அசோகனின் வைத்தியசாலை-20

bird

ஒன்று விட்ட ஒரு வெள்ளிக்கிழமைகளில் காலோஸ், சுந்தரம்பிள்ளை இருவரும் அடுத்தடுத்த தியேட்டர்களில் ஆபிரேசன் செய்வார்கள். அன்று வெள்ளிக்கிழமை காலோஸ் ஒரு ஆபரேசன் தியேட்டரிலும் மற்றைய தியேட்டரில் சுந்தரம்பிள்ளை சாமுடனும் ஆபரேசன்களை செய்து கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்யும் நொறல் விடுப்பு எடுத்ததால் மருத்துவ ஆலோசனை அறையில் ரிமதி பாத்ததோலியஸ்ஸோடு வேலை செய்து வந்த ஜெனற், காலோஸ்சுக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். காலோஸ் அவளுடன் வழக்கம் போல் ஆபாச ஜோக்குகளை சொல்லியபடி ஆபரேசனை செய்து கொண்டிருந்தார். சாம் அடிக்கடி காலோஸ்சின் தியேட்டருக்கு சென்று அந்த ஜோக்குகளைக் காவிக் கொண்டு சுந்தரம்பிள்ளைக்கு சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் சுந்தரம்பிள்ளை அவற்றை இரசிக்கக் கூடிய மனநிலையில் இல்லை. இன்னும் இரு கிழமைதான் இந்த வைத்தியசாலையில் வேலை செய்ய முடியும். இந்த வைத்தியசாலை, மற்றும் சக வேலை செய்யபவர்கள் என்று மனத்தில் எல்லாம் பிடித்திருந்தது. பல இடங்களில் வேலை பிடித்திருந்தால், உடன் வேலை செய்பவர்களைப் பிடிக்காது. இரண்டும் பிடித்தாலும் மேலதிகாரிகளைப் பிடிக்காது. காலோஸ் போன்ற மேலதிகாரி நண்பனாக பழகுவதால் வேலையின் அழுத்தம் தெரியாமல் இருந்தது. வேலையும் கைகளுக்கு படிந்து வருகின்ற நேரத்தில் இப்படி நிகழ்வு ஏன் நடந்தது? இந்தோனிசியா அருகே சில கிலோ மீட்டர் கடல் ஆழத்தில் ஏற்பட்ட சுனாமி இலங்கையின் கிழக்குக்கரையில் இருந்த கட்டிடங்களை அடித்து நொருக்குவது போல் காலோஸ் மீது தொடங்கிய பிரச்சனை தன்னில் முடிந்திருப்பது கவலையுடன் விசித்திரமாக இருந்தது. சங்கித் தொடர்ச்சியாக சம்பவங்கள் நடந்துள்ளது. இதன் விளைவாக வேலை இழக்க நேர்ந்த விதத்தை மனத்தில் அசைபோடும் போது விடைகள் அற்ற விடுகதையாக இருந்தது.

காலோஸ் அன்று ஏயர்போட்டில் வந்து இறங்கிய முன்னாள் காதலி மரியாவை சந்திக்கும் அவசரத்தில் நோயுற்று அனுமதித்த பூனையைப் பற்றி பதிவு செய்ய மறந்ததும், அந்தப் பூனையை பார்த்த ரிமதி பாத்ததோலியஸ் அடுத்த நாள் அதன் உரிமையாளரை காலோஸ்சுக்கு எதிராக கடுப்பேற்றி தூண்டி விட்டது, கோபத்தில் அந்த மனிதர் காலோசின் சட்டையை பிடித்து இழுக்க முயன்ற போது , அவரை புவ்ரா எனக் கூறியபடி காலோஸ் அடிக்க சென்றதும், அந்த சம்பவத்தை விசாரித்த நிரவாக குழுவிடம் காலோஸ் தனது தலைமை வைத்தியர் பதவியை இராஜினாமா செய்தது என்பது போன்ற சம்பவங்கள் சங்கிலித்தொடராக எனது சக்திக்கு அப்பாற்பட்டு நடந்த விடயங்கள். இவை எல்லாவற்றிற்கும் கிரீடம் வைத்தது போல் ரோசியின் கால் எலும்பை ஆபிரேசன் செய்த போது சிலிண்டரில் காஸ் இல்லாமல் போய் அடுத்த சிலிணடரை ஒருவராலும் திறக்க முடியாது போனது என்பது கூட காத்திராப் பிரகாரமாக நடந்தது.

அடுக்கடுக்காக பல சம்பவங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நடந்திருக்கிறது. இவை தற்செயலானவையா? அல்லது இதன் பின் ஒரு சதி வேலை நடந்ததா என்பதற்கு விடை கிடைக்காமல் மனம் குழம்பி இருந்தாலும் சுந்தரம்பிள்ளையின் கைகள் தொடர்ச்சியாக ஆபரேசனைச் செய்து கொண்டிருந்தது.

சராசரியான மனிதர்களின் மனத்தோடு இருந்தால் எல்லாம் கடவுள் செயல் என கடவுள் மேல் பாரத்தை இறக்கி வைத்திருக்கலாம். மிருகங்களில் நோய்க்கு காரணம் தேடி குணப்படுத்த விஞ்ஞான ரீதியாக சிந்திக்க பயிற்றப்பட்ட சுந்தரம்பிள்ளையால் கடவுளை சுமைதங்கியாக்கி விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியவில்லை. அதேநேரத்தில் மனத்தில் ஏற்பட்ட அல்லாட்டத்திற்கு பிடித்துக் கொள்ள எந்த பற்றுக்கோடும் கிடைக்கவில்லை. கடவுள் நம்பிக்கை இருந்தால் மன ஆறுதலாக இருக்கலாம்என கூட நினைக்கத்தோன்றியது. சரி அப்படி கடவுளைத்தேடி பார்த்தால் எந்தக் கடவுளை எங்கே தேடுவது? பழய வேதாகமத்தில் யுதமக்களுக்கு துன்பம் வரும்போது தெய்வம் அடிக்கடி வந்து பேசுவாரே? காலோஸ்போல் கிறீஸ்தவனோ இல்லை சாமைப்போல் இஸ்லாமியனாக இருந்தால் ஒரே தெய்வம்-கொஞ்சம் இலகுவாக இருக்கும். இந்துவாக, ஊரில் பிறந்ததால் பல தெய்வம்-பேசுகிற விடயம் சிக்கலாகிவிடும். மேலும் இவ்வளவு காலம் ஏன் நம்மளை கணக்கெடுக்கவில்லை தெய்வம் கேட்டால்? எதிரின் நின்ற சாமுக்கு தெரியாமல் சிரித்தபடி அந்த சிந்தனையை புறந்தள்ளினான் சுந்தரம்பிள்ளை.

தற்பொழுது சிறிய விடயமாக இருந்த போதிலும் மனத்திற்கு கொஞ்சம் ஆறுதல் அளித்த விடயம் வேலையில் இருந்து நீக்கும் கடிதம் இன்னமும் வரவில்லை என்பதே. சட்டபூர்வமாக உன்னை அவர்கள் வேலை நீக்கம் செய்யவில்லை என சட்டத்தரணி சொல்லி இருந்தார். அது ஒரு விதத்தில் காயமான மனத்திற்கு இதமாக, காயம் வலிக்காமல் இருந்த போதும் காயம் ஆறுவதற்கான மாற்றம் ஏதும் நடப்பதாக சுந்தரம்பிள்ளைக்குத் தெரியில்லை. காலோஸ்சைப் பொறுத்தவரையில் ரிம் வேலையில் இருந்து நீக்கிய விடயம் தவறு. இந்த வேலை நீக்கம் நடக்காது என அடித்துச் சொல்லியபடி இருந்தான். பல நிர்வாக குழு உறுப்பினரிடம் சிவாவை இந்த வேலையில் நிறுத்தியது சட்டத்துக்கு புறம்பானது எனச் சொல்லி இருந்ததுடன் தனக்கு எதிரான பழிவாங்கலாக இது நடந்திருக்கிறது என தொலைபேசியில் பேசியிருந்தது சுந்தரம்பிள்ளைக்குத் தெரியும். சில வைத்தியர்களுடன் சாம் போன்றவர்கள் நிர்வாக குழுவிடம் தங்கள் அதிருப்தியை கடித மூலம் தெரிவித்திருந்தார்கள்.

பலரது தார்மீகமான ஆதரவு மனத்துக்கு சிறிது இதமாக இருந்தாலும் தேவையில்லாத பழிவாங்கல் நடவடிக்கை என்பதால் சுந்தரம்பிள்ளைக்கு கவலையுடன் கோபமும் மாறிமாறி வந்தன. குடும்பத்தின் பொருளாதர நிலை, மனைவி வேலை செய்வதால் தாக்குப்பிடிக்கலாம் என்றாலும் மன உளைச்சலால் இந்த இரண்டு கிழமைகளில் உடல் நிறையில நாலு கிலோ குறைந்ததால் இடுப்பில் கால்சட்டைக்குரிய பெல்டில் உள்நோக்கி புதிதாக துளை போட வேண்டி இருந்தது.

வேலை நீக்க விடயம் பல நாட்களாக இழுபடுவதால் வேறு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருந்தது. ரிமதி பாத்தோலியஸ் ஒரு மாத அவகாசம் தராமல் உடனடியாக வேலையில் இருந்து நீக்கியிருந்தால் இந்த மன உளச்சல் இருந்திராது. வழக்கைப் போட்டுவிட்டு வேறு இடத்தில் வேலை தேடியிருக்கலாம். அப்படி வேறு இடத்தில் வேலை கிடைப்பதற்கு இந்த வைத்தியசாலையில் கிடைத்த அனுபவம் துணையாக வந்திருக்கும்.

புதிதாகச் சேர்ந்த லெபனிய மிருக வைத்தியரான முகம்து ஜாபருக்கு மட்டும் இந்த விடயம் கருப்பு வெள்ளையாக இருந்தது. ‘ரிமதி பாத்தோலியஸ் ஒரு இனவாதி அதனால்தான் உன்னை வேலையில் இருந்து விலத்தியுள்ளான்’என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

‘ரிம் ஒரு இனவாதியாக இருப்பான் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. பலரிடம் இனவாதம் அடி மனதில் புதைந்து உள்ளது. ஆனால் இனவாதம் என்பது சிந்தனை சம்பந்தப்பட்ட விடயம். இதை தவறு நிரூபிப்பது கடினம். அதை எடுத்து நாங்கள் மற்ற அவுஸ்திரேலியர்களிடம் நியாயம் கேட்கமுடியாது. அந்த சிந்தனையால் சட்டத்தை மீறியதை வைத்துதான் எமது பக்க நியாயத்தை நாங்கள் கேட்க முடியும்’ என்பது சுந்தரம்பிள்ளையின் வாதமாக இருந்தது. அதைக் காலோஸ் ஆமோதித்தான்.

இனவாதம் என்பது எல்லோரிடமும் இருக்கிறது. யாருக்கு இல்லை? வெள்ளையர்கள் ஆசியர்களை வெறுப்பதும், சீனர்கள் கொரியர்களை வெறுப்பதும், இந்தியர்கள் ஆபிரிக்கர்களைக் கீழானவர்கள் என நினைப்பதும் பரவலான விடயம். தன்னையும் தனக்கு சுற்றமாக இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் மேல் சந்தேகம், வெறுப்பு கொள்வதும் அதற்கு இனம், மதம் , நிறம், சாதி என பல பேதங்களை துணைக்கு அழைப்பதும் காலம் காலமாக நடக்கிறது. மனத்தின் எண்ணங்களை சட்டம் போட்டு தடுக்க முடியாத போதும் இந்தப் பேதங்களைப் பாவித்து தனிநபர் ஒருவரை பழி வாங்குவதையோ, ஒதுக்குவதை சட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்பதால்அவுஸ்திரேலியாவில் பல தளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்க வழியுள்ளது.

இன்று மதியம் வைத்தியர்களது கூட்டம் இருந்தது என்பது காற்று வாக்கில் செய்தியாக பரவி இருந்தது. பதினாலு வைத்தியர்கள் வேலை செய்யும் இந்த வைத்தியசாலையில் சுந்தரம்பிள்ளை அறிய இதுதான் முதலாவது கூட்டமாகும். வைத்தியசாலையில் ரிமதி பாத்ததோலியஸ் ஆதரவானவர்கள் மிக குறைவு. ஆனால் காலோசில் அதிருப்தி கொண்டவர்கள், மற்றும் யார் வெல்வது என மதில் மேல்பூனையாக இருப்பவர்களும் கூட்டு சேராதவர்கள் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் இந்த கூட்டத்தில கலந்து கொள்ளாமலிருக்க முடிவு எடுத்ததாக தகவல் வந்தது.

மதிய உணவிற்கு பின்பாக நடக்கவிருந்த கூட்டத்தில் சுந்தரம்பிள்ளையின் ஆதரவாளர்களான முகம்மது ஜபார், காலோஸ், ஜுலியா பாக் ஆகியோர் இரண்டு மணிக்கு தயாராக வந்து தேனீர் அறையில் இருந்தார்கள். ரிமதி பாத்தோலியஸ் இரண்டு மணிக்கு சில நிமிடங்கள் தாமதாக வந்தான். வந்த போது முகக்தில் வெறுப்பு கலந்து சிவந்திருந்த இரண்டு கண்களைப் பார்த்த போது இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது சந்தோசமில்லை என்பது தெரிந்தது.

தனது முடிவுகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாதது எதிர்த்து நிற்பதும் யாருக்கும் திருப்தியளிக்கும் விடயமாக இருக்காது. ஆனாலும் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அதைத் தவிர்க்கமுடியாது. ரிமதியை எதிர்பவர்கள் அவனால் வெறுக்கப்படும் வேற்று நாட்டவர்கள் என்பதும் அவனுக்கு கசப்பாக இருந்தது. மேசையில் இருந்தவர்களில் ஜுலியாவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டவர்கள்.

ரிமதி பாத்தோலியஸ் முற்றாக தலைமயிரை சவரம் செய்த தலை, புதிதாக மரத்தில் இருந்து இறக்கிய செவ்விளனித் தேங்காய் போல் சிவந்திருந்தது. அந்த செவ்விளனி மேல் காதுகள், மூக்கு சிவப்பாக ஒட்டப்பட்டிருப்பது போல் சுந்தரம்பிள்ளைக்கு தெரிந்தது. ஒருவர் மற்றவர்களால் வெறுக்கப்படுவதாக உணர்வது அவரது மனதுக்கு கஷ்டமான விடயம். அதே போல் மற்றவர்களை ஆழமாக வெறுப்பது அதற்கு மேலான துன்பமான விடயமாக மனத்தை அரிப்பது மட்டுமல்ல ஆழமான காயத்தை உருவாக்கிவிடும். மனச்சாட்சியின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியாது விடுகிறது.

தங்களைப் பிரித்தானியர் ஆளுவதை இந்திய மக்கள் வெறுப்புடன் ஒத்துழைக்க மறுக்கும் விடயத்தை போராட்ட உபாயமாக கொண்டுதான் மகாத்மாகாந்தி உபயோகித்து பிரித்தானியரை வென்றார். அந்த உபாயத்தை மாட்டின்லூதர் கிங் அமரிக்காவிலும் நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்கவிலும் பயன்படுத்தினார்கள். இங்கே எதிரியின் மனச்சாட்சி பாதிக்கப்பட்டவர்களது கதையாயுதமாகிறது. இராணுவம், கடற்படை பல குண்டு வீசும் விமானங்களைவிட இது வலிமையானது. இரத்த ஆறு ஓடாது. இதனால் எதிர்ப்ப்பவனிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.

இப்பொழுது அதேபோல் ரிமதி பாத்தோலியஸ், மற்றவர்கள்மேல் தனது இனவாதமான வெறுப்பை சட்டத்துக்கும் தர்மத்துக்கும் முன்பும் நியாயப்படுத்த வேண்டிய கடமையை அந்த மயிர் வழிக்கப்பட்ட தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. அந்த சுமையால் அவன் தலை சிவந்திருக்கிறதோ?

நாற்காலியில் ரிம் உட்காருவதற்கு முன்பாக ‘என்ன காரணத்தை வைத்து சிவாவை வேலை நீக்கம் செய்தாய்?“ காலோசின் கேள்வி முகத்தில் அடித்தது போன்று இருந்தது.

‘வேலை நீக்கம் செய்வதற்கு காரணம் தேவையில்லை’ தலையை திருப்பி தனக்கு எதிராக இருந்த காலோஸை பார்க்காது, ஜுலியாவை பார்த்தபடி ரிம் பதில் சொன்னது பாடசாலையில் விருப்பமில்லாத ஒரு சிறுவனைப் பார்காமல் டூ விடும் மற்றய சிறுவனைப்போல் இருந்தது. மேசையில் ரிமதி பாத்தோலியஸ் எதிராக சுந்தரம்பிள்ளையும் காலோஸ் இருந்தனர். வலது பக்கத்தில் ஜுலியாவும் இடது பக்கத்தில் முகமது ஜப்பரும் இருந்தனர். இந்த நிலையில் ஜுலியாவின் அழகிய அவுஸ்திரேலிய பெண் முகத்தை பார்க்க விரும்பியது ஆச்சரியமானதன்று.

‘அப்படி யார் சொன்னது?’ கிண்டல் கலந்த குரலில்..

‘குயின்ஸ்லாண்டில் வேலை செய்த இடத்தில் என்னை வேலையில் இருந்து நிறுத்திய போது எனக்கு காரணம் சொல்லவில்லை’

அந்தப் பதில் தர்க்கமாக இருக்கவில்லை என்பதால் உடலை நெளித்து ஆசுவாச படுத்தினான்.

‘அப்படியானால் நான் உம்மை வேலைக்கு நியமனம் செய்தபோது நீர் பழைய வேலையில் இருந்து நீக்கப்பட்ட செய்தியை ஏன் சொல்லவில்லை?. இப்பொழுது பொய்யான தகவலுடன் இந்த வேலை எடுத்திருப்பதாக நான் சொல்லுகிறேன்.’

‘எனது விடயத்தை பேச இந்தக் கூட்டம் கூடவில்லை.’ சொல்லும் போது எழுவதற்கு தயாராக இருப்பதுபோல் பாவனை செய்த ரிமதியை மீண்டும் அலட்சியம் செய்தபடி வந்த காலோஸ்சின் அடுத்த கேள்வி துப்பாக்கி குண்டுபோல் இருந்தது.

“சிவாவை வேலை நீக்கிய காரணம் என்ன?“ மீண்டும் காலோஸ் உறுதியாக
மற்றவர்கள் எதுவும் போசாமல் காலோஸ்சின் வாதத்திறமையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுந்தரம்பிள்ளையின் மனத்தில் வேறு திசையில் விவாதம் போகிறது என்பது மனத்தில் தவிப்பை கொடுத்தது.

சிறிது நேர மவுனத்தின் பின்பு ‘ ஹெலன் மீகோசின் ஜேர்மன் செப்பேட்டான ரோசியின் ஆபரேசனை செய்தது தவறு. அந்த எக்ஸ்ரேயை பார்த்தேன் அந்தக் காரணமே வேலையில் இருந்து விலத்துவதற்குப் போதுமானது’.

“கடந்த கிழமை கர்ப்பப்பையில் சீழ் பிடித்த அந்த ரொட்வீலரை சேலையின் மற்றும் வலி தடுப்பு மருந்து கொடுக்காமல் ஒப்பரேசன் செய்தது எப்படி சரியாகும்’என சுந்தரம்பிள்ளை வாயில் வார்த்தைகளை வெகு தூரத்தில் ஓடும் மானை நோக்கி இழுக்கப்பட்ட வேகமான அம்பாக வந்தன.

‘உங்களோடு வாதிட நான் தயாரில்லை. நான் போகிறேன்’ என ரிமதி பாத்தோலியஸ் நாற்காலியை விட்டு எழுந்தபோது முகம் காது எல்லாம் மேலும் சிவந்தன.
‘சிவா நீ பேசாது இரு” என்று விட்டு காலோஸ் ‘ சிவா அந்த ரோசியின் ஒப்பரேசனில் தவறு செய்திருந்தால் அதைப் பற்றி பேசி எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சமாக இப்படி செய்தால் அடுத்த முறை வேலையில் இருக்க முடியாது என்று கூறி இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு முதுகெலும்பு ஒடிந்த நாய்க்கு ஆபரேசன் செய்து விட்டு அதற்கு வைத்தியசாலையில் ஓவட்டைம் கூட எடுத்திருந்தாயே. அதற்கு நான் என்ன செய்திருக்க வேண்டும்?’ எனச் சிரித்தபடியே கேட்டபோதுதான் பூகம்பம் வெடித்தது.

நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்து நின்றபடி ‘காலோஸ், நீ இந்த வைத்தியசாலையை ஒரு சந்தைக்கடையாக நடத்துகிறாய். அறிவற்றவர்களை வேலைக்கு வைப்பதன் மூலம் அவர்களை உனது கைபொம்மையாக நடத்துகிறாய். உன்னை இவ்வளவு நாட்கள் தலைமை வைத்தியராக வைத்திருந்தவர்கள் முட்டாள்கள். இந்தமாதிரி இடத்தை முன்னேற்ற நான் நினைத்தது எனது முட்டாள்தனம்“ என இடியோசை போல் முழங்கி விட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக சென்று விட்டான் ரிமதி.

இந்த மாதிரியான வார்த்தைகளையும் நடத்தையை எவரும் எதிர்பார்க்காததால் எல்லாரும் சிறிது நேரம் அசையவில்லை. வார்த்தைகள் அற்று சிலையாக இருந்தனர். ஜுலியா தூக்கத்தில் கெட்ட சொப்பனம் கண்டு பயந்த சிறுமியாகிவிட்டாள். சுந்தரம்பிள்ளையும் முகம்மது ஜப்பாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விடயத்தை காலோஸ் செய்தான். தனது காற்சட்டைப் பாக்கட்டில் இருந்து சிறிய பொக்கட் ரேப் ரெக்கோடரை மேசையில் வைத்து விட்டு எழுந்து நின்றபடி ‘ரிமதி பாத்தோலியஸ் பேசியது எல்லாம் இதில் பதிவாகி உள்ளது. நிர்வாகக் குழுவினர் முட்டாள்கள் என சொன்னதை அவர்களே கேட்கட்டும்’ என்ற போது மேசையில் இருந்த மற்றவர்களுக்கு அது இரண்டாவது பூகம்பம்பத்தின அதிர்ச்சியாக இருந்தது.

முகம்மது ஜப்பார் ‘இவன் ஒரு ரேசிஸட் பாஸ்ரட’ என சொல்லிவிட்டு தனக்கு கோப்பியை கலக்குவதற்கு எழுந்தான்

‘இது மிகவும் கேவலமானது. இப்டியான நாகரிகமில்லாமல் ஒருவரால் நடக்க முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த மாதிரி நடக்கும் ஒருவர் தலைமை வைத்தியராக மட்டுமல்ல மிருக வைத்தியராக இருக்கவே தகுதியற்றவர். இவரது நடத்தையைப் பற்றி நான் நேரிலே சென்று குழு அங்கத்தவர்களிடம் கூறுவேன்.’ என்றாள் ஜுலியா.

மேல்பேனில் மிகவும் செல்வந்த குடும்பத்தில் வெல்வெட் துணியால் பொத்தி வைத்த வைரமாக வளர்க்கப்பட்ட ஜுலியாவால் இப்படியான நடத்தையை ஏற்றுக்கொள்ளமுடியாதது ஆச்சரியமானது அல்ல.

மீண்டும் ஆபிரேசன் செய்யத் தியேட்டருக்குப் போனதும், இந்த விடயத்தை சாமுக்கும் ஜெனட்டும்கும் முன்பு தனது ரேப்ரெக்கோடரை எடுத்து மீண்டும் மேசையில் வைத்து ‘பாஸ்ரட் ரிம், இதோடு சரி, அவனது சரித்திரம்’ என சொல்லிவிட்டு கூட்டத்தில் நடந்தவற்றை சாமிடம், காலோஸ் விவரித்தான். சாம் கண்களை அகல விரித்து ‘நான் அந்த இடத்தில் இல்லாமல் போய்விட்டேனே. காலோஸ்’ நீ ஒரு ஹீரோதான்’ என்றபடி கை குலுக்கி இருவரும் மார்போடு அணைத்துக் கொண்டார்கள். ஒருவர் குறும்பை மற்றவர் அதிசயமமாக மெச்சும் பள்ளிச் சிறுவர்கள் போல் இருவர்களதும் நடத்தை இருந்தது.

தனது மெல்லிய உதடுகளை பிரிக்காமல் சிரித்தபடி அவர்களது செய்கைகளைப் பார்த்த ஜெனட்டின் மனத்தில் மகிழ்சியில்லை என்பது அவளது உடல் மொழியில் தெரிந்தது.

இப்பொழுது நடந்த நாடகத்தில் ரிமதி பாத்தோலியஸ் நடந்து கொண்டதும் அவன் காலோசால் மடக்கப்பட்டதும் எதிர்பார்க்காத விடயம். ஆனால் இந்த விடயத்தால் தனக்கு என்ன நன்மை வரும் என்பது சுந்தரம்பிள்ளைக்கு புரியாத விடயமாக இருந்தது.

———————

காலோஸ் வேலை முடிந்ததும் வலுக்கட்டாயமாக மதுச்சாலைக்கு சுந்தரம்பிள்ளையை இழுத்துக் கொண்டு சென்றான். சாம், அன்ரு இருவரும் சேர்ந்து கொண்டார்கள். அவுஸ்திரேலிய மதுச்சாலைகள் வர்க்க பேதங்களளற்றவை. அன்னியோன்னியமாக பேசுவதற்கும் பழகுவதற்கும் நட்பை உருவாக்கவும் புதுப்பிப்பதற்கும் என பல விடயங்களுக்கு பயன்படுவதால் சமூகத்தில் கல்விக்கூடம், வைத்தியசாலை, தேவாலயம் போன்று இதுவும் தேவையான ஒரு பொது வெளியாக அமைந்து விடுகிறது. சுந்தரம்பிள்ளைக்கு அன்று மதுவின் போதை நிச்சயமாக தேவைப்பட்டது. வேலையின் நிச்சயமற்ற தன்மை இன்னும் இருந்தாலும் ரிமதி அவமானப்பட்டது, குத்துச்சண்டைப் போட்டியில் முதல் ரவுண்டில் வென்றது போன்ற திருப்தி மனத்தில் பொங்கியது. அந்த வெற்றியை கொண்டாடவேண்டும் என்று மனம் விரும்பியது.

‘எல்லோருக்கு இன்று நான் மது வாங்குகிறேன். என் கணக்கில் இன்று எவ்வளவும் குடிக்கலாம்’எனச் சொல்லிக் கொண்டு மதுசாலைக்குச் செல்லும் வழியில் காலோஸ் ‘ ஏய் போய்ஸ், அந்த ரேப்கோட்டில் ரேப் இல்லை. பட்டரி இல்லை. இதைப்பற்றி எவரிடமும் பேசவேண்டாம். ஜெனற் இந்த விடயத்தை ரிமதிக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தியேட்டரில் வைத்து அவளிடம் சொன்னேன்.’என்றான்.

‘உண்மையாகவா? நம்ப முடியவில்லை’சுந்தரம்பிள்ளை ஆசசரியத்துடன்.

‘ஒருவரது சம்மதமில்லாமல் அவரது குரலை பதிவு செய்தது குற்றம். அதை எங்கும் பாவிக்க முடியாது. ஆனால் பாஸ்டட்டுக்கு இந்த விடயம் சேரும்போது வயிற்றைக் கலக்கும் என்பது எனக்குத் தெரியும்.’

‘காலோஸ், நீ பெண்கள் விடயத்தில்தான் கைவரிசைக்காரன் என நினைத்திருந்தேன். மற்ற விடயங்களிலும் பரவாயில்லை.’ நகைச்சுவையாக சாம்

‘உனக்கு என்னில் பொறாமை’

‘ஒருவிதத்தில் உண்மை.’

மதுச்சாலையில் வந்து இருந்ததும் காலோஸ்,சிறிது முன்பாக ரிமதி பாத்தோலியஸ்சோடு நடந்த வாக்குவாதத்தை மறந்து, மரியாவை அடிலயிட்டுக்குக் கொண்டு சென்று ஹொட்டேலில் போகத்தில் ஈடுபட்டது போன்ற விடயங்களை ஒளிவு மறைவற்று போர்னோ ஒலிச்சித்திரமாக விபரித்தான். மரியா படுக்கையில் எழுப்பிய சம்போக ஒலிகளைக் கூறும்போது தனது குரலை பெண்குரலுக்கு மாற்றிப் பேசினான். கடந்த இரண்டு கிழமைகள் எனது தலைமைப் பதவி போய்விட்டதை சிந்திக்கவே மரியா விடவில்லை. எனது உடலில் அவளது மணம் இன்னும் போகவில்லை என நெஞ்சை முகர்ந்தான். நான் விடுமுறை எடுத்தால் வீட்டில் தெரிந்துவிடும் என்பதால்த்தான் வேலைசெய்ய வந்தேன் எனக் கூறிவிட்டு மரியா ஹொலிடே முடிந்து மீண்டும் போர்த்துக்கல் சென்று விட்டதை கவலையுடன் நினைவு கூர்ந்தான்.

சாம், அன்ரு ஒவ்வொருவரும் வழக்கம் போல் பியரை பருகியபோது விஸ்கியை பனிக்கட்டிகளோடு சுந்தரம்பிள்ளையும் காலோசும் அருந்தினார்கள். காலோசின் அனுபவங்களை ரசித்தபடி வழக்கத்தை விட அதிகமாக பருகினார்கள்.

‘மரியாவை நினைத்து இவ்வளவு நினைத்தும் முகர்ந்தும் கவலைப்படுவதிலும் பார்க்க அவளோடு போர்த்துகல் போய் வந்திருக்கலாம்தானே?. என சாம் சிறிது சீண்டலுடன்

‘வீட்டில் உள்ள எனது மனைவியை எந்த நேரத்திலும் விடமாட்டேன்’ சொல்லும் போது சிறிது முகம் சிவந்தது.

‘காலோஸ், இவ்வளவு கொள்ளையான காதல் உன் மனைவி மேல் இருக்கும் போது எதற்காக எல்லா இடத்திலும் பல் இல்லாத வெள்ளாடு போல் வாய் வைக்க வேண்டும்’ என்றான் சுந்தரம்பிள்ளை.

காலோஸ் மீது நட்புடன் மரியாதையும் இருந்ததால் சாதாரணமாக அவனது பிரத்தியேக விடயங்களை பற்றி பொருட்படுத்தாத சுந்தரம்பிள்ளைக்கு இன்று பொறுக்கவில்லை. மதுபோதை அதற்கு உதவியாக இருந்ததாலும் அந்தக் கேள்வி குற்றச்சாட்டுப்போல் வெளிவந்தது.

‘மிஸ்டர் உமக்கு எங்களது உறவை சொல்லிப் புரியவைக்க முடியாது. எனது மனைவியை பதினேழு வயதில் காதலித்தேன். எங்கள் ஊரில் அவளை விட ஒரு அழகி இருக்கவில்லை. அவளோ இலேசில் என் காதலை ஒத்துக் கொள்ளவில்லை. கொன்வெண்டில் படித்துக் கொண்டிருந்தபோது அவள் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற இலட்சியத்துடன் இருந்தாள். அவளை எவ்வளவோ நாட்கள் முன்னாலும் பின்னாலும் திரிந்து என்னைக் காதலிக்க வைத்தேன். அது நடந்து இருபத்திரெண்டு வருடங்களாகிவிட்டது. அவள் மேல் பாசமும் அன்பும் இன்னும் அதிகமாகிக் கொண்ட செல்கிறது அல்லாது குறையவில்லை. அதேபோல் அவள், என்மீது அதற்கிணையான பாசம் வைத்திருக்கிறாள். உமக்கு ஒரு கதை சொல்லுகிறேன். கடந்த சனிக்கிழமை அதிகாலை வேலைக்குப் அவள் போக சீக்கிரமாக எழுந்த போது எனது கால்கட்டை விரல் மட்டும் போர்வையின் வெளியே இருந்தது. எனக்கு அது தெரிந்தாலும் காலை போர்வைக்குள் இழுப்பதற்கு சோம்பலாக இருந்தது. அவள் அந்தப் போர்வையை இழுத்து எனது கட்டைவிரலை மூடிவிட்டு சென்றாள். அந்த அன்பு என் இதயத்தை சிலிர்க்க வைத்தது. ஆனால் அவளின் மேல் எனக்கு காம உணர்வு குறைந்து விட்டது. ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொண்ட நாங்கள் இப்பொழுது மாதத்திற்கு ஒருதடவை என்ற நிலைக்கு வந்து விட்டோம். பல நாட்கள் முத்தத்தோடு மோகவெள்ளம் வற்றி விடுகிறது. இந்த இடத்தில்தான் நுங்கும் நுரையுமாக மரியா, மிஷேல் போன்றவர்கள் தாகத்தை தீர்க்கும் அரிவியாக இடைவெளியை நிரப்புகிறார்கள். நான் ஒருவரையும் ஏமாற்றவில்லை. பொய் சொல்லவில்லை அதேநேரத்தில் எனது செய்கை சரி என வாதிடவில்லை. இது எனது கத்தோலிக்க மதத்திற்கு ஏற்பு உடையது அல்ல என்பதும் எனக்கு தெரியும்’

‘உனது விளக்கம் கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் புரிகிறது. இதை உன் மனைவி ஏற்றுக்கொள்வாளா என்பது தான் எனது கேள்வி? மீண்டும் வக்கீலின் தொனியில்.

‘ஆண்களது விளக்கத்தை பெண்கள் எப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்? வேறு விதமாக ஆணும் பெண்ணும் டிசையின் பண்ணப்பட்டிருக்கிறார்கள். கருவில் எல்லா குழந்தைகளும் பெண்களாகத்தான் உருவாகிறார்கள். ஒரு மாதமானதும் அந்த வை நிறமூர்த்தம் விழித்துக்கொண்டு ஆணாக மாறுகிறது. அன்றில் இருந்தே சிந்தனை நோக்கத்தில் ஆண் வேறுபடுகிறான். எனது அம்மாவின் கருப்பை நிகழ்சிக்கு நான் பொறுப்பாக மாட்டேன்.’என்று சொல்லிவிட்டு மூன்றாவது விஸ்கியைக்கு தயாராகினான்.

‘கடைசியாக எப்பொழுது பாவ மன்னிப்புக்குப் போயிருந்தாய்.?“ சாம் கிண்டலாக

‘ உமது கிண்டல் எனக்கு விளங்குகிறது. எனக்கே நினைவில்லை’

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ரு‘கமோன் சிவா. சாம் இதையெல்லாம் கேட்டு கார்லோசை சங்கடப்படுத்தாதே. வாழ்க்கை ஒரு முறைதான் வந்து போகிறது. இன்னும் சில வருடங்களின் பின் பல்லில்லாத கிழவராக படுக்கையில் ஒன்டுக்கடித்தபடி ஓய்வில்லத்தில் வெந்த உருளைக்கிழங்கை சாப்பிடும்போது என்ன செய்யமுடியும்? எதுவும் செய்ய முடியாத நேரத்தில், செய்யாமல் விட்ட விடயங்களை நினைத்து கவலைப்படத்தான் முடியும். செய்த விடயங்களை இட்டுத்தான் சந்தோசமாக நினைக்க முடியும்.’ என வேறு விடயத்திற்கு பேச்சைத் திருப்பினான்.

வீடு சென்ற ரிமதிக்கு எதுவும் செய்ய முடியவில்லை. எப்படிக் காரை ஓட்டிவந்தேன் என்பது அவனுக்கு புதிராக இருந்தது. வந்த வழி எதிரில் வந்த வாகனங்கள் ஏன்காரில் ஏறியதோ இறங்கியதோ நினைவில் இருக்கவில்லை. போட்டிருந்த உடையையோ காலணிகளையோ மாற்றத் தோன்றவில்லை. காலோசின் வார்த்தைகள் இன்னமும் காதில் தற்செயலாக சென்ற வண்டுபோல குடைந்து கொண்டிருந்தன.

அந்தக் கூட்டத்திற்கு நான் போயிருக்க கூடாது. என்னைத் தனக்குப் பலமான இடத்திற்கு இழுத்து வந்து மற்றவர்கள் முன்னிலையில் குதறி இருக்கிறான். தாகசாந்திக்காக நீருக்குள் இறங்கிய யானையின் கால் முதலையின் வாயில் மாட்டியது போல் நான் அவனது வாயில் மாட்டிக் கொண்டேன். சிவாவை இரையாக வைத்து என்னை பொறிவைத்து விட்டான். காலோஸ் சாதாரணமான எதிரியல்ல. நரியைப் போன்றவன். நான் அவசரப்பட்டுவிட்டேன். இன்னும் குறைந்தது மூன்று மாதங்களாவது கிளிக்னிகை கட்டி முடிப்பதற்கு எடுக்கும். அதுவரையும் வேலை செய்யவேண்டும். வங்கியில் அதிகம் கடன் எடுத்ததால் தொடர்சியாக வட்டியுடன் பணம் கட்டவேண்டும்.வேலையை விட்டால் அதைச்செய்வது கடினம்.

வீட்டின் பிரிஜில் இருந்து ஒரு பியர் போத்திலை எடுத்து குடித்துக் கொண்டு தொலைக்காட்சியில் என்ன பார்ப்பது என்ற நோக்கில்லாமல் சனல்களை மாற்றிக்கொண்டிருந்தவனுக்கு, தொலைபேசியின் சப்தம் கேட்டதும் பியரை தரையில் வைத்து விட்டு தொலைபேசியை எடுத்த போது அடுத்த முனையில் ஜெனட் வந்தாள்.

‘எப்படி இருக்கிறாய்?’

‘நான் இந்த நேரத்தில் போன் எடுத்ததற்கு மன்னிக்கவும். வேலையில் இருந்து இப்பொழுதுதான் வீடு வந்து சேர்ந்தேன்’

‘அந்தக் கூட்டத்தை பற்றி கேட்க எடுத்தயா? அது வீண்வேலை. காலோஸ் என்னை அவமானப்படுத்த திட்டம் போட்டு நடத்திய நாடகம். நான் அதற்கு போய் இருக்க கூடாது. நான்
தவறு செய்து விட்டேன் என நினைக்கிறேன்.’

‘அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். அவசரப்பட்டு வீணாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டாய்.’

‘உனக்கு என்ன தெரியும்? யார் சொன்னது? என்ன சொல்கிறாய்?’

‘வைத்தியசாலையை சந்தைக்கடை எனவும் நிர்வாக குழு அங்கத்தினரை முட்டாள்கள் எனவும் நீ சொன்னாயா’

‘ஆத்திரத்தில் சொல்லி இருப்பேன். அதுக்கு இப்பொழுது என்ன?

‘காலோஸ் அதை ரேப்பில் பதிந்துள்ளதாக எனக்கு சொன்னான்;’;

……………..

‘என்ன ஒன்றும் பேசாமல் நிற்கிறாய்

‘காலோஸ் கபடத்தனத்தை நான் புரிந்து கொள்ளவில்லை. நன்றி எனக்கு இதை சொன்னதற்கு . நான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்.’

ரிம் தொலைபேசியை வைத்ததும் கைலி வந்து ‘என்ன பிரச்சனை?

கர்ப்பமாக இருந்த கைலியிடம் சொல்லி அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் ‘அது ஒன்றும் இல்லை’ என பியரை தொடரந்து குடிக்க முயன்றவனை அவள் விடவில்லை

‘ஏன் சொல்ல மறுக்கிறாய். தயவு செய்து சொல்’என கைகளைப் பிடித்து அருகில் உள்ள சோபாவுக்கு இழுத்தாள்.

அந்த சோபாவில் இருந்தபடி அவளது முகத்தை சில கணங்கள் பார்த்துவிட்டு நெற்றியில் முத்தமிட்டு, மேலும் இவளிடம் மறைப்பதில் அர்த்தமில்லை என நினைத்து அப்படியே நடந்த விடயத்தை சொன்னான்.

‘இப்பொழுது என்ன செய்யப்போகிறாய்?’ என ஏக்கமாக

‘நான் செய்த முட்டாள்தனத்துக்கு நான் விலை கொடுக்கவேண்டும். எனது ராஜினாமா கடிதத்தை ரொன் ஜொய்சுக்கு அனுப்பப் போகிறேன்.

‘அது தான் நல்லது என நினைக்கிறேன் .வீட்டில் நின்றால் வைத்தியசாலையை விரைவாக ஆரம்பிக்கலாம. எனக்கும் ஆறுதலாக இருக்கும் என தன் வயிற்றை தடவினாள்.

இடது கையால் பிடித்தபடி பியரை குடித்தபடியே எழுந்த ரிமதி பாத்தோலியஸ் தனது வலது கையால் மேசையில் இருந்த வெள்ளைத்தாளின் மேல் தலைமை வைத்தியர் பதவியையும் வைத்தியர் வேலையில் இருந்தும் முற்றாக விலகுவதாக கூறி எழுதிய போது அவனது கைகள் நடுங்கின. முழு உடலும் புயலின் வசப்பட்ட மரத்தின் கிளைகளைப் போல் ஆடியது. கண்களில் கண்ணீர நிறைந்து இமைகளை முட்டியது. அவனது உள்ளத்தில் வெறுப்பு பெரும்புயலாக வீசியது. பந்தயத்தில் தோற்று அதன்தோல்விச் சுமையை ஒருவன் மட்டும் சுமந்து கொண்டு தனியாக நிற்பதாக தோன்றியது. இரண்டு கிழமைகூட காலோசுக்கு எதிராக பதவியை தன்னால் தக்க வைக்க முடியவில்லை என்ற சுயவிரக்கம் சேர்ந்ததும் அப்படியே அந்த மேசைக்கு அருகில் இருந்த கதிரையில் சாய்ந்து கொண்டான். இப்பொழுது என்ன செய்வது என்பதை அவனால் சிந்திக்க முடியவில்லை.

சில நிமிடம் கண்களை முடியபடி இருந்த போது அந்த இடத்தை விட்டு கைலி விலகி சமயலறைக்குச் சென்றாள். மீண்டும் மனம் சிறிது தெளிவடைய கண்களை விழித்தபோது உள்ளத்தில் அமைதியன மாற்றம் ஏற்பட்டது. அந்த கடிதத்தில் கையெழுத்தை இட்டு அதை தொலைநகலாக அனுப்பிவிட்டபோது அவனது முகத்தில் இருந்த ஆத்திரம், ஆவேசம், பச்சாத்தாபம் எல்லாம் நீங்கி அமைதி குடிகொண்டது. பெரும்புயலாக மனத்தில் கடந்த ஆறுமாதமாக அடித்து கொண்டிருந்த குரோதம் திடீரென அவனை விட்டு மரக்கிளையில் இருந்து பறவையொன்று இறக்கைகளை சடசட என அடித்துக்கொண்டு பறந்து சென்றது போன்று இருந்தது. அவனது சுமை நீங்கி இலேசாக வானத்தில் பறப்பது போன்ற நிர்வாண மனநிலையை கொடுத்தது. இந்த அமைதியாக இந்த உணர்வு அவனுக்கே ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்த மாற்றத்தின் பின் மதுவுக்கு வேலையில்லை என கையில் இருந்த மிகுதி பியரை தூக்கி எறிந்து விட்டு கைலி வதக்கிய ஆட்டிறச்சியின் நெடியைத் தேடி சமயலறைக்குள் சென்றான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: