங்கில – சிங்கள ஊடகங்களில் விஜேசோமா – யூனூஸ் முதலானோர் பிரபலமானது போன்று அந்நாட்களில் சிவஞானசுந்தரம் தமிழ் ஊடகத்துறையில் பிரபலமாகவிருந்தார். அவர் கேலிச்சித்திரம் மாத்திரமின்றி நகைச்சுவைத்துணுக்குகளினாலும் வாசகர்களை பெரிதும் கவர்ந்தவர்.

ஒரு நாள் அவர் பஸ்ஸில் பயணமானபொழுது ஒரு மாட்டுவண்டில் குறுக்கிட்டு சிறுவிபத்து நடந்துவிட்டது. வண்டில் மாடு வண்டிலைவிட்டு ஓடிவிட வண்டில்காரர் நிலத்தில் விழுந்து புரண்டு எழுந்தார். அந்தக்காட்சியைப்பார்த்த ஒரு பயணி உடனே – சவாரித்தம்பரும் சின்னக்குட்டியும் இங்கே இப்பொழுது இருந்திருந்தால் இந்தக்காட்சி பற்றியே வேடிக்கையாகச்சொல்லியிருப்பார்கள் – என்றாராம். அதனைக்கேட்ட சக பயணிகளும் ஓமோம் என்று ஏகோபித்த குரலில் ஆமோதித்திருக்கிறார்கள்.

அதனைக்கேட்டுக்கொண்டு தாம் மௌனமாக பஸ்ஸில் அமர்ந்திருந்ததாக சிவஞானசுந்தரம் ஒரு நாள் சொன்னார்.
தமது கதாபாத்திரங்களை வாசகர்கள் அவ்வாறு உணர்வுபூர்வமாக உயிர்கொடுத்து வாழவைத்துக்கொண்டிருந்தார்கள் என்று பரவசத்துடன் சொன்னார். தான்தான் அந்தப்பாத்திரங்களை சிருட்டித்த படைப்பாளி என்பதை அவர் அன்று பஸ்ஸில் சொல்லாமல் மௌனம் காத்திருக்கிறார்.

கார்ட்டுனின் ஆற்றல் என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதை இங்கு பதிவுசெய்வது பொருத்தமாகவிருக்கும்.
சர்வலோகத்தையும் நடுங்கவைத்த சர்வாதிகாரி ஹிட்லரை இரு நகைச்சுவையாளர்கள் நடுங்கவைத்தார்கள். சார்ளி சப்ளின் தனது திரைப்படக்கிண்டல்களால் கிடுகிடுக்கவைத்தார்.

டேவிட் லோ தனது கார்ட்டுன்களால் கதிகலங்கவைத்தார். டேவிட் லோவின் கார்ட்டுன்கள் ஒவ்வொன்றும் ஹிட்லரின் கல்லறைக்கற்ளெனக் கூறினால் அது மிகையாகாது. இரண்டாம் மகா யுத்தத்தில் ஹிட்லரைத் தோற்கடிக்கக் குண்டுகளுடன் கார்ட்டுன்களும் தமது பங்களிப்பைச்செய்தன என்றுதான் கூறவேண்டும்.
ஜவஹர்லால் நேரு தன்னைக்கார்ட்டுன் ஓவியர்கள் சாடாதிருப்பதற்காக அவர்களின் நட்பை நாடினார். பிரபல கார்ட்டுன் ஓவியர் ஷங்கர் வீட்டுச்சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்து டின்னர் தரும்படி கேட்பாராம். நட்பு – சாப்பாட்டு மேசை எல்லைக்கு வரும்போது எப்படி கார்ட்டுனில் சாடுவது என ஷங்கர் திணறினாராம்.

