அலேர்ஜியும் ஆஸ்மாவும்

Poodle

ஆஸ்மாவும் அலேர்ஜியும் சயாமிய இரட்டையர்கள் போல அவுஸ்த்திரேலியாவில் பொதுவாக ஒன்றாகத்தான் காணமுடியும். பிரிந்திருப்பது குறைவு

அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் நியூசிலண்டும்தான் உலகத்திலேயே அதிக ஆஸ்மா நோயாளர்களைக்கொண்ட இடங்களாகும். அவுஸ்திரேலிய பத்திரிகைகள் மெல்பேனை ஆஸ்மாவின் தலைநகரம் எனக்கூறுவார்கள்.

ஸ்பிரிங் காலத்தில் ஈரலிப்பான வெட்பத்தில் தாவரங்களின் மகரந்தமணிகள் வெடித்து பரவமுயலும்போது மனிதர்களின் சிறிய சுவாசத்துவாரங்களில் (Bronchiole) சென்று அலேர்ஜியை உருவாக்கி அந்த துவாரங்களை சுருக்கிவிடும். இதானால் சுவாசிக்க சிரமம் ஏற்படும்.

இங்குள்ள தாவரங்கள் மட்டும்தானா இப்படி?. எல்லாப்பிரதேசத்திலும் இது நடக்கிறதுதானே என கேட்கலாம்.

உண்மைதான். இங்கே வாழ்பவர்கள் இந்தத் தாவரங்களின் சூழலுக்கு இசைவுபட பல தலைமுறையாக வாழ்ந்தவர்கள் அல்ல. வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள். தாவரங்களுக்குப் புதியவர்கள்.

இந்த அலர்ஜியால் உருவாகும் ஆஸ்மா என்னையும் விட்டுவைக்கவில்லை. ஸ்பிரிங், சம்மர் காலத்தில் அஸ்மா பம் எனப்படும் சிறு ஸ்பிறேயுடன்தான் நான் வாழ்வேன். மார்கழி மாத விடுமுறையில் இலங்கை, இந்தியா சென்றால் எனக்கு ஆஸ்மா வராது.

நான் ஆகாயவிமானத்தில் ஏறியதும் ‘இவன் எனக்கு பிரயோசனப்படமாட்டான். மீண்டும் திரும்பிவரும்போது பார்ப்போம்” என கறுவிக்கொண்டு மெல்போன் விமான நிலையத்தில் எனக்காக ஆஸ்மா காவல்காத்து நிற்கும் என நினைப்பது உண்டு.

நானும் மற்றய நாட்டு விமானத் தளத்தை அடைந்ததும் பலமுறை இருமிப்பார்த்துக்கொள்வேன். தொலைத்துவிட்ட அஸ்மாநோயை உறுதிப்படுத்தி இந்த நடவடிக்கையின்பின் எனக்குள்ளே சிரித்துக்கொண்டு விமானநிலையத்துக்கு வெளியே கார்பாக்கை நோக்கி செல்வேன்.

இந்த நடவடிக்கை எனது குடும்பத்தினருக்கு தெரியாததொன்று. அது ஒரு சுகமான அனுபவம்.

இந்த நோயை அனுபவிப்பவர்களுக்குதான் அதன் கொடுமை தெரியும். சிறுவயதின் அம்மாவின் அவஸ்தையை பார்த்து வளர்ந்தேன். இக்காலம்போல் மருந்துகள் இல்லாதகாலம்.

எத்தனை இரவுகள் தூங்காது விழித்தாள். பின்பு அதற்காக எடுத்த மருந்துகள் நீரழிவு என்ற டயபட்டிஸ்சை உருவாக்கியது. தலைமுறையாக பழிவாங்கும் இரத்தப்பகை. ஆஸ்மா என்
உள்ளே கரந்துறைந்து,  பின்பு அவுஸ்திரேலியாவில் என்னை பற்றிக்கொண்டது.

அவுஸ்திரேலிய மண்ணின் அலேர்ஜி நாய் பூனைகளையும் விட்டுவைப்பதில்லை. இங்கே நான் குறிப்பிடப்போகும் விஸ்கி என்ற பூனை, அனாதரவான நாய், பூனைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கீஸ்பரோ செல்ரரில் இருந்தது. ஆரம்ப காலத்தில் குட்டியாக இருந்தபோது யாராவது எடுத்து வளர்த்திருப்பார்கள். நோயை அறிந்ததும் துரத்தப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

விஸ்கிக்கு அலேர்ஜியால் அஸ்மா ஏற்படவில்லை. ஆனால் தொண்டையில் இரண்டு இரத்தகோடுகள்போல் புண்கள் ஏற்படும். இந்த புண்ணின் உபாதையால் தொடர்ந்து உதடுகளை கடித்துக்கொண்டு இருக்கும்.

பலர் சுவிகாரம் செய்ய அந்த செல்ரருக்கு வந்தாலும் சொண்டை கடிக்கும். விஸ்கியை புறம்தள்ளிவிட்டு ஆரோக்கியமான பூனைகளை வீட்டுக்குகொண்டு சென்றார்கள்.

இறுதியாக கிறே தம்பதிகள் சுவிகாரம் எடுத்துக்கொண்டு அலேர்ஜி ஸ்பெசலிட்டிடம் சென்று காட்டி எதற்கு அலர்ஜி என கண்டுபிடித்து அதை ஒவ்வொரு மாதமும் ஊசிமூலம் ஏற்ற என்னைத்தேடி வந்தார்கள்.

இந்த கதையை அறிந்ததும் கிறே தம்பதிகள் மீது எனக்கு மதிப்பு ஏற்பட்டது. தவறாது இரண்டு வருடங்களாக என்னிடம் வரும் இவர்களுக்கு 16 வயது உள்ள ஒரு நாயும் உண்டு.

உள்காதில் தொற்றுநோய் ஏற்பட்டு பிழைத்துக்கொண்டாலும் வாய்ப்பகுதி நரம்பு பலவினமாகியதால் வாய் முற்றாக மூட இயலாது.. ஆனால் நடக்க தொடங்கிவிட்டது. நான் எதிர்பார்க்கவில்லை.

அந்த நாயுடன் தனது கணவன் காலையும் மாலையும் மட்டுமல்ல மதியத்தில் தனது வேலையின்  உணவு இடைவேளையும் வந்து பராமரிப்பார் என திருமதி கிறே கூறினார்.

பின்பு ஒருநாள் சாப்பாடு உண்ண மறுத்தது. நான் பற்களை சுத்தம் செய்யதும் மீண்டும் உணவு உண்ணத்தொடங்கியது. திரு கிறே சந்தோசத்தில் அந்த நாயுடன் எனது கிளினிக்கிலே துள்ளி விளையாடினார் .எனக்கு ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“நாயை வெளியே கொண்டுபோகும்போது மலம் கழித்தால் அந்த இடத்தை அடையாளம் தெரியாமல் அவர் துடைப்பதை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டு He is so perfect என்பார்கள் என்றார் திருமதி கிறே.

நானும் நினைத்தேன் ரெலிகொம்ல் பொறியியலாளராக வேலைபார்க்கும் திரு கிறே உண்மையில் Perfect .ஏனென்றால் மனைவியால் புகழப்படுவது இலகுவான காரியமல்ல.

வாழும்சுவடுகள் 2

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.