முருகபூபதி
இந்தியாவை தாய்நாடென்றும் இலங்கையை சேய்நாடென்றும் காலம் காலமாக கூறிவருகிறார்கள். இந்த சேய் நாடு பலவிடயங்களில் இந்தியாவுக்கு முன்மாதிரியான நாடென்று மட்டும் எவரும் சொல்ல முன்வருவதில்லை.
இலங்கையில் இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப் போராட்டமாக வெடித்து இனச்சங்காரம் தொடங்கியதும் 1983 இல் இந்திராகாந்தியினால் முதலில் அனுப்பப்பட்ட தூதுவர் நரசிம்மராவ். பிறகு ஜி. பார்த்தசாரதி. அதன்பிறகு பலர் பேச்சுவார்த்தை நடத்தும் தூதுவர்களாக வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை – இந்தியாவில் அரசுகள் மாறினாலும் தூதுவர்கள் வந்துதிரும்பும் காட்சிகள் தொடரும். இவ்வாறு நாட்டுக்கு நாடு தூதுவர்கள் இயங்கினார்கள். இந்தப்பின்னணிகளுடன் தமிழ் மொழிக்காகவும் தமிழியல் ஆய்வுக்காகவும் உலகெங்கும் பயணிப்பதற்காகவும் இலங்கையில் ஒரு தூதுவர் தயாரானார். அவர்தான் எங்கள் தனிநாயகம் அடிகளார்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத்தமிழ் செய்யுமாறே என்ற அடிகளாரின் வாசகம் தமிழ் உலகில் பிரபலமானது.
இறைபணியுடன் தமிழ்ப்பணியும் மேற்கொண்டவரின் நூற்றாண்டுகாலத்தில் அவரது தமிழாய்வுப்பெரும்பணிக்குப்பின்னாலும் அவரது மறைவுக்குப்பின்பும் நிகழ்ந்தவற்றை திரும்பிப்பார்க்கலாம். அவரோடு இணைந்து செயற்பட்டவர்களும் அவரது இருப்பை மறைத்து தமது தன்முனைப்பை பறைசாற்றிய அரசியல்வாதிகளும் திரும்பிப்பார்க்கலாம்.
1913 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி பிறந்து 1980 செப்டெம்பர் 1 ஆம்திகதி தமது 67 வயதில் மறைந்தார். 1968 இல் தமிழக முதல்வர் அண்ணாத்துரையின் காலத்தில் சென்னையில் இரண்டாவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடந்தவேளையில் இலங்கைத் தமிழ் வாசகர்கள் மத்தியில் தனிநாயகம் அடிகள் பரவலாக பேசப்பட்டார். எனினும் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 1966 இலேயே அவர் வித்திட்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் முதலாவது மாநாட்டை நடத்திவிட்டார்.
கோலாலம்பூரில் ஒரு மண்டபத்தில் அமைதியாக நடந்த முதலாவது ஆராய்ச்சி மாநாடு எப்படியோ தமிழக அரசின் வசம் சென்றதனால் அண்ணாத்துரை தமிழுக்கு கோலாகலமான வடிவத்தை வழங்கி ஊர்வலங்கள் மற்றும் சிலை வைக்கும் சடங்குகளையும் பொன்னாடை சந்தனமாலை போர்க்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கோலங்களையும் மரபாகவே வளர்த்துவிட்டார். படிப்படியாக ஆராய்ச்சிகள் பின்னகர்த்தப்பட்டு களியாட்டங்களும் வெற்றுப்புகழாரங்களும் முன்னிறுத்தப்பட்டன.
நான்காவது மாநாடு (1974) தமிழகத்திலிருந்து விசா அனுமதியின்றி வந்த ஒருவரினால் அரசியலாக்கப்பட்டு, சிலரது உயிரையும் பலியெடுத்து கண்ணீருடனும் உணர்ச்சிக்கொந்தளிப்புடனும் யாழ்ப்பாணத்தில் முடிவடைந்தது. மரணித்தவர்களின் நினைவுத்தூபியும் ஆளும்தரப்பினராலும் (ஸ்ரீமா – ஜே. ஆர். பிரேமதாஸ காலத்தில்) தமிழுணர்வாளர்களினாலும் அரசியலாக்கப்பட்டது.
அரசியல்வாதிகளின் கையிலே தமிழ் சிக்கினால் தமிழுக்கு என்னகதி நேரும் என்பதனையும் தனிநாயகம் அடிகளாரின் அயராத தமிழ்த்தொண்டு மற்றும் அவர் வித்திட்ட ஆராய்ச்சிப்பணிகளினூடகவும் பார்க்கமுடியும்.
தனிநாயகம் அடிகளார் மறைந்த காலப்பகுதியில் நீர்கொழும்பில் இந்து இளைஞர் மன்றத்தில் நான் ஒரு சாதாரண உறுப்பினர். எனது நண்பர் பஞ்சநாதன் விக்னேஸ்வரன் அடிகளாரிடத்தில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். என்னூடாக மன்றத்தில் தனிநாயகம் அடிகளாருக்கு ஒரு அஞ்சலிக்கூட்டத்தை நடத்துவதற்கு ஆலோசனை சொன்னார். மன்றத்தின் செயற்குழுவிடம் பலதடவை சொன்னேன்.
தனிநாயகம் அடிகளாரை ஒரு கத்தோலிக்க மதகுருவாகவே சிலர் அடையாளப்படுத்திக்கொண்டிருந்தனர். எமது மன்றம் இந்து சமயம் சார்ந்தது. பரந்துபட்ட பார்வையற்ற குறுகிய சமயப்பற்றாளர் மத்தியில் எமது குரல் மந்தமாகவே ஒலித்தது. காலம் கனியும் வரையில் காத்திருந்தோம். 1980 இல் தனிநாயகம் அடிகள் மறைந்து சில மாதங்களில் மன்றத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் நடந்தது. தெய்வேந்திரம் என்ற அன்பர் தலைவரானார். நான் செயலாளரானேன். கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், 18-02-1981 இல் ஒரு பௌர்ணமி தினத்தன்று தமிழ்த்திரு தனிநாயகம் அடிகளார் அஞ்சலிக்கூட்டம் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் அச்சடித்து வெளியிட்டோம். இந்த நிகழ்வுக்கு நண்பர் விக்னேஸ்வரன் பக்கத்துணையாக நின்றார்.
2013 – 2014 காலப்பகுதி தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு காலமாகும். உலகெங்கும் அன்னாருக்காக விழாக்களும் ஆய்வுக்கருத்தரங்குகளும் நடைபெற்றுவருகின்றன. சிங்கப்ப+ரில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு நிகழ்வை நடத்தவிருக்கும் குழுவில் தற்பொழுது விக்னேஸ்வரன் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவிலும் சில தமிழ்அமைப்புகளிடமும் தனிநாயகம் அடிகளார் நினைவு நிகழ்வுகளை நடத்துமாறு சொல்லிவருகின்றேன்.
கடந்து (நடந்து) வந்த பாதைகளை மறப்போமேயானால் செல்லும் பாதையும் இருட்டாகிவிடும். தனிநாயகம் அடிகள் தமிழகத்தில் மறக்கப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. கலைஞர் கோயம்புத்தூரில் நடத்திய செம்மொழி மாநாடு அதற்கு சிறு உதாரணம்.
நீர்கொழும்பில் 81 இல் நாம் நடத்திய அஞ்சலிக்கூட்டத்தில் பேசுவதற்காக கலாநிதி வண. அன்டனி ஜோன் அழகரசனை விக்னேஸ்வரன் அழைத்திருந்தார். அவர் நீர்கொழும்பு சென்.மேரிஸ் தேவாலயத்தில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தோம். அடிகளாரின் வாழ்க்கைச்சரிதத்தை அவர் அச்சமயம் எழுதிக்கொண்டிருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியவிடயத்தையும் சொல்லிவிடுகின்றேன். நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் திருமுறை ஓதலுடன்தான் தொடங்குவது மரபு. மன்றத்தின் அமைப்புவிதிகளிலும் இந்த மரபு பதிவாகியிருக்கிறது. தனிநாயகம் அடிகாளாரின் அஞ்சலிக்கூட்டமும் திருமுறை ஓதலுடன்தான் தொடங்கியது. வண. அன்டனி ஜோன் அழகரசன், வண. பட்றிக் ஞானப்பிரகாசம் பெயர்மறந்துவிட்ட ஒரு அருட்சகோதரி ஆகியோரும் திருமுறை ஓதலின்பொழுது எழுந்து நின்று மௌனமாக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிகழ்வுக்கு வருகைதந்து உரையாற்றிய ஆ. தேவராசன் அடிகளார் மறைந்த செப்டெம்பர் மாதமே ஒரு கட்டுரைத்தொடரை உடனடியாக தினகரனில் எழுதினார்.
தனிநாயகம் அடிகளார் மத நல்லிணக்கம் இன நல்லிணக்கம் குறித்த சிந்தனையுடன் மாத்திரமல்ல சர்வதேசியவாதியாகவும் விளங்கியவர். அவருக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் மட்டுமல்ல சில உலகமொழிகளும் தெரியும்.
கோலாலம்பூரில் நடந்த முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் சிங்கள அறிஞர்களும் கலந்துகொண்டனர். 22 நாடுகளைச்சேர்ந்த 132 பிரதிநிதிகளும் 40 பார்வையாளர்களும் கலந்துகொண்ட இந்த முதல் மாநாட்டில் 150 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன என்றும் சிங்களக்கவிதைகளில் பாரதியின் தாக்கம் சிங்கள இலக்கியத்தில் குறளின் செல்வாக்கு சிங்களத்தில் தமிழின் செல்வாக்கு முதலான தலைப்புகளில் சிங்கள அறிஞர்கள் கட்டுரைகள் சமர்ப்பித்ததாகவும் ஆ. தேவராசா தமது கட்டுரையில் பதிவுசெய்கிறார்.
இன்றைக்கு இதுவெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வியும் மனதில் எழுகின்றது.
குறிப்பிட்ட தொடரை சிறிய நூலாகத்தொகுத்து கொழும்பு கிறித்தவ தமிழ்ப்பண்பாட்டுப்பேரவை – விவேகானந்தா மண்டபத்தில் 07-10-1980 இல் நடந்த அடிகளாரின் இரங்கல்கூட்டத்தில் வெளியிட்டது.
தேவராசா பண்டிதர் க.பொ. இரத்தினம் பேராசிரியர் க. கைலாசபதி பேராசிரியர் கா.இந்திரபாலா ஆகியோர் முறையே பதிப்புரை ஆசியுரை முன்னுரை அணிந்துரை எழுதியிருக்கின்றனர்.
சென்னையில் நடந்த இரண்டாவது மாநாட்டினை குறிப்பாக அலங்கார ஊர்திகளின் ஊர்வலக்காட்சிகளையும் அமைக்கப்பட்ட சிலைகளையும் விவரணப்படமாக எடுத்தார் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன். காட்சிகளை தமக்கே உரித்தான அடுக்கு வசனங்களில் எதுகை மோனையுடன் விபரித்தார் கலைஞர் கருணாநிதி.
அக்காலப்பகுதியில் தமிழ்த்திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் தொடங்கும் முன்னர் அல்லது இடைவேளையின் பின்னர் குறிப்பிட்ட விவரண வண்ணப்படம் காண்பிக்கப்பட்டது. கலைஞரின் தமிழுக்காகவும் மாநாட்டுக்காட்சிகளை கண்டுகளிப்பதற்காகவுமே அப்பொழுது நீர்கொழும்பு ராஜ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த கணவன் படத்தை பலதடவை பார்த்திருக்கின்றேன்.
கம்பனுக்கோர் சிலை வள்ளுவனுக்கோர் சிலை பாரதிக்கோர் சிலை பாரதிதாசனுக்கும் ஓர் சிலை என்று பலருக்கும் சிலை அமைத்திட்ட எங்கள் அண்ணாவுக்கும் ஓர் சிலை என்றார் கலைஞர் அந்தவிவரணச்சித்திரத்தில். என்னுடன் படித்த ஒரு மாணவன் கலைஞரின் தமிழைப்பாடமாக்கிவந்து வகுப்பில் கலைஞரின் கரகரத்த குரலில் மிமிக்கிரி செய்து பேசி எங்களை சிரிக்கவைப்பான்.
தனிநாயகம் அடிகளாரிடமிருந்து அரசியல்வாதிகளின் கையில் தமிழாராய்ச்சி மாநாடு எவ்வாறு கைமாறியது என்பது புரியாதபுதிர்தான். சென்னை மாநாட்டினால் விளைந்த ஒரே ஓரு நற்பயன் அங்கே தமிழாராய்ச்சி நிலையம் அமைந்ததுதான். அடிகளாரின் கனவு அதில் மாத்திரமாவது நனவானதையிட்டு நாம் ஆறுதலடையலாம். ஆனால் அங்கும் வாசலில் அம்மாவின் திருவுருவம் காட்சி தருவதுதான் நெருடலாக இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டில் முதல்வர்களாக இருந்த அண்ணா சென்னையில் 1968 இலும் எம்.ஜி.ஆர் மதுரையில் 1981 இலும் ஜெயலலிதா தஞ்சையில் 1995 இலும் நடத்தினர். அவர்களைப்போன்று தமது பதவிக்காலத்திலும் கலைஞர் கருணாநிதி தமிழாராய்ச்சி மாநாடு நடத்த விரும்பினார். அரசியல்வாதிகளிடத்தில் ஆராய்ச்சி மாநாடுகள் சிக்கினால் என்ன நடக்கும் என்பது தெரிந்தமையாலோ என்னவோ உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைமைக்குழுவில் இருக்கும் ஜப்பானிய அறிஞர் கலாநிதி நொபுரு கராஷிமா அதற்கு அனுமதியளிக்கவில்லை.
அதனால் கலைஞர் தமது ஆட்சியில் செம்மொழி மாநாடு நடத்த நேரிட்டது. அதில் அவரது திரைப்பட வசனங்கள் தொடர்பாகவும் சிலர் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்ததாக அறியக்கிடைக்கிறது.
எம்.ஜி.ஆர் மதுரையில் நடத்திய மாநாட்டிலும் ஜெயலலிதா தஞ்சையில் நடத்திய மாநாட்டிலும் கலைஞர் கலந்துகொள்ளவில்லை. கலைஞர் கோவையில் நடத்திய செம்மொழி மாநாட்டை ஜெயலலிதா புறக்கணித்தார்.ஆனால் அற்கெல்லாம் முன்னர் 1968 இல் அண்ணாத்துரை சென்னையில் முன்னின்று நடத்திய இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் எதிரணியிலிருந்த காமராஜர் கலந்துகொண்டதுடன் உரையும் நிகழ்த்தி தனது பண்பினை வெளிப்படுத்தினார்.
ஜெயலலிதா தஞ்சையில் மாநாடு நடத்தியபொழுது – புலிப்பூச்சாண்டி – பாதுகாப்பு காரணங்கள் எனச்சொல்லிக்கொண்டு இலங்கைத் தமிழ் அறிஞர்களான பேராசிரியர்கள் சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் உட்பட பலரை பலவந்தமாக திருப்பியனுப்பிய கதை தெரிந்ததுதானே.
தஞ்சையில் மாநாட்டை தொடக்கிவைத்த முதல்வர் ஜெயலலிதா மாநாட்டு மண்டபத்தில் அமருவதற்கான பிரத்தியேக சிம்மாசனம் சென்னையிலிருந்து பலத்த பாதுகாப்புகளுடன் ஒரு ட்ரக்வண்டியில் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த மாநாட்டு அமைப்பாளர்கள் அந்த சிம்மாசனத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தை மாநாட்டை மங்கலகரமாக ஆரம்பித்து வைப்பதற்காக தீபம் ஏற்றப்படவேண்டிய பெரிய குத்துவிளக்கில் காண்பிக்கவில்லை. மாநாடு தொடங்கும் நேரத்தில் எங்கோ ஒரு வீட்டிலிருந்து தேடி எடுத்துவந்த சின்னஞ்சிறிய குத்துவிளக்கினை அன்றைய இந்திய துணை ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் ஏற்றிவைத்தார்.
கலைஞர் நடத்திய செம்மொழி மாநாட்டில் தனிநாயகம் அடிகள் பற்றி பேசுவதற்கும் நாதியில்லை. இந்த நிகழ்வுகளையெல்லாம் திரும்பிப்பார்த்தமையினால்தான், 2011 இல் நாம் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் எந்தவொரு அரசியல்வாதியையும் மேடையேற அனுமதிக்கவில்லை. பொன்னாடைகளும் பூமாலைகளும் மாநாடு நடந்த தமிழ்ச்சங்கத்தின் பக்கமே தலைகாட்டவும் இல்லை. பதவியிலிருந்த ஒரு அமைச்சர் ஏன் தங்களை புறக்கணிக்கிறீர்கள்? என்று சுமார் கால்மணிநேரம் என்னுடன் தொலைபேசியில் வாதிட்டார். ஜனாதிபதியிடமிருந்து வாழ்த்துச்செய்தி வாங்கித்தருகிறேன் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார்.
அந்த அமைச்சரை வெகு சாதுரியமாக சமாளித்தேன். பிறகு அவர் அந்தப்பக்கமே வரவில்லை. ஆனால் சித்தார்த்தனும் மாவை சேனாதிராஜாவும் பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டனர். எமது மாநாட்டின் அங்குரார்ப்பண விழா தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் உருவப்படத்துடன் அவரது பெயரில் அமைக்கப்பட்ட அரங்கிலேயே ஆரம்பமானது. எனது தொடக்கவுரையிலும் மாநாட்டு இணைப்பாளர் டொக்டர் தி. ஞானசேகரனின் வரவேற்புரையிலும் தனிநாயகம் அடிகளாரை விதந்து குறிப்பிட்டோம்.
தனிநாயகம் அடிகள் தமிழ் ஆராய்ச்சிப்பணிகளுக்கு மாத்திரம் வித்திட்ட முன்னோடி அல்ல. தமிழின் பெயரால் உலகெங்கும் தமிழ் மாநாடுகள் நடத்துபவர்களுக்கும் இனிவரும் காலங்களில் நடத்தவிருப்பவர்களுக்கும் முன்னோடியாகவே விளங்குவார்.
தாம் முன்னின்று நடத்திய மாநாடுகளின்பொழுது ஊடகங்களின் சில செயற்பாடுகள் குறித்து அவரும் விரக்தியுற்றிருந்ததாக எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சகோதரி யோகா பாலச்சந்திரன் தமது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருக்கிறார். செய்திகளை ஊதிப்பெருக்கவைத்து பக்கம் நிரப்புவதற்காக நல்லநோக்கங்களை சிதறடித்த பத்திரிகைகள் தொடர்பாகவும் அவருக்கு கோபம் இருந்திருக்கிறது.
தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் பணியாற்றிய யோகா பாலச்சந்திரனை பிரதம ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகம் – தனிநாயகம் அடிகளாரிடம் ஒரு நேர்காணலுக்காக அனுப்பியிருக்கிறார். முன் அனுமதியுடன்தான் யோகா அவரிடம் சென்றார். நேர்காணல் எழுதப்பட்டதும் தமக்கு அதனை வாசித்து காண்பிக்கவேண்டும் என்ற முன்நிபந்தனையுடன்தான் அடிகளார் நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டாராம். இலங்கையில் நான்காவது அனைத்துலக தமிழராய்ச்சி மாநாடு இழுபறி தலைசுமையுடன்தான் நடந்தேறியது.
எதிரும் புதிருமான பத்திரிகை அறிக்கைகள் அடிகளாரை அச்சமயம் சோர்வடையச்செய்திருந்ததாக கனடாவில் தற்பொழுது வதியும் யோகா பாலச்சந்திரன் ஒரு சந்தர்ப்பத்தில் தொலைபேசி ஊடாக எனக்குச்சொன்னார்.
இலக்கியம் ஊடகம் மற்றும் பொது வாழ்வில் ஈடுபடும் எம்போன்றவர்களுக்கு அடிகளாரின் அனுபவங்கள் புத்திக்கொள்முதல்.
யோகா பாலச்சந்திரனின் குறிப்பிட்ட கட்டுரை ஞானம் இதழில் வெளியாகியிருக்கிறது.
நீர்கொழும்பில் தனிநாயகம் அடிகளாரின் அஞ்சலிக்கூட்டத்தையடுத்து கலாநிதி வண. அன்டனி ஜோன் அழகரசன் எனது இனிய நண்பரானார். மட்டக்களப்பில் பிறந்து புனித மைக்கல் கல்லூரியில் கற்று கண்டி குருத்துவக்கல்லூரியில் பயின்று குருவானவர். பழகுவதற்கு இனியவர். அவரது சிரிப்பு உள்ளத்தைக் கவரும். மறக்க முடியாத முகம். அவர் யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்த செமினரியிலிருந்தபொழுது 1983 தொடக்கத்தில் அவரிடம் சென்றேன். அச்சமயம் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை முன்னிட்டு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் அறிஞர்கள் எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சியும் நடத்தியது. தனிநாயகம் அடிகளாரின் படமும் தேவைப்பட்டது. அன்டனி ஜோன் அழகரசன் எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அடிகளாரின் படத்தை தந்து உதவினார். அப்பொழுது அடிகளார் பற்றி தாம் எழுதியிருந்த (வாழ்வும் பணியும்) நூலின் அச்சுப்பிரதியை ஒப்புநோக்கிக்கொண்டிருந்தார். இதுவரையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதினேழு நூல்களை எழுதியிருக்கிறார்.
அன்டனி ஜோன் அழகரசனின் வள்ளுவமும் விவிலியமும் என்ற நூலுக்கு தமிழ்நாட்டில் விருதும்பாராட்டும் கிடைத்துள்ளன. தனிநாயகம் அடிகளால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்க்கல்சர் ஆங்கில இதழின் ஆசிரியர் குழுவிலும் அழகரசன் இணைந்துள்ளார். தற்சமயம் அமெரிக்காவில் வதியும் அன்டனி ஜோன் அழகரசனை, தனிநாயகம் அடிகளாரின் வாரிசு என்றுகூடச்சொல்லாம்.
இலங்கையில் தனிநாயகம் நூற்றாண்டு நிகழ்வுகள் பல நடந்தன. கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழ் அடிகளாருக்காக சிறப்பிதழும் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தளம் இதழும் அடிகளார் பற்றிய சிறந்ததொரு ஆய்வினை பதிவுசெய்துள்ளது.
தமிழுக்குத்தொண்டு செய்த பல கத்தோலிக்கமதகுருமார் இலங்கையில் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி அறிந்தவர்கள் அவர்களது வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யவேண்டும்.
தமிழ் மாநாடுகள் நடத்துபவர்கள் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரை மறந்துவிடாமல் அவருடைய நாமத்தில் அரங்குகள் அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். தமிழ் ஆய்வுகள் தேர்ந்த ரசனையை நோக்கி நகரவேண்டும்.
மறுமொழியொன்றை இடுங்கள்