தூரிகையின் முனையில் இருக்கும் சேபிள் மயிர்களோ மிக மிக மென்மையானவை. ஆனால் தூரிகைகள் உமிழும் கருத்துக்கள் மிகவும் வன்மையானவை. வாள் முனை கொடிது. அதிலும் கொடிது பேனா முனை. எல்லாவற்றிலும் கொடிது தூரிகை முனை எனத்தொடை நடுங்கினார் கார்டுன்களுக்கு அஞ்சிய மேல்நாட்டு அரசியல்வாதி ஒருவர்.
மொழியில்லாக் கலைக்கோலம்
கார்ட்டுன் மொழியில்லாக்கலைக்கோலம். எந்த இனத்தவரும் புரியக்கூடிய கலைவடிவம். பெரும்பான்மை இன ஆட்சி சிறுபான்மையின தமிழ்ப்பத்திரிகைகளில் வரும் கார்ட்டுன்களைப்புரிந்துவிடுமே என்ற அச்சத்தில் கார்ட்டுன் பிரசுரிப்பதை தமிழ்ப்பத்திரிகைகள் விரும்பவில்லை. அந்தச் சூழ்நிலையில்தான் சமூகப்பாத்திரங்களாகிய சின்னக்குட்டி – சவாரித்தம்பர் – மெயில்வாகனத்தார் -மிஸ்ஸிஸ் டாமோடிரன் பாத்திரங்கள் தேன்றின என்று குறிப்பிடும் சிவஞானசுந்தரம் – தனது ஆதங்கத்தையும் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார்
முன்தோன்றிய மூத்த குடி – முத்தமிழ் உள்ள குடி என்று தமிழர்களாகிய நாம் எமக்கே புகழாரம் சூட்டி எம்மை நாமே வாயார வாழ்த்திப்பாடுகின்றோம். ஆனால் – இந்த மூத்த குடி சாதித்தது என்ன? ஓவிய உலகில் தமிழ் இனம் அனந்த சயனத்தில் இருக்கிறது. மலையாள மக்கள் ஒரு ரவிவர்மாவையும் வங்காள மக்கள் ஒரு நந்தலால் போஸையும் சிங்கள மக்கள் ஒரு ஜோர்ஜ் கீற்றையும் கலை உலகிற்கு ஈய்ந்தவர்களென்றால் தமிழர்களாகிய நாம் யாரை ஈய்ந்தோம். ஒருவரும் இல்லையென்றே நா கூசக்கூறும் நிலையில் இருக்கின்றோம்.

சிவஞானசுந்தரம் நடத்திய சிரித்திரனின் முதலாவது இதழ் 1963 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் வெளியானது. பின்னர் 1971 முதல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. வடக்கில் 1995 இன் போர்க்கால மாபெரும் இடப்பெயர்வு வரையில் வெளிவந்த சிரித்திரனின் முழு ஆயுள் காலத்தை 28 ஆண்டுகள் எனக்கருதலாம் என்றும் மொத்தம் 318 இதழ்கள் வெளிவந்தன என்றும் கார்ட்டுன் ஓவிய உலகில் நான் – என்ற சிரித்திரன் சுந்தரின் சுயசரிதை நூலின் முன்னுரையில் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் குறிப்பிடுகிறார்.
சிவஞானசுந்தரம் ஒரு கட்டிடக்கலைஞராக வரவேண்டும் என்ற கனவுடன்தான் அவரது தந்தை சிற்றம்பலம் ( மேல்மாகாணத்தின் தபால் அத்தியட்சராக பணியாற்றியவர்) தமது மகன் சிவஞானசுந்தரத்தை பம்பாய்க்கு (இன்றைய மும்பாய்) கட்டிடக்கலை பயின்று வருவதற்கே அனுப்பினார். ஆனால் அவர் அங்கே கட்டிடக்கலை பயின்றாரோ தெரியவில்லை. ஆனால் கார்ட்டுன் கலைஞராகத்தான் திரும்பிவந்தார்.
இலங்கையில் சுதந்திரன் – தினகரன் – வீரகேசரி – மித்திரன் மற்றும் சமசமாஜக்கட்சியின் சமசமாஜிஸ்ட் என்ற ஆங்கில இதழ் முதலானவற்றிலும் தமது கேலிச்சித்திரங்களின் மூலம் தமிழ் – ஆங்கில வாசகர்கள் மத்தியில் கவனிப்புக்குள்ளானார்.
சமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேராவுக்கு அவரது இலட்சியத்தலைவர் ட்ரொக்ஸியின் உருவப்படம் வரைந்து கொடுத்தவர் சிவஞானசுந்தரம். ஒரு சந்தர்ப்பத்தில் என்.எம்.பெரேராவின் எதிரிகள் அவரை சுட்டுக்கொல்ல முயன்றுள்ளனர். எனினும் துப்பாக்கிக்குறி தப்பியதனால் அன்று என். எம். பிழைத்தார். சம்பவத்தை அறிந்து என்.எம். மை சந்திக்கச்சென்ற சிவாஞானசுந்தரனிடம் மிஸ்டர் உமது படமும் நானும் பிழைத்துக்கொண்டோம் என்று சொன்னாராம்.
கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மாஸ்டர் ஒரு நாள் சிரித்திரன் காரியாலயம் வந்து தமது மகள் வீடுகட்டுவதற்கு பணம் அனுப்பியிருக்கிறாள். வீடு கட்டினால் மாத்திரம் போதாது வீட்டுக்குள் நாம் இருந்து சிரிக்கவும் வேண்டும். எனவே மாதாந்தம் சிரித்திரன் அனுப்பிவையுங்கள் என்று சொல்லி அதற்கான சந்தாப்பணத்தை வழங்கியிருக்கிறார்.

சிவஞானசுந்தரனுக்கு தினகரனில் கைலாசபதி பிரதம ஆசிரியராகவிருந்தபொழுது பூரண சுதந்திரம் கொடுத்து அவரது கார்ட்டுன் கலைக்கு களம் தந்திருக்கிறார்.
இவ்வாறு பல தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது சிரித்திரன் சிவஞானசுந்தரத்தின் சுயசரிதை.
ஆற்றொழுக்கான எளிய நடையில் அதனை வாசகர்களுக்கு தந்துவிட்டு தமது பிறந்த நாளன்றே நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார்.

சிலர் பிறப்பார்கள். இறப்பார்கள். மறக்கப்பட்டும் விடுவார்கள்.
ஆனால் சிரித்திரன் சிவஞானசுந்தரம் போன்றவர்கள் வாழ்ந்துகொண்டுதானிருப்பார்கள்.

இலங்கையில் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வடமாகாணத்திற்கான ரயில் புறப்பட்டுவிட்டது. எதிர்வரும் சில வாரங்களில் பளை வரையில் ரயில் ஓடவிருக்கிறது.
அநுராதபுரத்தில் ஏறவிருக்கும் சிங்களச்சகோதரர்கள் மீண்டும் தமிழர்களை தட்டி எழுப்பும் காலமும் வரப்போகிறது. ஆனால் அந்தத் திருக்காட்சியைப் பார்க்க சிரித்திரன் சுந்தர் இல்லை.

—0—

“சிரித்திரன் சிவஞானசுந்தரம்” அதற்கு 4 மறுமொழிகள்

 1. “பெரும்பான்மை இன ஆட்சி சிறுபான்மையின தமிழ்ப்பத்திரிகைகளில் வரும் கார்ட்டுன்களைப்புரிந்துவிடுமே என்ற அச்சத்தில் கார்ட்டுன் பிரசுரிப்பதை தமிழ்ப்பத்திரிகைகள் விரும்பவில்லை.”

  “தமிழர்களாகிய நாம் யாரை ஈய்ந்தோம். ஒருவரும் இல்லையென்றே நா கூசக்கூறும் நிலையில் இருக்கின்றோம்.”

  முருகபூபதி , ஏனிந்த முரண்பட்ட கருத்து. பதில் தெரிந்திருந்தும் யாரைத்திருப்திப்படுத்த இவை.
  இதனால்தான் தமிழர் உங்கள் போன்றோரை நம்புவதில்லையோ?

 2. தமிழர்கள் நம்புகிறார்களா இல்லையா என்பதல்ல எனது பத்தியின் பிரச்சினை. சிவஞானசுந்தரம் தமது சுயசரிதையில் எழுதியிருப்பதைத்தான் அதில் குறிப்பிட்டேன்.
  முடிந்தால் குறிப்பிட்ட சுயசரிதையை தேடி எடுத்துப்படிக்கவும். (இலங்கை மல்லிகைப்பந்தல் வெளியீடு 2002)
  மற்றது தமிழர்கள் இதுவரை காலமும் நம்பியவர்கள் என்ன செய்தார்கள் என்பதை வரலாறு பதிந்துள்ளது. முருகபூபதி

  1. அப்போ பெரும்பான்மை இனமக்கள் “புரிந்து விடுவார்கள்” என அச்சம் கொண்டோரே ன ”நாக்கூசும் நிலையில்” நாம் இருக்கக் காரணம் என எடுத்துக்கொள்ளலாமா?
   அதை நினைத்துதான் சிவஞானசுந்தரம் கண்ணீருடன் வாழ்நாளின் கடைசிக்காலத்தைக் கழிக்கவேண்டி வந்ததோ?

 3. ஒருவருடைய அந்திமகாலம் எப்படியும் இருக்கலாம். வலதுகுறைந்து கண்ணீருடன் என்றால் அதனை அனுதாபக்கண்கொண்டு பாருங்கள். குரூரமாகப்பார்த்து எள்ளிநகையாடவேண்டாம்.
  முருகபூபதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.