நடேசன்
மனித இனம் வேட்டையாடுதலில் இருந்து விவசாய சமூகமாக மாறிய காலத்தில் மதுவின் பங்கு தற்காலத்தைவிட மிக முக்கியமானது. இக்காலத்தில் போதைப்பொருளாக மட்டுமே மது அருந்தப்பட்டது. வரலாற்றின் ஆரம்ப காலத்தில் வலிநிவாரணியாகவும் தூக்கமாத்திரை என்ற மருத்துவப் பதார்த்தமாகவும் அருந்தப்பட்டது. அக்கால மனிதர்கள் சராசரியாக முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்கள் மட்டுமே வாழ்வதால் மதுவின் பக்கவிளைவுகள் முக்கியமற்று போனது. கல்லீரல் பாதிப்பதற்கு முன்பாக வேறு காரணங்களால் மனிதன் இறந்து விடும் நிலைமை இருந்தது.
துபாயில் இருந்து எகிப்து செல்லும்போது நண்பன் கொண்டு வந்த இரண்டு சிவாஸ் ரீகல் மதுப்போத்தல்கள் கைப்பொதியாக கெய்ரோ விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டபோது ஐம்பது எகிப்திய பவுண்ட்ஸ் நோட்டின் உதவியால் மீண்டும் எம்மிடம் வந்து சேர்ந்தது எனக் குறிப்பிட்டேன் அல்லவா? ஒருநாள் இரவு அவற்றின் பாவனைக்கு நேரம் வந்துவிட்டது.
உழைத்துக் களைத்த மனிதர்களை காலம் காலமாக மது ஒன்று கூடவைத்தது இல்லையா? பண்டைய காலத்தில் எகிப்தில் அபரிமிதமாக சோளம் விளைந்ததால் அந்தத் தானியத்தில் பேக்கரிகளில் ரொட்டி (பாண்) செய்யப்படும். தானியமும், ஈஸ்ட்டும் அத்துடன் நைல் நதியின் நீருமே, பியரின் மூலப்பொருட்கள் என்பதால் பேக்கரிகளின் அருகாமையிலே பியர் தயாரிக்கும் தொழிற்சாலையும் இருக்கும்.
அபின் கண்டுபிடிக்கப்படும் வரை மனித குலத்தின் வலி மருந்தாக இருந்தது மதுவேயாகும். எகிப்தில் பாலைவன மணல் கலந்த ரொட்டியை உண்ணும்போது பல்லின் எனாமல் உடைந்து விடுவதனால் எல்லோருக்கும் பல்வலி வரும். பல்லில் எனாமல் என்ற பாதுகாப்பு அகன்ற பின்பு மிகவும் விரைவில் பல்லை கிருமிகள் தாக்கி விடுகின்றன. இதற்கான சாட்சியமாக இப்பொழுதும் எகிப்திய அரசர்களின் மம்மிகள் யாவும் சொத்தைப்பற்களைக் கொண்டிருப்பதைக் காணலாம்.
லக்சர், மற்றும் கர்நாக் கோவில்களைப் பார்த்துவிட்டு இரவு எமது படகுக்கு சென்றபோது எட்டு மணியாகிவிட்டது. அன்றிரவு இரவு லக்சர் படகுத்துறையில் தங்கியிருப்பது என முடிவாக இருந்தது.
பத்து அறைகள் உணவுக்கூடம் மற்றும் வசதியாக இளைப்பாறுவதற்கு ஏற்ற மேல்தளம் என்பவற்றைக் கொண்டது அந்தப் படகு. நாங்கள் உணவுகூடத்திற்கு சென்ற போது அங்கு ஏற்கனவே நாங்கள் சந்தித்த, பிரான்சில் இருந்து குழந்தைகளுடன் வந்த இரு குடும்பங்கள், மற்றும் லக்சர் கோயிலுக்கு எங்களுடன் வந்த அமெரிக்க தம்பதிகளும் அங்கு உணவுக்காக காத்திருந்தார்கள். அந்தப் படகில் ஐந்து நாட்கள் ஒன்றாக பயணம் செய்ய இருப்பவர்கள் தனித்தனியாக மூன்று குழுவாக உணவுக்கு காத்திருந்தபோது பரஸ்பரமான புன்னகை, ஹலோ என்ற வார்த்தை மட்டுமே பொதுவானதாக இருந்தது.
மொழி, இனம், நிறம் என்ற வேறுபாடுகள் கொண்ட சிறிய மனிதக் குழுவை பரஸ்பரம் ஒன்றிணைத்து எஞ்சியிருந்த ஐந்து நாட்களை உல்லாசமாக கழிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் நானும் நண்பன் ரவிந்திரராஜாவும் சமையல் அறைக்குள் சென்று தலைமை சமையலாளரிடம் எம்மை அறிமுகப்படுத்தியபின் அவரது பெயரைத் தெரிந்து கொண்டோம்.
ரவீந்திரராஜாவின் மனைவி நிருஜாவுக்கு வெஜிரேரியன் உணவு வேண்டும் எனக் கூறிவிட்டு மறுநாள் எமக்கு நைல்பேச் மின் கிடைக்குமா என விசாரித்தபோது ‘அது எமது அட்டவணையில் இல்லை’ என்றார் தலைமைச் சமையலர் ஹசன். அவரிடம் ஐம்பது எகிப்திய பவுண்ட்ஸ்களை கொடுத்து ‘வெளியே இருந்து வாங்கியாவது சமைக்கவேண்டும்’ என அன்பாக கேட்டோம். சிரித்தபடி பணத்தை வாங்கிக்கொண்டார்;
நைல் நதி, படகுக்கு வெளியே சலனமின்றி அமைதியாக ஓடிக்கொண்டு இருந்தது. லக்சர் நகரமும் எங்களைப்போல் களைத்துவிட்டது. அதிக வாகன ஓசையில்லை. ஆங்காங்கு கட்டிடங்களின் மெதுவான ஒளி தெரிந்தது. அதேபோல் உணவுக் கூடத்தில் இறுக்கமான அமைதி நிலவியது. பிரான்சு நாட்டவர்களும் அவர்களின் குழந்தைகளும் பிரான்சிய மொழியில் மெதுவாக உரையாடியபடி உணவுக்கு காத்திருந்தார்கள். அமெரிக்க தம்பதிகள் மத்திய வயதானவர்கள், வாழ்க்கையில் உரையாடி களைத்ததுபோல் மவுனமாக இருந்தனர். நாங்கள் எமது அறைக்குச் சென்று ஏற்கனவே கொண்டுவந்த சிவாஸ் ரீகலை எமது மேசையில் வைத்துவிட்டு பிரான்சிய குடும்பத்தை அழைத்தோம்.
பாரிசில் வாழும் வழக்கறிஞர் லூயிஸ், அவரது மனைவி ரீனாவையும் நண்பர்களையும் அறிமுகப்படுத்தினார். பிரான்சில் இருந்தாலும் ரீனா மொறோக்கோவில் பிறந்து பாரீசில் வளர்ந்தவர். அவர்களுக்கு இரண்டு சிறு பையன்கள். ஐந்து மற்றும் எட்டு வயதான அவர்களிடம் இருந்து எனது கமராவை பாதுகாப்பது சிரமமாக இருந்தது. எங்களுடன் அமெரிக்க தம்பதிகள் வால்டரும் மனைவி திரேசாவும் சேர்ந்து கொண்டார்கள் நாங்கள் ஒரு குளோபல் குடும்பமானோம். அதற்காகவும் சிவாஸ் ரிகலுக்கு நன்றி சொல்லவேண்டும்.
பேசியபடி உணவு அருந்தி முடிப்பதற்கு மூன்று மணி நேரமாகியது. நடு இரவு படுக்கைக்கு சென்றபின் எமது படுக்கை அறையின் ஜன்னலைத் திறந்து பார்த்தபோது கர்நாக் கோவில் தெரிந்தது.
பகலில் உடைந்த கட்டிடங்களை மட்டும் பார்த்த எனக்கு, இரவில் எகிப்திய சரித்திரத்தில் இருந்து அழிக்கப்பட்ட ஒரு அரசனின் காலத்தையும், அவனது உடைக்கப்பட்ட கட்டிடங்களையும் பற்றிய நினைவுகள் மத்தியதரைக்கடலை நோக்கியபடி, வெளியே ஓடும் நைல் நதிபோல் வரலாற்று நினைவுகளால் குமிழியிட்டபடி வந்தன.
நமக்குத் தெரிந்த காலத்தில் பல நாடுகளின் வரலாற்றின் ஏடுகளில் இருந்து பல பக்கங்கள் நீக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் நடந்திருக்கிறது. சோவியத் அதிபர் குருஷேவினது காலத்தில் ஸ்ராலினது வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்டதாகப் படித்தோம். அதேபோன்ற சம்பவங்கள் எகிப்தின் வரலாற்றிலும் நடந்திருக்கிறது.
எகிப்தின் வரலாறு மிகவும் காத்திரமாக கோயில்களிலும், சமாதிகளிலும் பொறிக்கபட்டிருப்பதால் அவற்றை அழிப்பது இலகுவானது அல்ல. ஆனால் அழிக்கப்பட்டிருக்கிறது.
அவற்றை எப்படி அழிப்பது?
கட்டிய கோயில்களை இடிப்பதும் எழுதியதை உளியால் செதுக்கி அதன் மேல் தமது பெயரை எழுதுவதும் எகிப்திய சரித்திரத்தில் நடந்திருக்கிறது. எகிப்திய சரித்திரத்தில் முக்கியமான பெண்ணரசியையும் மற்றும் ஆக்நாட்டன் எனப்படும் அரசரையும் அவர்கள் சார்ந்த தடயங்களையும் அழித்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
இதுவரையிலும் நான் பார்த்த கட்டிடங்களைப் பின்தொடர்ந்து அதை கட்டியவர்களின் வரலாற்றை எழுதியிருந்தேன். இப்பொழுது அழிக்கப்பட்டு இல்லாமல்,அரூபமாகியிருக்கும் ஒரு கோயில் சார்ந்த வரலாற்றை சொல்ல விரும்புகிறேன்.
உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல, பிற்காலத்தில் தோன்றிய யூத, கிறிஸ்த்துவ, இஸ்லாமிய மதங்களின் தெய்வ கோட்பாட்டின் அடித்தளம் இங்கிருந்துதான் உருவாகியது. மதங்கள், கோட்பாடுகள், மார்க்கங்கள் எல்லாம் புதிதாக தோன்றியவை அல்ல. முற்காலத்து நம்பிக்கை, கோட்பாடுகளின் அடிக்கருவின் பரிணாம வளர்ச்சி.
உடைக்கப்பட்ட ஆக்நாட்டனின் அந்தக் கோயிலை தற்பொழுது இணையத்தில் உருவாக்கியுள்ளார்கள் எகிப்திய ஆராய்ச்சியாளர்கள் என்பது வேறு ஒரு கதை. அழிக்கப்பட்ட கோயில் ஆக்நாட்டனால்( Akhenaten) புதிதாக கர்நாக் கோயில் பிரதேசத்தில் கட்டப்பட்டது. அந்தக்கோயில், பிற்காலத்தில் வந்த 18 ஆவது வம்சத்தில் வந்த ஹோறமெப் (Horemhep)அரசனால் முற்றாக உடைக்கப்பட்டு அவனது காலத்தில் புதிய கட்டிடமாக உருவானது.
18 ஆம் வம்சத்தில் வந்த அரசன் பிரபலமான ஆமன்ஹோரப் 3 இன் மகனாக நாலு வருடங்கள் தந்தையுடன் இணை அரசனாக(Co-regent) இருந்து பின்பு ஐந்து வருடங்கள் ஆமன்ஹோரப் 4 ஆக அரசாளுகிறான். மனைவியாக நெபிரிட்டி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்த பிற்காலத்தில் பிரசித்தமான துட்டன்காமனின் தந்தையும் இவனேயாவான்.
இந்தக்காலத்தில் அட்டன்(Aten- Solar disk) மட்டுமே கடவுள் எனக் கூறி தனது பெயரை ஆக்நாட்டனாக மாற்றியதுடன் இவ்வளவு காலமும் சிறு தெய்வமாக இருந்து வந்த அட்டனுக்காக கோயில் கட்டுகிறான்.
அந்தக்கோயில் வழக்கமான கோயில் போல் இல்லாது கூரையற்று சூரிய வெளிச்சத்தை உள்ளே கொண்டு வருவதற்கு ஏற்ப தூண்களை மட்டும் கொண்டது. இந்தத் துண்களில் – சூரியனில் இருந்து ஒளிவருவதாகவும் அதில் இருந்து ஆக்நாட்டன் மற்றும் நெபிரிட்டியும் வணங்கி அருள் பெறுவதாக கற்சித்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கோவில் பிற்காலத்தில் உடைக்கப்பட்டபோதும் பாவிக்கப்பட்ட கற்கள் மற்றைய கோயில்களில் பாவிக்கப்பட்டதால் – ஆராய்ச்சியாளர்கள் 45000 கற்களை படம் எடுத்து அந்த கோவில்களை கணினியில் மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்கள். சூரியஒளியை மட்டுமே ஒரே தேவனாக ஏற்றுக்கொண்டு மற்றைய எகிப்திய கடவுள்களை நிராகரித்தது மட்டுமல்ல – மேலும் ஒரு படி சென்று அட்டன் எகிப்தியருக்கு மட்டுமல்ல சகல நாட்டினருக்கும் பொதுக்கடவுளாக பிரகடனப்படுத்தப்படுகிறது.
இது முக்கியமான விடயம். அக்காலத்தில் எகிப்தியர்கள் பின்பு யூதர்கள் கடவுளை தங்களது இனத்துக்கு மட்டுமே என்று வைத்திருந்தார்கள். அதாவது இந்தியக் கிராமங்களின் குல தெய்வம் என வணங்குவது போன்று வைத்திருந்தார்கள்.
இப்படியான காலகட்டத்தில் புதிய மதமொன்றை உருவாக்கியதால் உலகத்தில் ஒரே தெய்வம் என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதே ஆக்நாட்டன்தான். இதைவிட இந்த அட்டன் – உருவம் கொண்ட கடவுள் அல்ல – இதை உருவத்தில் சிறைப்பிடிக்க முடியாது என ஆக்நாட்டனாலே பாடல் புனையப்படுகிறது.
நேரடியாக சூரிய ஒளியை வணங்குவதன் மூலம் முதலாவது அரூபமான கடவுளான கோட்பாடு வரலாற்றில் உருவாகிறது. ஆக்நாட்டனின் இந்த புதியமதம் 3300 வருடங்களுக்கு முன்பே உருவாகியது. மோசேயின் காலத்திற்கு முன்பாக மட்டுமல்ல, பைபிளின் முன்பானது. பைபிளின் பழைய கோட்பாட்டின் பெரும்பகுதிகள் எழுதப்பட்டகாலம் யூதமக்கள் பாபிலோனில் நாடு கடத்தப்பட்டிருந்தகாலம் என பல சரித்திர ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இது நடந்த காலம் கிறிஸ்த்துவுக்கு முன்பான ஆறாவது நூற்றாண்டு.
ஆக்நாட்டனின் புரட்சி அக்கால எகிப்திய சமூகத்தில் எவ்வளவு மாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதை எம்மால் அனுமானிக்க முடியும். தற்கால இந்தியாவில் சகல கோயில்களையும் ஒரு கணநேரம் இல்லாமல் செய்வதாக அரசு சட்டம் உருவாக்கினால் ஏற்படும் குழப்பத்தை நம்மால் நினைக்க முடியுமா?
எகிப்தில் ஆக்நாட்டனின் புரட்சி மதத்தோடு மட்டும் நிற்கவில்லை. ஆக்நாட்டன் தனது குழந்தைகள் மனைவி என குடும்பமாக இருப்பது, கல்லோவியமாக வரையப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் மற்றைய எகிப்திய அரசர்களது விரிந்த தோள்கள், ஒடுங்கிய இடை, உறுதியான தொடைகள் என ஆண்மை தெரிவதற்குப் பதிலாக – விரிந்த தலை, ஓரலான முகத்துடன், பெண்களுக்கு இருப்பதுபோன்ற உப்பிய மார்பு – பெரிய இடுப்பு என மொத்தத்தில் அவலட்சணமான ஆணாக அட்டன்காமனை செதுக்கிய சிலை எகிப்திய மியூசியத்தில் உள்ளது.
இரண்டாயிரம் வருடங்களாக எகிப்தில் அரசன், மதம், மற்றும் இராணுவம் என முக்கோணமாக கட்டமைக்கப்பட்டு இருந்த சமூகத்தில் இந்த மாற்றம் சுனாமிபோல் தாக்கத்தை உருவாக்கியது ஆச்சரியமானது அல்ல. ஏராளமான கடவுளர் ஆலயங்கள் – அந்த ஆலயங்களின் பெரும் சொத்துகளைத் தலைமுறை தலை முறையாக அனுபவிக்கும் மதகுருமார் – அவர்களை மருத்துவம், ஜோதிடம, மந்திரம் முதலான பல தேவைகளுக்கும் நம்பியிருக்கும் எகிப்திய சமூகம் வலைப்பின்னலாக இருந்த நிலையில் – பல வகையில் புதிய மதம் தாக்கத்தை உருவாக்கியது. அத்துடன் பொருளாதார, சமூக நிலையில் பாதிப்பை உருவாக்கியதால் தீப்பசில் இருந்து அரசன் தனது இராஜதானியை வெளியிடத்திற்கு கொண்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது. பாலைவனத்தில் புதிய நகரம் – அரசமாளிகை என்பனவற்றை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஆக்நாட்டனுக்கு ஏற்பட்டது. இந்தப் புதிய மதக்கொள்கையால் ஆக்நாட்டன் ஆட்சியின் ஐந்தாவது வருடத்தில் தீப்பஸில் இருந்து வெளியேறி பாலைவனத்தில் – நைல் நதியின் 200 மைல்கள் தூரத்தில் புதிய அமரனா (Amarna) ) என்ற தலைநகரை வடிவமைக்கிறான். அந்தப் புதிய நகரம் முழுமையாக முற்றுப்பெறாதபோதும் அங்கிருந்தபடி அரசாள்கிறான்.
அவுஸ்திரேலிய தலைநகரமான கன்பராவில் இருந்து வெளியேறி சாம்சன் பாலைவனத்திலோ அல்லது புது டில்லியல் இருந்து வெளியேறி தார் பாலைவனத்திலோ புதிய தலைநகரம் அமைப்பது போன்ற செயலுக்கு ஒப்பானது அந்த அரசனின் செயல்.
தீப்பஸ் எகிப்தின் ஆன்மீக தலைநகரமாக பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. எகிப்த்தில் நைல் நதியின் கொடையால் மக்களது தேவைக்கு மேல் உணவு விளைந்ததால் ஏற்படும் உபரி தானியத்தின்மூலம் எக்காலத்திலும் இராணுவத்தை வைத்திருக்க முடிந்தது. இதனால் காலம் காலமாக எகிப்திய மன்னர்கள் வடக்கே பாலஸ்தீனம், அரேபியா, தற்போதைய துருக்கி, தெற்கே நூபியா எனப்படும் சூடான் மீதும் படை எடுத்தார்கள். இந்தப் படை எடுப்பின் விளைவாகப் பெற்ற செல்வம் கோயில்களுக்கும் நன்கொடையாக கொடுக்கப்படும். ஆமரனாவில் ஆக்கநாட்டன் அரசாண்டகாலத்தில் எகிப்திய இராணுவம் எந்த படை எடுப்பும் செய்யாதது மட்டுமல்ல இராணுவத்தைப் பாராமரிப்பதும் நடக்கவில்லை. வெளிநாட்டு விவகாரத் தொடர்புகள் நலிந்து போனது.
பதினேழு வருடங்கள் அரசாண்ட ஆக்நாட்டன் இறந்தபோது – இந்த மதமும் தலைநகரமும் அழிந்து விடுகிறது. ஆக்நாட்டனின் இரண்டாவது மனைவியின் மகனாக துட்டன்காமன் மீண்டும் பன்னிரண்டு வயதில் தீப்பசில் அரசாளுகிறான். அதேவம்சத்தில் சேனாதிபதியான ஹோரெம்ஹப் (Horemheb) 17 வருடங்களின் பின்னர் அரசுக்கட்டில் ஏறியபோது ஆக்நாட்டனது மகனான துட்டன்காமனது காலம் வரலாற்று பதிவுகளில் இருந்து அழித்து விடுகிறது. அத்துடன் முப்பது வருடங்கள் அரசாண்ட தனது காலத்தை 57 வருடமாக்கியதன் மூலம் ஆக்கநாட்டன் அரசாண்ட அமரனா காலத்தை உத்தியோகபூர்வமான பதிவில் இருந்து எடுத்துவிடுகிறான். ஆக்நாட்டனின் கோயிலின் கற்களை பாவித்து கர்நாக்கோயிலில் ஒன்பது, பத்தாவது நுழைவாயில்களை கட்டியதால் அந்த நுழைவாயில் கற்களில் இருந்து இன்றைய எகிப்த்தியலாளர்கள் ஆக்நாட்டனது காலத்தை மீள உருவாக்க முடிந்தது.
(தொடரும்)
மறுமொழியொன்றை இடுங்கள்