முருகபூபதி – அவுஸ்திரேலியா
சிறிதுகாலம் வேலைதேடும் படலத்திலிருந்தபோது நண்பர், ஆசிரியர் மாணிக்கவாசகர் எனக்கு ஒரு வேலை தேடித்தந்தார். மாணிக்கவாசகர், கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய காலம். பின்னர் அங்கு அதிபராகவும் பதவி வகித்தார். பிரபல தொழிற்சங்கமான இலங்கை ஆசிரியர் சங்கத்தில் அங்கம்வகித்தார். அவர், இலங்கை கம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) கட்சியின் அரசியல் குழுவில் அங்கம் வகித்த தோழர் ஸி.குமாரசாமியின் சகோதரர். அப்பொழுது இரண்டு குமாரசாமிகள் கட்சியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினர்.
ஒருவர் பொன். குமாரசாமி என்ற தோழர் ‘பி.கும்’. மற்றவர் ஸி.குமாரசாமி என்ற ‘ஸி.கும்.’ சுருக்கமாக அழைத்தால்தான் தோழர்களுக்கு விளங்கும். ஸி.கும். அவர்களின் சகோதரர் மாணிக்கவாசகர் இலக்கிய ஆர்வலராகவும் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் நெருக்கமாகவும் இருந்தமையால் எனது நல்ல நண்பராகவும் விளங்கினார்.
வேலை இல்லாமல் நான் கஷ்டப்படுவதைப்பார்த்துவிட்டு, ஒரு நாள் என்னை கொழும்பு கொம்பனித்தெருவில் மலே வீதியில் அமைந்திருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிமனைக்கு அழைத்துச்சென்று அங்கிருந்த சங்கத்தின் தலைவர் எச். என். பெர்னாண்டோ மற்றும் செயலாளர் சித்ரால் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த மலேவீதியில்தான் முன்பு கல்வி அமைச்சும் பரீட்சைத்திணைக்களமும் இருந்தன.
ஆசிரியர் சங்கம, அப்பொழுது மும்மொழிகளில் தொழிற்சங்கத்தின் பிரசார பத்திரிகைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தது. குருஹண்ட சிங்களத்திலும் வுநயஉhநசள ஏழiஉந ஆங்கிலத்திலும் ஆசிரியர் குரல் தமிழிலும் வெளிவந்தன.
ஆசிரியர் குரலில் பணியாற்றிய இலக்கிய நண்பர் எம்.எச். எம். ஷம்ஸ் தனது ஆசிரியப்பணியுடன் மேலதிகமாக ஆசிரியர் குரல் வேலைகளைசெய்வதில் சிரமங்கள் இருந்தமையால் மாணிக்கவாசகர் என்னை அந்தப்பணிகளுக்காக அழைத்துச்சென்றார்.
அக்காலப்பகுதியில் ஸ்ரீமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு பிளவுபட்டு, கம்யூனிஸ்ட், சமசமாஜக்கட்சிகள் அரசிலிருந்து வெளியேறியிருந்தன. இடதுசாரி தொழி;ற்சங்கங்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரும் இயக்கத்தை ஆரம்பித்திருந்த காலகட்டத்திலேயே எனக்கும் ஆசிரியர் குரலில் வேலை கிடைத்தது. ஆசிரியர் குரலுக்கு ஆக்கங்களை தெரிவுசெய்வது சங்கத்தின் வெளியீடுகளை தமிழ்ப்படுத்துவது இதழின் படிகளை ஒப்புநோக்குவது தமிழ்ப்பிரதேச ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு தமிழில் கடிதம் எழுதுவது முதலான தமிழ் சார்ந்த பல வேலைகள் எனக்குத்தரப்பட்டன. இங்கு நான் தட்டச்சும் பழகி சிங்களமும் சரளமாக பேசப்பழகினேன். அத்துடன் மொழிபெயர்ப்புகளும் செய்தேன். சில நூல்கள், பிரசுரங்களையும் மொழிபெயர்த்தேன்.
1971 ஏப்ரில் கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டு சிறையிலிருந்த ரோஹண விஜேவீரா, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க, களு ஆராச்சி, பொடி அத்துல, லொக்கு அத்துல உட்பட நூற்றுக்கணக்கான ஜே.வி.பி. தோழர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் சிறையிலிருந்தனர். இவர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற இயக்கம் நாடுதழுவிய ரீதியில் ஆரம்பமானது.
பிரின்ஸ் குணசேகரா, குமாரி ஜயவர்தனா, வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரத்தின, என். சண்முகதாஸன் உட்பட பல இடதுசாரிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருந்தனர். ஆசிரியர் சங்கத்தில் பணியாற்றிய நானும் அச்சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்களுடன் அந்த இயக்கத்தில் உள்வாங்கப்பட்டிருந்தேன்.
சங்கத்தின் பணிமனையே அந்த இயக்கத்தின் தலைமைச்செயலகமாக மாறியது. லீனஸ் திஸாநாயக்க என்ற நவசமசமாஜக்கட்சித்தோழர் இவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக அர்ப்பணிப்புணர்வுடன் செயற்பட்டார்.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அக்காலப்பகுதியில் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக இடம்பெற்றது. தற்போது இங்கிலாந்திலிருக்கும் தோழர் காதர் அவர்கள் ஆசிரியர் சங்கத்தில் சுயநிர்ணய உரிமை தொடர்பாக உரையாற்றி விளக்கம் அளித்தார்.
எனது பெரும்பாலான நேரம் இடதுசாரிகளுடன்தான் கழிந்தது. யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த ஆசிரியர் சங்கத்தின் பிரம்மாண்டமான மாநாட்டிலும் கலந்துகொண்டேன்.
1977 இல் பொதுத்தேர்தலில் உருவாகிய இடதுசாரி ஐக்கியமுன்னணியை ஆதரிக்கும் தீர்மானம் அந்த மாநாட்டில் நீண்டவாதப்பிரதிவாதங்களுக்குப்பின்னர் நிறைவேறியது.
கொழும்பிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரி பரந்தளவில் கையொப்பம் திரட்டும் இயக்கத்திலும் ஈடுபட்டோம்.
1971 ஏப்ரில் கிளர்ச்சியின் பின்னர், குற்றவியல் நீதி ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் அலஸ் அவர்களின் தலைமையில் பலமாதங்கள் நடந்த விசாரணையை அடுத்து ஜே.வி.பி. கிளர்ச்சியாளர்கள் பலருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் ஸ்ரீமாவின் ஆட்சியில் அவர்களுக்குக் கிடைத்த அந்த அடக்குமுறைத்தண்டனையிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கமுடியாதுதான்.
கொழும்பில் நடந்த குற்றவியல் ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது தினமும் தவறாமல் பார்வையாளராக வந்து விசாரணைகளைப்பார்ப்பவர் கொழும்பு மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆர். பிரேமதாஸா.
கதிர்காம அழகியும் ஜே.வி.பி. தோழியுமான பிரேமாவதி மனம்பேரி ஒரு இராணுவ அதிகாரியினால் மானபங்கப்படுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை நடந்தபோதும் தினமும் வந்து விசாரணைகளைப்பார்த்தவர்தான் பிரேமதாஸா.
பின்னர், ஸ்ரீமா காலத்தில் தென்னிலங்கையில் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் 1977 இல் நடந்த பொதுத்தேர்தலிலும் பிரசாரக்கூட்டங்களில் மனம்பேரிக்கு இழைக்கப்பட்ட வன் கொடுமைகளையும் நீதியரசர் அலஸின் தீர்ப்புகளையும் பற்றிச்சொல்லிச்சொல்லியே யூ.என்.பி.க்கு வாக்குவங்கியை நிரப்பியவர்தான் பிரேமதாஸா.
மேடைகள்தோறும் ‘மனம்பேரி’ மகத்மியம் பாடியே அவர் அரசியலில் பிரகாசித்தார்.
ஒரு பெண்பிரதமரின் காலத்தில் ஒரு பெண்ணுக்கு புனிதபூமியாம் கதிர்காமத்தில் நடந்த அநீதியை அம்பலப்படுத்தி தென்னிலங்கை சிங்களப்பெண்களின் வாக்குகளை திரட்டினார் வருங்காலத்தில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளில் அமர்ந்த பிரேமதாஸா.
எதிர்பார்த்தவாறு 1977 இல் ஸ்ரீமா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்தது. நான் ஆதரித்துப்பிரசாரம் செய்த இடதுசாரி ஐக்கிய முன்னணித்தலைவர்கள் பீட்டர் கெனமன், கொல்வின் ஆர் டி சில்வா, என். எம். பெரேரா, சரத்முத்தெட்டுவேகம, வாசுதேவ நாணயக்கார, அதாவுட செனவிரத்தின, உட்பட பலர் படுதோல்வியடைந்தனர். எந்தவொரு இடதுசாரித்தலைவருக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் கிடைக்கவில்லை.
அதனால் எதிர்க்கட்சித்தலைவராக அமிர்தலிங்கம் பதவியேற்றார்.
தேர்தல் அமளியும் முடிவுகளும் எப்படியும் இருந்தபோதிலும் எங்களுடைய ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் இயக்கம்’ தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
தேர்தல் சமயத்தில் ஜே.ஆரும், பிரேமதாஸாவும் அளித்த வாக்குறுதி, அவர்களின் கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் நிறைவேற்றப்பட்டது.
குற்றவியல் ஆணைக்குழு இரத்துச்செய்யப்பட்டு அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். இளைஞர்களின் வாக்குகளை வசீகரிக்க ஜே.ஆரும், பிரேமதாஸாவும் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிதான் குறிப்பிட்ட குற்றவியல் ஆணைக்குழுவின் இரத்து.
எப்படியோ ஜே.வி.பி. தோழர்கள் விடுதலையானார்கள். அவர்கள் சுறுசுறுப்பானவர்கள். காலம் தாழ்த்தாது மீண்டும் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால் தங்கள் தவறுகளை சுயவிமர்சனம் செய்துகொண்டு ஜனநாயகப்பாதையில், தேர்தல் முறையில் நம்பிக்கைவைத்து தீவிர அரசியலுக்கு மீண்டும் வந்தார்கள்.
அவர்களின் துரித வளர்ச்சி, நெருப்பில் எரியுண்டு சாம்பலில் பூத்த பீனிக்ஸ் பறவைகளுக்கு ஒப்பானது.
ஊர்கள் தோறும் சென்று முதலாளித்துவக்கட்சிகள் மீதும் ஏகாதிபத்தியத்தின் மீதும் வசைமாரி பொழிந்துகொண்டு, தங்கள் மக்கள் விடுதலை முன்னணியை இரவுபகலாக வண்ண வண்ண சுவரொட்டிகள் மூலமும் பொதுக்கூட்டங்கள் கருத்தரங்குகள் ஊடாகவும் பிரசாரப்படுத்தினார்கள்.
இவர்களின் வேகத்தைப்பார்த்து யூ.என்.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் இடதுசாரிக்கட்சிகளும் திகிலடைந்தன. ஜே.வி.பி.யின் மதில் சுவரொட்டிகளைப்பார்த்து ஸ்ரீமா அம்மையார், அவர்களை ‘தாப்ப விப்லவக்காரயோ’ ( மதில் புரட்சியாளர்கள்) என்று எள்ளிநகையாடினார்.
அமிர்தலிங்கம், ‘வெளிநாட்டுப் பண ஆதரவுடன் புதுக்கோலம் கொண்டவர்கள்’ என்று வர்ணித்தார்.
ஜே. ஆர், தாம் அவர்களை கண்காணித்துக்கொண்டுதான் இருப்பதாகச்சொன்னார்.
ஆனால் பிரேமதாஸா மாத்திரம் 1987 வரையில் ஜே.வி.பி. பற்றியோ அதன் தலைவர்கள் பற்றியோ எதுவும் பேசவில்லை. மௌனம் காத்தார்.
விடுதலைபெற்று வெளியேவந்து சுதந்திரக்காற்றை சுவாசித்த ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீராவை முதல் முதலில் ஆசிரியர் சங்க பணிமனையில்தான் சந்தித்தேன். அன்றுமுதல் அவர் தலைமறைவான 1983 வரையில் அவருடன் நல்ல தோழராகவே உறவைத்தொடர்ந்தேன்.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும் மனித உரிமை ஆர்வலரும் எனது நல்ல குடும்ப நண்பருமான தோழர் லயனல் போப்பகேயுடன் எனது தோழமையும் உறவும் சகோதரவாஞ்சைக்கு ஒப்பானது. அவர் தற்போது அவுஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
விஜேவீரா தமிழ் படிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அவ்வப்போது அவருக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தேன். என்னை, தமிழில் ‘தலைவரே’ என்றுதான் சிரித்துக்கொண்டு விளிப்பார். ஏனைய தோழர்கள் ‘சகோதரயா’ என்று அழைப்பார்கள்.
படிப்படியாக அவர்களுடன் எனக்கு நெருக்கம் அதிகமாயிற்று. அதனால் பிற்காலத்தில் இயக்கம் தடைசெய்யப்பட்டதும் நானும் பல்வேறு சங்கடங்களையும் இடர்ப்பாடுகளையும் எதிர்நோக்கினேன்.
ரோஹன விஜேவீரா சிறந்த பேச்சாளர். மக்கள் திரளை வசீகரிக்கும் ஆற்றல் மிக்கவர். வாயில் ஒரு சொட்டு தண்ணீரும் இல்லாமல் பல மணிநேரங்கள் பேசக்கூடியவர். ஆனால் நிதானமாக இயங்கமாட்டார். அவசரப்பட்டு முடிவுகள் எடுப்பார். லயனல் அவருக்கு நேர்மாறானவர். லயனல் அமைதியாக நிதானமாக பேசுவார். தீர்க்கமான முடிவுகள் எடுப்பார்.
நாடெங்கும் அவர்களது விடுதலைக்கீதம் எழுச்சிப்பாடல் நிகழ்ச்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் லயனலும் அவரது மனைவி சித்ராவும் பல பாடல்களை படினார்கள். அந்த விடுதலைக்கீத இசைப்பாடல்கள் ஆயிரக்கணக்கில் இறுவெட்டுகளாக பிரதி எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. அதில் சில பாடல்களை நான் மொழிபெயரத்துள்ளேன். தமிழிலும் அவர்களின் விடுதலைக்கீதம் பரவியது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை முதலான தமிழ்ப்பிரதேசங்களிலும் விடுதலைக்கீதம் மேடையேறியது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக இரண்டு தலைவர்களுக்கும் இடையே நிரம்ப வேறுபாடுகள் தோன்றி இறுதியில் லயனல் இயக்கத்திலிருந்து வெளியேறினர். பொலிஸ் அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தது. ரோஹன விஜேவீரா தனது குடும்பத்துடன் தலைமறைவானார். மேலும் பலர் தலைமறைவானார்கள்.
ரோஹன விஜேவீராவும் தோழர்களும் விடுதலை செய்யப்பட்ட 1977 காலப்பகுதியில் புலிகள் இயக்கம் ஒரு நூலை தமிழகத்தில் அச்சிட்டு வெளியிட்டிருந்தது. அப்பொழுது அந்த இயக்கத்தில் உமா மகேஸ்வரனும் பிரபாகரனும் இணைந்திருந்தனர்.
அந்த நூல் எனக்குக்கிடைத்தது. குற்றவியல் நீதி ஆணைக்குழுவில் ரோஹன விஜேவீராவின் வாக்கு மூலம் சுருக்கமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த நூலில் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
ஜே. வி.பி.யின் தோற்றம், வளர்ச்சி தொடர்பாகவும் பரந்துபட்ட மக்களின் ஆதரவு இல்லாமல் அதன் ஆயுதப்புரட்சிக்கு நேர்ந்த தோல்வி பற்றியும் அந்நூலில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
இறுதியில், மக்கள் ஆதரவு அற்ற எந்தவொரு போராட்டமும் தோல்வியையே தழுவும் என்றும் தங்களது தமிழ் மக்கள் தொடர்பான விடுதலைப்போராட்டத்திற்கு ஜே.வி.பி.யின் போராட்டமும் அதன் வீழ்ச்சியும் சிறந்த படிப்பினையாக அமையும் என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு நாள் இந்த நூலை எடுத்துக்கொண்டு விஜேவீராவின் கட்சித்தலைமையகம் அமைந்திருந்த ஆமர்வீதி- புளுமென்டால் வீதி சந்தியிலிருந்த மரக்காலைக்கட்டிடத்திற்குச்சென்றேன்.
அவருக்கு அருகிலிருந்து நூலை படித்துக்காண்பித்து மொழிபெயர்த்தேன். சிரித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார். அவரது வாக்குமூலம் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தமை கண்டு திருப்திப்பட்டார். எனினும் தனது தரப்பு வாதங்களை என்னிடம் அவர் சொல்லவில்லை. தமிழ் சிங்கள. முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வைத்தான் தனது கட்சி தொடர்ந்து பேசும் என்று மட்டும் சொன்னார்.
அதன் பிறகு பல சந்தர்ப்பங்களில் அவருடன் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக விவாதித்தேன். ஏற்கனவே சண்முகதாஸன் போன்றவர்களினால் அவருக்குள் விதைக்கப்பட்டிருந்த ‘இந்திய விஸ்தரிப்பு வாதம்’ என்ற கருத்தியலில் தொடர்ந்தும் பிடிவாதமாகவே இருந்தார்.
ஆரம்பத்தில் பஸ் நிலையங்கள், பஸ் தரிப்பிடங்களில் கால்கடுக்க நின்று பஸ்ஸிலேயே பயணம் செய்து கூட்டங்களுக்குப்பேசச்செல்வார். கடையில் பார்சல் சோறு வாங்கி பகிர்ந்துண்பார். கட்சிப்பணிகளுக்கு சிக்கனமாகவே செலவிடுவார். தரையிலே செங்கொடிகளை அல்லது பேப்பர்களை விரித்து படுத்துறங்குவார். சிறையிலிருந்து வெளியானதும் எளிமையாகவே வாழ்ந்தார். என்னை அவர் முதல் முதலில் எங்கே சந்தித்தாரோ அந்தச்சங்கத்தின் (இலங்கை ஆசிரியர் சங்கம்) தலைவர் எச். என். பெர்னாண்டோவின் சகோதரியையே காதலித்து மணந்துகொண்டார். அவரதும் லயனல் போப்பகேயினதும் திருமணங்கள் மிகவும் எளிமையாக வேறு சந்தர்ப்பங்களில் நடந்தன.
பஸ்ஸிலும் ரயிலிலும் பயணித்து கட்சிப்பணிகளை மேற்கொண்டவர், பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் தோழர்களின் வற்புறுத்தலினால் பின்னர் ஒரு பேஜோ வாகனத்தை பயன்படுத்தினார்.
விஜேவீராவின் மிகப்பெரிய பலவீனம் அவசரப்பட்டு தோழர்களை பகைத்துக்கொள்வது. தனது காதல் மனைவியின் அண்ணன் எச். என். பெர்ணான்டோவுடனும் கருத்துமுரண்பட்டு பகைத்துக்கொண்டார். அவருக்காகவும் அவரது இயக்கத்திற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இடதுசாரி தொழிற்சங்கவாதி பாலாதம்புவையும் பிற்காலத்தில் பகைத்துக்கொண்டார்.
கட்சியின் பிரசாரக்கூட்டங்களில் தரக்குறைவாகவும் சில சந்தர்ப்பங்களில் பேசி மூன்றாம்தர அரசியல்வாதியானார். அச்சமயங்களில் அவரை தனியே சந்தித்து அப்படிப்பேசவேண்டாம் என்றும் சொல்லியிருக்கின்றேன்.
அவரை சிறையில் அடைத்து சித்திரவதை செய்த ஸ்ரீமா மீது அவருக்கு கடும்கோபம் இருந்தது. அந்தக்கோபத்தை அவரது மருமகன் விஜேகுமாரணதுங்கவிடமும் காண்பித்தார்.
ஸ்ரீமாவின் மூத்த மகள் சுநேத்திரா, குமார் ரூபசிங்கவை விவாகரத்து செய்தார். நடிகர் விஜயகுமாரணதுங்கா இரண்டாவது மகள் சந்திரிகாவை மணம் முடித்தார்.
இந்தப்பின்னணிகளுடன் அந்தக்குடும்பத்தை எள்ளிநகையாடினார்.
மாதம் ஒரு முறை மாப்பிள்ளை மற்றும் குடும்பம் என்றும். நழுவாவை (நடிகரை)மாப்பிள்ளையாக்கிய குடும்பம் என்றும் வசைபொழிந்தார்.
அரசாங்க ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதுபோன்று ஜே.ஆரும். ஓய்வுபெற்றிருக்கவேண்டும் என்றும் அவர் தனது மாளிகையிலிருந்து தனது உள்ளாடையையும் எடுத்துக்கொண்டு வெளியேறவேண்டும் என்றெல்லாம் மட்டரகமான பேச்சுக்கள் பேசினார்.
“ தோழர்… உங்கள் வாதம் தவறு. சோவியத்தின் பிரஷ்நேவ், கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ, சீனாவின் மா ஓ சேதுங் முதலானவர்களுக்கு வயது என்ன?” தயவு செய்து நிதானமாகப்பேசுங்கள்” என்பேன்.
தாடியை வருடிக்கொண்டு சிரிப்பார்.
“தமிழ் விடுதலை இயக்கத்தலைவர்களுடனும் விஜேகுமாரணதுங்க, விக்கிரமபாகு கருணாரத்தின, வாசுதேவ நாணயக்கார ஆகியேருடனும் முதலாளித்துவக்கட்சிகளிலும் வலதுசாரிகளிடத்திலும் இருக்கும் முற்போக்கு சக்திகளுடனும் குறைந்தபட்ச தீர்மானங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து தொடருங்கள். வடக்கிலும் தெற்கிலும் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தினால் நீங்கள் எதிர்பார்க்கும் தொழிலாள விவசாய பாட்டாளி மக்கள் புரட்சியை உருவாக்க முடியும் உள்நுழையும் ஏகாதிபத்தியத்தையும் இனவாதத்தையும் முறியடிக்கமுடியும்” என்று அவருடன் வாதிடுவேன்.
“முதலில் உங்கள் தமிழ் இயக்கங்களை ஒன்றிணையுங்கள். அதன்பிறகு பார்ப்போம்” என்பார்.
வேற்றுமையில் ஒற்றுமைகண்டு இயக்கத்தை வளர்க்கத்தவறியவர்கள் வரிசையில் விஜேவீராவும் இணைந்துகொண்டதும் வரலாற்றின் சோகம்.
இறுதியாக 1982 இல் நடந்த ஜனாதிபதித்தேர்தலில் அவரது ரூபவாஹினி தொலைக்காட்சி பிரசார உரையை தமிழில் மொழிபெயர்க்க அவருக்கு உதவும்போது சந்தித்தேன்.
தமிழில் அவரது உரையை அவரே தொலைக்காட்சியில் நிகழ்த்தினார்.
புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் ஜே. வி. பி. யின்.(1971 ஏப்ரில் கிளர்ச்சியில்) தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது. மீண்டும் 1987 இல் பாடம் கற்றது.
தற்போது எம்மவர்கள், 2009 மே மாதத்தின் பின்னர் புலிகள் இயக்கத்திடமிருந்து பாடம் கற்றுக்கொள்கின்றனர்.
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பாடம்கற்றுத்தந்த இந்த இரண்டு தலைவர்களும் இப்போது எங்களிடம் நினைவுகளாக இருக்கிறார்கள்.
பாடங்களினால் பயன் கிடைத்ததோ இல்லையோ பாடங்கள் வரலாறாகியதுதான் மிச்சம்.
—0—

premraj -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி