வாசிப்பு அனுபவம்:

முருகபூபதி
0

நாங்கள் பிறக்கிறோம். இறக்கிறோம். இரண்டும் எப்பொழுது நிகழும் என்பதோ பிறந்த வேளையே அல்லது இறந்தபின்போ எதுவும் தெரியாது. மற்றவர்களின் குழந்தை பிறந்ததை பார்த்ததும் அட நாங்களும் பிறந்தபொழுது இப்படித்தானே இருந்திருப்போம் என நினைப்போம். அத்துடன் குழந்தைப் பருவமும் நினைவுக்கு வந்துவிடும்.

ஒருவர் இறந்தால் அவரை ஃபியூனரல் பாலரில் அல்லது மயானத்தில் பிரேதப்பெட்டியினுள் பார்த்தால் நாம் என்ன யோசிக்கின்றோம்.
நாங்கள் இறந்தாலும் இப்படித்தானே அலங்கரித்து வைத்திருந்து புதைப்பார்கள் அல்லது தகனம் செய்வார்கள்.

பலருக்கு சுடலைஞானம் பிறக்கும். இறந்தவர் பற்றிய நினைவுகள் வரும். அட எப்படி இருந்தார் இப்படிப்போய்விட்டாரே… இதுதான் விதி இதுதான் தலையெழுத்து,….. அங்கே பிறந்து இங்கே அடங்கிவிட்டார்… நாம் எங்கே அடங்குவோம். எங்கே புதைக்கப்படுவோம் எங்கே தகனமாவோம் என்ற யோசனையெல்லாம் அந்த பாலரில் நிற்கும் வரையில் அல்லது மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தும் வரையில்தான்.

அங்கிருந்து வெளியேறியபின்னர் வேறு யோசனைகள் வந்துவிடும். அடுத்து இன்று எந்த பிறந்த நாள் பார்ட்டி, எங்கே கெட்டுகெதர்,.. நாளை வேலை. வங்கிக்கடன் செலுத்தும் நாள் பிள்ளைகளின் கல்வி ரியூஷனுக்கு அழைத்துச்செல்லும் யோசனை ஊரிலிருக்கும் உறவினரை எப்படி ஸ்பொன்சரில் அழைப்பது….இப்படியே பல யோசனைகளுடன் காரை செலுத்துவோம். இறந்தவர் மறைந்துவிடுவார். மயானமும் மறைந்துவிடும்.

இங்கே நடேசன்….பிரேதம் பற்றி பேசவில்லை. அடக்கமாகும் தகனமாகும் மயானம் பற்றிச்சொல்ல வரவில்லை. மரணச்சடங்குகள் பற்றியும் அவர் எழுதவில்லை.

நாம் மயானத்திலும் ஃபியுனரல் பாலரிலும் பார்ப்போமே பூதவுடல் அதாவது பிரேதம். அதனை அலங்கரித்து உங்கள் காட்சிக்கு வைக்கும் ஒரு பெண்ணைப்பற்றித்தான் சொல்கிறார்.

எனக்கும் நீண்ட காலமாக ஒரு யோசனை.

பல பிரேதங்களை இங்கே இந்த நாட்டில் சவப்பெட்டிகளில் பார்த்திருக்கின்றேன். உயிரோடிருக்கும்பொழுது நேரில் பார்த்ததைவிட மிகவும் அழகாக தெளிவாக சிவப்பாக மரணித்தவர் இருப்பார். இது எப்படி சாத்தியம்?

நடேசனின் இச்சிறுகதை திண்ணை இணைய இதழில் வெளியாகும் முன்னர் எனக்கும் பார்வைக்கு வந்தது.

மிகவும் வித்தியாசமான கதை, முற்றிலும் நாம் சந்திக்கத்தவறிய களம். படித்தவுடன் சில கணங்கள் எம்மை யோசிக்கவைக்கும் பாத்திரம்.
நெடுஞ்சாலைகள் இந்தக்கண்டம் முழுவதும் விரிந்து பரந்திருக்கிறது. 100 கிலோ மீட்டர் வேகத்திலும் அதனை விடக்கூடுதலாகவும் அந்த நெடுஞ்சாலைகளில் நாம் வாகனங்களில் விரைந்திருப்போம்.

ஆனால் சில கணநேரமாவது அந்த நெடுஞ்சாலைகளை இரவு பகல் என்றில்லாமல் குளிரிலும் வெய்யிலிலும் கஷ்டப்பட்டு செப்பனிட்ட வீதிநிர்மானப்பணியாளர்கள் பற்றி என்றைக்காவது யோசித்திருப்போமா?

நாம் இறந்தபின்னர் எப்படியிருப்போம் என்பது எமக்குத்தெரிய நியாயமில்லைத்தான். ஆனால் எங்களின் பூதவுடலை கழுவி சுத்தம்செய்து இரசாயனங்களினால் அதனைப்பதப்படுத்தி அலங்கரிக்கும் பணியிலீடுபடுகிறவர்கள் பற்றி ஒருகணமும் யோசிப்பதில்லை.

நடேசன் யோசித்திருக்கிறார். நடேசனின் கதைகளின் புதிய களம் எமக்கும் பரிச்சயமான களம்தான். ஆனால் அந்தக்களங்களின் உள்ளே சென்று வருவதற்கு ஏனோ தயங்குகின்றோம்.

அவர் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரே படைப்பிலக்கியத்துறையில் ஈடுபடத்தொடங்கியவர். எடுத்தஎடுப்பில் அவர் தனது தொழில் சார் அனுபவங்களையே எழுதத்தொடங்கினார். அவரது பெரும்பாலான சிறுகதைகள்          ( மிகக்குறைந்த கதைகளை அவர் எழுதியிருந்தாலும்) புகலிடத்தின் புதிய களத்தையே எமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

பிரேதத்தை அலங்கரிப்பவள் சிறுகதையின் தொடக்கப்பந்தியே… உங்களுக்குத் தெரிந்த மனிதர் யாராவது உயிர் வாழ்ந்தகாலத்திலும் பார்க்க இறந்தபின்பு அழகாக தோற்றமளித்தாரா? என்ற கேள்வியுடன்தான் ஆரம்பமாகிறது.
அதனைத்தான் நானும் தொடக்கத்தில் இங்கு குறிப்பிட்டேன். சொல்லுங்கள். நடேசனின் அதே கேள்வியை உங்களிடமும் கேட்கின்றேன். சொல்லு ங்கள்.
புகலிடக்கதையென்றாலும் ஒரு கணம் நடேசனும் தாய் நாட்டுக்குச்சென்றுதான் மீண்டுவருகிறார்.

யாழ்ப்பாணத்து கோம்பயன் மணல் மயானம் போன்று நாலு ஆலமரங்கள் சில அலரி மரங்கள் இடைக்கிடை ஆமணக்குப் பற்றை வளர்ந்திருக்கும் சில ஏக்கர் விஸ்தீரணத்தில் அல்ல ஸ்பிரிங்வேல் மயானம.; பல கிலோ மீட்டர் அகல நீளமான அழகிய பூந்தோட்டம் என்கிறார்.

யூகலிப்ரஸ் மரங்கள்தான் ஆனால் அங்கு வரும் சுகந்தமான காற்றில் கற்பூரவள்ளியின் நறுமணம் இருக்கிறது என்கிறார். இதே கதையை ஒரு அவுஸ்திரேலிய ஆங்கில எழுத்தாளர் எழுதியிருந்தால் ஆலமரமும் ஆமணக்கும் கற்பூரவள்ளியும் வந்திருக்காது என்பதையும் கவனிப்போமாக.

நடேசன் என்ற கதைசொல்லி பார்க்கும் பிரேதம் எந்திரன் படத்தில் வரும் ரோபோ இயந்திர மனிதன் ரஜினி காந்த்தின் அழகிலிருந்திருக்கிறது. ஹிட்லர் – ஸ்ராலின் ஆகியோரின் பூதவுடல் எப்படியிருந்திருக்கும் என்றும் கற்பனைவருகிறது. சொல்லவந்த கதைக்கும் அப்பால் சென்று கதையோடு ஒன்றிவரக்கூடிய தகவல்களையும் விடயங்களையும் பொருத்தமாக இணைக்கச்செய்யும் முயற்சி கதைசொல்லலில் இடம்பெறுகிறது.

மயானம் பிரேதம் எம்பொம் பற்றியெல்லாம் கதையின் தொடக்கம் பல பந்திகளில் சொல்லப்படுகிறது.

பின்னர் முப்பத்தியைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணையும் அவளது ஏழு அல்லது எட்டுவயது மகன் அவளது செல்லப்பிராணி மோல்றீஸ் இன நாய் ஆகியோரை அறிமுகப்படுத்துகிறார். அந்த குட்டி நாய் லிஸிக்கு சிகிச்சை அளிக்கிறார். லிஸி கதைசொல்லியின் கிளினிக்கில் அனுமதிக்கப்படுகிறது. அதனை மீண்டும் வந்து அழைத்துச்செல்வதில் தாமதம் நீடிக்கிறது. திடீரென்று அந்த குட்டிநாய் லிஸியின் எஜமானியான அந்தப்பெண்வருகிறாள். இரவில் வேலை செய்து பகலில் உறங்குவதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிப்புக்கோருகிறாள். அதிலும் அவளிடம் ஒரு நேர்மை இருக்கிறது. தனது தாமதத்திற்கு தண்டப்பணமும் கொடுக்க தயாராகின்றாள். உரிய கட்டணம் மாத்திரம் பெறப்படுகிறது.

ஹனா என்ற அந்தப்பெண்ணின் தொழில் பிரேதங்களை அலங்கரிப்பது. ஆனால் அவள் தன்னை மேக்கப்செய்து அலங்கரித்துக்கொள்வதில்லை என்பதுதான் கதையின் செய்தி. அந்தப்பெண்ணை ஒரு சுப்பர் மார்கட் கபேயில் இரண்டு மேசை தள்ளியிருந்தவாறு சாண்ட்விச் சாப்பிடுவதை கதை சொல்லி பார்க்கிறார். அப்பொழுதும் அவளது முகத்தில் மேக்கப் இல்லை. நித்திரைக்கலக்க சோபை இழந்த முகம்தான்.

மரணித்து தகனமாகவோ அல்லது மண்ணிலே புதையுண்டு போகவோவுள்ள பிரேதங்களை அலங்கரிக்கும் ஒரு பெண் உயிர்வாழும்பொழுது தனது அழகில் அலங்காரத்தில் அக்கறைகொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தையே கேள்வியாக வைத்துவிட்டு சில கணங்கள் அவளையே நினைக்கவைக்கிறார் நடேசன்.
மிகவும் வித்தியாசமான கதை நாம் தரிசிக்கத்தவறிய புதிய களத்தை அறிமுகப்படுத்தும் கதை.

இங்கே நான் எனது வாசிப்பு அனுபவத்திற்காக எடுத்துக்கொண்ட ஐந்து கதைகளில் இலங்கையில் மலையகத்தில் தோட்டப்புறம் இலங்கையில் மட்டக்களப்பு கனடாவில் ஸ்காபரோ அவுஸ்திரேலியாவில் மெல்பனின் புறநகரம் மெல்பனின் மயானம் முதலான களங்களை சித்திரிக்கின்றன.

இவர்கள் கதை சொல்லும் முறைகளில் பல வேறுபாடுகளை பார்க்க முடிகிறது.
https://noelnadesan.com/2013/08/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF

%d bloggers like this: